Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

குறள் 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம்.

அவித்தான் - அவித்தல் - வேகச்செய்தல்; அணைத்துவிடுதல்; அடக்குதல்; கெடுத்தல் துடைத்தல் நீக்குதல்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

அகல் - விளக்குத்தகழி; சட்டி , விரிவு, ஓர்அளவு; வெள்வேல்மரம்.
அகல் - akal   n. அகல்-. 1. Inland townor village; உள்ளூர். (பொதி. நி.) 2. The interioror inner part of a town or village; ஊரின் உட்புறம். (பொதி. நி.) 3. Extent of space; பரப்பு.(W.) 4. Country, province; நாடு. (பொதி. நி.)5. Pudendum muliebre; அல்குல். (W.)

விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

விசும்புளார் - தேவலோகத்தின்

கோமான் - அரசன்; பெருமையிற்சிறந்தோன்; மூத்தோன்; குரு; பன்றி.

இந்திரனே - இந்திரன் -

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஐந்து புலன்களையும் அடக்கி வலிமையை பெற்ற துறவிகளை கண்டால் பரந்த வானுலகத்தின் தலைவனான இந்திரனே அவர்களை வணங்குவான். ஆதலால் புலன்களை நீத்தவர்களுக்கு அப்படிப்பட்ட பெருமையும் சிறப்பும் மேலுலகிலேயே உண்டு என்பதை அறியலாம். அதனால் தான் அவர்களுக்கு இவ்வுலகில் கடந்தகாலங்கிலும் இக்காலங்களிலும் அரசர்களும் மதிக்கும் இடத்தில் வைத்து அவர்களிடம் ஆலோசித்தனர்.

இந்திரன் சில துறவிகளை மதிக்காததால் சாபம் பெற்றவன். இந்திரனுக்கே சாபம் கொடுக்கும் ஆற்றல் துறவிகளுக்கு இருந்தது. அதனால் தான் துறவிகளின் வலிமையை கூற இந்திரனை சான்றாக திருவள்ளுவர் இங்கு  கூறுகிறார்.

ஐராவத்தில் இந்திரன் (Bantey Srai, Angkor area, Siam Reap, Cambodia)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

”ஐந்து புலங்களைக் கட்டவர் போற்ற” (சம்பந்தர்.திருப்புகலியும் திருவீழிமிழலையும் 8)

நாகபாப்பாக்கள் பற்றி ஜெயமோகன் (நீர்க்கூடல்நகர் – 5 இல் இருந்து. சுட்டியை தட்டவும்)
ஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள்.  ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.

நாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம்  சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.

நாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைப்பார்கள்.  கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.

நாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.

இந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.

இன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை  அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

துறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.

நாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.

குளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்!” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.

நாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.

அவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.

என்ன அடைந்தோம்? அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்

பரிமேலழகர் உரை
ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

மணக்குடவர் உரை
நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

மு.வரதராசனார் உரை
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

No comments:

Post a Comment