Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
மனது மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
மனத்துக்கண் - மனதின் கண்; மனசாட்சி
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
இலன் - இல்லை என்று
ஆதல் - ஆகுதல்
அனைத்து - மற்ற அனைத்து 
அறன் - ஆபரணங்கள்,
ஆகுல - ஆகுலம் - மனக்கலக்கம்; ஆரவாரம் (பேரொலி; பகட்டு துன்பம்)
நீர - nīra   s. (pl.) (நீர்மை) those which have properties, குணத்தையுடையன.
பிற - மற்றவை

முழுப்பொருள்
வாழ்வில் ஒருவன் வெளியே உள்ள நீதிமன்றங்களில் தன்னை நல்லவன் என்று நிருபிக்கலாம். நம்மை முழுவதும் அறிந்த நமது வீட்டு மனிதர்களைக் கூட ஏமாற்றி நல்லவன் என்று காட்டிக்கொள்ளலாம். ஒருவேளை தவறு என்று நிருபிக்கப்பட்டால் கூட வெளியே தப்பித்து செல்லலாம்.

ஆனால் தன்னுடைய சொந்த மனசாட்சியில் அது நடக்காது. தன் மனதிற்கு தெரியும் தான் செய்தது தவறா நன்றா என்று. எங்கு ஓடினாலும் மனதில் இருந்து தப்பவே முடியாது. ஆதலால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் தன் மனதிற்கு மாசு இல்லை என்று தெரிந்தால் அதுவே அனைத்திலும் சிறந்த அறம். மற்ற அனைத்தும் தேவையில்லாத ஆபரணங்களே. மற்ற அனைத்தும் வெறும் சத்தமே.

புற வாழ்க்கையை மேன்படுத்துவதைவிட அக வாழ்க்கையை மேன்படுத்துவது மிக மிக அவசியம். அகவாழ்க்கை சீரானால் புறவாழ்க்கை தானாக சீராகும் அகவாழ்க்கையில் மேன்மை உயர்வை தரும். ஆதலால் குழந்தைகளுக்கு சிறிய வயதில் அறத்தை விதைத்தால் அவர்களின் வாழ்வு மேன்மை பெற நல்ல தொடக்கமாக அமையும்.

ஒருவரின் ஆத்மசக்தி/ஆதம்ஷக்தி மனம் தூய்மையாக இருக்கும்பொழுது வரும். ஒருவரின் ஆத்மசக்தி ஒருவரை தீயவழிகளில் இருந்து விலக்கியோ அல்லது சீக்கிரமாக மீட்டெடுத்தோ நல்வழியில் செலுத்தும். ஆனால் அதற்கு மனதில் நல்லெண்ணங்களை விதைக்கவேண்டும். 

மனதை தூய்மையாக வைத்துக்கொள்வதே ஒருவரின் அறம். தூய்மையான மனமே உண்மையான ஆபர்ணம். மற்றவையெல்லாம் வெற்று சத்தங்களே.

இந்த கடைசி வரி ‘ஆகுல நிர பிற’ (மற்ற அனைத்தும் சத்தமே, மற்றவை எல்லாம் வெற்று ஆபர்ணங்களே) தனை பல இடங்களில் நாம் மனதில் சொல்லிக்கொண்டால் எளிய விஷயங்களை அற்ப விஷயங்களை நாம் கடந்து செல்லலாம்.

திருவள்ளுவர் பல இடங்களில் இதனை ஒட்டிய பொருளை கூறி உள்ளார். உதாரணமாக:
குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்




மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம்.

மணக்குடவர் உரை
ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் ‡ உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்; பிற ஆகுல நீர‡ மனத்துக்கண் குற்ற முள்ள வனாய்ச் செய்யப் படுவன துன்பம் தருவன(வாகிய மறங்களாம்).

அகலம்: அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் நீர்மை. மற்றை உரையாசிரியர்கள் நால்வர் பாடம் ‘மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்’. அதற்கு அவர்களுரை, (அறஞ்செய்வான்) தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக. அவ்வளவே அறம்.(ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆதல் ஓர் ஒழுக்கம் ஆகுமே யன்றி அறமாகாது. என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல். அது பற்றியே, ஆசிரியர் ‘அறவினையோவாதே செல்லும் வாயயல்லாஞ் செயல்’, ‘அன்றறிவாமென்னா தறஞ் செய்க’, ‘வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்’, ‘செயற்பால தோறும் அறனே’ என்று கூறியுள்ளார். அன்றியும், ‘மனத்தின்கண் மாசிலனாதலே அறம்’ என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய அறங்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக்காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆகலான், ‘மாசில னாத லனைத்தறன்’ என்பது ஏடு பெயர்த்தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்துபோய்ப் பின்னர் ஊகித்து எழுதப்பட்ட வற்றால் நேர்ந்த பிழை எனக் கொள்க.

கருத்து: குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகளெல்லாம் அறமாம்.


Thirukkural - Management - Thoughts
A spotless, nonviolent, positive, pure, and immaculate thought is the symbol of righteousness. If a person is pure internally, his external actions will be virtuous, asserts Kural 34. This is also the quality of righteousness. If a person's thoughts are lofty, the other things become secondary.

A spotless mind is virtue's sum
All else is empty noise.

If our thoughts are negative and our acts are apparently positive, those apparently positive acts are considered exhibitionism. That is sheer pretension. When there is incongruity between our thoughts and our actions, others can read our thoughts since we cannot hide our thoughts. Face is the index of mind is still true.

English Meaning - As I taught a kid - Rajesh
One can hide from their friends and family but they can never hide from their conscience. They should always do what their conscience thinks is right.  Rest are all noise. One can prove himself correct to the external court. One can act like a nice person in front of his family, friends and relatives. Even if caught, one can escape or plea for pardon. However, One can never escape the court inside a person's heart. 

So, if one doesn't have wrong or impure thoughts in mind, then that is Truth / Modesty / Moral. Rest of the honorable tiles, wealth  etc. are all just glittering jewels of no value. The key word here is ஆகுல நீர பிற - rest of things are just noise. We should be true to our heart. Our thoughts, efforts, deeds should be Truthful.

Questions that I ask to the kid
From whom you cannot escape when you did a mistake? Why? 

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்

குறள் 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
நீத்தார் - முனிவர்; துறவியர்.

இருமை - பெருமை; கருமை இருதன்மை; இருபொருள் இம்மை மறுமைகள்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

தெரிந்து - முழுதும் தெளிந்து / அறிந்து
ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
- நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்;

பூண்டு - சிறுசெடி; உள்ளிப்பூண்டு; சிற்றடையாளம்.
பூண்டார் - சிற்றடையாளம் கொண்டோர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

பிறங்கு -  lines inside the joints of the fingers - விரலிறை,

     - III. v. i. shine, glitter, துலங்கு; 2. be lofty, elevated, உயரு; 3. grow full, abundant; 4. sound, ஒலி; 5. come abroad, வெளிப்படு.
பிறங்கு-தல்
piṟaṅku-   5 v. intr. 1. Toshine, glitter, glisten; விளங்குதல்.; To be high,lofty, elevated; உயர்தல். பிறங்குநிலை மாடத்து(புறநா. 69). 3. To be great, exalted, dignified;சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23).4. To grow full, complete, abundant; மிகுதல்.

பிறங்கிற்று - 

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
எல்லா இடங்களிலும் நிலவுகின்ற நன்மை தீமை போன்ற இருவகை நிலைகளைத் தெளிவாக உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்து அவ்விடத்தில் அறவழியில் (அதாவது நேர்மையான வழியில், தருமத்தின் வழியில்) செல்வோர் வாழ்வில் உயர்வு பெற்று மாட்சிமை என்கிற சிறப்பு ஒளியாக இவ்வுலகில் வீசும். அதுவே சிறந்தது.


இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வருகிறது. நீத்தார் என்றால் முனிவர், துறவியர் என்று பொருள். ஆதலால் ஞானம் உடையவர்களின் பெருமை என்று நாம் இங்கு பொருள் கொள்ளலாம்.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”இருமை நோக்குறும் சான்றவர் குழாம்” (கம்ப.கிளைகண்டு 82)

நாஞ்சில் நாடன் உரை
‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு ’

என்று. நன்மையும் தீமையும் போல, எல்லா இடத்தும் நிலவும் இருவகை நிலைகளைத் தெளிவாக உணர்ந்து அறவழி நிற்பவரின் சிறப்பு உலகில் ஒளிவீசும் என்பது பொருள். எனவே இருமை என்றால் இரண்டு என்று பொருள். அந்த வரிசையில்

பரிமேலழகர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.

மணக்குடவர் உரை
பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

சாலமன் பாப்பையா உரை
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துப்பு  - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.
துப்பார் - உண்பவர்

துப்பார்க்குத் - உண்பவர்க்கு
துப்பு  ஆய - உணவாக
துப்பு  ஆக்கி - உணவு விளைவிக்க தேவையான பொருளாக
துப்பார்க்குத் - அவற்றை உண்பார்க்கு
துப்பு - உணவாக
ஆயதூஉம் - ஆவதும்
மழை.- வான் பெய்யும் மழை

முழுப்பொருள்
இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் உணவை உண்டே வாழ்கின்றன (சில உயிரினங்கள் உணவு உண்ணாமாலும் இருக்கலாம்).  அவ்வுணவை விளைவிக்க கூடிய மிக தேவையான பொருட்களில் ஒன்று நீர். அந்த நீர் மழையாக பொழிந்து உணவு விளைவிக்க நல்ல விளைநிலங்களை தந்து தக்க பருவத்தில் நல்ல விளைச்சலை தந்து உணவாக ஆகின்றன. மாமிச உணவாக மாறும் விலங்குகளும் நீரையும் நம்பி உயிர்வாழ்கின்றன. பின்பு உணவு உண்ணும் பொழுதும் நீரினை மனிதன் பருகுகின்றான். அந்த நீர் ஆற்றில் இருந்தோ குலத்தில் இருந்தோ ஏரியில் இருந்தோ வருகிறது. அதற்கு மூலமாக இருப்பது மழை நீர். ஆகவே குடிக்கும் நீர் உணவாகவும் ஆகிறது. ஆதலால் உண்ண உணவாகவும் விளைவிப்பதற்கு தேவையான பொருளாகவும் மழைநீர் இருக்கிறது.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” (புறநா 18:21)
“நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய” (புறநா 58:10)
“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” (புறநா 70:9)
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே”  (புறநா 186:1)

பரிமேலழகர் உரை
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே.

இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது.

துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. "துப்பாய துப்பாக்கி"
என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை.

மணக்குடவர் உரை
பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

English Meaning - As I taught a kid - Rajesh
For all the humans (/living organisms) that consume food, it (rain water) becomes the food. For the food to become the food it (rain water) is the main ingredient without which it is not possible. Hence, we can say that the humans (/living organisms) consume the rain water. All lives in this world depend on rain water. 

Questions that I ask to the kid
What do humans and all living organisms actually eat?  Explain in detail?

அகர முதல எழுத்தெல்லாம்

குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]

பொருள்
அகரம் - 'அ'என்னும்எழுத்து(கரம்சாரியை); மருத நிலத்தூர்; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம்; பாதரசம்

முதல  - மொதல்  (first), ஆதி, முதல்வேர் (அடிவேர்)

எழுத்து  - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம்.

எல்லாம்  - முழுதும்

ஆதி - தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம் பழைமை கடவுள் எப்பொருட்கும்இறைவன்; சூரியன் சுக்கிரன் திரோதானசக்தி; காண்க:ஆதிதாளம்; அதிட்டானம் ஒற்றி காய்ச்சற்பாடாணம் மிருதபாடாணம்; நாரை ஆடாதோடை குதிரையின்நேரோட்டம்; மனநோய்

பகவன்  - பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறுகுணங்களை உடைய பெரியார்; சிவன்; திருமால்; தேவன்; பிரமன்; புத்தன்; அருகன்; சூரியன்; குரு; திருமால்அடியாரான முனிவர்.

முதற்றே  - முதல்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
உலகில் உள்ள எழுத்தக்களில் ஆன எல்லா நூல்களையும் ஆதி முதல் இன்று வரை உள்ள வற்றையும் பகுத்து ஆராய்ந்து அறிவதே சிறப்பு. இவ்வுலகிற்கு பகுத்து ஆராய்வதே முதன்மையானது சிறப்பானது. 

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
“அந்தமில் ஆதியம் பகவன்” (திருவாய்மொழி, 1.3.5)
“முன்னவன் உலகுக்கு’ (அப்பர்.திருமாற்பேறு 8)
“அருத்தனாய் ஆதிதேவன்” (சம்பந்தர்.நெடுங்களம் 6)
“ஆதி பெருமான திடம்” (சம்பந்தர்.வேதவனம் 7)

“ஆரும் அறியார் அகாரம் அவனென்று” (திருமந் 1751)
“அகார முதலா யனைத்துமாய் நிற்கும்” (திருமந் 1753)
“அகர முதலானை அணிஆப்ப னூரானை” (சம்பந்தர்.ஆப்பனூர் 5)
“ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்” (அப்பர்.ஆரூர் 5)
“அகரம்முதலின் எழுத்தாகி நின்றாய்’ (சுந்தரர்.நெல்வாயில்.அரத்துறை.7)

குறிப்பு
பகவன் என்ற சொல் பகத்தை உடையவன் என்னும் பொருள் உடையது. ஐசுவரியம், வீரியம் புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறையும் பகம் என்னும் சொல் குறிக்கும். பூதங்களின் உற்பத்தி, முடிவு, வரவு, செலவு, அவித்தை, என்னும் ஆறையும் அறிபவன் பகன் என்று கூறுவதும் உண்டு. பகவன் என்ற சொல்லுக்குக் கேவல ஞானி என்று பொருள் உரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலப்.10, 117)

உலகுக்கு முதல்வன் இறைவன் என்று கூற வந்தவர், அதற்குப் பொருத்தமாக “ஆதிபகவன்” என்ற பெயரைக் கூறினார். 

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உவமையில்லான் இறைவன் என்று உரைப்பவர்தான்
உவமையென இறைவனையே ஆக்குகின்றார்
அகரமதற்குவமையென இறைவனையே
அழகு படச் சொல்லி முதற் குறளிலேயே
தவ முனிவர் வள்ளுவரும் தன்னை ஒரு
தமிழனென்றுச் சொல்லுகின்றார் பெருமையோடு
புவிஅதனின் முதல் மொழியாம் தமிழாம் அன்னை
போற்றி நிற்பீர் தமிழர்களே வெல்க தமிழ்

பரிமேலழகர் உரை
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.

விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக்
குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்."

என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.
அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

[அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989).

'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் -
செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான்
தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம்
குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]

மணக்குடவர் உரை
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

மு.வரதராசனார் உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை

குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
பெறுமவற்றுள் - ஒருவன் இல்வாழ்க்கையில் பெறக்கூடிய செல்வத்தினுள் எல்லாம்

யாம் அறிவது - யாம் அறிந்தவற்றுள்

இல்லை - வேறு இல்லை

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல். 
அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது தெளிவு  வரும்.

அறிந்த - அறி-தல் - பயிலுதல், உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (ப

மக்கட்பேறு - புத்திரரைப் பெறுகை. , குழந்தைச்செல்வம் 

அல்ல - அல்லாத 

பிற - பிற அனைத்தும்

முழுப்பொருள்
ஒருவர் இல்வாழ்க்கையில் பல செல்வங்களை பெறலாம். இவையாவும் ஒருவருக்கு உண்மையான செல்வமாகாது. உண்மையான செல்வம் என்னவென்றால் முடிவில்லாத ஞானத்தின் மூலம் தெளிவு பெற்று அதன்படி வாழ்க்கையை பயிலும் / உணர்ந்து நடக்கும் புதல்வர்களே. இப்படிப்பட்ட மக்கட்செல்வத்தை ஒருவர் பெறவில்லை என்றால் மற்ற செல்வங்கள் பெற்றாலும் அவை செல்வத்தில் சேராது. 

இங்கே திருவள்ளுவர் "அறிவு அறிந்த" என்று கூறியிருக்கிறார். இதற்கு ஆழமாக பார்த்தால் அறிந்த என்ற சொல்லுக்கு வெறும் அறிதல் என்று மட்டும் பொருளல்ல அதற்கு பயிலுதல் என்னும் பொருளும் அடங்கும் என்பதை நாம் அறியக்கூடும். அதாவது அப்பிள்ளைகள் இவ்வுலகிற்கு பயனுள்ள பிள்ளைகளாக விளங்குதல். இவ்வதிகாரத்தின் இறுதியில் "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்", "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்ற குறள்களிலும் இதன் அம்சத்தை காணலாம்.

ஒப்புமை
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றி பெரும்பே றில்லை” (முதுமொழிக் 51)

சகதேவன் “ஒவ்வொரு புல்லும் தன் தலைமுறைகள் வாழ்ந்த அறிதலை சிறுவிதைமணியாக்கி தன் தலையில் சூடியிருக்கிறது. தான் மடியும்போது எஞ்சவிட்டுச் செல்கிறது” என்றான். அவனை திரும்பி நோக்கிய தருமன் சில கணங்களுக்குப்பின் “ஆம், நம்மில் நாளை எஞ்சுமெனில் அது அறிவென்றோ உணர்வென்றோ இருக்காது. உடலில் பழக்கமென, உள்ளத்தில் கனவென, உயிரில் நுண்மையென மறைந்திருக்கும். அதை அறிய இயலாது, நம்பலாம்” என்றார். சகதேவன் சிரித்து “எப்போதும் அறிய இயலாதவற்றை அல்லவா நம்புகிறோம்?” என்றான்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.]

பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பெறு மவற்றுள்-இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத;பிற - வேறு சிறந்தவற்றை, யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை.

அறிவு என்பது அறிவைத்தரும் நூலைக் குறித்தலால் கருமிய, (காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. பெற்றோர், பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப் பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும்.

மணக்குடவர் உரை
ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.

பொருள்: பெறும் அவற்றுள் அறிவுடைய மக்கள் பேறு அல்ல பிற - (மாந்தர்) பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேறு அல்லாத பிறவற்றை, யாம் அறிவது இல்லை - யாம் (ஒரு பேறாக) மதிப்பது இல்லை.

அகலம்: பெறப்படுவதனைப் பேறு என்றார். முந்திய உரையாசிரி யர்கள் பாடம் ‘அறிவறிந்த’. ‘அறிவறிந்த மக்கட் பேறு’ என்பது ‘கற்று அறிய வேண்டுவனவற்றை அறிந்த மக்களைப் பெறுதல்’ எனப் பொருத்த மற்ற பொருளைத் தருதலானும், ‘அறிவுடைய மக்கட் பேறு என்பது ‘இயற்கை அறிவையுடைய மக்களைப் பெறுதல்’ எனப் பொருத்த முள்ள பொருளைத் தருதலானும், ‘அறிவுடைய’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. ‘அறிவ றிந்த என்றதனால், மக்கள் என்பது பெண் ஒழித்து நின்றது’ என உரைப்பாரும் உளர். அப் பாடத்தைக் கொள்ளினும் அவ்வுரை பொருந்தாது, கல்வியறிவு இரு பாலார்க்கும் பொதுவாகலான்.

கருத்து: மாந்தர் பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேறே சிறந்தது.

மு.வரதராசனார் உரை
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.