குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
பொருள்
பெறுமவற்றுள் - ஒருவன் இல்வாழ்க்கையில் பெறக்கூடிய செல்வத்தினுள் எல்லாம்
யாம் அறிவது - யாம் அறிந்தவற்றுள்
இல்லை - வேறு இல்லை
அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.
அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது தெளிவு வரும்.
அறிந்த - அறி-தல் - பயிலுதல், உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (ப
மக்கட்பேறு - புத்திரரைப் பெறுகை. , குழந்தைச்செல்வம்
அல்ல - அல்லாத
பிற - பிற அனைத்தும்
முழுப்பொருள்
ஒருவர் இல்வாழ்க்கையில் பல செல்வங்களை பெறலாம். இவையாவும் ஒருவருக்கு உண்மையான செல்வமாகாது. உண்மையான செல்வம் என்னவென்றால் முடிவில்லாத ஞானத்தின் மூலம் தெளிவு பெற்று அதன்படி வாழ்க்கையை பயிலும் / உணர்ந்து நடக்கும் புதல்வர்களே. இப்படிப்பட்ட மக்கட்செல்வத்தை ஒருவர் பெறவில்லை என்றால் மற்ற செல்வங்கள் பெற்றாலும் அவை செல்வத்தில் சேராது.
இங்கே திருவள்ளுவர் "அறிவு அறிந்த" என்று கூறியிருக்கிறார். இதற்கு ஆழமாக பார்த்தால் அறிந்த என்ற சொல்லுக்கு வெறும் அறிதல் என்று மட்டும் பொருளல்ல அதற்கு பயிலுதல் என்னும் பொருளும் அடங்கும் என்பதை நாம் அறியக்கூடும். அதாவது அப்பிள்ளைகள் இவ்வுலகிற்கு பயனுள்ள பிள்ளைகளாக விளங்குதல். இவ்வதிகாரத்தின் இறுதியில் "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்", "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்ற குறள்களிலும் இதன் அம்சத்தை காணலாம்.
ஒப்புமை
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றி பெரும்பே றில்லை” (முதுமொழிக் 51)
சகதேவன் “ஒவ்வொரு புல்லும் தன் தலைமுறைகள் வாழ்ந்த அறிதலை சிறுவிதைமணியாக்கி தன் தலையில் சூடியிருக்கிறது. தான் மடியும்போது எஞ்சவிட்டுச் செல்கிறது” என்றான். அவனை திரும்பி நோக்கிய தருமன் சில கணங்களுக்குப்பின் “ஆம், நம்மில் நாளை எஞ்சுமெனில் அது அறிவென்றோ உணர்வென்றோ இருக்காது. உடலில் பழக்கமென, உள்ளத்தில் கனவென, உயிரில் நுண்மையென மறைந்திருக்கும். அதை அறிய இயலாது, நம்பலாம்” என்றார். சகதேவன் சிரித்து “எப்போதும் அறிய இயலாதவற்றை அல்லவா நம்புகிறோம்?” என்றான்.
பரிமேலழகர் உரை
[அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.]
பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பெறு மவற்றுள்-இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத;பிற - வேறு சிறந்தவற்றை, யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை.
அறிவு என்பது அறிவைத்தரும் நூலைக் குறித்தலால் கருமிய, (காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. பெற்றோர், பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப் பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும்.
மணக்குடவர் உரை
ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.
பொருள்: பெறும் அவற்றுள் அறிவுடைய மக்கள் பேறு அல்ல பிற - (மாந்தர்) பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேறு அல்லாத பிறவற்றை, யாம் அறிவது இல்லை - யாம் (ஒரு பேறாக) மதிப்பது இல்லை.
அகலம்: பெறப்படுவதனைப் பேறு என்றார். முந்திய உரையாசிரி யர்கள் பாடம் ‘அறிவறிந்த’. ‘அறிவறிந்த மக்கட் பேறு’ என்பது ‘கற்று அறிய வேண்டுவனவற்றை அறிந்த மக்களைப் பெறுதல்’ எனப் பொருத்த மற்ற பொருளைத் தருதலானும், ‘அறிவுடைய மக்கட் பேறு என்பது ‘இயற்கை அறிவையுடைய மக்களைப் பெறுதல்’ எனப் பொருத்த முள்ள பொருளைத் தருதலானும், ‘அறிவுடைய’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. ‘அறிவ றிந்த என்றதனால், மக்கள் என்பது பெண் ஒழித்து நின்றது’ என உரைப்பாரும் உளர். அப் பாடத்தைக் கொள்ளினும் அவ்வுரை பொருந்தாது, கல்வியறிவு இரு பாலார்க்கும் பொதுவாகலான்.
கருத்து: மாந்தர் பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேறே சிறந்தது.
மு.வரதராசனார் உரை
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அறிவுள்ள பிள்ளைகளே இல்வாழ்வின் பெரும்பேறு.
முழுப்பொருள் பகுதி மிக அருமை.
ReplyDelete