Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே

குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு
[காமத்துப்பால்,  களவியல்,  தகையணங்குறுத்தல் ]

பொருள்
ஒள் -  adj. Good, excellent, நல்ல. 2. Beautiful, அழகுள்ள. 3. Bright, glitter ing, luminous, பிரகாசமான. 4. Knowing, அறிவுள்ள. 5. Abundant, மிகுதியான. The ள் of this word is changed into ட் and ண் before appropriate letters, whence the nouns ஒட்பம், and ஒண்மை. ஒள்ளழல்கண்ணிற்கால. His eyes emitting bright sparks of fire through rage

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.
நுதற்கு - நெற்றி
நுதற்குறி - n. நுதல்³ +.Sacred marks on the forehead; புண்டரம் திலகம்முதலிய நெற்றிக்குறிகள். (திவா.)

 - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு

உடைந்ததே -> உடைதல் - பிளத்தல், தகர்தல், முறுக்கு அவிழ்தல், மலர்தல், வெளிப்படுதல், சாதல்

ஞாட்பு - போர்; போர்க்களம்; படை; கூட்டம்; கனம்; வலிமை.
ஞாட்பினுள் - போர்க்களத்தில் படைகள் மத்தியில் வலிமையாக

நண்ணார் - பகைவர்
நண்ணாரும் - பகைவரும்

உட்கு - அச்சம்; நாணம்; மிடுக்கு; மதிப்பு.
உட்கும் - மதிக்கும், அச்சம் கொள்ளும்

என் -  என்னுடைய
பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.

முழுப்பொருள்
இவ்வளவு அழகான ஒளிமிக்க நெற்றியை கொண்ட இப்பெண்ணின் முகத்தை கண்டால் நான் நாணுகிறேன். தலைகுனிகிறேன். ஆச்சர்யமாக உள்ளது!!

ஏன் ஆச்சர்யமாக உள்ளது என்றால்? நான் பெரு வலிமை வாய்ந்த அரசன். போர்க்களத்தில் என்னுடைய வலிமை பற்றி என்னுடன் போர் புரியாத பகைவர்க்கூட கேட்டுத் தெரிந்து என் மீது அச்சம் கொள்வர். 

இவ்வளவு வலிமை கொண்ட என்னை சிறுமையாக்கிவிட்டல் இந்த பேரழகி! ஆ ஆ! [நானும் மானுடன் ஆனேனே! (சொந்த வரி)]. காதல் காதல்!

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே” (குறுந் 129.5-6)

“பிறையென, மதிமயக் குறூஉம் நுதலும்” (குறுந் 226:2-3)

“நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே” (குறுந் 95:4-5)

“போருள், அடல்மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
மன்றம் படர்வித் தவள்” (கலி 141:8-10)

“ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதியாகக்
கூசமூன் றுலகுங் காக்கும் கொற்றத்தேன் வீரக் கோட்டி
பேசுவார் ஒருவற் காவி தோற்றலென் பெண்பால் வைத்த
ஆசைநோய் கொன்ற தென்றா லாண்மைதான் மாசுண் ணாதோ” (கம்ப.மாயாசனகப்.13)

பரிமேலழகர் உரை
(நுதலினாய வருத்தம் கூறியது.) ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது. ('மாதர்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதானல், பகைவராதல் பெற்றாம்.. 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.).

மணக்குடவர் உரை 
இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி. இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அவள் நெற்றியினாலான வருத்தங் கூறியது)
ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு-போர்க்களத்திற்கு வந்து என் வலிமையை அறியாத பகைவரும் வந்தறிந்தார் வாய்க்கேட்டு அஞ்சுதற்கேதுவான என் பெருவலிமை; ஒள்நுதற்கு ஓ உடைந்ததே-இப்பெண்ணின் ஒளிபொருந்திய சிறு நெற்றியொன்றிற்கே ஐயோ! அழிந்துவிட்டதே!

பெண் என்பது அதிகாரத்தால் வந்தது. பீடு என்பது பெருமை பேர் முதலியவற்றையுந் தழுவும். 'ஓ' கழிவிரக்கம் பற்றிவந்தது. 'ஓஒ' இசைநிறையளபெடை, உம்மை எச்சம், ஏகாரம் தேற்றம், "பெருமையும் உரனும் ஆடூஉமேன" (தொல். கள. 7) என்று கூறிக்கொள்ளும் பெருமையெல்லாம் பெண்ணிடத்துச் செல்லா தென்று, காமத்தின் இயல்பு கூறியவாறு.

"கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் 
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே 
தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றா 
ளாம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே"

என்னுந் திருக்கோவைச்செய்யுள் (21) ஈங்குக் கவனிக்கத்தக்கதாம்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
போர்க்களத்தில் பகைக் குலத்தார் கண்டாலே அஞ்ச வைக்கும்
பொரு தடக்கை தடந்தோள்கள் பொலி மார்பு கொண்டு நின்று
ஆர்க்கின்ற பெரு வீரன் அணையில்லா வெற்றி கொண்டான்
நீர்த்துப் போய் நிற்கின்றான் நெஞ்சிழந்து வேர்க்கின்றான்
பார்த்தானாம் பாவையவள் பால் பிறையின் நெற்றியினை
படீரென்று உடைந்ததுவாம் பாவியவன் பீடெல்லாம்
வார்க்கின்றார் வள்ளுவராம் வாழ வைக்கும் பேராசான்
வகையாகக் காமத்துப் பாலதனில் சுவையாக

ஏங்க வைத்து விட்டதடி ....!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

என்னை கண்டு அஞ்சாத 
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத 
மங்கையும் இல்லை .....!!!

அத்தனையும் ஒரு நொடியில் 
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய் 
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம் 
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம் 
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

மு.வ உரை
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!.

சாலமன் பாப்பையா உரை

களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே

போர்க்களத்துக்கு வராதவர்கள் கூட, பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவாகிய என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்துபோயிற்றே!


அடடா 
போர்க்களத்தில்
பகைவர்களைப்
பயந்தோடச் செய்யும் 
என் வீரம்
இவளின்
பேரொளி வீசும் 
நெற்றியினைக் 
கண்டதும்
ஒன்றுமற்றதாகிப்
போனதே


எப்பேர்பட்ட வீரனானாலும் கட்டழகிகளைக் கண்டால், வீரத்தை இழக்கக்கூடும்.ராமாயணம் கூட கைகேயி, சீதை,சூர்ப்பணகை என பெண்களை மையமாக்கியே அமைந்தது.மகாபாரதம், திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியியால் உருவானது.
ஆகவேதான் பெரியோர்கள் "ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே' என்றனர்.பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள்.ஆமாம்..அதற்கும் குறளுக்கும் என்ன சம்மந்தம்? என்கிறீர்களா..இருக்கிறது..

இக்குறளைப் பாருங்கள்..


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் (என் வீரத்தால்) என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், ஒளி பொருந்திய (அவள்) நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே! (என்கிறானாம் ஒருவீரன்)
(அதாவது..அவன் வீரத்தையே அழிக்கும் அளவு அவளது நெற்றி அழகே இருக்கிறதாம்)

எதிரியின்
படைகளை பொடியாக்கிய
என்
வெற்றியும் வீரமும்
ஒளிவீசும்
உன் 
நெற்றியின் முன்னால்
தோற்றுப்போனது.

நிலா 
தனக்கான ஒளியை
எதனிடம் கடன்வாங்குகிறது
சூரியநிடமா?
இல்லை
உன் சுந்தரவதனத்திடமா?

இருநோக்கு இவளுண்கண் உள்ளது

குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
[காமத்துப்பால், குறிப்பறிதல், களவியல்]

பொருள்
இரு - இரண்டு

நோக்கு -  கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு
நோக்குதல் - கண்காணித்தல்

இவள் - இவளுடைய

உண்கண் - மைதீட்டியகண்

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

ஒரு - ஒரு

நோக்கு - பார்வையில்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. 

நோக்கு - விருப்பம் (மேலே சொல்ல பட்ட நோக்கு-இன் பொருளை பார்க்கவும்)

ஒன்று - மற்ற ஒரு பார்வை

அந் நோய் - அந்த நோய்யை, துன்பத்தை 

மருந்து - தீருக்கும் மருந்து

முழுப்பொருள்
ஒரு காதல்வயப்பட்ட பெண்ணுடைய மைதீட்டிய கண்ணுக்கு இரண்டு பார்வைகளாம். ஒன்று அவளுடைய உள்ள காதலை குறிக்குமாம். அதாவது காதலனை பிரிந்து இருப்பதனால் வரும் விரக (காமம்/காதல்) வேட்கை உணர்த்தும் பார்வை. அந்த பார்வை காதலனுக்கும் துன்பம் தரும். அதுவே நோய் என்கிறார் திருவள்ளுவர்.

ஆனால் மற்றொரு பார்வையோ இந்த நோயை தீர்க்கும் மருந்தாகவே அமையுமாம். இந்த பார்வையால் அவன் உயிர்த்தெழுந்து செயல்படுவானாம். 

நான் பிரிவால் நோயுற்று இருக்கிறேன். என்னை விரைவில் திருமணம் செய்துக்கொண்டு புணர்ச்சி மகிழுங்கள் என்பதை குறிக்கிறாள் காதலி. குறிப்பால் உணர்ந்த்துவதே இக்குறளின் அழகு

நாஞ்சில் நாடன் உரை
திருக்குறளில் ஒரேயொரு இடத்தில். குறள் எண் 1091. இன்பத்துப் பாலில் குறிப்பறிதல் அதிகாரம்.

‘இரு நோக்கு இவளின் கண் உள்ளது ; ஒரு நோக்கு
நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து’

பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகவே சொல் பிரித்து, Punctuation போட்டு எழுதியுள்ளேன். என்றாலும் மனது பொறுக்கவில்லை. அத்தனை நயம் மிக்க திருக்குறள் இது. மையுண்ட இவள் வேல் போன்ற, வாள் போன்ற, மீன்போன்ற கண்களுக்கு இரண்டு நோக்குகள் உண்டு. ஒரு நோக்கு காதல் அல்லது காம நோய் செய்யும். மற்றொரு நோக்கு அந்நோய்க்கு மருந்தும் ஆகும். ஒரு பாடல் காலம் கடந்து வாழ்வதற்கு இந்தச் செய்யுள் ஒரு எடுத்துக்காட்டு. மையுண்ட கண்கொண்ட பெண்களுக்கு என்றில்லை, பொய்யுண்ட கண்கொண்ட அருள் விற்பனை செய்யும் சாமியார்களுக்கும் இரு நோக்கு உண்டு. செல்வந்தர்களுக்கு என்று பொன்னோக்கு. அற்ப மானிடர்க்கு என்று புண்ணோக்கு

ஒப்புமை
“செவ்வனேர், நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்” (திருக்கைலாய ஞானவுலா, 78-9)

“...... நஞ்சும் அமிர்தமுமே
போல்குணத்த பொருகயற்கண்” (சீவகசிந்தாமணி 167)

“பிணியும் அதற்கு மருந்தும் பிறழ்ப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே” (திருக்கோவையார், 5)

மேலும்: அஷோக் உரை (நன்றி)
மாணிக்கவாசகரின் திருக்கோவையார் பாடலொன்றில், “பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே”, என்பார். அதாவது, மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள், பிறழுந்தோறும், பொதுநோக்கத்தாற் பிணியும், உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆயின என்பார்.

பின்பு வரப்போகும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்திலும், இக்குறளை அடியொற்றி, “பிணிக்கு மருந்து பிறமன் அணி இழை தன்நோய்க்குத் தானே மருந்து”, என்பார் வள்ளுவர்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும் , தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின் , தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.]

(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
[தலைமகன் தலைமகள் காதற் குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது ]
இவள் உன்கண் இருநோக்கு உள்ளது-இவளுடைய மையூட்டிய கண்கள் என்மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன; ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செய்வது, இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாவது.

அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் தமிழ்ப்பெண்டிர் கண்ணிற்கு மையிடும் பண்டை வழக்குப்பற்றி 'உண்கண்' என்றார். நோய்நோக்கு தலைமகன்மேற் காதற்குறிப்பை வெளிப்படுத்தாத பொதுநோக்கு; மருந்து நோக்கு அதை வெளிப்படுத்தும் சிறப்பு. இதுவரை ஒருதலைக்காதலாகிய கைக்கிளையாயிருந்த காமநிலை, இன்று இருதலைக்காதலாகிய ஐந்திணயாகப் பெயரத்தொடங்கியமை இதனார் கூறப்பட்டது. கண்டே மகிழும் காதலன் இனி உண்டு மகிழும் வாய்ப்பையுங் கண்டான்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உண்டு விட்டாள் கண்களினால் என் உயிரை இதழமுதம்
          தந்தேனும் காத்தாளா தளிர்க் கொடியாள்  இல்லை இல்லை
கொண்டேன் நான் நோய் அந்த்க் கோல விழிப் பார்வையினால்
          கொண்ட நோய் தீர்த்து விடக் கூடிய  ஒர்   மருந்தில்லை
கண்டு  நின்றார் அனைவருமே கணக்கொன்று சொன்னார்கள்
          கண்மணியாள் பார்வையொன்றே அதைத் தீர்க்கும்  மருந்தென்று
நோய்  தரும்  பார்வையாய் ஒரு பார்வை வைத்துள்ளாள்
          நோய் தீர்க்கும் பார்வையும்  அவளே தான் கொண்டுள்ளாள்

என் ஆதியும் அந்தமும் (நன்றி: கவிப்புயல் இனியவன்)
என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!

மு.வ உரை
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்

சாலமன் பாப்பையா உரை
இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

வேடிக்கையாக சொல்வதுண்டு..இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..இருவருமே வாழ்க்கையே வெறுத்து விட்டது என்றனர்.மூன்றாவது நண்பர் வந்தார்..முதல் நண்பரிடம் வெறுப்பதற்கான காரணம் கேட்டார்..
என் மனைவியுடன் வாழ்ந்து அனுபவித்த துன்பங்களால் வாழ்க்கை வெறுத்துவிட்டது என்றார்.
மற்ற நண்பரிடம் கேட்டார்..
இதுநாள் திருமணமே ஆகாது..மனைவியுடன் வாழமுடியவில்லையே என்று வெறுத்துவிட்டது என்றாராம்/
வள்ளுவனும் இதை அறிந்திருப்பான் போலும்..
அவன் என்ன சொல்கிறான் பார்ப்போம்..

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளின் மைதீட்டிய கண்களில் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது..ஒரு பார்வை  காதல் நோயைத் தருகிறது..மற்ற பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை ஆகிறது/.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா 
என்னல்லது இல்லை துணை
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.
மன்னுயிர் - மானிடச்சாதி; மிருகசாதி / விலங்குச்சாதி, ஆத்துமா / ஆன்மா, நிலைபெற்றஉயிர்;  மன்னில் உள்ள அனைத்து மானுட மற்றும் மிருக உயிரினங்கள்

எல்லாம்  - எல்லாம், முழுதும்

துயிற்றுதல் - உறங்கச்செய்தல்; தங்கப்பண்ணுதல்.

துயிற்றி - துயில், நித்திரை செய்வித்தல்

அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

அளித்து - அளிசெய்யத்தக்கது

இரா - இரவு

என் - என்னை

அல்லது  - தவிர

இல்லை - வேறு யாரும் இல்லை

இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
இரவு என்பது அனைத்து உயிரினங்களையும் உறக்கத்தில் ஆழ்த்தி விடும். அப்படி ஆழ்த்தியதால் இரவு தனிமை பட்டு இருக்கும். [ஒரு நாள் தனிமை ஒன்றும் பெரிய செய்தி அல்ல. ஆனால் பல நாள் தனிமை துன்பம் தரும்]. வேறு துணை கிடையாது.

அதேப்போல் தலைவியும் தலைவன் இல்லாமல் துன்பம் பட்டு இருக்கிறாள். [பல நாட்களாக]. ஆதலால் அந்த தனிமைபடுத்தபட்டு துன்பம்பட்டுகொண்டு இருக்கும் இரவுக்கு இவளே தோழி இவளே துணை என்கிறாள். இவளால் அந்த துன்பத்தை புரிந்துக்கொள்ள முடியும் என்கிறாள். அவள் துன்பத்தை சொல்கிறாள். 

இந்த துன்பம் கொடியது. துணையில்லாமல் நான் வாழ்கிறேன். எனக்கு உறக்கம் வரவில்லையே.எனக்கு இரவே துணை என்கிறாள்.

இக்குறளில் நான் கண்டது என்னவென்றால் சொந்த வீட்டில் அத்தை மாமா அல்லது அம்மா அப்பா அல்லது பக்கத்து வீட்டில் நண்பர்கள் இருப்பினும் அவள் எப்படி தனிமை படுகிறாள்? அவளுடைய தனிமை என்ன என்பதை உணர்த்தவே (கோடான கோடி மனிதர்களும் விலங்குகளும் உயிருடன் உறங்கினாலும் தனிமையாக உள்ளது இரவு) இரவை உவமையாக காட்டுகிறார் திருவள்ளுவர்.  

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள்முனிவின்று
நனந்தலை யுலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே” (குறுந் 6)

“யாமத்து
ஞாலத்து உயிரெல்லாம் கண் துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்தும் துஞ்சாதுன் கண்” (கைலைபாதி 64)



இரவு

பரிமேலழகர் உரை
(இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை. ('துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)

மணக்குடவர் உரை
இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது.

இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இரவின் கொடுமை கூறி வருந்தியது.)
இரா அளித்து - இவ்விரவு இரங்கத்தக்கதாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை - இவ்வுலகத்து மற்றெல்லா வுயிர்களையுந் தூங்க வைத்து விட்டதனால், இராமுழுதுந் தூங்காத என்னைத்தவிர வேறொரு துணையும் இல்லாதிருந்தது.

நிலைபெற்ற வுயிர் ஒன்றும் இவ்வுலகத்தின்மையாலும், மாந்தரேயன்றி மற்றவுயிர்களும் இரவில் தூங்குவதாலும், மன் என்னுஞ்சொற்கு மற்றுப் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. ஆயினும், சில மாந்தர் இரவிலேயே வழங்குவதனாலும், சில மாந்தர் இரவிலேயே அல்லது இரவிலுந் தொழில் செய்வதனாலும், எல்லாம் என்னுஞ் சொல் பெரும்பான்மை பற்றியதென்று கொள்ளப்படும். பொதுவாக இராக்காலமே தூங்கும் வேளையாதலாலும், பகலுழைப்பாளிகட்கு இரவில் தானாகத் தூக்கம் வந்துவிடுவதனாலும், இரவே தூங்கவைப்பதாகச் சொல்லப்பட்டது. துணையொடு கூடி இன்புறும் உயிர்களையெல்லாந் தூங்கவைத்துவிட்டு, துணையின்றி வருந்தும் என்னைமட்டும் தூங்கவையாது தனக்குத் துணையாக் கொண்டது, இக்கொடிய இரா என்னுங் கருத்தினளாதலால், ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பாம்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உரை (நன்றி)
‘மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து, இராஎன்அல்லது இல்லாத் துணை’‘ - இந்த உலகத்து உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து காக்கும் இரவுக்கு என்னை அல்லாது வேறு யார்  துணை?’ இந்தப் பாடல் நுட்பமாக ஒரு உணர்வைச் சொல்கிறது… ‘எல்லோரும் உறங்குகிறார்கள், இரவு தனித்து இருக்கிறது. இரவுக்குத் துணையாக நான் மட்டுமே  விழித்திருக்கிறேன்’ என்பது. மிக நுணுக்கமாக தனிமைத் துயரும் பிரிவின் வேதனையும் உணர்த்தும் பாடல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
எல்லோரும் உறங்குகின்றார் இவ்விரவால்
யான்மட்டும் உறங்கவில்லை அவர் பிரிவால்
பொல்லாத இரவு இது அன்பு கொண்டார்
போய் விட்டார் என்பதனால் துணையேயின்றி
நல்லாள் நான் தவிக்கின்றேன் எனக் கருதி
நாடி எந்தன் துணை மட்டும் கொண்டு நன்கு
உள்ளார்கள் அனைவரையுமுறங்கச் செய்து
ஒரு துணையாய் உறக்கமின்றி வைத்ததென்னை

நீ -என்னோடு இருகிறாய் ...!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)

நீ -என்னோடு இருகிறாய் ...!!!
ஓ இரவே நீயும்
என்னைபோல் அநாதை
எல்லோரையும்
தூங்க வைத்திவிட்டு
நீ -என்னோடு இருகிறாய் ...!!!

காதல்
வலி கொண்டவருக்கு
பகல் என்ன ..?
இரவென்ன ..?
இரவே கவலை படாதே
உன்னோடு நானும்
இருக்கிறேன் ....!!!

மு.வ உரை
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது

சாலமன் பாப்பையா உரை
பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை

அழுக்காறு எனஒரு பாவி

குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை, மனத்தழுக்கு, பொய்,

என - என்ற

ஒரு - ஒரு; ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

பாவி - பாவம், கேடு விளைவிக்கும் எண்ணம் / குணம்

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

செற்று - கொல்லுதல், அழித்தல், செதுக்குதல், பதித்தல், செறிதல், அழுந்துதல்
செற்று - நெருக்கம்

திருச்செற்றுத்  (திருச் செற்று) - சிறப்பான நட்பினையும், நெருக்கத்தையும், உறவையும்

தீ - பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு,கோபம், விடம் (விஷம்), நரகம்
உழி - அலைதல், இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு,

தீயுழி - விஷத்தை போன்று உடம்பில் அலைந்து, கோபத்தை போன்று மனதில் அலைந்து நரகத்தில் 

உய்த்தல் - செலுத்துதல், ஆயுதம் பிரயோகித்தல்
உய்த்து -  அழித்து
விடும் -  விடும்

முழுப்பொருள்
குறிப்பு:இக்குறளுக்கு 2-3 அர்த்தங்கள் பலரால் சொல்லப்பட்டு உள்ளன். நான் புரிந்துக்கொண்ட பொருளினை இங்கு கூறுகிறேன்.

பிறர் மேல் ஏற்படும் பொறாமை குணம் ஒருவனுக்கு வந்தால் அது ஆபத்து. ஏனெனில் உடம்பில் விஷம் அலைந்து உயிரை அழிப்பது போன்று பொறாமை எண்ணம் மனதில் அலைந்து மனதை அலைக்கழைத்து மனதில் பரவி நம்மை அழித்து விடும்.

அது மட்டுமின்றி நாம் பொறாமை கொண்டுள்ள நபரிடம் நமக்குள்ள சிறந்த நெருக்கத்தையும் நட்பையும் பொறாமை கொன்றுவிடும்.

இரக்கத்திற்கும் கருணைக்கும் எதிரான உணர்ச்சி சினம் அன்று, பொறாமைதான். ஏனென்றால் சினம் தீர்வது, பொறாமை தீராது. அது சினத்தைவிடவும் கொடியது. பொறாமை தோன்றிவிட்டால் முதலில் மனத்தில் நுழைவது தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை வேரூன்றியதும் உடனடியாக ஆக்கம் கெடும். அது நம் செயலாற்றலை மெல்ல மெல்ல முடக்கும். கைப்பொருள் அழியும். இந்த நிலைகுலைவு மேலும் மேலும் மூர்க்கத்தைத் தோற்றுவிக்கும். இறுதியில் எதையும் செய்யும் மனப்பாங்கை உருவாக்கித் தீச்செயல்கள் செய்யத் தூண்டும். தீமைகள் உங்களை அழித்துப் புதைக்கும் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும்.

பொறாமை கொண்டால் இன்மையில் (இப்பிறவியில்) அவன் செல்வம் குன்றிவிடும் என்று முந்தைய குறளில் பார்த்தோம். மேலும் மறுமையில் நரகத்திற்கு அனுப்பிவிடும். அங்கு நாம் அழிவோம். 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு 80 வயது நாடக நடிகரிடம் நீங்கள் எப்படி இளமையாக இருக்கீரீர்கள் என்று கேட்கப்பட்டது. அது அவர் சொன்னல் இரண்டு காரணங்கள் 1) பிறர் மீது நான் பொறாமை கொள்வதில்லை 2) நான் நாடகத்தில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். மக்களின் கைத்தட்டல்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுகிறது. அதில் அவர் பொறாமையை முதலில் கூறியப்போது எனக்கு இக்குறள் நினைவிக்கிற்கு வந்தது. பொறாமை இருந்தால் மனதில் நோய் உண்டானது போன்றது. அது நமது ஆரோக்கியம் என்னும் செல்வத்தை கரைத்துவிடும். நாளடைவில் உடல் சார்ந்த நோய்க்கு வழிவகுத்து நம்மை அழித்து விடும்.

மேற்சொன்ன காரணங்களுக்காக தான் அழுக்காறு தீயுழி உய்த்து விடும் என்றார் திருவள்ளுவர். ஆதலால் தான் பொறாமை ஒரு நிகரற்ற தீக்குணம். பொறாமை என்பது ஒப்பற்ற ஒரு பாவம். ஆதலால் பொறாமை படாதே என்றென்கிறார் திருவள்ளுவர். 

பள்ளிகளில் பார்த்தால், குழந்தைகள் நண்பர் வைத்து இருக்கும் விலை உயர்ந்த பென்சில் பெட்டி அழகாய் தோன்றும். அங்கு பொறாமை ஏற்படலாம். ஆனால், உண்மையில் அக்குழந்தைக்கு கற்று தரவேண்டியது, ஒருவர் மேடையில் நன்றாக உடை அணியலாம். ஆனால் இருந்தியில் அவர் எவ்வாறு மேடையில் தன் பேச்சையோ பாட்டையோ நாடகத்தையோ ஆற்றினார் என்பது மனதில் நிற்கும், அணிந்த உடை இரு நாட்களுக்குப்பின் நினைவில் இருக்காது. ஆதலால் செயலில் கவனம் செலுத்த வேண்டும்.

பொறாமையிருந்தால் நமது செயல்களில் கவனம் செலுத்த மாட்டோம்.  அதனால் நமது ஆக்கம் குறைந்து செல்வமும் குறையும். ஆதலால் பொறாமையை தவிர்க்கவேண்டும். நமது தட்டில் இரண்டு இட்லி இருப்பதை பார்க்க வேண்டும். பக்கத்தில் இருப்பவன் தட்டில் ஐஸ்கிரீம் இருக்கிறது என்று பார்த்தால் நமது இட்லியை ருசிக்க முடியாது மேலும் நமது இட்லியின் அருமையும் அதனால் ஏற்படும் பலனும் தெரியாமல் போய்விடும். நம்மிடம் இல்லாத ஒன்றைப் பற்றி நினைத்து இருக்கும் சந்தோஷத்தை இழக்கக் கூடாது. நம்மிடம் இருக்கும் 1000 வாய்ப்புகளையும் செல்வங்களையும் பயன்படுத்தவேண்டும். 

பொறாமை தோன்றாமல் இருக்க என்ன செய்யலாம்? நம்மிடம் இருக்கும் செல்வங்களையும் வாய்ப்புகளையும் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால் அதனை அப்பொழுது நினைத்தப்பார்ப்பது கடினம். அதனால் நம்மிடம் இருப்பவற்றை தினம் தினம் நினைக்க வேண்டும். நாள்தொறும் நம்மிடம் இருக்கும் ஒன்றைப்பற்றி நினைத்து நன்றிக்கூறவேண்டும். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், எப்படி இன்னும் நன்றாக பயன்படுத்தலாம் என்று பார்க்கவேண்டும். அவ்வாறு செய்தால் நாம் நிறைவும் கொள்வோம், மற்ற பொருள்கள் இருந்தால் கூட அவற்றை நாம் பயன்படுத்துவோமா என்று கேட்டுக்கொள்வோம். 

உதாரணமாக சொன்னால் நம் அருகில் ஒரு நூலகம் இருக்கும். அதனை பயனபடுத்த மாட்டோம். ஆனால் ஒரு ஊரில் நூலகம் இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும். அதுப்போல் நம் அருகில் இருப்பவற்றின் அருமைகளை உணர ஆரம்பித்தாலே நம்மிடம் இல்லாதவற்றின் மீது பொறாமைக்கொள்ள மாட்டோம். 

ஆங்கிலத்தில் Gratitude Journal என்று கூறுவார்கள். அதனை தினம் தினம் எழுதினால் நாம் நிறைவும் கொள்வோம், பொறாமை கொள்வதையும் எளிதாக தவிர்க்க முடியும். 

மேலும்
”தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க, தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று
நூல்: நீதிநெறி விளக்கம் (#14)
( "உனக்குக் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு"  பாட்டு  வருகிறதா ?) என்பதையும் நினைவில் கொள்க

மேலும்: அஷோக் உரை

உதாரணம்: ஆடுகளம் திரைப்படத்தில் பேட்டைகாரன் கருப்பிடம் (தனுஷிடம்) கொள்ளும் பொறாமையால் தீக்குணம் கொண்டு தீய செயல்களை செய்து கடைசியில் நிம்மதி இழந்து தன்னுடன் நெருங்கி இருந்து மனைவி, தன் சிஷ்யர்கள் ஆகியோரை இழந்து கடைசியில் தன்னைதானே மாய்த்துக்கொள்வார்.

பரிமேலழகர் உரை
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அழுக்காறு என ஒரு பாவி-பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்-தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.

பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசி (பாவம்)-கரிசன் (ஆண்பால்), கரிசு (பெண் பால்).

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, திரு செற்று தீயுழி உய்த்து விடும் - செல்வத்தைக் கெடுத்து நரகத்தின்கண் புகுத்தி விடும்.
அகலம்: தருமர் பாடம் ‘பாவம்’.

கருத்து: பொறாமை செல்வத்தைக் கெடுத்து நரகத்திற் புகுத்தி விடும்.

மு.வ உரை
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பாவங்கள் செய்பவரைப் பாவி என்று
பகர்வதுவே உலகத்தார் பழக்கம் இங்கே
பாவி என்று அழுக்காற்றைப் பகருகின்றார்
பல தெளிவும் உயர் அறிவும் தந்த தந்தை
கூவத்தைப் போல் மனது கொண்டு வாழும்
கூட்டத்தின் பொறாமையினைப் பார்க்கும் போது
ஆபத்தை நமக்குணர்த்த வள்ளுவனார்
அருளிட்ட அக்குறளே நினைவில் வரும்

குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பாவங்கள் செய்தவர் தான் பாவியாவார்
பாவம் ஒன்றே மிகச் சிறந்த பாவியாகும்
கேவலத்தைச் சொல்லுகின்றார் நமது தந்தை
கேட்கையிலே அவர் பெருமை நாம் உணர்வோம்
பாவிகளில் மிகச் சிறந்த பாவியென்று
பகர்ந்து நின்றார் வள்ளுவரும் பொறாமையினை
தேடி அதைக் கொள்வோர்கள் கொண்டிருக்கும்
திரு இழந்து தீய வழி சேர்வார் என்றார்

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
கோவிலுக்குப் போகிறோம். அங்கே கோபுர வாசலில் அல்லது படிக்கட்டுகளில் நாம் தவறாது காணும் காட்சி ஒன்றுண்டு. இரவலர்கள் வரிசையாய் அமர்ந்திருப்பார்கள். நைந்த பழந்துணி அணிந்து, உழைக்கும் திறனிழந்த உடலுடன் திருவோட்டையோ அல்லது தட்டு போன்ற பாத்திரத்தையோ ஏந்தியிருப்பார்கள். மலைப்படிக்கட்டுகளில் அமர்ந்து இரந்துண்டு வாழும் சாதுக்கள் தமக்குள் நன்றாகக் கதைபேசிக்கொண்டு களித்திருப்பதுமுண்டு. மாறாக, கோவில் வாசலில் அமர்ந்துள்ள இரவலர்களுக்குள் பேச்சுவார்த்தை உள்ளதுபோலவே ஒருவருக்கொருவர் வசைமாரி பொழிந்து வைதுகொள்வதும் உண்டு. இடப்பற்றாக்குறை முதலான காரணங்கள் இவற்றை உள்ளிருந்து இயக்கும். அவர்களும் மனிதர்கள்தாமே, மனித இனத்தின் தொல்பெரும் பண்பொன்று அவர்களையும் பாடாய்ப் படுத்துவதுண்டு. 

பிச்சைக்காரர்கள் இருவர் கோவில் வாசலில் அமர்ந்து திருவோடு ஏந்தி வருவோர் போவோரிடம் இரந்துகொண்டிருக்கிறார்கள் எனக் கொள்வோம். இருவரும் நேற்றுவரை ஒரே மாதிரி இருந்தவர்கள்தாம். ஏறத்தாழ ஒரே வகையான நைந்து கிழிந்த துறவாடை அணிந்திருந்தவர்கள்தாம். இருவரும் நன்றாக ஒடுங்கிய அலுமினியத் தட்டை ஏந்தியிருந்தவர்கள்தாம். இருவருக்கும் ஒரே பரதேசிக் கோலம். ஆனால் இன்று, முதலாமவரைவிட இரண்டாமவர் வைத்திருக்கும் ஒன்று, முதலாமவரை நிம்மதியிழக்கச் செய்துவிட்டது. 

இத்தனை நாளாகத் தன்னோடு அமர்ந்திருந்தவனுக்கு இப்படியொன்று கிடைத்துவிட்டதா என்று எண்ண எண்ண முதலாமவருக்கு உடலும் குடலும் பற்றி எரிகிறது. நானும்தான் அவனைப்போலவே இருந்தேன், அவனைவிட ஓங்கிக் குரலெடுத்து இரந்தேன், அவன் எழுந்துசென்ற பின்பும் கோவில் நடை சாத்தும்வரை கையேந்திக் கரைந்தேன், ஆனால் இன்று அவனுக்கு இப்படியொன்று கிடைத்திருக்கிறதே, அது எப்படி ? எவ்வாறு ? ஐயோ, என்னால் பொறுக்க முடியவில்லையே. 

அப்படி என்ன இரண்டாமவருக்குக் கிடைத்துவிட்டது என்கிறீர்களா ? நேற்றுவரை ஒரே வகையான, ஒடுக்கங்கள் நிறைந்த அலுமினியத் தட்டை இருவரும் வைத்திரந்தார்கள் அல்லவா... இன்று அதில் ஒரு மாற்றம். இரண்டாமவர் எங்கோ கடைவீதியில் இரந்து நின்றபோது, யாரோ பாத்திரக் கடைக்காரர் புத்தம் புதிய அலுமினியத் தட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டார். 

இரண்டாமவர் புத்தம் புதிய தட்டுடன் இரந்துகொண்டிருக்கிறார். முதலாமவர் அதே பழைய அலுமினியத் தட்டோடு இருக்கிறார். முதலாமவரால் பொறுக்க முடியுமா ? முடியவில்லை. தன்னுடைய தட்டு இத்தனை பழையதாக இருக்கிறதே, இவனுக்குப் புதிதாக ஒன்று கிடைத்துவிட்டதே, அதில் ஒடுக்கங்களே இல்லையே, என்னுடையது ஒடுங்கி நசுங்கி ஒன்றுக்கும் உதவாததுபோல் உள்ளதே... பொறுக்க முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பொறாமை ! அழுக்காறு !

அந்தப் பொறாமையைத்தான் மனித இனத்தின் தொல்பெரும் பண்பு என்று குறிப்பிட்டேன். அந்தப் பிச்சைக்காரன் எதைப் பார்த்துப் பொறாமைப்பட்டான் ? தன்னோடு நேற்றுவரை ஒன்றாக அமர்ந்திருந்து, தன்னைப்போலவே உடைமையோடு இருந்த ஒருவனுக்குப் புத்தம் புதிதாக ஒரு பிச்சைப் பாத்திரம் கிடைத்துவிட்டதே என்று பொறாமைப்பட்டான். தன் தட்டைவிட அடுத்தவன் தட்டு ஒடுக்கங்கள் குறைவாக உள்ளதே என்று பொறாமைப்பட்டான். 

பொறாமை ஆதி குணம் என்றால், அந்தப் பிச்சைக்காரன் நியாயமாக யாரைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும் ? கோவிலுக்குப் பொன்னும் மணியும் பட்டும் அணிந்து வரும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். தன்னெதிரே விண்ணளாவ எழுந்து நிற்கும் மாட மாளிகைகளைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். விலையுயர்ந்த மகிழுந்துகளில் குளிர்காற்றுரச கோவில் வாசலில் வந்திறங்குபவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பார்த்து பொறாமைப் படவில்லை. செல்வந்தர்களைக் கண்டதும் ‘ஈ’ என்று இரப்பதற்குத்தான் அவன் மனம் பழகியிருக்கிறது. ஆனால் இத்தனை காலம் தன்னோடு இருந்த ஒருவனுக்குச் சற்றே மேன்மையாக ஒன்று கிடைத்துவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பிச்சைக்காரனின் பொறாமை திருவோட்டின்மீது. நம்முடைய பொறாமை எதன்மீது ? அண்டை அயலான் மீது. உற்றார் உறவினர் மீது. நண்பர் தோழர் மீது. ஏனென்றால் அவர்கள்தாம் நம்மோடு நம்மைப் போலவே இருந்துவிட்டு இப்போது முன்னேறுகிறார்கள். அவர்கள் முன்னேற்றம் நம்மை ஒருபடி கீழிழுக்கிறது. அது பொறுக்க முடியவில்லை. டாடா பிர்லாக்கள் மீதோ முகேஷ் அனில் அம்பானிகள் மீதோ நமக்குப் பொறாமையே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும்தான் எந்தத் தொடர்பும் இல்லையே.

பொறாமையைப் பற்றிக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு வள்ளுவரே ஆளாகியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் காலத்திலும் இது பெரும் மனிதக் கீழ்மையாக இருந்திருக்கிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெந்து புழுங்கியிருக்கின்றனர். எளிமையான பழங்கால வாழ்க்கையிலேயே பொறாமை புகுந்து விளையாடியிருக்கிறது என்றால் நம் காலத்தில் சொல்லவா வேண்டும் ?

இரக்கத்திற்கும் கருணைக்கும் எதிரான உணர்ச்சி சினம் அன்று, பொறாமைதான். ஏனென்றால் சினம் தீர்வது, பொறாமை தீராது. அது சினத்தைவிடவும் கொடியது. பொறாமை தோன்றிவிட்டால் முதலில் மனத்தில் நுழைவது தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை வேரூன்றியதும் உடனடியாக ஆக்கம் கெடும். அது நம் செயலாற்றலை மெல்ல மெல்ல முடக்கும். கைப்பொருள் அழியும். இந்த நிலைகுலைவு மேலும் மேலும் மூர்க்கத்தைத் தோற்றுவிக்கும். இறுதியில் எதையும் செய்யும் மனப்பாங்கை உருவாக்கித் தீச்செயல்கள் செய்யத் தூண்டும். தீமைகள் உங்களை அழித்துப் புதைக்கும் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும். வள்ளுவர் மொழியில் சொன்னால்...

அழுக்கா(று) எனவொரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும். 

பொறாமை என்னும் பெருந்தீயவன் செல்வத்தை அழித்து வறுமையென்னும் நரகத்திற்குக் கொண்டு செல்வான்.

English Meaning - As I taught a kid - Rajesh
Jealousy is an evil / devil / sin. Because, jealousy kills all the wealth that we way. Jealousy leads to being unsatisfied/unfulfilled with anything in life leading to internal anger, restlessness, disturbances etc. which takes our focus away from our work. When, work is impacted we lose our wealth, money, health etc. Rather being jealous, one should feel grateful for what we have and utilize all the opportunities around us.

Questions that I ask to the kid
What jealousy does to you ? 
What does jealous lead to you ? (internal anger, distraction, take away energy)
What should we do (daily) to overcome jealousy? gratitude journal. grateful for opportunities. identify opportunities and utilize them


என்பி லதனை வெயில்போலக்

குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்

இலதனை - இல்லாத உடல் தனை

வெயில் - சூரியவெளிச்சம், சூரியவெப்பம், கதிரவன்; ஒளி.

போலக்  - போன்று

காயுமே - பயனின்மை, வஞ்சனைவிதை, பக்குவப்படாதவிளைபொருள்கள், முதிராதுவிழுங்கரு, அழிக்கும்; தீய்க்கும்

அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம்; அருள்; பக்தி; நேசம்; கருணை; தயை; பாசம்

இலதனை - இல்லாதவனை

அறம் -  தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

முழுப்பொருள்
எலும்பு இல்லாத உயிர் என்றால் நாம் புழுவை சொல்லலாம். புழுக்கள் பூமிக்கு அடியில் மண்ணில் வாழ்பவை. அவை பொதுவாக வெளியே வராது. அப்படி தலைகாட்டினால் வெயிலின் வெட்பம் ஏற ஏற அது வெப்பத்தினால் காய்ந்து அழிந்துவிடும். 

அதே போல மற்ற உயிரிடத்தில் நேசம் / அன்பு / பாசம்/ பற்று/ தயை / கருணை இல்லாத உயிர்களை / அன்பர்களை கொன்று விடும் அறம் / தருமம் / நேரம்.

இங்கே நாம் காண வேண்டிய மற்றோன்று என்னவென்றால் பூழுக்களை கொல்வது வெயிலின் வேலை அல்ல. புழுக்களாகவே வெளியே வரும் பொழுது அழிந்து விடும். அது போல் இந்த சமூதாயத்தில் இணைந்து வாழ வேண்டும் என்றால் மற்ற மானுடர் மீது அன்பு வேண்டும். அன்பு துளியும் இல்லையே இந்த சமூதாயத்தில் வாழ முடியாது. சமூதாயம் அழித்து விடும். 

மேலும்: அஷோக் உரை (நன்றி)
“அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவதும்” என்பது சிலப்பதிகார மூன்று முக்கிய கருத்துக்களில் ஒன்று. 

அரசியலில் அறம் தவறியதாலேயே பாண்டிய மன்னனுக்கு, அதுவே அவனையும் கொன்று, அதன் காரணமாக அவன் மனைவியும் உயிர் துறந்து, மதுரையும் எரியுண்ண காரணமாகிப் போனது. 

மனைவியின் சிலம்பு களவாடப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக, தான் அரசனாய், எல்லா குடிகளிடமும், தன் மனைவியுட்பட ஒரே அளவில் அன்பு கொண்டிராமல், அதன்காரணமாக, ஆராயாமல், ஒருதலை சார்பாக, கோவலன் கொலையுண்ணக் காரணமாக இருந்ததாலேயே,  பாண்டியனும், மதுரையும் அழிந்தன.


எலும்பில்லாத புழுக்கூட்டமானது, வெயில் காயும்போது, வெளியில் வந்து, வெயிலின் சூட்டிலே கருகி மடியும். அதே போன்றே, அன்பில்லாத உயிர்கள் அறவழி நில்லாதொழிவர் எனவே, அவர்களும் அதன்கண்ணே துன்புறுவர் என்று கூறப்பட்டுள்ளது

 அன்பின்மையால் என்ன நேரும்  தெரியுமா? எலும்பற்ற உயிர்களை வெயிலின் சூடு அழிப்பதைப் போல, அன்பில்லாத உயிர்களை அறத்தின் வெப்பம் சுட்டழித்து விடும். 


மேலும்: தினத்தந்தி (நன்றி)
உயிர் பிரிந்துவிட்டால் அழகான உடலுக்கு எவ்வாறு மதிப்பு இருப்பதில்லையோ, அதுபோல தலை, கை, கால், மார்பு, வயிறு உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் அனைத்தும் சரியான இடத்தில் இல்லாவிட்டால், வடிவமற்ற உடலுக்கும் முழுமையான மதிப்பும், முக்கியத்துவமும் இருக்காது. 

அதனால் நம் உடலுக்கு ஒரு அழகான வடிவத்தைக் கொடுக்கும் எலும்புகள் உடலின் மிக முக்கியமான அங்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உதாரணமாக, உலக உயிர்களுக்கு அன்பின் இன்றியமையாமையை வலியுறுத்த எண்ணிய திருவள்ளுவர், தமது திருக்குறளில் உள்ள அன்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்'. 

அதாவது, எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். ஆக, எலும்பு என்னும் உடல் பாகம் இல்லாத புழுவை வெயில் கூடக் காய்ந்து வருத்தும் என்று கூறுவதன் மூலம் உடலுக்கு எலும்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும்: Interesting Tamil Poems (நன்றி)
எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ, அதுபோல் அன்பு இல்லாததை அறம் காயும். அது கோனார் தமிழ் உரை.

இதை சொல்ல வள்ளுவர் எதற்கு...பரிமேலழகர் எதற்கு. 

எலும்பு இல்லாதது எது ? புழு. புழுவிற்கு எலும்பு கிடையாது. சில பூச்சிகளுக்கு எலும்பு கிடையாது. 

இந்த புழுவை வெயில் எப்படி வாட்டி எடுக்கும் ? கொதிக்கும் சிமெண்டு தரையில் ஒரு மண் புழுவை போட்டுப் பாருங்கள். அது என்ன பாடு படும் என்று பாருங்கள். 

அது அந்த வெயிலை விட்டு வேகமாக விலகி போக நினைக்கும். அதால் முடியாது. அதனால்   ஊர்ந்து ஊர்ந்து தான் போக முடியும். ஊரும் போது உடல் எல்லாம் வெயில் எரிக்கும். தகிக்கும். என்ன செய்யும் ? ஓட முடியுமா ? முடியாது ? சிறிது நேரத்தில் தண்ணீர் தவிக்கும். எங்கு போய் குடிப்பது ? கடைசியில் அது வெயிலில் சுருண்டு இறந்து போகும் 

இரண்டாவது, நாம தூக்கி வெயிலில் போட வேண்டும் என்று இல்லை. வெயில் குறைவாக இருக்கும் போது , அந்த புழுவே வெளியே  வந்து உலாத்தும்...கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏறும்போது , அது சூட்டில் வாடும். அது போல அன்பு இல்லாதவன் தானே வந்து தவறு செய்வான். இராவணை கொல்லவா இராமன் கானகம் போனான். அன்பில்லாத அந்த அரக்கன், தானே வலிய  வந்து தவறிழைத்து அழிவை தேடிக்கொண்டான்.   

மூன்றாவது, வெயில் வருவது புழுவைக் கொல்ல அல்ல. அது பாட்டுக்கு வருது. ஆனால், இந்த புழு அந்த வெயிலின் கொண்டுமை தாங்காமல் வாடுகிறது. அது போல் அறம் பொதுவாய் இருந்தாலும், அன்பில்லாதவர்களை அறம் சுடும்.

மேலும் ஆதிரா

பரிமேலழகர் உரை
என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.).

மணக்குடவர் உரை
என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) "அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.

பொருள்: என்பு இல் அதனை வெயில் போல அன்பு இல் அதனை அறம் காயும்‡ எலும்பு இல்லாத பிராணியை வெயில் (காய்தல்) போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

அகலம்: இல்லதனை என்னும் இரண்டும் செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றன. ஏகாரம் அசை.

கருத்து: அன்பு இல்லாதார் துன்பம் உறுவர்.

மு.வ உரை
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

இன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்?

உலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை உருவாக்குகிறது. இதை வேறு வழியிலும் சொல்லலாம். அன்புதான் அறத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் முதுகெலும்பு இல்லாமல் ஒடிந்துவிழும்போல்தான் இருக்கிறது. அறம் இல்லாதது, அன்பு இல்லாதது வீழும். இதைத்தான் மிகச் சரியாக வள்ளுவர் சொல்கிறார், ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்’.

இயற்கை என்பது அறம், நீதி, அநீதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டவை. இயற்கையின் படைப்புகளில் தனியொரு இனமாக நாம் விரிவடைந்துவிட்டோம் எனும்போது, நமது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கென்று ஓர் ஒழுங்கு தேவைப்படுகிறது.

ஒற்றையடிப் பாதைக்கென்று போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ தேவையில்லை. ஆனால், வாகன நெரிசல் மிகுந்திருக்கும் அண்ணா சாலையில் போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ இல்லையென்றால் என்னவாகும் என்று நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதல்லவா? இப்படியொரு கட்டத்துக்கு மனித குலம் வந்துவிட்டபின் அன்பும் அறமும் மிகமிக இன்றியமையாத தேவைகளாகிவிட்டன. அவைதான் நமது வாழ்க்கையின் மையம். அவற்றிலிருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ அவ்வளவு அழிவுகளை நாம் சந்திக்கிறோம். அறம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்துக்கு அறத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட காலந்தோறும் ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. நம் காலத்தின் மகத்தான உதாரணம் காந்தி.

அறத்துக்கும் சமரசம் சார்பென்ப…

காந்தி காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, தங்கள் துறைகளில் மட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் / கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய களத்துக்கு வரும்போது ஏகப்பட்ட சமரசங்கள் செய்துகொண்டு ‘அறத்துக்கும் சமரசம் சார்பென்ப’ என்ற இலக்கணத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். மிகப் பெரிய அளவுக்கு அறத்தைக் கடைப்பிடிப்பது, பரிசோதிப்பது மிகவும் கடினம். சுயநலம், உயிர் பயம், அடுத்தவர் நலன்கள், முரண் கருத்துகள், தன்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம், பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிடும் நிலை, அதனால் தனது நலனும் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம் இப்படி ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக நியாயமும் இருக்கிறது.

தனிமனித வாழ்விலும், தொடக்க கால சமூக/அரசியல் வாழ்விலும் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரிய களத்தில் இறங்கும்போது என்னவாகிறார்கள்? அவர்கள் அறத்திலிருந்து பிறழ்ந்து சரிவதன் குறியீடுதான் நம்முடைய தலைவர்களின் வீழ்ச்சி. இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக சேவகர்கள், போராளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று பலருமே அடங்குவார்கள். நல்ல காரியங்கள் செய்பவர்கள்கூட சமரசம் செய்துகொண்டால் மேலும் நன்மை கிடைக்கலாம் என்பதற்காக அறத்திலிருந்து பிறழ்வது நிதர்சனம். அதாவது, நன்மைக்காக அறம் பிறழ்தல். இதுதான் அறத்தின் இடத்தை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. அதாவது, நன்மைக்கும் அறத்துக்கும் தொடர்பில்லை என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது.

அறத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. ஆனால், தான் நம்பிய அறத்துக்காகவே வாழ்ந்து, அந்த அறத்துக்காகவே கொல்லப்பட்ட ஒருவர்தான் காந்தி. அறத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். காந்தி வைத்த பெயர் சத்தியம். அதைத்தான் இறுதி வரை கடவுளாக நினைத்து வழிபட்டார். அவரது ‘ராமன்’கூட ‘ராமாயண ராமன்’அல்ல. சத்தியத்தின் அவதாரமாக அவரே வரித்துக்கொண்டவர்தான் அந்த ராமன். அதேபோல் சத்தியத்தின், அறத்தின் போரில் தனக்குக் கிடைத்த மகத்தான முன்னுதாரணம் என்பதால், ஏசுவின் மீது அவ்வளவு வாஞ்சையாக இருந்தார் காந்தி. அதனால்தான் புனித பீட்டர் ஆலயத்தில் ஏசுவின் சொரூபத்துக்கு முன்பு கண்ணீர் மல்க நின்றார் காந்தி. இறுதியில் ஏசு சந்தித்த முடிவையே காந்தியும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.

காந்தியின் அளவுக்கோ அல்லது காந்தியை விடப் பெரிய அளவிலோ களத்தில் இறங்கியவர்கள் வரலாறு நெடுக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், காந்தி அளவுக்கு அறத்தை ஆயுதமாகக் கொண்டு, பெரிய பரிசோதனைக் களத்தில் இறங்கியவர்கள் வெகு சிலரே. தன் உடலை, தன் வாழ்க்கையை, தன் குடும்பத்தை, இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் ‘நான்’, ‘தான்’ என்ற சொற்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்குகின்றனவோ அவற்றையெல்லாம் பலிகொடுக்கத் தயாராகத்தான் அவர் களமிறங்கினார். பலிகொடுக்கவும் செய்தார். இவ்வளவு பெரிய பலியைக் கொடுத்ததால்தான் அவர் எல்லோருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறார். இந்தத் தியாகங்களால் கிடைக்கும் உன்னத ஸ்தானத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதை இழக்கத் தயாராக இருந்ததும், அந்த ஸ்தானத்தைப் பலிகடாவாக ஆக்கியதும்தான் எல்லாவற்றிலும் பெரிய காரியம். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் செய்திருந்த தானங்களின் மொத்தப் பலனையும் வரமாகக் கேட்ட கிருஷ்ணனுக்குச் சற்றும் யோசிக்காமல் அதைத் தானமாக அளித்து, மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கர்ணனின் செயலுக்கு ஒப்பாக இதைக் கூறலாம்.

சமரசம் இல்லாத சத்தியம்

இந்தியாவின் சுதந்திரம் என்ற ஒரு நல்ல காரியத்துக்காக அறம் என்ற விஷயத்தைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி நினைத்தார். அதன் விளைவுதான், முன்னுதாரணமே இல்லாத ஒரு பாதையை இந்திய சுதந்திரப் போராட்டம் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவுதான், உலகமே இந்தியாவையும் காந்தியையும் தங்களுக்கான முன்னுதாரணங்களாகத் தேடிவருவது. அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் இந்திய வருகையைக்கூட நாம் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

சமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றிதான் காந்தியம். தனிமனிதராகத் தான் மட்டும் ஈடுபடாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதில் ஈடுபடுத்தினார். நவீனக் கண்டுபிடிப்பான வை-ஃபைக்கு காந்திதான் முன்னோடி (wi-Fi: கம்பியில்லா முறையில் ஒரு பகுதியில் உள்ள கணினிகளையோ கைபேசிகளையோ இணைக்கும் அமைப்பு). இந்தியாவின் ‘வை-ஃபை’யாக காந்தி இருந்தார். தனது பரிசோதனையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துக்கொண்டார். இந்தியர்கள் தங்களின் நிறை குறைகளோடு அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்கள். மக்களின் குறைகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தானே நிறைய குறைகளைக் கொண்ட ஒருவர்தான் என்ற எண்ணம் அவருக்கு இறுதிவரை இருந்தது. பிறருடைய குறைகளுக்காகவும், தன்னிடம் இருப்பதாக அவர் நம்பிய குறைகளுக்காகவும்தான் அவர் தன் வாழ்க்கையைப் பலிகொடுக்கத் தயாரானார். அறத்தின், சத்தியத்தின் போரில் தன்னைப் பலிகொடுக்கத் தயாராக எப்போதும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அவருடைய படுகொலைக்கு முன்னால் ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும்கூடத் தனக்கென்று எந்தப் பாதுகாப்பையும் அவர் ஏற்றுக்கொள்ளாதது இதற்கு உதாரணம். எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த ஒரே ஒரு அளவுகோலை நமது உள்ளூர், இந்திய, உலகத் தலைவர் களுக்கு வைத்துப்பார்த்தாலே போதும் காந்தியின் இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

காந்தியோடு உரையாடுவோம்

காந்தியை நேசிப்பவர்கள் ஏராளமாக இருப்பதைப் போல் அவரை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காந்தியைக் கடவுளாக வழிபடுவது ஆபத்தானது என்றால், அவரை முற்றிலுமாகத் தூக்கியெறிவது அதைவிடப் பல மடங்கு ஆபத்தானது. அவரே சொன்னதுபோல் அவரை நாம் மகாத்மாவாக ஆக்க வேண்டாம்; நமது தாத்தாவாக உணர்ந்தாலே போதும். நம் தாத்தாவுடன் எதையும் நாம் உரையாட முடியும். அவரை மறுத்தும் அவருடன் உரையாட முடியும். அந்த உரையாடலின் இறுதியில், ஒன்று, நாம் அவரை அதிக அளவுக்கு நேசிப்பவர்களாக மாறிவிடுவோம். அல்லது, அவரை எதிர்ப்பதற்கான வலுவை அவரிடமிருந்தே நாம் பெறுவோம். எனவே, காந்தியை வழிபடுவதைவிட, தூக்கியெறிவதைவிட அவருடன் தொடர்ந்து உரையாடுவோம்.

இதற்காகத்தான் ஆஷிஸ் நந்தி இப்படிச் சொல்கிறார்: “காந்தியைவிடச் சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில், வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்க விடாது. அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்.”

- ஆசை,