Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

என்பி லதனை வெயில்போலக்

குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்

இலதனை - இல்லாத உடல் தனை

வெயில் - சூரியவெளிச்சம், சூரியவெப்பம், கதிரவன்; ஒளி.

போலக்  - போன்று

காயுமே - பயனின்மை, வஞ்சனைவிதை, பக்குவப்படாதவிளைபொருள்கள், முதிராதுவிழுங்கரு, அழிக்கும்; தீய்க்கும்

அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம்; அருள்; பக்தி; நேசம்; கருணை; தயை; பாசம்

இலதனை - இல்லாதவனை

அறம் -  தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

முழுப்பொருள்
எலும்பு இல்லாத உயிர் என்றால் நாம் புழுவை சொல்லலாம். புழுக்கள் பூமிக்கு அடியில் மண்ணில் வாழ்பவை. அவை பொதுவாக வெளியே வராது. அப்படி தலைகாட்டினால் வெயிலின் வெட்பம் ஏற ஏற அது வெப்பத்தினால் காய்ந்து அழிந்துவிடும். 

அதே போல மற்ற உயிரிடத்தில் நேசம் / அன்பு / பாசம்/ பற்று/ தயை / கருணை இல்லாத உயிர்களை / அன்பர்களை கொன்று விடும் அறம் / தருமம் / நேரம்.

இங்கே நாம் காண வேண்டிய மற்றோன்று என்னவென்றால் பூழுக்களை கொல்வது வெயிலின் வேலை அல்ல. புழுக்களாகவே வெளியே வரும் பொழுது அழிந்து விடும். அது போல் இந்த சமூதாயத்தில் இணைந்து வாழ வேண்டும் என்றால் மற்ற மானுடர் மீது அன்பு வேண்டும். அன்பு துளியும் இல்லையே இந்த சமூதாயத்தில் வாழ முடியாது. சமூதாயம் அழித்து விடும். 

மேலும்: அஷோக் உரை (நன்றி)
“அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவதும்” என்பது சிலப்பதிகார மூன்று முக்கிய கருத்துக்களில் ஒன்று. 

அரசியலில் அறம் தவறியதாலேயே பாண்டிய மன்னனுக்கு, அதுவே அவனையும் கொன்று, அதன் காரணமாக அவன் மனைவியும் உயிர் துறந்து, மதுரையும் எரியுண்ண காரணமாகிப் போனது. 

மனைவியின் சிலம்பு களவாடப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக, தான் அரசனாய், எல்லா குடிகளிடமும், தன் மனைவியுட்பட ஒரே அளவில் அன்பு கொண்டிராமல், அதன்காரணமாக, ஆராயாமல், ஒருதலை சார்பாக, கோவலன் கொலையுண்ணக் காரணமாக இருந்ததாலேயே,  பாண்டியனும், மதுரையும் அழிந்தன.


எலும்பில்லாத புழுக்கூட்டமானது, வெயில் காயும்போது, வெளியில் வந்து, வெயிலின் சூட்டிலே கருகி மடியும். அதே போன்றே, அன்பில்லாத உயிர்கள் அறவழி நில்லாதொழிவர் எனவே, அவர்களும் அதன்கண்ணே துன்புறுவர் என்று கூறப்பட்டுள்ளது

 அன்பின்மையால் என்ன நேரும்  தெரியுமா? எலும்பற்ற உயிர்களை வெயிலின் சூடு அழிப்பதைப் போல, அன்பில்லாத உயிர்களை அறத்தின் வெப்பம் சுட்டழித்து விடும். 


மேலும்: தினத்தந்தி (நன்றி)
உயிர் பிரிந்துவிட்டால் அழகான உடலுக்கு எவ்வாறு மதிப்பு இருப்பதில்லையோ, அதுபோல தலை, கை, கால், மார்பு, வயிறு உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் அனைத்தும் சரியான இடத்தில் இல்லாவிட்டால், வடிவமற்ற உடலுக்கும் முழுமையான மதிப்பும், முக்கியத்துவமும் இருக்காது. 

அதனால் நம் உடலுக்கு ஒரு அழகான வடிவத்தைக் கொடுக்கும் எலும்புகள் உடலின் மிக முக்கியமான அங்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உதாரணமாக, உலக உயிர்களுக்கு அன்பின் இன்றியமையாமையை வலியுறுத்த எண்ணிய திருவள்ளுவர், தமது திருக்குறளில் உள்ள அன்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்'. 

அதாவது, எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். ஆக, எலும்பு என்னும் உடல் பாகம் இல்லாத புழுவை வெயில் கூடக் காய்ந்து வருத்தும் என்று கூறுவதன் மூலம் உடலுக்கு எலும்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும்: Interesting Tamil Poems (நன்றி)
எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ, அதுபோல் அன்பு இல்லாததை அறம் காயும். அது கோனார் தமிழ் உரை.

இதை சொல்ல வள்ளுவர் எதற்கு...பரிமேலழகர் எதற்கு. 

எலும்பு இல்லாதது எது ? புழு. புழுவிற்கு எலும்பு கிடையாது. சில பூச்சிகளுக்கு எலும்பு கிடையாது. 

இந்த புழுவை வெயில் எப்படி வாட்டி எடுக்கும் ? கொதிக்கும் சிமெண்டு தரையில் ஒரு மண் புழுவை போட்டுப் பாருங்கள். அது என்ன பாடு படும் என்று பாருங்கள். 

அது அந்த வெயிலை விட்டு வேகமாக விலகி போக நினைக்கும். அதால் முடியாது. அதனால்   ஊர்ந்து ஊர்ந்து தான் போக முடியும். ஊரும் போது உடல் எல்லாம் வெயில் எரிக்கும். தகிக்கும். என்ன செய்யும் ? ஓட முடியுமா ? முடியாது ? சிறிது நேரத்தில் தண்ணீர் தவிக்கும். எங்கு போய் குடிப்பது ? கடைசியில் அது வெயிலில் சுருண்டு இறந்து போகும் 

இரண்டாவது, நாம தூக்கி வெயிலில் போட வேண்டும் என்று இல்லை. வெயில் குறைவாக இருக்கும் போது , அந்த புழுவே வெளியே  வந்து உலாத்தும்...கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏறும்போது , அது சூட்டில் வாடும். அது போல அன்பு இல்லாதவன் தானே வந்து தவறு செய்வான். இராவணை கொல்லவா இராமன் கானகம் போனான். அன்பில்லாத அந்த அரக்கன், தானே வலிய  வந்து தவறிழைத்து அழிவை தேடிக்கொண்டான்.   

மூன்றாவது, வெயில் வருவது புழுவைக் கொல்ல அல்ல. அது பாட்டுக்கு வருது. ஆனால், இந்த புழு அந்த வெயிலின் கொண்டுமை தாங்காமல் வாடுகிறது. அது போல் அறம் பொதுவாய் இருந்தாலும், அன்பில்லாதவர்களை அறம் சுடும்.

மேலும் ஆதிரா

பரிமேலழகர் உரை
என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.).

மணக்குடவர் உரை
என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) "அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.

பொருள்: என்பு இல் அதனை வெயில் போல அன்பு இல் அதனை அறம் காயும்‡ எலும்பு இல்லாத பிராணியை வெயில் (காய்தல்) போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

அகலம்: இல்லதனை என்னும் இரண்டும் செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றன. ஏகாரம் அசை.

கருத்து: அன்பு இல்லாதார் துன்பம் உறுவர்.

மு.வ உரை
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பில்லா நெஞ்சத்தை அறம் வாட்டும்.

இன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்?

உலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை உருவாக்குகிறது. இதை வேறு வழியிலும் சொல்லலாம். அன்புதான் அறத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் முதுகெலும்பு இல்லாமல் ஒடிந்துவிழும்போல்தான் இருக்கிறது. அறம் இல்லாதது, அன்பு இல்லாதது வீழும். இதைத்தான் மிகச் சரியாக வள்ளுவர் சொல்கிறார், ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்’.

இயற்கை என்பது அறம், நீதி, அநீதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டவை. இயற்கையின் படைப்புகளில் தனியொரு இனமாக நாம் விரிவடைந்துவிட்டோம் எனும்போது, நமது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கென்று ஓர் ஒழுங்கு தேவைப்படுகிறது.

ஒற்றையடிப் பாதைக்கென்று போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ தேவையில்லை. ஆனால், வாகன நெரிசல் மிகுந்திருக்கும் அண்ணா சாலையில் போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ இல்லையென்றால் என்னவாகும் என்று நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதல்லவா? இப்படியொரு கட்டத்துக்கு மனித குலம் வந்துவிட்டபின் அன்பும் அறமும் மிகமிக இன்றியமையாத தேவைகளாகிவிட்டன. அவைதான் நமது வாழ்க்கையின் மையம். அவற்றிலிருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ அவ்வளவு அழிவுகளை நாம் சந்திக்கிறோம். அறம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்துக்கு அறத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட காலந்தோறும் ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. நம் காலத்தின் மகத்தான உதாரணம் காந்தி.

அறத்துக்கும் சமரசம் சார்பென்ப…

காந்தி காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, தங்கள் துறைகளில் மட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் / கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய களத்துக்கு வரும்போது ஏகப்பட்ட சமரசங்கள் செய்துகொண்டு ‘அறத்துக்கும் சமரசம் சார்பென்ப’ என்ற இலக்கணத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். மிகப் பெரிய அளவுக்கு அறத்தைக் கடைப்பிடிப்பது, பரிசோதிப்பது மிகவும் கடினம். சுயநலம், உயிர் பயம், அடுத்தவர் நலன்கள், முரண் கருத்துகள், தன்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம், பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிடும் நிலை, அதனால் தனது நலனும் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம் இப்படி ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக நியாயமும் இருக்கிறது.

தனிமனித வாழ்விலும், தொடக்க கால சமூக/அரசியல் வாழ்விலும் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரிய களத்தில் இறங்கும்போது என்னவாகிறார்கள்? அவர்கள் அறத்திலிருந்து பிறழ்ந்து சரிவதன் குறியீடுதான் நம்முடைய தலைவர்களின் வீழ்ச்சி. இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக சேவகர்கள், போராளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று பலருமே அடங்குவார்கள். நல்ல காரியங்கள் செய்பவர்கள்கூட சமரசம் செய்துகொண்டால் மேலும் நன்மை கிடைக்கலாம் என்பதற்காக அறத்திலிருந்து பிறழ்வது நிதர்சனம். அதாவது, நன்மைக்காக அறம் பிறழ்தல். இதுதான் அறத்தின் இடத்தை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. அதாவது, நன்மைக்கும் அறத்துக்கும் தொடர்பில்லை என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது.

அறத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. ஆனால், தான் நம்பிய அறத்துக்காகவே வாழ்ந்து, அந்த அறத்துக்காகவே கொல்லப்பட்ட ஒருவர்தான் காந்தி. அறத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். காந்தி வைத்த பெயர் சத்தியம். அதைத்தான் இறுதி வரை கடவுளாக நினைத்து வழிபட்டார். அவரது ‘ராமன்’கூட ‘ராமாயண ராமன்’அல்ல. சத்தியத்தின் அவதாரமாக அவரே வரித்துக்கொண்டவர்தான் அந்த ராமன். அதேபோல் சத்தியத்தின், அறத்தின் போரில் தனக்குக் கிடைத்த மகத்தான முன்னுதாரணம் என்பதால், ஏசுவின் மீது அவ்வளவு வாஞ்சையாக இருந்தார் காந்தி. அதனால்தான் புனித பீட்டர் ஆலயத்தில் ஏசுவின் சொரூபத்துக்கு முன்பு கண்ணீர் மல்க நின்றார் காந்தி. இறுதியில் ஏசு சந்தித்த முடிவையே காந்தியும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.

காந்தியின் அளவுக்கோ அல்லது காந்தியை விடப் பெரிய அளவிலோ களத்தில் இறங்கியவர்கள் வரலாறு நெடுக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், காந்தி அளவுக்கு அறத்தை ஆயுதமாகக் கொண்டு, பெரிய பரிசோதனைக் களத்தில் இறங்கியவர்கள் வெகு சிலரே. தன் உடலை, தன் வாழ்க்கையை, தன் குடும்பத்தை, இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் ‘நான்’, ‘தான்’ என்ற சொற்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்குகின்றனவோ அவற்றையெல்லாம் பலிகொடுக்கத் தயாராகத்தான் அவர் களமிறங்கினார். பலிகொடுக்கவும் செய்தார். இவ்வளவு பெரிய பலியைக் கொடுத்ததால்தான் அவர் எல்லோருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறார். இந்தத் தியாகங்களால் கிடைக்கும் உன்னத ஸ்தானத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதை இழக்கத் தயாராக இருந்ததும், அந்த ஸ்தானத்தைப் பலிகடாவாக ஆக்கியதும்தான் எல்லாவற்றிலும் பெரிய காரியம். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் செய்திருந்த தானங்களின் மொத்தப் பலனையும் வரமாகக் கேட்ட கிருஷ்ணனுக்குச் சற்றும் யோசிக்காமல் அதைத் தானமாக அளித்து, மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கர்ணனின் செயலுக்கு ஒப்பாக இதைக் கூறலாம்.

சமரசம் இல்லாத சத்தியம்

இந்தியாவின் சுதந்திரம் என்ற ஒரு நல்ல காரியத்துக்காக அறம் என்ற விஷயத்தைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி நினைத்தார். அதன் விளைவுதான், முன்னுதாரணமே இல்லாத ஒரு பாதையை இந்திய சுதந்திரப் போராட்டம் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவுதான், உலகமே இந்தியாவையும் காந்தியையும் தங்களுக்கான முன்னுதாரணங்களாகத் தேடிவருவது. அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் இந்திய வருகையைக்கூட நாம் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

சமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றிதான் காந்தியம். தனிமனிதராகத் தான் மட்டும் ஈடுபடாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதில் ஈடுபடுத்தினார். நவீனக் கண்டுபிடிப்பான வை-ஃபைக்கு காந்திதான் முன்னோடி (wi-Fi: கம்பியில்லா முறையில் ஒரு பகுதியில் உள்ள கணினிகளையோ கைபேசிகளையோ இணைக்கும் அமைப்பு). இந்தியாவின் ‘வை-ஃபை’யாக காந்தி இருந்தார். தனது பரிசோதனையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துக்கொண்டார். இந்தியர்கள் தங்களின் நிறை குறைகளோடு அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்கள். மக்களின் குறைகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தானே நிறைய குறைகளைக் கொண்ட ஒருவர்தான் என்ற எண்ணம் அவருக்கு இறுதிவரை இருந்தது. பிறருடைய குறைகளுக்காகவும், தன்னிடம் இருப்பதாக அவர் நம்பிய குறைகளுக்காகவும்தான் அவர் தன் வாழ்க்கையைப் பலிகொடுக்கத் தயாரானார். அறத்தின், சத்தியத்தின் போரில் தன்னைப் பலிகொடுக்கத் தயாராக எப்போதும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அவருடைய படுகொலைக்கு முன்னால் ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும்கூடத் தனக்கென்று எந்தப் பாதுகாப்பையும் அவர் ஏற்றுக்கொள்ளாதது இதற்கு உதாரணம். எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த ஒரே ஒரு அளவுகோலை நமது உள்ளூர், இந்திய, உலகத் தலைவர் களுக்கு வைத்துப்பார்த்தாலே போதும் காந்தியின் இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

காந்தியோடு உரையாடுவோம்

காந்தியை நேசிப்பவர்கள் ஏராளமாக இருப்பதைப் போல் அவரை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காந்தியைக் கடவுளாக வழிபடுவது ஆபத்தானது என்றால், அவரை முற்றிலுமாகத் தூக்கியெறிவது அதைவிடப் பல மடங்கு ஆபத்தானது. அவரே சொன்னதுபோல் அவரை நாம் மகாத்மாவாக ஆக்க வேண்டாம்; நமது தாத்தாவாக உணர்ந்தாலே போதும். நம் தாத்தாவுடன் எதையும் நாம் உரையாட முடியும். அவரை மறுத்தும் அவருடன் உரையாட முடியும். அந்த உரையாடலின் இறுதியில், ஒன்று, நாம் அவரை அதிக அளவுக்கு நேசிப்பவர்களாக மாறிவிடுவோம். அல்லது, அவரை எதிர்ப்பதற்கான வலுவை அவரிடமிருந்தே நாம் பெறுவோம். எனவே, காந்தியை வழிபடுவதைவிட, தூக்கியெறிவதைவிட அவருடன் தொடர்ந்து உரையாடுவோம்.

இதற்காகத்தான் ஆஷிஸ் நந்தி இப்படிச் சொல்கிறார்: “காந்தியைவிடச் சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில், வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்க விடாது. அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்.”

- ஆசை,

No comments:

Post a Comment