மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

thirukkural meaning விளக்கம் குறள் 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்
குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா 
என்னல்லது இல்லை துணை
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா.
மன்னுயிர் - மானிடச்சாதி; மிருகசாதி / விலங்குச்சாதி, ஆத்துமா / ஆன்மா, நிலைபெற்றஉயிர்;  மன்னில் உள்ள அனைத்து மானுட மற்றும் மிருக உயிரினங்கள்

எல்லாம்  - எல்லாம், முழுதும்

துயிற்றுதல் - உறங்கச்செய்தல்; தங்கப்பண்ணுதல்.

துயிற்றி - துயில், நித்திரை செய்வித்தல்

அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

அளித்து - அளிசெய்யத்தக்கது

இரா - இரவு

என் - என்னை

அல்லது  - தவிர

இல்லை - வேறு யாரும் இல்லை

இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
இரவு என்பது அனைத்து உயிரினங்களையும் உறக்கத்தில் ஆழ்த்தி விடும். அப்படி ஆழ்த்தியதால் இரவு தனிமை பட்டு இருக்கும். [ஒரு நாள் தனிமை ஒன்றும் பெரிய செய்தி அல்ல. ஆனால் பல நாள் தனிமை துன்பம் தரும்]. வேறு துணை கிடையாது.

அதேப்போல் தலைவியும் தலைவன் இல்லாமல் துன்பம் பட்டு இருக்கிறாள். [பல நாட்களாக]. ஆதலால் அந்த தனிமைபடுத்தபட்டு துன்பம்பட்டுகொண்டு இருக்கும் இரவுக்கு இவளே தோழி இவளே துணை என்கிறாள். இவளால் அந்த துன்பத்தை புரிந்துக்கொள்ள முடியும் என்கிறாள். அவள் துன்பத்தை சொல்கிறாள். 

இந்த துன்பம் கொடியது. துணையில்லாமல் நான் வாழ்கிறேன். எனக்கு உறக்கம் வரவில்லையே.எனக்கு இரவே துணை என்கிறாள்.

இக்குறளில் நான் கண்டது என்னவென்றால் சொந்த வீட்டில் அத்தை மாமா அல்லது அம்மா அப்பா அல்லது பக்கத்து வீட்டில் நண்பர்கள் இருப்பினும் அவள் எப்படி தனிமை படுகிறாள்? அவளுடைய தனிமை என்ன என்பதை உணர்த்தவே (கோடான கோடி மனிதர்களும் விலங்குகளும் உயிருடன் உறங்கினாலும் தனிமையாக உள்ளது இரவு) இரவை உவமையாக காட்டுகிறார் திருவள்ளுவர்.  

மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள்முனிவின்று
நனந்தலை யுலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே” (குறுந் 6)

“யாமத்து
ஞாலத்து உயிரெல்லாம் கண் துஞ்சும் நள்ளிருள்கூர்
காலத்தும் துஞ்சாதுன் கண்” (கைலைபாதி 64)



இரவு

பரிமேலழகர் உரை
(இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை. ('துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)

மணக்குடவர் உரை
இவ்விரா அளித்தா யிருந்தது; உலகத்து வாழ்கின்ற உயிர்களெல்லாவற்றையும் துயிலப்பண்ணி என்னையல்லது வேறுதுணை யில்லையாக இருந்தது.

இது பிற்றை ஞான்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கண் உறங்குகின்றதில்லை யென்று சொல்லியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இரவின் கொடுமை கூறி வருந்தியது.)
இரா அளித்து - இவ்விரவு இரங்கத்தக்கதாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை - இவ்வுலகத்து மற்றெல்லா வுயிர்களையுந் தூங்க வைத்து விட்டதனால், இராமுழுதுந் தூங்காத என்னைத்தவிர வேறொரு துணையும் இல்லாதிருந்தது.

நிலைபெற்ற வுயிர் ஒன்றும் இவ்வுலகத்தின்மையாலும், மாந்தரேயன்றி மற்றவுயிர்களும் இரவில் தூங்குவதாலும், மன் என்னுஞ்சொற்கு மற்றுப் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. ஆயினும், சில மாந்தர் இரவிலேயே வழங்குவதனாலும், சில மாந்தர் இரவிலேயே அல்லது இரவிலுந் தொழில் செய்வதனாலும், எல்லாம் என்னுஞ் சொல் பெரும்பான்மை பற்றியதென்று கொள்ளப்படும். பொதுவாக இராக்காலமே தூங்கும் வேளையாதலாலும், பகலுழைப்பாளிகட்கு இரவில் தானாகத் தூக்கம் வந்துவிடுவதனாலும், இரவே தூங்கவைப்பதாகச் சொல்லப்பட்டது. துணையொடு கூடி இன்புறும் உயிர்களையெல்லாந் தூங்கவைத்துவிட்டு, துணையின்றி வருந்தும் என்னைமட்டும் தூங்கவையாது தனக்குத் துணையாக் கொண்டது, இக்கொடிய இரா என்னுங் கருத்தினளாதலால், ' அளித்து ' எதிர்மறைக் குறிப்பாம்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உரை (நன்றி)
‘மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து, இராஎன்அல்லது இல்லாத் துணை’‘ - இந்த உலகத்து உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து காக்கும் இரவுக்கு என்னை அல்லாது வேறு யார்  துணை?’ இந்தப் பாடல் நுட்பமாக ஒரு உணர்வைச் சொல்கிறது… ‘எல்லோரும் உறங்குகிறார்கள், இரவு தனித்து இருக்கிறது. இரவுக்குத் துணையாக நான் மட்டுமே  விழித்திருக்கிறேன்’ என்பது. மிக நுணுக்கமாக தனிமைத் துயரும் பிரிவின் வேதனையும் உணர்த்தும் பாடல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
எல்லோரும் உறங்குகின்றார் இவ்விரவால்
யான்மட்டும் உறங்கவில்லை அவர் பிரிவால்
பொல்லாத இரவு இது அன்பு கொண்டார்
போய் விட்டார் என்பதனால் துணையேயின்றி
நல்லாள் நான் தவிக்கின்றேன் எனக் கருதி
நாடி எந்தன் துணை மட்டும் கொண்டு நன்கு
உள்ளார்கள் அனைவரையுமுறங்கச் செய்து
ஒரு துணையாய் உறக்கமின்றி வைத்ததென்னை

நீ -என்னோடு இருகிறாய் ...!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)

நீ -என்னோடு இருகிறாய் ...!!!
ஓ இரவே நீயும்
என்னைபோல் அநாதை
எல்லோரையும்
தூங்க வைத்திவிட்டு
நீ -என்னோடு இருகிறாய் ...!!!

காதல்
வலி கொண்டவருக்கு
பகல் என்ன ..?
இரவென்ன ..?
இரவே கவலை படாதே
உன்னோடு நானும்
இருக்கிறேன் ....!!!

மு.வ உரை
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது

சாலமன் பாப்பையா உரை
பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain