Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மறமானம் மாண்ட வழிச்செலவு

குறள் 766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
[பொருட்பால்,  படையில், படைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
மறம் - வீரம்,வலிமை; வெற்றி; போர்; 
மானம் - கௌரவம், பெருமை, கற்பு, வானம்,பெருந்தன்மை, மதிப்புடைமை, அன்பு
மாண்ட - மாண்(ணு)-தல் - மாட்சிமைப்படுதல், மிகுதல், நன்றாதல், 
வழிச் செலவு - படைகள் செல்லும் பொழுது வழி நெடுக்க ஆகும் செலவு
தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு.
என நான்கே - என்ற நான்கும்
ஏமம் - வலிமை, பொன் , காவல் , இன்பம்
படைக்கு - போர் புரிய (ப்போகு)ம் படைகளுக்கு

முழுப்பொருள்
ஒரு சேனைக்கு எது வலிமை என்று கூறுகிறார் திருவள்ளுவார். அவர் நான்கு குணங்களை படைகளின் வலிமைக்கு தேவையானதாக கூறுகிறார்

1) மறம் - ஒரு படைக்கும் வீரம் மிக அவசியமான ஒன்று. போர் குணம் மிக அவசியம். அஞ்சா நெஞ்சம் வேண்டும்

2) மானம் - படைகளுக்கு என்று ஒரு மதிப்பு வேண்டும். அவர்களின் தொழில் மக்களால் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்வது நாட்டின் பாதுக்காப்பிற்கு என்ற பெருமை அவர்களுக்கு உள்ளுர வேண்டும்.

3) மாண்ட வழிச்செலவு - போர் புரிய செல்லும் பொழுது வழி நெடுவிலும் போரிலும் நேரக்கூடிய செலவுகளுக்கு தேவையான நிதி வேண்டும். 
போருக்கு தேவையான பொருள்களை (வில், வாள், பாதுக்காப்பு கவச உடைகள் மற்றும் பல) வாங்கும் அளவு பொன்னும் பொருளும் வேண்டும்.

4) தேற்றம் - எத்தகைய நிலையிலும் தளராத மன விலிமையும் தெளிவும் கொண்ட படை / அரசன் / படைவீரர்கள்/ தளபதிகள்

இவை நான்கும் படைக்கு வலிமை சேர்க்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)

மணக்குடவர் உரை
மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம்.
நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே; படைக்கு ஏமம்-படைக்கு அரணான பண்புகளாம்.

தறுகண்மையாவது சாவிற்கும் கொடிய நோவிற்கும் சிறிதும் அஞ்சாமை. மறம் முதலிய நான்கினாலும், முறையே பகைவரைத் தப்பாது வெல்லுதலும். தமக்கும் தம் அரசனுக்குந் தாழ்வு வராமற் காத்தலும், தோற்றோடுவார் மீது படைக்கலந் தொடுதலும் பெண்டிர் கற்பழித்தலும் அரசனது ஏவலின்றிக் கொள்ளையடித்தலும் செய்யாமையும், அறை போகாமையும் பெறப்பட்டன. அரண்போற் பாதுகாப்புச் செய்யும் பண்புகளை அரணென்றார்.

மு.வரதராசனார் உரை
வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.

சாலமன் பாப்பையா உரை
வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்

English Meaning - As I taught a kid - Rajesh
What are the four qualities that add strength to an army? 1) மறம் - வீரம். Bravery, Courage, fearless fighting spirit 2) மானம் -  Respect/command gained from achievements, practice, preparedness, victories 3) மாணட வழிச்செலவு  -  Resources and finance required to execute a war including conveyance, equipment's, salaries, calamities, medical care etc.  4) தேற்றம் -  Undeterred perseverance, clarity to win a war.

Questions that I ask to the kid
What are the four qualities that add strength to an army? 


கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி

குறள் 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் 
நிலைக்கெளிதாம் நீரது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள் 
கொளற்கு - ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கம்
அரிதாய் - அரியது, அருமையானது
கொண்ட - உடைய
கூழ்த்து - பொருள், பயிர், பொன், உணவு, மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை
ஆகி - ஆக்கம்
அகத்தார் - மனை, அஸ்திவாரம். (உறவினர்களை அகத்தார் என்று கூறுவர்) (புறத்தாருக்கு / வேற்று மனிதர்களுக்கு எதிர்சொல்)
நிலைக்கு - குணம்
எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது
ஆம் - அழகு
நீரது - நிலை
அரண் - கவசம், கோட்டை

முழுப்பொருள்
உணவு என்பது மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆதலால் அதன் கையிறுப்பு மிக மிக அவசியம். எல்லா ஆண்டுகளும் மழை செழிப்பாக இருக்கும் என்று சொல்ல இயலாது. சில ஆண்டுகள் வறட்சி நிலவக்கூடும். அத்தகைய நிலைகளில் வேறு எவரையும் நம்பி இருக்கக்கூடாது. வறட்சி காலகட்டதிற்கும் ஆயுத்தமாக இருக்க வேண்டும். நாட்டுமக்கள் பசி பட்டினியால் வாடக்கூடாது.

அத்தகைய வறட்சிகாலகட்டங்களில் வெளியில் இருந்து வந்து போரிட்டு உணவை களவாட முனைவர் புறவோர். உணவை எளிதாய் கண்டரிய முடியாத கோட்டையை உடையதே சிறந்தது. ஆதலால் உணவை பாதுகாப்பதும் அரண் என்னும் இலக்கணத்தில் அடங்கும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே” (புறநா.109:4-8)

“பற்பல தானியத்த தாகிப் பலருடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது” (இனியவை.18)

பரிமேலழகர் உரை 
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)

மணக்குடவர் உரை 
பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது.
எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கொளற்கு அரிதாய்-உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி- உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய்; அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-நொச்சிமறவனின் போர் நிலைக்கு எளிதான நிலைமையுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது.

உழிஞையாராவார் உழிஞை மாலைசூடி நகரை முற்றுகையிடும் பகைவரான புறத்தார். நொச்சியாராவார் நொச்சிமாலைசூடி முற்றுகையிடப்பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். கொளற்கருமை, மரமடர்ந்த காவற்காட்டாலும் ஆழ்ந்து முதலைகள் பல கொண்ட அகழியாலும் அணுகுதற்கரிய மதிற்பொறிகளாலும் நேர்வதாம். கூழ் என்றது உணவும் நுகர்ச்சிப்பொருளும் செல்வமுமாகிய பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை. நிலைக்கெளிய நீர்மையாவது, நொச்சியார் விடுத்த படைக்கலங்கள் உழிஞையாரை எளிதாய்த் தாக்குமாறும் உழிஞையார் விடுத்தவை நொச்சியாரைத் தாக்கா வாறும், மதிலுயர்வும் மறைவிடங்களும் பதணப் பரப்பு முடைமை. பதணம் மதிலின் மேற்றளம் அல்லது மதிலுண்மேடை.

மு.வ உரை
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

சாலமன் பாப்பையா உரை
பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

செயற்கரிய செய்வார் பெரியர்

குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
 [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] 
(For English meaning scroll to the bottom of this post)

பொருள் 
செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செயற்கு - செய்வதற்கு

அரிய அருமையான (rare); அரியவற்றை, கடினமானவற்றை, அருமையானவற்றை, பயனுள்ளவற்றை

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்வார்- செய்வார்கள்

பெரியர் - பெருமை, சான்றோர்

சிறியர் - சிறியவர், சிறியார்; ciṟiyr   --சிறியவர்--சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செயற்கு - செய்வதற்கு

அரிய - அரியவற்றை, கடினமானவற்றை,  அருமையானவற்றை, பயனுள்ளவற்றை

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்கலாதார் - செய்யமாட்டார்கள்

முழுப்பொருள்
மேன்மக்கள் தாம் செய்யும் செயல்களை மிகுந்த கவனுத்துடன் தேர்ந்தெடுத்து செய்வார்கள். இச்செயல் என்ன நன்மை பயக்குமோ என்று சிந்தனை செய்வார்கள். பயனற்ற எளிய செயல்களை செய்ய மாட்டார்கள். நேரத்தை வீணாக விரயம் செய்ய மாட்டார்கள். ஆதலால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் சான்றோர்களும் மேன்மக்களும் அருஞ்செயல்களையும் கடினமானவற்றையும் பிறருக்கு பயன் தருபவற்றையும் அறம் சார்ந்ததை மட்டுமே செய்வார்கள். அவ்வாறு ஒருவர் பெரிய செயலை செய்தால் அவருக்கு சிறிய செயல்களை செய்ய நேரம் இருக்காது. பெரிய செயல்களை செய்தப்பின்பு சிற்றின்பங்கள் உவக்காது. 

உதாரணமாக பாருங்கள் சான்றோர்கள் 60 வயது ஆனப்பின்பு ஓய்வு பெற மாட்டார்கள். தொடர்ந்து ஆக்கப்புர்வமான விஷயங்களில் ஈடுப்படுத்திக்கொண்டே இருப்பர் (உதாரணமாக டெல்லி மெட்ரோ ஈ.ஸ்ரீதரன், ரத்தன் டாட்டா, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் பலர்). 60 வயதில் கட்டாய ஓய்வுப் பெற்றவர்களை நான் குறைச்சொல்லவில்லை. சில உதாரணப்புருஷர்களை மட்டுமே நினைவுப்படுத்துகிறேன். 

ஆனால் சிறியவர்களோ எதற்கு உதவாத நேரத்தை விரயம் செய்யும் செயல்களை செய்து கொண்டு பொழுதை கழிப்பர். அவர்களை இவ்வுலகம் சிறுமை என்றே எண்ணும். 

கிருஷ்ணம்மாள் (நன்றி ஜெயமோகன்)
புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள் கொண்டிருப்பது முதல் வகையான புகழ். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் அடைந்திருப்பது இரண்டாம் வகை புகழ். மரபின் மொழியில் சொல்லப்போனால் பொன்றாப்புகழ்.

”தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” , “செயற்கரிய செய்வார்” என்னும் இரண்டு வரிகளால் அவர்களை நம் மரபு வரையறை செய்கிறது. ’வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என வகுக்கிறது. அவர்களே புலவர் சொல்லில் எழவேண்டியவர்கள். தலைமுறைகளின் நினைவில் நின்றிருக்கவேண்டியவர்கள். கிருஷ்ணம்மாள் அவர்களில் ஒருவர். அவர்களை வணங்குகிறேன்



மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்” (பெரிய.இயற்பகை 29)

பரிமேலழகர் உரை
செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செயற்கு அரிய செய்வார் பெரியர் - உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாகாதார் சிறியர் - பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

"செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்". என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம்.

"வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்
சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது"
என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ்செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர் "செயற்குரிய செய்கலாதார்" என்று பாட வேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம்.

மணக்குடவர் உரை
செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்.
செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

மு.வ உரை
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

Thirukkural - Management - Perseverance
Meaningful and timely execution demand perseverance. Your entire success depends on the purpose and the persistence of the task you execute.

A great ship asks for deep waters. A great ship is built to explore the vast ocean. Similarly, great people do challenging tasks that are considered impossible by small people. Great people also attempt challenging tasks to explore themselves. One of the ways to identify whether a person is great in thinking is to measure the type of task he executes, explains Kural 26.

The great do the impossible:
The mean cannot.

Great people do not limit themselves by their limitations. Whereas small people make mountains out of molehills of their tasks and give up the thought of either doing them or persisting till the end. So, think great thoughts, challenge yourself to become a man of achievements. 

English Meaning - As I taught a kid - Rajesh
Great people do great things consistently whereas normal / trivial / mediocre people do average things / mundane stuffs and do not aim to be great or do great things consistently. Mediocre people don't even try to think about great stuffs or think about doing great stuffs

Questions that I ask to the kid
Who are great people? Who are mundane/trivial/mediocre people? By what do they differ?

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செல் - செல்லு (போ)
விருந்து - புதுமை, அதிதிகளுக்கிடு முணவு,  விருந்தாளி, அதிதி, புதியர், புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்; 
ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
வரு - மழை
வரு - வருகம் - இலை
விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்
பார்த்திருப்பான் - காத்துக்கொண்டு இருப்பான், எதிர்நோக்கி கொண்டு இருப்பான்
நல் - நல்ல
வருந்து - வருந்திச்செய்ய
வானத்தவர்க்கு - வானில் உள்ளவர்க்கு

முழுப்பொருள்
நல்ல உபசரிக்கும் பண்புள்ளவன் என்று யாரை குறிப்புடுவது என்றால் அதற்கு மூன்று இலக்கணங்களை கூறுகிறார் திருவள்ளுவர்

1) செல்விருந்து ஓம்பி - இதுவரை தன் இல்லத்தில் புதியோராய் விருந்தினராய் வந்தவருக்கு நன்கு உபசரித்து அவர்களை பேணி அவர்கள் மனம் நோகாமல் அவர்களுக்கு நல்ல உணவையும் வசதியையும் அளிப்பவர். ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பொழுது உணவளித்து உபசரிப்பது மட்டும் இன்றி அவர் வீட்டை விட்டு வெளியே ”செல்லும்” பொழுது உணவு கொடுத்து அனுப்புவதும் விருந்தோம்பலில் அடங்கும். ஆகவே தான் ‘செல்விருந்து’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். நம் இந்திய கலாசாரத்தில் அதனால் செல்லும் பொழுது மதிய உணவிற்கும் (புளிசாதம், தயிர் சாதம் போன்று), இரவு உணவிற்கு (இட்லி போன்று) அல்லது சில இனிப்புகள் எதையாவது கொடுத்து அனுப்புகிறார்கள்.

2) வருவிருந்து பார்த்திருப்பான் - வருங்காலத்தில் இதற்கு முன் வந்து சென்றவர்களுக்கும், இன்னும் புதியதாய் வருபவர்களுக்கும் விருந்து படைக்க எதிர்நோக்கி காத்திருப்பவர்.  சமைத்துவைத்துக்கொண்டு வருவிருந்துக்காக காத்திருப்பார். 

3) நல்வருந்து வானத் தவர்க்கு -  தேவர்களுக்கும், கடவுளுக்கும் விருந்து படைக்கும் பொழுது எவ்வளவு தன்னை வருத்தி உபசரிக்கிறோமோ அதே அளவு எந்த பாரபட்சமும் இல்லாமல் தன் இல்லத்திற்கு வந்தவரை உபசரிக்க வேண்டும். 

உதாரணமாக இன்றும் சில ஊர்களில் வீட்டுக்கு வந்துவிட்டுசெல்லும் விருந்தினர்களுக்கு கையில் சில உணவு பண்டங்களை கொடுத்து அனுப்பும் வழக்கம் உள்ளது. கல்யாணங்களில் கட்டுசாத கூடை என்று  கூறுவர். பல குடும்பங்களில் விருந்தினர் ஊர்க்குப்போனால் கையில் இட்லி, புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி (உடன் - வெங்காயம் தக்காளி கரி)  என்று ஏதாவது ஒன்றை கையில் கொடுத்து அனுப்புவர். இன்றைய காலத்தில் நாகரிகம் வசதி என்ற பெயரில் வழியில் வாங்கி சாப்பிடுவதை ஒருவித கௌரவமாக கொண்டு பல உயர் விழுமியங்களை நாம் இழக்கிறோம். 

இக்கருத்து மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியதுபோல “கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்” என்று அடுக்கியது போல தேவராய் பிறப்பது ஒரு பிறவியென்பதை ஒட்டி இருக்கிறது.

தியடோர் பாஸ்கரன் அவர்கள் “செல்விருந்துதோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்” என்ற கட்டுரையில் இக்குறளை இப்படி எழுதியிருப்பார் - துறவிகள், சில நாட்களுக்கொருமுறை, அருகிலுள்ள ஊருக்குள் சென்று, யாசித்து உணவு பெற்று, அதை பள்ளியிலுள்ளத் எல்லாத் துறவிகளுடன் பகிர்ந்து உண்டனர். ஒரு வீட்டின் முன் சென்று அமைதியாக நிற்பார் துறவி. உணவு வேண்டி துறவிகள் தங்கள் இல்லத்திற்கு வருவதை மக்கள் ஒரு பேராகக் கருதினார்கள். இந்தப் பழக்கத்தைத் தான் வள்ளுவர், “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு” என்று எழுதியிருகின்றார் என்றும், திருக்குறளில் விருந்து என்ற சொல் துறவிகளின் வருகையைத்தான் குறிக்கின்றது என்று ஜீவபந்து ஸ்ரீபால் கூறிகின்றார். 

Aritappati Jain Caves (அரிட்டாபட்டி சமண குகைகள்)

ஒப்புமை
”செல்விருந் தாற்றி” (அகநா 203.16)

“வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய” (புறநா 177.15)

“வருவிருந் தோம்பி மனையறம் முட்டாப்
பெருமனைக் கிழத்தியார்” (சிலப் 22.132.3)

“அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெயத் தொண்டரள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாக” (பெரிய.திருஞான 571)

”இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போற் பெரிதுவந்து மெல்லக்
”கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு” (நாலடி 91)

“நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் - அட்டது
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு” (நாலடி 271)

“இன்சொ லளாவல் இடமினிதூண் யாவர்க்கும்
வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து” (ஏலாதி.7)

“ஒன்றாக நல்ல துயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்ந் தடங்கினார்க் கீந்துண்டல்  என்றிரண்டு
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து” (அறநெறி 62)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

மு.வ உரை
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா உரை
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

எழுத்தாளர் ஜெயமோகன் ”நமது விருந்தோம்பல்..” பதிவில் இருந்து (நன்றி) 
ஏனென்றால் சுற்றுலாப்பயணியை ஏமாற்றுபவர், சீண்டுபவர் நம் பிரதிநிதியாக நின்று அதைச் செய்கிறார். ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பார்’ என்று வள்ளுவர் விருந்தோம்புதலைச் சொன்னார். அந்தப் பெரிய பண்பாட்டை அவமதிப்பவர்கள் நம்மில் உள்ள இந்த புல்லுருவிகள்தான்.

எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் ஆன்மா துறவில் உள்ளது என்று உணர்ந்ததாகவும், அதனை விவேகானந்தரும் சொன்னதாகவும் அவரின்அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ் பயணக்கட்டுரையில் பதிவு செய்து இருக்கிறார். 
 
(அதில் இருந்து ஒரு பத்தி கீழே - அவருக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம்)
காலையில் எழுந்ததும் சமண பஸதிக்குச் சென்று பார்த்தோம். அப்போது ஒருவர் நாங்கள் செல்லும் கார் எண்ணைப் பார்த்து வந்து சாமியார் அழைப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் சென்றோம். ஒரு பெரிய போஜனசாலையில் தட்டுகளைக் கழுவி வந்து அமர்ந்தோம். எல்லா ராமகிருஷ்ண மடாலயங்களையும் போல பிரம்மாண்டமான கூடம். அமைதி. சுத்தம். மாபெரும் கட்டிடங்கள். ஒரு வகை உப்புமா போட்டார்கள். என்னால் அள்ளி வாயில் வைக்கவே முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. நான் இரந்துண்டு வாழ்ந்தவன். வரிசைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்றிருக்கிறேன். கிடைத்ததை உண்டிருக்கிறேன். அவமதிப்பும்கூட பெரிய விஷயமல்ல. அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது, அவ்வளவுதான். இது அப்படி அல்ல, இதன் பின்னால் உள்ளது ஒரு மாபெரும் மனச்சிறுமை. என் முன்னால் அமர்ந்து தின்றுகொண்டிருந்த அந்தக் காவிதாரி எங்களை மதிப்பிடுகிறார். நான் வைரமோதிரம் போட்டிருந்தால் அவர் என் முன்னால் வந்து நின்று இளித்திருப்பார் என்று எனக்கு தெரியும் என்பதே என் பிரச்சினை.

சுற்றிலும் பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடங்கள். அவை எல்லாமே தங்குமிடங்கள். பெரும்பாலும் காலியாகவே இருக்கவும் கூடும் என அங்கே பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். அது மெல்ல மெல்ல மனக்கொதிப்பை உருவாக்கியது. உடனே அங்கிருந்து சென்று விடவேண்டும், ஒரு சொல் கூட அந்தக் காவிதாரியிடம் பேசக்கூடாது என நினைத்தேன். அவரைப் பார்க்காமலேயே வெளியேறினேன்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரிடம் கேட்டார்கள், அமெரிக்காவில் உங்களைக் கவர்ந்தது என்ன என்று. இங்குள்ள பொது அற அமைப்புகள்தான் என்று அவர் சொன்னார். பின்னர் எழுதினார், இந்தியா நூற்றாண்டுகளாகப் பெரும் அறநிலைகளை அறநெறிகளை உருவாக்கி நிலைநாட்டி வந்தது. அவையெல்லாம் நவீன காலகட்டத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன, நவீன அற அமைப்புகளை உருவாக்கி அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்று. அவ்வாறு அவர் உருவாக்கிய அமைப்புதான் ராமகிருஷ்ண மடம். அதற்கு அவருக்குத் தெளிவான நோக்கம் இருந்தது.

விவேகானந்தர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார், இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மீகமும் நிலை நிற்பதே உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் அன்னியர்களால்தான் என. இங்குள்ள பெரும்பாலான ஆன்மீக வழிகளில் துறவி ஆவதற்கு முன் பிச்சை எடுத்து உண்டு அலையும் வாழ்க்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லௌகீகம் சம்பந்தமான பயமும் கவலையும்தான் ஆன்மீகமான சிந்தனைக்குப் பெரும் தடைகள். அவற்றில் இருந்து முற்றாக விடுபட்டவனே உண்மையில் எதையாவது ஆழத்தில் சென்று சிந்தித்தறிய முடியும். ராமகிருஷ்ணரே அவரது மாணவர்களைப் பிச்சை எடுக்க அனுப்பியிருக்கிறார். விவேகானந்தரும் அப்படி பவிராஜக வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.

ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, கலையிலும் கூடத்தான். இந்நாட்டின் முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்த வாழ்க்கை கொண்டவர்களே. பஷீராக இருந்தாலும், காரந்தாக இருந்தாலும். அவர்களைப் பேணும் அமைப்புகள் இந்நாடெங்கும் இருந்தன. ஒவ்வொரு இந்துவும் சமணரும் பௌத்தரும் சீக்கியரும் அந்த மனநிலை கொண்டிருந்தார்கள். அன்னியர்களை ஐயப்படுவதற்கும் புறக்கணிப்பதற்கும் பதிலாக அவர்கள் அன்னியர்கள் என்பதற்காகவே அவர்களைப் பேணும் ஒரு பண்பாடு. இன்றும் அந்தப் பண்பாடு நம் கிராமங்களில் உள்ளது. சாவடிக்குச் சென்று இரவுணவுக்கு எவராவது உள்ளனரா என்று பார்த்து உணவிட்டபின்னரே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்ற மரபு இன்றும் கூட பல்லாயிரம் தமிழகக் கிராமங்களில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் பிரம்மசமாஜம் இந்த விழுமியங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அலைந்து திரிபவர்களை சோம்பேறிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அது சொன்னது. அந்த மனநிலை பெருகி ஒருகாலத்தில் அலைந்து திரியும் அன்னியர்கள் பேணப்படாது போய்விடுவார்கள் என விவேகானந்தர் அஞ்சினார். ஒருநாட்டின் ஆன்மீக சாரம் அந்த அன்னியர்களால், நாடோடிகளால்தான் நிலைநிற்கும் என்று அவர் சொன்னார். ஆகவே அதற்கான நவீன அமைப்பை உருவாக்க வேண்டுமென விரும்பி அவர் ராமகிருஷ்ண மடங்களை உருவாக்கினார். ஓர் இளைஞன் இன்னதென்றறியாத மன எழுச்சியால் உந்தப்பட்டவனாகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும் உணவும் தலைசாய்க்க இடமுமாக அந்த அமைப்பு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

அங்கேதான் இந்த ஆசாமிகள் காவிகளைக் கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இன்று. இன்று இவர்கள் செய்யும் வேலை என்ன? விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பெயரைச்சொல்லி பெருநகர்களில் அமைப்புகளை உருவாக்குகிறார்கள். பெரும் பணக்காரர்களின் இல்லங்களைத் தேடிசென்று தொடர்புகளை உருவாக்குகிறார்கள். பல்லிளித்துப் பசப்பி நன்கொடைகளைப் பெற்று பெரும் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். அவற்றுக்குள் நெய்விட்டு சோறு தின்று ஊன் வளர்த்து அமர்ந்திருக்கிறார்கள். சில வீணர்கள் சிலரை ஏமாற்றித் தின்று வாழ்வது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு இந்த தேசம் கண்ட விடிவெள்ளியின் பெயர் பயன்படுத்தப்படுவதே கொந்தளிக்கச் செய்கிறது.

என்னால் மிக எளிதாக ஓர் சிபாரிசைத் தொலைபேசியிலேயே ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் அது இன்றைய நான். முப்பதாண்டுகளுக்கு முன், பதறும் கண்களும் தயங்கும் நடையுமாக, கையில் பைசா இல்லாமல், பசித்துக் களைத்து நான் வந்து இந்த வாசலில் நின்றிருந்தால் என்னை இவர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். இந்த இடத்தில் இன்றும் என் அகம் அந்த அவமதிப்பை உணர்கிறது. இந்தக் காவி அணிந்த குமாஸ்தா ஒவ்வொரு அரசாங்க அமைப்பிலும் அமர்ந்திருந்து விதிகளைக்கொண்டு அந்த அமைப்பையே தோற்கடிக்கும் அதே ஆன்மாதான்.

நான் சென்ற ஒவ்வொரு முறையும் அரவணைத்து உணவிட்ட சமண நிலையங்களும் குருத்வாராக்களுமே எனக்கானவை. இது அல்ல. இது இந்து சமூகம் மேல் இருக்கும் ஒரு சீழ்க்கட்டி.

அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்

நான் சீனுவிடம் கேட்டேன், சிங்கப்பூரில் நான் ஆற்றிய உரையை வாசித்திருக்கிறீர்களா என. நானும் அதையேதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் என்றார் அவர்.   நான் இந்தியா என்று ஆரம்பித்துப் பேசும்போது என்னிடம் பேசவருபவர்கள் ஒரு அரசியல் கட்டமைப்பை, ஒரு வரைபடத்தை இந்தியா என எண்ணிப் பேசவருகிறார்கள். இந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.

கலை இலக்கியம் எதற்காக? (எழுத்தாளர் ஜெயமோகன்)

பதினைந்து வருடம் முன்பு ஒரு உயர்காவலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்தியக் காவல்துறை அமைப்பு என்பது உண்மையில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. ஏறத்தாழ இருபதாயிரம் பேருக்கு ஒருகாவலர் வீதம் இங்குள்ளனர். உண்மையில் இந்தியாவில் உள்ள அமைதி என்பது போலீஸ் நோக்கில் ஓர் ஆச்சரியம்

”இங்க பசிச்சவன் கிட்ட கருணையும் நியாயமும் இருக்கு சார்” என்றார் அந்த அதிகாரி. அதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் நீங்கள் வேறுபடலாம். ஓயாது இந்திய நிலத்தில் அலைபவன் என்றமுறையில் இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும் ஊறிக் கொண்டிருக்கும் கருணையை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இந்திய நிலத்தில் எங்கும் முலைகனிந்த அன்னையரும் அகம் கனிந்த தந்தையரும் காணக்கிடைக்கின்றனர்.

அவர்களின் வாழ்வின் சாரமாக உள்ள அறம்தான் என் கற்பனையின் ஈரம் சென்று தொடும் விதை. என் பத்தொன்பது வயதில் அம்மா அப்பா இருவரும் இறந்தபின் கையில் ஒரு பைசா இல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி அலைந்திருக்கிறேன். என் நாட்டில் நான் ஒருவேளைக்குமேல் பட்டினிகிடக்க நேரவில்லை. ஒரு அன்னையை நான் இழந்தேன் . பல அன்னை முகங்கள் எனக்கு சோறூட்டின. அந்த முகங்களை இப்போது என்னிப்பார்க்கிறேன். அவைதான் இந்தியாவின் முகம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்- (தன்பால் நின்று) செல்லும் விருந்தினரைப் பேணி (த் தன்பால்) வரும் விருந்தினரை (எதிர் நோக்கி) இருப்பவன், வானத்து அவர்க்கு நல் விருந்து - வானத்தின்கண் வாழும் தேவருக்கு நல்ல விருந்தினன் (ஆவன்).

அகலம்: செல், வரு என்பன வினைத் தொகைகள். அவை மேற்கூறிய பொருளன வாதலைத் ‘தருசொல் வருசொல்லாயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த’, ‘ஏனை யிரண்டுமேனை யிடத்த’ என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அறிக.

இச் சூத்திரங்களை அறியாதார் ‘செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்’ என்பதற்குத் ‘தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான்’ என்று உரைப்பார்.

கருத்து: விருந் தோம்புவான் தேவர்களால் சிறப்புச் செய்யப் பெறுவான்.

திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த நூல்களுள்,  பிறைசைச் சாந்தக் கவிராயர் இயற்றிய, நீதிசூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

தேசுபெறு மாறன் தெளித்த முளையமுதிட்டு
ஈசனுடன் போந்தான், இரங்கேசா! - பேசுங்கால்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இதன் பதவுரை --- 

 இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

தேசு பெறு மாறன் --- புகழ் பெற்ற இளையான்குடிமாற நாயனார், தெளித்த முளை அமுது இட்டு --- அன்று விதைத்த நெல்முளையை அமுதாக்கிப் படைத்து, ஈசனுடன் போந்தான் --- சிவபிரானுடன் சிவலோகம் சென்றார். (ஆகையால், இது) பேசுங்கால் --- எடுத்துச் சொல்லுமிடத்து, செல் விருந்து ஓம்பி --- உண்டு செல்லும் விருந்தாளிகளை உபசரித்து விட்டு, வருவிருந்து பார்த்து இருப்பான் --- இனி வரும் விருந்தாளிகளை எதிர்நோக்கி இருப்பவன், வானத்தவர்க்கு --- சுவர்க்கலோக வாசிகளாகிய தேவர்களுக்கு, நல் விருந்து --- இறந்த பிறகு நல்ல விருந்தாளியாவான் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

விளக்கவுரை ---  தமிழ்நாட்டில், இளையான்குடி என்னும் ஊரில் வாழ்ந்த மாறன் என்னும் வேளாளர், தாளாளராய், "தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது" என்றபடி பழுதற உழுது பயிரிட்டுச் செல்வம் பெருக்கி,"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்றபடி இல்வாழ்க்கையை வாழும் இயல்பினான் வாழ்ந்து வந்தார். இவர் சிவபத்தியில் சிறந்து இருந்தாராகையால், சிவனடியவரை அவன் எனக் கருதி அன்புசெய்து அமுது ஊட்டுவாராயினார். அதுகண்ட சிவபிரான் அவரது விருந்தோம்பல் திறத்தை அவர் வாழ்வினன்றித் தாழ்வினும் போற்றுவார் என்று காட்டி உலகத்தவர்க்கு அவருடைய சிவபத்தியின் சிறப்பை வெளிப்படுத்த அவருடைய செல்வத்தை மாற்றி, அவரை வறியவராக்கினார். அன்றியும், ஒருநாள் அரை இரவில் விடைமழை பொழியும் இருட்டில், சிவபிரான் தாமொரு விருத்த சிவனடியவர்போல் வேடம் தாங்கி, மெத்தப் பசித்தவர் போன்று அவர் வீட்டுக் கதவைத் தட்டினார். வறுமையின் கொடுமையால் உறக்கமின்றி இருந்த நாயனார், உடனே வந்து கதவைத் திறந்து, சிவனடியவரை வரவேற்று உபசரித்து, அங்கொரு புறம் அவரை எழுந்தருளிவித்து, வீட்டில் ஒன்றும் இல்லாதிருந்து, அவர்க்கு அன்னமிடும் ஏற்பாட்டுக்காகத் தம் மனைவியாரோடு யோசித்து, அன்று பகல் விதைத்த நெல்முளையை மிக வருந்தி வாரிக் கொண்டு வந்து, அவர் கையில் கொடுத்தார். அதை வாங்கி அவ் அம்மையார், பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை ஆகையால், தக்கபடி பதம்செய்து அமுதாக்கி அடியவர்க்குப் படைத்தார். பொய்ப் பசி கொண்ட அடியவர், அவர்களுடைய பத்தி வைராக்கிய உண்மை அன்புக்கு வியந்து, மழவிடைமேல் அவர்களுக்குக் காட்சி தந்து, அவர்களிருவரையும் தமது உலகத்துக்கு அழைத்துக் கொண்டு போயினர்.

திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த நூல்களுள், சிதம்பரம் பச்சைக் கந்தயைர் மடத்து சென்ன மல்லையர் இயற்றிய, "சிவசிவ வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

அன்னம்இடான் பொன்நா டுஅடைந்தும் தனதுஉடலைத்
தின்எனவே தின்றான், சிவசிவா! - மன்னிஅயல்
செல்விருந் துஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

 தண்டகாரண மகிமையில் சுகேது மன்னன் இட்டுண்டு வாழாமையில், நரகத்தில் தன் உடலைத் தின்றான் என்று கூறப்பட்டுள்ளது.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....                                 

"திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்
         இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்
         பகலாமோ, உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரஞ் செய்து அனுப்பி
         இன்னம் எங்கே பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பு அல்லால், விருந்து இல்லாது
         உணும் சோறு மருந்து தானே".              
                   ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

 திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் --- அருச்செல்வத்தோடு பொருட்செல்வமும் பொருந்தி உள்ள திருத்தண்டலை என்னும் வளம் மிகுந்த நாட்டினில் இல்லறம் நடத்துகின்ற பெரியோர்கள், ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ --- ஒரு விருந்தினராவது இல்லாமல் உணவு கொண்ட நாளும் ஒரு நாள் ஆகுமோ? உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி --- உறவு போல அன்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவு அளித்து, வேண்டிய உபசாரங்களைச் செய்து அனுப்பிய பின்னரும், இன்னும் பெரியோர் எங்கே  என்று - மேலும் விருந்தாக வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று ( ஆவலோடு காத்திருந்து) வரு விருந்தோடு உண்பது அல்லாமல் --- வருகின்ற விருந்தினருடன் உண்பது அல்லமால்,  விருந்து இல்லாது உணும் சோறு மருந்து  தானே --- விருந்தினர்  இல்லாமல் உண்ணுகின்ற சோறு ஆனது மருந்து போலக் கசப்பாகத் தான் இருக்கும்.

கருத்து --- "செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்து இருப்பான், நல்விருந்து வானத்தவர்க்கு" என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.

"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பது கொன்றைவேந்தன். மருந்து என்னும் சொல் இங்கு அமுதம் என்னும் பொருளில் வந்தது.
    
 இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை, "விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்" என்றது கொன்றை வேந்தன். விருந்தினரை அன்புடன் உபசரிக்க வேண்டும் என்னும் பொருள் படவே, "அன்புடைமை" என்னும் அதிகாரத்தின் பின்னர், விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தை நாயனார் தமது திருக்குறளில் வைத்தார் என்னும் அருமையை உணர்க.

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த
     பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து
     ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;
மறைப் பெருந்தீ வளர்த்து இருப்பார்,
     வருவிருந்தை அளித்து இருப்பார்,
சிறப்பு உடைய மறையவர் வாழ்
     திருவரங்கம் என்பதுவே.    
                   --- பெரியாழ்வார் திருமொழி.

இதன் பொருள் ---
பிறத்தற்கு உரிய அறையிலேயே மாயமாய்ப் போய்விட்ட அந்தணனது நான்கு பிள்ளைகளையும் கொஞ்ச நேரத்திற்குள் பரமபதத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கொடுத்து, தாயுடன் நேர்த்த வல்லமை உடையவனது வேதத்தில் கூறி உள்ளபடி, அக்கினியை வளர்த்துக் கொண்டு இருப்பவர்களும், வரும் விருந்தினரை உபசரித்துக் கொண்டு இருப்பவர்களும் மேன்மையை உடைய அந்தணர்கள் வாழுகின்ற ஊர் திருவரங்கம் ஆகும்.

இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து ---  மெல்லக்
கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.          
                    --- நாலடியார்.

இதன் பதவுரை ---

இல்லாவிடத்தும் --- பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் --- கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து --- பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு --- ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா --- அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

ஈகைக் குணமுடையவர்கள் மறுமை இன்பம் பெறுவர் என்பது கருத்து.

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் ---  அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.       
            ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் --- சமைத்து உண்ணுதல் என்பது, தமக்குள்ள பொருள் அளவினால் தம்மிடம் உறவு கொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும் தாம் சமைத்ததைப் பகுத்து உதவிப் பின் தாம் உண்ணுதலாகும்;  அட்டது அடைத்திருந்து உண்டொழுகும் ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு --- அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின் கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டு உயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்கு மேலுலகக் கதவு மூடப்படும்.

இம்மையில் பிறர்க்கு ஒன்று ஈயாதவர்க்கு மறுமையில் துறக்க உலகின்பம் இல்லை என்றது.

இன்சொல், அளாவல், இடம்,  இனிது, ஊண்
வன்சொல் களைந்து வகுப்பானேல் --- மென்சொல்
முருந்து ஏய்க்கும் முள் எயிற்றினாய், நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து.    -
           -- ஏலாதி.

இதன் பதவுரை ---
முருந்து ஏய்க்கும் --- மயிலிறகின் அடியை ஒக்கும், முள் எயிற்றினாய் --- கூரிய பற்களையுடைய பெண்ணே!, யாவர்க்கும் --- விருந்தாய் வருவாரெல்லாருக்கும், இன்சொல் --- இன்சொல்லும், அளாவல் --- உள்ளங்கலந்த உறவும், இடம் --- தங்குமிடமும், இனிது --- ஆடையணி முதலிய பொருளும், ஊண் --- உணவும், வன்சொல் களைந்து --- கடுஞ் சொற்களை நீக்கி, மென்சொல் --- பணிவு மொழியும், நாளும் வகுப்பானேல் --- என்றும் முறையே வழங்குவானானால், விண்ணோர் --- தேவர்கள், விரைந்து --- முன் வந்து, விருந்து ஏற்பர்--- அவனை விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.

மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையும் ஒத்து விளங்கும் கூரிய பல்லையும் உடையவளே! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொல் கூறலும், கலந்து உறவாடலும், இருக்கை உதவலும், அறுசுவை உண்டி அளித்தலும் செய்து, கடுஞ்சொல் ஒழித்து, மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பான் ஆயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
   
ஒன்றாக நல்லது உயிர்ஓம்பல், ஆங்கு அதன்பின்
நன்றுஆய்ந்து அடங்கினார்க்கு ஈந்து உண்டல் – என்றுஇரண்டு
குன்றாப் புகழோன் வருக என்று மேல்உலகம்
நின்றது வாயில் திறந்து.           
--- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---
ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.


வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ்வு எய்தி
இலங்குபூண் மார்பில் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்.... 
--- சிலப்பதிகாரம், அழல்படு காதை.

இதன் பதவுரை ---
வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி --- தம் இல்லத்து வரும் விருந்தினரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து --- விளங்கும் பூண் அணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என --- சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங்களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் --- மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர் ;


அருந்தினர் அருந்திச் செல்ல
         அருந்துகின்றாரும், ஆங்கே
இருந்து இனிது அருந்தா நிற்க
         இன்னமுது அட்டுப் பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி
         வித்து எல்லாம் வயலில் வீசி
வருந்தி விண் நோக்கும் ஓர்
         ஏர் உழவர்போல் வாடி நிற்பார். --- தி.வி.புராணம். திருநகரச் சிறப்பு.

 இதன் பதவுரை ---
அருந்தினர் --- உண்ட விருந்தினர், அருந்திச் செல்ல --- உண்டு செல்ல, அருந்துகின்றாரும் --- உண்கின்றவர்களும், ஆங்கே --- முன் உண்டவர் போலவே, இருந்து இனிது அருந்தா நிற்க --- இருந்து மகிழ்ச்சியுடன் உண்ணா நிற்க, பின்னும் இன் அமுது அட்டு --- பின்பும் இனிய அமுதைச் சமைத்து, விருந்தினர் வரவு நோக்கி --- வரக்கடவராகிய விருந்தினர்களின் வருகையை நோக்கி, வித்து எலாம் --- விதை அனைத்தையும், வயலில் வீசி - விளைபுலத்தில் வித்தி, விண் வருந்தி நோக்கும் --- மழையை வருந்தி எதிர்பார்க்கின்ற, ஓர் ஏர் உழவர் போல் --- ஒரே ஏரினையுடைய உழவரைப்போல, வாடி நிற்பார் --- வருந்தி நிற்பார் (அவ் வேளாளர்) எ - று.

English Meaning - As I taught a kid - Rajesh
We should always give something when our guest leaves our house. We should always eagerly wait for our guests to come. We should treat our guests like God.

Questions that I ask to the kid
How should we treat our guests?
How should we display our hospitality?

தள்ளா விளையுளும் தக்காரும்

குறள் 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தள்ளா - தளர்ச்சி, சோம்பல்
விளையுளும்- விளைச்சல்; முதிர்கை; வயல்; உள்ளம்.
தக்காரும் - தக்கோர், மேன்மக்கள், சிறந் தோர், உறவினர்
தாழ்வு - பள்ளம், சாய்வு, அவமானம், குற்றம், துன்பம், கீழ்மை, நிலைகெடுதல்
இலாச் - இல்லாத
செல்வரும் - செல்வங்கள்
சேர்வது - சேர்வது
நாடு - ஒரு நாடு ஆகும்

முழுப்பொருள்
நாடு எனப்படுவது யாது என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் திருவள்ளுவர். நாடு எனப்படுவதற்கு மூன்று அடிப்படைகளை கூறுகிறார். 1) உழவு 2) சான்றோன்மை 3) செல்வம். 

1) தள்ளா விளையுளும் - மனிதன் வாழ்வதற்கு உணவு அடிப்படை தேவையாகும். ஆண்டு தோறும் மக்கள் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆதலால் மக்களுக்கு தேவையான அளவு உணவை தளர்ச்சியில்லாமல் குறைவில்லாமல் உற்பத்தி செய்யும் நாடே நாடு. உணவிற்கு மற்ற நாட்டை நம்பி இருக்கும் நாடு நாடே அல்ல.

2) தக்காரும் -  மனிதன் வாழ்விற்கு கல்வி அவசியம். அனைவரும் கற்றக்கவில்லை என்றாலும் நாட்டை சிறப்பாக வழி நடத்த கற்றவர்கள், சான்றோர்கள், மேன்மக்கள் மிக தேவை. அவர்களே சரியான திட்டம் வகுக்க உதவுவார்கள். உதாரணமாக மழை நீர் சேகரிப்பு திட்டம், ஆறு அருகே அணைக் கட்டும் திட்டம், கால்வாய்களை சரியான நேரத்தில் தூர் வாரும் செயல்கள், நிதி, சுற்றுசூழல், போன்ற எண்ணற்ற தேவைகளில் சான்றோரால் மட்டுமே நாட்டை வழி நடத்த முடியும். 

3) தாழ்விலாச் செல்வரும் - இங்கே செல்வத்திற்கு பல பொருள்களை கூறலாம். முதலாவதாக பொருட்செல்வம். நிதி என்பது நாட்டை நடத்த திட்டங்களை நிறைவேற்ற மிக முக்கியம். அத்தகைய செல்வமானது குறைவில்லாமல் இருத்தல் வேண்டும். ஆனால் தாழ்வில்லா செல்வம் என்று திருவள்ளுவர் சொல்லுவது நற்வழியில் ஈன்ற செல்வமாகும். அற நிலையில் இருந்து கெடாமல் ஈன்ற செல்வமாகும். (போர்) குற்றம் புரியாமல் ஈன்ற செல்வமாகும். செல்வம் ஈன்ற வழியினை அவமானம் இல்லாமல் வெளிப்படையாக கூறும் முறையில் ஈன்ற செல்வமாகும்.

ஆக, குறைவில்லா விளைச்சலும், சான்றோரும், அறவழியில் ஈன்ற குறைவில்லாத  செல்வம் இவை மூன்றும் ஒரு நாட்டிற்கு தேவையான ஒன்று என திருவள்ளுவர் கூறுகிறார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அதிகாரம் 74. நாடு

[இனி , அவ்வரசனாலும் அமைச்சனாலும் கொண்டு உய்க்கப்படுவதாய ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய நாடு ஓர் அதிகாரத்தாற் கூறுகின்றார்.அஃதாவது இன்னதென்பதூஉம் அதிகார முறைமையும் இதனுள் விளங்கும்.]

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)

மணக்குடவர் உரை
தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு.

தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தள்ளா விளையுளும்- குறையாத விளைபொருளும்; தக்காரும் - தகுதியுள்ள பெரியோரும்; தாழ்வு இல்லாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும்; சேர்வது நாடு - முன்கூறப்பட்ட செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.

தள்ளாவிளையுள் என்பது தாழ்ந்த வகையினதாகத் தள்ளப்படாத விளையுள் என்றுமாம். விளையுள் என்பது உழவரையும் ஒருமருங்கு குறிக்குமேனும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும், 'சேர்வது' என்பது கூடி அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும், "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்" (தொல். கிளவி.51) வழுவன்மையானும், "மற்றை யுயர்திணைப் பொருள்களோடுஞ் சேர்தற் றொழிலோடும் இயையாமையின், விளையுளென்பது உழவர்மேனின்றது." என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தக்காராவார் புலவரும் அடியாரும் முனிவரும். தாழ்விலாச் செல்வரென்றது காலினுங் கலத்தினும் பொருளீட்டும் இருவகை வணிகரை. செல்வத்திற்குத் தாழ்வின்மை வழங்கத் தொலையாமையும் வருவாய் குன்றாமையும் பல்துறைப்பட்டிருத்தலும். செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் என்பது பாலால் வந்தது. ஆகவே, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாராலும் விளையும், அறிவு காவல் செல்வம் உணவு ஆகிய நால்வகைப் பொருளும் சிறந்தது நன்னாடு என்பதாம்.

மு.வ உரை
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar defines a country based on three important pillars Farming, exemplariness, wealth. Unfailing crops, exemplary people, the wealth with untarnished and undiminished wealth constitute a country.  For humans to live/survive, food is esential. Hence, it is important to take care of agriculture and irrigation so that crops don't fail. For a humans as a society to flourish and progress, we need exemplary people with knowledge and experience. Only such people can guide and lead the nation by their vision, plans, execution, issue handling etc. Humans also needs wealth that is earnt through in dignified way and with integrity. Such wealth will last long. If in case a wealth is earnt through wrong means such as war, remember, we would face another war through our enemies. 

Questions that I ask to the kid
What are the three things that constitute a nation? Why?