Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தள்ளா விளையுளும் தக்காரும்

குறள் 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தள்ளா - தளர்ச்சி, சோம்பல்
விளையுளும்- விளைச்சல்; முதிர்கை; வயல்; உள்ளம்.
தக்காரும் - தக்கோர், மேன்மக்கள், சிறந் தோர், உறவினர்
தாழ்வு - பள்ளம், சாய்வு, அவமானம், குற்றம், துன்பம், கீழ்மை, நிலைகெடுதல்
இலாச் - இல்லாத
செல்வரும் - செல்வங்கள்
சேர்வது - சேர்வது
நாடு - ஒரு நாடு ஆகும்

முழுப்பொருள்
நாடு எனப்படுவது யாது என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் திருவள்ளுவர். நாடு எனப்படுவதற்கு மூன்று அடிப்படைகளை கூறுகிறார். 1) உழவு 2) சான்றோன்மை 3) செல்வம். 

1) தள்ளா விளையுளும் - மனிதன் வாழ்வதற்கு உணவு அடிப்படை தேவையாகும். ஆண்டு தோறும் மக்கள் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆதலால் மக்களுக்கு தேவையான அளவு உணவை தளர்ச்சியில்லாமல் குறைவில்லாமல் உற்பத்தி செய்யும் நாடே நாடு. உணவிற்கு மற்ற நாட்டை நம்பி இருக்கும் நாடு நாடே அல்ல.

2) தக்காரும் -  மனிதன் வாழ்விற்கு கல்வி அவசியம். அனைவரும் கற்றக்கவில்லை என்றாலும் நாட்டை சிறப்பாக வழி நடத்த கற்றவர்கள், சான்றோர்கள், மேன்மக்கள் மிக தேவை. அவர்களே சரியான திட்டம் வகுக்க உதவுவார்கள். உதாரணமாக மழை நீர் சேகரிப்பு திட்டம், ஆறு அருகே அணைக் கட்டும் திட்டம், கால்வாய்களை சரியான நேரத்தில் தூர் வாரும் செயல்கள், நிதி, சுற்றுசூழல், போன்ற எண்ணற்ற தேவைகளில் சான்றோரால் மட்டுமே நாட்டை வழி நடத்த முடியும். 

3) தாழ்விலாச் செல்வரும் - இங்கே செல்வத்திற்கு பல பொருள்களை கூறலாம். முதலாவதாக பொருட்செல்வம். நிதி என்பது நாட்டை நடத்த திட்டங்களை நிறைவேற்ற மிக முக்கியம். அத்தகைய செல்வமானது குறைவில்லாமல் இருத்தல் வேண்டும். ஆனால் தாழ்வில்லா செல்வம் என்று திருவள்ளுவர் சொல்லுவது நற்வழியில் ஈன்ற செல்வமாகும். அற நிலையில் இருந்து கெடாமல் ஈன்ற செல்வமாகும். (போர்) குற்றம் புரியாமல் ஈன்ற செல்வமாகும். செல்வம் ஈன்ற வழியினை அவமானம் இல்லாமல் வெளிப்படையாக கூறும் முறையில் ஈன்ற செல்வமாகும்.

ஆக, குறைவில்லா விளைச்சலும், சான்றோரும், அறவழியில் ஈன்ற குறைவில்லாத  செல்வம் இவை மூன்றும் ஒரு நாட்டிற்கு தேவையான ஒன்று என திருவள்ளுவர் கூறுகிறார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அதிகாரம் 74. நாடு

[இனி , அவ்வரசனாலும் அமைச்சனாலும் கொண்டு உய்க்கப்படுவதாய ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய நாடு ஓர் அதிகாரத்தாற் கூறுகின்றார்.அஃதாவது இன்னதென்பதூஉம் அதிகார முறைமையும் இதனுள் விளங்கும்.]

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.)

மணக்குடவர் உரை
தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு.

தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தள்ளா விளையுளும்- குறையாத விளைபொருளும்; தக்காரும் - தகுதியுள்ள பெரியோரும்; தாழ்வு இல்லாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும்; சேர்வது நாடு - முன்கூறப்பட்ட செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.

தள்ளாவிளையுள் என்பது தாழ்ந்த வகையினதாகத் தள்ளப்படாத விளையுள் என்றுமாம். விளையுள் என்பது உழவரையும் ஒருமருங்கு குறிக்குமேனும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும், 'சேர்வது' என்பது கூடி அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும், "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்" (தொல். கிளவி.51) வழுவன்மையானும், "மற்றை யுயர்திணைப் பொருள்களோடுஞ் சேர்தற் றொழிலோடும் இயையாமையின், விளையுளென்பது உழவர்மேனின்றது." என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தக்காராவார் புலவரும் அடியாரும் முனிவரும். தாழ்விலாச் செல்வரென்றது காலினுங் கலத்தினும் பொருளீட்டும் இருவகை வணிகரை. செல்வத்திற்குத் தாழ்வின்மை வழங்கத் தொலையாமையும் வருவாய் குன்றாமையும் பல்துறைப்பட்டிருத்தலும். செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் என்பது பாலால் வந்தது. ஆகவே, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாராலும் விளையும், அறிவு காவல் செல்வம் உணவு ஆகிய நால்வகைப் பொருளும் சிறந்தது நன்னாடு என்பதாம்.

மு.வ உரை
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar defines a country based on three important pillars Farming, exemplariness, wealth. Unfailing crops, exemplary people, the wealth with untarnished and undiminished wealth constitute a country.  For humans to live/survive, food is esential. Hence, it is important to take care of agriculture and irrigation so that crops don't fail. For a humans as a society to flourish and progress, we need exemplary people with knowledge and experience. Only such people can guide and lead the nation by their vision, plans, execution, issue handling etc. Humans also needs wealth that is earnt through in dignified way and with integrity. Such wealth will last long. If in case a wealth is earnt through wrong means such as war, remember, we would face another war through our enemies. 

Questions that I ask to the kid
What are the three things that constitute a nation? Why?

No comments:

Post a Comment