Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை

குறள் 428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சுவது - பயம் கொள்வது

அஞ்சாமை - பயப்படாமை, திண்மை (மன உறுதி, வலிமை, கலங்காநிலைமை, பருமன்; உண்மை, நிதானம், பாரம், மெய்), ஒன்றை அஞ்சாமல் எதிர் கொள்ளுதல், ஒன்றை பயம் இல்லாமல் சந்தித்தல்; பயமின்மை, அச்சமின்மை
தைரியம், துணிச்சல், துணிவு

பேதைமை - மடமை ,அறிவற்றது; உய்த்துணராமை.

அஞ்சுவது - பயம் கொள்வது
அஞ்சல் - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால்

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிவார் - அறிவுள்ளவர்கள்

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.

முழுப்பொருள் :
நாம் அஞ்ச வேண்டிய (செயல்கள், காலம், மனிதர்கள்) விசயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது மடத்தனம் ஆகும். அறிவற்றவர்களே அவ்வாறு செய்வார்கள். அதே சமயம் எதைக் கண்டு அஞ்ச வேண்டும் அதைக்  கண்டு அஞ்சி அதற்குத்  தகுந்தாற் போன்று நடப்பது அறிவுள்ளவர்கள் செய்யும் செயல் ஆகும் .

நுணுக்கமாக சிந்தித்தால், இதை இரு வகையாக அர்த்தம் கொள்ளலாம். முதலாவதாக, நாம் பழி மற்றும் பாவங்களை தரக் கூடிய செயல்களை கண்டு அஞ்சி ஒதுங்கி இருப்பது இருப்பது நன்று. அவ்வாறு அஞ்சவேண்டியவற்றை கண்டு அஞ்சாமல் இருப்பது மடமை என பொருள் கொள்ளலாம்.

அல்லது இரண்டாவதாக, உண்மையிலேயே யதார்த்ததிலே பயப்பட வேண்டிய இடங்களிலே பயப்படாமல் நடக்க முயல்வது அறிவற்ற செயல் எனவும் கருதலாம். உதாரணமாக நடு இரவில், தனிமையில் நிறைய பொருள் அல்லது நகையுடன் செல்வது, அஞ்ச வேண்டிய(திருடர்களுக்கு) செயல். அதற்கு அஞ்சாமல், மூடத்தனமாக நடப்போம். அதனால் அதற்கான விளைவுகளை சந்தித்தே தீர வேண்டி வரும்.

மேலும், செய்யவேண்டிய செயல்களை காலம் கடத்துவது தீய விளைவுகளை விளைவுக்கும் பெரியோரும் இகழுவர் என்பதனை நினைத்து அஞ்சாமல் இருப்பது மடமையாகும். அதாவது செயல்களை / கடமையை காலம் தாழத்துவது மடமையாகும். ”குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” என்பதை நினைவில் கொள்க.

அதே போல், படிக்கும் காலங்களில், ஆசிரியர்க்கு பயந்து நடப்பது, சிறு வயதில் பெற்றோருக்கு பயந்து நடப்பது, கடவுளுக்கு பயந்து நடப்பது போன்றவற்றை, நல்ல விஷயங்கள், அஞ்ச வேண்டிய விஷயங்கள் எனக் கூறலாம்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆங்கில மொழியை இக்குறள்  நினைவு படுத்துகிறது. "The fear of the Lord is the beginning of Wisdom"


கி.வா.ஜகந்நாதன் ஆராய்ச்சிக் குறிப்பு கூறுவது
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை: “அஞ்சுவ தஞ்சா அறனிலி” (கலி. 42:46)
அஞ்சுவ தஞ்சல்: “துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவ தஞ்சி” (புறநா. 182:4)
அஞ்சுவ தஞ்சல்: “அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவதுலகுவப்பச் செய்து” (நாலடி. 74)

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.

பரிமேலழகர் உரை
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில். மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.

மு.வரதராசனார் உரை
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

Thirukkural - Management - Knowledge
It is unnatural to be natural in an unnatural situation. A normal human being gets agitated when circumstances become abnormal. Similarly, if a person is not afraid of things to be afraid, he is considered ignorant. We need to be cautious of things or events that bring negative consequences. Real knowledge is to be afraid of what is to be afraid. Knowledgeable people can differentiate between what is to be feared and what is not to be feared and act accordingly, assures Kural 428.

Not to fear what  should be feared is 
The wise know better.


English Meaning - As I taught a kid - Rajesh
If one is not scared (i.e. not having fear) about things that ought to be scared/feared (for e.g., not scared of not doing work, time, people, not scared of bad/evil things) then that will be considered as stupidity. Only brainless people will do like that. Knowledgeable people will know what to be afraid of and what not be afraid of. One needs to be cautious of things or events that bring negative consequences. 

We have learnt before that fear is not a good thing. However, here the context is fear about not doing. Because being idle, procrastinating is not healthy, productive and good. Hence, one has to fear such a condition. Also, one has to fear about sin, bad consequences etc. If one is not scared of negative consequences, then they will take things for granted and it can lead to catastrophes, destruction, failures, loss of life/money etc which cannot be reversed or will take lot of time, effort and money to rebuild. 

Questions that I ask to the kid
Can you be scared of something that should not be scared? Why?
Can you not be scared of something that should be scared? Why?
Is a knowledgeable person scared of anything? If so what? Why?

குடியாண்மை யுள்வந்த குற்றம்

குறள் 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
[பொருட்பால், அரசியல், மடியின்மை]

பொருள்
மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய், ஓர்விதவலை
மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை; 

குடி  - குடும்பம், குலம்; வீடு; ஊர்; வாழிடம், ஆட்சிக்குட்பட்டகுடிகள்

ஆண்மை - ஆளும்தன்மை; வெற்றி; வலிமை; அகங்காரம்; உடைமை; வாய்மை. 

வந்த - வருதல்

ஆண்மையுள் வந்த - ஆளும் பொழுது வந்த / அகங்காரத்தால் வந்த

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

குற்றம் - குற்றம் தனை

ஒருவன் - ஒருவன் 

மடியாண்மை - சோம்பலை / நோய்களை (நெருங்க விடாமல்) ஆள்வது

மாற்று - வேறுபடுத்துகை; ஒழிக்கை; கொடியமருந்து, நஞ்சுமுதலியகுற்றத்தைநீக்கக்கொடுக்கும்மருந்து; பண்டமாற்று; விலை; வண்ணான்வெளுத்தஉருப்படி; மாற்றிஉடுத்தும்சீலை; பொன்வெள்ளிகளின்உரைமாற்று; தங்கம்; எதிர்; உவமை; வலிமை; வண்ணம்.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

மாற்றக் கெடும் - (சோம்பல) நீக்கினால் / மாற்றினால் அழியும்

முழுப்பொருள்
ஒருவரது குடும்பத்திலும் (அரசருக்கு குலம், ஊர், ஆட்சி), அவரது ஆளும் திறமையிலும் கேடு வந்துவிட்டால் ? அத்தகைய கேட்டினை மாற்ற, நீக்க ஒரு வழிதான் உள்ளது.  அது அவனிலும், அவன் குடியுள் புகுந்த சோம்பலை நிக்குவதே ஆகும். 

இங்கு நாம் குறிப்பாக நோக்க வேண்டியது “யுள் வந்த’ என்று திருவள்ளுவரின் சொல்லாட்சி. ’உள்ளே வருவது குற்றம்’ ஆயின் அதற்கு சோம்பல் உள்ளே வந்ததாக பொருள்.

மேலும்: அஷோக்

ஆத்திச்சூடி
சோம்பித் திரியேல்
சையெனத் திரியேல்
கௌவை அகற்று
தோற்பன தொடரேல்

பரிமேலழகர் உரை
ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந்தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.

விளக்கம்
(மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏது வாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத் தொகை. 'அவற்றின் கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)

மணக்குடவர் உரை
குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் மடியாண்மை மாற்ற - ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கவே ; குடி ஆண்மையுள்வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும்.

இஃது ஓரரசன் குற்றமுந் திருத்தமும். மடியாண்மை மடியை ஆளுந்தன்மை. 'குடியாண்மை' உம்மைத்தொகை.இனி,

'குடி ஆண்மையுள் வந்த குற்றம் -நெடுங்கால மாகத்தொடர்ந்து வரும் ஒரு குடியுள்ளும் அதன் தலைவரின் ஆண்மையுள்ளும் நேர்ந்த குற்றங்களால் விளைந்த கேடுகள்; மடியாண்மை - அவற்றிற்குக் கரணியமாயிருந்த சோம்பல் தன்மையை ; ஒருவன் மாற்றக் கெடும் - ஊக்கமும் பெருமுயற்சியு முள்ள ஒரு தலைவன் நீக்கியவுடன் நீங்கும்'. என்றுமாம்.

இதற்குக் கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்க்கு அடங்கியிருந்த சோழர்குடியில் தோன்றிய விசயாலயன், கி.பி.850 போல் தஞ்சையைக் கைப்பற்றி மீண்டும் தன் குடியுயர்வை நிலைநிறுத்தியமை, நல்லெடுத்துக்காட்டாம். குடிமைக் குற்றம் ஒற்றுமையின்மையும் உட்பகையும் சேரபாண்டியரொடு சேராமையும் .ஆண்மைக் குற்றம் போர் முயற்சியின்மை. இஃது ஓரு குடியின் குற்றமுந் திருத்தமும்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

கெடாஅ வழிவந்த கேண்மையார்

குறள் 809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை 
விடாஅர் விழையும் உலகு.
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
கெடாஅ -

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

வந்த - வருதல் 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

கேண்மையார் - நண்பர்; உறவோர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

விடாஅர் - விடாமல்; நீங்காமல்

அர் - ar   part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி. அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி முன்னர் (குறள், 435).  

விழையும் - விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
உரிமை சிறிதும் குறையாமல் ,நட்பு கெடாமல் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழைய நட்பை என்றும் விடாமல் விரும்பி போற்றும் இந்த உலகம்.

உதாரணமாக, எத்தனையோ நட்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் தோன்றினாலும் பள்ளி பருவத்திலிருந்து வரும் உரிமையான நட்பு (உரிமையுடன் கோபம் கொள்வது உரிமையுடன் சண்டை இடுவது உட்பட) நமக்கு என்றும் தனி சிறப்பிற்கு உரியதாக இருக்கும்.

பரிமேலழகர் உரை
கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும். ('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.

மு.வரதராசனார் உரை
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை
உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

அஃகாமை செல்வத்திற்கு

குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்.
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
அஃகாமை - குறையாமை; சுருங்காமை 

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

செல்வத்திற்கு - செல்வம் இருப்பதற்கு

யாதெனின் - யாது + எனின் - என்ன செய்ய வேண்டும் என்றால்

வெஃகு - ஆசைப்படு

வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.

வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; 

வேண்டும்  - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

பிறன்கைப் - பிறர் பயன்படுத்தும் 

பொருள் - பொருள் / செல்வம் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
ஒருவரது செல்வம் குறைவதற்கு காரணம் என்னவென்று சற்று ஆராய சொல்கிறார் திருவள்ளுவர். காரணம் வெகு எளிதாக மூளையில் பட்டுவிடும். 

பிறர் (அக்கம் பக்கத்து விட்டினர், உறவினர், அலுவலக நண்பர்கள், தொலைக்காட்சியில் தோன்றும் பிரபலங்கள்) பயன்படுத்தும் பொருள்கள் மீது ஆசைப்படுவது. அதை அடைய வேண்டும் என்று அதை நோக்கி பயனிப்பது. தனது எல்லா ஆற்றல்களையும் அதில் மீது வீணாக செலவு செய்வது. 

ஆதலால் பிறர் பயன்படுத்தும் பொருள்கள் மீது ஆசைப்படாமல், அதை வாங்க வேண்டும் என்று முனையாமல் இருந்தால், நாம் கடினப்பட்டு ஈன்ற செல்வம் குறையாது, என்கிறார் திருவள்ளுவர். 

Peer Pressure ஐ பற்றி திருவள்ளுவர் அன்றே எழுதியுள்ளார் என்பது சிந்திக்க வைக்கிறது. 

அதுமட்டும் இன்றி இங்கு பொருள் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. ஆதலால் அடுத்தவரின் எழுத்துக்கள், கவிதை, அறிவு, ஆய்வு ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கினால், நம்முடைய ஆற்றல் குறையும். நாம் அதில் கவனம் செலுத்தி, நம்முடைய திறமைய வளத்துக்கொள்ளாமல் குன்றுவோம். 

மேலும்: அஷோக்

உதாரணம் 1
விஜய் தொலைக்காட்சியில் வரும் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ நிகழ்ச்சி. இதில் பங்கேற்பவர்கள் யாவரும் பிரபலங்கள். ஆதலால் அவர்களது கல்யாணங்கள் சற்று விமர்சியாக, பல அலங்காரங்களுடன் இருக்கும். ஆனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக, இன்று, பல கல்யாணங்களில் பலர் அந்நிகழ்ச்சியில் காண்பிக்க படும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அதற்கு அதிகமாக செலவு செய்கின்றனர். 

உதாரணம் 2
பிறரை பார்த்து ஸ்மார்ட்போன் வாங்கும் அவலம். ஒருவன் நோக்கியா(Nokia) போன் வைத்து இருப்பர். ஆனால் ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் கும்பல் 'Whatsapp'ல இல்லையா என்று உசுப்பேத்தும். இருவரும் தகவல் பகிர்ந்துக்கொள்ள பல (phone call, sms, mail, facebook, linked in) வசதிகள் உள்ளன. ஆனால் இப்பொழுது பயன்படுத்தும் நோக்கியா(Nokia) ஒழுங்கா வேலைசெய்யும் போதும், ஸ்மார்ட்போனில் காசை வீண்செய்வர். இது ஒரு உதாரணம் தான், இதுப் போல iPad, Tablet, WallMount TV, Resort Trips, Car, Dress, Silk Sarees, DSLR Camera, Highway Bikes (Ducati) என்று பல உள்ளன.

உதாரணம் 3
Last but not the least, அளவுக்கு அதிகமா ஆசை படுற ஆம்பளையும் அளவுக்கு அதிகமா கோவபட்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது.

சித்தப்பா, வாழ்க்கைல ஒன்னும் மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க - கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டக்படாம கிடைக்கிறது என்னிக்குமே கிடைக்காது.



உன் வீட்டில் செல்வ வளம் வற்றாமல் இருக்க வேண்டும் என்று நீ விரும்பினால் பிறன் கைப் பொருளை விரும்பாமல் இரு.

அடுத்தவர் பொருளை விரும்பாமல் இருப்பதே ஒருவன் தன் செல்வ வளம் வற்றாமல் காக்கும் வழி என்று வள்ளுவர் சொல்வது கவனிக்க வேண்டிய கருத்தாகும்.

பிறர் சொத்தை விரும்பும் நபர் யாராக இருப்பினும், சமூகம் அவனது உறவைத் துண்டித்துக் கொள்ளவே விரும்பும். அவனிடம் மிகவும் எச்சரிக்கையாகவே நடந்து கொள்ளும். இது இயற்கையான ஒன்று. ஆதலால், பிறர் பொருளை விரும்புகிறவனுக்கு அவ்வப்போது பொருளுதவி செய்கிற நபர்கள் மெல்ல மெல்ல இல்லாமல் போவார்கள்.

அதே போல், பிறர்பொருளை விரும்புகிற ஒருவன் பிறருக்கும் பொருள் கொடுக்கத் துணியமாட்டான். காரணம் தன்னைப் போல் பிறரையும் திருடனாக நினைப்பதே ஆகும். ஆகவே கொடுக்கல் வாங்கல் இரண்டும் குறைந்தவனின் வாழ்வில் பொருளாதாரம் என்பது நீரோட்டம் போல் இல்லாது சாக்கடையாகத் தேங்கி வற்றி விடும். இது நம் அறிவுக்குப் புலப்படும் ஒன்று.

ஆனால் நம் அறிவுக்கும் புலப்படாத நுண்மையான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதிலே ஒன்றுதான் பிரபஞ்ச சக்கரத்தின் இயங்குமுறை.

எந்தச் செயல் எந்த மாதிரியான எதிர் விளைவுகளைக் கொண்டுவரும் என்பது நமக்கு எளிதில் பிடிபடுவதில்லை.

பெரியவர்கள், “தர்மத்தை நீ காப்பாற்று. தர்மம் உன்னைக் காப்பாற்றும்.” என்று சொல்லியிருக்கிறார்கள். இதை வாழ்ந்து பார்த்தால் அனுபவத்தில் அக்கருத்தின் உண்மையை நாம் உணரமுடியும். அதை விடுத்து தர்மம் என்றால் என்ன? தர்மம் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்பதை முழுக்க முழுக்க தர்க்க ரீதியாக விளக்க முடியாது. ஆக பிறர் பொருள் விரும்பாமல் இருந்து பாருங்கள். உங்கள் செல்வம் குறையாமல் இருக்கும். 

நன்றி: MovingMoon
வாழ்வெலாம் சேர்த்த செல்வ
   வளமெலாம் குறையா தென்றும்
தாழ்வுறா திருக்கச் செய்யும்
   தலைமையாம் வழியே தென்றால்
சூழ்ந்துளார்க் கையீன் ஆக்கம்
   சுரண்டியே தனக்காய்ச் சேர்க்கும்
கீழ்நிலை எண்ணம் இன்றிக்
   கேடுறா திருத்தல் ஒன்றே

பரிமேலழகர் உரை
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்-சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறர் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம் 
விளக்கம்

('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செல்வத்திற்கு அஃகாமை யாது எனின் - ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு வழி எதுவெனின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறனுக்குத்தேவேயான அவனது கைப்பொருளைத்தான் விரும்பாமையாம்.

அஃகாமை இங்கு ஆகு பொருளது.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: செல்வம் அஃகாமைக்கு (வழி) யாது என்னின் - செல்வம் சுருங்காமைக்கு வழி யாது என்றால், பிறன் கை பொருள் வெஃகாமை வேண்டும் -பிறனது கைப் பொருளைக் கவர விரும்பாதிருத்தல் வேண்டும்.

அகலம்: செல்வத்திற்கு என்பதி லுள்ள நான்காம் வேற்றுமை யுருபைப் பிரித்து, அஃகாமை என்பதனுடன் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது. வழி என்பது அவாய் நிலையான் வந்தது.

கருத்து: பிறன் பொருளை வெஃகாதான் செல்வம் மேன்மேலும் வளரும்.

மணக்குடவர் உரை
செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

இல்லாளை அஞ்சுவான்

குறள் 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இல்லாள் - மனைவி; மருதமுல்லை நிலங்களின் தலைவியர்; வறுமையுடையவள்

இல்லாளை -  மனைவியை கண்டு / நினைத்து

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சுவான் - அஞ்சுபவர் / பயப்படுபவர்

அஞ்சுமற் றெஞ்ஞான்றும் - அஞ்சும் + அற்று + எஞ்ஞான்றும்

அஞ்சும் - அச்சம்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது - (அச்சம்) எப்படிக் கொள்வாயின்
ஞான்று - always

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

நல்லார்க்கு - நல்லவர்களுக்கு, நன்-மை, நற்குணமுடையோர். கற்றவர், பெரியார்,

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான

செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

நல்ல செயல். - நல்லது செய்யும் போது

முழுப்பொருள்
மனைவியை கண்டு (நினைத்தாலே) அஞ்சுபவர் எல்லாவற்றிற்கும் அஞ்சுவார். தான் இயன்ற பொருளாயினும் செல்வாமாயினும் எல்லா செயலையும் செய்ய அச்சம் கொள்வார்.

மனைவி திட்டுவாளோ என்று எண்ணி நல்லவர்களுக்கு உதவி செய்யக் கூட அஞ்சுவார். வீட்டிற்கு நண்பர்களோ, உறவினர்களோ, சான்றோர்களோ வந்தாள் விருந்தோம்பல் செய்ய சொல்லக்கூட அஞ்சுவார். வேளாண்மை (உபகாரம், ஈகை) செய்யக்கூட அஞ்சுவார். இது ஒரு நாள் இருநாள் அல்ல எல்லா நாட்களிலும்.

உதாரணம்: முதல் மரியாதை திரைப்படத்தில் வரும் கணவர் (சிவாஜி கணேசன்) மனைவி (வடிவுகரசி) கதாபாத்திரங்கள்.






பரிமேலழகர் உரை
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். வேளாண்மை தொழில் செய்ய அஞ்சுவார்,

விளக்கம் 
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.)

மணக்குடவர் உரை
மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்
இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான்.

நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார்.

"இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319).

"இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான்."

என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.

மு.வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.