Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்

குறள் 214
ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் 
செத்தாருள் வைக்கப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
ஒத்த தறிவோன் - ஒத்தது அறிவான் 
ஒத்தது - ஒப்பானது; தகுதியானது; உலகத்தார் அங்கீகரித்தது.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிவோன் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன்

உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்தல்  - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

உயிர்வாழ்தல் - உயிரோடுகூடியிருத்தல், சீவித்தல்
உயிர்வாழ்வான் - உயிர் வாழ்கின்றவர்களாக கருதப்படுவர்

மற்றையான் - மற்றவர்கள் எல்லோரும்

செத்தல் - சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்து சுருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது.-

செத்தாருள் - செத்த பிணம் என்று (அதவாது நடமாடினாலும் செத்த பிணமே) 

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வைக்கப் படும்- கருதப் படும்

மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன்

உரை 1
உயிர் வாழ்தலின் அர்த்தமே பிறருக்கு உதவுவதுதான். மற்றவர் இறந்தவர்கள்.  
(நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்) 
பொல பொலவென்று பொழுது புலருகின்ற நேரம் வள்ளுவப் பெருந்தகையைக் காணச்சென்றேன். வழக்கம் போல எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒன்றன் பின் ஒன்றாக எழுதுகின்றார் என்று மட்டும் தெரிந்தது. பெரியவர்கள் பக்கத்தில் போய் என்ன எழுதுகின்றார்கள் என்று பார்க்கின்ற தவறை எப்படிச் செய்ய இயலும். சிறிது கழித்து அவரே என்ன நலமாக இருக்கின்றாயா என்றார். நலம்தான் என்றேன். மிகுந்த அச்சத்தோடு என்ன எழுதிக் கொண்டிருந்தீர்கள் தந்தையே என்றேன்.

இந்த ஊர்ச் சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ள சவங்களை அகர வரிசையில் எழுதிக் கொண்டிருந்தேன். என்றார். எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. மெதுவாகக் கேட்டேன். அது மருத்துவமனை நண்பர்கள் வேலையல்லவா.அதனைத் தாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்றேன்.

அவர்களுக்கு இந்த வேலையினைச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. ஆகவேதான் நான் அந்த வேலையினைச் செய்யத் தலைப் பட்டேன். என்றார்.

பெரியவர்கள் எது செய்யினும் அது சரியாகத்தானே இருக்கும்.

அந்தப் பட்டியலைப் பார்க்கலாமா என்று கேட்டேன்.

எனது கையிலே தந்தார்

பார்த்தேன். பதறிப் போனேன்.

ஆமாம் ஊரில் உயிரோடு இருக்கின்ற மிகப் பெரிய பணம் படைத்தவர்கள் வணிகர்கள் நில உடைமையாளர்கள் என்று பல பேரை சவக்கிடங்கு பட்டியலில் வள்ளுவப் பெருந்தகை எழுதியுள்ளார்.

அச்சத்தோடு அவரைப் பார்த்தேன்.

என்ன என்றார்.

தந்தையே இவர்கள் எல்லோரும் உயிரோடு உள்ளனர். இவர்களைத் தாங்கள் சவக்கிடங்கில் அடுக்கியுள்ளீர்களே என்றேன்.

ஆமாம் தாங்கள் இறந்தது தெரியாமலே இவர்கள் உயிரோடு உள்ளனர்.

இவர்கள் சவங்கள் என்று தெரியாமல் இந்த மக்களும் இவர்களைப் பார்த்துப் பயந்தும் வணங்கியும் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் சவங்கள் என்பதனை மக்களுக்கு தெரிவித்து சவக்கிடங்கிற்கு அனுப்ப உடனடியாக வேண்டிய வழி வகைகளைச் செய் என்றார்.

பேரறிஞர் என்ன சொல்ல வருகின்றார் என்று எனக்குப்புரியவில்லை.

கைகட்டி வாய் பொத்தி நின்றேன்.

வள்ளுவர் சொன்னார். இந்த ஊரிலே ஏழைக் குழந்தைகள் கல்வி பயில நல்ல பள்ளி உள்ளதா. ஏழைகளுக்கென்று நல்ல மருத்துவமனை உள்ளதா. ஏழைகளின் பசி தீர்க்க வழி உள்ளதா. சமூகம் தந்துள்ள பொருளை இந்தச் சமூகத்திற்குத் தராத இந்தப் பணக்காரர்களும் வணிகர்களும் நில உடைமையாளர்களும் இன்னொரு உயிரின் துன்பம் துடைக்கும் உணர்வற்றவர்களாக இருந்தால் அவர்கள் செத்தவர்கள் தானே. பிறகேன் அவர்களை நாம் உயிரோடு உள்ள மனிதர்கள் வரிசையில் வைக்க வேண்டும்.
அடுத்தவர் துன்பம் தீர்க்க எண்ணாத அவர்களை அதனால்தான் சவக் கிடங்கிலே வைத்தேன். என்ன சொல் நான் செய்தது சரிதானே.

என்ன பதில் சொல்ல இயலும் தந்தையிடம். சரி சரி சரி என்றே சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

உரை 2: யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உலகில் உள்ள சடப்பொருட்கள், உயிர்ப்பொருட்கள் அனைத்தும் இறையாற்றல் என்னும் அற்புதப் பேராற்றலால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைநிலையில் அடங்கியுள்ள இருப்பு, விரைவு அறிவு எனும் முத்தன்மையும், எந்தத் தோற்றத்திலும் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision, Regularity) இவையாக அமைந்து இனிமையான முறையில் இயற்கையாக (with Natural Rhythm) இயங்கிக் கொண்டு இருப்பதை உணர்கிறோம். சடப்பொருட்களோடும் உயிர்ப் பொருட்களோடும் தினப்படி வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெற்றவன் மனிதன். சடப்பொருட்கள் தரத்திற்கேற்பவும், உயிர்ப்பொருட்களின் உணர்வுநிலை, மனநிலைகட்கேற்பவும், அவற்றோடு தொடர்பு கொள்ளக் கூடிய பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பழகிக் கொள்ளவேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எந்தப் பொருட்களின் தரம் குலையாமலும், உயிர்களுக்கு வருத்தம் நேராமலும் நுட்பத்தோடு, அவ்வவற்றோடு தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும். எந்தப் பொருளுக்கும் முறையான அணு அடுக்குகள் உள்ளன. அத்தகைய அணு அடுக்குகளான கட்டடங்களுள் காந்த ஆற்றலானது நிரம்பி ஒவ்வொரு வகையான அசைவிலும் அது தன் காந்த ஆற்றலை அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மனமாக மாறுவதுடன், உயிர் இனங்களிலே இவற்றிற்கு மேலாக இன்பம், துன்பம் என்ற உணர்வுகளைப் பெறுவதும் இயல்பு. இந்த நுட்பமான உண்மைகளை அறிந்து எந்தப் பொருளையும், உயிரினங்கள், மனிதர்கள் இவற்றையும் அந்தந்த நிலையிலும், இடங்களிலும் அவற்றின் நிலைமைக்குக் ஒத்து, உணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு கையாளவும், தொடர்பு கொள்ளவும் வேண்டும் என்பதே இக்குறளிலுள்ள உட்கருத்தாகும். மனிதனுக்கு வாழ்வில் இத்தகைய பண்பு இருக்க வேண்டும். உடலாகவும், உயிராகவும், மனமாகவும் இருக்கும் மனிதன், இத்தகைய பேரறப் பண்பாட்டோடு வாழ வேண்டும். அப்படி இல்லையானால் நடைப்பிணமாகத்தான் அவனைக் கருத நேரிடும். பிணம் என்றால் பயனற்றது என்ற ஒரு கருத்தோடு அது இருக்கும்போது மற்றவர்களுக்கு கெட்ட மணம் வீசுவதாலும், கிருமிகளை வெளியேற்றுவதாலும் சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பமே உண்டாகும். அதுபோல உயிரோடிருப்பவர்களும் பிறருக்கு உதவியின்றியும், துன்பம் விளைவித்துக் கொண்டேயும் இருந்ததால் நடைப்பிணம் என்று மதிக்கப்படுவர். ஒத்து உணர்ந்து வாழும் பண்பு இல்லாதவர்கள் நடைப்பிணமாக மதிக்கத் தக்கவர் என்று விளக்குகிறது இந்தக் குறள்.

உரை 3 : நன்றி (அம்மன் தரிசனம்)

இனி அடுத்த குறளில் அவர் சொல்லும் கருத்து மிகவும் சுவையானது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பிற உயிர்களின் இன்ப, துன்பங்களை அறிந்து கொள்வதும், அதற்கு துன்பம் நேராதபடி நடந்து கொள்வதுமே ஒத்தது அறிவதாம்.

ஒருநாள் வள்ளலாரின் சொற்பொழிவைக் கேட்பற்காக, ஓர் அன்பர், மாட்டு வண்டியை மிகவும் வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தாராம். அவருக்கு சொற்பொழிவை முழுவதும் கேட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம்.

இதை வள்ளலாரிடமே அவர் சொன்னபோது, ‘அட பாவமே! அடியேன் சொற்பொழிவிற்காக ஒரு வாயில்லா ஜீவனை ரொம்பவும் வதைத்து விட்டாயே! இத்தனை தூரம் ஓடி வந்தால் மாட்டுக்கு எப்படி மூச்சிறைக்கும்?’ என்று வருந்தி அந்த மாடுகளை அன்போடு வருடிக் கொடுத்தார். இதுதான் ஒத்தது அறிவது எனப்படுகிறது.

சக மனிதர்களின், பிற உயிர்களின் உணர்வு புரியாமல், நடந்து கொள்கிறவன், அதற்கு உபகாரமின்றி வாழ்பவன், செத்தாருள் வைத்து எண்ணத் தக்கவன் என்கிறார் அவர்.

குழந்தைத் திருடர்களை, கிட்னி திருடர்களை, ஆதாயம் கிடைக்கும் என்றால், உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய, போலி மருந்துகளை மக்கள் தலையில் கட்டும் கயவர்களை...

பலபேர் தற்கொலை செய்து கொள்வார்களே என்ற பாபத்தின் பயமில்லாத, பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடும் பைனான்சியர்களை...

எப்படி மனிதர்கள் என்று சொல்வது?

அவர்களுக்கு உணர்வு கிடையாது. பிறர் உணர்வும் புரியாது. அவர்கள் ஜடம்; ஆதலால் பிணம்.

எனக்குத் தெரிந்த தனவந்தர் ஒருவர் இறந்து போனார். அவர் வாழும் காலத்தில் எவருக்கும் சல்லிக்காசு கூட உதவியதில்லை. எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவர் என்பார்களே அந்த ஜாதி. அப்படிப் பட்டவர் இதய நோயால் இறந்து போனார்.

இதைக் கேள்விப்பட்ட போது, ஒருவர் சொன்னார், “அவருக்கு இதய நோய் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவருக்கு இதயமே இருக்க வாய்ப்பில்லையே!”

மற்றொரு நபர் அந்த கருமியின் சாவைப் பற்றி வேறுவிதமாகக் கேலி செய்தார். “அவர் இறந்து விட்டாரா? அவர் எப்போது உயிரோடு இருந்தார்?”

உயிர்க்குலத்தின் உணர்வுகளை ஒத்து உணராதவன், பிறர் துன்பம் தமக்கே வந்த துன்பம் போல் கருத முடியாதவன் எவனோ, அவனே ஒத்தது அறியாதவன். பிறர் துன்பம் தன் துன்பமாய்க் கருதி நீக்க முயலுபவன் ஒத்தது அறிகிறவன்.

இங்கே, வாழும் பலரில் ஏற்கெனவே இறந்து போனவர்கள் தாம் அதிகம்.

சிலபேர், நண்பர்களுக்கு உதவி செய்வார்கள். பண உதவி செய்தால் அதை வட்டியுடன் திரும்ப எதிர் பார்ப்பார்கள்.

ஐயாயிரம் நன்கொடை தந்தாலும், அதற்கு ஐம்பதாயிரத்துக்குரிய விளம்பரம் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக உபகாரம் செய்தவன், பிரதிபலன் இல்லாவிட்டால் அலுத்துக் கொள்கிறான்; அலட்டிக் கொள்கிறான்.

பிறரைத் தன்போல் மதித்து உபகாரம் செய்கிறவன்தான் உண்மையில் உபகாரம் செய்தவனாகிறான். அவனுக்கே அதற்குரிய பலனும் கிடைக்கிறது.

இனி மற்றொரு குறளைப் பார்ப்போம்.
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உலகத்தை நேசிக்கும் பேரறிவாளனின் செல்வம் ஊருணி நீர் நிறைந்தது போல் ஊருக்குப் பயன் தரும் என்கிறது குறள்.
உலகத்தை நேசிக்கும் பேரறிவு எல்லாருக்கும் வாய்க்காது. எவன் பேரறிவு உடையவனோ அவனே உலகத்தை நேசிக்கிறான்.

சிற்றறிவு தன்னையே நேசிக்கும். தன்னையே கொண்டாடும்.

பேரறிவு என்பது, ‘சர்வம் பிரம்ம மயம்’ என்று அறிந்து கொள்ளும் அறிவுதான். அவ்வறிவுதான் தன்னைப் போல் பிறரை நேசிக்க வைக்கும்.

அசடர்களை ஆசை ஆட்டிவைக்கிறது. அறிஞர்களை கருணை இயங்க வைக்கிறது.

அந்தக் கருணைதான் ஒப்புரவின் அடிப்படையாக இருக்கிறது.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்- அச் செயலைச் செய்யாதான் இறந்தவருள் (ஒருவனாகக்) கருதப்படுவான்.

அகலம்: நாட்டுக்கு ஒத்த செயல் - ஒப்புரவு

கருத்து: ஒப்புரவு செய்கின்றவன் உயிரோடு கூடி வாழ்கின்றவன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன்.

உரை 5 (நன்றி: அஷோக்)
வள்ளுவரின் வெறுப்பின் உச்சமாக இக்குறள் ஒலிக்கிறது. “செத்தான்” என்பது, மிகவும் மரியாதைக் குறைவான சொல், இறந்தவரைக் குறிக்க. ஒப்புரவு இல்லாரை, அவ்வாறு சொல்வதன் மூலம், பிறர்குதவி செய்யும் குணமில்லாரை அவர் எவ்வாறு நினைக்கிறார் என்பதைத் தெளிவாக காட்டிவிடுகிறார்.

உலகநடைக்கு பிறருக்கு உதவி செய்து வாழும் பெருங்குணமே ஏற்றது, அவ்வாறு வாழ்கின்றவரே உயிரோடு வாழ்கின்றவர், மற்றவரெல்லாம், உயிரிருந்தும் பிணம் போன்றவரே. ஏனெனில் பிணத்துக்குத்தான் தன்முன்னர் தோன்றும் இல்லார்க்கு, அவர் முகமறிந்து உதவுதல் என்பது இயலாது. இதயத்தில் துடிப்பும், ஈரமும் உள்ளோர்க்கு அவ்வாறு பாராமுகமாய் இருத்தல் இயலாது.

மேலும்: இனிதல் (நன்று)
மேலும்: அஷோக் (முழு உரை)
மேலும்: பாட்டி சொல்லும் கதைகள்
மேலும்: சத்யானந்தன்

குறட் கருத்து   (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
வள்ளுவரைத் தவமிருந்தே பெற்றாள் நல்ல
வடிவழகில் சிறந்தோங்கும் தமிழாம் தாயாள்
அள்ளி அவர் தருகின்ற செல்வம் எல்லாம்
அப்படியே கைக் கொண்டால் வெற்றி கொள்வீர்
எள்ளி நகையாடுதற்கு இடமேயின்றி
எங்கேயும் நீரே தான் தலைமை ஏற்பீர்
உள்ளி அவர் வழி ஒன்றே உண்மை என்று
உணர்ந்தால் நீர் உலகத்தின் உயரே நிற்பீர்

பிறப்போடு இறப்பதனைக் கணக்கெடுக்கும்
பேரேடு அரசாங்கக் கையில் உண்டு
பொறுப்பாக அவர் எடுக்கும் கணக்கை நம்பி
பூமியிலே வாழ்கின்றார் மனிதரெல்லாம்
சிறப்பாக இதை விட்டு வள்ளுவனார்
செய்கின்றார் இப் பணியைத் தனி ஆளாக
கடுப்பாகிப் போயிடுவார் சிலரும் கண்டால்
கலகலத்துச் சிரிப்பீர்கள் நீங்கள் கண்டால்

உயிரோடு ஊரினிலே உயர்ந்தவராய்
உலவுகின்ற பல பேரை வள்ளுவரும்
அயராமல் சவக் கிடங்கில் வைக்கச் சொல்லி
அரசுக்கு ஆணையொன்றை அருளிச் செய்தார்
பயிருக்குள் களை போல வாழுகின்ற
பணம் படைத்தோர் மற்றவர்க்கு உதவி வாழார்
உயிரோடு இருந்தாலும் செத்தார் என்றே
உரைக்கின்றார் உறைக்கட்டும் உலகுக்கென்றே

படிப்பதற்கு உதவியின்றி தவிக்கும் ஏழ
பக்க த்திலே இருந்தும் உதவ எண்ணார்
அடி வயிற்றுப் பசியதனால் கலையிருந்தும்
அறிவிருந்தும் அழிவாரைக் காக்க எண்ணார்
கடி மணத்தைக் காணவொண்ணா ஏழ்மையிலே
கதறி நிற்கும் கன்னியர்க்கு உதவி செய்யார்
பெரியவராய்ப் பணம் கொண்டு வாழ்ந்தாரேனும்
பிணம் என்று கிடங்கினிலே வைக்கச் சொன்னார்

நன்றி (MovingMoon)
ஒப்புர வொழுகும் எண்ணம்
.. உடையவன் அதனைப் போற்றும்
அப்பெரும் பண்பினாலே
.. அனைவரின் துன்பம் நீங்க
தப்பிலா துதவி வாழும்
.. தரத்தினால் உயர்ந்தோன் ஆவான்;
அப்படி உதவா தானை
.. அழிந்ததாய் உலகம் எண்ணும் (4)

பரிமேலழகர் உரை
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான்-உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்-அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும். 
விளக்கம்
(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேதநடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும் செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.

 உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங்
 கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.

மணக்குடவர் உரை
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
A person is considered alive only when he is sensitive to the needs of all creations and serves them to satisfy their needs. That is why the philosophy' service before self’s is a reflection of Kural 214.

He only lives who is kin to all creation
Deem the rest dead.

If a person fails to be sensitive to the needs of other beings or lacks perceptiveness, he cannot serve them to fulfil their needs. If a person does not serve others' needs, he is considered dead. So, there is a social obligation to serve others. What is applicable to an individual is applicable to an organization as well. Let your organization serve the society to be served well in turn.

செல்லாமை உண்டேல் எனக்குரை

குறள் 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
வல்வரவு வாழ்வார்க் குரை.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லாமை - பிரிந்துபோகாமை; வறுமை; வலியின்மை; செய்யவேண்டியவை; ஆற்றாமை.

உண்டேல்உள்ளது என்றால்
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு
- To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும்

எனக்கு - என்னிடம்
உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை
உரை - (வி)தேய்; ஒலி சொல் பேசு

உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

எனக்கு உரை - என்னிடம் சொல்.
- தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின்

மற்று - இல்லையென்றால்
part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.

நின் - நீங்கள் 

வல்வரவு - (பிரிந்து சென்று) விரைந்து வருவீர்கள் என்று சொல்வது என்றால்
வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு, சீக்கிரம்
வல்வரவு - வருகை

வாழ்வார்க்கு - அப்பொழுது இங்கு உயிர் வாழ்வார்களே
உரை - (அவர்களிடம்) சொல்

முழுப்பொருள்
தலைவன் வெளியூர் / வெளிநாடு வேலை நிமித்தமாக செல்கிறான். இதனை தோழி மூலமாக அறிந்துக்கொள்கிறாள் தலைவி.

தலைவன் தன்னிடம் பிரிந்து செல்ல போகிறேன் என்று அவன் வாய்த்திறக்கும் முன், தலைவி சொல்கிறாள்
நான் உன்னை பிரிந்து செல்லமாட்டேன் என்று சொல்வாதாக இருந்தால் என்னிடம் சொல். அப்படி இல்லை என்றால், வேலையை துரிதமாக முடித்து விரைந்து வந்துவிடுவேன் என்று நீ (சமாளிப்புகளை) சொல்லவாய் என்றால், நீ வந்து சேர்வாய் அல்லவா, அப்பொழுது உயிரோடு இருக்கக்கூடியவர்களிடம் சென்று சொல், என்னிடம் சொல்லாதே ஏனெனில் அது அவர்களுக்கு நல்வரவு எனக்கு வல்வரவு.

1) பிரிவு என்ற ஒன்றை தாங்க முடியாத அளவிற்கு தலைவி தலைவன் மீது பேரன்பு கொண்டு உள்ளாள் என்பதை காட்டுகிறது இக்குறள்.

2) இவன் பிரிவை மற்றவர் தாங்கிக் கொள்வர் அதாவாது தந்தை, தாய், தம்பி, தங்கை, அண்ணன், அக்கா; ஆனால் இவன் பிரிவை தலைவி தாங்க மாட்டாள் என்று கூறி தலைவியின் அன்பு  முற்றிலும் வேறு என்று உணர்த்துகிறது.

3) தலைவன் தனக்கானவன் என்று நினைக்கிறாள் தலைவி. அவன் தன்னைவிட்டுப் பிரியக்கூடாது என்று நினைக்கிறாள். ஆதலால் அதுமட்டுமே அவளுக்கு வேண்டும். வேறு ஏதும் அவளுக்கு வேண்டா. ஆதனால் தான் ”மற்றுநின்” என்று கூறுகிறாள் தலைவி. அதவாது வேறு எதுவாக இருந்தாலும் மற்றவர்களிடம் (பெற்றோர், சகோதர சகோதரிகள்) கூறு

4) சில பல கணவன் மார்கள், நமது வீட்டிற்க்காக, நமது நலனிற்காக, நமது குழந்தையின் நலனிற்காக, பொருள் ஈட்டத்தான் செல்கிறேன், ஒரே வாரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்வார்கள். அது மட்டும் இன்றி, இந்த அலுவலுகத்தில் நான் தான் செல்ல வேண்டும், வேறு ஆள் கிடையாது, கண்டிப்பாய் செல்லவேண்டும் என்றும் சொல்ல முனைப்பார்கள். இது ராஜாங்க செயல், கட்டளை என்ற அளவிற்கு கட்டுமானம் செய்வார்கள். உனக்கு மட்டுமா பிரிவின் துயர், எனக்கும் தான் பிரிவின் துயர் உள்ளது என்று உன்னை நான் பிம்பம் போல் பிரதிபளிப்பதாக சமாளிப்பார்கள். (ஏன் இது சமாளிப்பு என்றால் தலைவியை விட வேலை பெரிதாய் போய்யிற்று தலைவனுக்கு). அத்தகைய பொய்ப் பேச்சுகள், சமாளிப்புகள்  ஆகியவற்றை தலைவி நன்கு அறிவாள் (ஏன் என்றால், அவன் தலைவன் ஆயிற்றே). ஆதலால் தான் அவன் சமாளிப்புகளும், காரணங்களும் அடுக்கும் முன் ”செல்லாமை உண்டேல் எனக்குரை” என்று அவன் வாயை மூடிகிறாள்.

5) தோ, இங்க தான் இருக்கு ஜெர்மனி. உலக வரைப்படத்தில் கை வைத்து , தோ பார் பக்கத்துல தான் இருக்கு என்று கூறுவார்கள். போய்ட்டு ஒரே ஒரு Conference, ஒரே ஒரு porting தான், முடிச்சிட்டு அடுத்த வாரம் சீக்கிரம் வந்துறேன் அமூதே என்று தலைவன் மார்கள் சொல்வார்கள். இத்தகைய ஏமாற்று வித்தைகளை தலைவி நன்கு அறிவாள். ஆதலால் தான் வல்வரவு என்று ஒருவார்த்தையை தேர்ந்து பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர்.
(உதாரணம்: ரோஜா திரைப்படத்தில் ரிஷி (அரவிந்து சாமி), ஒரு வாரத்தில் ராஜாங்க காரியம், டீகோடு (DECODE) பண்ணிட்டு வந்துருவேனு சொல்வார் (திரைப்படத்தில் அப்படி வராது. படத்தில் இப்படி வரும்: என்ன அம்மா நீயும் அவக்கூட சேந்துட்டு-னு சொல்லுவார்). ரோஜா(மதுபாலா), இத்தகைய சமாளிப்புகளை எதிர்பார்த்துத்தான் (நான் யென் பொட்டிப் படுக்கைலான் கூட கட்டி வெச்சுட்டேன்.) மூட்டை முடிச்சுகளுடன் ஆயுத்தமாக இருப்பார்.

ரோஜா திரைப்படத்தில் வரும் அக்காட்சியின் காணொளியை காண இங்கே சொடுக்குக :) -> https://www.youtube.com/watch?v=AaEQtqMHCIE&t=334s

6) எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் வல்வரவு என்பது நல்வரவு என்ற சொல்லின் எதிர்பதமாக பார்க்கிறார். அதாவது தலைவன் திரும்பி வந்தால் அது அவளுக்கு நல்வரவு இல்லையாம். ஏனெனில் அத்தனை நாட்கள் அவள் பல மன உளைச்சலுக்கு (emotional crisis) ஆளாகிறாள். நாஞ்சில் நாடன் கூறுவதும் பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் வல்லடி ( Violence), வன்கண் (an evil or envious eye), வன்னெஞ்சு (a cruel heart) ஆகிய சொற்களும் எதிர்மறையாகவே உள்ளன.

எதுவாயினும் (5 அல்லது 6) தலைவின் விரைந்து வந்தாலும் சரி சில காலம் பிறகு வந்தாலும் சரி, தலைவனின் பிரிவு தலைவிக்கு மன உளைச்சலை தருகிறது. ஆதலால் பிரியமாட்டேன் என்றால் என்னிடம் சொல்லு இல்லை என்றால் அதனை மற்றவர்களிடம் சொல் என்று கூறுகிறாள் தலைவி.

7) வாழ்வார்க்கு உரை என்று கூறுகிறாள் தலைவி. அதாவது வரும் பொழுது வாழ்ந்துக்கொண்டு இருப்பவரிடம் கூறு. அதாவது பெற்றோர்கள், உடன்பிறந்தோர்கள். அப்படி என்றால் தலைவி உயிர் வாழ மாட்டாளா? 
தலைவனைப் பிரிந்த மறு கணமே என்ன செய்வது என்று அறியாமல் நான் இறந்துவிடுவேன் என்று சொல்லி ‘ஒரு நிமிட பிரிவே உயிர் கொல்லும்’ என்று தலைவி கூறுகிறாள். அதனால் தான் பிரிந்தும் உயிர் வாழ வல்லார்க்கும் என்பது இங்கு உணர்ச்சியாய் காணவேண்டும்.

குருவிகளும் குரங்குகளும் இணையோடு இருக்கும். விலங்காய்ப் பிறந்த மாந்தருக்கும் அது பொருந்தும். அதுவே  இயற்கையின் பெரு விதி.

கணவனுடைய பெற்றோர்கள் உடன்பிறந்தவர்கள் இவர்களையே “வாழ்வார்கள்” என்று சொல்கிறாள் தலைவி. தலைவன்/கணவன் ஊருக்கு அனுப்பு பொருளை/பணத்தை அவர்கள் துய்த்து இன்பம் பெற்று வாழ்கிறார்கள். ஆதனால் வீட்டில் உண்ண உடுக்க எந்தக் குறையும் இல்லை. 

ஆனால், தலைவி வாழவில்லை என்கிறாள். பெற்றோர்கள் பொருளை துய்த்து அனுபவிக்கலாம். ஆனால் அவள் மட்டுமே துய்த்து இன்பம் பெற முடிகிற ஒன்று அவள் இணையிடம் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. அது செய்பொருளன்று. இயற்கையின் விதி. அதை அவளால் எப்படி மாற்ற முடியும்.
 
இது போதாதென்று அவன் பேசிச் சென்ற சொற்கள், அவன் மெய்த்தீண்டல், அவன் கைப்பிடிக்குள் அடங்கிய கொல்லேறு (காளை) (ஏறுதழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் திருமணம்) என; பார்க்கும், எண்ணும் பொருளனைத்தும் உள்ளத்தை நலிவடையச் செய்யும். அதனால்தான் அவள் வாழவிலை என்கிறாள். காமத்தை எத்தனை ஒப்புரவாக வள்ளுவர் சொல்கிறார் என்பதை காணலாம். 

காமம் அத்தனை கொடியதா என்ன?
என்று நமக்குள் கேள்வி வரலாம். ஆனால் இயற்கை பெரியது. அந்த இயற்கையைப் பொருள் தேடலின் பொருட்டு மறுதலிப்பதை வள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண்கள் கூடச் சொல்லத் தயங்குவதை, உள்ளத்தில் வைத்துக் கொண்டு உளுத்துப் போவதை ஒரு பெண்ணின் வாய்மொழியாய் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்திருக்கிறார் திருவள்ளுவர். 

பிரிந்துசென்ற கணவனோடு பேச்சுத் தொடர்பு இல்லாத காலம் அது. அவனது சொற்களும் நினைவுகளும் மட்டுமே இருந்த நிலையில், உள்ள வேட்கை நாள்படக் குறைந்துவிடக் கூடும். உடல் வேட்கையை வெற்றிக்கொள்ள அது உதவவும் கூடும். 

இன்றோ, தொடுதிரைக் கணினிகள் (laptops), கையடக்கத் திறன் பேசிகள்(mobile), நேருக்கு நேர் காணொளி உரையாடல்கள் (video calls), வரவேற்பறையில் நாளெல்லாம் ஒளிரும் தொலைக்காட்சி, இணையம் என்று உள்ள வேட்கையை மறக்கடிக்க முடியாத சூழல். தொடுதிரையில் துணையின் கண்ணீரைக் காணலாம். துடைத்துவிட முடியாது. உலகத்தை முழுவதும் இணைக்கிற இணையத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. கைப்பேசியைத் தொட்டுப் பேசலாம். கையைத் தொட்டுப் பேசமுடியாது. வள்ளுவர்காலத்தைய பெண்களைவிட இக்காலப் பெண்களுக்கு இந்த இன்னல்கள் ஏராளம்.

பொருள் கட்டாயம் தான். ஆனால் வாழ்க்கை அதைவிடக் கட்டாயமானது. பொருள் தேடச் சொல்லும்போது துணையோடு செல்வதற்கான ஏற்பாடுகள் இருந்தால் வாழ்வு சிறக்கும். 

பெண்களை, அவர்களின் உள்ளத்தை, உணர்வை மதிப்போம்.

ஒப்புமை
”வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல் நற் கறிந்தனை சென்மே” (நற்  19:8-9)

“வாழா ளாதல் சூழா தோயே”  (நற்  183:11)

“வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (குறுந்தோகை 32:6)

“..........................................................செல்வீர்
வருவீ ராகுதல் உரையின் ....................
................................ இருக்கிற் போர்க்கே” (அகநா 387: 2-20)

குறட் கருத்து காமத்துப் பால் (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலன் தான் என்ன செய்ய பொருளை ஈட்டக்
கடல் கடந்து செல்லுதற்கு ஆசை கொண்டான்
பேதையிடம் சொல்லுதற்கு சென்று நின்றான்
பேச எங்கு விட்டாள் அந்தப் பெண்ணின் நல்லாள்
ஓசைக் கடல் தாண்டி நீயும் செல்லும் போதே
உயிர் இழந்து எந்தன் உடல் வீழ்ந்து போகும்
ஆசை அது அவ்வளவு நெஞ்சுக்குள்ளே
அறிந்தால் நீ பிரிவாயா அன்பு அத்தான்

நாசம் அற்று நீ வாழ வாழ்த்துகின்றேன்
நாள் தோறும் உன்னை நினைத்தே போற்றுகின்றேன்
வாச மலர் எனை விட்டுப் பிரிவதென்றால்
வாய் திறக்க வேண்டாம் நீ சென்று விடு
ஆசையுடன் உனை அனுப்பி செல்வம் சேர்த்து
அங்கிருந்து வரும் வரையில் காத்திருக்கும்
நேசமுள்ள கல் மனத்துப் பெண்ணிருந்தால்
நீங்குவதை அவரிடத்தில் சொல்லிச் செல்லு

மேலும்: M.A.சுசிலா (Recommended)
மேலும்: தமிழ் தூது
மேலும்: (முகபுத்தகம் `நேர்மரை` தளத்தில் இருந்து)

பரிமேலழகர் உரை
'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். 

விளக்கம் 
(தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பிரிந்து கடிதில் வருவேனென்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது.)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை-தலைவ! நீ எம்மைவிட்டுப் பிரியாமை யுண்டாயின் அதை மட்டும் சொல்; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - இனி, நீ பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வாயாயின், அதை நீ வரும்வரை ஆற்றியிருந்து உயிர்வாழ்வார்க்குச் சொல்.

தலைமகள் நீ திரும்பி வரும்வரை ஆற்றியிருப்பவளல்லள், நீ பிரிந்த பொழுதே இறந்துவிடுவாள் என்பதாம். இதனாற் செலவழுங்குவித்தல் பயன். அஃதாவது தலைமகளை யாற்றுவித்து ஓரிரு நாள் கழித்துப் பிரியச்செய்தல். தலைமகளொடு தனக்குத் தான் அவள் என்னும் வேற்றுமையின்மையால் 'எனக்கு' என்றாள். இது இல்லறத்தில் முதன் முதல் நிகழ்ந்த பிரிவாதலால், தலைமகளின் மென்மை நோக்கி நேர்முகமாய்க் கூறானாயினன். இது தலைமகள் தோழிக்குக் கூறிய கூற்றாக வுரைப்பர் மணக்குடவ காலிங்க பரிதி பரிப் பெருமாளர். இது முன்ன விலக்கு.

மணக்குடவர் உரை
காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

சாலமன் பாப்பையா உரை
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

வல்வரவுல வல்னா விரைவுனு போட்டுக்கலாம். திருக்குறள் ஏழு சீர்ல – படிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் அதுக்குள்ள அவன் போற height.

கண்ணன்: நீங்க வல்வரவு பற்றி எழுதியிருந்ததை திருக்குறள் பற்றி நடந்த நீயா நானாவில நான் கோட் செய்தேன்.

நாஞ்சில் நாடன்: வல்வரவுங்கிறத நல்வரவுக்கு எதிர்ப்பதமா நான் பயன்படுத்தறேன். எல்லா உரையாசிரியனும் வல்வரவுன்னா கடிது வருதல், விரைந்து வருதல்னுதான் சொல்றான். நான் இப்படிப் பார்க்கிறேன். நீ ஆறு மாசங்கழிச்சு வரக்கூடியது வல்வரவுதான், நல்வரவு இல்ல. ஒரு பொண்ணு என்ன திராணியாப் பேசறா. ஆனா பொருள்வயிற் பிரிதல்ங்கிறது இன்னிக்கும் நடக்கத்தானே செய்யுது. துபாய்க்குப் போனா ரெண்டு வருஷத்துக்கு ஒருக்காத்தான் வீட்டுக்கு வருவான். பெரிய பொசிசன்ல இருக்கிறவன்தான் ஆறு மாசத்துக்கு ஒருதரம் வருவான். அமெரிக்கால இருக்கவன் மட்டும் என்ன வாழுதாம் – ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான் வர்றான்.

நானே ஒரு கதை எழுதியிருப்பேன் (பேச்சியம்மை). ஏழு வருஷம் ஆச்சு, மகன் ஊருக்கு வந்து. அவன் பார்த்த பொண்ணுகெல்லாம் கல்யாணம் ஆகிப் பேரம்பேத்தி எடுத்தாச்சு. பேங்க்குக்கு பணம் ட்ரான்ஸ்பர் ஆயிடும். ஒரு நாள் இந்தக் கிழவி போய் பாங்க்ல சொல்லுவா, பணம் இனிமே வந்ததுன்னா திருப்பி அனுப்பிச்சிடுங்க. பாங்க் மேனேஜர், ‘அதெப்படிம்மா அனுப்பமுடியும்.’ ‘அப்ப, நாளைக்கு உம்ம நடைல ஒரு பிணம் கிடக்கும்.’ எப்படி வேணாலும் டீல் பண்ணுக்கங்கன்னு சவால் விடறா. மேனேஜர் அரண்டு போயிடறார். வாசல்ல காலைல பாங்க்க திறக்க வர்றபோது பிணம் கிடந்தா, இந்தியாவுல ஒரு நிகழ்ச்சியே அப்படி நடந்ததுகிடையாது. ‘சரிம்மா, நான் எழுதிடறேன்.’ அவளுக்குண்டான ஒரு கோபம் இருக்கு. அவ கோயில்ல விளக்கு வெளக்கி வைக்கிறா. தண்ணி எடுத்துக்கொடுக்கறா. பூப்பறிச்சுத் தர்றா.  பூசை செய்யக்கூடிவர் கேட்கிறாரு, ‘நீ செத்துப்போனா யாரு கொள்ளி வைப்பா?’ ‘பெருமாள் வைப்பாருய்யா. ஏன் நீர் போட மாட்டீரா.’  அப்ப அவளுடைய கோபம் என்ன…ஏழு வருஷம் ஆச்சு, பெத்து வளர்த்து, பால் குடுத்து, படிக்க வைச்சு, நகையை அடகு வைச்சு…இவனுக்கு ஏழு வருஷம் பெத்த அம்மையை வந்து பார்க்கணும்னு தோணலையே.  இவன் பணம் எனக்கு எதுக்கு? இது மரபுசார்ந்த ஒரு தாய்க்கு வரக்கூடிய கோபம். இந்த மாதிரி ஒரு ஸ்டோரிய நான் எழுதற போது, அனாவசியமா பரிமேலழகர கோட் பண்ண மாட்டேன். ஏன்னா எனக்குத் தெரியும், இந்த இடத்துல நான் ஒருவதிமான emotional crisisகுள்ள கொண்டுபோகப் போறேன். வாசகனை டைவர்ட் பண்ணக் கூடாது. அவனுடைய wholehearted attendance, நூறு சதம் concentration எனக்கு வேணுங்கிறபோது, நான் ஒழுங்கு மரியாதையாக் கதை சொல்லிட்டுப் போயிடுவேன். சில சமயம் ஆடிப் பார்க்கலாம்னு தோணும். ஆடியன்சைப் பொறுத்த விஷயம்தானே. நாட்டைக் குறிஞ்சி ஒரு செலக்டட் ஆடியன்ஸ்க்கு, ராம்நகர்ல, கோதண்ட ராமன் கோயில்ல, மூணேகால் மணிநேரம் பாடறார் சேஷகோபாலன். அதை கண்டிப்பா ஒரு சபாவுலையோ, ஒரு கல்யாணத்திலையோ அவர் செய்யமுடியாது.

வல்வரவு எனும் சொல்லை யோசிக்கும் பொழுதில் நல்வரம் என்னும் சொல் கண்முன் காலாட்டுகிறது. ஆனால் வல்வரவு எனும் சொல்லைக் கையாளவில்லை சங்க இலக்கியங்கள் அல்லது சொல்லடைவு திரட்டியவர் தவற விட்டிருக்கலாம். தீர்ப்புச் சொல்ல நாம் யார்? சென்னைப் பல்கலைக்கழகத்து லெக்சிக்கன், வன் வருத்தம், வல் வழக்கு, வல் வாயன், வல்விடம், வல் விரைதல், வல் வில், வல் வில்லி, வன் விலங்கு, வல் வினை முதலான சொற்களைப் பட்டியலிடுகிறது. ஆனால் அவற்றுள் வல்வரவு இல்லை.

ஆனால் திருவள்ளுவர் வல்வரவு எனும் சொல்லக் கையாள்கிறார். காமத்துப்பாலில் 250 குறள்கள், அவற்றுள் ஒன்று பிரிவாற்றமை எனும் கற்பியலின் முதல் அதிகாரத்து முதற்குறள். எண் 1151, “செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை”. பிரிந்து போய், விரைந்து திரும்புவேன் என்றுரைக்கும் தலிமகனுக்கு தோழி மறுமொழி உரைப்பதான situation தான் one line. “நீ எம்மைப் பிரியாமை உண்டு ஆயின் அதனை எனக்குச் சொல். அஃது ஒழியப் பிரிந்து போய் விரைந்து வருதல் சொல்வாயாயின் அதனை அப்பொழுது உயிர் வாழ்வார்க்குச் சொல்” என்று உரை எழுதுகிறார் பரிமேலழவர்.

எதற்காக செல்லாமல் உண்டேல் எனக்கு உரை என்று திண்மையாகக் கூறுகிறார் தோழி? அதைத் தலைவி அல்லவா சொல்ல வேண்டும் எனக்கேட்பீர்களேயாயின், உரையாசிரியர் சொல்கிறார், “நான், அவன் என்று வேற்ற்றுமை இன்மை ஆயின்” என்று. இதே கூற்றைத் தோழி இல்லாமல் தலைவி கூற்றாகக் கொள்வாரும் உண்டு. 

பரிதியார் தன் உரையில் எளிமையாகப் பொருள் சொல்கிறார். ”நாயகரே! நம்மை விட்டுப்பிரியாமல் இருப்பீராகில் எனக்குச் சொல்லும். அல்லதை, உம்மை விட்டும் பிரிந்தும் உயிர்வாழ் வல்லார்க்கும் சொல்லும் என்று”. பிரிந்தும் உயிர் வாழ வல்லார்க்கும் என்பது தான் உணர்ச்சி.

பொருள் தேடி - காதலியரை, மனைவியரைப் பிரிந்து போதல் இன்றும் நடைமுறைகள். ஆண்டுக்கு ஒருமுறையே விடுப்பில் வரும் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு எல்லைக்காவல் படையினர் இன்றும் உண்டு. இதைத் தான் “பொருள் வயிற் பிரிதல்” என்கிறார்கள் இன்றைய தலைவியற்கு வேறும் போம் வழி இல்லை. குடும்பம் போற்றி ஒழுக்கமும் காத்தல் வேண்டும். திருவள்ளுவர் பேசும் குறளின் கூற்றைச் தலைவியோ தோழியோ மொழிவதை - எம் மொழியில் சொல்வதனால் “வே! நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதனை எனக்கு இப்பம் சொல்லும், ஆனா பிரிஞ்சு போயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேரு வருவேருண்ணு எவளும் காத்துக் கெடப்பா பாரும், அவளுக்குச் சொல்லும், கேட்டேரா?”

இவ்வளவு தான் சங்கதி. இங்கே வல்வரவு எனும் சொல்லுக்கு பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய நான்கு பழம்பெரும் உரையாசியர்களும் கடிது வருதல், வேகமாய்த் திரும்பி வருதல் என்றே பொருள் கொள்கிறார்கள். மிகவும் பொருத்தமான பொருள்.

பிரிந்து போய்த்தான் தீருவேன், எனில், அது குறுகிய காலமோ, நெடிய காலமோ, உனது திரும்பி வருதல், என்னைப் பொருத்தவரை, நல்வரவு அல்ல வல்வரவு. அஃதெனக்குத் துனபமான, வன்மையான வரவு, ஏனெனில் நீ திரும்பி வரும்போது நானிருக்க மாட்டேன். எனவே அதை, அப்போது உன் வரவு பார்த்து காத்து வாழ்ந்து கொண்டிருக்க முடிபவருக்கு சொல், அவர்களுக்கு அது நல்வரவாக இருக்கக்கூடும். ஆனால் எனக்கு அது வல்வரவே.

சாமர்த்தியமாகப் பொருள் கொள்கிறேன் என்று அருள்கூர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தனைக்கு நான் பண்டிதன் இல்லை. யோசித்துப்பார்க்கிறேன் அவ்வளவே! அதில் தவறொன்றும் இல்லை. இது புலவர் குழந்தை “கீமாயணம்” எழுத்வது ஆகிவிடாது. எவ்வாறாயினும், காதற் பெண்டு ஒருத்தி, தனது பிரிவு ஆற்றாமையை இத்தனை கூர்மையாக, வன்மையாக, தைக்கும்படி, ஐயத்துக்கு இடமே இன்றி மொழித்து அபூர்வமான அனுபவாகப் பட்டது. இந்த குறளில் நான் காமுற்று நிற்பது “வல்வரவு” எனும் சொல்லில். 

இக்குறள் கற்புள்ள ஒரு பெண் தன் காதலனிடம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டும் குறள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தால் உயிர் வாழ முடியாது என்ற முதிர்ந்த அன்புள்ளவர்கள்தாம் சிறந்த காதலர்கள்; இல்லறத்திலே இன்பம் நுகர்வார்கள்; இல்லறத்தையும் நல்லறமாக இனிது நடத்துவார்கள். இக்கருத்தைக் கொண்டதே மேலே காட்டிய குறள்.

மேலே காட்டிய அறங்கள் அனைத்தும் உலகத்தார் ஒப்புக் கொள்ளும் பொது நீதிகள் எந்நாட்டினரும், எம்மதத்தினரும், எவ்வினத்தினரும், எம்மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே இவ்வறங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய பொது நீதிகள் நிரம்பியிருப்பதனால்தான் திருக்குறள் உலகப் பொது நூல் என்று பாராட்டப்படுகின்றது; திருவள்ளுவர் உலகப் புலவர் என்று போற்றப்படுகிறார்.


நன்றி: ரிஷ்வன்
காதலனே கேள்..!
பிரியவில்லை என்பதை
நெருங்கி வந்து என்னுடன் சொல்
துரிதம் திரும்புகிறேன் என்பதை
அதுவரை உயிரோரு 
இருப்பவர் எவரோ
அவரிடம் விடைபெற்று செல்.

நன்றி: The Red Litmus
நேரடி அர்த்தம் இது தான். நீ போகமாட்டேன் என்று முடிவெடுத்தால் என்னிடம் வந்து சொல்; இல்லை, நீ திரும்பி வரும் போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டு போ. இது ‘ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்பது மாதிரியான குறள். காதலி சொல்வது மாதிரி எடுத்துக் கொள்வோம். காதலனுக்கு திடீரென்று கம்பனியில் வெளிநாட்டுக்குப் போகுமாறு சொல்கிறார்கள். அந்தச் சமயம், காதலி அவனிடம் இதைச் சொன்னால், அம்பேல் தான். இல்லையென்றால் ஸ்கைப் வைத்துச் சமாளிக்க வேண்டும்.

இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். காலேஜில் ஒரு வாரம் லீவ். பொண்ணு டேஸ்-காலர். பையன் ஹாஸ்டல். வேறு சொந்த ஊர். இவன் ஊருக்குப் போகலாம் என்று முடிவு பண்ணுகிறான். ஆனா பொண்ணுக்கு வேற plans. Hence கோபம். Same scenario as above.

இந்தக் குறளின் அழகு என்னவென்றால், அந்த ‘ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ உணர்வை சூப்பராக வெளிப்படுத்துகிறது. ‘திரும்பி வரும் போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்’ என்பது, நான் உன்னைப் பிரிந்தால் நிச்சயம் இறந்து விடுவேன் என்பதின் அழகிய subtext.

ஆனால் காதலன் எப்படியோ சமாளித்து விடுகிறான். அவளும் அவன் செல்வதற்குச் சம்மதிக்கிறாள். இன்னும் நான்கு நாட்களில் கிளம்பி விடுவான். பிரியப் போகும் துக்கம் மனதை அடைக்கும். இங்கே தான் அடுத்தக் குறள்.

பிரிவு என்பது அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.பெற்றோர் பிள்ளைகளைப் பிரிகிறார்கள்.நட்பில் கூட பிரிவு வருகிறது.இவை இரண்டைக்காட்டிலும் மிகுந்த துயர் சேர்க்கும் பிரிவு ஒன்று உண்டு.அது காதலர்கள் பிரிவு.சங்க காலம் முதலே பொருள் தேடி ஆடவர்கள் சொந்த ஊர் விட்டு தூர நகரங்கள் செல்வதுண்டு.

அப்படியாக, நம் தலைவன் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல ஆயத்தமாகிறான்.எவ்வளவு காலம் கழித்து திரும்புவான் என்ற தகவலும் இல்லை.இந்தச் செய்தியை தலைவியிடம் சொல்ல அவன் விரைகிறான்.ஆனால் தோழி வழியாக,இந்தச் செய்தியை முன்பே அறிந்திருந்த தலைவி தலைவனை வாய்பேச விடவில்லை.
"என்னைப் பிரியப் போகிறேன் என்ற வார்த்தையைச் சொல்லத்தானா இங்கு வந்தீர்? உங்களைப் பிரிந்தால் எங்கணம் நான் வாழ்வேன்?இப்போது கூறுங்கள்,என்னைப் பிரிந்து சொல்ல மாட்டேன் என்று! அது ஒன்றே எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.இல்லை, போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீங்கள் திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அழுதுகொண்டே உரைக்கிறாள்.தலைவன் உறைந்துபோய் நிற்கிறான்.

பொருள் தேடி வந்தால் தான் பிழைக்க முடியும் என்ற ஆறுதல்வார்த்தைகளைக் கேட்கவும் தலைவி தயாராக இல்லை.அவன் பெற்றோர்,உறவினர் மற்றும் நண்பர்களால் கூட அவனது பிரிவை நினையாமல் வாழ முடியும்.தலைவியால் அது இயலாது என்றும் அப்படி பிரிந்து சென்றால், அத்துயரால் அவள் இறந்துவிடக்கூடும் என்றும் இரண்டு வரிகளில் வள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மருந்து அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

மருந்தென - ஒருவனுக்கு மருந்து என்று எதுவும்

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாவாம் - தேவையிருக்காது

யாக்கை - கட்டுகை; உடம்பு.
யாக்கைக்கு - ஒருவனது உடல் / உடம்பு

அருந்துதல் - உண்ணுதல்; குடித்தல் விழுங்குதல் அனுபவித்தல்

அருந்தியது - உண்ட உணவை

அற்றது - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

அற்றது - செரித்த பின் / சீரணமானப் பின்

போற்றி - போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.

உணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

போற்றி உணின் - உண்ண வேண்டும் என்ற நெறியினை பின் பற்றினால்.

ஆத்திச்சூடி
மீதூண் விரும்பேல்.
நோய்க்கு இடம் கொடேல்.

பூமி திருத்தி உண்.
ஐயம் இட்டு உண்.

மேலும்
”உடல் வலு மருந்து” (புயலிலே ஒரு தோனி / ப.சிங்காரம்)

முழுப்பொருள்
<கீழ் இருப்பதே தெளிவுற இருக்கிறது. ஆகையால் ஆசிரியரின் விளக்கம் தேவையற்றதாகிறது>
மு.கு: Intermittent Fasting க்கெல்லாம் வித்து இக்குறள் என்பதை நினைவில் கொள்க.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உணவைக் காலத்தோடும், அளவோடும் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நாம் பழகிக் கொண்ட படி குறித்த வேளையில், குறிப்பிட்ட உணவை உடலில் சேர்த்துக் கொள்ள உடல் தயாராக உள்ளது. நேரம் மாறினாலும் அதற்கேற்றபடி உடலியக்கம் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது. நாம் ஒரு நண்பரை வரவேற்க இரயில் நிலையத்திற்கோ, விமான நிலையத்துக்கோ போகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் அவரை எதிர் பார்க்கிறோம். வண்டியோ விமானமோ அதிக நேரம் தாமதமாக வந்தால், நமக்கு எப்படி இருக்கிறது ? சோர்வு அடைகிறோம்; வரவே இல்லையானால் ஏமாற்றமடைகிறோம்; நாம் எதிர் பார்த்த நேரத்திற்கு முன்னதாக வண்டியோ விமானமோ வந்து நமது நண்பர் வெளியேறி விட்டால் அவரைச் சந்திக்க முடியாமல் போகிறது. இது போன்ற இயற்கையின் ஒழுங்கமைப்பின் கீழ், உடலுணுக்கள் உணவைச் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றன. நேரம் தவறினாலும், உணவு கிடைக்காவிட்டாலும் அவற்றில் இயக்க ஒழுங்கு சீர்குலைந்து போய்விடும்.

உணவு பக்குவம் வேறு. உணவு சீரணம் வேறு. அன்னப் பையில், குடலில் உணவுப் பக்குவம் தான் செய்யப்படுகின்றது. உணவிலிருந்து உடலில் சேர, ஏற்றபடி சத்துப் பகுதிகளைத் திரவ நிலையில் பிரித்துக் கொடுப்பதே குடலின் வேலையாகும். உணவு சீரணம் உடல் முழுவதும் நடைபெறுகிறது. உணவிலிருந்து பிரிக்கப் பெற்ற இரசம் இரத்தமாக மாறி, இரத்தக் குழாய்களின் மூலம் செல்லும் போது உடல் முழுவதிலும் ஆங்காங்கு, தேவைக்கேற்ற அணுத்திரள்கள், உணவை உறிஞ்சி உரிய இடத்தில் இணைத்துக் கொள்கிறது. அளவிற்கு மேலாக உணவு கொண்டால் அதைக் குடல் பக்குவம் செய்ய முடியாது. 

சத்துக்களை நன்றாகப் பிரிக்கவும் முடியாது; இதனால் வயிற்றில் உணவு தேக்கம் உண்டாகும்; சில சமயம் புளித்துப் போகும்; அன்னப் பையில் உணவு தேக்கமுற்று புளித்துப் போனால் புளியேப்பம், வாந்தி இவை உண்டாகும். குடலில் உணவு தேக்கமானல் பேதி அல்லது மலச்சிக்கல் உண்டாகும். சமைத்த உணவை உபயோகப்படுத்தாமல் நீண்ட நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும் ? ஊசிப் போகின்றதல்லவா ? அதுபோன்றே, குடலில் அன்னப் பையில் உணவு தேக்கமுற்று ஊசிப் போகும் விளைவுதான் புளியேப்பம், வாந்தி, பேசி இவையாகும். மேலும் சுத்தமாக வடிகட்டப் படாமலும், அதிக அளவிலும் இரத்தத்தோடு சேரும் உணவு உடல் முழுதும் சென்று இரத்த நாளங்களிலே புளித்து விட்டால், காய்ச்சல் வந்துவிடும். அடிக்கடி இம்மாதிரி செரியாமைக்கு இடம் கொடுப்பது, பற்பல நோய்களுக்கு வழி கோலுவதாகும். சீரண வலுவிற்கேற்றபடி, அளவோடு உணவு கொள்ளும் பழக்கத்தைப் பின்பற்றினால், பல நோய்களைத் தடுத்துக் கொள்ளலாம்.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்."

என்பது வள்ளுவர் வாக்கு. முன் அருந்திய உணவு முழுவதும் சீரணீத்த பின், மறு உணவு கொள்ளும் வழக்கத்தை மேன்மையாகக் கொண்டால், மருந்தே உடலுக்கு வேண்டாம் என்பதே குறளின் கருத்து. அருந்தியது அற்றது எனில் உண்டது முழுவதும் (சீரணித்து விட்டால்) இல்லாமல் போனது என்பதே பொருள்.

மேலும் உணவு செரிக்காமல் போவதால், உணவு வீணாயிற்று என்பது மட்டுமல்ல; அது உடலைக் கெடுத்து விடுகிறது; மன நிலைமையும் பாதித்து விடுகின்றது. உணவு புளித்து விட்டால் குடலிலும் அன்னப்பையிலும் வீக்கத்தை உண்டாக்கும். அடுத்தடுத்து புளிப்புக்கு இடம் கொடுத்தால் வயிற்றில் புண்களும் உண்டாகி விடும். குடலிலும் அன்னப் பையிலும் புண்கள் உண்டாகி விட்டால் அது சீக்கிரமாக குணமாவதில்லை. இத்தகைய குடல் புண் நோயைத்தான் குன்ம நோய் (Ulcer) என்று கூறுகிறோம். உணவு சீரணிக்காமல் வெளியேறும்போது, அது உடலின் சக்தியையும் இழுத்துக் கொண்டு போகும். 

இதனைச் சிந்தனை விருந்து என்ற தலைப்பில் கீழ்க் கண்டவாறு எழுதியிருக்கிறேன்.

"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்".

எனவே சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியல்ல.

மருந்து என்றால் என்ன ? மனிதன் ஆற்றும் தவறான் செய்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் அற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு. அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத்தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி உந்து ஆற்றல் மருந்து. மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும்தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி, வேறொரு நோயை உண்டு பண்ணக் கூடியதே. இவையெல்லாம் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே, அடுத்த உணவு கொள்ளலாகும். இந்த அறிவுரையே இக்கவியில் தொக்கி நிறிகின்றது.

அறிந்து அளவுடன் கொள்க
உறக்கம், உழைப்பு, உடை, உணவு
     இவைகளில் எவற்றையும்,
மறுப்பதும், மிகுப்பதும் மனித உடலின் மகத்துவம்
     அறியாதோர் செய்கையாம்.

அளவோடு உணவு
உணவே உடலாக வந்துள்ளது ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர் வாழவேண்டும்
உணவில் அளவுமுறை மீறிட மீறிட
உணவாகவே உடல் மாறியும் போமன்றோ ?

செயல் ஒழுக்கம் சேவை சிந்தனை சீர்திருத்தம்
     சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்
அயல் உயிர்களிடத்தன்பும், அனைத்துலக அருள் நினைவும்
     அகம் நோக்கும் தவமுறையும் அறிஞர்கட்கு இயல்பாகும்.

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
வள்ளுவர் மருந்தென வேண்டாவாம் என்றார்
எப்போது இந்த நிலையைப் பெற முடியும்? அருந்தியது அற்றது போற்றி உணின் என்றார். அருந்தியது என்றால் உணவு. அற்றது என்றால் உண்ட உணவு நன்கு செரிமானமாகி உடம்பாக மாறிவிட வேண்டும். எனவே தான் ஒரு நாளைக்கு ஒரு வேளை அல்லது இருவேளை மட்டும் உண்பது, அதுவும் நன்கு செரிமானமாகி, அடுத்து பசி வந்தபின் உண்பது, உடல் நலத்தைக் காக்கும் வழி என்றார். இந்த நிலைக்குப் போனால் மருந்தில்லாமல் வாழலாம். 

மேலும்
ஒரு மனிதனோ பிராணியோ நீண்ட காலம் வாழும் ரகசியம் என்ன? அது சாப்பிடும் உணவு காரணமா? மூச்சு விடும் வேகம் (அளவு) காரணமா? காம (செக்ஸ்) உணர்வுகள் காரணமா? சுத்தமான காற்று காரணமா? அதன் எடை காரணமா? மரபணுக்கள் காரணமா? இந்த ஆராய்ச்சிக்கு நேரடியான விடை கிடையாது. ஆயினும் உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.
நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:


“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

இந்தப் பாடல் நமக்குக் கற்பிக்கும் விஷயம் என்ன? ஒருவன் அதிகம் உண்டால் ஆயுள் குறையும். அதுவும் ஆரோக்கியக் குறைவான உணவு உண்டால் இன்னும் ஆயுள் குறையும். இப்போது மருந்துகள் மூலம் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது உண்மதான். ஆனால் அவர்களுடைய வாழ்வோ நரக வாழ்வு. இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம். சுருங்கச் சொன்னால் நடைப் பிணம்.

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில்  இப்படி ஒரு வருகிறது.

“அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.

பரிமேலழகர் உரை
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்த பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். 

விளக்கம் 
(குறிகளாவன-யாக்கை நொய்ம்மை, தேக்கின்தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமைதோன்ற நின்றது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் தான் முன்னுண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து உண்பானாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்- அவனுடம்பிற்கு மருந்தென்றே ஒன்றுந் தேவையில்லை.

பெரும்பாலும் நோய்களெல்லாம் செரியாவுணவாலும் பொருந்தாவுணவாலும் மிகையுணவாலுமே நேர்வதால், இது முதல் ஆறு குறள்களில் ஆசிரியர் உணவு நெறிபற்றியே கூறுகின்றார். செரிமானத்தை யறியுங் குறிகள் வயிற்றிற் கனமின்மை, ஏப்பத்தின் செம்மை, இருவகைக் கரணங்களும் தொழில் செய்யத்தகுதியாயிருத்தல், பசியுண்டாதல், உண்டு ஐந்து மணி நேரத்திற்கு மேலாயிருத்தல், என்பன, 'யாக்கை' ஆகுபெயர், எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் கட்டுதல், 'உணின்' என்பது அதன் அருமையையும் நிலைப்பாட்டையும் உணர்த்திற்று. இக்குறளால் உண்டது செரித்தபின் உண்டால் நோய்வராதென்பது கூறப்பட்டது,

தமிழகத்து  உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையிற் சமைக்கப்பட்டு வருகின்றது. பச்சரிசி சூடுண்டாக்குமாதலால் வெப்பநாட்டிற்கேற்காதென்று புழுங்கலரிசி யாக்கப்படுகின்றது.அதைச் சரிதண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவை மிகுத்தற்குத் தீட்டும்போது நீக்குந் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்காய் வளிமிகுப்பதென்று பிஞ்சு நிலையிற் சமைக்கப்படும். சீனியவரையென்னுங் கொத்தவரை பித்தமிகுப்பதென்று காய்கட்குப் புளி சேர்க்கப்படும். காயச்சரக்காகக் கூட்டுவனவற்றுள்; மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்; கொத்துமல்லி பித்தத்தை யடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக்கட்டைத் தொலைக்கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசி மிகுக்கும்; வெங்காயம் குளிர்ச்சியுண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்; பெருங்காயம் வளியை வெளியேற்றும்; இஞ்சி பித்தத்தை யொடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்; தேங்காய் நீர்க்கோவை யென்னுந் தடுமத்தை(முக்குச் சளியை)நீக்கும்; கறிவேப்பிலை மணமூட்டி உணவு விருப்பையுண்டாக்கும்; கடுகு வயிற்றுவலி வராமற் காக்கும்; நல்லெண்ணெய் கண்குளிர்ச்சியும் மதித்தெளிவும் உண்டாக்கும், இவையெல்லாஞ் சேர்த்த துவரம்பருப்புக் குழம்பும், சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத்தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும், கூடிய முப்படையற் சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடற்புண்ணாற்றும் நெய்யோடும் உடலுக்குரஞ்செய்து கழிமாசுக்கட்டை(மலபந்தத்தை) நீக்கும் கீரையொடும்,குளிர்ச்சிதந்து பித்தம்போக்கும் எலுமிச்சை யூறுகாயொடும், அறுசுவைப்பட வுண்ட தமிழன் 'அற்றது போற்றி யுணின்' நோயண்டாதாகலின், 'மருந்தென வேண்டாவாம், என்றார், 'யாக்கைக்கு' என்றது உடம்பைப் பொறுத்தமட்டில் என்றவாறு. உள்ளத்தைத் தாக்கும் நோய் வேறுவகைப் பட்டதாகலின், அதை பின்னர்க் கூறுவார்.

மணக்குடவர் உரை
யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது. 

மு.வரதராசனார் உரை 
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

Thirukkural - Management - Health - Counsel for Individuals
Regimen is the word often associated with a rigorous health program. Valluvar has emphasized the importance of discipline in taking food. Though we believe that food is medicine, but the way we take food is a better medicine. Your body does not need any medicine, if you feed your stomach only after the food already eaten is digested completely, assures Kural 942.

His body needs no drugs who only eats 
After digesting what he ate before. 

There are two ways for better health. One is eating only when you are hungry. Today, people are addicted to eating. There is a practice of dumping into the stomach as if one's stomach were a garbage bin. People do not give their body its own time to burn the fat already accumulated in the body. As a result, more number and different types of diseases are prevalent.

Two is appreciating  that you get food -  because there are millions of people without food — and give yourself one hundred percent while eating. There are plenty of distractions by ways of television, cell phones and other technological devices.  We are not conscious when we eat. As a result, we cannot control the quantity of food we take and we do not appreciate the food that we eat. Just be there and be grateful.

English Meaning - As I taught a kid - Rajesh
If you don't want to take medicines, the follow this regimen suggested by Thiruvalluvar. Your body does not need any medicine, if you feed your stomach only after the food already eaten is digested completely. There are few ways of for better health 1. Eating only when you are hungry 2. Appreciating that you get food when millions of people live without food. 3. Mindful eating - When one is distracted to TV, mobile phone while eating, one won't be conscious. Hence one won't be able to control the quantity of food and end up dumping more than required food in one's stomach. 4. In order to digest the food, do exercises every day or give physical work to the body. 

Also, remember, we can heal the external wounds. But, if when excess amount of food consumed is stored in the form of fat in the body cells, then over time, it will lead to internal wounds which generally cannot be cured (unless managed from early stages) and it will kill the person.  

Questions that I ask to the kid
What should you do to not consume medicine? 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்

குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
கற்று கற்கை - படித்தல்
கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல்

ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

ஈண்டு - ஈண்டு-தல் - īṇṭu-   5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).  

கற்றீண்டு - (மெய்ப்பொருளை) கற்று (அனுபவம் மூலம்) அறிந்தவர்களிடம் கற்று

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கண்டார் - உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்

தலைப்படுதல் - ஒன்றுகூடுதல்; எதிர்ப்படுதல்; மேற்கொள்ளுதல்; பெறுதல்; முன்னேறுதல்; தலைமையாதல்; புகுதல்; வழிப்படுதல்; தொடங்குதல்.

தலைப்படுவர் - செல்லும் வாழ்வின் பாதை; செயல்படுவார்கள்

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஈண்டு ஈண்டு-தல் - īṇṭu-   5 v. intr. 1. To gather,come together; கூடுதல் ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல் மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).  -

மற்றீண்டு - மீண்டும் இந்த உலகில் வந்து வாழ பிறக்க

வாரா - வாராத

நெறி - வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள்நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரைமுதலியவற்றின்நடை; வீடுபேறு; கோயில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக்குழி; புறவிதழ்ஒடிக்கை; காண்க:நெறிக்கட்டி; மனநிலை.

முழுப்பொருள்
வாழ்வில் மெய்ப்பொருள், நிலையான பொருள் என்றவற்றை உணர கற்க தக்க அற நூல்களும், ஆன்மீக நூல்களும் இன்றியமையாததாகும். அதைப்போல், அவற்றை கசடற (faultlessly. கசடு - குற்றம்) கற்க, அதனை கற்று, பட்டு உணர்ந்த ஒருவரை குருவாக கொண்டு கற்பது இன்றியமையாததாகும்.

அப்படி ஒரு குருவிடம் மெய்ப்பொருள் யாது என்று கற்று உணர்ந்தவர், பின்பு அதனை மனதில் அவதானித்து தியானித்து கொண்டே இருந்தார் என்றால் அவர் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணும் வழியை தேர்ந்தேடுப்பார். அதில் பயணிப்பார்.

அப்படி மெய்ப்பொருள் வேண்டி / தேடி செல்வார் மீண்டும் மானுட வாழ்வில் பிறவி எடுக்க மாட்டார் என்று சொல்கிறார் திருவள்ளுவர். 

ஒருவர் நூல்களை படித்தால் மட்டும் போதாது. மெய்ப்பொருள் அறிய, அவனை அறிய, கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) ஆகியவற்றைக் கொள்ள வேண்டும். 

கண்டார் என்று சொன்னது எதற்கு என்றால் மெய்ப்பொருளை இவ்வுலகிலேயே காணலாம், இதற்காக மற்ற உலகிற்கு (மடிந்து) செல்ல வேண்டியதில்லை

இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இந்தப் பிறவியிலேயெ மெய்ப்பொருளை காண, அதற்கான வற்றை கற்று, அந்த வழியைத் தேடி செல்வோர் (பெய்ப்பொருளை அடைவார், ஆதலால்) மீண்டும் பிறவி எடுத்து மெய்ப்பொருள் கற்க வேண்டிய அவசியமில்லை என்று. 

ஆத்திச்சூடி
பேதைமை அகற்று.
பெரியாரைத் துணைக் கொள்.
சான்றோர் இனத்து இரு.
மேன்மக்கள் சொல் கேள்.
உத்தமனாய் இரு.
வித்தை விரும்பு.
எண் எழுத்து இகழேல்
சேரிடம் அறிந்து சேர்.
தக்கோன் எனத் திரி.

பையலோடு இணங்கேல்.

மேலும்: அஷோக்
மேலும்: ஞானதானம்

திருவாசகத்தில் வரும் சிவபுராணத்தில் (87), “மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே” என்பார் மாணிக்கவாசகர்.  

அறநெறிச்சாரப்பாடல் (125) ஒன்று, “அறிவிற் கறிவாவ தென்னின் மறுபிறப்பு மற்றீண்டு வாரா நெறி” என்று இதே கருத்தைச் சொல்கிறது. 

கம்பரும்
”யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய்ப்
பூவுநெல் வெறியுமொத் தொருவரும் பொதுமையாய்
ஆவனீ யாவதென் றறிவினார் அருளினார்
தாவரும் பதமெனக் கருமையோ தனிமையோ” (கம்ப.வாலி 124)

“ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர், 
ஞானம் முற்றுபுநண்ணினர் வீடு என” (கம்ப.பொழில்.இறுத்த 23) என்கிறார். குற்றம் நேர்ந்ததால், இம்மண்ணுலகத்தில் பிறந்த தேவர்கள், பின்பு முழு ஞானம் பெற்று, தங்கள் உலகமாகிய வீட்டினை அடைந்தார்கள் என்று இக்குறளை ஒட்டியே சொல்லியுள்ளார்.

பரிமேலழகர் உரை
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடையதேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். 

விளக்கம்
('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருளுணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர்.

உலகநூற் கல்வி போன்றே மெய்ப்பொருட் கல்வியும் பல்வேறு நிலையிற் பல்வேறு ஆசிரியர்பாற் கற்றுங் கேட்டுமறிய வேண்டியிருப்பதால் 'கற்று' என்றும், நிலவுலகிலன்றித் தேவருலகில் வீடுபேற்று முயற்சிக்கிடமின்மையால் 'ஈண்டு' என்றுங் கூறினார். 'ஈண்டுவாரா நெறி' வீட்டு நெறி. வீட்டையளிப்பது இறைவனேயாதலால் அவனை யறிவதற்கு ஆம்புடைகள் (உபாயங்கள்) கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) என நான்காம். கேள்வியும் கல்வியுளடங்குமாதலின் அவையிரண்டும் இங்கே ஒருங்கே கூறப்பட்டன.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

பொருள்: கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் -(கற்கத் தக்க நூல்களைக்) கற்று இவ்வுலகின்கண் மெய்ப்பொருளைக் கண்டவர், மற்று ஈண்டு வாரா(த) நெறி தலைப்படுவர் - திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழியை அடைவர்.

அகலம்: மெய்ப்பொருளைக் காண்டற்குக் கல்வி இன்றியமையாத தென்பதைக் குறிப்பதற்காகக் ’கற்று’ என்றார். கற்கத் தக்க நூல்களாவன, அறநூலும் ஆன்ம நூலும். இவ் வுலகத்தைவிட்டு வேறு உலகத்தில் மெய்ப் பொருளைக் காணலாகுமோ என்று நினைப்பாரைக் கருதி, இவ் வுலகின் கண்ணேயே மெய்ப்பொருளைக் காணலாகும் என்றார். மெய்ப்பொருளைக் கண்டார் பிறப்பு இறப்புக்களினின்று நீங்குவர் என்பது ஒரு தலையாகலின், மற்று ஈண்டு வாராநெறி தலைப்படுவர் என்றார். வாராத என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. இக் குறளால் மெய்ப் பொருளை இவ் வுலகத்தின்கண்ணே காணலாகும் என்றார்.

கருத்து: மெய்ப் பொருளைக் கண்டார் பிறப்பினை அடையார்.

நன்றி: திருவருட்பா
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

பஜகோவிந்தமும் மறுபிறவியும்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே 

புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு
புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு
புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது
க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

மணக்குடவர் உரை
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

மு.வரதராசனார் உரை
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

இந்த உலக தோற்றத்தின் உண்மையை, உயிர் சுமந்து வாழும் வாழ்க்கையின் உண்மையை, ஆராய்ந்து கற்று அறிவதே மெய்ப்பொருளை அறியும் வழியாகும். உலகில் இயங்கும் பொருள் இயங்காப் பொருள் என இருவகைப் பொருட்கள் இருக்கின்றன. இயங்கும் பொருட்களே, இயங்காப் பொருள்களை இயக்குகின்றன. இந்த உண்மையைக் கண்ட மனிதன், இவ்வுலகையும் உலக உயிர்களையும் இயக்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமே என ஆராய்ந்தான். உலகத்தை இயக்கும் அப்பெரும்பொருளாகிய சக்தியை இயக்கி என்றான். இயக்கியோடு இசைந்தவன் இயக்கன் ஆனான். அண்ட கோளங்களை இயக்கும் அம்மெய்ப் பொருளை இன்றைய மனிதர்களாகிய நாம் கடவுள் என்கிறோம்.

அந்த மெய்ப்பொருளை அறிந்தோர், இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து சுழழும் வழியில் வராது வேறு வழியுள் செல்வர். அந்த மாற்றுவழியை, அதாவது கடவுளை அடையும் வழியை திருவள்ளுவர் வாராநெறி என அழைத்துள்ளார். வாரா நெறி என்பது திரும்பவும் பிறவி வராத வழி.  நாம் மீண்டும் பிறவி எனும் வழியே வரத்தேவை இல்லை. அதனாலேயே அதனை நம் முன்னோர் வாராநெறி என அழைத்தனர். 

 மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்
வாரா வழியருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுதாய்...............”                                   -(ப.திருமுறை: 8: 8: 2) 
என திருவள்ளுவர் கூறிய வாராநெறியை, வாராவழி எனச் சொல்கிறார்.

மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து வராதிருக்கும் வழியில் செல்ல வேண்டுமானால், உலகின் மெய்ப்பொருள் எது என்னும் உண்மையைக் கற்று அறியுங்கள் என இக்குறள் கூறுகிறது.

நன்றி: ஆத்திகம்
ஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.
அதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.
அவர் சொல்றதைக் கேட்டுக்க.
அப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.
ஒரு அறிவு வரும்.
அத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ.
அவ்ளோதான்!

சாயலும் நாணும் அவர்கொண்டார்

குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா 
நோயும் பசலையும் தந்து.
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]

பொருள்
சாயல் - மென்மைத்தோற்றம்; அழகு; ஒப்பு; நிறம்; மேனி; மென்மை; சாய்வு; இளைப்பு; நிழல்; மாதிரி; நுணுக்கம்; துயிலிடம்; சார்பு; மஞ்சள்; மேம்பாடு; மேம்பாடாகியசொல்; அருள்.

நாண் -> பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று
நாணம் -> எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல் 

அவர்கொண்டார் - அவர் கொண்டு சென்று விட்டார்

கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி
கைம்மாறா - அதற்கு பதிலாக / கைம் மாறாக (உடனடியாக)

நோய் - வியாதி, துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு, நோ

பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.

தந்து -  தருதல்

முழுப்பொருள்
என்னை பிரிந்து செல்லும் பொழுது என் காதலர் என் மேனி அழகினையும், நாணனத்தினையும் கொண்டு சென்றார். அவர் இல்லாமல் எனக்கு ஏது அழகு ? அவரை காணாமல் நான் எப்படி வெட்கபடுவேன் ? என் நினைவாக என் அழகினையும் அவர் முன் நான் நாணி வெட்கம்கொண்ட சித்திரங்களை மனதில் எடுத்து கொண்டு சென்றாரோ ?

அதற்கு பதிலாக அவர் எனக்கு கொடுத்தது காமநோயும் (துன்பம்), பசலையும் தான். இந்த காமநோய் என்பது அவரது பிரிவினில் அவரை நினைத்து நான் கொண்ட மன வருத்தம். அவர் இல்லாமல் என் மேனியில் வேறுபட்ட (காம) நிறம் ஒன்று பூண்டு உள்ளது. 

இங்கு கைமாறு என்று கூறப்பட்டுள்ளது. கைமாறு என்பது கொடுத்த உடன் திரும்ப பெருவது. ஆதலால் இங்கு தலைவனை பிரிந்த உடனேயே தலைவிக்கு பசலையும் நோயும் அவளை ஆட்கொண்டதாக பொருள்.

தலைவியின் பசலை நோயை தலைவன் வந்து தொட்டாலே ஒழிய தீராது.

அழகும் வெட்கமும் நோயிற்கும் பசலைக்கும் ஈடாகாது (எதிர்நிரை அணி). ஆதலால் அவர் மறுபடியும் வந்து எனது அழகினையும் நாணத்தினையும் தந்தால் தான் (என்னை தொட்டால் தான்) இந்த நோயும் பசலையும் தீரும் என்று குறிப்பு அறியலாம்.

- நோய் என்று வார்த்தைக்கு குற்றம் என்று பொருள் கொண்டால் - பிரிந்தவர் இன்னும் வரவில்லை - ஆக அவரை பிரிய விட்டது எனது குற்றம் என்றும் கூட கொள்ளலாம்.  ஆதலால் தான் இந்த நோயில் அவள் வாடுகிறாள்.

ஒப்புமை
”பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி 
பசலையார்ந்தன குவளையங் கண்ணே” (குறுந் 13:3,5)

”ஆய்மலர் உண்கண் பசப்பச் 
சேய்மலை நாடன் செய்த நோயே” (ஐங்குறு 242:4-5)

”அரிமதர் உண்கண் பசப்பநோய் செய்யும், பெருமான்” (கலி 82:20-21)

”பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” (சம்பந்தர்.செங்காட்டங்குடி)

குறட் கருத்து காமத்துப் பால் (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரார் பழிக்கின்றார் என்னவரைப் புரியாமல்
உண்மை நிலை தெரியாமல் எங்கேயும் எப்போதும்
வாராது போயிடுவார் என்றெங்கும் கூறுகின்றார்
வழக்குணரார் உணர்வாரா என்னவரின் பெருந்தன்மை
நேராய் என் நாணமும் அழகும் அவர் கொண்டார
நினைத்துணரக் காம நோயும் பசலையுமே எனக்களித்தார்
சீராய் இரண்டெடுத்தார் சிறப்பாய் இரண்டளித்தார்
ஊரார் அறியார் இவ்வுண்மை நிலை பழிக்கின்றார்

குறட் கருத்து 2 (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

கண்கள் இது அவர் காணக் காதலித்தேன்
காதலரும் வந்து என்னை ஆதரித்தார்
பண்ணிசைத்தோம் பல விதமாய்ப் பாடி நின்றோம்
பாடலைப் போல் கூடலையும் தேர்ந்து வென்றோம்
மன்னவரும் எனைப் பிரிந்தார் அழகினோடு
மங்கை யெந்தன் நாணமதும் கொண்டு சென்றார்
தென்னவரோ கைம்மாறாய் நோய்கள் தந்தார்
தீராத காமமதும் பசலையதும்


பரிமேலழகர் உரை
'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார். 

விளக்கம் 
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(அழகும் நாணும் அழியாமல் நீயாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

நோயும் பசலையும் கைம்மாறாத் தந்து- நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும் போதே இக்காம நோயையும் பசலையையும் எதிரீடாகத் தந்துவிட்டு; சாயலும் நாணும் அவர் கொண்டார்-என் மேனியழகையும் நாணையும், தம்முடன் கொண்டுபோய் விட்டார்.

அவர் திரும்பி வந்தாலொழிய என் மேனியழகும் நாணும் திரும்பாவென்பதாம்.சாயலுக்குப் பசலையும் நாணுக்கு நோயும் ஈடாதலால் எதிர்நிரனிறை.

மணக்குடவர் உரை
மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.

மு.வ உரை
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

பரிவருத்தனை அணி (நன்றி: Wiki)
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே 
                            --(தண்டியலங்காரம், 87)

பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.

     சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
     நோயும் பசலையும் தந்து
                         --(திருக்குறள், 1183)

இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.

பாடல்பொருள்
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அணிப் பொருத்தம்
இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.

எதிர் நிரல் நிறை அணி (நன்றி: துரை தாசன்)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து                                            (1183)

சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி ஆகும்.  

குறுந்தோகையும் பசலையும் சினிமாவும்
1) காதல் கோட்டை
பாடல்: மொட்டு மொட்டு மலராத மொட்டு

2) என் ஸ்வாசகாற்றே
பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

நூல்: குறுந்தொகை (#27)
பாடியவர்: வெள்ளிவீதியார்

சூழல்: பாலைத்திணை : காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன். ‘இந்தத் துயரத்தை இவள் எப்படித் தாங்குவாளோ!’ என்று தோழி கவலைப்படுகிறாள். அவளுக்குக் காதலி சொல்லும் பதில் இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நல்ல பசுவின் இனிமையான பால். அந்தப் பாலைப் பசுவின் கன்று குடிக்கவேண்டும், அல்லது அது பாத்திரத்தில் கறக்கப்பட்டு மற்றவர்களுக்காவது பயன்படவேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் அது தரையில் சிந்தினால் வீண்தானே?

அதுபோல, தேமல் படர்ந்த என் பெண்மையும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.




(மேலே உள்ள கன்றும் பாடலுக்கு மற்றுமொரு விளக்கம். நன்றி: மாதவிப் பந்தல்)
நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)

ஏதோ, "காமம்" பிடிச்சிப் போயிப் பாடிட்டாங்க-ன்னு நினைக்காதீங்க!:)
இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!

பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!

நீ பார்க்காமல்
நானெப்படி அழகாவேன் ?
உன்னைப் பார்க்காமல்
எனக்கெப்படி வரும் வெட்கம் ?
எப்போது உன்னைப் பிரிவேன் எனக்
காத்திருந்து தாக்குகிறது காதல் நோய்

நன்றி: ரிஷ்வன்
பிரிவுத் துயரத்தையும்
பசலை நிறத்தையும்
காதல் பரிசாய் தந்தவர்
நாணத்தையும் - என்
ஊணழகையும் ஒருசேர
கையோடு கொண்டுசென்றார்.