கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

 

குறள் 930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை
உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்ணாப் - உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்;

போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

களித்தானைக் - கள்ளை உண்டு களித்திருப்போர்

கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்

உள்ளா-தல் - uḷ-ḷ-ā-   v. intr. id. +. 1.To submit; வசப்படுதல் 2. To be involved asin suffering; உட்படுதல் துன்பத்திற்குள்ளானான். 3.To become privy to an affair; உடன்படுதல் (W.)  

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

உள்ளான்கொல் -  உணர்ந்து கொள்ளமாட்டரோ?

உண்டல் - uṇṭal   n. உண்-மை. Cominginto existence; உண்டாகுகை. காட்டத்தி லங்கிவேறுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2).

உண்டதன் - கள்ளுண்டதனால் உறுகின்ற

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

முழுப்பொருள்
மதிகெட்டு உணர்வற்று கள் உண்ணுபவர் எந்நேரமும் கள் உண்ணும் (மொடா) குடிக்காரர்கள் இல்லை. அவர்கள் கண் உண்ணாத நேரத்தில் கள் உண்ணுபவர்களை காணும் பொழுது அவர்கள் படும் துன்பத்தை அவர்களிடம் இருக்கும் சோர்வை அவர்கள் வாழ்கையில் இழந்தவற்றை அவர்கள் உடல் படும் துன்பத்தை அவர்களை இவ்வூரார் இகழுவதைக் கண்டும் ஏன் திருந்தமாட்டுகிறார்கள் என்று திருவள்ளுவர் கேட்கிறார். கள் அவர்கள் மூளையை அவ்வளவு தளர்ச்சி அடைய செய்துவிட்டதா? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“கள்ளுண்போன் சோர்வின்மை பொய்” (முதுமொழி 7:3)

பரிமேலழகர் உரை
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தௌ¤ந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.

No comments:

Post a Comment