நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

 

குறள் 710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
நுண்ணியம் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.
நுண்ணறிவு - நுண்ணியபுத்தி.

என்பார்  - என்று கூறுவார்

அளக்கும்  - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப்பேசுதல்.

கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்

கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அல்லது - தீவினை; தவிர

இல்லை  - இல்லை, உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்

முழுப்பொருள் 
கூறிய அறிவை வேலைத்திறனை உடைவன் என்று கூறிக்கொள்பவரின் (கருதுபவரின்) முறையை ஆராய்ந்தால் அவர் பிறரை அளப்பதை (ஆராய்வதை) கண்டால் அதில் (பிறரின்-)கண்ணை தவிர வேறு ஏதும் இல்லை என்பது புலப்படும். கண்ணின் குறிப்பறிய நுண்ணிய அறிவும் திறமையும் பயிற்சியும் தேவை. 

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு (மகாபாரத்தில்) நாவல் தொடரில் பல இடங்களில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மற்றவர்களுடன் கண்களில் உரையாடுவத்ம் அதேப்போல் மற்றவர்களின் மனதை கண்களின் குறிப்புகளில் உணர்வதை காணலாம்.

மனைவி நல வேட்பு நாள்





இக்குறளை படிக்கும் பொழுது வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தில் நடைப்பெறும் “மனைவி நல வேட்பு நாள்” தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. கண்களின் வலிமையை இன்று நான் மேலும் அறிகிறேன். 

மனைவி நல வேட்பு நாள் நிகழ்வு - வேதாத்திரி மகரிஷி (மேற்காணும் யூட்யுப் தொடர்பில் காணலாம்)

மனைவி நல வேட்பு நாள் பொதுவாக வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி அன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று நடைப்பெறும். பொதுவாக கணவனின் ஆயுளை கூட்டும் விதமாக வரலட்சுமி விரதம், சுமங்கலிப் பூழை, காராடியான் நோன்பு என்று பல நிகழ்வுகள் உண்டு. ஆனால் மனைவிகளுக்கு? அதற்கு பதிலாகவே மனைவி நல வேட்பு நாள் துவங்கிற்று. கணவன் மனைவி உறவு இன்பமாய் அமையவேண்டுமென்பதே நோக்கமாகும். இது மனைவிகளை கணவன்களும் கணவன்களை மனைவிகளும் உளமார பாராட்ட நன்றி கூற தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் அமையும். 

மனைவி நல வேட்பு நாளில் தம்பதியினர் கண்களின் மூலமாகவே அருட்காப்பு, காந்த அலை பரிமாற்றம், சங்கல்பம் செய்துகொள்வார்கள். மனைவிகளின் வலது கை மீது கணவர்கள் கையை வைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்து கனி மற்றும் மலர்களைப் பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். 

முதலாவதாக தம்பதிகளில் கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு காப்பு கயிற்றையும், பின்னர் மனைவிமார்கள் தங்களது கணவருக்கு காப்பு கயிற்றை கட்டுவர். 

இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் தங்களது திருமணம் முடிந்த நாளில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தனர். தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால் காந்த பரிமாற்றம் நடக்கும். 

தம்பதிகள் இருவரும் நேருக்கு நேர் உட்கார்ந்துக்கொண்டு துரியத்தில் தியானம் செய்வர். பின்பு, தங்கள் கண்களை திறந்ததுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள கண்களை பார்த்துக்கொள்வர். தங்கள் மனதில் உள்ளதை கண்களின் வழியாக பரிமாறிக்கொள்வர். ஒருவர் செய்த நன்மைக்கு நன்றி சொல்வர் பாரட்டுவர், தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருவர். அதேப்போல் மற்றவர் செய்த தவறுகளை மன்னிப்பர். 

இறுதியில் கணவன் மனைவிக்கு ஒரு பூவினை தருவார். பதிலுக்கு மனைவி ஒரு பழத்தினை கணவனுக்கு தருவார். இறுதியில் வாழ்க வளமுடன் என்று கூறி நிறைவு செய்வர். மொத்தமாக சுமார் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஆகலாம்.

திருமணம் நடந்த நாள் முதல் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பது இந்த விழாவின் சிறப்பம்சம். இந்த மனைவி நல வேட்பு விழா மூலம் வாழ்க்கை துணையாக இருக்கும் மனைவியை கணவன்மார்கள் பெருமை படுத்தும் விதமாக அமையும்.

கணவன் - மனைவி உறவு பற்றி வேதாத்திரி மகரிஷி
மனித மனம் ஒரு வியப்பானது. ஒரு பொருளை விரும்பினால், அதனை அடையாத முன்னம் அதனிடம் பல நன்மைகளையும், மேன்மைகளையும் கற்பித்துக் கொண்டு இன்புறுவது, அதை அடைந்த பின்னர் அதில் குறைகளை கற்பித்துக் கொண்டு சோர்வடைவது. இது விரிந்த நோக்கம் இல்லாதவர்களிடம் இயல்பாக இருக்கும். இந்த குறைக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். நல்லதையும் உயர்வையும் பாராட்டுங்கள். குறைகளை நுட்பமான முறையில் எடுத்து விளக்கவும், நிறைவு செய்யவும் முயலுங்கள். வாழ்வு வளம் பெரும்.

கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் சிறப்புக் காணுமிடத்தும், உயர்வைக் கண்டும் பாராட்ட வேண்டியது அவசியம். இது அன்பையும், நட்பையும் பெருக்கும், உறுதிப்படுத்தும். இதனால் எப்போதுமே பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்பதல்ல. அப்படிச் செய்தால் அது முகத்துதியாக மதிப்புக் குறையும்.
.
ஒரு சில குடும்பத்தில் கணவனோ, மனைவியோ பலரால் பாராட்டப் படுபவராயும், புகழப் படுபவராயும் இருக்கலாம். ஊர் பாராட்டுவதைப் போல், தன் வாழ்க்கைத் துணைவரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்பார்கள்.. இங்கு மிக நுணுக்கமான உண்மை அடங்கி இருக்கிறது. வாழ்க்கைத் துணைவரை ஊர் புகழும் போது அந்தப் புகழ்ச்சியில் தான் மகிழ்வுற்றுத் திளைத்திருப்பார்கள். அது அவருக்கு உரிய சொத்தாகி விடுகிறது. ஆதலால் தானும் புகழ வேண்டுமென்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த உண்மையை உணராதவர்கள், தன் வாழ்க்கைத் துணைவர் புகழவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் அடைவார்கள். இது தேவையற்ற எண்ணம். ஊர் புகழும் போது மனைவியோ, கணவனோ புகழவில்லையே என்ற குறை எவரும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அலட்சியம் செய்ததாக எடுத்துக் கொள்வதும் நல்லதல்ல.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".

"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது
பிறர் உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".

"பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும்
பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்".

"நிறைவாக அமைதியோடு வெற்றி கண்டு வாழ
நிலஉலகில் மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல
குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்
உறைவிடமும் உணவும் பால்உறவும் மதிப்போடு
உழைத்துப்பெற்றளவு முறையோடு துய்க்க வேண்டும்
மறைபொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை
மதித்துத் தவம் அறம் கற்று வாழ வேண்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை -ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை. (அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.

மு.வரதராசனார் உரை
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

1 comment:

  1. நல்ல கருத்துகளை இடையே சிதறி கிடக்கும் ‌இந்த வாசிப்பு தொடர்தெள்ளுணர்வை தருகிறது இத்தளத்தின் உரிமையாளருக்கு எனது நன்றிகள்

    ReplyDelete