Search This Blog

திருக்குறள்

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kura...

Wednesday, September 24, 2014

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

குறள் 521: அதிகாரம் சுற்றம்தாழ்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள.

பொருள்:
பற்றற்ற கண்ணும் - வளம் குன்றி ,எந்த பிடிப்பும் இல்லாத தருணத்திலும் 
பழைமைபா ராட்டுதல் - பழைய உறவை பாராட்டி கொண்டாடுதல் 
சுற்றத்தார் - உறவினர் அல்லது சுற்றி உள்ள நெருங்கிய நண்பர்கள் 
கண்ணே உள -அவர்களிடத்தே உள்ளது.

முழுப்பொருள் :
ஒருவன் தன செல்வம் அனைத்தையும் இழந்து, வளம் குன்றி,பற்றற்ற நிலையில் உள்ள பொழுதும், அவனை விட்டு விலகி விடாமல், அவனிடம் கொண்ட பழைய உறவை பாராட்டி கொண்டாடி மகிழ்வது அவனது சுற்றத்தார் இடத்தில் உள்ளது என உரைக்கிறார் வள்ளுவர். அரசியல் இயலில் இக்குறளை வைத்துள்ளதனால்,
ஒரு அரசனோ அரசோ, எந்நிலையிலும் விலகாமல் பழைய நட்பு பெருமை பாராட்டும் வகையில் உள்ள சுற்றத்தாரை கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கருதலாம் .
  
மேலும் ,
நன்றி: அசோக் 
ஔவையாரின் மூதுரையில், சுற்றத்தைப் பற்றி கூறும்போது, அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போன்றவர்கள் அல்லர் உண்மையான சுற்றம் என்பார். அந்த முழுப்பாடலும், அதனுடைய விளக்கமும்.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.
நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.
நல்ல சுற்றம் எத்தகையது என்று சொல்லும் ஔவை, மற்றொன்றையும் சுற்றம் பற்றி கூறுவது கவனிக்கத் தக்கது.
“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி “
சுற்றமும் பல நேரங்களில் உடனிருந்து கொல்லும் வியாதிபோன்றதாகையால், அவரிடத்தும் கவனமும் எச்சரிக்கையும் தேவையென்று உணர்த்துகிற பாடலும் மூதுரைப் பாடல்தான்.
பரிமேலழகர் உரை: 
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.). 

மு. வரதராசன் உரை: 
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.


No comments:

Post a Comment