Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து.
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஐயத்தின் - ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

நீங்கித் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.
தெளிதல் - தெளிவாதல்; அமைதியுறுதல்; ஒளிர்தல்; வெண்மையாதல்; குணப்படுதல்; செழித்தல்; ஒழிதல்; துளைத்தல்; அறிதல்; முடிவுக்குவருதல்; ஆராய்தல்; தேறுதல்; நம்புதல்; இலாபம்காணுதல்.
தெளிந்தார்க்கு -  தெளிந்தவர்களுக்கு, மெய் உணர்ந்தவர்களுக்கு,

வையகம் - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.
வையத்தின் - உலகத்தில்

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

நணியது - naṇi   n. நண்ணு-. Nearness, proximity; அணிமையான இடம்
உடைத்து - உடையது, இருக்கிறது

முழுப்பொருள்
வாழ்வின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று நோக்கி தன்னுள் உள்ள ஒவ்வொரு ஐயங்களையும் ஆராய்ந்து அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் (நூல்கள் பல கற்தல், மெய்ப்பொருள் கண்ட சான்றோர்களுடன் உரையாடி விவாதித்தல் என்று பல வழிகளில்) மேற்கொண்டு மெய்ப்பொருள் என்ன என்ற தெளிவு தனை அடைவதே சிறப்பாகும். இல்லையேல் வாழ்வில் அடி மேல் அடி வாங்கி செல்வது காலத்தை விரையமாக்கும். அப்படி நெறியான வழியில் மெய்யுணர்ந்து அதன் படி வாழ்ந்தால் அவருக்கு வானம் எனப்படும் வீடு அல்லது தேவர்கள் வாழும் வானுலகம் என்னும் பேறு மிக அருகில் இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஐயம் நீங்கிஎம் அறிவுமதித் தொழுகிய” (பெருங் 4.8:68)

பரிமேலழகர் உரை
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]

பொருள்
நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.
நிலையாமை unsteadiness, நிலையில்லாமை
நில்லாது - நிலையில்லாதவற்றை
நில்லாதவற்றை - உறுதி தன்மை அல்லாதவற்றை
நிலையின - உறுதியானது
என்று - என்றெனவென்று
உணர் - uṇar   உணரு, II. v. i. feel, perceive, understand, அறி; 2. realize, conceive, imagine, பாவி; v. i. recover from langour, அயர்வு நீங்கு; 2. wake from sleep, துயிலெழு; 3. become reconciled after a love quarrel, பிணக்கு (ஊடல்) நீங்கு.
உணரும் - . Feeling, con sciousness, intuition, perception, under standing, knowledge by means of the senses, 
புல் - Meanness, lowness, baseness; இழிவு. புன்கோட்டி (நாலடி, 255), புல்2. smallness, அற்பம்;
புல்லறிவு - சிறிய அறிவு,  அற்பமான அறிவு, ignorance; 2. viciousness.
ஆண்மை - Possession,used as the last member of a compound; உடைமை, Pride, conceit;அகங்காரம். 
கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

முழுப்பொருள்
வாழ்வில் நிலை தன்மை இல்லாத பொருள்களில், உலகியல் தரும் தற்காலிகமான போலி மகிழ்ச்சிகளில் வாழ்வும் வளமும் நிலையாக உள்ளது என்று அப்போலி வாழ்வை பற்றுடன் பற்றிக்கொண்டு இருக்கும் மிக சிறிய அற்பமான அறிவை உடையவர்களுக்கு முடிவாக ஏதும் நிலைக்காது. இது இழிவையே தரும்.  அது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வரிசையில் இறுதியாக வரும் வீடு என்னும் பேறு தனை அடைய தடையாய் அமையும். 

உதாரணமாக தன்னை அழகு படுத்திக்கொள்ள போட்டுக்கொள்ளும் ஒப்பனைகள் அனைத்தும் சிறிது காலத்திற்கு தான், வயதான பின்பு தாத்தா தாத்தா தான் பாட்டி பாட்டி தான். உடம்பு கட்டுடலாய் அமைய கடினமான உடற்பயிற்சிகளை பல ஆண்டு காலம் செய்வோரை வயோதிகத்தில் பார்க்க சகிக்காது. 

அமேரிக்க நடிகர் சில்வெச்டெர் ஸ்டாலொன் (Sylvester Stallone) இப்பொது எப்படி உள்ளார் பாருங்கள்.
Image result for sylvester stallone Image result for sylvester stallone

அதுவே யோகா பயின்ற தமிழ்நாட்டு நடிகர் சிவகுமார் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்

Image result for sivakumarImage result for sivakumar


பொய்த்தன்மைத்தாய மாயப்போர்வையை மெய்யென்றெண்ணும் 
வித்தகத்தாய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்” என்கிறார் சுந்தரர்.ஆரூர்(9). 

நிலையாமையை மாயப்போர்வை என்று சொல்லி, அத்தகைய மாயத்தை மெய்யென்று எண்ணும் வித்தகம் உடைய வாழ்வு எனக்குத் தேவையில்லை என்கிறார். கம்பர் மாரீச வதை படலத்தில், 

நின்றும் செந்றும் வாழ்வன யாவும் நிலையாவால் 
பொன்றும் என்றும் மெய்ம்மை உணர்ந்தாம் புலையாடற்
கொன்றும் உன்னாய்”  என்று இராவணனுக்கு மாரீசன் (187) அறிவுரை சொல்லுகிறார். 

இவ்வுலகில் அசையாமல் இருப்பவையும், பலவிடங்களுக்குச் செல்வதாய இயங்கு பொருள்களும், ஆக அனைத்துமே அழிந்து போகும் என்ற உண்மையை உணர்ந்துள்ளோம். ஆகையால் இழிந்த தொழிலை சிந்திக்காதே என்று இராவணனுக்கு முறையானவற்றை மாரீசன் சொல்கிற பாடல் இது.

மேலும்: அஷோக் உரை

மு.வரதராசனார் உரை
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.


சாலமன் பாப்பையா உரை

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

பரிமேலழகர் உரை
[அவற்றுள்,நிலையாமையாவது;தோற்றம் உடையனயாவும் நிலையுதல் இலவாம் தன்மை. மயங்கியவழிப்பேய்தேரில் புனல்போலத் தோன்றி,மெய்யுணர்ந்தவழிக்கயிற்றில் அரவுபோலக்கெடுதலின் பொய் என்பாரும்,நிலை வேறுபட்டு வருதலால் கணந்தோறும் பிறந்து இருக்கும் என்பாரும்,ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின், நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய என்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பல திறத்தராவர்; அவர் எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின், ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃது உணர்ந்துழி அல்லது பொருள்களின் பற்று விடாது ஆகலின், இது முன் வைக்கப்பட்டது.]

நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.).

மணக்குடவர் உரை
நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.

ஒன்றாக நல்லது கொல்லாமை

குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
ஒன்றாக - ஒருபொருளாக;  (Certainly;surely; positively) நிச்சயமாக; ஒருமிக்க.
நல்லது  - அறம்; நன்மையானது; காண்க:நல்லபாம்பு.
கொல்லாமை  - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை
மற்று  - maṟṟu   part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.
அதன் - அவை

சார் - cārvu   n. சார்-. 1. Place, residence; இடம் (பிங்.) 2. Pial. See ஒட்டுத்திண்ணை சார்வுந் திண்ணையுங் குயிற்றி (சீவக. 108). 3. Refuge;புகலிடம். உறுவர் செல்சார்வாகி (புறநா. 205). 4.Basis; ஆதாரம் 5. Help, support; துணை கெட்டார்க்குச் சார்வாய் (குறள், 15). 6. Means; உபாயம் உயருஞ் சார்விலா வுயிர் (கம்பரா. நாட்டு 55). 7.Attachment; பற்று (சூடா.). 8. Vicinity, neigh-bourhood; அயலிடம். (W.) 9. Partiality; ஒருதலைப்பட்சம். 10. See சார்வோலை (J.)

பின்சாரப்  - பின்பு  புகலிடம்
பொய்யாமை - poyyāmai   n. id + id. 1.Being truthful; பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 2. Impartiality;நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல்(கலித். 99).
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
சான்றோர்கள் தொகுத்த அறங்களில் எல்லாம் சிறந்த அறம் என்னவென்றால் நிச்சயமாக பிற உயிர்களை கொல்லாதிருத்தல் ஆகும்.  கொல்லாமைக்கு அடுத்து மனிதன் பற்றுடன் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த அறம் என்னவென்றால் பொய் சொல்லாதிருத்தலும் நடுநிலைமை தவறாதிருத்தலும் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஏன் பொய்யாமை கொல்லாமை அதிகாரத்தில் வரவேண்டும்?
பௌத்தமும் சமணமும் இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு செல்லபட்டன. அம்மதங்கள் பரவுவதற்கு வைசியர்கள் பொருளுதவிசெய்தனர். இவ்விரு மதங்களுமே பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, பாலியல் ஒழுக்கம் என்னும் ஐந்து நெறிகளையே அடிப்படைகளாக இந்தியாவெங்கும் பரப்பின. திருவள்ளுவர் சமணர் காலத்தில் வாழ்ந்ததனால் இந்த கொல்லாமை அதிகாரத்தில் பொய்யாமை வந்திருக்கலாம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒன்றாக நல்ல துயிரோம்பல்” (அறநெறி 62)

மு.வரதராசனார் உரை
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

பரிமேலழகர் உரை
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

சிறப்பீனும் செல்வம் பெறினும்

குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு 
ஈனும் - இயன்று தரும்
செல்வம் - செல்வம் (பணம்) உட்பட மற்ற பல செல்வங்களினையும் (கல்வி, கேள்வி, நல்லோர் சேர்க்கை, உயர்ந்தபதவிகள் உள்ளிட்ட எல்லா செல்வங்களையும்); கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
பெறினும் - பெற்றாலும்
பிறர்க்கு - பிற உயிர்களுக்கு
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செய்யாமை - செய்யாதிருத்தல்
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
அற்றார் - பொருள் இல்லாதவர்; முனிவர் ( 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர்.)
கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

முழுப்பொருள்
ஒருவருக்கு பிற உயிர்களுக்கும் சக மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய (கீழ்மையான, மன வருத்தம் தரக்கூடிய, துன்பம் தரக்கூடிய) செயல்கள்  செய்வதனால் பல (தலைமை பொறுப்புகள், பெருமை, பட்டங்கள், மதிப்பு, அன்பளிப்பு, இன்பம், இன்ப சுற்றுலாக்கள், விஷேச கேளிக்கைகள் போன்ற) சிறப்புகளும்,  (கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்;  நல்லோர் சேர்க்கை, பொன், பொருள் போன்ற) செல்வங்களும் கிடைக்குமாயினும் பிறருக்கு தீங்கு செய்யாது இருப்பதே மனதில் மாசு அல்லாதவர்களின் மனதிட்பமாகவும் வினைதிட்பமாகவும் கொள்கையாகவும் இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். அதுவே அவர்களுக்கு வலிமை சேர்க்கும்.

இங்கே திருவள்ளுவர் ஒருவருக்கு சிறப்பும் செல்வமும் இல்லாத நேரத்தில் அவை பெறுவதற்கு வாய்ப்பு அமைந்தாலும் இன்னா செய்யாதே என்று சொல்வதால் சிறப்பும் செல்வமும் ஏற்கனவே இருப்பவர்களுக்கும் இன்னா செய்யாதே என்றென்பது இயல்பாகவே பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.)

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லறம் ஒன்றே நலம் தரும்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும்

குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
வெகுளாமை - கோபியாமை, சினவாமை

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல்.
வெகுளியை - வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
தீய -  தீமை 1. Evil, wicked,sinful; தீமையான. 2. Fallacious; போலியான.
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.
அதனான் - அதனால்
வரும் - வரும்

முழுப்பொருள்
ஒருவர் நமக்கு தவறே செய்தாலும், சினம் ஊட்டும் படி செயல்கள் செய்தாலும் அதனை மறத்தலே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர். அதனை விட்டுவிட்டு, வலியார் ஒப்பார் எளியோர் என்று யாரானாலும் பிறரிடத்தில் கோபம் கொண்டால் அது நமக்கு தீய விளைவுகளையே விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக நாம் சினம் கொண்டால் நம் மனது ஒரு பதபதட்டுடன் இருக்கும். ஒரு தடவை கோபமாக வண்டி ஓட்டியதால் ஏதிரே சூரிய ஒளியை காண முடியாமல் கீழே பல்லத்தை கவனிக்காமல் கீழ விழுந்து அடிப்பட்டுக்கொண்டேன். இதே போல, பலர் சினத்தை மனதில் வைத்துக்கொண்டு உறவுகளை பேணாமல் அழித்துக்கொள்வர். அது ஒரு விதத்தில் தன்னுடைய நேரத்தையும் எடுக்கும், மனதில் மாசாக தங்கும்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”

பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது

பரிமேலழகர் உரை
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.