Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இறந்த வெகுளியின் தீதே

குறள் 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]

பொருள்
பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

இறந்த - இற - iṟa   VII. v. i. die, expire, perish, சா; 2. become obsolete, பழமையாகு; 3. pass (as time) செல்லு; 4. exceed the measure or limit, கட; 5. excel, be preeminent, மிகு.
வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.
வெகுளியின்  - சினத்தை விட
தீது - தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன
தீதே - குற்றமே 
சிறந்த - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
உவகை - மகிழ்ச்சி; களிப்பு; அன்பு; காமம்; இன்பச்சுவை
மகிழ்ச்சியின் - மகிழ்ச்சி, உவகை; மகிழ்ச்சியணி; சந்தோஷம் 
சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

முழுப்பொருள்
ஒருவருக்கு சினம் மிகுந்த தீமையை தரும் என்று நாம் முன்னரே  [குறள் 431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து] [குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற] பார்த்தோம். சில சமயங்களில் அளவுக்கு மிகுந்து வரும் கோபத்தினால் நமக்கு மிகுந்த தீமை உண்டாகும். நம் வாழ்விற்கு பங்கமாக அமையும். ஆனால் அதை விட தீது சோர்வாகும். இச்சோர்வினால் நமக்கு பல கேடு உருவாகும். உதாரணமாக மறதி, செயலற்ற தன்மை, தேக்கம் ஆகியவை. ஆதலால் அதீத மகிழ்ச்சியினில் முக்கியமாக நாம் ஒரு சாதனை படைத்த பின்பு வரும் (உதாரணமாக ஒரு மிக பெரிய இடத்தில் வேலை வாங்குவது, ஒரு தொழிலில் அதிகம் லாபம் ஈட்டுவது) சோர்வென்பது நம்மை அழிக்கும். நமக்கு மறதியை கொடுக்கும். நம் வாள்கள் துரு பிடிக்கும். அறிவு மங்கும். உடல் தளர்ச்சி பெரும். புகழ் குன்றும். மொத்தத்தில் தேக்கம் உண்டாகும். இது நல்லது கிடையாது. இது நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் முழுமையை நோக்கி கொண்டு செல்லாமல் கீழ்மை நோக்கி கொண்டு செல்லும்.

மறதி/சோர்வு என்று மட்டும் சொல்லாமல்? ஏன் சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு என்று கூறினார்? இரண்டு வகையாக மனிதர்களை பிரிக்கலாம். ஒருவர் அறிவுடையோர். மற்றொருவர் அறிவில்லாதவர்கள். அறிவில்லாதவர்கள் புற உலக கேளிக்கை அளிக்கும் சந்தோஷங்களில் திளைக்கிறார்கள். அப்படிப் திளைக்கும் பொழுது தங்களது கடமைகளையும் / பொறுப்புகளையும் / செயல்களையும் மறக்கிறார்கள். அறிவுடையவர்களோ தான் பெற்ற வெற்றிகளினால் அக உலகில் சந்தோஷமடைந்து திளைக்கிறார்கள். அப்படித் திளைக்கும் பொழுது தன்னை வளர்த்துக்கொள்ள தன்னைப் புதிப்பித்துக்கொள்ள மறந்துவிடுகிறார்கள். இவையாவும் தேக்கத்தின் துவக்கம். அழிவின் துவக்கம். தீதானது.

வாழ்வு ஒரு ஒட்டம் அல்ல எனினும், முன்னேற்றமும் மேம்படுதலும் ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியம். சாதனைகளில் திளைத்துக்கொண்டு சோர்வு வர வழிவிடாமல் மேன்மேல் வளர தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வுலகத்தில் மனிதர்கள் செய்யக்கூடியவை பல உண்டு. அதனால் தான் வள்ளுவர் சொன்னார்.  

மகாத்மா காந்தியைப் பாருங்கள் அவர் அளவு உழைத்தவர்கள் மிக மிக அரிது. அவர் ஒருப்பக்கம் சுதந்திரப்போரட்டத்திற்கு பாடுபாட்டாலும், அவர் தொடர்ந்து இந்தியா முழுவதும் பயணங்களும், தினமும் பலர் கடிதங்களும் பதில்களும், கிராம முன்னேற்றம், இயற்கை மருத்துவம் போன்ற பலதளங்களில் செயலாற்றிக்கொண்டு இருந்தார். ஒரு மனிதனின் செயலாற்றும் திறன் ஒருவர் நினைத்துப்பார்க்கக்கூடியதைவிட மிக மிக அதிகம். அதற்கு ஒருவர் உணரவேண்டியது வாழ்வில் சோர்வினாலோ எக்காராணத்தினாலோ ஒரு நிமிடத்தையும் வீணடிக்கலாகாது என்பது தான். 

ஓடும் நதியில் நோய் இல்லை என்று நாம் அறிவோம். தேங்கிய நீர் ஆபத்தானது என்றும் அறிவோம். அதனால் தேங்காமல் நதி போன்று சோம்பல் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து தற்காத்தலின் பகையழித்தல் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாரால் பயனுள்ளது இச்சோர்வுஇல்வழியாகலின் , இது சுற்றம் தழாலின் பின் வைக்கப்பட்டது.]

சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. 
(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று).

மணக்குடவர் உரை
மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

மு.வரதராசனார் உரை
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

No comments:

Post a Comment