Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தம்பொருள் என்பதம் மக்கள்

குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்ப - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

தம்தம்  - -  அவரவருடைய

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினையால் - செயல்களால்

வரும் - வருமானம்

முழுப்பொருள் 
ஒருவருடைய மெய்யான செல்வம் எனப்படுவது அவருடைய பிள்ளைகள் ஆகும். அவ்வாறே நாம் அறிவோம். மற்ற பொருள்கள் எல்லாம் செயல்களினால் ஈட்டக்கூடியது. ஆனால் அவரவர் செல்வம் எனும் நம் பிள்ளைகள் நாம் (/பெற்றோர்கள்) செய்த செயல்களின் பயன்களையும் அறுவடை செய்வார்கள். 

குணச்செல்வம், குலச்செல்வம், பொருட்செல்வம், செவிச் செல்வம், என்றிவை முதலாக உலகத்து எண்ணி வருகின்ற செல்வங்கள் அனைத்தினும் இனிய செல்வமாவது அறிவுடைய புதல்வரைப் பெறுதல். 
புதல்வருக்குச் செல்வமாவது பெரிய தகைமையாகிய தவத்தினால் வருவது. 

குழந்தைகள் நம்மைப் பார்த்து வளர்கிறார்கள். ஆதலால் அவர்கள் முன்னே காண்பித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி நமது கோபம் குழந்தைகளை ஆழ்மனதில் வெகுவாக பாதிக்கும். 

பிள்ளைகள் மீது அன்பும் வேண்டும், கண்டிப்பும் வேண்டும். ஆனால் பெற்றோரின் கண்டிப்பு அளவு மீறக்கூடாது. இல்லை என்றால் பிள்ளைகள் பெற்றோர்களை நெடுங்காலத்திற்கு வெறுப்பார்கள். 

மேலும்
1) திருமணத்திற்கு முன்பு (குழந்தை கருத்தரிப்பதிற்கு முன்பு) : நாம் நல்லவற்றை செய்தால் நமது பிள்ளைகள் நல்ல பயன்களை அனுபவிப்பர். இல்லையென்றால் அவர்களும் தீப்பயன்களை நம்முடன் அனுபவிக்கும் சூழலில் வளர்வர். ஆதலால் நம் எண்ணங்களை தூய்மையாக வைத்தல் வேண்டும். நமது உடலினை உறுதி செய்து நோய்வாய்ப்படாமல் வைத்திருத்தல் வேண்டும். அப்படி செய்யவில்லையென்றால் நம் நோய்கள் ஒரு நெடும் சங்கிலியாக வளர்ந்துகொண்டே போகும்.

மேற்சொன்ன குறளையும் இக்குறளுடன் இணைத்து பொருள் கொண்டால் நம் பொருளான பிள்ளைகள் புகழுடன் தோன்ற வாய்ப்புகளை நமது செயல்களின் மூலம் ஏற்படுத்தித் தரமுடியும். நாம் பிரம்மச்சர்ய காலங்களில் நாம் எப்படி வளர்கிறோம் என்றென்பது மிக முக்கியம். நமது கல்வி, ஒழுக்கம், செயல், குணம், அன்பு, அருள், உடல்நலம், உணவுமுறை போன்றவை முக்கியமான காரணிகளாக இருக்கும். பிள்ளைகளை தவம் இருந்துப் பெற வேண்டும் என்று எனது யோகாச்சாரியார் கூறுவார். அதாவது எனக்கும் இவ்வுலகத்திற்கும் நல்ல பிள்ளை வேண்டும் என்ற நல்லெண்ணங்களுடன் மனதாலும் உடலாலும் தவம் செய்து பிள்ளைப்பெற வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்லவற்றை கொடுக்கும். குழந்தைகளும் ஓரளவு வளர்ந்த பின்பு (அதுவரையில் பெற்றோர்கள் நன்கு வளர்க்க வேண்டும்) மறுமையில் (அடுத்த பிறவியில்) புகழுடன் தோன்ற இம்மையில் (இப்பிறவியில்) நற்செயல்களை செய்து நற்குணங்களை கொண்டுப் புகழுடன் சிறந்து விளங்க வேண்டும்.  இவ்வாழ்வு நெற்கதிர் பயிர்கள் போன்று ஒரு தொடர் சங்கிலி என்று உணர வேண்டும். நல்ல விதைகளை உற்பத்தி செய்வது நமது கடமை என எண்ணவேண்டும். அதற்கு தான் முதலில் ஒழுங்காக/புகழுடன் இருத்தல் வேண்டும். 


2) திருமணத்திற்கு பின்பு (குழந்தை பிறந்தபின்பு) :  நாம் எப்படி நமது பிள்ளைகளை வளர்க்கிறோம் என்பதன்படியே அவர்கள் வளர்கிறார்கள்  அவர்களின் வாழ்வும் அமையும்.

3) திருமணம் ஆனபின்பு குழந்தை செல்வத்தை பொருளாதார முன்னேற்றத்திற்காக தள்ளிப்போடக்கூடாது. கருத்தரிக்க உடல் தகுதியும் மன ஒற்றுமையும் தேவையெனில் அதனை வளர்த்து குழந்தை செல்வத்தை ஈட்டலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம், வேலை சார்ந்த குறிக்கோள்களை அடைவதை லட்சியமாய் வைத்துக்கொள்ள கூடாது. குழந்தையை குறிக்கோள்களை அடைவதற்கு தடையாக பார்க்ககூடாது. பொருள் ஈட்டியபின்பு குழந்தை அமையவில்லையென்றால் ஈன்ற பொருளால் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அதுமட்டும் இன்றி குழந்தை பிறந்த பின்பு எப்பேர்ப்பட்ட பொருளையும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் ஈன்றுவிட முடியும். ஆனால் குழந்தை ஈன்றுவது அப்படி அல்ல. அது இயற்கை சார்ந்தது.

ஆதலால் வாழ்வை ஒருமுறை பிறந்து வளர்ந்தோம் என்று நினைக்காமல், ஒரு நெற்பயிர் எப்படி அடுத்தடுத்து தலைமுறை ஒரு தொடர் சங்கிலியாக விளைந்து வளர்கிறதோ அதுபோல் வாழ்வையும் நினைத்து நாமும் நல்லவற்றை செய்து நமது பிள்ளைகளையும் நன்கு வளர்க்க வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

எனக்கு இங்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை பயிற்சியில் வாழ்வு என்பது எப்படிப்பட்ட ஒரு தொடர்உயிர்சங்கிலி என்று பயிற்றுவிக்கப்படும். அதில் நமது குணநலன்கள், நமது நோய்கள், நம் வினையால் ஈன்றவை மரபணுவில் இருக்கும், அதனை மாற்றவேண்டும் அல்லது நோய்களை போக்க வேண்டும் என்றால் நாம் எவ்வளவு உழைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி செய்தால் நாமும் நன்றாக இருப்போம், நமது பிள்ளைகளும் நன்றாக இருப்பார்கள்.

வேதாத்திரி மகரிஷி 

சமீபத்தில் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த தந்தைமகன் உறவை புரிந்துகொள்ள முயன்றபோது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
என்றவரி வந்து நினைவை தட்டியது. பொருள் என்று நாம் இங்கே உணர்வனவற்றில் குழந்தைகள்தான் உண்மையான பொருள். அது நாம் செய்த ஊழ்வினையால் அமையும்.

நெடுந்தொலைவு செல்லவைத்தது

ஜெ

சகதேவன் “ஒவ்வொரு புல்லும் தன் தலைமுறைகள் வாழ்ந்த அறிதலை சிறுவிதைமணியாக்கி தன் தலையில் சூடியிருக்கிறது. தான் மடியும்போது எஞ்சவிட்டுச் செல்கிறது” என்றான். அவனை திரும்பி நோக்கிய தருமன் சில கணங்களுக்குப்பின் “ஆம், நம்மில் நாளை எஞ்சுமெனில் அது அறிவென்றோ உணர்வென்றோ இருக்காது. உடலில் பழக்கமென, உள்ளத்தில் கனவென, உயிரில் நுண்மையென மறைந்திருக்கும். அதை அறிய இயலாது, நம்பலாம்” என்றார். சகதேவன் சிரித்து “எப்போதும் அறிய இயலாதவற்றை அல்லவா நம்புகிறோம்?” என்றான்.


”என் மனைவி நாகாலாந்தில் இருந்து இங்கே வீட்டுவேலைக்கு வந்தவள். எங்களுக்கு நான்கு மகன்கள். அவர்களுக்கு மொத்தமாக பதிமூன்று குழந்தைகள். அவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அமெரிக்காவில் என் பேத்தியும் பேரனும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எட்டு, பத்து, பதிமூன்று வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் ஆலமரம்போல பரவிவிட்டேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் என் மனைவி காலமானாள். நான் கல்கத்தாவில் என் மூத்த பேரனின் வீட்டில் இருக்கிறேன். எந்தக் குறையும் இல்லை. இயல்பாக நிம்மதியாக உயிர் துறப்பேன்.”


மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜான்சி ரயில் நிலையம் மிகப்பிரமாண்டமானது இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ரயில் பாதைகள் அங்குதான் சந்தித்துக் கொள்கின்றன. அது ஒரு சிலுவையின் மையம் போல. அந்த ஊர் அந்த ரயில்வே நிலையத்து அளவுக்கு பெரியது அல்ல. அன்று அது பெரும்பாலும் தகரக் கூரையிட்ட சிறிய வீடுகளும், குப்பைக் கூளங்களும் இடிபாடுகளும், மிகப்பழமையான கட்டிடங்களும் கொண்ட புழுதிமூடிய ஊர்.

அவ்வூருக்கு சற்று அப்பால் பிரம்மாண்டமான ஜான்சி கோட்டை இருந்தது. ஜான்சி ஊரின் சிறப்பு அங்கு ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்தார் என்பது தான். இக்காரணத்தால் என் ஊரில் பெண்களுக்கு ஜான்சி என்று பெயர் போட்டிருப்பார்கள். என்னுடனேயே இரண்டு ஜான்சி படித்தனர். அது ஊரின் பெயர் என்பது எனக்கே அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது. ஜான்சியின் கைவிடப்பட்ட பெரிய கோட்டையை சுற்றிப்பார்த்தேன். நான் சென்ற போது அங்கே ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தார்கள். ஜான்சிராணிலட்சுமிபாயின் அரண்மனையைச் சேர்ந்த பிறபெண்கள் தீயில் குதித்து ஜோகர் செய்து கொண்ட குழி ஒன்றைக் காட்டினார்கள்.

முட்புதர்கள் அடர்ந்திருந்த பெரிய கற்சுவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்தபோது பழமையையும் தனிமையையும் உணர்ந்து கொண்டிருந்தேன். சென்ற காலம் நம்மைத் தனியர்களாக்குகிறது. நாம் வாழும் காலத்தில் மட்டுமே நமக்குத் துணைவர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான பருந்து நம்மை நம் கூட்டத்திலிருந்து தன் கால்களால் தூக்கிக் கொண்டு போவது போல கடந்த காலம் கொண்டு சென்று வேறு இடத்தில் போட்டுவிடுகிறது

மூச்சுத் திணற வைக்கும் அனுபவம் அது. இதிலிருந்து எப்படியோ வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால் அதன் கனவுத்தன்மை காரணமாக மீண்டும் அதனுள் புகுந்து கொள்ளும் ஆவலும் ஏற்படும். இத்தனை ஆண்டுகளாக அந்த மோகம் கூடிக்கூடித்தான் வருகிறது.

ஜான்சியிலியிருந்து திரும்பி குவாலியருக்கு ரயில் ஏறும்பொருட்டு ரயில் நிலையத்துக்கு வந்தேன். ரயில் நிலையத்துக்கு சுற்றும் உள்ள சிறிய தகரக்கூரையிட்ட உணவகங்களை நோக்கியபடி நடந்தேன். நான் சோறு சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டிருந்தது. எங்காவது சோறு கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று நடந்தேன். அன்றெல்லாம் சோறு சமைத்து பெரிய கூம்புத் தாம்பாளங்களில் மலைபோல் குவித்து முன்னால் வைத்திருப்பார்கள். சோறு கிடைக்கும் என்பதற்கான அடையாளம் அதுதான் எழுதி வைக்கும் வழக்கம் இல்லை, வாசிப்பவர்கள் குறைவாக இருந்திருக்கலாம்.

இரண்டு முறை சுற்றியபோது ஒரு உணவகத்தின் முன்னால் சோற்றுக் குவியலைப் பார்த்தேன் அன்று எனக்கு பக்தன் சிவலிங்கத்தைப் பார்த்தது போன்ற ஒரு பரவசம் ஏற்பட்டது. நேராகச் சென்று அதைச் சுட்டிக்காட்டி “கானா?’ என்றேன். “சாவல்!” என்று சொல்லி உள்ளே வந்து அமரும்படி சொன்னார். “டால்?” என்றேன். இருக்கிறது என்று தலையசைத்தார். பிறகு “மூர்த்தி!” என்று அவர் அழைக்க உள்ளிருந்து ஒருவர் வந்து இந்தியில் என்னிடம் சாவல், டால் இரண்டுமே இருக்கிறது. சப்ஜி இருக்கிறது சாம்பார் இருக்கிறது என்றார்,

“சாம்பாரா ?”என்று நான் கேட்டேன். அவர் என்னிடம் “நீங்கள் தமிழா?” என்றார். நான் ஆம் என்று தலையசைத்தேன். “எந்த ஊர்?” என்றார். “நாகர்கோவில்” என்றேன். “நான் மதுரை சார். உள்ளே வாங்க” என்று அழைத்தார் மூர்த்தி.

கடை உரிமையாளர் என்னைப்பார்த்து புன்னகைத்து “சாப்பிடுங்கள் சார்” என்று தமிழில் சொன்னார். ‘இத்தனை தொலைவில் வந்து கடை வைத்திருக்கிறீர்கள்?’ என்றேன். ”வந்தாச்சு” என்றார். அந்தக் கடையில் அப்போது எவருமே உணவருந்திக் கொண்டிருக்கவில்லை. மூர்த்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றார் உள்ளே தகர மேஜையில் அமரவைத்து உணவு பரிமாறினார்.

நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காய்கறிக்கூட்டுடனும் மோருடனும் ரசத்துடனும் சமையலறையில் இருந்து வெளியே வந்து பரிமாறி சென்றாள் ஒரு கரிய பெண். காதில் பெரிய ஜிமிக்கி அணிந்திருந்தாள். நெற்றியில் அன்று பரவத்தொடங்கியிருந்த பிந்தி என்று அழைக்கப்படும் தங்க நிற வெல்வெட் பொட்டு ஒட்டியிருந்தாள். மூர்த்தியிடம் சிரித்துப்பேசி ஏதோ இந்தியில் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள்.

”உரிமையாளரின் மனைவி சார். நாங்கள் மூன்று பேர்தான் இந்த ஹோட்டலை நடத்துகிறோம்” என்றார் மூர்த்தி. “அவர்கள் பெயர் என்ன?” என்று கேட்டேன். “சாந்தா” என்று அவர் சொன்னார். சாந்தா மீண்டும் வந்து எனக்கு மேலதிகமான ஒரு அப்பளத்தை அளித்தாள். நான் அவளைப்பார்த்து சிரிக்க என்னைப்பார்த்து சிரித்து “கல்யாணமாகிவிட்டதா?” என்றார் “இல்லை” என்றேன். “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள்” என்றாள். “ஏன்?” என்றேன். “இல்லாவிட்டால் இப்படித்தான் ஊர் ஊராக செல்லவேண்டியிருக்கும்” என்றாள். “நான் அதனால்தான் கல்யாணம் செய்யாமல் இருக்கிறேன் ”என்றேன். சிரித்துக் கொண்டு அவள் உள்ளே சென்றாள்.

மூர்த்தி என்னிடம் என்னுடைய வேலை மற்றும் ஊர் குடும்பம் அம்மா அப்பா எல்லாவற்றையும் பற்றி பேசினார். என் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள் என்று சொன்னபோது வருத்தப்பட்டு “அவள் சொன்னது சரிதான் சார். உங்களைப்பார்த்ததுமே தாய் தந்தை இல்லாதவர் என்று தெரிந்திருக்கிறது ஆகவே தான் உங்களை திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள். மிகவும் நுட்பமானவள். உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றார். நான் சிரித்துவிட்டு “சரி” என்றேன்.

சாப்பிட்டு கைகழுவி பணம் கொடுத்துவிட்டு நான் கிளம்பியபோது மூர்த்தியும் வேட்டியை மடித்துக் கட்டியபடி என்னுடன் வந்தார். நாங்கள் சாலையில் நடந்தபோது “இங்கெல்லாம் வேட்டியை இப்படி மடித்துக் கட்டமாட்டார்கள். நான் ஆரம்பத்தில் வந்த்போது இப்படிக்கட்டக்கூடாது என்று என்னிடம் பலபேர் சொன்னார்கள். இப்படி வேட்டியை கட்டுவது நம் மதராசிகளுடைய உரிமை. நான் அதை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்? இவர்கள் யாராவது இவர்களுடைய பழக்கத்தை விட்டுக் கொடுக்கிறார்களா? மதுரையில் அடகுக் கடை வைத்திருக்கும் சேட்டுகள் கூட காந்தி குல்லாய் வைத்துக் கொண்டு தானே அலைகிறார்கள்?” என்றார் மூர்த்தி. “ஆம் விடவே கூடாது” என்று நான் சொன்னேன்.

மூர்த்தி என்னிடம் “ஒரு டீ சாப்பிடலாம் சார்” என்றார். “டீயா இப்போது தானே சோறு சாப்பிட்டேன்?” என்றேன். “இங்கெல்லாம் சோறுக்கு பிறகு டீ சாப்பிடும் வழக்கம் உண்டு வாருங்கள்” என்று கூட்டிச் சென்று ஒரு டீக்கடையில் டீக்கு உத்தரவிட்டார். சிறிய மண் கோப்பைகளில் டீ வந்தது. மிக கசப்பான கொழுப்பான டீ. அதை ஒரு கீர் என்று தான் சொல்லவேண்டும்.

மூர்த்தி “இங்கெல்லாம் இப்படித்தான் வாயில் ஊறுவது போல டீ போடுகிறார்கள். ஆரம்பத்தில் எனக்கு குமட்டல் வரும் இப்போது இது பழகிவிட்டது. ஒரு போதைப்பொருள் மாதிரி அதை சாப்பிடுகிறேன் ” என்றார்.

பிறகு அந்தக் கடையிலிருந்து ஒரு மாவா வாங்கி அதைக் கையில் வைத்து அடித்து கசக்கி தூளாக்கி வாயில் ஈறுகளுக்கு இடையில் செருகிக் கொண்டார். ”இது இல்லையென்றால் இங்கு நிம்மதியாக இருக்கமுடியாது சார்” என்றார். ”ஏன்?” என்றேன். “இதைப் போட்டுவிட்டால் எல்லா படபடப்பும் அடங்கிவிடும். இல்லாவிட்டால் கைகள் நடுங்கும் எங்கோ ரயிலைத் தவறவிட்டது போலவே இருக்கும்” என்றார்.

“முன்பு இந்தப் பழக்கம் இருந்ததா? என்றேன். “இல்ல சார் இதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. இங்கே வந்தபிறகு தான் இது ஆரம்பித்தது. ஆனால் இதைப் போட்டால் எவ்வளவு நேரமாயிற்றென்று தெரியாது. காலையா மாலையா என்று கூட தெரியாது. நமது வேலையை நாம் செய்து கொண்டே இருப்போம். எவ்வளவு வேலை செய்தோம் என்று கூட நமக்குத் தெரியாது. நானெல்லாம் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சப்பாத்திகள் போட்ட நாள் கூட உண்டு. என்னைக் கேட்டால் எத்தனை சப்பாத்திகள் போட்டேன் ஐந்தா ஐந்தாயிரமா என்று கூட சொல்ல முடியாது”.

“கடை எப்போது வியாபாரம் ஆகும்?” என்றேன். “இங்கெல்லாம் வியாபாரம் என்பதெல்லாம் சாயங்காலம் மட்டும் தான் இங்குள்ளவர்கள் பகலில் சாப்பிடுவது மிகவும் குறைவு. பார்த்தீர்களா எல்லாரும் மெலிந்து வயிறு ஒட்டித்தான் இருக்கிறார்கள். இரண்டு வேளைக்கு மேல் உணவுண்பவர்களை இங்கே பார்க்கமுடியாது வீடுகளைப்பாருங்கள் தகரக்கூரைப் போட்டு மேலே கல்லை தூக்கி வைத்திருக்கிறார்கள். நமது ஊரே கொஞ்சம் தரித்திரமாகத்தான் இருக்கும். இது அதைவிடப்பரிதாபமாக இருக்கிறது” என்றார்.

“அப்படியென்றால் ஏன் இங்கு வந்து கடை வைத்தீர்கள் ?’ என்று நான் கேட்டேன்.” நான் கடை வைக்கவில்லை நான் வேலைக்கு வந்தேன்” என்றார். “வேலைக்கா, இவ்வளவுதூரமா?” என்றேன். “நீங்கள் பார்த்தீர்களே சாந்தா, அவள் என்னுடைய மனைவிதான்” என்றார். “உரிமையாளரின் மனைவி என்று சொன்னீர்களே?” என்றேன். “அந்த உரிமையாளர் அங்கே எங்கள் வீட்டுப்பக்கத்தில் ஒரு சிறிய டீக்கடை வைத்திருந்தார். நான் அங்கு பழைய இரும்பு பொருட்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் இவள் என்னைவிட்டு இவருடன் ஓடிவந்துவிட்டாள்” என்றார்.

எனக்கு அவர் என்ன சொல்லவருகிறார் என்பதே குத்துமதிப்பாகத்தான் புரிந்தது. “நான் அவளை தேடாத இடம் கிடையாது. எந்தத் தகவலும் இல்லை. அப்போது தான் இவர் கடையை காலி செய்துவிட்டுப்போன தகவல் தெரிந்தது. ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. ஏனென்றால் பலமுறை இவர்கள் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொள்வதை வைத்து ஏதோ உறவிருக்கும் என்று நான் ஊகித்திருந்தேன். ஆகவே இவருடைய வீட்டுக்குச் சென்று கேட்டேன். அங்கும் எதுவும் தகவல் தெரியவில்லை. இவருடைய மனைவி முன்னால் இறந்துவிட்டிருந்தார். தனியாகத்தான் இருந்தார்”

”நான் விசாரித்துக் கொண்டே இருந்தேன்” என்றார் மூர்த்தி “ஒருவருடம் கழித்து தான் இவருடைய கடிதம் ஒன்று இவர் தங்கைக்கு வந்தது. அந்த கடிதத்திலிருந்த விலாசத்தை தெரிந்து கொண்டு நேராக இங்கே வந்துவிட்டேன்” என்றார். நான் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். “நான் வந்து இவளை அடித்தேன். அவள் என்னைத் திருப்பி அடித்து என்னுடன் வரமாட்டேன் என்று சொன்னாள். நான் கெஞ்சினேன். காலில் விழுந்து அழுதேன் என்னை கைவிட்டுவிட வேண்டாம் என்று சொன்னேன்”

“அவள் என்ன சொன்னா?” என்றேன். “பெண்களின் மனம் இறுகிவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது சார். இரும்பு போல. ஈவு இரக்கம் ஒன்றும் இல்லை” என்றார் மூர்த்தி. “அவர் ஒன்றும் சொல்லவில்லையா?” என்றேன். “அவள் வந்தால் கூட்டிக் கொண்டு போ எனக்கொன்றும் பிரச்னையில்லை என்று சொன்னார். எனக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. நான் இரண்டு நாட்கள் அந்தக் கடைக்கு வெளியே சாலையில் ஒரு கல்லிலே தான் அமர்ந்திருந்தேன். இரண்டாவது நாள் அவளே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்து சப்பாத்தியும் டாலும் தந்தாள். நான் அதை சாப்பிட்டுவிட்டு அழுதேன் அவள் இங்கேயே இருந்து கொள் என்று சொன்னாள். நான் சரி என்று சொன்னேன்.”

“உங்கள் மனைவியாகவா இருக்கிறாள்?” என்றேன். “இல்லை சார் நான் அவர்கள் வீட்டு வேலையாளாக இருக்கிறேன். அவருக்குத்தான் மனைவியாக இருக்கிறாள். ஆனால் நான்தான் இங்கே சமையல் பரிமாறுதல் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன். நான் வந்த பிறகு தான் வியாபாரம் நன்றாக நடக்கிறது. எனக்கெல்லாம் ஒரு குறையுமில்லை சார். வேட்டி துணியெல்லாம் எடுத்துக் கொடுப்பார்கள். நல்ல சாப்பாடு. அவள் மிகவும் அன்பாகத்தான் இருக்கிறாள்” என்றார்.

“அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். “நான் வந்த பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த குழந்தை மூன்றாம் வகுப்பு படிக்கிறது. சின்னக்குழந்தைக்கு ஒருவயது” என்றார். “நீங்கள் அவளிடம் அன்பாகத்தான் பேசியது போலத் தெரிந்தது” என்றேன். “ஆமாம், அவர்கள் என்னை நன்றாகத்தானே பார்த்துக் கொள்கிறார்கள். நான் மிகவும் அன்பாகத்தான் இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறேன். மூத்தவளை ஒவ்வொரு நாளும் நான் தான் பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு கூட்டிக்கொண்டு வருகிறேன். சிறிய குழந்தையை இரவில் என் பக்கத்தில் படுக்கவைத்து தூங்குவதுண்டு” என்றார்.

நான் அவர் என்னிடம் இதையெல்லாம் சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். எப்படி இதை புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சொல்லாத ஏதோ அதில் இருந்தது. திடீரென்று அவர் “பிள்ளைக இருக்கில்ல சார்? இல்லேன்னா எப்பவோ விட்டுட்டு போயிருப்பேன். இந்தப்பிள்ளைகளால் தான் என் வாழ்க்கைக்கு அர்த்தமே வந்திருக்கிறது. நான் கடுமையாக வேலை செய்வதே இந்தப் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டுமென்பதற்காகத்தான்” என்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின.

நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு டெல்லிக்கு ரயில் ஏறினேன். நெடுநாட்கள் அவரது முகம் நினைவில் இருந்தது. எனக்கு குழந்தைகள் பிறந்தபோது தான் நான் ஒன்றை உணர்ந்தேன். பெண்ணுக்குள் இருப்பதற்கு சமானமான அன்னை ஒருத்தி ஆணுக்குள்ளும் இருக்கிறாள். ஆண்களை இவ்வாழ்க்கையில் கட்டிப்போட்டிருப்பது எது? அந்த தாய்மைதான்.

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
மறுபிறவி உண்டா? - 
மறுபிறவி என்பதே கிடையாது. அடுத்த ஜென்மத்தில் கழுதையாகப் பிறப்பாய், நாயாகப் பிறப்பாய் என்பதெல்லாம் ஏமாற்று வேலை; மூடநம்பிக்கை. மனிதன் தன் சந்ததி வழியாக அவன் கூறுகளை, மரபணுக்களை அவன் வாழ்நாளிலேயே பகுதி, பகுதியாகப் பிறவி எடுக்கிறான். உங்களுடைய நன்மைகளும், தீமைகளும் உங்கள் குழந்தை வழியாகப் பிரதிபலிக்கும். நீங்கள் உங்கள் இயல்பையெல்லாம் அங்குத் திணிக்கிறீர்கள். அதில் உங்கள் முகம், தோற்றம், நீங்கள் செய்த அக்கிரமங்களுக்கான வேதியியல் அமைப்பு இதெல்லாம் உங்கள் மகனை, பேரனை, அருகிலிருக்கும் உங்கள் மனைவியைக் கூடத் தாக்கும். அதிகமாகப் பாதிப்பது நமது நேரடிச் சந்ததியினரை. ஆக, நாம் நமது இயல்புகளை, எண்ணங்களை நமது சந்ததி வழியாக நாம் இருக்கும் பொழுதே மறுபிறவியாகக் காண்கிறோம்.

பூர்வஜென்ம பலன் என்பது பற்றி..
உங்கள் தாய், தந்தையர், மூதாதையர் நல்ல உணவுகள் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திருந்தால் நீங்கள் நலமாக இருப்பீர்கள். உங்கள் சந்ததி நோயாளியாக இருந்திருந்தால் மரபு வழி நீங்களும் நோயாளி ஆவீர்கள். இவைதாம் பூர்வ ஜென்ம பலன் என்பது. வேறு எதுவும் அல்ல.

ஒப்புமை
“பொன்போற் புதல்வனோடு” (ஜங். 265.4)
”பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்” (புறநா. 9:4)
“நம்பொருள்நம் மக்களென்று நச்சி” (சம்பந்தர். சீகாழித் திருவிராகம், 1)

குறிப்பு: பொருள் என்னும் சொல்லுக்கே மகன் என்னும் பொருள் உண்டு. “தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனித” (தேவாரம்)

மேலும்: அஷோக் உரை

நன்மக்கள் தம்மக்கள். ஆதலால் அவர்களும் நம் பொருள் என்று உணர்க.
நாம் எவ்வளவு பொருள் ஈட்டிப் எதிரியின் செறுக்கை அறுக்கலாம். ஆனால் அவை எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டும் தான் என்பதையும் நிலைவில் கொள்க.  நமது உண்மையான பொருள் நமது பிள்ளைகளை. அவர்களை சான்றோன் ஆக்குவது நமது கடமை.

7/G ரெய்ன்போ காலனி (7/G Rainbow Colony) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். “இனி எவனாவது கேப்பான் யேன் உன் பையன் தண்டமா இருக்கான்னு”. அந்தக் காட்சியையும், அதில் வரும் மேற்சொன்ன வசனத்தையும், “தம்பொருள் என்பதம் மக்கள்”, “செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்” திருக்குறள்களையும் தொடர்புப்படுத்திப் பார்த்தால் நமக்கான கடமைகளில் தெளிவுப் ஏற்படுவது உறுதி.




நாம் பைசா பைசாவாக சேர்த்து வைத்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு செல்லும் செல்வம் செல்வம் அல்ல என்பதை கீழ்க்காணும் பத்திகளில் எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளதை காணலாம் (முழுக் கட்டுரையை - திரள் தலைப்பில் வாசிக்கவும்)
ஆரல்வாய்மொழி தம்புரான் விளையாட்டு திருவிழாவில் பலநூறு இளைஞர்கள் தசை தெறிக்க எடையைத் தூக்கி இரவெல்லாம் துள்ளி ஆடுவதைப்பார்க்கையில் அந்த தசை வல்லமையும் உள எழுச்சியும் சற்றும் பயனின்றி அங்கு சிதறி அழிவதாக ஒரு நவீன உள்ளத்துக்குத் தோன்றும். அவர்களின் ‘காட்டு மனநிலை’யுடன் இணையாமல் நாசூக்காக விலகி நிற்பவன் நான் என எண்ணிக்கொள்வான்.  அந்த மனநிலையை உடைப்பதுதான் முதலில் செய்ய வேண்டியது இங்கு வாழ்வது என்பது நுகர் பொருட்களைத் தேடிக்கொள்வதன் பொருட்டும், பைசா பைசாவாக சேர்த்து மிஞ்சியவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு செல்லும்பொருட்டும் மட்டும் அல்ல.

தான் பயனுள்ள முறையில் மட்டுமே தன் உழைப்பையும் பொழுதையும் செலவழிக்கிறேன் என்று எண்ணிக்கொள்பவர் சற்று திரும்பி தன் வாழ்க்கையை] பார்க்கட்டும். நாளென மணியென பொழுதென செலவிட்டு ஈட்டும் பொருளை வைத்து தான் என்ன செய்கிறோம் என கணக்கிடட்டும். ஒரு மாத காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வீதம் உழைப்பவன் அதில் கிடைக்கும் ஒன்றேகால் லட்ச ரூபாயில் ஒரு ஆப்பிள் செல்போன் வாங்குகிறான். அந்த கருவி அளிக்கும் மிக மெல்லிய மகிழ்ச்சி மற்றும் சிறு ஆணவநிறைவுக்காக அவன் அளிக்கும் உழைப்பு ஏறத்தாழ இருநூற்று ஐம்பது மணி நேரம். திருவிழாவில் களியாடும்  ஓர் இளைஞனிடம் இதை இவ்வகையில் எடுத்துச்சொன்னால் அது அவனுக்கு முழுப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றக்கூடும். நம் வாழ்வின் இந்த கிறுக்குத்தனம் நம் கண்ணுக்குப்படுவதில்லை.

இருபது ஆண்டுகள் எந்த மகிழ்வும் இல்லாமல் எல்லாப்பொழுதையும் வெற்று உழைப்பிலே செலவழிக்கும்போது அதன் விளைவாக ஓரிரு கோடிகளைச் சேர்த்து மைந்தர்களுக்கு விட்டுச்செல்லும்போது மிகப்பயனுறு முறையில் வாழ்கிறோம் என்று எண்ணிக்கொள்கிறோம் .நாம் மகிழ்ச்சியாக ஒருநாள் இருப்பது வீண் செலவென்றோ வீண் பொழுதென்றோ எண்ணுகிறோமென்றால் நமது மூளை எவ்வாறு எதன்பொருட்டு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது? உண்மையில் இந்த அதீத முதலாளித்துவம் உழைப்பு பொருளீட்டல் அப்பொருளை நுகர்பொருளில் செலவழித்தல் ஆகிய மூன்றும் மட்டும் பயனுறு செயல் மற்ற அனைத்துமே வீணானதென்று நமக்கு சொல்கிறது.

நான் முதல் முறையாக திரைத்துறை பணிகளுக்காக நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று தங்கத்தொடங்கிய போது அடைந்த முதல் துணுக்குறலே அதுதான். திரும்பத்திரும்ப நடுத்தர வர்க்கத்திடமும் உயர்நடுத்தர வர்க்கத்திடமும் உழைத்துக்கொண்டே இருக்கவும், சிந்தாமல் சிதறாமல் பணம்சேர்த்து நுகர்பொருள் வாங்கி வாழவும், எஞ்சியவற்றை மைந்தர்களுக்குக் கொடுத்துவிட்டு செல்லவும் சொல்கிறார்கள். அது மட்டும் தான் வாழ்வின் ஒரே இலக்கும் சாரமும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும் நவமுதலாளித்துவப் பண்பாட்டின் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள் தாங்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் பெரும்பாலான நாட்களை களியாட்டுகளுக்கு செல்வழிக்கிறார்கள். கீழ்நிலைக் களியாட்டுகளிலிருந்து உயர்கலை சார்ந்த, உயர்இலக்கியம் சார்ந்த களியாட்டுகள் வரை திளைக்கிறார்கள். நம்மிடம் அவர்கள் சொல்வது அவர்களுக்கு பொருந்தும் விதி அல்ல என மெய்யாகவே நம்புகிறார்கள்.

ஆக அவர்கள் உருவாக்கிய உலகுதான் நம்மிடம் சொல்கிறது உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் பொருள் என்று. அவ்வுழைப்பின் பணத்தால் அவர்கள் விற்பதை வாங்குவதே நாம் செய்யவேண்டியது என்று. அவர்கள்  அவ்வாறு களியாட்டில் வாழும் பொருட்டு நாம் உழைக்கவேண்டும் என்கிறார்கள். பல்லக்குத்தூக்கிகளுக்கும் பல்லக்கில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வெவ்வேறு வாழ்க்கை நெறிகளையே நம் சமூகம் கூறுகிறது. பல்லக்கில் தூக்கி சுமப்பதே வாழ்வின் உயரிய இன்பம் என்று நம்மைச்சூழ்ந்திருப்போர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை நம்பி அவ்வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதன்பின்னர் தான் நான் இதைச் சொல்ல ஆரம்பித்தேன். இந்த மொத்த அமைப்பையும் உங்களால் இப்போது மாற்ற முடியாது. இதில் நீங்கள் உங்கள் வழியை முழுமையாகச் செதுக்கிக்கொள்வதும் பெரும் சிக்கல். மக்களை உழைப்பிலேயே கட்டிப்போடும்பொருட்டு இங்கே பொருளியல்நிலையின்மையை ஒவ்வொருவருக்கும் உருவாக்கி அளித்திருக்கிறார்கள். எக்கணமும் நாம் நடுத்தெருவில் நிற்க நேரலாம். தலைக்குப்பின் கூர்வாள் என அந்த நிலையின்மை காத்திருக்கிறது. ஆகவே உழைப்பதும், ஈட்டுவதும், சேமிப்பதும் இன்றியமையாததே. ஒருபோதும் அதை தவிர்த்துவிடாதீர்கள். ஆனால் களியாட்டு என்பதும் மகிழ்வென்பதும் மிக முக்கியமானவை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவற்றை நோக்கிச் செல்லுங்கள்.

நான் கீழ்நிலைக் களியாட்டுகளை பரிந்துரைப்பதில்லை. இங்கே களியாட்டு என்றாலே இன்று குடிதான். கண்மண் தெரியாத குடி. அத்தகைய களியாட்டுகள் உங்கள் குற்ற உணர்வைத் தூண்டி மேலும்  துயரை நோக்கி இட்டுச் செல்கின்றன. கீழ்நிலைக்களியாட்டுகள் என்பவை எவை? யார் அவற்றை கீழ்நிலைக்களியாட்டுகள் என்று சொல்ல முடியும்?. ஒரு வரையறையாக இவ்வாறு  சொல்லலாம். எவை நமது நுண்ணுணர்வை அறிவுக்கூர்மையை மழுங்கடிக்கின்றனவோ அவை கீழ்நிலைக்களியாட்டுக்கள். எவை நம் நுண்ணுணர்வை நமது அறிவை கூர்மையாக்கி மகிழ்விக்கின்றனவோ அவை உயர்நிலைக்களியாட்டுகள். பயணங்கள், நூல்கள், பண்பாட்டு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் திருவிழாக்களும் உயர்நிலைக்களியாட்டுகள்தான்.

ஏனென்றால் திருவிழாக்கள் பிற களியாட்டுகள் உள்ளடக்கி எழுந்த மாபெரும் நிகழ்வுகள், இன்றும் தமிழகத்தில் பெரும் திருவிழாக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப்பற்றி கற்றோர், சற்று மேம்பட்டவர் என்று தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அறியாதிருக்கிறார்கள். அத்திருவிழாக்களை அறியும்போது, அவற்றுடன் உளம் கரைந்து மகிழும்போது மிகப்பெரிய களியாட்டொன்றை நாம் அடைகிறோம். அவற்றில் கலந்து கொள்ளும் உளநிலை தனக்கு இல்லை என்பதைப்போல் பொய் ஒன்றுமில்லை. அப்படியெல்லாம் எந்த அறிவுஜீவியும் இங்கே சார்த்ரும் ஹைடெக்கருமாக இருத்தலியல் துயரில் எரிந்துகொண்டிருக்கவில்லை.

அந்த உளநிலை இல்லாத எவருமில்லை. எவரும் தன்னுள் உள்ள சிறுவர்களை முற்றாக இழந்தவர்கள் அல்ல. ஆரல்வாய்மொழியில் நான் கலந்துகொண்ட விழாவில் எழுபதும் எண்பதும் வயதானவர்கள் தங்களை மறந்து களியாடுவதைக் கண்டேன். அவர்களின் உள்ளிருந்து அந்த சிறுவன் இயல்பாக வெளிவருகிறான். அவனை எவரும் முற்றாக இழப்பதில்லை. அவன் வெளிவருவதற்கான தடைகளென்ன என்று பாருங்கள் அந்த தடைகளை மட்டும் அடையாளம் கண்டுவிட்டாலே போதும்.

பெரும்பாலான தருணங்களில்  அந்த விலக்கம் வெறும் எளிய அகங்காரம். சலிப்பூட்டும் சிறு பாவனை. அவ்விரண்டையும் களைந்து எனது அனைத்து தகுதிகளுடனும் நான் இங்கிருக்கும் பல்லாயிரம் பேரில் ஒருவன் மட்டுமே என்றும், இங்கு ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து திகழ்ந்து மறைந்த பல்லாயிரவர்களில் ஒருவன் மட்டுமே என்றும் ஆகும்போது நான் விடுதலை அடைகிறேன்.

ஆரல்வாய்மொழி என்னும் அந்த சிற்றூரை பார்த்துக் கொண்டிருக்கையில் எண்ணிக்கொண்டேன். இது இந்த பத்து நாள் ஒரு உயர்நிலையில் இருக்கும். அப்போது இங்கே அன்றாடத்தில் இருக்கும் ஆயிரம் கணக்குகள் இல்லை. சோர்வுகளும்  கசப்புகளும் இல்லை. இந்தப்பத்து நாள் இங்கு எழுவது இதுவே உருவாக்கிக் கொண்ட வாழ்க்கையின் உச்சநிலை. மீண்டும் ஒரு அன்றாட வாழ்க்கையை நோக்கி இது செல்லும். மீண்டும் மாறாச் சுழறின், ஆனால் அப்போதும் ஆழத்தில் ஓர் எதிர்ப்பார்ப்பு இருந்து கொண்டிருக்கும், அடுத்த திருவிழா வரவிருக்கிறது.

கிராமங்களின் வாழ்க்கையே அங்கு நிகழும் திருவிழாக்களால் பகுக்கப்பட்டு, கால அடையாளங்களையே வெவ்வேறு திருவிழாக்களைக்கொண்டு நிகழ்வதைப்  பார்க்கலாம். ஒருவர் தனது வாழ்க்கையையே வெவ்வேறு திருவிழாக்களைக்கொண்டு அடையாளப்படுத்துகிறார் என்றால் அவர் எத்தனை மகிழ்வுக்குரிய ஒரு வாழ்விலிருக்கிறார் என்று எண்ணி வியக்கிறேன். நேர்மாறாக சிலநாட்களுக்கு முன் ஒரு சென்னைவாழ் ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மொத்த கடந்தகாலத்தையும் அவர் வெள்ளங்கள், போராட்டங்கள், தேர்தல்கள் போன்ற நெருக்கடிகளைக் கொண்டே பகுத்து நினைவுகூர்கிறார் என்பதை கண்டேன். ஊடகங்கள் உருவாக்கி அளித்த செய்திகளால் அவர் தன் வாழ்க்கையை நிறைத்திருந்தார்.

நான் என் வாழ்க்கையை திரும்ப எண்ணும்போது தித்திக்கும் நினைவுகளைக்கொண்டு முகந்து அள்ளவேண்டும் என எண்ணிக்கொள்கிறேன்.

பரிமேலழகர் உரை
தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.

மு.வரதராசனார் உரை
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் வளர... இந்த சின்ன சின்ன தவறுகளை செய்யாதீர்கள் பெற்றோர்களே!
சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

``குழந்தைகளை `வழிக்குக் கொண்டு வருவது' எப்படி என்று பெற்றோரை கேட்டால், பெரும்பாலானவர்கள் `வாய்ப்பே இல்லைங்க' என்பார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களின் 75% பழக்கவழக்கங்களை, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, ஐந்து வயதுக்குள் அவர்களை செம்மைப்படுத்துவதன் மூலம் அவர்களிடம் நல்லொழுக்கப் பண்புகளை வளர்க்க முடியும்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தீப். டாக்டர் சொல்லும் முக்கிய ஆலோசனைகளை டேக் நோட் பெற்றோர்களே...

சொல்லாதீர்கள்... செய்துகாட்டுங்கள்!
``குழந்தைகள் சொல்லிக்கொடுத்துக் கற்றுக்கொள்வதைவிட, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், உங்கள் குழந்தைகள் என்னென்ன நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை நீங்கள் முதலில் பின்பற்ற வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் குழந்தை நேராகப் பல் துலக்கச் செல்ல வேண்டும் என்றால், பெற்றோர்களும் அதைச் செய்ய வேண்டும். ஆம்... உங்கள் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் நீங்கள் முதலில் இருக்க வேண்டும் அல்லது மாற வேண்டும்.

குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்கிறார்களா?
`இப்ப இருக்குற குழந்தைங்க எல்லாம் பெரியவங்களை மதிக்கிறதே இல்லங்க' என்று பலரும் புலம்புவதைக் கேட்கிறோம். இது எங்கிருந்து தொடங்குகிறது? குழந்தைகளிடம் பெற்றோர் பேசுவதை மட்டுமே அவர்கள் கவனிப்பதில்லை, பெற்றோர் யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கோபமாகப் பேசுவது, துணையிடம் அலட்சியமாகப் பேசுவது, துணையின் பெற்றோரை தரக்குறைவாகப் பற்றிப் பேசுவது, போனில் கத்தி பேசுவது, வேலையாட்களிடம் அதிகாரமாகப் பேசுவது... இப்படி அனைத்தையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் வார்த்தைகளைத்தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே, எப்போதும் நாகரிகமான, பண்பான வார்த்தைகளையே பேசுங்கள்.

செலவிட வேண்டியது பணத்தை அல்ல, நேரத்தை!
முன்பு கூட்டுக் குடும்பங்கள் இருந்தபோது, பலதரப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்த குழந்தைகள், ஒவ்வொருவரிடமும் பல வாழ்க்கை பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள். தாத்தா, பாட்டியின் நீதிக்கதைகள் அவர்களை நல்வழிப்படுத்தின. பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியது அவர்களுக்கு `சோஷியல் கெட்டுகெதர்'ரை இயல்பாகக் கற்றுக்கொடுத்தது. காலையில் சண்டையிட்டுக்கொள்ளும் மாமாவும் அத்தையும் மாலையில் சமாதானமாகும்போது, கோபமும் ஈகோவும் ஈசல்போல குறை ஆயுள்கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

ஏன் நாம் அந்த வாழ்க்கைமுறையை விட்டு வெளியே வந்து, நியூக்ளியர் குடும்பங்களாக மாறினோம்? ``எங்களுக்கு ப்ரைவஸி வேண்டும். நன்றாகச் சம்பாதித்து எங்கள் குடும்பத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும்" என்பார்கள் பலர். ஆனால், குழந்தையின் எதிர்காலத்தைக் காரணம் காட்டி தனிக்குடித்தனம் வந்த எத்தனை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்காக, குழந்தையுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்?

பணத்தை செலவு செய்து கிண்டர் கார்டனில் சேர்த்துவிட்டால், குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும் என்று நினைப்பது தவறு. முன்பு, கூட்டுக்குடும்பத்தில் இருந்த 10 பேர் கற்றுக்கொடுத்த அனுபவக்கல்வியை, இப்போது வழங்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் இருவரிடம் மட்டுமே சேர்கிறது. அதற்கு, அவர்கள் குழந்தையுடன் தங்கள் நேரத்தை செலவு செய்துதானே ஆக வேண்டும்? எனவே, குழந்தைகள் சமர்த்தாக வளர அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் க்வாலிட்டி டைம் அவசியம்!
`ஆனா நான் என் குழந்தைகூட அதிக நேரம் செலவிடுறேனே டாக்டர்...' என்பார்கள் பலர். விசாரித்தால், `நான்தான் அவனை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய்விட்டு கூட்டிட்டு வர்றேன், ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்குறேன்' என்பார்கள். தினசரி குறைந்தது ஒரு மணிநேரமாவது அவர்கள் படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் செலவிடுங்கள். மேலும், அப்பாவும் அம்மாவும் குழந்தையின் முன்னால், இன்றைய நாள் எப்படி இருந்தது, என்னவெல்லாம் நடந்தது என்று சகஜமாகப் பேசுங்கள். இதைப் பார்த்து வளரும் குழந்தையும் தாமாகவே அனைத்தையும் உங்களிடம் பகிர ஆரம்பிக்கும். குறைந்தபட்சம் தினமும் இரவு உணவையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். ஒன்றாக என்றால், டிவி பார்த்துக்கொண்டு உண்பது அல்ல. ஒருவருக்கொருவர் பேசியபடி உண்பது. குழந்தையிலேயே இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், பதின் வயதில், `என்ன கேள்வி கேட்டாலும் கடுப்படிக்கிறானே' என்ற புலம்பலை நீங்கள் தவிர்க்கலாம்.

அந்த மூன்று ஒழுக்கங்கள்!
வளர்ந்த நாடுகளில், குறைந்தது 4 வயது வரை குழந்தைகள் வீட்டில் பெற்றோரிடம் அனுபவக் கல்வியைக் கற்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கின்றார்கள். குழந்தைகள் சமூக ஒழுக்கத்தைப் (Social values) பற்றி பள்ளியில் தெரிந்துகொள்வதற்கு முன், தன் குடும்பத்தைப் பற்றியும், தன் குடும்பத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பைப் பற்றியும் (Family values) மற்றும் சுய ஒழுக்கத்தையும் (Personal values) தெரிந்துகொள்வது அவசியம். இதுதான் நம் வீடு, இங்கு நாம் எப்படி இருக்க வேண்டும், நம்மால் காரில் செல்ல முடியாது பைக்கில்தான் செல்ல முடியும் என்பது போன்ற விஷயங்களை வீட்டில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இப்படி, வீட்டின் இயல்பை குழந்தைகளுக்கு உணர்த்துவதன் மூலம், `நம் வீட்டில் பொருள்கள் கலைந்திருக்காது, நாமும் நம் விளையாட்டுப் பொருள்களை அடுக்கி வைத்துவிட வேண்டும்' என்பது போன்ற சுய ஒழுக்கப் பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

இப்படி, Family values மற்றும் Personal values இவை இரண்டின் அஸ்திவாரமும் ஸ்திரமாக இருக்கும்போது, வெளியே கற்கும் Social values-ம் இணைந்து குழந்தைகள் சரியாக வளர்வார்கள். முதல் இரண்டு வேல்யூகளையும் 4 வயதுக்குள் சரியாகக் கற்றுக்கொடுக்காமல் நேரடியாக பள்ளியில் சேர்க்கும்பட்சத்தில், அங்கே உடன் இருக்கும் குழந்தைகள், ஆசிரியர் சொல்வதையே குழந்தை பின்பற்றத் தொடங்குகிறார்கள்.

அம்மா, அப்பா ஒற்றுமை முக்கியம்!
குழந்தைக்கு, அம்மா, அப்பா இருவரும் சமம்தான். அம்மா சொன்னால் அப்பா கேட்பார் என்றும், அப்பா சொன்னால் அம்மா கேட்பார் என்றும் பழக்கப்படுத்துவது அவசியம். அம்மா நோ சொன்னால் உடனே அப்பாவை தாஜா செய்து வேண்டியதை சாதித்துக்கொள்வது, அப்பா மறுத்தால் அம்மாவிடம் அனுமதி வாங்குவது என்று அவர்களை பழக்கினால், அது காலம் முழுவதும் தொடரும் பிரச்னையாக மாறிவிடும்.

பெற்றோர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் அதைக் குழந்தை முன் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்பா திட்டினால், உடனே அம்மா, அப்பாவைத் திட்டிவிட்டு குழந்தையை சமாதானப்படுத்துவது கூடாது. `அப்பாக்கு கோபம் வர்ற மாதிரி நீ ஏன் நடதுக்கிற, அதனாலதான் அப்பா திட்டினாங்க, இனிமே பண்ணாத' என்று குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், சின்ன சின்ன தவறுகளைத் தவிர்த்தாலே போதும்... குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் காண முடியும். குழந்தைகளிடம் என்றுமே கட்டாயப்படுத்தி ஒரு விஷயத்தை திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும்படி உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் தீப்.

English Meaning - As I taught a kid - Rajesh
Our true or real asset is actually our children. Other assets such as money, land, properties, fame, reputation etc are not real assets. Because they can deteriorate any time. They are meaningless things.
Our children's value comes from our actions, our work, our conduct etc. Hence, if we conduct ourselves as per Dharma, by doing our duties and responsibilities in right way with integrity and by teaching and following the right values, our children will also follow the same (because actions speaks louder than words). We are responsible for our children. It is up to us to make our children better than us. 
Remember "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டோம் வாய்மையோடு ஐந்துசால் ஊன்றிய தூண்" and தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 

Also, it is important for kids to get better than their parents because there is greatness in becoming better. It is important to make 0 to 1, 1 to 2, 2 to 3 etc rather 1 staying 1 or reducing to 0.  

Questions that I ask to the kid
What is the true asset / real asset of a person?
How are our true assets shaped up? (true assets are kids. they are shaped based on our actions)


No comments:

Post a Comment