குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
பொருள்
தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
புகழொடு - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.
தோன்றுக - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
இலார் - இல்லை என்றால்; இல்லாதவர்
தோன்றலின் - தோன்றுவதை விட
தோன்றாமை - தோன்றாது இருத்தல்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
முழுப்பொருள்
தோன்றுதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் இக்குறளுக்கு தகுந்த பொருள் கண்காணவெளிப்படுதல், அறியப்படுதல் மற்றும் உண்டாதல்.
பிறத்தல் என்ற பொருள் இக்குறளுக்கு அவ்வளவாக பொருந்தாது ஏனெனில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் புகழுடன் தோன்ற முடியாது. வெறும் அரசர்களின் குடும்பத்திலும் பிரபலங்களின் குடும்பத்திலும் பிறப்பதால் மட்டுமே புகழுடன் பிறக்க முடியும்.
ஆதலால் தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார் என்ற பொருளும் சாலப் பொருந்தும்.
ஒருவர் இவ்வுலகில் வெளியே குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ கண்காணவெளிப்பட்டாலோ அல்லது அறியப்பட்டாலோ அவர் புகழுடன் தோன்றுக / அறியப்படுக என்று கூறுகிறார். அதாவது ஒருவர் அவருடைய குணத்திற்காக அறத்திற்காக தன் வேலையில் நிபுணத்துவத்திற்காக புகழுடனும் பெருமையுடனும் விளங்கவேண்டும். அதுவே அவருக்கு சிறந்தது. இந்நாட்டிற்கு சிறந்தது. அவரை பார்த்து பலர் (சிலராவது) மன உந்துதல் அடைந்து முன்னேறுவர். ஒருவர் புகழுடன் இருப்பதால் அவர் இவ்வுலகிற்கு நன்மை செய்தவராக இருப்பார். பொதுவான வழக்கிலிருக்கிறார்போல், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்கிற கதையாயிராமல் இருக்கவேண்டும்.
மாறாக ஒருவர் புகழ் இல்லாமல் இருக்கிறார் என்றால் அவர் இகழ்ச்சியுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அறத்திற்கு புறம்பான பாவங்களை தீச்செயல்களை செய்தல், சோம்பித் திரிதல், செயல்களைச் செவ்வெனச் செய்யாது இருந்தால், கடமையை ஆற்றாது இருத்தல் இகழ்ச்சியை பெற்றுத் தரும். ஆதலால் புகழ் இல்லாத ஒருவர் (இகழ்ச்சி உடைய ஒருவர்) இவ்வுலகத்தில் முன்னே கண்காணவெளிப்படாது அல்லது பிறர் முன் அறியப்படாத இருத்தலே சிறந்தது. ஏனெனில் இவர்கள் பலருக்கு கெடுதலை பரப்புவர். இவர்களை பார்த்து சிலர் தவறான பாதையில் செல்வர். செயல்களை, கடமைகளை புரியமாட்டார்கள். இவர்கள் இவ்வுலகத்திற்கு பாரமே. இவ்வுலகமக்களுக்கும் சுமையே. ஆதலால் தோன்றிக் கெடுதலை உருவாக்குவதைவிட தோன்றாமல் இருப்பது நன்மை.
அதனால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் தோன்றுவது என்றால் புகழுடன் தோன்ற வேண்டும். அப்படிப் புகழ் இல்லையேல் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பது நன்மை பயக்கும். அதனால் ஒருவர் வளரும் பருவத்தில் நூல்களைக் கற்று அறிந்துக் கடமைகளை ஆற்றி செயல்களைப் புரிந்துப் புகழ் பெரும் வண்ணம் தன்னை உண்டாக்கிக்கொள்ளவேண்டும்.
”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பதை மற்றுமோரு குறளில் காணலாம். ஆதலால் ஒருவர் தன் வேலையில் செவ்வென செய்யவில்லை என்றால் அவருக்கு புகழ் இல்லை. அவருக்கு இகழ்ச்சியே இருக்கும். அத்தகையவர் வெளியுலகில் நடமாடும் பொழுது அவர் இகழ்ச்சியை மேலும் சந்திக்கக்கூடும். பலர் அவரை ஒரு தவறான முன்னுதாரணமாக காண்பிக்க வாய்ப்பு உண்டு. அதனால் தோன்றாமல் இருப்பது நன்று. உதாரணமாக புகழ் இல்லாத ஒருவர் அவருடைய நண்பர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரை தவறான விதத்தில் காண நிறைய வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக நண்பரின் மனைவி அல்லது பிள்ளைக்கள். ஏன் அவர் வாழ்வில் தோல்வியுற்று இருக்கிறார்? பெரிய ஆளாக வில்லை என்று பெற்றோர்களிடம் கேட்க வாய்ப்பு உண்டு. அடுத்த முறை செல்லும் பொழுது அவர்கள் இவருக்கு கொடுக்கும் மரியாதையில் மாற்றம் இருக்கலாம். அப்பொழுது மனம் வலிக்கும். அதனால் தோன்றாமல் இருப்பது நன்று எனலாம்.
வள்ளுவரே “குறள் 235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது” என்று சொல்கிறார். ஒரு வேலையில், தன்மையில் திறனோடு அதாவது சிறப்போடு அல்லது புகழோடு இருக்கவேண்டும்.
மருத்துவத் துறையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் எல்லா பண்டுவமும் பார்ப்பதில்லை. “இந்த நோயாளியை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு போய் விடுங்கள்” என்று மருத்துவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்களுக்கு நோய் பற்றித் தெரியாதென்பதல்ல. ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது புகழ் இல்லாமல் அந்த நோயாளியைக் குணப்படுத்த முடியாதபோது அவர் வேறு மருத்துவரை பார்க்கச் சொல்கிறார். அன்றி அவரே முயன்று நோயாளிக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் என்ன செய்வது. அதனால் தான் “புகழ்” இல்லாத அந்த மருத்துவர் தோன்ற மறுக்கிறார்.
“தோன்றலின் தோன்றாமை நன்று”. தோன்றாமல் இருப்பது இருவருக்குமே நன்மையைத் தரக்கூடும். தோன்றவே கூடாது என்று வள்ளுவர் சொல்லவில்லை. தோன்றாமை நன்று என்றுதான் சொல்கிறார். ஆனால் திருவள்ளுவர் ஒருவரை ஆமைஓட்டில் ஒழிந்துக்கொள்ள சொல்லவில்லை (i.e don't get into the shell). தோர்வடையாமல் நண்பர்களுடனும் நிபுணர்களுடம் பேசி நமது திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழை ஈட்டவேண்டும். ஏனென்றால் இன்னொரு இடத்தில் “மெய்வருத்தக் கூலி தரும்” என்று சொன்னவர்தானே வள்ளுவர்.
தாமாக முன்வந்து எதைச் செய்வதானாலும், அதற்குரிய திறனோடு முன் வருக. திறனில்லாதவர்கள் முன்வராமலிருப்பது அவருக்க்கும் அடுத்தவருக்கும் நன்மையே தரும்.
பிறக்கும் பொழுது எல்லோராலும் புகழுடன் தோன்ற முடியாது என்று முன்னர் கூறியிருந்தோம். ஆயினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெறும் முன் இவ்வுலகிற்கு நன்மை செய்யும் குழந்தை வேண்டி நற்பண்புகள் கொண்ட குழந்தை வேண்டி தவங்களை (நல் எண்ணங்களும், ஒழுக்கமும், அறமும் இங்கே தவம் எனக்கூறலாம்) செய்து (நல்ல எண்ணங்கள் நல்லவற்றை கொடுக்கும்) குழந்தை பெற வேண்டும். குழந்தைகளும் ஓரளவு வளர்ந்த பின்பு (அதுவரையில் பெற்றோர்கள் நன்கு வளர்க்க வேண்டும்) மறுமையில் (அடுத்த பிறவியில்) புகழுடன் தோன்ற இம்மையில் (இப்பிறவியில்) நற்செயல்களை செய்து நற்குணங்களை கொண்டுப் புகழுடன் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாழ்வு நெற்கதிர்ப் பயிர்கள் போன்று ஒரு தொடர் சங்கிலி என்று உணர வேண்டும். நல்ல விதைகளை உற்பத்தி செய்வது நமது கடமை என எண்ணவேண்டும். அதற்கு தான் முதலில் ஒழுங்காக/புகழுடன் இருத்தல் வேண்டும்.
ஒப்புமை
“துறந்தா யாகில் தூயையு மாதி யுலகத்தே
பிறந்தா யாதி யீதல தில்லைப் பிறிதென்றான்” (கம்ப. பள்ளிடை 86)
“மற்றில தாயினும் மலைந்த வானரம்”
இற்றில தாகிய தென்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேரலால்
முற்றுவ தென்னினிப் பழியின் மூழ்கினோம்” (கம்ப.மந்திரப் 14)
“அறந்தலை...
மறந்தும்நன் புகழலால் வாழ்வு வேண்டலன்” (கம்ப. விபீடணன் 18)
மேலும்: அஷோக் உரை
கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்களின் ”அழிந்த பிறகு ...” (தமிழில் எம்.சித்தலிங்கையா) நாவலில் இப்படிச் சில வரிகள் வருகிறது
அவர் (யசவந்தராயர்) என் வாழ்க்கையில் பொறித்துச் சென்ற நினைவு என்றென்றும் என் கைக்கு எட்டக்கூடியது. அதை நான் இருத்திக்கொள்ளலாம் அல்லது மறந்தும்விடலாம். ஒரு மனிதனின் அடையாளம் நீடிப்பதோ அல்லது அழிவதோ அவனுடைய வாழ்க்கையினால்தான். அந்த வாழ்க்கை நம்முடைய நினைவுகளுக்கு உயிர் ஊட்டி, நம் வாழ்க்கையின் மூலம் அழியாது நின்று, கலந்து தொடர்ந்தால், அதுவே மறுபிறப்பாகும் என்று எனக்குப் பட்டது.
பரிமேலழகர் உரை
தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்).
மணக்குடவர் உரை
பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உரை (சுட்டியைத் தட்டவும்)
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார்.
No comments:
Post a Comment