Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நல்லாற்றான் நாடி அருளாள்க

குறள் 242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நல் - நல்ல பயன்களை விளைவிக்கும் வினைகளை
ஆற்றான் - ஆற்றுகின்றவன், செயல்படுத்துபவன்
நாடி - அறிந்துக்கொண்டு, ஆராய்ந்து அவரை தேடிச் சென்று
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை, ஏவல்
ஆள்க - -ஆளு, கிறேன், ஆண்டேன், வேன், ஆள, v. a. To rule, reign, exercise royal power, whether supreme or dele gated, அரசுசெய்ய. 2. To possess and em ploy slaves, அடிமையாள. 3. To possess and enjoy the produce of land, the use of a house, &c., ஆட்சிசெய்ய. 4. To govern a wife, household, &c., குடும்பத்தையாள. 5. To accept, adopt--as a servant, slave, &c., receive into protection, ஆட்கொள்ள. 6. To use, establish usage--as in language, மொ ழியாட்சிசெய்ய. 7. To cherish, maintain, cul tivate, exercise, ஓம்ப. 8. To manage, di rect, கையாள. (c.)-- 
பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு.
ஆற்றான் -  ஆற்றுகின்றவன், செயல்படுத்துபவன்
தேரினும் - தேர்ச்சி பெற்று இருந்தாலும்
அஃதே - அதுவே 
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
வாழ்வில் பிறருக்கு நற்பயன் விளைவிக்கும் செயல்களை செய்யும் நல்லாற்றான் தனை நன்கு ஆராய்ந்து அவரை நாடி அவர் செய்யும் நற்வினைகளை கற்று அவற்றை ஓம்பி செய்க. அத்தகைய நல்லவரின் அளவே ஒருவருக்கு அளவுகோலாகும். ஒருவர் செய்யும் நற்செயல்களே ஒருவருக்கு காப்பாகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  (நாம் வழக்கில் கூறுகிறோம் அல்லவா - நாம் செய்த புண்ணியம் நம்மை காப்பாற்றும்)

பலவழிகளில் பல சமையங்களில், பல மதங்களில் சென்று திக்கு தெரியாமல் நேரத்தை செலவழித்து கடைசியில் நற்வழியை கண்டுபிடித்து தேர்ச்சிப் பெறுவதை விட ஒரு நல்லாற்றதனை கண்டடைந்து அவரிடம் கற்று நற்வினைகளை செய்தால் அதுவே வாழ்வின் காப்பாக அமையும்.

இப்படி செய்தால் ஒருநாள் இவர்களே அருளுடையவர்களாக ஆவார்கள்.

இங்கே பாரதியார் அவர்கள் ஆயிரந் தெய்வங்களை தேடுவதை அறிவை தேடி அதன் படி நடப்பதே சிறந்தது என்கிறார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

அறிவே தெய்வம்
கண்ணிகள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? 8

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? 9

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே
(மகாகவி சுப்ரமணிய பாரதியார்)


மேலும்: அஷோக் உரை 
இக்குறளுக்குக்கான பரிமேலழகர் உரை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனை ஒட்டியே இங்கும் கூறப்படுகிறது. “பல்லாற்றான் தேரினும்” என்பதற்கு, “ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை”, என்று பரிமேலழகர் உரையெழுதியுள்ளார். “நல்லாற்றான் நாடி அருள் ஆள்க” என்பதற்கு “நல்ல ஆறு வழிகளை நாடி அருள் உள்ளவராக ஆகுக’ என்று பொருள் வருமாறு செய்துள்ளார்.
இவற்றை அளவைகள் என்கிறார். இவ்வளவைகள் யாவை?  பொறிகளால் காணும் காட்சி (காணும் என்பது உணர்வு, நுகர்வு, கேட்டல் உள்ளிட்டது), குறிகளால் உணரும் அநுமானங்கள், ஆகமங்கள் காட்டும் வழிகள், ஒப்புக்காட்டப்படும் உவமைகள், இங்கனமாயின் கூடாது என்கிற காரண காரிய விளக்கங்கள் (அருத்தாபத்தி எனப்படுவது), உண்மைக்கு மாறான இன்மைகளைக்காட்டி உண்மையின் உயர்வை உணர்த்தல் எனப்படுவையே அளவைகள்.

இக்குறளால் சொல்லப்படும் கருத்து இதுவே: நல்ல வழிகளாலே விரும்பி பிறரிடத்தில் கருணையோடு இருக்கவேண்டும். பல வழிகளிலே ஆய்ந்து பார்த்து அறிந்து கொண்டவருக்கும் வாழ்க்கை முடிந்தபின் வருந்துணையும் கருணை மனத்தராக வாழ்ந்திருத்தல்தான்.

பரிமேலழகர் உரை
நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை. (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம். நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Pursue the virtuous path (by diligently finding out the people who virtuously do good deeds) and have compassion; all spiritual quests lead to this companion (virtuous path and compassion) that act as our support.

Questions that I ask to the kid
What path should we pursue? How? Why?

வசையொழிய வாழ்வாரே வாழ்வார்

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வசை - நிந்தை; பழிப்பு; இகழ்ச்சி; வசைகூறும்பாடல்; குற்றம்; அகப்பை; மலட்டுப்பசு; பசு; பெண்யானை; கணவனுடன்பிறந்தாள்; பெண்; மகள்; நிணம்; மனைவி.
ஒழிய - அழிய
ஒழி - oẕi   II. v. i. cease, ஓய்; 2. be over, முடி; 3. go off, நீங்கு; 4. die, சா; 5. be excepted, தவிரு; 6. clear off, தீரு; 7. be at leisure; 8. be empty, be unoccupied as in இந்த வீடு ஒழிந் திருக்கிறது.
வாழ்வாரே  - வாழ்பவர்களே
வாழ்வார் - வாழ்வோர்
இசை  - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை
புகழ் - மேன் மை, கீர்த்தி, அருஞ்செயல்
ஒழிய - அழிய
வாழ்வாரே  - வாழ்பவர்களே
வாழாதவர் - வாழாதவர்கள்

முழுப்பொருள்
எது வாழ்க்கை? வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு இக்குறள் தரும் பொருள் மிக சிறப்பான ஒன்று.

இவ்வுலகில் எல்லோரும் பிறந்து இறக்கிறார்கள். ஆனால் எல்லோரும் வாழ்கிறார்களா? இல்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை.

யார் வாழ்கிறார்கள்?
தன் மீது பழி, குற்றம், இகழ்ச்சி என ஏதும் வராத வண்ணம் வாழ்க்கையை நடத்துபவர்களே வாழ்பவர்கள் என்கிறார் திருவள்ளுவர். தன் மேன்மையை வளர்த்துக்கொண்டு முன்பு செய்த குற்றங்களை குறைத்துக்கொள்பவர்களே வாழ்பவர்கள். பழி வரமால் இருக்க தான் செய்யவேண்டிய அறத்தையும் (கடமைகளையும்) செய்து ஈட்டவேண்டிய பொருளையும் ஈட்ட வேண்டும்.

அப்படியானால் வால்மீகி வாழவில்லையா ? வாழ்ந்தார் என்றே சொல்லலாம். ஏன் என்றால் தன் மீது உள்ள திருட்டு என்கிற குற்றங்களை விட அவர் இராமாயணம் போன்ற ஒரு நூலை எழுதி ராமன் போன்றே வாழ்ந்து புகழ் பெற்றதாக (மேன்மை அடைந்ததாக) சொல்லபடுகிறது. அவர் மீது வசைகள் அழியும் அளவிற்கு அவர் புகழ் பெற்றார். [குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்]

யார் வாழாதவர்கள்?
இசை என்றால் புகழ். புகழ் என்றால் மேன்மை. வாழ்வில் தன் மேன்மையை அழித்துக்கொண்டு தன் மேன்மையை வளர்க்காமல் வாழ்வை நடத்திக்கொள்பவர்கள் எல்லாம் வாழ்க்கையை உணர்ந்து வாழாதவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.  வாழாதவர் என்றால் நடை பிணங்கள் என்று அர்த்தம். பிணங்கள் கிருமிகளை கொண்டது. அது எல்லொருக்கும் இன்னல்களையே கொடுக்கும். ஆதலால் (நடை) பிணங்கள் சமூகத்திற்கு கேடானது.

நான் சமீபத்தில் (May 2021) இல் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளியில் கல்லெழும் விதை என்ற நிகழ்வுக்காக ஆற்றிய உரையில் Idealism பற்றிப் பேசுகிறார். அதில் ஒரு உதாரணம் சொல்கிறார். அது இக்குறளுக்கு மிக நன்றாக பொருந்துகிறது.
சினிமால பார்த்தீர்கள் என்றால் எடிட்டர்/Editor லெனின் ஒரு வகையான மனிதர். பெரிய எடிட்டராக இருந்தவர். ஆனால் பெரும் பகுதி பணத்தை சம்பாத்தயத்தை charity க்கு தான் கொடுத்து இருக்கிறார். அவரிடம் காசே இருக்காது. எப்பொழுதும். பெரும்பாலான தருணங்களில் டீ குடித்தால் நீங்கள் தான் அவருக்கும் சேர்த்து காசுக்கொடுப்பதுப்போல் இருக்கும். செருப்புப் போடாமல் 15கிமி நடந்து வருவார். ஆனால் 15-25 வருடங்களாக அவர் திரைத்துறையில் இல்லை. எடிட் செய்வதில்லை.  ஆனால் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் சினிமா தயாரிப்பாளர் நடிகர் விஜயைப் பார்ப்பதற்கும் எடிட்டர் லெனினைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  நடிகர் விஜயைப் பார்க்கும் பொழுது விஜய்க்கு என்ன மதிப்பு என்று தான் அந்த தயாரிப்பாளர் பார்ப்பார். அதுவே எடிட்டர் லெனினைப் பார்க்கும் பொழுது அவரை மதிப்பிட முடியாது என்று அந்த தயாரிப்பாளருக்கு தெரியும். அவர்கள் (நடிகர் விஜய்) என்ற உடன் தயாரிப்பாளர் எப்படி நடந்துக்கொள்கிறார் (behave செய்கிறார்) என்பது இங்கே முக்கியம். நடிகன் போனப்பின்பு இவனிடம்(தயாரிப்பாளனிடம்) வேறு ஒரு மொழி வரும்.  அதுவே எடிட்டர் லெனின் சென்றப் பிறகு அந்த பாஷை மாறாது. அது அப்படியே தான் இருக்கும். ஒருவன் நேர்மையாக இருப்பதனால் என்ன ஈட்டிக்கொள்கிறான் என்றுப் பார்த்தால் எங்கும் குன்றத் தேவையில்லாத ஒரு தோள்களை ஈட்டுக்கொள்கிறான். அது சாதாரண சம்பாத்தியம் கிடையாது. தன் வாழ்நாள் முழுக்க தன்னைப் பற்றி தான் பெருமிதத்துடன் நினைத்துக்கொள்ளக்கூடிய வாழ்க்கை இருக்கே அது சாதாரண வாழ்க்கை கிடையாது. அது ஒரு பெரியச்செல்வம். மேலும் நேர்மையற்ற ஒருவன் ஒருபொழுதும் தன் பிள்ளைகள் முன் நிமிர்வோடு இருந்ததாக நான் பார்த்ததே கிடையாது.  

சினிமா துரைக்கு ஏன் செல்ல வேண்டும்? நாம் நமது வீட்டிலேயே எடுத்துக்கொள்வோம், நாம், நமது பெற்றோர்கள், நமது உறவினர்கள், நமது நண்பர்கள் எல்லோரும் தத்தமது பெற்றோர்களையும், முன்னோர்களையும், சகோதர்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டுவார்கள்/வசைப்பாடுவார்கள் - உதாரணமாக - எங்க அப்பன் ஒரு சோம்பெறி, எங்க அண்ணன் ஒரு சுயநலம், எங்க உறவுக்காரங்களான் காரியவாதிங்க, எங்க தாத்தா எங்க அப்பாக்கு ஒன்னும் செய்யல, அதனால அவுரு ரொம்ப கஷ்டப்பட்டாரு, எங்க பரம்பரையிலேயே இந்த விட்டுக்கொடுக்காத குணம், கோவம் லான் இருக்கு. குற்றம் சொல்லுபவர்கள் தங்கள் குற்றங்களை மறைக்க மற்றவர்கள்மீது குற்றம் கூறினாலும், இவ்வசைகளை மறுக்க முடியாது என்பதே பெரும்பாண்மையான நேரங்களில் உண்மை. ஆதலால் அத்தகைய வசை உண்டாக வாய்ப்புக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்வு.

மற்றவர்கள் ஒருவர் மீது வசை கூறமுடியாத அளவிற்கு ஒருவர் வாழ்வார் எனின் அதுவே உன்னத வாழ்வு. அதுவே புகழ். 

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்" என்ற குறளின் படி வாழ்ந்தால் “தன்னைத் தான் காதல்” கொள்ள முடியும்.


திருவாய்மொழிப் பாடல் (3,3:11) “வாழ்வார் வாழ்வெய்தி ஞாலம் புகழவே” என்னும். 

கம்பராமாயணப்பாடல் ஒன்றில், 
வழிகெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்திறினும் மார்பம் 
கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் சான்றோர் கேட்கும் 
மொழிகொடு வாழ்வதல்லால், முறைகெடப் புற நின்றார்க்குப் 
பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபருளரோ பாவம்”  என்பார் கம்பர். (கம்பராமாயணம் மாயாசனகப் 66)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார். (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.).

மணக்குடவர் உரை
வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார். இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

சாலமன் பாப்பையா உரை
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who lives a life in which no one can blame, or point mistakes, or pin point wrongdoings even behind the screen is called the person  living. Whereas if a person lives a fancy life in front of others whereas earns the blame, etc behind screens is not actually living - he or she is either faking or considered dead

Questions that I ask to the kid
Who is considered living? Who is not considered living?
If someone pinpoints us about us from the behind, would that be considered a blame?

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
ஆறு āṟu   s. a river நதி; 2. a way, road வழி; 3. morality, virtue அறம்; 4. the manner of doing a thing, விதம். 5. result, பயன்.
'நல்லாறு'  - நல்வழி, நற்பயன்
எனினும் -என்றாலும்
கொளல் -  பெற்றுக்கொள்ளுதல்
தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.
மேல் உலகம் - தேவருலகம்; பூலோகம் முதல் ஏழு உலகங்கள்.
இல்’ - இல்லை
எனினும் - என்றாலும்
ஈதலே - கொடுத்தல்; வறிய வருக்குத் தருதல்; சொரிதல் படிப்பித்தல்
நன்று - சிறப்பானது, நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின் நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
நமக்கு தேவையான செல்வம் நம்மிடம் இருக்கும் பொழுது நமக்கு நற்பயன் விளைவிக்கும் என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே. அதேப்போல நாம் பிறருக்கு உதவி செய்வதனால் நற்பயனாக மேலுலகம் கிடைக்காது அல்லது நாம் பிறருக்கு உதவி செய்தாலே மேலுலகம் கிடைக்காது என்றாலும் பிறருக்கு உதவி செய்வது (ஈதலே) வாழ்வின் நோக்கமாக, அறமாக, இன்பமாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

ஏன் ஏற்பது இகழ்ச்சி?
உதாரணமாக 1 :  சில பள்ளிகளில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் எனப்படும் ஊக்கதோகை தனை பல நபர்கள் சொந்தமாகவும் சில தொண்டுநிறுவனங்கள் மூலமாகவும் கொடுப்பார்கள். அதனை சிலர் தனக்கு தேவையான வசதி இருந்தாலும் சிபாரிசு மூலம் பெறுவர் - அது ஒரு விதத்தில் அவர்களின் வீட்டின் சுமையை குறைக்கும் - இருப்பினும் இந்த ஊக்கத்தொகை இல்லாமல் அவர்களால் படிக்க வைக்க முடியும். ஆனால் அந்த பணம் தேவையான பல மாணவர்கள் இருப்பார்கள். அந்தப் பணம் அவர்கள் மேலும் படிக்க உதவும். அதனால் இப்படி சிபாரிசு மூலம் ஒருவர் அப்பணத்தை வாங்கியதால் மற்றொரு ஏழை மாணவனின் வருங்காலமே பாதிக்கக்கூடும்.

உதாரணமாக 2 : எனது நண்பர் ஒருவர் ”மாற்றம் ஃபொண்டேஷன்” என்கிற தொண்டு நிறுவனத்தில் தொண்டாற்றுகிறார். அக்குழுமத்தில் +2 முடித்தபின்பு இளநிலை மேற்படிப்பு படிக்க குடும்ப சுமையால் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி அளிப்பதே அவர்களின் பங்களிப்பாகும். இதற்காக பலர் ஒன்று சேர்ந்து கலந்தாய்வு (counselling) செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் நேரடி கள ஆய்வு செய்வார்கள். அவர் குழுமம் சொல்லும் சில வருந்ததக்க நிகழ்வுகள் என்னவென்றால் பல நல்ல நிலையில் இருக்கும் மக்கள் கூட கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து இரு தேரு (road) பின்பு தனது காரை  (car) நிப்பாட்டிவிட்டு, தங்க சங்கிலிகளை (chain) மறைத்து விட்டு வந்து தன்னிடம் ஏதும் இல்லாதது போன்று காண்பித்துக்கொள்வார்கள் என்று. இத்தகைய மனிதர்கள் பிறருக்கு (ஏழை மாணவர்களுக்கு) சென்று சேரவேண்டிய பணத்தை (சொல்லப்போனால் வாழ்வை) தனக்கு தரும்படி கேட்பது இகழ்ச்சியே.

===
இக்குறளில் வள்ளுவருடைய ஒரு கருத்தை உறுதியாக அறிந்துகொள்கிறோம். மேலுலக வாழ்வு, வள்ளுவருக்கு இன்றியமையாதது  அன்று. மேலுலகத்தையும், தேவைப்பட்டால் தூக்கி எறிந்துவிடும்  வீரம் உடையவர் வள்ளுவர். மனிதப் பண்புக்கே வள்ளுவர் முதன்மை தருகிறார். அப்பண்பு சீர்கெடாமல் காப்பதையே கடமையாகக் கருதுகிறார். மேலுலகப் பற்றைக் கூறித்தான் அறத்தை வளர்க்க வேண்டும் என்பது அவருக்குத் தேவையில்லை. உலகில் இருக்கும் வறுமை நிலைமைதான் வள்ளுவரை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது. இதனால்தான் ஈதல் நல்லவர்களை, அதனால் புகழ்பெற்றவர்களைத் தெய்வங்களாகவும் மதிக்கத் தொடங்கிவிடுகிறார். வள்ளுவர் மேலிருந்து காப்பதாகக் கூறப்படும் கற்பனைத் தெய்வங்களைப் போல் இவர்கள் உலகிலிருந்து மக்களைக் காப்பாற்றும் உண்மை தெய்வங்கள். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஈஎன இரத்தலோ அரிதே” (புறநா 154:8)
“ஈஎன இரத்தல் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று” (புறநா 204:1-3)

“இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்” (கம்ப.வேள்வி 29)

மேலும்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் “அழிந்த பிறகு ..” என்னும் நாவலில் (தமிழில் சித்தலிங்கையா) சில வரிகள் இப்படி வருகிறது
வாழ்க்கைக் கணக்கேட்டில் நான் பெற்றதைவிடக் கொடுத்தது குறைவாக இருக்கக்கூடாது. இது வெறும் பணத்தைப் பற்றிய கணக்கு அல்ல. மனித வாழ்க்கையின் வரவு செலவு. மனிதன் சமுதாயத்துக்குக் கடன்பட்டவனாகப் பிறக்கிறான். அந்த கடனிலேயே வளர்கிறான். இறக்கும்போது தான் பெற்றதைவிட அதிகமாக் திருப்பித் தராவிட்டால் அவனுடைய பிறவி பயனற்றதாகிறது. அவன் பிறந்ததால் சமுதாயத்திற்கு இழப்பே என்பது என் கருத்து. பணம், காசு முதலியவை யெல்லாம் இந்த நோக்கில் பார்த்தால் மிகவும் அற்பமானவை யாகும். ஆனால் அவையும் வாழ்க்கையை நடத்துவதற்கு இன்றையமையாது வேண்டிய பொருள்கள் ஆகும்.

பரிமேலழகர் உரை
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர்.
உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்
ஈண்டும் - ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது
பெறல் - பெறுதல்
அரிது - செயற்கரிது s. Difficulty, unattainable ness, rareness, preciousness,  அருமை; பசுமை 
அரிதே -  செயற்கரிது
ஒப்புரவு - oppuravu   n. ஒப்பு + உரவு 1.Agreement, union; ஒற்றுமை 2. Smoothness,levelness, evenness; சமம் 3. Custom, usage,duties enjoined by long established custom,caste rules; உலகாசாரம் ஒப்புரவொழுகு (ஆத்திசூ.).4. Philanthropy; லோகோபகாரம் ஓருயிர்க்கேயுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும் (பெருந்தொ.188). 5. Reconciliation; சமாதானம் பண்ணுகை.Chr. 
ஒப்புரவின் - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.
நல்ல - நல்லவை
பிற - பிற அனைத்தும்

முழுப்பொருள்
புத்தே ளுலகத்தும் ஈண்டும் 
உயர்ந்தோர் உலகத்திலும் (அல்லது வானுலகத்திலும், அல்லது தேவலோகத்திலும்) சரி மனிதர்கள் வாழும் இவ்வுலகத்திலும் சரி

பெறலரிதே 
இந்த பாக்கியம் /சந்தர்ப்பம் தனை பெறுதல் அரிதே

ஒப்புரவின் நல்ல பிற
இயலாதவர்களுக்கு உதவி செய்வதை தவிர நன்மையானது

வானுலகத்திலும் சரி, இவ்வுலகத்திலும் சரி இயலாதவர்களுக்கு உதவி செய்வதை தவிர சிறந்ததும் நன்மையானதும் வேறொன்றும் இல்லை அதைப் போன்ற அரிய வாய்ப்பும் வேறு இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஒப்புரவைப்பற்றி மற்ற இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதையும் சிறிது பார்க்கலாம். ஆத்திச்சூடியில் ஔவையும் செய்யத்தக்கவற்றுள், அகார வருக்கத்தில் “ஒப்புரவு ஒழுகு” என்பார் கட்டளயாகவே. மதுரை கூடலுர் கிழாரின் முதுமொழிக் காஞ்சியில், “ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை” என்பார்.  கயத்தூர் பெருவாயின் முள்ளியார் யாத்த ஆசாரக்கோவையின் முதல் பாடல் “நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் இனத்தாரோடு நட்டல், – இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து” என்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒப்புரவ வறிதலிற் றகுவர வில்லை” (முதுமொழிக் 52)


பரிமேலழகர் உரை
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

சாலமன் பாப்பையா உரை
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

தன்னைத்தான் காதல னாயின்

குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன்னைத், தான் சுயம்
தன்னைத் தான் - ஒருவன் தன்னையே சுயமாக
காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன்
ஆயின் - அப்படி ஆனால்
எனைத்து  - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு.
ஒன்றும் - சிறிதும்

துன் - துர் - tur   a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம்,; துன்னாற்றம்).
ur
துன் - s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.

துன்னற்க - பிறர்க்கு துன்பம் நினைக்காதே, துன்பம் கொடுக்கும் செயல்களை செய்யாதே
தீவினைப் - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப் பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற்பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக் கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.

முழுப்பொருள்
பிறர்மீது அன்பு செலுத்துவது என்பது இயற்கை. தாய் நம்மை பாலூட்டி அரவணைத்து அன்பு செலுத்துவதனால் அன்பு செலுத்துகிறோம், தந்தை நம்மை பேணி காக்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது மனைவி/கணவன் மீது அவரின் குணங்களினாலும் அவரின் பால் கொண்ட காமத்தினாலும் அன்பு செலுத்துகிறோம், நமக்கு பிறந்த குழந்தை ஆயிற்று என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம். ஆதலால் பிறர் மீது அன்பு செலுத்துவதில் ஆச்சர்யமில்லை. அது மட்டும் இன்றி நமக்கு பிறரை பற்றிய முழுதும் தெரியாது. அவர்களின் நற்குணங்களை மட்டும் எண்ணி அவர் மீது அன்பு செலுத்துகிறோம்.

ஆனால் நம்மை நாம் அவ்வளவு எளிதாக உயர்வாக எண்ணிக்கொள்வது இல்லை. ஆதலால் நாம் நம்மை காதலிப்பது இல்லை. ஏன் என்றால் நமக்கு தெரியும் நாம் செய்த தவறுகள் எண்ணவென்று. ஆதலால் நம்மை நாம் அவ்வளவு நேசிப்பதில்லை.

நம்மை நாம் நேசிக்கவேண்டும் என்றால் நம்மை பற்றிய உயர்வான எண்ணங்களே நம்மிடம் இருக்க வேண்டும். நம்மை பற்றிய கீழ்மைகள் நம்மிடம் இருக்க கூடாது. கீழ்மை செய்தால் தான் கீழ்மையான எண்ணங்கள் வரும். ஆதலால், தன்னை தான் நேசித்துக்கொள்வதற்கு தனக்கும் சரி பிறர்க்கும் சரி துன்பம் தரும் செயல்களை சிறிதளவாயினும் ஒருபொழுதும் செய்யக்கூடாது.  தனக்கு தன்பம் தருவது என்பது உடலை பேணானது, மனதை பேணானது, எண்ணங்களை பேணாதது, நேரத்தை போற்றிப் பேணாதது, ஒழுக்கத்தைப் பேணாதது, அறத்தை பேணாதது, அடக்கத்தைப் பேணாதது என்று பலவற்றை சொல்லலாம். பிறர்க்கு தீங்கு என்பது உடல் முதல் மனம் வரை செய்யப்படும் தீங்கு பலவற்றை சொல்லலாம்.

மேலும் 
குறிப்பு: தீய செயல் செய்யுங் காலத்துப் பிறருக்குத் துன்பம் உண்டாக்குவதாகத் தோற்றினும் விளையுங்கலாத்துத் தனக்கே துன்பந் தருதலின் அது விலக்குதற்குரியது என்றவாறு.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதையை வாசித்தேன்.. இக்குறள் நினைவுக்கு வந்தது. பிறருக்கு துன்பம் தறாத வாழ்க்கை எவ்வளவு மகத்தானது
தான் பிடித்த 
பட்டாம்பூச்சியை
அதன் சந்தோஷம் மாறாமல்
இன்னொரு கைகளுக்கு
மாற்ற முடிந்தவர்கள்
பாக்கியசாலிகள்
- வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சுய அன்பு/சுய மரியாதை பற்றிய சில பத்திகள் கீழே (அத்தியாயம் - 8 இல் இருந்து) (இது இக்குறளுக்கு முற்றும் சம்மந்தாமான பத்திகள் இல்லை. ஆனால் தன்னை ஒரு காதலிக்கு அன்பு எவ்வளவு முக்கியம். அதற்கு பெற்றோர், ஆசிரியர், சமூகம் செய்ய வேண்டியவை யாவை என்ற கோணத்தில் இருந்து. எல்லாவற்றையும் ஒருவரே செய்து விட முடியாதே. சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களும் முக்கியம் தானே)

நம் மேலான சுய-அன்பையும் மரியாதையையும் அறவே ஒழித்துவிட்டு, மற்றவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறு நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது என்பது துயரமானதாகும் (உண்மையில் துயரம் என்பது குறைந்த மதிப்பீடே!). இந்தக்காரணத்தால், நாம் மற்றவர்களிடம் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கிறோம். உண்மையில், நாம் அன்புக்கும் மரியாதைக்கும் யாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மீது அன்பையும் மரியாதையும் செலுத்த, நாம் மற்றவர்களையும் நிர்ப்பந்திக்கிறோம்.    

இந்த ஆழமான கருத்தைச் சிலர் மேலோட்டமாகப் பார்க்க முயன்று புரியாமல் போவதால், இது ஒரு புரியாத் தத்துவம் என கடந்து போக நினைக்கலாம். எனவே நாம் அதை வேறு கோணத்திலும் பார்ப்போம்.  எத்தனை பெற்றோர், ஆசிரியர், நண்பர், சுற்றத்தார், குழந்தைகளுக்குச் சுய அன்பு மற்றும் சுயமரியாதை குறித்து போதிக்கின்றனர்? நம் நாட்டில், சுய இன்பம் மட்டுமே விலக்கப்பட்ட விஷயமன்று; சுய அன்பும், சுயமரியாதையும் கூட விலக்கப்பட்ட விஷயங்களே! ‘சுய அன்பு’ என்பது ‘சுயநலம்’ என்றும், ‘சுயமரியாதை’ என்பது ‘அகங்காரம்’ என்றும் நிலைநிறுத்தப் படுகின்றன. இவை கட்டாயமாக வெவ்வேறானவை; ஆயினும், நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்துள்ளோம்? 

ஒருவரின் செல்வம் முழுவதையும் அழித்துவிட்டு அவர் தான தருமம் செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்? நம் எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமல்லவா? நான்  எத்துணை பணிவானவன் என மற்றவருக்குக் காட்ட நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி என்னைச் செய்ய வைக்குமிடத்தில், நான் எப்படி என் சுய-அன்பையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்? மற்றவரின் வற்புறுத்தல் படி நான் வாழத்தொடங்கும் பொழுதே இவை எல்லாவற்றையும் நான் தொலைத்து விடுகிறேன். ஒவ்வோர் ஆன்மாவும் இங்குக் காற்றை போல் சுதந்திரமானது. ஆனால் அந்த ஆன்மாவை மற்றவருக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முற்படுகையில் அங்கு ஆன்மா மரணித்து விடுகிறது. இப்படித் தொலைத்ததைத் தொலைத்ததைத் தேடித்தான் தன்னையே தேடுவதற்காகச் சிலர் ஆன்மிகம் என்ற பாதையை பிற்காலத்தில் நாடுகிறார்கள்.  வாழ்வே மாயம் எனத் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த உலகின் சூதும் வாதும் புரியாத நிர்மலமான வயதில் தொலைத்ததை இனி எங்கே சென்று தேடுவது? 

அன்பில்லா இதயம் மட்டுமே சுயநல இதயமாகிறது. நம் உள்ளத்தில் அன்பு இல்லை என்று தெரியும். அதனாலேயே, மற்றவர்களுடைய இதயங்களிலும் அன்பு இல்லை என்று நினைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், தத்தம் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து கொள்ளும் முறை ஏற்படுகிறது. அதனால் நான் சுயநலவாதியாகிறேன். என்மேல் எனக்கு மரியாதை இல்லை, அதனால் மற்றவரும் என்னை மதிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் மதிக்கப்பட வேண்டியவன் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் அகந்தை உடையவன் ஆகிறேன். சுய அன்பும், சுயமரியாதையும் இல்லாத காரணத்தால் உண்டாகும் மாயையே இது. 

பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் ஆகிய நாம், அன்பும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல் வேண்டும். குழந்தைகள், இதை உள்ளுணர்வில் அறிந்துகொண்டு, இயல்பாகவே அன்புள்ளத்துடனும், மற்றவரை மதிக்கும் குணமுடையவர்களாகவும் இருப்பர். அன்பையும், மரியாதையையும் வெறும் சொற்களால் கற்றுத்தரத் தேவையில்லை. தங்களுடைய பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைகள், உண்மையாகவே, அவர்கள் வாழ்வில் காணும் ஒவ்வோர் ஆண் பெண்ணுடனும் அன்புடன் இருப்பார்கள். செயல்கள், சொற்களை விட உரக்கப் பேசும் என்பதை அறிந்திருக்கிறோம்.  என்னைக்கேட்டால், “செயல் ஒன்றே போதுமானது; மற்றவை தன்னிச்சையாக அதனதன் இடத்தில் அமர்ந்துகொள்ளும்” என்பேன்.

அன்பையும் மரியாதையையும் எப்போதும் கற்றுக்கொடுக்க வேண்டியதுமில்லை; அதற்கான தேவையும் இல்லை. எப்படி ஒரு ரோஜா பூக்கும் சமயத்தில் அதன் மணத்தையும் கொண்டுவருகிறதோ, அப்படியே, ஒரு குழந்தை பிறக்கும் போது, அன்பையும் கொண்டுவருகிறது.

English Meaning - As I taught a kid - Rajesh
If you want to love yourself, even if small do not even think and do not anything bad to others or yourself. Because if you do something bad your heart/conscience itself will burn/kill you

Questions that I ask to the kid
In order to love yourself, what should you do and not do? Why (because conscience will know)?