Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வசையொழிய வாழ்வாரே வாழ்வார்

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வசை - நிந்தை; பழிப்பு; இகழ்ச்சி; வசைகூறும்பாடல்; குற்றம்; அகப்பை; மலட்டுப்பசு; பசு; பெண்யானை; கணவனுடன்பிறந்தாள்; பெண்; மகள்; நிணம்; மனைவி.
ஒழிய - அழிய
ஒழி - oẕi   II. v. i. cease, ஓய்; 2. be over, முடி; 3. go off, நீங்கு; 4. die, சா; 5. be excepted, தவிரு; 6. clear off, தீரு; 7. be at leisure; 8. be empty, be unoccupied as in இந்த வீடு ஒழிந் திருக்கிறது.
வாழ்வாரே  - வாழ்பவர்களே
வாழ்வார் - வாழ்வோர்
இசை  - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை
புகழ் - மேன் மை, கீர்த்தி, அருஞ்செயல்
ஒழிய - அழிய
வாழ்வாரே  - வாழ்பவர்களே
வாழாதவர் - வாழாதவர்கள்

முழுப்பொருள்
எது வாழ்க்கை? வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு இக்குறள் தரும் பொருள் மிக சிறப்பான ஒன்று.

இவ்வுலகில் எல்லோரும் பிறந்து இறக்கிறார்கள். ஆனால் எல்லோரும் வாழ்கிறார்களா? இல்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை.

யார் வாழ்கிறார்கள்?
தன் மீது பழி, குற்றம், இகழ்ச்சி என ஏதும் வராத வண்ணம் வாழ்க்கையை நடத்துபவர்களே வாழ்பவர்கள் என்கிறார் திருவள்ளுவர். தன் மேன்மையை வளர்த்துக்கொண்டு முன்பு செய்த குற்றங்களை குறைத்துக்கொள்பவர்களே வாழ்பவர்கள். பழி வரமால் இருக்க தான் செய்யவேண்டிய அறத்தையும் (கடமைகளையும்) செய்து ஈட்டவேண்டிய பொருளையும் ஈட்ட வேண்டும்.

அப்படியானால் வால்மீகி வாழவில்லையா ? வாழ்ந்தார் என்றே சொல்லலாம். ஏன் என்றால் தன் மீது உள்ள திருட்டு என்கிற குற்றங்களை விட அவர் இராமாயணம் போன்ற ஒரு நூலை எழுதி ராமன் போன்றே வாழ்ந்து புகழ் பெற்றதாக (மேன்மை அடைந்ததாக) சொல்லபடுகிறது. அவர் மீது வசைகள் அழியும் அளவிற்கு அவர் புகழ் பெற்றார். [குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்]

யார் வாழாதவர்கள்?
இசை என்றால் புகழ். புகழ் என்றால் மேன்மை. வாழ்வில் தன் மேன்மையை அழித்துக்கொண்டு தன் மேன்மையை வளர்க்காமல் வாழ்வை நடத்திக்கொள்பவர்கள் எல்லாம் வாழ்க்கையை உணர்ந்து வாழாதவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.  வாழாதவர் என்றால் நடை பிணங்கள் என்று அர்த்தம். பிணங்கள் கிருமிகளை கொண்டது. அது எல்லொருக்கும் இன்னல்களையே கொடுக்கும். ஆதலால் (நடை) பிணங்கள் சமூகத்திற்கு கேடானது.

நான் சமீபத்தில் (May 2021) இல் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளியில் கல்லெழும் விதை என்ற நிகழ்வுக்காக ஆற்றிய உரையில் Idealism பற்றிப் பேசுகிறார். அதில் ஒரு உதாரணம் சொல்கிறார். அது இக்குறளுக்கு மிக நன்றாக பொருந்துகிறது.
சினிமால பார்த்தீர்கள் என்றால் எடிட்டர்/Editor லெனின் ஒரு வகையான மனிதர். பெரிய எடிட்டராக இருந்தவர். ஆனால் பெரும் பகுதி பணத்தை சம்பாத்தயத்தை charity க்கு தான் கொடுத்து இருக்கிறார். அவரிடம் காசே இருக்காது. எப்பொழுதும். பெரும்பாலான தருணங்களில் டீ குடித்தால் நீங்கள் தான் அவருக்கும் சேர்த்து காசுக்கொடுப்பதுப்போல் இருக்கும். செருப்புப் போடாமல் 15கிமி நடந்து வருவார். ஆனால் 15-25 வருடங்களாக அவர் திரைத்துறையில் இல்லை. எடிட் செய்வதில்லை.  ஆனால் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் சினிமா தயாரிப்பாளர் நடிகர் விஜயைப் பார்ப்பதற்கும் எடிட்டர் லெனினைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  நடிகர் விஜயைப் பார்க்கும் பொழுது விஜய்க்கு என்ன மதிப்பு என்று தான் அந்த தயாரிப்பாளர் பார்ப்பார். அதுவே எடிட்டர் லெனினைப் பார்க்கும் பொழுது அவரை மதிப்பிட முடியாது என்று அந்த தயாரிப்பாளருக்கு தெரியும். அவர்கள் (நடிகர் விஜய்) என்ற உடன் தயாரிப்பாளர் எப்படி நடந்துக்கொள்கிறார் (behave செய்கிறார்) என்பது இங்கே முக்கியம். நடிகன் போனப்பின்பு இவனிடம்(தயாரிப்பாளனிடம்) வேறு ஒரு மொழி வரும்.  அதுவே எடிட்டர் லெனின் சென்றப் பிறகு அந்த பாஷை மாறாது. அது அப்படியே தான் இருக்கும். ஒருவன் நேர்மையாக இருப்பதனால் என்ன ஈட்டிக்கொள்கிறான் என்றுப் பார்த்தால் எங்கும் குன்றத் தேவையில்லாத ஒரு தோள்களை ஈட்டுக்கொள்கிறான். அது சாதாரண சம்பாத்தியம் கிடையாது. தன் வாழ்நாள் முழுக்க தன்னைப் பற்றி தான் பெருமிதத்துடன் நினைத்துக்கொள்ளக்கூடிய வாழ்க்கை இருக்கே அது சாதாரண வாழ்க்கை கிடையாது. அது ஒரு பெரியச்செல்வம். மேலும் நேர்மையற்ற ஒருவன் ஒருபொழுதும் தன் பிள்ளைகள் முன் நிமிர்வோடு இருந்ததாக நான் பார்த்ததே கிடையாது.  

சினிமா துரைக்கு ஏன் செல்ல வேண்டும்? நாம் நமது வீட்டிலேயே எடுத்துக்கொள்வோம், நாம், நமது பெற்றோர்கள், நமது உறவினர்கள், நமது நண்பர்கள் எல்லோரும் தத்தமது பெற்றோர்களையும், முன்னோர்களையும், சகோதர்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டுவார்கள்/வசைப்பாடுவார்கள் - உதாரணமாக - எங்க அப்பன் ஒரு சோம்பெறி, எங்க அண்ணன் ஒரு சுயநலம், எங்க உறவுக்காரங்களான் காரியவாதிங்க, எங்க தாத்தா எங்க அப்பாக்கு ஒன்னும் செய்யல, அதனால அவுரு ரொம்ப கஷ்டப்பட்டாரு, எங்க பரம்பரையிலேயே இந்த விட்டுக்கொடுக்காத குணம், கோவம் லான் இருக்கு. குற்றம் சொல்லுபவர்கள் தங்கள் குற்றங்களை மறைக்க மற்றவர்கள்மீது குற்றம் கூறினாலும், இவ்வசைகளை மறுக்க முடியாது என்பதே பெரும்பாண்மையான நேரங்களில் உண்மை. ஆதலால் அத்தகைய வசை உண்டாக வாய்ப்புக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்வு.

மற்றவர்கள் ஒருவர் மீது வசை கூறமுடியாத அளவிற்கு ஒருவர் வாழ்வார் எனின் அதுவே உன்னத வாழ்வு. அதுவே புகழ். 

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்" என்ற குறளின் படி வாழ்ந்தால் “தன்னைத் தான் காதல்” கொள்ள முடியும்.


திருவாய்மொழிப் பாடல் (3,3:11) “வாழ்வார் வாழ்வெய்தி ஞாலம் புகழவே” என்னும். 

கம்பராமாயணப்பாடல் ஒன்றில், 
வழிகெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்திறினும் மார்பம் 
கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் சான்றோர் கேட்கும் 
மொழிகொடு வாழ்வதல்லால், முறைகெடப் புற நின்றார்க்குப் 
பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபருளரோ பாவம்”  என்பார் கம்பர். (கம்பராமாயணம் மாயாசனகப் 66)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார். (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.).

மணக்குடவர் உரை
வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார். இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

சாலமன் பாப்பையா உரை
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who lives a life in which no one can blame, or point mistakes, or pin point wrongdoings even behind the screen is called the person  living. Whereas if a person lives a fancy life in front of others whereas earns the blame, etc behind screens is not actually living - he or she is either faking or considered dead

Questions that I ask to the kid
Who is considered living? Who is not considered living?
If someone pinpoints us about us from the behind, would that be considered a blame?

No comments:

Post a Comment