Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
ஆறு āṟu   s. a river நதி; 2. a way, road வழி; 3. morality, virtue அறம்; 4. the manner of doing a thing, விதம். 5. result, பயன்.
'நல்லாறு'  - நல்வழி, நற்பயன்
எனினும் -என்றாலும்
கொளல் -  பெற்றுக்கொள்ளுதல்
தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.
மேல் உலகம் - தேவருலகம்; பூலோகம் முதல் ஏழு உலகங்கள்.
இல்’ - இல்லை
எனினும் - என்றாலும்
ஈதலே - கொடுத்தல்; வறிய வருக்குத் தருதல்; சொரிதல் படிப்பித்தல்
நன்று - சிறப்பானது, நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின் நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
நமக்கு தேவையான செல்வம் நம்மிடம் இருக்கும் பொழுது நமக்கு நற்பயன் விளைவிக்கும் என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே. அதேப்போல நாம் பிறருக்கு உதவி செய்வதனால் நற்பயனாக மேலுலகம் கிடைக்காது அல்லது நாம் பிறருக்கு உதவி செய்தாலே மேலுலகம் கிடைக்காது என்றாலும் பிறருக்கு உதவி செய்வது (ஈதலே) வாழ்வின் நோக்கமாக, அறமாக, இன்பமாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

ஏன் ஏற்பது இகழ்ச்சி?
உதாரணமாக 1 :  சில பள்ளிகளில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் எனப்படும் ஊக்கதோகை தனை பல நபர்கள் சொந்தமாகவும் சில தொண்டுநிறுவனங்கள் மூலமாகவும் கொடுப்பார்கள். அதனை சிலர் தனக்கு தேவையான வசதி இருந்தாலும் சிபாரிசு மூலம் பெறுவர் - அது ஒரு விதத்தில் அவர்களின் வீட்டின் சுமையை குறைக்கும் - இருப்பினும் இந்த ஊக்கத்தொகை இல்லாமல் அவர்களால் படிக்க வைக்க முடியும். ஆனால் அந்த பணம் தேவையான பல மாணவர்கள் இருப்பார்கள். அந்தப் பணம் அவர்கள் மேலும் படிக்க உதவும். அதனால் இப்படி சிபாரிசு மூலம் ஒருவர் அப்பணத்தை வாங்கியதால் மற்றொரு ஏழை மாணவனின் வருங்காலமே பாதிக்கக்கூடும்.

உதாரணமாக 2 : எனது நண்பர் ஒருவர் ”மாற்றம் ஃபொண்டேஷன்” என்கிற தொண்டு நிறுவனத்தில் தொண்டாற்றுகிறார். அக்குழுமத்தில் +2 முடித்தபின்பு இளநிலை மேற்படிப்பு படிக்க குடும்ப சுமையால் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி அளிப்பதே அவர்களின் பங்களிப்பாகும். இதற்காக பலர் ஒன்று சேர்ந்து கலந்தாய்வு (counselling) செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் நேரடி கள ஆய்வு செய்வார்கள். அவர் குழுமம் சொல்லும் சில வருந்ததக்க நிகழ்வுகள் என்னவென்றால் பல நல்ல நிலையில் இருக்கும் மக்கள் கூட கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து இரு தேரு (road) பின்பு தனது காரை  (car) நிப்பாட்டிவிட்டு, தங்க சங்கிலிகளை (chain) மறைத்து விட்டு வந்து தன்னிடம் ஏதும் இல்லாதது போன்று காண்பித்துக்கொள்வார்கள் என்று. இத்தகைய மனிதர்கள் பிறருக்கு (ஏழை மாணவர்களுக்கு) சென்று சேரவேண்டிய பணத்தை (சொல்லப்போனால் வாழ்வை) தனக்கு தரும்படி கேட்பது இகழ்ச்சியே.

===
இக்குறளில் வள்ளுவருடைய ஒரு கருத்தை உறுதியாக அறிந்துகொள்கிறோம். மேலுலக வாழ்வு, வள்ளுவருக்கு இன்றியமையாதது  அன்று. மேலுலகத்தையும், தேவைப்பட்டால் தூக்கி எறிந்துவிடும்  வீரம் உடையவர் வள்ளுவர். மனிதப் பண்புக்கே வள்ளுவர் முதன்மை தருகிறார். அப்பண்பு சீர்கெடாமல் காப்பதையே கடமையாகக் கருதுகிறார். மேலுலகப் பற்றைக் கூறித்தான் அறத்தை வளர்க்க வேண்டும் என்பது அவருக்குத் தேவையில்லை. உலகில் இருக்கும் வறுமை நிலைமைதான் வள்ளுவரை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகிறது. இதனால்தான் ஈதல் நல்லவர்களை, அதனால் புகழ்பெற்றவர்களைத் தெய்வங்களாகவும் மதிக்கத் தொடங்கிவிடுகிறார். வள்ளுவர் மேலிருந்து காப்பதாகக் கூறப்படும் கற்பனைத் தெய்வங்களைப் போல் இவர்கள் உலகிலிருந்து மக்களைக் காப்பாற்றும் உண்மை தெய்வங்கள். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஈஎன இரத்தலோ அரிதே” (புறநா 154:8)
“ஈஎன இரத்தல் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று” (புறநா 204:1-3)

“இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்” (கம்ப.வேள்வி 29)

மேலும்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் “அழிந்த பிறகு ..” என்னும் நாவலில் (தமிழில் சித்தலிங்கையா) சில வரிகள் இப்படி வருகிறது
வாழ்க்கைக் கணக்கேட்டில் நான் பெற்றதைவிடக் கொடுத்தது குறைவாக இருக்கக்கூடாது. இது வெறும் பணத்தைப் பற்றிய கணக்கு அல்ல. மனித வாழ்க்கையின் வரவு செலவு. மனிதன் சமுதாயத்துக்குக் கடன்பட்டவனாகப் பிறக்கிறான். அந்த கடனிலேயே வளர்கிறான். இறக்கும்போது தான் பெற்றதைவிட அதிகமாக் திருப்பித் தராவிட்டால் அவனுடைய பிறவி பயனற்றதாகிறது. அவன் பிறந்ததால் சமுதாயத்திற்கு இழப்பே என்பது என் கருத்து. பணம், காசு முதலியவை யெல்லாம் இந்த நோக்கில் பார்த்தால் மிகவும் அற்பமானவை யாகும். ஆனால் அவையும் வாழ்க்கையை நடத்துவதற்கு இன்றையமையாது வேண்டிய பொருள்கள் ஆகும்.

பரிமேலழகர் உரை
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

No comments:

Post a Comment