Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சுடச்சுடரும் பொன்போல்

குறள் 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுடுதல் காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

சுடர் - ஒளி; சூரியன்; வெயில்; சந்திரன்; கோள்; ஆண்டு; தளிர்; விளக்கு; சுடர்; தீப்பொறி; சுடரிலிருந்துவிழும்எண்ணெய்த்துளி.

சுடர்தல் - சுடர்-தல் - cuṭar-   4 & 5 v. intr. சுடர் To give light; to burn brightly; to shine, as aheavenly body; to sparkle, as a gem; to gleam;ஒளிவிடுதல். சுடச்சுடரும் பொன்போல் (குறள், 267). 

சுடச்சுடரும் - ஒரு பொருளை (தங்கம்) தீயினால் சுடும் பொழுது சுடரும் / பொலிவு பெரும்.

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நான்குவகைப் பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி.

போல - ஓர்உவமவுருபு

பொன்போல் - தங்கத்தைப் போல்

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்

ஒளிவிடுதல் - ஒளிர்தல்.

ஒளிவிடும் - ஒளி வந்தால் இருள் நீங்கி வெளிச்சம் வருவதுப் போல், துன்பம், குற்றம் நீங்கி, மெய்யுணர்வு (ஞானம்) பிறக்கும்.

துன்பம் -  னவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

சுட - சுடுதல் காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

துன்பஞ் சுடச்சுட - துன்பங்கள், தீவினைகளை களைவது.

நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை.

நோற்கிற் பவர்க்கு - தம்மைத்  தாமே   வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை  - அதாவது தவம்.

முழுப்பொருள்
தங்கத்தை நெருப்பில் சுட்டால் அதனில் உள்ள மாசுகள் சாம்பலாகி தங்கம் பொன்னொளி கொண்டு சுடரும்.  தங்கமானாலும் அதனை ஒரு துணியால் துடைத்தால் ஒளி சுடராது. தங்கத்தையும் இரக்கமில்லாமல் நெருப்பில் சுட வேண்டும். 

அதுப்போல ஒருவர் துறவு மேற்கோண்டு வீடுபேற்றை இலக்காக கொண்டு தவத்தை மேற்கொண்டு தன்மீது இரக்கமற்று தனது குற்றங்களையும், ஆசைகளையும், குரோதங்களையும், மயக்கங்களையும் களைவார் என்றால் அவரும் தனது இலக்கை அடைந்து மெய்யுணர்வு பெற்று வீடுபேறு அடைவார்.

இது வீடுபேறு என்றில்லை, எந்த ஒரு குறிக்கோளையும் ஏகமனதாக நினைத்து அதனை தவம் போல் செய்தால் அதில் பிரகாசிக்க முடியும். குறிக்கோளை அடைய முடியும்

ஆக மெய்யுணர்வு பெறுவது என்பது ஒரு நாளில் அடைவது அல்ல. அது மெல்ல மெல்ல கடும் தவத்தினால் குற்றங்களை களைந்து அடையும் ஒரு நிலை.

தவம் என்பது ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி, முயற்சி. அவ்வாறு முயலும் போது எத்தனையோ தடங்கல்களும், துன்பங்களும் வருவது இயல்பே. அத்தடங்கல்களையும் தாண்டி, துன்பங்களைப் பொறுத்துகொண்டு, அறிவை நோக்கிய ஒரு உறுதியும், அதனால் தெளிந்த ஞானம் அடைவதும் உறுதி.

ஆகவே தான் மற்றுமொரு குறளில் கடுமையான பயிற்சி தேவை என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

ஒப்புமை
“கொள்கைக் கட்டழல் உள்ளுற மூட்டி
மாசுவினை கழித்த மாதவர் போலத்
தீயகத் திலங்கித் திறல்விடு கதிரொளி
சேடுறக் கிடந்த செம்பொன்” (பெருங் 2.19:62-5)

“ஆரழல் முளரி யன்ன அருந்தவம்” (சீவக 2632)

“நான் என்ன செய்வது, அருகரே?” என்றார் தருமன். அவர் “அவளை அறிக! அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி” என்றார். “நான் எப்போதும் அவளை அறியவே முயல்கிறேன்” என்றார் தருமன். “தவமின்றி அறிதலில்லை” என்றார் அருகப்படிவர். “அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை. தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.”

அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!

தன் மேல் இரக்கமற்றிருப்பதே தவம்.

பரிமேலழகர் உரை
சுடச்சுடரும் பொன் போல்-தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும்-தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். 

விளக்கம்
('சுடச்சுடரும் பொன் போல' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு -(தம்மைத்) துன்பம் வருத்த வருத்தத் தவஞ் செய்ய வல்லார்க்கு, சுட சுடரும் பொன்போல் ஒளி மிகும் - சுடுங் காலையில் ஒளிரும் பொன் போல (அறிவாகிய) ஒளி மிகும்.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஒளிவிடும்’. மணக்குடவர் பாடம் ‘சுடச் சுடப் பொன்போல’. ‘ஒளிவிடும்’ என்பதினும் ‘ஒளி மிகும்’ என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: தவம் செய்வார்க்கு அறிவு வளரும்.

மணக்குடவர் உரை
நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும். இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.

மு.வ உரை
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

சாலமன் பாப்பையா உரை
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
When we burn gold over fire, the dirt in the gold gets burn into ashes. As the gold bears the heat and gets burned, it starts emitting light or it glitters. Similarly, when a person does penance, identifies and eradicates his mistakes, flaws, desires, anger, hatred, fluctuations etc while also bearing the pain of eradicating and giving up the flaws then he starts moving and attains his goal moksha. The process of cleansing is difficult and painful process. But the end result is going to be shining. 
This can be applied in achieve any goal. If one works towards a goal like a tapas with single minded focus, one can shine in that goal. 

Questions that I ask to the kid
How can you shine like a gold? What should you go through for it? Is it worth it?

No comments:

Post a Comment