தன்நெஞ் சறிவது பொய்யற்க

குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் நெஞ்சு - தன்னுடைய மனம்/ நெஞ்சம் (பிறர் அறியாதது)
அறிவது - அறிந்துக்கொள்வது / அறிவது / தெளிந்துக்கொள்வது / உண்மையானது
பொய்யற்க - (அதனை) பிறர் அறியவில்லையே என்று எண்ணி பொய்யினை கூறாதே
பொய்த்தபின் - மீறி பொய் சொன்னால், அதன் பின்
தன் நெஞ்சே - தன்னுடைய நெஞ்சமே
தன்னைச் சுடும் - குற்ற உணர்ச்சியால் தன்னை சுட்டெரிக்கும் நெருப்பாக ஆகிவிடும்

முழுப்பொருள்
பல உண்மைகள் எல்லோருக்குமே தெரிந்து இருக்கும். ஆதலால் பொய் சொன்னாலும் மற்றவர்கள் சுட்டிக்காட்டி தகுந்த தண்டனை கொடுத்து ஒருவனை அழித்து விடுவர்.

ஆனால் பிறருக்கு தெரியாத சில உண்மைகள் தனக்கு மட்டும் தெரிந்த சில உண்மைகள் பல நேரம் அமையும். குறிப்பாக குடும்பங்களில், அலுவலங்களில், நட்பு வட்டாரத்தில். அத்தகைய நேரங்களில் பிறருக்கு தெரியாதே எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிற்றே என்று எண்ணாமல் உண்மையை சொல்லுக. பொய்யை சொல்லாதே, உண்மையை மறைக்காதே.

மீறி உண்மையை மறைத்தாலோ பொய்யை கூறினாலோ, பொய் சொன்னாதற்காக தன்னுடைய மனமே தன்னை நெருப்பாய் சுட்டு எரித்து விடும். மன நிம்மதியை அழித்து விடும்.

ஆக வாய்மை மட்டும் மொழிக.


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்ற சொலவாடையை நினைவில் கொள்க

அறநெறிச்சாரப்பாடல் (206),
தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தானடக்கிற் 
பின்னைத்தான் எய்தா நலனில்லை” என்று இதே கருத்தை ஒட்டி கூறுகிறது.

“அறிகரி பொய்த்தலின் ஆகுமோ வதுவே” (நற் 196:9)
“அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை” (குறுந் 184:1)

மேலும்: அஷோக் உரை

"Above all, do not lie to yourself." — Fyodor Dostoyevsky

வசுஷேணர் மண்ணிலிருந்து எழுந்து மூச்சுலகை அடைந்தபோது விம்மி அழுதுகொண்டிருந்தார். மூச்சுலகில் அவரை எதிர்கொண்ட கந்தர்வனாகிய சுகாலன் “அழுதபடிதான் நீங்கள் இங்கு வரமுடியும் அரசே, வருக!” என வரவேற்றான்.நான் ஏன் இத்தனை துயர்கொண்டிருக்கிறேன்?” என்று வசுஷேணர் கேட்டார். “நீங்கள் காம்பு கனிந்து உதிரவில்லை” என்று சுகாலன் சொன்னான். “ஏன்?” என்று வசுஷேணர் மீண்டும் கேட்டார். “களம்கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் முடிவதேயில்லை” என்றான் சுகாலன். அவர் பெருமூச்சுடன் “என்னால் எதையும் வகுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
.......
.......
"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.
===
மேற்சொன்ன வரிகளை வாசித்தால் நமக்கு மற்றொன்றும் புரியும். நாம் நமது முழு ஆற்றலுக்கு செயல்புரியவில்லை என்றால், பின்னாநாட்களில் நாம் வருந்துவோம்

பரிமேலழகர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க- ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்-பொய் சொன்னானாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

"நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை." (கொன்றை.54) முக்கரணவினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்." என்றார் உலகநாதர். 'சுடும்' என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மன நோவை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: தன்னெஞ்சு அறிந்தது பொய்யற்க - தன் மனச் சான்று அறிந்ததனை அறிந்ததற்கு மாறாகக் கூறற்க ; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னை சுடும் - அறிந்ததற்கு மாறாகக் கூறிய பின்னர்த் தன் மனச்சான்றே தன்னை வருத்தும்.

அகலம்: தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடியே கூறுதல் வாய்மை என்றும், அறிந்ததற்கு மாறாகக் கூறுதல் பொய்ம்மை என்றும், பொய்ம்மை கூறுவதால் இன்னது விளையு மென்றும் கூறினார். ‘நெஞ்சு’ ஆகு பெயர், அதன் சான்றுக்கு ஆயினமையால். மனச் சான்று - மனத்தின்கண் சான்றாய் நிற்கும் அறிவு. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அறிவது’. ‘அறிந்தது’ என்பது பொருத்தமான பொருளைத் தருதலானும், இன்னோசை பயத்தலாலானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. பரிமேலழகர் இக் குறளை மூன்றாங் குறளாகவும், இரண்டு, மூன்றாம் குறள்களை முறையே ஒன்று, இரண்டாம் குறள்களாகவும் கொண்டனர். இக் குறள் வாய்மைக்கு விதி கூறுகின்றமையாலும், இரண்டு மற்றும் மூன்றாம் குறள்கள் முறையே வாய்மைக்கு விலக்கும் பொய்மைக்கு விலக்கும் கூறுகின்ற மையாலும் இது முதற் குறளாகவும், அவை இரண்டு, மூன்றாம் குறள்களாகவும் அமைக்கப்பட்டன.

கருத்து:தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி வெளியிடுதல் வாய்மை.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பொய் சொன்னால் மனச்சாட்சி துன்புறுத்தும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பொய்  கூறி  வாழ்ந்திடலாம்  என்று  எண்ணும்
             பொறுப்பற்றோர் தனைப் பார்த்து  வள்ளுவரும்
சொல்கின்றார்  ஒரு  செய்தி  ஆகா   ஆகா
             சோர  உணர்வுள்ளோர்கள்  உணர்வதற்காய்
எல்லார்க்கும்  தெரியாதே  பொய்கள்  சொல்லி
             ஏய்த்ததுவாய்  நினைக்கின்றீர் அய்யோ  பாவம்
உள்ளம்  உம்  உள்ளம்  அப்பொய்யைக்  கொண்டு
             உமைச் சுட்டு  உமைச்சுட்டுக்  கொன்றே  போடும்

Thirukkural - Management - Ethical Behavior
Valluvar would have anticipated that people would take undue advantages of his thought in Kural 291 
and has warned us immediately with another Kural, 293. The Kural says: 

Lie not against your conscience 
Lest it burn you.

One should not tell harmful or hurtful lies by deliberately knowing that that sort of lie would cause trouble for both the person who tells and the person who receives. That sort of lie disturbs the conscience of the person who tells. If we tell a lie consciously,  our consciousness will hurt us forever. In other words, telling a lie should not make us feel guilty. If telling a lie ends in regret for the person, that act becomes unethical.

Let us be honest with ourselves as we are
living our life.

English Meaning - As I taught a kid - Rajesh
Your heart knows the lies that your saying, your insincerity, your dishonesty etc. Hence, don't tell lies, don't be dishonest, don't be insincere because your heart itself will burn you with guilt. You cannot escape from your heart/conscience

Questions that I ask to the kid
1) What will burn your heart?
2) Your heart knows it is wrong. What should you do or don't do? why?
3) Your heart doesn't knows it is wrong. What should you do or don't do? why?

இரப்பன் இரப்பாரை எல்லாம்

குறள் 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன்-இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)

இரப்பன்- யாசகம் செய்வேன்
இரப்பாரை - யாசகம் செய்யும் நபர்கள்
எல்லாம் - எல்லோரிடமும்
இரப்பின் -  மற்றவர்களிடம் யாசகம் செய்வது
கரப்பு -  மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.
கரப்பார் - வஞ்சகம் செய்வோர்
இரவன்மின் - யாசகம் செய்ய வேண்டாம்
என்று - என்று

முழுப்பொருள்
ஒருவர் வறுமையில் யாசகம் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் யாரிடம் சென்று யாசகம் செய்வது என்பதில் ஒரு அளவுகோல் வேண்டும். அதாவது எல்லோரிடமும் யாசகம் செய்யக் கூடாது. யாசகம் என்று வந்தால் மற்றவரை ஏமாற்றுவார் பலர் உள்ளனர். அவர்கள் பலவகையாக ஏமாற்றுவார்கள். உதாரணமாக 1) என்னிடம் பணம்/ பொருள்/ உணவு/ யாசகம் வேண்டி வந்த பொருள் இல்லை என்று பொய் சொல்லுவார்கள் 2) அதிக வட்டிக்கு பணம் கொடுப்பார்கள் 3) ஏமாற்றி பத்திரம் எழுதிக்கொள்வார்க்ள்.  இவர்கள் யாசகம் வேண்டி வந்தவர்களை வஞ்சிப்பார்கள்.  

வறுமையில் வாட வேண்டிய நிலை வந்தாலும் தயவு செய்து இத்தகைய வஞ்சகர்களிடம் யாசகம் செய்யாதீர் என்று வேண்டுகிறார் திருவள்ளுவர்.

“கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறும் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே” (சம்பந்தர்.கோவலூர் வீரட்டம் 2)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)

மணக்குடவர் உரை
பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி.

இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இரப்பின்-இன்றியமையாமை பற்றி இரக்கநேரின்; கரப்பார் இரவன்மின் என்று-தம்மிடமுள்ளதை யில்லையென்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டாமென்று; இரப்பாரை எல்லாம் இரப்பன்-இவ்வுலகில் இரப்பாரையெல்லாம் நான் இரந்து வேண்டிக்கொள்கின்றேன்.

இது ஆசிரியர் கூற்று. இதனால் மேற்கூறிய நெறியின் கடுமையைத் தளர்த்தித் தம்மை நடைமுறைக்கேற்ற வழிகாட்டியாகக் காட்டியுள்ளார். ’கரப்பாரிரவன்மின்’ செய்யுள் நடைபற்றிய இரண்டாம் வேற்றுமைத்தொகை. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின் வருநிலை. இதனால் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

மு.வ உரை
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கையேந்தி நிற்கின்ற ஏழையர் முன்
கையேந்தி நிற்கின்றார் வள்ளுவரும்
பொய்யாகப் பொருள் சேர்த்து வீட்டினுள்ளே
பூட்டியே அதைக் காவல் காப்பார் முன்னே
அய்யா நீர் கையேந்தி நின்றிடாதீர்
அடியேனின் வேண்டுகோள் என்று சொல்லி
கையேந்தல் வறுமையால் என்ற போதும்
கையேந்தும் சரியான இடத்தில் என்று

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
நெஞ்சத்தார் - நெஞ்சத்தில், மனதில் உள்ளவர்
காதல் அவராக - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக
வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்.
உண்டல் -  உண்டாகுகை, உண்டல்; அழித்தல்; சிரித்தல்.
அஞ்சு - ஐந்து; அச்சம்; ஒளி.
அஞ்சுதும் - அச்சம் கொள்கிறது
வே - s. Spying, reconnoitering, espio nage, வேவு. (சது.),
-- (வேக,வெந்து) vee (veeka, ventu) வே (வேக,வெந்து) be cooked (in narrowest sense, in water and without seasoning), parcook; be hot
-- எரிதல்,  வெப்பமாதல், துன்பமுறுதல், சினமுறுதல்

பாக்கு - அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும் வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி;

அறிந்து - தெரிந்ததனால், உணர்ந்ததனால்.

முழுப்பொருள்
மனதிற்கு இனியவர் காதலர் ஒரு பெண்ணின் மனதில் நிறைகிறார். அப்படிபட்டவர் பெண்ணின் மனதில் குடிகொள்வதனால் அவள் உணவு உண்ணும் பொழுது மிகுந்த கவனம் கொள்கிறாள். ஏன் என்றால் சூடான உணவோ அல்லது காரமான உணவோ உண்டால் அவை மனதிற்கு துன்பம் தரும் (யோசித்துப் பாருங்கள், நெஞ்செரிச்சல் வந்தால் தகாத உணவை உண்டு இருப்போம் என்கிறோம்). ஆகவே காதலருக்கும் துன்பம் வருமாம்.

ஆகவே சூடான உணவையோ காரமான உணவையோ உண்டால் கனவருக்கு துன்பம் வரும் என்று முன்னறே தெரிந்ததனால் அவள் அத்தகைய உணவை அஞ்சுகிறாளாம் தவிர்க்கிறாளாம்.

கேட்க பேதமையாய் இருந்தாலும் அதுவே காதலின் சிறப்பு! பேதமை இல்லா காதல் எங்கே!

ஒப்புமை
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)

“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)

“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை 
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காதலவர் நெஞ்சத்தாராக - எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் ளிருக்கின்றாராதலால் ; வேபாக்கு அறிந்து - அவர் சூடுறுதலை யறிந்து ; வெய்துஉண்டல் அஞ்சுதும் - வெம்மையாக வுண்ணுவதற்கு அஞ்சுகின்றேம்

எப்போதும் எம்நெஞ்சிலிருக்கின்றவரைப் பிரிந்தாரென்று கருது வதென்னை என்பது குறிப்பெச்சம் , ' வேபாக்கு ' தொழிற்பெயர் ; 'பாக்கு ' தொழிற்பெயரீறு .
மு.வ உரை
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கம்பன் அவன் குறள் கற்று கரைந்ததைத்தான்
காட்டி நின்றேன் கம்பனது பாடல் தன்னில்
நம்பி யவன் கொண்ட குறள் இங்கே சொல்வேன்
நானிலத்தீர் தமிழ் கொணடே மகிழ்ந்திடுவீர்
செம்பு நிறப் பெண்ணொருத்தி வீட்டில் என்றும்
சீராகச் சூடாக எதையும் உண்பாள்
அம்பு விழிப் பெண்ணவளின் உள்ளே ஒரு
ஆணழகன் நுழைந்தானாம் குடி கொண்டானாம்

வம்பு வந்து சேர்ந்ததவள் வீட்டிற்குள்ளே அன்னை
வடிவழகுப் பெண்ணவட்கு அன்பு சேர்த்து
செம்பு நிறைப் பசும்பாலைக் காய்ச்சி அவள்
சீர் அறிந்து சூடாகக் கொண்டு தந்தாள்
கொம்பு முலைப் பெண்ணாளோ அருந்தவில்லை
கொண்டு தந்த தாயார்க்குப் புரியவில்லை
அன்பு கொண்டு உள்ளிருக்கும் காதலனோ
அச்சூட்டைத் தாங்கானென்றருந்தவில்லை

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!  (நன்றி கவிப்புயல் இனியவன்)
என் நெஞ்சுக்குள்ளே
குடியிருக்கும் என்னவனே
இதயமே உனக்கு கோயில்
நீயே என் இதய தெய்வம் ...!!!

என் இதய தெய்வமே
இதயத்தில் குடி கொண்டு
வாழ்பவனே - உனக்கு
சுட்டு விட கூடாது என்பதால்
சூடான உண்பதையே
தவிர்த்து விட்டேன்
என்னவனே ....!!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க

குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
மற-த்தல் - 12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

மறந்தும் - மறதியுலும், நினைவில் கொள்ளாமல் கூட, உறக்கத்தில் கூட

பிறன் - மற்றவர்களுக்கு

கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

சூழல் - s. (சூழ்) a small-hill; 2. a company; 3. an incarnation, அவதாரம்; 4. a trick or stratagem, தந்திரம்; 5. consultation; 6. deliberation, thought; reflection
s. Thought, reflection, கருத்து. 2. Purpose, intention, design, குறிப்பு. 3. Place, location, position, இடம். 4. Collec tion, group, clump, assemblage, கூட்டம். (p.) See under சூழ், v.

சூழற்க! - நினைக்காதே. அந்த எண்ணத்தை ஒழித்து விடு

சூழின் - மீறி அப்படி நினைத்தால் 

அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்) -  தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,

சூழும் - அவதரித்து, தந்திரத்தால்

சூழ்ந்தவன் - கேடு நினைத்தவனுக்கு, கேடு எண்ணியவனுக்கு

கேடு - கேடு விளைவாகும்

முழுப்பொருள்
பொதுவாகவே நாம் மற்றவருக்கு கேடு நினைத்தல் தவறு. ஆனால் திருவள்ளுவர் ஒரு படி மேலே சென்று மறந்தும் கூட கனவிலும் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காதீர் என்கிறார். ஒரு வேளை மறந்து தீங்கு நினைத்தால் அதனை உடனே மனதில் இருந்து ஒழித்து விடுக. கண்டிப்பாக பிறருக்கு தீங்கு செய்யாதே. அப்படி அல்லாமல் மற்றவர்களுக்கு தீங்கு நினைத்தாலோ அல்லது செய்தாலோ, அறம் அதாவது கருமம் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் கனவிலும் மற்றவருக்கு கேடு நினைக்காதீர்.

உதாரணமாக சொன்னால் ஒரு விவசாயி பயிர்கள் நன்கு விளையவேண்டும் என்பதற்காக ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தால் அதனை உண்ணும் மனிதர்களுக்கு கேடு ஏற்படும். சில காலம் கிடைக்கும் வருமானத்திற்காக இதை செய்தால் சில காலத்தில் அந்த விவசாய நிலம் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தியதால் கெட்டுப்போகும். மேலும் பூச்சிகொல்லிகள் இருப்பதால் பூச்சிகள் பறவைகள் வராமல் மகரந்த சேர்க்கை நடக்காமல் செடிகள் பூக்காது பழங்களையும் தானியங்களை தராது. அதனால் தான் மறந்து பிறன்கேடு செய்யாதே என்றார் திருவள்ளுவர். ஏனெனில் விளைவுகள் உனக்கே ஆபத்தாக முடியும்.

குறிப்பு: இதனால் தான் என்னவோ மனசு படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்களோ என்னவோ. சில நேரம் நான் நினைப்பது உண்டு. நாம் மற்றவர் பற்றி நினைத்துக்கொண்டு நம் வாழ்வை தொலைத்து விடுகிறோம். அவர்களை பற்றிய வெறுப்பை கக்கி நமது மகிழ்ச்சியை சிதைத்துக்கொள்கிறோம். இதற்கு மாறாக நாம் நமது முன்னேற்றத்திலும் ஆக்கப்பூர்வமான செயல்களில் நேரத்தை செலவு செய்தால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கிட்டும் என்று.


ஒப்புமை
”விட்டனன் இலங்கை தன்மேல் விண்ணுற விரிந்த மாடம்
பட்டன பொடிக ளான பகுத்தன பாங்கு நின்ற
சுட்டனபொறிகள் பின்னைத் துளங்கினர் அரக்கர் தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்” (கம்ப.பொழிலிறுத்த 54)

“ஈண்டிவ் வண்டத்துள் இராக்கதர் எனும்பெய ரெல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன்னின்று முடுக
மாண்டு வீழும் இன் றென்கின்ற தென்மதி வலியூழ்
தூண்டு கின்றதென் றடிமலர் தொழுதவன் சொன்னான்” (கம்ப.மூலபல 33)

பரிமேலழகர் உரை
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
(நன்றி கவிப்புயல் இனியவன்)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.

தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

பொருள்: மறந்தும் பிறன் கேடு சூழற்க - (ஒருவன்) மறந்தும் பிறனது கேட்டை எண்ணற்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - (பிறனது கேட்டை) எண்ணின் (அவ்வாறு) எண்ணியவனது கேட்டை அறக் கடவுள் எண்ணும்.

கருத்து: பிறன் கேட்டைக் கருதியவனுக்குக் கடவுள் கேடு நினைப்பர்.

மு.வ உரை
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்

சாலமன் பாப்பையா உரை
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கெடுதல் செய்ய நினைப்பவன் கெட்டொழிவான்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தனை மறந்த நிலையினிலும் பிறர்க்குத் தீங்கைத்
தான் செய்ய ஒரு காலும் எண்ணிடாதீர்
அதை மறந்து தீங்கதனைச் செய்தீர் என்றால்
அறம் செய்யும் தீங்கதனைச் செய்தவர்க்கு
நிதம் இதை மனதினிலே கொண்டு விட்டால்
நிம்மதியாய் வாழ்ந்திடலாம் அதனை விட்டு
அறம் நம்மைச் சூழ்ந்து நின்று தீங்கைத் தரும்
அதை உணர்வீர் யார்க்கும் தீங்கு செய்ய வேண்டாம்

ஓஒ இனிதே எமக்கிந்நோய்

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் 
தாஅம் இதற்பட் டது
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
- பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

- பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு
இனிதே!- மகிழ்ச்சியானதே, இனிமையானதே, விருப்பத்திற்கானதே, நன்றானதே
எமக்கு
இந் நோய் - இந்த நோய்
செய்த - செய்து கொடுத்த
கண் - இந்த கண்களும்
தாம் இதற்பட்டது -  உறங்காமல் அழுதுக் கொண்ட இருக்கும் 

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் தலைவனின் பிரிவால் நான் வாடுகிறேன். துன்ப படுகிறேன். இல்லை இல்லை. அவரை காண முடியாமல் நான் துன்ப படுகிறேன். என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை

அடடே!! இந்த கண்களும் உறங்கவில்லை. நன்றாய் வேண்டும் இதற்கு. நான் காதல் வயப்பட முதற்காரணம் என் கண்களே. எனக்கு என் தலைவனை காட்டியவை கண்களே. தலைவனின் முகத்தை என் மனதில் ஆழ பதித்தவை என் கண்கள். ஆழ பதித்ததனால் கண்கள் மூடினாலும் அவரே கண் முன் வருகிறார். உறக்கம் இல்லை. இப்படி எனக்கு துன்பமே கடைசியில்.... ஆனால் இதிலும் ஒரு ஆறுதலும் மகிழ்ச்சியும்.  என்னை இந்நிலைக்கு ஆழ்த்திய இந்த கண்களும் உறக்கம் கொள்ளாமல் என்னை போன்றே தவிக்கிறதே. மகிழ்ச்சி மகிழ்ச்சி!!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)

மணக்குடவர் உரை
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது.

இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)

எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே.

துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம்

மு.வ உரை
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா உரை
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலனைப் பிரிந்து வெந்தாள் மங்கை நல்லாள்
கண்ணுறக்கம் கொள்ளவில்லை கண்ணீர் வேறு
சாதலுக்கு வழி உண்டா என்றால் அவன்
சரியாக மனத்துக்குள் அமர்ந்துளானே
பேதலித்துப் போன பெண்ணாள் பேசுகின்றாள்
பிரிவில் அழும் கண்களினைப் பார்த்து பார்த்து
நீர் தந்த நோய் தானே அவரைப் பார்த்து
நீர் வழிய அழுங்கள் எனக்கு இனிமை ஈது

காரணமான கண்களே ......!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
பூக்கள்
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு
காரணமான கண்களே ......!!!

நான்
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு
இன்பம் தான் - என்னை வாட
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!

பசந்தாள் இவள்என்பது அல்லால்

குறள் 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
பசந்து - நேர்த்தி, Elegance; beauty; attractiveness; fineness
பசந்தாயிருத்தல், v. noun. Being pleasing, attractive, engaging to the sight.
பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.
'பசந்தாள் இவள்' - தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் கொண்டு உடல் வேறு நிறம் பூண்டது
என்பது - என்று கூறுவாட்
அல்லால் - மற்றபட்டி
‘இவளைத் - இந்த அழகு தலைவியை 
துறந்தார் அவர்’  - விட்டு விட்டு பிரிந்து இந்த வருத்த நிலைக்கு கொண்டு வந்த அந்த தலைவனை
என்பார் இல் - என்று பழிப்போர் யாரும் இல்லையே


முழுப்பொருள்

இவள் அழகினால் தலைவன் மேல் காமம் கொண்டாள். இப்பொழுது பிரிவைக்கூட தாள முடியாமல் மற்றவர்கள் அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வாடியுள்ளாள் (தேக நிறம் மாறியுள்ளதாம்). அதாவது பிரிவால் வாடி இருக்கிறாளாம். என்று ஏசூவார்களாம் சுற்றத்தில் உள்ளவர்கள்.

ஆனால் இந்த அழகிய பெண்ணை பிரிந்து துறந்து விட்டு சென்று விட்டானே இந்த நோய் நிலைமைக்கு காரணமான இந்த (பாவி :) ) தலைவன் என்று யாரும் தலைவனை குறை சொல்ல மாட்டார்களாம். ஐயோ என்ன அவலம் இது. ஒருத்தரை மட்டும் குறை சொல்கிறது இவ்வுலகு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.).

மணக்குடவர் உரை
இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நீயிங்ஙனம் பசத்தல் கூடாதென்ற தோழியொடு புலந்து சொல்லியது.)

இவள் பசந்தாள் என்பது அல்லால்- இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலை கொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல்- இவளை அவர் கைவிட்டுப் போய்விட்டாரென்று அவரைக் குறை கூறுவார் இவ்வுலகத்துஒருவருமில்லை.

தன்னையே கடிதல் பற்றிப் புலக்கின்றாளாதலின்,'என்பார்' என அயன்மைபடுத்திக் கூறினாள்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கலந்திருந்தான் கனிந்திருந்தேன் கைகள் தமக்கிடையில்
பிணைந்திருந்தேன் விட்டுப் பிரியாமை வேண்டி நின்றேன்
அலந்திருந்த காரணத்தால் அணைப்பதிலே சிறப்பளித்தேன்
அப்படியே மயங்கியதால் கூடலிலோ வென்றிருந்தேன்
பிரிந்து விட்டான் பேதையெனை உடல் நிறமும் மாறியது
பேசுகின்றார் ஊரார் என் மாற்றமதைப் பெரிதாக
துறந்து சென்ற அவனன்றோ துன்பமதை இழைத்தவன் காண்
தூற்றுகின்றார் அவனை விட்டு எனை என்ன நியாயமிது

இழிவு படுத்துகிறார்கள் ... (நன்றி கவிப்புயல் இனியவன்)

உன்னால் தானடா ....
எல்லாம் நடந்தது .....
என் உடல் முழுவதும் ...
காதல் நோய் படர்ந்து.....
விட்டது ...!!!

என்
உடலில் காதல் நோய் ...
பரவியிருப்பதை ஊரார் ...
இழிவு படுத்துகிறார்கள் ...
நீ பிரிந்து சென்றது தான் ...
காரணம் என்று கூற ...
மாட்டார்களாமே .....!!!

மு.வ உரை
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

காமம் விடுஒன்றோ நாண்விடு

குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

விடு -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.

ஒன்றோ -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

நாண் -  வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

விடு -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.

நல் -  நல்ல, மிகுந்த

நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
நெஞ்சே - மனமே

யானோ -  நானோ

பொறேன் - பொறுக்க முடியவில்லை

இவ் இரண்டு - இவ்விரண்டிற்கும் நடுவில் அகபட்டுக்கொண்டு

முழுப்பொருள் [மேலும்: அஷோக் உரை]
இப்பாடலில், காதலில் ஆழ்பட்ட காதற்தலைவி, தன்னெஞ்சை இறைஞ்சுகிறாள், ஒன்று தன்னுடைய காமத்தையாவது அல்லது காமத்துக்குத் தடையாயிருக்கிற நாணத்தையாவது கைவிடவேண்டுமென்று. 

நாணமும் காமமும் நீரும் நெருப்பும் போன்றன. காமம் நெருப்பாய் காயும்; நாணமோ அதை அவித்துவிடும். நாண நீர் குறைவாக இருப்பின் காம நெருப்பில் வற்றிவிடும். 

நெஞ்சமோ இரண்டையும் சரியான அளவில் வைத்து என் பெண்மையைக் காக்கிறது. இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒன்றைமட்டும் எனக்குக் கொடு என்கிறாள்.

அவள் வேண்டுவதைப் பார்த்தால் காமமே மிக்கிருக்கவேண்டும். ஆயின் நாணமோ அதைத் தடுக்கக் கூடிய அளவில் இருக்கவேண்டும். அத்தடையை நீக்கச் சொல்லியே வேண்டுவதாகத் தோன்றுகிறது. 

குறுந்தொகைப் பாலைத்திணைப் பாடலொன்றில் காதற்தலைவி நாணம் தம்மை நெடுங்காலம் உடனிருந்து வருத்தியதையும், இனிமேல் காமம் மேலும் நெருங்க அது இல்லாது போய்விடும் என்பது வருந்தத்தக்கது என்கிறாள். அப்பாடல் இங்கே:

”காமம் எய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)

”அளிதோ தானே நாணே நம்மொடு 
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே 
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை 
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத் 
தாங்கு மளவைத் தாங்கிக் 
காம நெரிதரக் கைந்நில் லாதே.”  (குறுந் 149)



”கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)

“காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்” (குறுந் 231:4-5)


கலித்தொகைப் பாடலும் இவ்வாறே கூறுவதாகக் கொள்ளவேண்டும். அப்பாடலானது. இப்பாடலில் இது இன்னுமே தெளிவாகிறது.

“மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கி ஆங்கென்னை
நலியும் விழுமம் இரண்டு” (கலி 142:55-8)

பரிமேலழகர் உரை
(நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன். ('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது. இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நாண் தடுத்தலின் காதலரிடம் செலவொழிவாள் சொல்லியது.)

நல் நெஞ்சே- என் நன்மனமே!? ஒன்று காமம் விடு -காமம் நாண் என்னும் இரண்டனுள் ஒன்று காமத்தை விட்டுவிடு, நாண் விடு - அல்லாவிட்டால் நாணைவிட்டுவிடு, இவ்விரண்டு யானோ பொறேன்- இவ்விரண்டையும் தாங்கும் ஆற்றலோ எனக்கில்லை.

'நன்னெஞ்சே' என்றது, இன்பத்தையும் பெண்மையையும் ஒருங்கே நிலைபெறுத்தலால் நீ நல்லையென்று பாராட்டியவாறாம். இது நன்றே யெனினும், இவ்விரண்டையும் ஒருங்கே தாங்குதல் உயிருக்கு இயலாமையின், உயிரைக் காக்க வேண்டின் இவ்விரண்டுள் ஒன்றை விட்டுவிடுதல் வேண்டும். இவற்றுள் நாணே சிறந்ததாதலின், காதலர் வரும்வரை ஆற்றியிருத்தலே தக்கதென்பதாம். 'ஒன்றோ'- ஓகாரம் அசைநிலை. யானோ- ஓகாரம் பிரிநிலை. முற்றும்மை தொக்கது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஏதேனும் ஒன்றைக்  கொள் எந்தன் நெஞ்சே
         எப்படி நான் இரண்டையுமே  தாங்கிக் கொள்வேன்
சூதின்றி வாதின்றி இன்பம்  தன்னைச்
         சுகமதனைக் கொடுப்பதுவும் பெறுவதுவும்
பேதை நான் மணத்தோடு பெறுவதற்கு
         பெரும் உதவி நாணத்தை விட்டு விடு
வாதையின்றி  நான் வாழக் காமம் தன்னை
         வகையாக விட்டு  விடு  தாங்க மாட்டேன்

இரண்டிலொன்றே என்னாலே தாங்க ஏலும்
         இதை உணர மாட்டாயா எந்தன் நெஞ்சே
புரண்டு புரண்டழுதாலும் எந்தன் துன்பம்
         புரிந்து கொள்ள  மாட்டாயா   போதும் போதும்
துறந்திடத்தான் நினைக்கின்றாள் நாணம் தன்னைத்
         தோள்களிலே சேர்ந்திடத்தான் துடிக்கும் பெண்ணாள
இரந்து நிற்பாள் நாணத்தின் முன்னே     அதை
         எடுத்துரைத்துப் பெருமை சேர்த்தார்  வள்ளுவரும்

துடிப்பதை நிறுத்து ...!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)

ஓ மனமே ....
என்னவனை நினைத்து ...
துடிப்பதை நிறுத்து ...!!!

என்னவனோடு நான் ..
இணைவதை தடுக்கும்
நாணத்தை நிறுத்து ...
இரண்டையும் - நீ
என்னுள் இருந்து நீ
செய்தால் என் நிலை ...?

மு.வ உரை
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

சாலமன் பாப்பையா உரை
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.