தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்

thirukkural காமத்துப்பால் கற்பியல் நினைந்தவர்புலம்பல் குறள் 1205 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல் நெல்லை கண்ணன்
குறள் 1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு; tam   part. தாம் Flexional increment generally used along with the nouns ofthird pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை தம்மிடை வரூஉம்படர்க்கை மேன (தொல். எழுத். 191). 

நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

எம்மைக் -எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு.

கடி - காவல்; விரைவு; கூர்மை; மணம்:காலநுட்பம்; கலியாணம்; விளக்கம்; அச்சம்; பேய்; ஐயம்; நீக்கம்; வியப்பு; புதுமை; மிகுதி; இன்பம்; கரிப்பு; கடுமை; இடுப்பு; குறுந்தடி.

கொண்டார் - (ஆட்கொண்டார்)

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று.

நாணார் - நாணம் கொள்ளாதவர்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்.

ஓவா - ஓயாது / நீங்காது 

வரல் - வருவதற்கு ?

முழுப்பொருள்
என் காதலர் அவர் நெஞ்சத்தில் என்னை (தலைவியை) உள்ளே நுழையவிடாமல் தன்நெஞ்சத்தை காவல் காத்துக்கொள்கிறார். ஆனால் அவரோ வெட்கமே இல்லாமல் கடல் அலைகள் ஓயாது கடற்கரையை வந்து வந்து சேர்வது போல என் நெஞ்சில் வந்து ஓயாது (நீங்காது) குடி கொள்கிறார் (என்று தலைவி தலைவனை நினைத்து புலம்புகிறாள்). 

அதாவது தலைவனுக்கு தலைவியை பற்றிய நினைப்பே இல்லையாம். ஆனால் தலைவிக்கு தலைவனை பற்றி எப்பொழுதும் நினைப்பாம். தலைவனும் தன்னை பற்றி எப்பொழுதும் நினைத்திருக்க வேண்டுமென்று நினைக்கிறாள் போல ?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நெஞ்சத் தல்லது வரவறி யானே” (குறுந் 302:8)

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.).

மணக்குடவர் உரை
தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?.

சாலமன் பாப்பையா உரை
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.

கண் நிறைந்த ஆணழகன் தன்னை அந்தக்
கனி மொழியாள் கண்டு விட்டாள் வேறு என்ன
தன்னுணர்வு எல்லாமே அவனே யாகி
தனியாகித் தனக்குத் தான் பேசுகின்றாள்
கன்னியவள் இடை சிறியதென்று காட்டக்
கனத்திருக்கும் மார்பகங்கள் துன்பம் கொள்ள
அன்னவனை நினைத்தங்கு ஏங்கி நின்றாள்
அவன் மீது குற்றம் ஒன்றை ஏற்றுகின்றாள்

பொன்னானை மனம் கொண்டு மகிழும் பெண்ணாள்
பொறுப்பாகக் கேட்கின்றாள் இனிய கேள்வி
கண்ணானான் மனத்திற்குள் பெண்ணாள் போக
கடுந்தடையை விதித்துள்ள அந்தக் கள்ளன்
பெண்ணாளின் நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
பேரலையாய்ப் புகுவானாம் நாணம் இன்றிக்
கண்வாளாய்க் கொண்ட மகள் கேட்டு நின்றாள்
காமத்துப் பால் தரும் அழகுக் காட்சியிது

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain