குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]
பொருள்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை
விடு - பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள், v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.
ஒன்றோ - part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
விடு - பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள், v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.
நல் - நல்ல, மிகுந்த
நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
நெஞ்சே - மனமே
யானோ - நானோ
பொறேன் - பொறுக்க முடியவில்லை
இவ் இரண்டு - இவ்விரண்டிற்கும் நடுவில் அகபட்டுக்கொண்டு
முழுப்பொருள் [மேலும்: அஷோக் உரை]
இப்பாடலில், காதலில் ஆழ்பட்ட காதற்தலைவி, தன்னெஞ்சை இறைஞ்சுகிறாள், ஒன்று தன்னுடைய காமத்தையாவது அல்லது காமத்துக்குத் தடையாயிருக்கிற நாணத்தையாவது கைவிடவேண்டுமென்று.
நாணமும் காமமும் நீரும் நெருப்பும் போன்றன. காமம் நெருப்பாய் காயும்; நாணமோ அதை அவித்துவிடும். நாண நீர் குறைவாக இருப்பின் காம நெருப்பில் வற்றிவிடும்.
நெஞ்சமோ இரண்டையும் சரியான அளவில் வைத்து என் பெண்மையைக் காக்கிறது. இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒன்றைமட்டும் எனக்குக் கொடு என்கிறாள்.
அவள் வேண்டுவதைப் பார்த்தால் காமமே மிக்கிருக்கவேண்டும். ஆயின் நாணமோ அதைத் தடுக்கக் கூடிய அளவில் இருக்கவேண்டும். அத்தடையை நீக்கச் சொல்லியே வேண்டுவதாகத் தோன்றுகிறது.
குறுந்தொகைப் பாலைத்திணைப் பாடலொன்றில் காதற்தலைவி நாணம் தம்மை நெடுங்காலம் உடனிருந்து வருத்தியதையும், இனிமேல் காமம் மேலும் நெருங்க அது இல்லாது போய்விடும் என்பது வருந்தத்தக்கது என்கிறாள். அப்பாடல் இங்கே:
”காமம் எய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)
”அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே.” (குறுந் 149)
”கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே” (குறுந் 112:1-2)
“காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்” (குறுந் 231:4-5)
கலித்தொகைப் பாடலும் இவ்வாறே கூறுவதாகக் கொள்ளவேண்டும். அப்பாடலானது. இப்பாடலில் இது இன்னுமே தெளிவாகிறது.
“மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கி ஆங்கென்னை
நலியும் விழுமம் இரண்டு” (கலி 142:55-8)
பரிமேலழகர் உரை
(நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன். ('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.).
மணக்குடவர் உரை
எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது. இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(நாண் தடுத்தலின் காதலரிடம் செலவொழிவாள் சொல்லியது.)
நல் நெஞ்சே- என் நன்மனமே!? ஒன்று காமம் விடு -காமம் நாண் என்னும் இரண்டனுள் ஒன்று காமத்தை விட்டுவிடு, நாண் விடு - அல்லாவிட்டால் நாணைவிட்டுவிடு, இவ்விரண்டு யானோ பொறேன்- இவ்விரண்டையும் தாங்கும் ஆற்றலோ எனக்கில்லை.
'நன்னெஞ்சே' என்றது, இன்பத்தையும் பெண்மையையும் ஒருங்கே நிலைபெறுத்தலால் நீ நல்லையென்று பாராட்டியவாறாம். இது நன்றே யெனினும், இவ்விரண்டையும் ஒருங்கே தாங்குதல் உயிருக்கு இயலாமையின், உயிரைக் காக்க வேண்டின் இவ்விரண்டுள் ஒன்றை விட்டுவிடுதல் வேண்டும். இவற்றுள் நாணே சிறந்ததாதலின், காதலர் வரும்வரை ஆற்றியிருத்தலே தக்கதென்பதாம். 'ஒன்றோ'- ஓகாரம் அசைநிலை. யானோ- ஓகாரம் பிரிநிலை. முற்றும்மை தொக்கது.
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஏதேனும் ஒன்றைக் கொள் எந்தன் நெஞ்சே
எப்படி நான் இரண்டையுமே தாங்கிக் கொள்வேன்
சூதின்றி வாதின்றி இன்பம் தன்னைச்
சுகமதனைக் கொடுப்பதுவும் பெறுவதுவும்
பேதை நான் மணத்தோடு பெறுவதற்கு
பெரும் உதவி நாணத்தை விட்டு விடு
வாதையின்றி நான் வாழக் காமம் தன்னை
வகையாக விட்டு விடு தாங்க மாட்டேன்
இரண்டிலொன்றே என்னாலே தாங்க ஏலும்
இதை உணர மாட்டாயா எந்தன் நெஞ்சே
புரண்டு புரண்டழுதாலும் எந்தன் துன்பம்
புரிந்து கொள்ள மாட்டாயா போதும் போதும்
துறந்திடத்தான் நினைக்கின்றாள் நாணம் தன்னைத்
தோள்களிலே சேர்ந்திடத்தான் துடிக்கும் பெண்ணாள
இரந்து நிற்பாள் நாணத்தின் முன்னே அதை
எடுத்துரைத்துப் பெருமை சேர்த்தார் வள்ளுவரும்
துடிப்பதை நிறுத்து ...!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
ஓ மனமே ....
என்னவனை நினைத்து ...
துடிப்பதை நிறுத்து ...!!!
என்னவனோடு நான் ..
இணைவதை தடுக்கும்
நாணத்தை நிறுத்து ...
இரண்டையும் - நீ
என்னுள் இருந்து நீ
செய்தால் என் நிலை ...?
மு.வ உரை
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது
சாலமன் பாப்பையா உரை
நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.
No comments:
Post a Comment