துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் கனவுநிலையுரைத்தல், குறள் 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
குறள் 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் 
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
[காமத்துப்பால்,  கற்பியல்,  கனவுநிலையுரைத்தல்]

பொருள்
துஞ்சுதல் - தூங்குதல்; துயிலுதல்; சோம்புதல்; தொழிலின்றிஇருத்தல்; சோர்தல்; இறத்தல்; வலியழிதல்; குறைதல்; தொங்குதல்; தங்குதல்; நிலைபெறுதல்.

துஞ்சுங்கால் - தூங்கும் பொழுது

தோள் - புயம்; கை; தொளை.

மேலர் - மேல் படர்தல் 

தோள்மேலர் ஆகி - தோளின் மேல் படர்ந்து என் மேல் ஒருவராகி

விழித்தல் - viḻi-   11 v. intr. 1. To openthe eyes; கண்திறத்தல். இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித். 144). 2. Towake from sleep; நித்திரை தெளிதல். உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 3. To watch; tobe vigilant; to be wide awake; சாக்கிரதையாயிருத்தல். அவன் சோர்வு போகாமல் விழித்துக்கொண்டிருப்பவன். 4. To look at attentively; கவனித்துநோக்குதல். நாட்டார்கள் விழித்திருப்ப . . . நாயினுக்குத் தவிசிட்டு (திருவாச. 5, 28). 5. To gaze,stare; மருண்டு நோக்குதல். விண்ணின்று மிழியாமலெப்போதும் வானோர் விழிக்கின்றதே (பிரபோத. 6,14). 6. To shine; பிரகாசித்தல். பொன்ஞா ணிருள்கெட விழிப்ப (சீவக. 2280). 7. To be clear; தெளிவாதல். மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா(தொல். சொல். 394). 8. To be alive; உயிர்வாழ்தல். அழற்கணாக மாருயிருண்ண விழித்தலாற்றேன்(மணி. 23, 70).

விழிக்குங்கால் - ஆனால் விழிக்கும் பொழுது

நெஞ்சம் - அன்ப், மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

நெஞ்சத்தர் - காதலர்

ஆவர் - ஆவார் ; ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

நெஞ்சத்தர் ஆவர் - நெஞ்சத்தில் என்னவர் ஆவார்

விரைதல் - வேகமாதல்; அவசரப்படுதல்; ஆத்திரங்காட்டுதல்; மனங்கலங்குதல்.

விரைந்து - மிக விரைவாக

முழுப்பொருள்
என் நெஞ்சில் உள்ள உறைந்துக்கிடக்கின்ற என் காதலர், நான் உறங்கும் பொழுது என் தோள் மேல் சாய்ந்து இருப்பான். கூடுவான். ஆனால் என் உறக்கம் நீங்கும் பொழுது மிக விரைவாக என் நெஞ்சுக்குள் மீண்டும் சென்று விடுவான்.

ஒப்புமை
“பாயல்கொண் டென்தோள் கனவுனார்’ (கலி 24:7)
“தோள்மேலாய் எனநின்னை மதிக்குமன் மதித்தாங்கே” (கலி 126:15)

“தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமைஎடுத்துப்
பற்றுவேன் என்றுயான் விழிக்குங்கால் மற்றும்என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யும் அறனில் லவன்” (கலி. 144:55-8)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதல் என்னவெல்லாம் செய்யும். எல்லாம் செய்யும்.ஆமாம். அது எதை வேண்டுமானாலும் செய்யும்.

காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தோழிகளோடு உரையாடிக் கொண்டிருக்கின்றாள். அனைவரும் மகிழ்வோடு அவரவர்அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் காதலர் குறித்தும் காதலனோடு தாங்கள் கொண்ட ஊடல் கூடல் குறித்தும் கலந்துரையாடுகின்றனர்.

ஒருத்தி சொன்னாள்.மெல்ல மெல்லத்தான் தொடுவான். ஆனால் அதிலேயே எனது மேனி மிக மிக வேகமாகக் குதிக்கத்தொடங்கும் என்று.

மற்றொருத்தி சொன்னாள். தொடவே மாட்டான். அந்தப் பார்வையிலேயே துவண்டு அவன் மார்பில் நானே போய்ச் சாய்ந்து கொள்வேன் என்றாள்.

இன்னொருத்தியோ ஒற்றை விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாவி படுத்தும் பாடு மொத்த மேனியும் அவனிடத்தில் தஞ்சம் அடைந்தால்தான் உயிர் பிழைக்கும் என்றாள்.

திரும்பி நின்று கொள்வேன். கட்டித் தழுவுவான் என்று நிற்பேன். அவனோ செவி மடல்களில் அவனது மூச்சுக் காற்றைப்படச் செய்வான். நானாகவே பின்னால் சாய்ந்து விடுவேன் என்றாள்.

இதெல்லாம் என்ன என்னவனின் வேகம் யாருக்கு வரும் என்றாள் ஒருத்தி.

வேகமா அத்தனை வேகமா என்றார்கள் அனைவரும்.

எடுத்தவுடன் வேகமென்றால் இனிக்காதே அது என்றாள் ஒருத்தி

இல்லை கூடி மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் எனது மூங்கில் தோள்களில் சாய்ந்து கொள்வான். அவன் தலையைக்கோதிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த வேகம் வேறு யாருக்கும் வராது என்றாள்.

ஏக்கத்தோடு மற்ற பெண்கள் கேட்டார்கள் சொல்லேன் சொல்லேன் அந்த வேகத்தைத் தான் சொல்லேன் என்று.

சொல்கின்றேன் பொறுங்கள் பொறுங்கள் என்றாள். பெருமை பொங்க.

தோளிலே தானே சாய்ந்திருப்பான். ஆனால் நான் கண் விழித்தேன் என்றால் அத்தனை விரைவாக எனது நெஞ்சுக்குள்போய் அமர்ந்து கொள்வான். ஆமாம் ஆமாம். விரைவு விரைவு அத்தனை விரைவு.

கண் விழித்தாலா. தோழிமார்கள்.

ஆமாம் கண் மூடித் துயில்கையில் தானே அவன் கனவில் வந்து களித்து எனது தோளிலும் சாய்ந்து கொள்வான்.அப்படித் தோளில் சாய்ந்திருப்பவன் நான் கண் விழிக்கும் கணப் பொழுதில் நெஞ்சுக்குள் போய் விடுவான். அந்த வேகம் யாருக்கு வரும் சொல்லுங்கள் என்றாள்.

சிரித்துக் களித்தார்கள் தோழியர்.

குறள்
துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தராவர் விரைந்து

குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
விரைவோடு  வேகமதும்  கொண்டவனாம்
     வேல் விழியாள்  காதலனும் பெருமை சொன்னாள்
திரை  போட்ட  உள் அறையில்  இருவருமே
     தேடி  நின்றார்  கண்ட பின்னும்  கண்ட பின்னும்
வரையற்ற  காதலுக்குள்  இருவருமே
     வரம்பெற்ற வடிவத்தால்  திளைத்திருந்தார்
கரையேற  வழியின்றிக் காதலனும்
     கன்னியவள்  தோள்களிலே சாய்ந்திருந்தான்

நிறைவேறாக்  காதலினைக்  கொண்டு விட்ட
     நிம்மதியில்  பெண்ணவளும் கண் திறந்தாள்
விரைவென்றால்  அவ்விரைவு  காதலனும்
     வேல் விழியாள்  நெஞ்சதனைச் சென்றடைந்தானாம்
புரிகிறதா தமிழினத்தீர்  கனவின் போது
     பொறுப்பாகத் தோளினிலே  சாய்ந்திருந்தான்
விரி கனவு  முடிந்தவுடன்  மிக  விரைந்து
     வெள்ளை  மனப்  பந்தலுக்குள்  ஒளிந்திட்டானாம்

பரிமேலழகர் உரை
(தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர். (கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தானாற்றுதற் பொருட்டுத் தலைமகனை யியற்பழித்த தோழிக்கு. இயற்படமொழிந்தது.)

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி - என் உள்ளத்தில் இடைவிடா துறைகின்ற காதலர், யான் தூங்கும் பொழுது என் தோள்மேலமர்ந்திருந்து ; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின்பு விழிக்கும்போது விரைந்து பழையபடி என் உள்ளத்திற் புகுவர்.

நாள்தோறும் கனவில் வந்து கூடுபவரை நீங்கினாரென்று பழித்தல் தகாது என்பதாம். 'தோன்மேலராகி' இடக்கரடக்கல் விழிப்பின் திடுமைபற்றி 'விரைந்து' என்றாள்.

மணக்குடவர் உரை
காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர். இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

நன்றி: ரிஷ்வன்
நெஞ்சில் வாழும் என்னவர்
துஞ்சும் போது கனவில்வந்து
மஞ்சம் இன்பம் தருகிறார்
விழித்துக் கொள்ளும் போதோ
விரைந்து சென்று மீண்டும்
அமர்ந்து கொள்கிறார் நெஞ்சினுள்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain