Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Saturday, November 4, 2017

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு

குறள் 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்து -  பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

தன்கண்  - தன்னுடைய கண்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணுவானைக் - நாணுபவன் - வெட்கப்படுகின்றவன், பயபடுகிறவன், அஞ்சுகிறவன்

கொடுத்தும் - koṭu-   11 v. tr. [K. koḍu,M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To bring forth; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 3.To divide, distribute, as a sum of money;பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக்கொடு. 4. To sell; விற்றல் தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 5. To allow,permit; உடன்படுதல் மலரன்றி மிதிப்பக் கொடான்(திருக்கோ. 303). 6. To lose by death, asgiving to Yama; சாகக்கொடுத்தல். நீ பயந்தகோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).7. To abuse roundly; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் 8. To belabour,thrash; அடித்தல் --aux. An auxiliary verb, asin சொல்லிக்கொடு, முடித்துக்கொடு; ஒரு துணைவினை

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

வேண்டும் - வேணும்; vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
நாம் ஒவ்வொருவரும் சில சமயம் யாரிடம் நட்புக்கொள்வது என்று யோசனை செய்யும் காலம் வரும். நம்முடைய நடப்பு நட்புகள் நல்ல நட்புகளல்ல என்று தோன்றும். வாழ்விற்கு நல்ல நட்புகள் தேவை என்று தோன்றும். யார் நல்ல நண்பர்கள்? அவர்களிடம் எப்படி உறவுகொள்வது?

நல்ல குடியில் (குடும்பத்தில்) பிறந்து தன் குடும்பத்தின் புகழ் உயர்வதற்கு தானும் ஒரு காரணமாய் அமைவோர் நல்ல மனிதர்கள். அத்தகையவர்கள் எத்தகைய தீய வழிகளிலும் அறமற்ற வழிகளிலும் தன்னை ஆட்கொள்ளமாட்டார்கள் ஏனெனில் அவர் பழிக்கும் குற்றத்திற்கும் அஞ்சி வெட்கப்பட்டு செய்யாமல் நின்றுவிடுவார்கள். சோம்பல் தேக்கம் என்று எதிலும் திளைக்கமாட்டார்கள். அதேப்போல தன்னுடைய நட்புகள் தீய வழிகளில் ஈடுபடவும் விடமாட்டார்கள். ஏனெனில் அப்படி விட்டால் அதுவர்களுக்கு பழியை சேர்க்கும் - தன்னை சுயநலவாதியாய் தோற்றுவிக்கும்.

ஆதலால் அத்தகைய நல்ல மனிதர்களிடம் எப்பொருளை கொடுத்தாவது அவர்களிடத்தில் நட்புக்கொள்ள வேண்டும். இங்கே பொருள் கொடுக்க வேண்டும் என்றால் பொன் பணம் என்ற அர்த்ததில் இருக்காது ஏனெனில் அதனை நற்குடியில் பிறந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். இது கண்டிப்பாக நல்ல மனிதர்கள் சிறுமைகளிடம் வெறுக்கும் கீழ்மைகளை விட வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் இருக்கும். கீழ்மைகளை விடுவதே நட்பிற்கான விலையாக ஒருவர் கொடுக்க வேண்டும். நல்லது தானே?! அதுமட்டுமின்றி அதே நண்பர் ஒரு இடரில் சூழ்ந்துள்ளப் பொழுது அவருடன் உடனிருந்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையேல் துன்பத்தின் போது விலகினால் அந்த நட்பு நீடிக்கும் என்று சொல்லமுடியாது. 


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது. (குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.).

மணக்குடவர் உரை
மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  சரியான தாய் தந்தை பெற்றெடுக்க
  சத்தியமே வாழ்க்கையெனக் கொண்டு நிற்க
  விரிகின்ற மனத்தாராய் வாழ்ந்து நிற்கும்
  வெற்றியெல்லாம் நல் வழியில் பெற்று நிற்கும்
  தெளிவான நல்லவரை நமைக் கொடுத்தும்
  தேர்ந்து கொள்ள வெண்டும் நல்ல நட்பாய் இங்கு

Friday, November 3, 2017

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

குறள் 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
அழிவினவை -அழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்

அழிவு கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக

அழிவின் - அழிவில் இருந்து

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம்; புலவர்; நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு [pronoun (அவ்) plural of அது, they, those things.]; அப்பொருள்கள்.

நீக்கி - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

உய்த்து - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல்சேர்த்தல்; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்; கொடுத்தல்; அனுப்புதல்; குறிப்பித்தல்அறிவித்தல்; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்.

ஆறு உய்த்து -  நல் அற வழியில் (நண்பனை) செலுத்துதல், உண்மை நிலை எடுத்து உரைத்தல், தீயவழியின் பின்விளைவுகளை எடுத்து உரைத்தல், அறவழியின் மாண்புகளையும் எடுத்து உரைத்தல்

அழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அழிவின் கண் - (நண்பன்) அழிவின் பாதையில் செல்கிறான என்ற கண்ணோட்டம் கொண்டு, அல்லது விதியால் வரும் துன்பங்கள்

அல்லல் - துன்பம்

உழப்பு - முயற்சி, ஊக்கம்; வருத்தம்; பழக்கம்; வலிமை.

உழப்பது - உழப்புதல் - மழுப்புதல்; குழப்பிப்பேசுதல்; போலிவாதஞ்செய்தல்; காலங்கடத்துதல்

ஆம் - அழகு

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
தன்னுடைய நண்பர் தீய வழிகளில் சென்றால் அவரை அவ்வழிகளில் செல்லாது தடுக்க வேண்டும். அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டும். தடுமாறி விழும்பொழுது அவருக்கு நல் அறம் புகட்டி அவரை நல்வழியில் மீட்க வேண்டும். (குறிக்கோளை அடைய தேவையான பாதை தெரிந்தால் பயணம் எளிதாகும் ஊக்கம் கிடைக்கும்). அது மட்டும் இன்றி, அந்த நண்பருக்கு ஊழினால் அல்லது எதிரிகளால் துன்பங்கள் வரலாம். அந்த நேரத்தில் அவரிடம் இருந்து விளகிக்கொள்ளாமல், அவருடையத் துன்பத்தைப் புரிந்துக்கொண்டு அவரின் மீதுக் கண்ணோட்டம் (தாட்சீனியம்) கொண்டு அவருக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். இப்படி அவருடைய வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டு, துன்பத்தில் இருந்து மீண்டு வர வழி செய்து, நண்பருக்கு வலிமை சேர்க்க வேண்டும். இதுவே நட்பாகும். 

சடாயு உயிரீ நீத்த படலத்தில், அவனுடைய நட்பின் வலிமையைக் கூறுமிடத்து, “ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்” (கம்ப.சடாயு உயிர் 13) என்று கம்பர் கூறுவார். 

“சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்” என்று சொற்களிலும் குற்றங்களை அகற்றும் நட்பை திரிகடுகம் சொல்லுகிறது. அறத்தைப் பற்றி கூறும் திரிகடும், “அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்”, அதாவது நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறமென்கிறது.

“அறமன்னானுடன் எம்பி யன்பினோ
டுறவுன் நாவுயி ரொன்றை யோவினான்
பெறவொண்ணாததோர் பெற்றி பெற்றவற்
கிறலென் னும்இதின் இன்பம் யாவதோ” (கம்ப.சம்பாதி.45)

முழுப்பொருள் 2
நண்பன் என்பவருக்கும் ஒரு சில இலக்கணங்கள் உண்டு என்று சொல்கிறார் திருவள்ளுவர். 
முதலாவதாக நண்பரின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அதாவது நண்பர் ஒழுக்கம் அல்லாத அறம் அல்லாத நன்மை அல்லாத செயல்களில் செல்கிறார் என்று ஆய்வு செய்து கொண்டு இருத்தல் வேண்டும். ஒரு வேளை நண்பன் ஒழுக்கம் அல்லாத செயல்களில் சென்றால் அது தவறு எடுத்துரைக்க வேண்டும். இதனால் எனக்கென்ன என்று இருக்க கூடாது. நண்பனை நல்வழியில் மறுபடியும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நண்பன் நட்பையே முறித்தாலும் கவலை இல்லை என்று எண்ணி நண்பனை நல்வழியில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக என்னதான் கவனமாக இருந்தாலும் நண்பருக்கு துன்பம் நேர வாய்ப்பு உள்ளது. அப்படி துன்பம் நேர்ந்தால் அத்துன்பத்தை கண்காணித்து அதில் இருந்து வெளிவர கூட இருந்து ஒத்துழைத்து மீண்டு வர ஒரு தோள் கொடுத்து நண்பனுக்கு வலிமை (உழப்பது) சேர்ப்பதே சிறந்த நட்பு.

மேலும்: அஷோக் உரை
சடாயு உயிரீ நீத்த படலத்தில், அவனுடைய நட்பின் வலிமையைக் கூறுமிடத்து, “ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்” என்று கம்பர் கூறுவார். “சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்” என்று சொற்களிலும் குற்றங்களை அகற்றும் நட்பை திரிகடுகம் சொல்லுகிறது. அறத்தைப் பற்றி கூறும் திரிகடும், “அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்”, அதாவது நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறமென்கிறது.

சொந்த உதாரணம்
என் வாழ்வில் 2002-2005 ஆண்டுகளில் பல திரைப்பட பாடல் ஒலிப்பதிவு களஞ்சியத்தை கட்டுக்கொண்டு இருந்தேன். அவற்றில் பல பாடல்களை கேட்ககூட மாட்டேன். ஆனால் அந்த சமையத்தில் என் நண்பன் என்னை கண்டித்தான். இது என்ன வீண் வேலை. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஒரு சினிமா பார்கிறாய் ரசிக்கிறாய். அத்துடன் முடிந்துவிட்டது. நல்பாடல் என்றால் சேகரித்து வைத்துக்கொள். ஆனால் வரும் படம் எல்லாவற்றை உடனுக்குடன் சேகரித்து விநியோகிப்பது உனக்கு வேண்டாத வேலை. 

வாழ்வில் நேரம் பொன் போன்றது ஆகும். வாழ்வில் முன்னேற வேலையில் முன்னேற மேற்ப்படிப்பு படிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசி. அல்லது உன்னை மேம்படுத்தும் கலைகளில் அல்லது புத்தகங்களில் உன்னை ஆழ்த்திக்கொள். அதுவே சிறந்தது என்று அறிவுருத்தினான்.

அன்று அந்த எச்சரிக்கை என்னை மேம்படுத்தியது. அன்று முதல் நான் புத்தங்கள் படிப்பது மேற்ப்படிப்பிற்கு படிப்பது வயலின் கற்றுக்கொள்வது என என்னை ஆழ்த்திக்கொண்டேன். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது.

பரிமேலழகர் உரை
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர'(¢நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.

மு.வரதராசனார் உரை
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அழிவினவை நீக்கி-நண்பன் கேடுதரும் தீயவழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி; ஆறு உய்த்து-நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி; அழிவின்கண் அல்லது உழப்பது-தெய்வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; நட்பு-ஒருவனுக்கு நட்பாவது.

ஆறு என்னும் பொதுப்பெயர் நெறி, வழி என்பனபோல நல்லாற்றைக் குறித்தது. 'ஆறுய்த்து' என்றதனால், 'அழிவினவை நீக்கி' என்பதில் 'அழிவினவை' தீயநெறிகளைக் குறித்தமை அறியப்படும்.

"இனி, நவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினுஞ் செல்வ வழிவினும் வந்த துன்பங்களென்றும், 'அழிவின்க'ணென்பதற்கு யாக்கையழிவின்கணென்றும் உரைப்பாருமுளர்." என்று பரிமேலழகர் கூறியுள்ளது நன்மறுப்பாகும்.


பதினெண் கீழ்க்கணக்கு - பழமொழி
உழந்ததூஉம் பேணா(து) ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
முழங்குறைப்பச் சாணீளு மாறு.

(சொ-ள்.) தழங்(கு) கண் முழவு இரங்கும் தண் கடல் சேர்ப்ப - ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவுபோல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே!, உழந்ததும் பேணாது ஒறுத்தமை கண்டும் - தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும், விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல் - அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல், சாண் குறைப்ப - சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க, முழம் நீளு மாறு - அது முழம் நீளமாக நீளுவது போலும்.

(க-து.) தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையேசெய்ய முற்படுவர்.

(வி-ம்.) 'முழல் நீளுமாறு' என்றது முன்னினும் மிக்க தீமையையே புரிவார் என்பதைக் கருதி. 'முழம் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது 'சுரை ஆழ அம்மி மிதப்ப' என்பதைப் போன்று மொழி மாற்றிப் பொருள்கொள்ள வேண்டுதலின், மொழிமாற்றுப் பொருள்கோள். தழங்குகண், தழங்கண் என வந்தது விகாரம். 'உழந்ததும்'என்றது,

‘அழிவி னவைநீக்கி ஆறுய்த்துஅழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு'என்றதைக் கருதி,'முழங் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது பழமொழி.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  தவறான வழிகளிலே சென்றழிந்து
  தடுமாறி வீழ்வாரைத் தான் தடுத்து
  அவமான உண்மை நிலை எடுத் துரைத்து
  அறமான நல்வழியில் அழைத்துச் சென்று
  நலமாக வாழ்கையிலே துன்பம் வந்தால்
  நண்பருடன் அத்துன்பம் பகிர்ந்து கொள்ளல்
  குலமான நண்பர்களின் குணமேயாகும்
  கொண்ட அந்த நட்பேதான் உண்மையாகும்

உனக்கு உறுதுணையாக .....!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)

உனக்கு உறுதுணையாக .....!!!
தீய 
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான் 
இருக்கிறேன் உனக்கு 
உறுதுணையாக .....!!!

உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என் 
உயிர் நண்பணடா ....!!!

நன்றி:  Interesting Tamil Poems
நட்பின் கடமை 

நட்பு என்றால் என்ன ?

நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?

அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.

இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?

வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

வள்ளுவர் கூறுகிறார்

நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.

அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.


அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.

ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.

அழிவின்கண்  = இதையும் மீறி அழிவு வந்தால்

அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?


நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்


நன்றி: கூடா நட்பு வாழ்க்கையை சீரழிக்கும் (பணிப்புலம்)
நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. எல்லோருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.  இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன. 

வாச மலர்களை மாலையாக தொடுக்கும் வாழைநார் கூட பூவின் வாசனையைப் பெற்று நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் விழ்ந்த நறுமண மலரும் சாக்கடையின் வாசத்தையே  பெற்று விடுகின்றது. ஒருவருடைய குணாதிசயங்களை அறிய அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர்களை வைத்து சுலபமாக கணித்துக் கொள்ள முடியும் என்பதும், ஒருவருடைய பொருளாதார நிலையைக் கணிப்பிட அவர் சந்தையில் வாங்கும் பொருட்களை வைத்து கணித்துக் கொள்ள முடியும் என்பதும் பழைய பழமொழிகளாகும். விளக்கமாக கூறுவதாயின் ஒருவரின் அகத்தின் அழகை முகம் காட்டுவதுபோல் அவரின் குணத்தின் அழகை நண்பர்களின் நடத்தையில் கண்டு கொள்ள முடியும் எனக்கூறலாம்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் போலும் வள்ளுவன் “அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு என அறிவுறுத்துகின்றார்.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். ஒரு நல்ல நண்பனிடம் இருந்து நல்ல பல விடயங்களை கற்றுக் கொள்ளலாம் அதேபோல் தீய நண்பர்களிடம் இருந்து தீய பழக்க வழக்கங்களையும் தீய குணங்களையுமே கற்றுக் கொள்ளலாம்.

உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விடயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல, நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக, இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன், அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள், அதற்காக நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

”நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே” என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டுகொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கின்றதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்ப வனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல. 

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாக அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப் பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறார்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,

அன்னை திரேசாவின் வாழ்வில்....
அன்னை திரேசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியரில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என திரேசாவின் தாய் முடிவெடுத்தார்.

ஒருநாள் அவர் திரேசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய அப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட திரேசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போன திரேசாவை தாய் நிறுத்தினார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி தாய் கூறினாள். அதன்படியே திரேசாவும் நல்ல பழங்களாகத் தெரிந்து  இரண்டு கூடைகளில் நிரப்பினாள். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார், திரேசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.

“ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என திரேசா கேட்டார்.

“எல்லாம் ஒரு காரணம்தான், இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வா” என்றார் தாய். திரேசா அப்படியே செய்தார்.

சில நாட்களுக்குப் பின் தாய் திரேசாவை மறுபடியும் அழைத்தார். அந்த பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னர். பழக் கூடைகளை திரேசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தார்.

அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாது அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த திரேசா வருந்தினார். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவருக்கு அழுகையே வந்து விட்டது.

தாய் திரேசாவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்... பார்த்தாயா? ஒரு அழுகிய அப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். ஒரு மனிதனைக் கொல்வதற்கு ஒரு துளி விஷம் போதும்.

எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும் உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.  உடுக்கை இழந்தவன் கைபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நல்ல நப்புக்கு இலக்கணமாகும். 

மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது. பணக் கஷ்டமாயிருக்கு உதவி தேவையாய் இருக்கிறது, என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கிய தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் “மட்டுமே” உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்றார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல, அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே. “தப்பான”  ஒரு செயலைச்செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். 

போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச்செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்” என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள், தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகு வதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

கடைசியாக ஒன்று நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்! நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை.

கூடா நட்பு தூக்கு மேடைக்கு வழிகாட்டும். ஆனால் நல்ல நட்பு வாழ்க்கையின் சிகரத்திற்கே வழிகாட்டும்.

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை

குறள் 761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் 
வெறுக்கையுள் எல்லாம் தலை
[பொருட்பால், படையில், படைமாட்சி]

பொருள்
உறுப்பு - uṟuppu   n. உறு¹-. 1. Limb,member of body; சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்; ūṟu   s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு.

அஞ்சா - அஞ்சாமை - பயப்படாமை, திண்மை
வெல் - வெல் - vel   வெல்லு, I. v. t. overcome, conquer, subdue, carry the day, செயி.; வெற்றி

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

வெறுக்கையுள் - செல்வத்துள்

எல்லாம் - எல்லாவற்றிலும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
ஒரு உடம்பிற்கு எப்படி ஒவ்வொரு உறுப்பும் அழகக்கு மட்டும் இன்றி மனிதனை தக்க சமயத்தில் இடர்களிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும். அதுப்போல நாட்டிற்கு தன்னை தற்காத்துக்கொள்ள படைகள் தேவை. ஒரு உயிருக்கு எப்படி நோய் அற்ற வாழ்வே (உறுப்புகள்) குறைவற்ற செல்வமோ அதுப்போல ஒரு நாட்டிற்கு தீரமான எதற்கும் அஞ்சாத வெல்லும் படைகள் செல்வத்துள் சிறந்த செல்வம் ஆகும். ஏனெனில் அப்படை எதிர்களிடம் இருந்து நாட்டை தற்காத்துக்கொள்ளவும், இயற்கை இடர்களின் போது மக்களுக்கு இடர்களைப் போக்கி நிவாரணம் தந்து உதவும்.

பேரரசுகள் ஆண்டுகொண்டிருந்த முடியாட்சி காலத்தில் ரத, கஜ, துரக, பதாதிகள் எனப்படும் தேர், யானை, குதிரை மற்றும் காலாட்படைகளே படைகளின் பெரும் உறுப்புகளாகக் கொள்ளப்பட்டன. உலகம் அவ்வாட்சி முறைகளிலிருந்து மாறிய பிறகு, முப்படைகள் என்று கூறப்படும், நில, நீர், வான் வழிப் படைகளே படைகளின் உறுப்பாகக் கொள்ளப்படுகின்றன.

திரிகடுகப் பாடலொன்று, அர்ப்பணிப்பு உணர்வினைக் கொண்ட படையினை ஒரு நாட்டின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாகச் சொல்கிறது. அப்பாடல்:

பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், – இம் மூன்றும்
மண்ஆளும் வேந்தர்க்கு உறுப்பு (திரி.100)

“படையறின், மன்னர்சீர் வாடி விடும்” (நான்மணி 42)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி ,அப்பொருளினான் ஆவதாய வெல்வதாய படை இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி ,முதற்கண் 'படை மாட்சி' கூறுகின்றார் .அஃதாவது , படையினது நன்மை. அதிகார முறைமையும் இதனான் விளங்கும்.]

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம். (ஈண்டுப் படை என்றது, அந்நான்கன் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை 
யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; ஆதலால் படைவேண்டும்.

மு.வரதராசனார் உரை
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.

Tuesday, October 31, 2017

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்

குறள் 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு.
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
இல்லாரை  - பொருள் இல்லாதவர்
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளுவர்  - இகழ்வார், கீழே தள்ளுவார்கள்
செல்வரை - பொருட்செல்வம் உள்ளவரை
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
செய்வர் - செய்வார்கள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
சிறப்புச்செய்தல் - ஒப்பனைசெய்தல்; போற்றுதல்; விழாக்கொண்டாடுதல்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
இக்குறளுக்கு எல்லா உரைகளும் சொல்லும் பொருள் பொருள்/பணம்/செல்வம் இல்லாதவர்களை இவ்வுலகம் இகழும், கீழே தள்ளும். ஆனால் பணம் உள்ளவர்களை போற்றும். மேலோட்டமாக பார்த்தால் இதை சட்டென்று ஏற்றுக்கொள்ளத் தூண்டும். ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, ஊரில் உள்ள பணம் படைத்தவர்களை எல்லோரும் போற்றுவர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு அயோக்கியர் என்று தெரிந்தால் அவர் செல்வந்தவர்களாக இருந்தாலும் அவரை நாம் இகழ்வோம். அதே போல ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவரிடம் பேசி அவருடைய நற்பண்புகளையும் அப்படிப்பட்ட ஏழ்மையிலும் அவர் உழைப்பிலும் நேர்மையிலும் அன்பிலும் தவறாதவர் என்று அறிந்தால் எல்லோரும் அவரை போற்றுவர். ஆதலால் செல்வம் என்பது வெறும் பணம் ஆகாது.

பொருள் என்ற சொல்லுக்கு உண்மை, செயல், மெய்மை, நன்மதிப்பு, அறிவு, கொள்கை, அறம், வீடுபேறு, பொன் என்று பலவற்றை அர்த்தமாக கூறலாம். ஆதலால் இப்பொருள்களை இல்லாதவரை எல்லோரும் இகழ்வர். இப்பொருள்களை உள்ளவரை எல்லோரும் சிறப்பு செய்வர்.

சிறப்பு என்னும் சொல்லிற்கு பகட்டு என்ற பொருளும் உண்டு. அவ்வாறு எடுத்துக்கொண்டால் இக்குறளின் பொருள் ->  பொருள் (பணம்) இல்லை என்றால் எல்லோரும் முகத்து நேரே மட்டும் தான் இகழ்வார்கள். ஆனால் தீயவழியில் செல்வம் ஈட்டியவரை நன்மதிப்பு இல்லாத செல்வந்தரை எல்லோரும் பகட்டு செய்வர். அதாவது பெருமை செய்வது போன்று ஒப்பனை செய்வர். புறம் பேசுவர்.  அது இன்னும் கேவலம்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பிலே பல இலக்கியப் பாடல்களில் ஒத்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டியுள்ளார். நாலடியார், அப்பர் தேவாரம், கம்ப இராமாயணம், பழமமொழி என்று பல இலக்கிய மேற்கோள்கள் இருந்தும், முற்றுக் கருத்தையும் கூறும், கீழ்வரும் பழமொழிப் பாடல் கவனிக்கத்தக்கது, படிக்கும் வழியே பொருள் விளங்க எழுதப்பட்ட பாடல்.

முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல் (பழமொழி 59)

(முட்டின்றி ஒருவர் – உச்சமிது என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகுதியாக, குறைவின்றி;
அட்டு இற்று – சமைக்கப் பட்ட உணவு தீருமட்டும்;
கெட்டார்க்கு – செல்வமிழந்து வறுமையுற்றவர்க்கு;
நட்டார் – நண்பர்கள்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இலாஅர்க் கில்லைத் தமர்” (நாலடி 283)

“வாழாதார்க் கில்லைத் தமர்” (நாலடி 290)

“மாடு தானது இல்லெனின் மானுடர்
பாடு தான்செல்வா ரில்லை” (அப்பர்.கொண்டீச்சரம் 3)

“மறுமை கண்டமெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்டபின் யாவரும் யாரென விரும்பார்” (கம்ப.வருணனை.14)

“அருளுடைய யாரும்மற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை” (பழமொழி 269)

“உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்” (நாலடி 284)

“முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்” (பழமொழி 59)

“பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணின்
போற்றியென் றேற்றெழுவர்
இருள்கொள் துன்பத் தின்மை காணின்
என்னேஎன் பாரும் இல்லை” (திருவாய். 9.1:3)

“செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம் என்றுநுண் ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தா ரொருதடங் குடங்கைக் கண்ணார்” (சீவக.2535)

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே” (ஆதி உலா.136)

பரிமேலழகர் உரை
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

பெருவணிகர் ஒருவர் வந்தால் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அவன் பொருள் இழந்து வறியவனாகி இரந்து பிழைக்கும் தெருவாழ்பவனாகி அங்கு வந்து நின்றால் அதைவிட கூச்சலிட்டு நகைக்கிறார்கள். அவன் மீண்டும் மீண்டும் அங்கு வரும்பொருட்டு அவனுக்கு சிறு செம்பு நாணயங்களை வீசுகிறார்கள். அன்னமளிக்கிறார்கள். அவன் வேண்டும் அளவுக்கு மது அளிக்கிறார்கள். அவன் களிகொண்டு கீழ்மையில் திளைக்கும்போது கொண்டாடுகிறார்கள். அவர்களால் கொண்டாடப்படும் பொருட்டு அவன் தன்னை மேலும் கீழ்மை நோக்கி செலுத்திக்கொள்கிறான். அவனை இளிவரல் உயிரெனப் பேணுகிறார்கள்.

மூத்தவரே, என் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் உணர்ந்து வந்த வலி நீங்கள். என் வெற்றி வெற்றி அல்ல என்று உள்ளிருந்து முணுமுணுக்கும் ஒரு குரல். இதோ முழு வெற்றி அடைந்துவிட்டிருக்கிறேன். இனி இப்புவியில் நான் அடைவதற்கொன்றுமில்லை. அவ்வெற்றியை தங்கள் தோல்வியினூடாகத்தான் ஈட்ட முடியும் என்பதனால்தான் இந்தச் சிறு அமைதியின்மை. இந்த வெற்றி எனக்கு பிடித்திருந்தது, ஆனால் உங்கள் குருதி மேல் அது நிகழ்வதை நான் விரும்பவில்லை என்று உணர்கிறேன். ஆயினும் அதுவே ஊழின் வழி என இன்று அறிகிறேன்.

நீங்கள் அறியாதது உலகியல் மெய்மை. நூல்களால் அவை சொல்லும் பொய்யறங்களால் மறைக்கப்பட்டது அது. அறிக, இப்புடவி அமைந்துள்ளது பொருட்களால். பொருட்களை இணைக்கும் பொருண்மை நெறிகளால். ஒவ்வொரு பொருளுக்கும் இன்னொன்றுடன் ஒப்பிட மதிப்பு உருவாகிறது. அனைத்துப் பொருளையும் ஒப்பிடும் ஒரு பொருள் பொன்னே. பொன்னில் அளவிடப்படுகின்றன அனைத்துப் பொருள்மதிப்புகளும். பொன்னென்பது இப்புவியே. இப்புவியிலுள்ள அனைத்தும் ஆகும் ஆற்றல் கொண்ட பொருள் அது. எனவே பொன்னன்றி இப்புவியில் வேறு விழுப்பொருள் இல்லை.

பொன்னுக்கு அப்பால் பிறிதொன்றை வைத்த பிழையே நீங்கள் செய்தது. தன்னை மதிக்காது பிறிதொன்றைச் சூடிய ஒவ்வொருவரையும் பொன் தண்டிக்கும். வஞ்சம் கொண்டு பின்னால் வரும். விழிநீர் சிந்தி தன் முன்னால் பணிய வைக்கும். அவர்கள் தலைமேல் கால் வைத்து அழுத்தி மண்ணோடு மண்ணாக்கும். பொன் தன்னை வழிபடுபவரை வாழ்த்துவது. அறியாதோரை விழைவு காட்டி இழுப்பது. அறிந்து புறக்கணிப்போரை அழித்து மகிழ்வது. இவ்வெற்றி என்னுடையதல்ல, பொன்னின் வெற்றி. நான் பொன்னின் எளிய பூசகன். அடிபணிந்து வாழும் அடியோன்.

பொன்னே திருமகள். அவளை கனகை என்கின்றனர் கவிஞர். புவியளந்து, விண்ணளந்து, திசை விரிந்து படுத்திருப்போனின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஒளி. மங்கலங்களில் முதன்மையானது. அழகுகளில் தலையாயது. திருமகள் பொன்வடிவிலேயே உறைகிறாள். என் இல்லத்தில் திகழ்கிறாள். என் நாவில் சொல்லெனவும் என் மைந்தர் விழிகளில் ஒளியெனவும் அவள் வாழ்கிறாள். என் குடி இங்கு பெருக வழிவகுப்பாள். இங்கு அமர்ந்து இன்று எண்ணம்கூர்க! எங்கு பிழைசெய்தோம் என்று உணர்க! அன்னம் அன்னம் என இரந்து அமர்ந்திருக்கையில் ஒருகணத்திலேனும் உங்கள் ஆணவத்தை அழித்து பொன்னுக்கு உங்களை அளியுங்கள். கனகை முன் பணியுங்கள். அவளிடம் உங்களை பொறுத்தருளும்படி கோருங்கள்.

அவர் போத்யரை கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் புன்னகைத்து “பொன்மகளுக்குத் தடையாக இருப்பவள் சொல்மகள் என்பார்கள். சொல்மகளே பொன்மகளை பெற்றுதான் வாழ்கிறாள் என்று உணருங்கள். ஒருமுறையேனும் உங்கள் சொல்லுடன் எங்காவது அமர்ந்து நீங்கள் பொன் பெறாது எழுந்துவந்தது உண்டா? உங்கள் சொல்லுக்கு பொன் மதிப்பே இல்லையென்றால் அதை எவரேனும் மதிப்பார்களா? சொல்மகள் பொருள்மகளின் கொழுநனின் உந்திச்சுழியில் உதித்தவனின் மனைவி. எங்கு இருக்கவேண்டுமோ அங்குதான் அவள் இருக்கவேண்டும்” என்றார்.

போத்யரின் பழுத்த விழிகள் அவரை நோக்கிக்கொண்டிருந்தன. அவர் உரக்க நகைத்து “சொல் நன்று. பொன் எழுத்தாணியால் பொறிக்கப்படுமெனில் மேலும் நன்று” என்றபின் திரும்பிச்சென்றார்.

ஆற்று பவர்க்கும் அரண்பொருள்

குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
[பொருட்பால், அரணியல், அரண்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆற்று - ஆற்றுதல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 

ஆற்றுபவர்க்கும் - வலிமையடைபவர்களுக்கும், 

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அஞ்சித் - அஞ்சித்து - பயப்படுதல்

தற் -தன்னை

போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்
போற்றுபவர்க்கும் - 

பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை, தன்னுடைய படைகளை வலிமையாக வளர்த்துக்கொண்டு, பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் போது அரண் என்னும் பாதுகாப்பு கோட்டை நாட்டிற்கு ஒரு கவசமாய் அமையும். குறிப்பாக திடீர் தாக்குதல்களின் போது ஒரு கவசமாய் அமையும். அதே போல பிற நாடுகள் தன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர்களை நாட்டின் எல்லையிலேயே தடுக்க ஒரு நல்ல தற்காப்பாய் அமையும். அவர்கள் உள்ளே வந்து நாசம் செய்து நாட்டின் வளங்களை அழிக்கும் முன்பே எல்லையிலேயே அவர்களை தடுப்பது நல்லது. ஆதலால் சிறந்த ஒரு அரண் நாட்டிற்கு இன்றியமையாதது.

திரிகடுகம், வேந்தர்களுக்கு தேவையான அங்கமாக அரணைக்கூறுகிறது. “...............பலர் தொகினும் 
எத்துணையும் அஞ்சா எயில் அரணும் ….
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு” (திரி.100)

புறநானூற்றுப் பாடலொன்று, “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப்பு உடைய அரண் கடந்து துப்பு உறுவர் புறம் பெற்றிசினே” (புறம். 11) என்று பிறநாட்டின்மீது படையெடுத்துச் சென்று பகைவரது அரணை அழித்து வென்ற செய்தியைக் கூறுகிறது. மற்றொரு புறநானூற்றுப் பாடல், “ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி…” (புறம் 92) என்று நெடுமான் அஞ்சியின் வீரத்தைச் சொல்லுங்கால் கூறுகிறது. “நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,ஆங்கு இனிதிருந்த வேந்தனொடு…..” (புறம். 36) என்று பிரிதொரு புறப்பாடல் பாடுகிறது. சங்க இலக்கியங்களில் அரண் என்பதன் சிறப்பைப் பாடும் பாடல்கள் நிறையவே உள்ளன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , அந்நாட்டிற்கு உறுப்பாய் அடங்குமாயினும், பகைவரால் தொலைவு வந்துழி , அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப் பற்றிப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

மு.வரதராசனார் உரை
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

English Meaning - As I taught a kid - Rajesh
A fortress is vital for those 
1) on the offensive - i.e., when the country's well armed and well prepared military goes on war with other countries, fortress serves as a protection.

2) on the defensive to protect themselves - i.e., when the enemies attack the country without notice, fortress helps to stop the enemies at the fortress itself so that a) enemies don't spoil our resources and people and b) it gives an opportunity for the soldiers in the fortress to fight with the enemies and save the country. 

Hence, a fortress is inevitable. 

Questions that I ask to the kid
Is fortress vital? Why?
In today's times, is fortress inevitable? Why?

Friday, October 13, 2017

இருபுனலும் வாய்ந்த மலையும்

குறள் 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
இரு - இரண்டு
புனலும் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.
இருபுனலும் - தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்
வாய்ந்துகொள்(ளு)-தல் - vāyntu-koḷ-   v. tr. வாய்¹- +. To obtain by conquest;வென்று கைப்பற்றுதல்
வாய்ந்த  - உயர்ந்த
மலையும் - மலை - malai   n. perh. மல்லல். [K. male.] 1.Hill, mountain; பருவதம். மலையினு மாணப் பெரிது(குறள், 124). 2. Collection, aggregation; ஈட்டம்.சொன்மலை (திருமுரு. 263). 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. Colloq.
வருபுனல் - s. A river, the water of a river, ஆறு. (சது.) வருமட்டும்--வருமளவும். Until coming
வல் - வலிமையான
அரணும் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
நாட்டிற்கு - நாடு நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

முழுப்பொருள்
1) ஆறு என்ற இயற்கையாக ஓடும் நீரும், அதனை அணைகளிலும் குளங்களிலும் ஏரிகளிலும் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் தேக்கி வைத்துக்கொள்ளுவது ஒரு நாட்டிற்கு தேவையானது. அது மட்டும் இன்றி நிலத்தடி நீரும் இன்றியமையாதது. 2) அது போல உயர்ந்த மலைகளும் தேவையானது. மலை என்பது பல இயற்கைவளங்களை ஒரே இடத்தில் கொண்டாது. வேர்களில் இருந்து சொட்டு சொட்டாக வீழ்ந்து ஆறாக உற்பத்தியாக தேவையான மரங்களை கொண்டது மலை. 3) வருபுனல் எனப்படும் பொழியும் மழை எனப்படுவது. மழை பெய்ய வேண்டும் என்றால் மரங்கள் வேண்டும். ஆதலால் ஒரு நாட்டில் மரங்கள் இருக்க வேண்டும். 4) மக்களை எதிரிகளிடம் இருந்து காக்க வல்ல கோட்டை சுவர் அரணாகும். இது திடமான சுவர் என்று மட்டும் அல்லாது, வலிமையான படைகளும் அடங்கும்.

மேற்சொன்ன நான்கும் (இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும்) ஒரு நாட்டிற்கு தேவையான உறுப்புகள் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

மணக்குடவர் உரை
இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) .

மு.வரதராசனார் உரை
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

இருபுனல்: தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்.

‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’

என்பது நாடு அதிகாரத்துக் குறள். இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும் நாட்டின் உறுப்புகள் என்பது பொருள்.

Thursday, October 5, 2017

வகையறிந்து வல்லவை வாய்சோரார்

குறள் 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.
[பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை]

பொருள்
வகை  - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).

வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு; val   s. strength, power, பலம்; 2. quickness, speed, சீக்கிரம்; 3. a hillock, மேடு; 4. dice, சூதாடுகருவி.; val   n. cf. vala. 1. Strength, power;வலிமை. (சூடா.) 2. Ability; திறமை. 3. Hillock;mound; மேடு. (உரி. நி.) 4. Dice; சூதாடுகருவி.(தொல். எழுத். 373.) 5. Bodice; முலைக்கச்சு. (யாழ்.அக.); val   n. val. Quickness, speed;விரைவு. (சூடா.)

அவை - அப்பொருள்கள்

வாய் - உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு; பாண்டம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

சோரார் - சொல்லில் குற்றங்களைந்து பேசுவர்
சொல்லின் - சொல்லில்

தொகை - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்.
அறிந்த - அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).

தூய்மை - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை.
தூய்மையவர் -தூய்மையாளர்

முழுப்பொருள்
ஒரு கூட்டம் என்பது பலவகையில் இருக்க கூடியது. ஒரு சில கூட்டங்களில் கற்றோர் இருப்பர். ஒரு சில கூட்டங்களில் சாமனியர்கள் இருப்பார். ஆகவே ஒரு அவையில் பேசுபவர் அச்சபையில் உள்ள மக்களின் திறனையும், ஆற்றலையும், அவர்களின் நேரத்தின் மதிப்பையும் அறிந்து இருக்க வேண்டும்.  அவர்கள் முன்னே பேசும் பொழுது தவறான சொற்களை பயன்படுத்தக்கூடாது.  அவைக்கேற்ற சொற்களை கவனமாக தேர்ந்தெடுத்து அவற்றை கோர்த்து சரியாக பேச வேண்டும். ஏனெனில் தவறான சொற்கள் தவறான புரிதலை கொடுக்கும். நேரத்தை வீண் அடிக்கும். அப்படி பேசினால் அச்சபையில் மறுபடியும் பேசும் வாய்ப்பு கிடைப்பது எளிது அல்ல. ஆதலால் அவை திறன் அறிந்து அதன் வல்லமையை கருத்தில் கொண்டு அவர்களின் நேரம் பொன் போன்றது என்று எண்ணி அவற்றை வீண் செய்யக்கூடாது என்று அஞ்சி சரியான சொற்களை கொண்டு பேச வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சொல்லுதற்குரிய அவையினையறிந்து சொல்லுங்கால் அதற்கு அஞ்சாமை . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]

வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.).

மணக்குடவர் உரை
தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர். இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.

மு.வரதராசனார் உரை
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

Thirukkural - Management - Public Speaking - Audience Analysis
A powerful, persuasive, and convincing public speaker is one who knows the quality of his audience, the occasion of the speech and the impact of his choice of words on his audience, and presents them accordingly. That sort of speaker will never, even unconsciously or by mistake, use words that bring him dishonour, instructs Kural 721.

The expert speaker will make no slip Addressing an assembly he has gauged. So, know your audience, understand the occasion of your speech, choose powerful and meaningful words, and speak accordingly to inspire. 

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...