உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை

thirukkural meaning விளக்கம் பொருட்பால், படையில், படைமாட்சி குறள் 761 உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை
குறள் 761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் 
வெறுக்கையுள் எல்லாம் தலை
[பொருட்பால், படையில், படைமாட்சி]

பொருள்
உறுப்பு - uṟuppu   n. உறு¹-. 1. Limb,member of body; சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்; ūṟu   s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு.

அஞ்சா - அஞ்சாமை - பயப்படாமை, திண்மை
வெல் - வெல் - vel   வெல்லு, I. v. t. overcome, conquer, subdue, carry the day, செயி.; வெற்றி

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

வெறுக்கையுள் - செல்வத்துள்

எல்லாம் - எல்லாவற்றிலும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
ஒரு உடம்பிற்கு எப்படி ஒவ்வொரு உறுப்பும் அழகக்கு மட்டும் இன்றி மனிதனை தக்க சமயத்தில் இடர்களிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவும். அதுப்போல நாட்டிற்கு தன்னை தற்காத்துக்கொள்ள படைகள் தேவை. ஒரு உயிருக்கு எப்படி நோய் அற்ற வாழ்வே (உறுப்புகள்) குறைவற்ற செல்வமோ அதுப்போல ஒரு நாட்டிற்கு தீரமான எதற்கும் அஞ்சாத வெல்லும் படைகள் செல்வத்துள் சிறந்த செல்வம் ஆகும். ஏனெனில் அப்படை எதிர்களிடம் இருந்து நாட்டை தற்காத்துக்கொள்ளவும், இயற்கை இடர்களின் போது மக்களுக்கு இடர்களைப் போக்கி நிவாரணம் தந்து உதவும்.

பேரரசுகள் ஆண்டுகொண்டிருந்த முடியாட்சி காலத்தில் ரத, கஜ, துரக, பதாதிகள் எனப்படும் தேர், யானை, குதிரை மற்றும் காலாட்படைகளே படைகளின் பெரும் உறுப்புகளாகக் கொள்ளப்பட்டன. உலகம் அவ்வாட்சி முறைகளிலிருந்து மாறிய பிறகு, முப்படைகள் என்று கூறப்படும், நில, நீர், வான் வழிப் படைகளே படைகளின் உறுப்பாகக் கொள்ளப்படுகின்றன.

திரிகடுகப் பாடலொன்று, அர்ப்பணிப்பு உணர்வினைக் கொண்ட படையினை ஒரு நாட்டின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாகச் சொல்கிறது. அப்பாடல்:

பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், – இம் மூன்றும்
மண்ஆளும் வேந்தர்க்கு உறுப்பு (திரி.100)

“படையறின், மன்னர்சீர் வாடி விடும்” (நான்மணி 42)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி ,அப்பொருளினான் ஆவதாய வெல்வதாய படை இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி ,முதற்கண் 'படை மாட்சி' கூறுகின்றார் .அஃதாவது , படையினது நன்மை. அதிகார முறைமையும் இதனான் விளங்கும்.]

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை - யானை முதலிய நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை - அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம். (ஈண்டுப் படை என்றது, அந்நான்கன் தொகுதியை, ஊறு அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும், ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின் 'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை 
யானை, குதிரை, தேர், கருவி, காலாளாகிய உறுப்புகளால் அமைந்து, இடுக்கண் உற்றால் அதற்கு அச்சமின்றி, வெற்றியுடைய படை, அரசன் தேடியபொரு ளெல்லாவற்றினும் தலையான பொருள்; ஆதலால் படைவேண்டும்.

மு.வரதராசனார் உரை
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.

1 comment

  1. அறிந்துக் கொண்டேன்...நன்று...
© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain