குறள் 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]
பொருள்
அழிவினவை -அழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்
அழிவு - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக
அழிவின் - அழிவில் இருந்து
அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம்; புலவர்; நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு [pronoun (அவ்) plural of அது, they, those things.]; அப்பொருள்கள்.
நீக்கி - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.
ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை
உய்த்து - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல்; சேர்த்தல்; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்; கொடுத்தல்; அனுப்புதல்; குறிப்பித்தல்; அறிவித்தல்; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்.
ஆறு உய்த்து - நல் அற வழியில் (நண்பனை) செலுத்துதல், உண்மை நிலை எடுத்து உரைத்தல், தீயவழியின் பின்விளைவுகளை எடுத்து உரைத்தல், அறவழியின் மாண்புகளையும் எடுத்து உரைத்தல்
அழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
அழிவின் கண் - (நண்பன்) அழிவின் பாதையில் செல்கிறான என்ற கண்ணோட்டம் கொண்டு, அல்லது விதியால் வரும் துன்பங்கள்
அல்லல் - துன்பம்
உழப்பு - முயற்சி, ஊக்கம்; வருத்தம்; பழக்கம்; வலிமை.
உழப்பது - உழப்புதல் - மழுப்புதல்; குழப்பிப்பேசுதல்; போலிவாதஞ்செய்தல்; காலங்கடத்துதல்
ஆம் - அழகு
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
முழுப்பொருள்
தன்னுடைய நண்பர் தீய வழிகளில் சென்றால் அவரை அவ்வழிகளில் செல்லாது தடுக்க வேண்டும். அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டும். தடுமாறி விழும்பொழுது அவருக்கு நல் அறம் புகட்டி அவரை நல்வழியில் மீட்க வேண்டும். (குறிக்கோளை அடைய தேவையான பாதை தெரிந்தால் பயணம் எளிதாகும் ஊக்கம் கிடைக்கும்). அது மட்டும் இன்றி, அந்த நண்பருக்கு ஊழினால் அல்லது எதிரிகளால் துன்பங்கள் வரலாம். அந்த நேரத்தில் அவரிடம் இருந்து விளகிக்கொள்ளாமல், அவருடையத் துன்பத்தைப் புரிந்துக்கொண்டு அவரின் மீதுக் கண்ணோட்டம் (தாட்சீனியம்) கொண்டு அவருக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். இப்படி அவருடைய வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டு, துன்பத்தில் இருந்து மீண்டு வர வழி செய்து, நண்பருக்கு வலிமை சேர்க்க வேண்டும். இதுவே நட்பாகும்.
சடாயு உயிரீ நீத்த படலத்தில், அவனுடைய நட்பின் வலிமையைக் கூறுமிடத்து, “ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்” (கம்ப.சடாயு உயிர் 13) என்று கம்பர் கூறுவார்.
“சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்” என்று சொற்களிலும் குற்றங்களை அகற்றும் நட்பை திரிகடுகம் சொல்லுகிறது. அறத்தைப் பற்றி கூறும் திரிகடும், “அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்”, அதாவது நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறமென்கிறது.
“அறமன்னானுடன் எம்பி யன்பினோ
டுறவுன் நாவுயி ரொன்றை யோவினான்
பெறவொண்ணாததோர் பெற்றி பெற்றவற்
கிறலென் னும்இதின் இன்பம் யாவதோ” (கம்ப.சம்பாதி.45)
முழுப்பொருள் 2
நண்பன் என்பவருக்கும் ஒரு சில இலக்கணங்கள் உண்டு என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
முதலாவதாக நண்பரின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அதாவது நண்பர் ஒழுக்கம் அல்லாத அறம் அல்லாத நன்மை அல்லாத செயல்களில் செல்கிறார் என்று ஆய்வு செய்து கொண்டு இருத்தல் வேண்டும். ஒரு வேளை நண்பன் ஒழுக்கம் அல்லாத செயல்களில் சென்றால் அது தவறு எடுத்துரைக்க வேண்டும். இதனால் எனக்கென்ன என்று இருக்க கூடாது. நண்பனை நல்வழியில் மறுபடியும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நண்பன் நட்பையே முறித்தாலும் கவலை இல்லை என்று எண்ணி நண்பனை நல்வழியில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக என்னதான் கவனமாக இருந்தாலும் நண்பருக்கு துன்பம் நேர வாய்ப்பு உள்ளது. அப்படி துன்பம் நேர்ந்தால் அத்துன்பத்தை கண்காணித்து அதில் இருந்து வெளிவர கூட இருந்து ஒத்துழைத்து மீண்டு வர ஒரு தோள் கொடுத்து நண்பனுக்கு வலிமை (உழப்பது) சேர்ப்பதே சிறந்த நட்பு.
மேலும்: அஷோக் உரை
சடாயு உயிரீ நீத்த படலத்தில், அவனுடைய நட்பின் வலிமையைக் கூறுமிடத்து, “ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்” என்று கம்பர் கூறுவார். “சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்” என்று சொற்களிலும் குற்றங்களை அகற்றும் நட்பை திரிகடுகம் சொல்லுகிறது. அறத்தைப் பற்றி கூறும் திரிகடும், “அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்”, அதாவது நட்பு செய்தவரைப் பெருகச் செய்தலும் முதன்மையான அறமென்கிறது.
சொந்த உதாரணம்
என் வாழ்வில் 2002-2005 ஆண்டுகளில் பல திரைப்பட பாடல் ஒலிப்பதிவு களஞ்சியத்தை கட்டுக்கொண்டு இருந்தேன். அவற்றில் பல பாடல்களை கேட்ககூட மாட்டேன். ஆனால் அந்த சமையத்தில் என் நண்பன் என்னை கண்டித்தான். இது என்ன வீண் வேலை. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஒரு சினிமா பார்கிறாய் ரசிக்கிறாய். அத்துடன் முடிந்துவிட்டது. நல்பாடல் என்றால் சேகரித்து வைத்துக்கொள். ஆனால் வரும் படம் எல்லாவற்றை உடனுக்குடன் சேகரித்து விநியோகிப்பது உனக்கு வேண்டாத வேலை.
வாழ்வில் நேரம் பொன் போன்றது ஆகும். வாழ்வில் முன்னேற வேலையில் முன்னேற மேற்ப்படிப்பு படிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசி. அல்லது உன்னை மேம்படுத்தும் கலைகளில் அல்லது புத்தகங்களில் உன்னை ஆழ்த்திக்கொள். அதுவே சிறந்தது என்று அறிவுருத்தினான்.
அன்று அந்த எச்சரிக்கை என்னை மேம்படுத்தியது. அன்று முதல் நான் புத்தங்கள் படிப்பது மேற்ப்படிப்பிற்கு படிப்பது வயலின் கற்றுக்கொள்வது என என்னை ஆழ்த்திக்கொண்டேன். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது.
பரிமேலழகர் உரை
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது. ('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர'(¢நாலடி.301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கித் தன்னால் செயலற்ற விடத்து அவரொடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு.
மு.வரதராசனார் உரை
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அழிவினவை நீக்கி-நண்பன் கேடுதரும் தீயவழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி; ஆறு உய்த்து-நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி; அழிவின்கண் அல்லது உழப்பது-தெய்வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; நட்பு-ஒருவனுக்கு நட்பாவது.
ஆறு என்னும் பொதுப்பெயர் நெறி, வழி என்பனபோல நல்லாற்றைக் குறித்தது. 'ஆறுய்த்து' என்றதனால், 'அழிவினவை நீக்கி' என்பதில் 'அழிவினவை' தீயநெறிகளைக் குறித்தமை அறியப்படும்.
"இனி, நவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினுஞ் செல்வ வழிவினும் வந்த துன்பங்களென்றும், 'அழிவின்க'ணென்பதற்கு யாக்கையழிவின்கணென்றும் உரைப்பாருமுளர்." என்று பரிமேலழகர் கூறியுள்ளது நன்மறுப்பாகும்.
பதினெண் கீழ்க்கணக்கு - பழமொழி
உழந்ததூஉம் பேணா(து) ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
முழங்குறைப்பச் சாணீளு மாறு.
(சொ-ள்.) தழங்(கு) கண் முழவு இரங்கும் தண் கடல் சேர்ப்ப - ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவுபோல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே!, உழந்ததும் பேணாது ஒறுத்தமை கண்டும் - தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும், விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல் - அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல், சாண் குறைப்ப - சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க, முழம் நீளு மாறு - அது முழம் நீளமாக நீளுவது போலும்.
(க-து.) தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையேசெய்ய முற்படுவர்.
(வி-ம்.) 'முழல் நீளுமாறு' என்றது முன்னினும் மிக்க தீமையையே புரிவார் என்பதைக் கருதி. 'முழம் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது 'சுரை ஆழ அம்மி மிதப்ப' என்பதைப் போன்று மொழி மாற்றிப் பொருள்கொள்ள வேண்டுதலின், மொழிமாற்றுப் பொருள்கோள். தழங்குகண், தழங்கண் என வந்தது விகாரம். 'உழந்ததும்'என்றது,
‘அழிவி னவைநீக்கி ஆறுய்த்துஅழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு'என்றதைக் கருதி,'முழங் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது பழமொழி.
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
தவறான வழிகளிலே சென்றழிந்து
தடுமாறி வீழ்வாரைத் தான் தடுத்து
அவமான உண்மை நிலை எடுத் துரைத்து
அறமான நல்வழியில் அழைத்துச் சென்று
நலமாக வாழ்கையிலே துன்பம் வந்தால்
நண்பருடன் அத்துன்பம் பகிர்ந்து கொள்ளல்
குலமான நண்பர்களின் குணமேயாகும்
கொண்ட அந்த நட்பேதான் உண்மையாகும்
உனக்கு உறுதுணையாக .....!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)
உனக்கு உறுதுணையாக .....!!!
தீய
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான்
இருக்கிறேன் உனக்கு
உறுதுணையாக .....!!!
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என்
உயிர் நண்பணடா ....!!!
நன்றி: Interesting Tamil Poems
நட்பின் கடமை
நட்பு என்றால் என்ன ?
நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?
அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.
இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?
வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.
வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.
அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
வள்ளுவர் கூறுகிறார்
நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.
அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.
அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.
ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.
அழிவின்கண் = இதையும் மீறி அழிவு வந்தால்
அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு
நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?
நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?
நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்
நன்றி: கூடா நட்பு வாழ்க்கையை சீரழிக்கும் (பணிப்புலம்)
நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. எல்லோருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள்.
வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன.
வாச மலர்களை மாலையாக தொடுக்கும் வாழைநார் கூட பூவின் வாசனையைப் பெற்று நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் விழ்ந்த நறுமண மலரும் சாக்கடையின் வாசத்தையே பெற்று விடுகின்றது. ஒருவருடைய குணாதிசயங்களை அறிய அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர்களை வைத்து சுலபமாக கணித்துக் கொள்ள முடியும் என்பதும், ஒருவருடைய பொருளாதார நிலையைக் கணிப்பிட அவர் சந்தையில் வாங்கும் பொருட்களை வைத்து கணித்துக் கொள்ள முடியும் என்பதும் பழைய பழமொழிகளாகும். விளக்கமாக கூறுவதாயின் ஒருவரின் அகத்தின் அழகை முகம் காட்டுவதுபோல் அவரின் குணத்தின் அழகை நண்பர்களின் நடத்தையில் கண்டு கொள்ள முடியும் எனக்கூறலாம்.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் போலும் வள்ளுவன் “அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு என அறிவுறுத்துகின்றார்.
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். ஒரு நல்ல நண்பனிடம் இருந்து நல்ல பல விடயங்களை கற்றுக் கொள்ளலாம் அதேபோல் தீய நண்பர்களிடம் இருந்து தீய பழக்க வழக்கங்களையும் தீய குணங்களையுமே கற்றுக் கொள்ளலாம்.
உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.
ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.
நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விடயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல, நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக, இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன், அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள், அதற்காக நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.
”நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே” என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டுகொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.
உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கின்றதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்ப வனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.
உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாக அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.
மற்ற நண்பர்களைப் பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறார்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,
அன்னை திரேசாவின் வாழ்வில்....
அன்னை திரேசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியரில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என திரேசாவின் தாய் முடிவெடுத்தார்.
ஒருநாள் அவர் திரேசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய அப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட திரேசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போன திரேசாவை தாய் நிறுத்தினார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி தாய் கூறினாள். அதன்படியே திரேசாவும் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் நிரப்பினாள். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார், திரேசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.
“ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என திரேசா கேட்டார்.
“எல்லாம் ஒரு காரணம்தான், இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வா” என்றார் தாய். திரேசா அப்படியே செய்தார்.
சில நாட்களுக்குப் பின் தாய் திரேசாவை மறுபடியும் அழைத்தார். அந்த பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னர். பழக் கூடைகளை திரேசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தார்.
அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாது அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த திரேசா வருந்தினார். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவருக்கு அழுகையே வந்து விட்டது.
தாய் திரேசாவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்... பார்த்தாயா? ஒரு அழுகிய அப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். ஒரு மனிதனைக் கொல்வதற்கு ஒரு துளி விஷம் போதும்.
எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும் உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். உடுக்கை இழந்தவன் கைபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நல்ல நப்புக்கு இலக்கணமாகும்.
மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது. பணக் கஷ்டமாயிருக்கு உதவி தேவையாய் இருக்கிறது, என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கிய தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் “மட்டுமே” உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்றார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல, அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே. “தப்பான” ஒரு செயலைச்செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம்.
போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச்செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்” என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள், தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகு வதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.
கடைசியாக ஒன்று நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்! நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை.
கூடா நட்பு தூக்கு மேடைக்கு வழிகாட்டும். ஆனால் நல்ல நட்பு வாழ்க்கையின் சிகரத்திற்கே வழிகாட்டும்.
No comments:
Post a Comment