குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

thirukkural meaning விளக்கம் குறள் 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்
குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்
[பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள் 
குறிப்பின் - குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

உணர்வாரை - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உறுப்பினுள் - உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு

யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

கொடுத்தும் - கொடுத்தல்  - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும். கொள்ள வேண்டும்

முழுப்பொருள் 
பிறருடன் பழகும் பொழுது உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசுபவரின் முகத்திலும் உடல்மொழியிலும் சூழ்நிலைகளிலும் சுற்றுவட்டாரத்திலும் (அறிதாக) பூடகமாக தென்படும் அறிகுறிகளையும் பேச்சில் வெளிப்படக்கூடிய உட்கருத்துக்களையும், தன்னுடைய மனதாலும் (மனதால் உணருதல்) கூரியஅறிவாலும் ஆராய்ந்து அறிந்துக்கொள்ள கூடிய திறன்படைத்தாரை (/ மன ஒருமை படைத்தாரை) எது (அன்பு, பொருள்/வெகுமதி) கொடுத்தாவது தன்னுடைய நெருங்கிய (உறுப்பு என்றால் நெருக்கம்) சுற்றத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இத்தகையவர் தனது அருகில் இருந்தால் தனது அமைச்சர்கள், மக்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்கும் பொழுது இவர்கள் குறிப்புகளை அறிந்து அமைச்சருக்கும் அரசருக்கும் எடுத்துரைப்பர். அது அரசரருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை

பரிமேலழகர் உரை
குறிப்பின் குறிப்பு உணர்வாரை - தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் - அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க. (உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று, உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின் தன்னுறுப்புகளுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ? இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.

மு.வரதராசனார் உரை
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain