Tuesday, November 21, 2017

இல்லை தவறவர்க்கு ஆயினும்

குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப்பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

அவர்க்கு - avar   pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்

ஆயினும் - āyiṉ-um   conj. ஆ-. 1. Although, nevertheless; ஆனாலும் 2. Either . . .or; ஆவது பத்தாயினும் எட்டாயினுங் கொடு 3. And;உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல் (சிலப்.1, 14, உரை )

ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள

அவர் -  avar   pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்

அளிக்குமாறு - அளிக்கும்

முழுப்பொருள்
தலைவனிடத்தில் எந்த தவறும் இல்லை என்று தெரிந்தும் தலைவிக்கு தலைவனிடத்தில் ஊடல் செய்யவேண்டும் என்று ஆசையாம். ஏனெனில் ஊடலின் பயன்கள் அப்படி. இது பொய் பிணக்கு என்றாலும் தலைவியின் மீது உள்ள காதலினால் தலைவன் காதலியை வர்ணித்தோ, ஆசை வார்த்தைகள் பேசியோ, இயற்கை எழிலாடும் இடங்களுக்கு கூட்டிச்சென்றோ காதலின் கோபத்தை (ஊடலை) தணிக்க இப்படி பலவழிகளில் முயற்சிசெய்வான். 

இதை காணும் தலைவி தன் தலைவர் தனக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்கும் பொழுதும், தன் தலைவர் தன் மீது எவ்வளவு அன்புக்கொண்டு உள்ளார் என்று உணரும் பொழுதும், தவறே தன் மீது இல்லாத பொழுதும் தலைவர் அதனை கருத்தில் கொள்ளாது தலைவியிடம் ஊடலை தணித்து கூட வேண்டும் என்று எண்ணுகிறாரே என்று நினைத்தும் தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். இதுவே ஊடலுக்கு தலைவனின் பதில்.

இந்த ஊடலில்பின் அவர்கள் கூடல் கொள்ளும் பொழுது அடையும் இன்பமானது இயல்பைவிட அதிகமாய் உள்ளது. ஊடலில் பின் கூடலின் சுவையே தனி. அதனால் ஊடல் செய்கிறாள் தலைவி.

ஆதலால் ஊடல் செய்வீர்!


(சேதுபதி திரைப்படத்தில் கதாநாயகி ரம்யா நம்பீசன் கதாநாயகன் விஜய் சேதுபதியின் கோபம்(ஊடல்) ஆக இருப்பால். அப்பொழுது தலைவன் தன் காலில் விழுவதை இன்புற்று ரசிப்பதை ஒரு அழகான எடுத்துக்காட்டாக இங்கு நினைவுக்கூறுகிறேன்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”.....................துனிபடர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்புசேண் அகல நீந்திப்
புலவி யுணர்த்தல் வண்மை யானே” (நற் 217:6-9)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

சாலமன் பாப்பையா உரை
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.
[காமத்துப்பால், கற்பியல்,  புலவி நுணுக்கம்]

பொருள்
புலவிநுணுக்கம் - pulavi-nuṇukkam   n. id. +. Sulks of a wife on flimsy grounds; அற்பகாரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132,அதி.)

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இயலார் - இயல்புடையோர்

எல்லாரும் - யாவரும்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணின் - கண்களால்

பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.

உண் - uṇ   V. & I. v. t. (fut. உண்பேன், உண்ணு வேன்), eat, suck, take food. Some times it serves to form a passive verb, as in தள்ளுண்ண, to be rejected.

உண்பர் - உண்பார்கள்

நண்மை - அண்மை, naṇmai   n. perh. id. Proximity;சமீபம். நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்(புறநா. 380, 11).

நண்ணேன் - தொடமாட்டேன், அருகில் வரமாட்டேன்

பரத்த - பரபரத்தல் - paraparattal   பரபரப்பு, v. n. hurrying hastening, தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling, தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity, முயற்சி.; பரவுதல்; தட்டையாதல்; அலமருதல்.

நின் - உன்னுடைய

மார்பு - நெஞ்சு; முலை; வடிம்பு; தடாகம்; அகலம்; கருப்பூரவகை; நான்குமுழஅளவுள்ளநீட்டலளவை.

முழுப்பொருள்
தலைவி தலைவனின் அழகு மிகுந்த வசிகரிக்கும் பரந்த மார்பு மீது கோபம் கொள்கிறாள். அதனால் தலைவனின் மீதும் கோபம் கொள்கிறாள். ஏனெனில், இவர் வெளியே மக்களுடன் மக்களாக பொது இடங்களுக்கு செல்லும் பொழுது பெண் இயல்புடையவர்கள் இவரின் வசிகரிக்கும் மார்பை பொதுவானை உண்பதுபோல உண்ணுவார்கள். இந்த மார்பு எனக்கானது மட்டும் அள்ளவா? இதை பிறர் காண்பதைக் கூட நான் விரும்பவில்லை. இதுப் போன்ற சிறு காரணங்களுக்காக தலைவனின் மீது கோபம் கொண்டு ஊடலிற்கு வழிவகுக்கிறாள் தலைவி. இன்னொரு கோணத்தில் பார்த்தால், தலைவி தலைவன் வீட்டைவிட்டு வெளியே (வெளியே சென்றால் தானே பிற பெண்கள் பார்ப்பார்கள்) செல்லக்கூடாது தன்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பிகிறாள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒப்புமை
”கருந்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்
றொருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரை மார்பன் நீராடா
தென்னையும் தோய வரும்”  (நாலடி 387)

“பரத்தையார் தோய்ந்த மார்பம்
பத்தினி மகளிர் தீண்டார்” (சீவக.2722)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது , தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.).

மணக்குடவர் உரை
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

சாலமன் பாப்பையா உரை
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
புலவி - ஊடல்; வெறுப்பு

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புல்லாது - தழுவாது, புணராது, பொருந்தாது, வரவேற்றாது, நட்புச்செயாது

இரா - இரவு

அப் - அந்த

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.
புலத்தை - அந்த மன வேறுபாட்டை; ஊடலை, துன்புறுத்தலை

அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

உறும் - கொள்ளும்

அல்லல் - allal   n. prob. அல்லு-. [T. allari,K. alla, M. allal.] Affliction, distress, evil, misfortune, privation; துன்பம் அழிவின்க ணல்லலுழப்பதா நட்பு (குறள், 787).

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

காண்கம் - காண்போதும்

சிறிது - சிறிது காலம்; ciṟitu   n. சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது.இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99).

முழுப்பொருள்
தலைவி தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறாள் நெஞ்சே தலைவர் வந்தவுடன் விரைந்த்ச்சென்று அவரை தழுவாதே, தீண்டாதே, புணராதே - அவரிடம் நட்புப்பாராட்டாதே என்று. அவர் என்னை தழுவமுடியாமல் படும் துன்பத்தை நாம் சிறிது நேரம் பார்க்கலாம். அவர் என்னை விட்டு தொடர்ந்து எத்தனைநாட்கள் பிரிந்து இருந்தார் - என்னால் அப்பொழுது எல்லாம் தொடவே முடியவில்லை. சிறிது நேரம் தானே. ஒன்றும் ஆகிவிடாது. 

இச்செய்கையானது ஒருவகையில் அவர்கள் இருவருக்கும் நடுவே ஊடல். பொய் பிணக்கு என்றும் சொல்லலாம். ஆனால் சிறிதளவு ஊடல் பின்பு கூடலில் இன்பத்தை அதிகரிக்கும். அது புணர்ச்சியின்பத்தை இன்னும் அதிகம் ஆக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல் . அதிகார முறையையும் இதனானே விளங்கும் .]

(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.).

மணக்குடவர் உரை
நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.

மு.வரதராசனார் உரை
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

சாலமன் பாப்பையா உரை
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

எள்ளின் இளிவாம்என்று எண்ணி

குறள் 1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
'எள்ளின் - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

இளி- இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

வாம் - தமக்கே

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு, பசு, எருமை கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

உள்ளும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உயிர்க் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
பிரிந்துச்சென்று உள்ள காதலர் மீது காதலிக்கு கோபம் உள்ளது. பிரிவு தரும் காமந்நோயை எனக்கு தந்த காதலனை நான் இகழலாம். ஆனால் அவரை ( பொதுவாக பிறரைக் கூட) இகழ்ந்துப் பேசுதல் இழிவான செயல் என்று நான் நினைப்பதால் அவரை நான் இகழவில்லை. மாறாக அவரின் சிறந்த பண்புகள், குணங்கள், மேன்மைகள் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து (உள்ளும்), ஆராய்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் உயிரோட்டமான காதலை அன்பினை கொண்ட என்னுடைய நெஞ்சம்.

காதலன் மேல் கொண்ட அன்பினால் காதலனை எந்த ஒரு காரணத்திற்காகவும் தவறாக நினைக்க கூடாது, எதிர்மரையான சிந்தனைகள் தன்னில் வேர் ஊன்ற விடக்கூடாது என்று காதலி நினைக்கிறாள். காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். அதுவே காதலின் சிறப்பு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளிவரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு?. இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை: அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உள்ளக் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

களித்தலும் - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

உள்ளக்களிப்பு - மனமகிழ்ச்சி

காண - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

மகிழ்தலும் - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல்.

கள்ளுக்கு - கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

இல் - இல்லை

காமத்திற்கு - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச் சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
என் காதலரை பற்றியும் எங்கள் காதலை பற்றியும், நாங்கள் புணர்ந்ததைப் (கலவிக் கொண்டது) பற்றியும், நான் நினைத்தால் என் உள்ளம் (மனம்) களிப்படைகிறது (உள்ளத்திற்கு ஊக்கம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் நான் இன்னும் பல நாள் என் காதலருடன் வாழ ஊக்கம் கொள்கிறேன்), என் காதலரை கண்டால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் (ஏனெனில் என் கவலைகள் யாவும் மறக்கிறேன். நாங்கள் கொள்ளப்போகும் புணர்ச்சியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்). ஆக காதலினால் நினைத்தாலும், கண்டாலும் காதலர்களுக்கு இன்பமே. இவர்கள் ஒருவரை ஒருவர் நுகரவோ, தீண்டவோ, தழுவவோ, புணரவோக் கூட தேவையில்லை. ஆனால் இன்பம் உண்டு. அதுவே இவர்கள் புணரும் பொழுதும் இன்பம். புணர்ந்த பின்பும் இன்பம்.

ஆனால் இந்த பண்புகள் கள்ளுற்கு இல்லை. கள் தனை நினைத்தாலே சிறிது நேர கிளர்ச்சி இருக்கலாம் களிப்பு இருக்காது. அதுப்போல கள் புட்டிகளை கண்டால் எந்தவித ஒரு மகிழ்ச்சியும் இருக்காது. அதுவே கள் தனை உண்டால் மனிதன் மகிழ்ச்சி அடைகிறான். இதுவும் இந்த கள் உடலில் உள்ளவரை மட்டுமே அந்த போதை இருக்கும். மறுநாள் காலை அந்த போதை இருக்காது.

ஆக, புறவயமான தீண்டுதலிலான இன்பங்களும் இருப்பினும், காதல் (காமம்) கொடுக்கும் இன்பம் அகவயமானது. அதனை நினைத்தாலும் கண்டாலும் மகிழ்ச்சி தான். ஆனால் கள் இந்த அகவயமான இன்பங்களை கொடுக்காது. அது வெறும் தற்காலிகமான உடலில் உள்ளவரையிலான புறவயமான இன்பத்தை உண்டால் மட்டுமே தரும்.

மேலும்: அஷோக் உரை

அரசே, இன்று தங்கள் மணநாள் இரவு” என்றாள். ஆமென அவன் தலையசைத்தான். “பிறபெண்டிரை நீ இதுவரை அறிந்ததில்லை என்று அறிவேன்” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “காமத்தையே உண்மையுருவில் இப்போதுதான் காணப்போகிறாய். உள்ளக்காமம் சொல்லில் படர்ந்து கனவில் ஊடுருவி வளர்ந்து எழுவது. அரசே, ஆனால் அதைவிடவும் பேருருக்கொண்டது உடற்காமம்” என்றாள்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள் , அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.]

(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.

மு.வரதராசனார் உரை
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்

குறள் 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

காரிகை - பெண்; அழகு; அலங்காரம்; கட்டளைக்கலித்துறை; ஓர்யாப்பிலக்கணநூல்; ஒருநிறை; வாதனை.

காம்பு - பூ, இலைமுதலியவற்றின்தாள்; மலர்க்கொம்பு; கருவிகளின்கைப்பிடி; மூங்கில்; ஆடைக்கரை; ஒருவகைப்பட்டாடை; பூசணி; அம்புச்சிறகு.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

தோள் - புயம்; கை; தொளை.

பேதைக்குப் - பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை

நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

நீர்மை - nīrmai   n. நீர்¹. 1. Property ofwater, as coolness; நீரின்றன்மை. (குறள், 195,உரை.) 2. Nature, property, inherent quality;தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள்,17). 3. Goodness, essential excellence; சிறந்தகுணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள்,195). 4. Affability; சௌலப்பியம் ஆவாவென்றநீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ(திருவாச. 27, 5). நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக்.44). 5. Beauty; அழகு மெய்ந்நீர்மை தோற்றாயே(திவ். திருவாய். 2, 1, 6). 6. Brilliance, lustre;ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 7. State,condition; நிலைமை என்னீர்மை கண்டிரங்கி (திவ்.திருவாய். 1, 4, 4). 8. Observance of properrules or established custom; ஒப்புரவு (W.)

பெரிது - peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

முழுப்பொருள்
என்னுடைய கண்கள் நிறைந்த இந்த காரிகை(பெண்) மூங்கிலைப் போல வளைந்த அழகியத் தோள்களை கொண்டு உள்ளாள்.  இவள் பெண்களுக்கே உரித்தான குணங்களை மிகுதியாகவே பெற்று இருப்பது இவளுக்கும் இன்னும் அழகு சேர்க்கிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.).

மணக்குடவர் உரை
காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.

மு.வரதராசனார் உரை
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

வாளற்றுப் புற்கென்ற கண்ணும்

குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
[காமத்துப்பால், கற்பியல், அவர்வயின்விதும்பல்]

பொருள்
வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

அற்றுப் - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

புற்கு - puṟku   n. புன்-மை. Tawnycolour, dimness; கபிலநிறம். (திவா.)

புற்கென்ற - புற்கு என்ற

கண்ணும் - கண்

அவர் - காதலர்

சென்ற - பிரிந்துச் சென்ற

நாள் - நாள், பொழுது, தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

ஒற்றித் - ஒற்றுதல் - oṟṟu-   5 v. ஒன்று-. [T.K. ottu.]tr. 1. To bring into contact; to press, hug close;ஒன்றிற்படும்படி சேர்த்தல் வீணை . . . மாத ரணிமுலைத் தடத்தி னொற்றி (சீவக. 1746). 2. To stamp, asa seal; முத்திரையிடுதல். கொடுவரியொற்றி (சிலப். 5,98). 3. To spy out; உளவறிதல். கண்மா றாடவரொடுக்க மொற்றி (மதுரைக். 642). 4. To beat, ascymbals in keeping time; தாளம்போடுதல் காமருதாளம் பெறுதற் கொற்றுவதுங் காட்டுவபோல் (பெரியபு.திருஞான. 46). 5. To strike; அடித்தல் வேணுக்கோலின் மிடைந்தவ ரொற்றலின் (சீவக. 634). 6. Topress down; to press upon; அமுக்குதல் வெங்கணைசெவிட்டி நோக்கியொற்றுபு திருத்தி (சீவக, 2191). 7.To attack; தாக்குதல் பழனத்த புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77, 5). 8. To touch; தீண்டுதல் கதவொற்றிப் புலம்பியா முலமர (கலித். 8, 2). 9. Toembrace; தழுவுதல் சேஎச் செவிமுதற் கொண்டுபெயர்த்தொற்றும் (கலித். 103, 51). 10. To wipeaway, as tears; துடைத்தல் கொடியனாடன் கண்பொழி கலுழி யொற்றி (சீவக. 1397). 11. To pryinto; உய்த்துணர்தல் உள்ளொற்றி

தேய்ந்த - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல்.

விரல் - viral   n. perh. விரவு-. [T. vrēlu, K.Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).viral   n. perh. விரவு-. [T. vrēlu, K.Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர்நரம்பின் (பொருந. 17). 2. See விரற்கிடை. பாதாதிகேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் பிரிந்து உள்ளார்கள். அப்போழுது தலைவி தலைவனின் வரவை எதிர்நோக்கி இருக்கிறாள். அப்பொழுது அவர் வரக்கூடும் வழி(களை) நோக்கி கண்களை பதித்துக்கொண்டு இருக்கிறாள். ஆனால் பலநாள் கழிந்தும் தலைவன் இன்னும் வரவில்லை. அதனால் கவலையில் அவள் கண்கள் ஒளி இழந்து அதவாது அழகிழந்து, கண்களின் புகழ் இழந்து கபில நிறம் கொண்டன.

மேலும், அவர் விட்டுச்சென்ற நாள்களை (சுவற்றில் கோடுகளாய் போட்ட வரிகளை) அவள் கைவிரல்கள் எண்ணி எண்ணி தேய்ந்தன. அப்படி ஆனால் அவள் எத்தனை நாட்கள் தலைவனைப் பிரிந்து இருக்க வேண்டும். இல்லை எனில் அவள் பிரிவு தாங்காது எத்தனை முறை அதனை மறுபடியும் மறுபடியும் எண்ணி இருக்க வேண்டும்.

வரவை நோக்கி கண்கள் மங்கி ஒளியிழத்தலை பல கவிஞர்கள் கூறிவிட்டனர். குறுந்தொகைப் பாடல் வரியான “கண்ணே நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்கும். சீவக சிந்தாமணியும், “கண்ணும் வாளற்ற” என்கும். விரல் தேய்தலை, “ஆய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றுநின் படா” என்கிறது குறுந்தொகைப் பாடல். நாலடியார் பாடல், “நாள்வைத்து நம்குற்றம் எண்ணும்கொல்” என்கிறது.


ஒப்புமை
”நீளிடை யத்தம் நோக்கிவா ளற்றுக் 
கண்ணுங் காட்சி தௌவின” (நற் 397:2-3)
“கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனலே” (குறுந் 44,1-2)
“வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கி” (புறநா 177:2)
“கண்ணும் வாளற்ற” (சீவக் 998)

“ஆய்கோ டிட்டுச், சுவர்வாய் பற்றுநின் படர்” (குறுந் 358:2-3)
“நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்
தாழல் வாழி தோழி” (அகநா 61:4-5)
“சேணுறை புலம்பின் நாண்முறை இழைத்த
திண்சுவர் நோக்கி நினைந்து” (அகநா 289:9-10)
“மெல்விரலின்
நாள்வைத்து நம்குற்றம் எண்ணும்கொல்” (நாலடி 394)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார்.

(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.).

மணக்குடவர் உரை
கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...