குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]
பொருள்
புலவி - ஊடல்; வெறுப்பு
புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.
புல்லாது - தழுவாது, புணராது, பொருந்தாது, வரவேற்றாது, நட்புச்செயாது
இரா - இரவு
அப் - அந்த
புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.
புலத்தை - அந்த மன வேறுபாட்டை; ஊடலை, துன்புறுத்தலை
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.
உறும் - கொள்ளும்
அல்லல் - allal n. prob. அல்லு-. [T. allari,K. alla, M. allal.] Affliction, distress, evil, misfortune, privation; துன்பம் அழிவின்க ணல்லலுழப்பதா நட்பு (குறள், 787).
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
காண்கம் - காண்போதும்
சிறிது - சிறிது காலம்; ciṟitu n. சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது.இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99).
முழுப்பொருள்
தலைவி தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறாள் நெஞ்சே தலைவர் வந்தவுடன் விரைந்த்ச்சென்று அவரை தழுவாதே, தீண்டாதே, புணராதே - அவரிடம் நட்புப்பாராட்டாதே என்று. அவர் என்னை தழுவமுடியாமல் படும் துன்பத்தை நாம் சிறிது நேரம் பார்க்கலாம். அவர் என்னை விட்டு தொடர்ந்து எத்தனைநாட்கள் பிரிந்து இருந்தார் - என்னால் அப்பொழுது எல்லாம் தொடவே முடியவில்லை. சிறிது நேரம் தானே. ஒன்றும் ஆகிவிடாது.
இச்செய்கையானது ஒருவகையில் அவர்கள் இருவருக்கும் நடுவே ஊடல். பொய் பிணக்கு என்றும் சொல்லலாம். ஆனால் சிறிதளவு ஊடல் பின்பு கூடலில் இன்பத்தை அதிகரிக்கும். அது புணர்ச்சியின்பத்தை இன்னும் அதிகம் ஆக்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது , இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல் . அதிகார முறையையும் இதனானே விளங்கும் .]
(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.).
மணக்குடவர் உரை
நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
மு.வரதராசனார் உரை
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
சாலமன் பாப்பையா உரை
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
No comments:
Post a Comment