குறள் 1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]
பொருள்
இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப்பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.
தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.
அவர்க்கு - avar pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்
ஆயினும் - āyiṉ-um conj. ஆ-. 1. Although, nevertheless; ஆனாலும் 2. Either . . .or; ஆவது பத்தாயினும் எட்டாயினுங் கொடு 3. And;உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல் (சிலப்.1, 14, உரை )
ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.
வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள
அவர் - avar pron. 1. Pl. of அவன் orஅவள். 2. That person, honorific; ஒருவரைக்குறிக்கும் பன்மைச் சொல்
அளிக்குமாறு - அளிக்கும்
முழுப்பொருள்
தலைவனிடத்தில் எந்த தவறும் இல்லை என்று தெரிந்தும் தலைவிக்கு தலைவனிடத்தில் ஊடல் செய்யவேண்டும் என்று ஆசையாம். ஏனெனில் ஊடலின் பயன்கள் அப்படி. இது பொய் பிணக்கு என்றாலும் தலைவியின் மீது உள்ள காதலினால் தலைவன் காதலியை வர்ணித்தோ, ஆசை வார்த்தைகள் பேசியோ, இயற்கை எழிலாடும் இடங்களுக்கு கூட்டிச்சென்றோ காதலின் கோபத்தை (ஊடலை) தணிக்க இப்படி பலவழிகளில் முயற்சிசெய்வான்.
இதை காணும் தலைவி தன் தலைவர் தனக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்கும் பொழுதும், தன் தலைவர் தன் மீது எவ்வளவு அன்புக்கொண்டு உள்ளார் என்று உணரும் பொழுதும், தவறே தன் மீது இல்லாத பொழுதும் தலைவர் அதனை கருத்தில் கொள்ளாது தலைவியிடம் ஊடலை தணித்து கூட வேண்டும் என்று எண்ணுகிறாரே என்று நினைத்தும் தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். இதுவே ஊடலுக்கு தலைவனின் பதில்.
இந்த ஊடலில்பின் அவர்கள் கூடல் கொள்ளும் பொழுது அடையும் இன்பமானது இயல்பைவிட அதிகமாய் உள்ளது. ஊடலில் பின் கூடலின் சுவையே தனி. அதனால் ஊடல் செய்கிறாள் தலைவி.
ஆதலால் ஊடல் செய்வீர்!
(சேதுபதி திரைப்படத்தில் கதாநாயகி ரம்யா நம்பீசன் கதாநாயகன் விஜய் சேதுபதியின் கோபம்(ஊடல்) ஆக இருப்பால். அப்பொழுது தலைவன் தன் காலில் விழுவதை இன்புற்று ரசிப்பதை ஒரு அழகான எடுத்துக்காட்டாக இங்கு நினைவுக்கூறுகிறேன்)
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”.....................துனிபடர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்புசேண் அகல நீந்திப்
புலவி யுணர்த்தல் வண்மை யானே” (நற் 217:6-9)
பரிமேலழகர் உரை
[அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).
மணக்குடவர் உரை
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா உரை
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
No comments:
Post a Comment