பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

 

குறள் 839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பெரிது -  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதையார் - அறிவில்லாதவர்கள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

பிரிவின் - பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பீழை - துன்பம்

தருவது - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மெல்லிய நய்யாண்டியை பொதிந்து வைத்துள்ள குறள் இது. அறிவில்லாத மூடர்களுடன் நட்பு உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவிதத்தில் மிகவும் நன்மைவாய்ந்தது இனிமையானதும் கூட. ஏனெனில் அந்நட்பு முறிந்தாலோ அல்லது அந்நட்பை விட்டுப் பிரிந்தாலோ நமக்கு வருத்தம் என ஏதுமில்லை. ஆதலால் அது இனிமையானது. அகத்தால் கொள்ளும் நட்பே பிரிவின் போது வருத்தை தரும். ஆனால் இதுவோ பேதையார் உடன் கொண்ட நட்பு முகத்தால்  மட்டும் கொண்ட நட்பாகும். ஆதலால் வருத்தம் இருக்காது.

இதில் என்ன நய்யாண்டி? பேதையாரை அறிவுள்ளோர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். பேதையரின் பிரிவிற்கு வருந்த மாட்டார்கள். அவர்களை பயனற்றவர்களாகவே கருதுவார்கள். பேதையர்கள் பூமிக்கு ஒரு வித பாரமே. பேதையர்களால் எவ்வித பயனும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது இக்குறள். 

அப்படியெனில் ஏன் அவர்களுடன் நட்புக்கொள்ள வேண்டும். சில சமயம் சில சூழ்நிலைகளில் பேதையர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள நேரிடும். அதனை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அந்நட்பை நினைத்து வருந்தாதே இதனால் உனக்கு ஒரு இழப்பும் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். பேதையருடன் கொள்ளும் நட்பு பல நேரங்களில் இக்கட்டுகளை உருவாக்கும். எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. அது தாமாகவே முறியும் போது, அதைவிட மகிழ்வைத் தருவது எதுவுமில்லை. அதன்காரணமாகவே பேதையர் நட்பு பெரிதும் இனிமையானது எனப்படுகிறது. அது தானாக முறியும் இயல்பினது என்றும் உணர்த்தப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

 

குறள் 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
மையல் - :maiyal   n. மை-. 1. Infatuationof love; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 2.Madness; பித்து. மைய லொருவன் களித்தற்றால்(குறள், 838). 3. Overwhelming pride, due torank, wealth, etc.; செல்வம் முதலியவற்றால் வரும்செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 4.Must of an elephant; யானையின் மதம். வேழமையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 5.Purple stramony. See கருவூமத்தை. (மலை.)

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

களித்தற்றால் - போதை கொள்ள கள்ளைக் குடித்தாற்போல்

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
மயக்கத்தில் உள்ளவன் அல்லது பித்துப்பிடித்த ஒருவன் எதையும் நிதானத்துடன் சுயநினைவில் செய்ய முடியாத நிலையில் இருப்பான். அத்தகையவன் எதையும் சரிவர செய்ய முடியாது. அவன் மயக்கத்தைத் தரும் சோர்வைத் தரும் கள்ளை (மதுவை) உண்டால் கேட்கவே வேண்டாம். அவன் செய்பவை கெடுதலையும் அழிவையும் தரும். 

ஆதலால் அறிவில்லாதவன் ஒரு பொருளை பெறுவது என்பது பித்துப்பிடித்தவன் கள் உண்டு கேடு விளைவிப்பதுப் போல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் ஆக்கமுள்ள பயனை பெறுவது என்பது எட்டாத கனியாகவே இருக்கும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.

மு.வரதராசனார் உரை
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

 

குறள் 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
பகை - எதிர்,  எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆம் - ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

வருங்கால் - வரும் பொழுது

முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

நட்டு - உப்புக்கொட்டிவைக்கும்மேடை; நாட்டியம்; காண்க:நட்டுவன், நாட்டியக்காரன்; கீழ்மை; சரிநடு; நட்டம்.

நடுதல் - ஊன்றுதல்; வைத்தல்; நிலைநிறுத்துதல்.

முக நட்டு – முகத்தளவில் மட்டும் நட்பைக் காட்டி

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஒரீஇ -
ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
பகைவர் நம்மிடம் நட்பாக பேசினால் அப்பகைவர் இடத்தில் எவ்வாறு நட்புப் பாராட்ட வேண்டும்? 
பகைவர் ஏன் நம்மிடம் நட்புபாராட்டுகிறார் என்ற கேள்விக்கான பதிலை நாம் கண்டிப்பாய் ஆராயவேண்டும். அவரது தவறுகளை அவர் உணர்ந்தாரா? நம்மை வஞ்சிக்க ஏதாவது குழிபறிக்கிறாரா? அல்லது பிற்காலத்தில் மனம் மாறி மறுபடியும் பகைவராக மாறுவாரா? ஆனால் இதனை அறிய சிலகாலம் எடுக்கும்.  பச்சோந்திகள் நிறம் மாறுவதுப்போல பகைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால் நாம் எக்காலமும் எச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லது. ஆதலால் பகைவரிடம் முகத்தளவில் சிரித்துப் பேசி மகிழ்ந்து அகத்தால் நட்பல்லாமல் விலகி இருப்பதே நல்லது. 

நட்பு அதிகாரத்தில் “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று நட்பை இனம் காட்டும் வழியைச் சொல்லிவிட்டு இந்த குறளில், அகத்தளவில் கொள்ளாது முகத்தளவில் நட்பை பகைவரிடம் காட்டவேண்டும் என்கிறார் வள்ளுவர். 

கம்பரின் இராமாவதாரத்தில், கிட்கிந்தா காண்டத்தில், அரசியல் படலத்தில் வரும் பாடலொன்றில் இவ்வாறு கூறுகிறார். படிப்பதற்கு எளிதாகப் சொற்களைப் பிரித்தே கொடுக்கப்படுகிறது.

“புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர் வினயமும் வேண்டற் பாற்றே;
பகையுடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்கு, நாவால்” (கம்ப.அரசியல்.29)

அதாவது, இவ்வுலகம், ஓரிடத்தில் புகை இருக்குமானால், அங்கு கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு உண்டு என்று ஊகித்து அறிகின்ற கருதறிவினைக் (inference) கொண்டது. ஆனால், அதனோடு நூல் வல்லோர் கூறிய சூழ்ச்சியறிவும் அரசாள்பவருக்கு வேண்டும். பகைமை உடையாரிடத்தும், அவரவர்க்கு ஏற்றார்போல், பயன் தருவதாக, அவர்தம் இயல்பறிந்து, தம் பண்பும் மாறாது, மலர்ந்த இன் சிரிப்புடைய முகமு, இன் சொற்களையும் சொல்வாயாக. இதனால் நல்லவர்க்கு நல்லவராய், பகைவர்க்கு, அவரை அடக்குவதற்கு நல்லவர்போன்று இருக்கவேண்டியது உணர்த்தப்படுகிறது. காலம் அறிதல் அதிகாரத்தில், ஏற்கனவே இக்குறளை ஒட்டிய கருத்தை இவ்வாறு கூறியுள்ளார். பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல் “பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர் ஒள்ளியவர். (காலம் அறிதல் – 487)”;

தமிழ் அகராதியில் பகைவர் என்பதைக் குறிக்க நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இகழுநர் என்பது ஒன்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.

மு.வரதராசனார் உரை
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

 

குறள் 829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
மிகச் - Very much; abundantly; மிகவும்; பெரிய; ஓர்உவமவுருபு
மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

எள்ளுவாரை - எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

நகச் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

நட்பினுள் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

சாப் - சாதல் - இறத்தல்

புல்லம் - எருது; இடபராசி; வசைமொழி; மலர்
புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புல்லற்பாற்று  - அவரோடு ஒட்டி ஒழுகுக (புல்லுதல் – நட்புறவாய் ஒட்டிக்கொள்ளுதல்)

முழுப்பொருள்
ஒரு சிலர் நம்மிடம் நெருக்கமாய் இருப்பதுப்போல் சிரித்து மகிழ்ந்து பேசுவர் விழாக்களில் இணங்குவர் முகஸ்துதி செய்வர் அகத்தில் அழிக்கும் எண்ணம் கொள்வர். ஆனால் உள்ளூர நம்மை இகழுவர். அவர்களை இனம் கண்டுக்கொண்டு, அவர்களிடம் அவர்கள் செய்வதுப்போலவே சிரித்து பேசி மகிழ்ந்து, நட்பை மனதில் அழித்துவிட்டு, அவர்களிடம் இணங்கி இரு. நாம் அவர்களை நம்பியதாக அவர்களை நம்பவைத்துவிடு. தக்க சமயத்தில் அவசியம் ஏற்பட்டால் தண்டித்துவிடலாம். அதுவே அவர்களுக்கு தண்டனை.

ஏன் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் எல்லா இடங்களிலும் நாம் நேர்மையாக இருந்துவிட முடியாது. சில இடங்களில் அது துவேஷத்தை வளர்த்து நமக்கு வெளிப்படையாகவே பல இன்னல்களை கொடுக்கும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறு. நாம் அவர்களை நம்பவில்லை என்று சொன்னால் உடனே அழுகை சிந்தி நாடகம் ஆடுவர் அல்லது நம்மை ஏசுவர். ஆதலால் இந்த நாடகத்தினை எல்லாம் பார்க்காமல் அந்நாடகத்தில் நாமும் ஒரு கதாபாத்திரமாகவே நடித்துவிட்டால் நாடகமும் சுமூகமாய் செல்லும். 

அதாவது வஞ்சகரை வஞ்சகம் செய்து வஞ்சிப்பதே தண்டிப்பது என்பது இக்குறளின் அடிநிலைக் கருத்து. ஆனால் வள்ளுவரே “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்றும் கூறியிருப்பதையும், ஒளவை சொன்ன, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்” என்பதையும் ஒப்பு நோக்கும்போது, கீதையில் கண்ணன் சொன்னது போல தருமத்தின் பாதை மிகவும் சிக்கலானது. வெவ்வேறு நேரங்களில் அது இடம், பொருள் இவற்றுக்கேற்ப மாறும் போலும். சாணக்ய நீதி சொல்லுவதுபோல், இக்குறள், “பகையை உறவாடிக் கெடு” என்கிறது. இதை இருவிதமாகக் கொள்ளலாம். அன்பின் வழி நின்று பகையை மாற்று என்றும், அல்லது அழி என்றும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. ('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5) ¢என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.).

மணக்குடவர் உரை
பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மையிகழும் பகைவரைத் தாமும் அந்நட்பின்கண்ணே நின்று, புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணஞ் செய்து, அகத்தின்கண் அது சாம் வண்ணம் பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி.

மு.வரதராசனார் உரை
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

 

குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
தொழுத - தொழுதல் - வணங்கல்

கையுள்ளும் - கைக்குள்ளும் 

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

ஒடுங்கும் - ஒடுங்குதல் - அடங்குதல்; குறைதல்; சுருங்குதல்; குவிதல்; சோர்தல்; கீழ்ப்படிதல்; பதுங்கல்; ஒதுங்குதல்; ஒளிமங்குதல்.

ஒன்னார் - பகைவர் 

அழுத - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.

கண்ணீரும்கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைய - அத்தன்மையான; ஒத்த. -

முழுப்பொருள்
பகைவர் இரு கைக்கூப்பி தொழும் பொழுது உயிரக்கொல்லும் ஆயுதம் அடங்கி ஒடுங்கி அக்கைகளுக்குள்ளே இருக்கக்கூடும். பகைவர் வணங்குகையில் கூட நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். பூவுக்குள்ளும் பூநாகம் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

அதுப்போல சில கூடா நட்புகளின் / உறவுகளின் கண்ணீர் சிந்தும் அழுகைக்குள்ளும் நம்மை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதம் ஒரு தந்திரம் ஒரு திட்டம் ஓரு சூழ்ச்சி இருக்கக்கூடும் என்றென்பதை நினைவில் கொள்க. அத்தையோரிடம் இருந்து (மனதளவிலாவது) விலகி நிற்க. அவர்களை நம்ப வேண்டாம்.

இன்றைய காலங்களில் குறிப்பாக சில உறவுகளிடம் இது அதிகமாய் இருக்கக்கூடும். தன்னை நியாயமாக காட்டிக்கொள்ள தன்மீது தவறே இல்லை, அடுத்தவர்மீது தான் தவறு, தன்மீது வீண்பழி சுமத்துகிறார் என்றெல்லாம் அழுவர். சிலர் சில (நிதி) உபாயங்கள் பெறவேண்டி தான் செய்த தவறு எல்லாவற்றையும் அறியாமையால் செய்துவிட்டேன் என்றும், தன்னை மன்னித்துவிடு என்றும், எனக்கு உன்னைவிட்டால் வேறு யாருமில்லை என்றும் அழுகை சிந்தி நம்மை நம்பவைப்பர். ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் செய்கையில் ஒருவித மாற்றமும் இருக்காது எனதை அறியலாம். ஆதலால் அவர்களை எச்சரிக்கையுடன் எதிர்கொள்க. 

புறநானூற்று (10:1) வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின் உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது. சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.

“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே” (சீவக.1891)

பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¤யற்க'' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.

மு.வரதராசனார் உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

 

குறள் 820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
எனைத்தும் - எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு

குறுகுதல் - குள்ளமாதல்; சிறுகுதல்; மாத்திரைகுறைதல்; அணுகுதல்.

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

மனைக் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

கெழீஇ - கெழுவு -. பொருந்த, நிறைய
கெழீஇ - நட்பாடி இருந்துவிட்டு

மன்றில் - மன்றம் -  அவை:கழகம்; வழக்குமன்றம்; ஊருக்குநடுவாயுள்ளமரத்தடிப்பொதுவிடம்; காண்க:செண்டுவெளி; வெளியிடம்; போர்க்களப்பரப்பின்நடுவிடம்; சிதம்பரம்; வீடு; பசுவின்தொழுவம்; நெடுந்தெரு; மெய்ம்மை; உறுதி; மணம்.

பழிப்பார் - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
சிலர் நம்முடன் நமது வீட்டில் நட்புறவாடுவர் பொருந்திப்பேசுவர். நம்மை நெகிழவைப்பர். (நம்மிடம் காரியமும் சாதித்துக்கொள்வர்). ஆனால் ஒரு பொதுவெளியில், பலர் கூடியுள்ள சபைதனில் நம்மை இகழுவர். எள்ளுவர். நம்மை நகைப்புக்குரிய பொருளாக சித்தரிபர். நமது செயல்களையும் எண்ணங்களையும் சிறுமை செய்வர். (நண்பர்களுடன் மட்டும் கூடிய சந்திப்புகளில் வரம்புக்குள் கேலிசெய்துகொள்வது வேறு). அத்தகையோருடன் நட்பு சிறிதாயினும் அவர்களை சீர்தூக்கிப்பார்த்து அவர்களிடம் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தீய நட்பை தவிர்த்துவிட வேண்டும். அவர்களை நம்மிடம் அணுகவிடக்கூடாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. (மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க. இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

 

குறள் 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
கனவினும் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.

இன்னாது - தீது; துன்பு

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

வேறுபடுதல் - வேறாதல் - பிரிதல்; மாறுபடுதல்; மனம்மாறுபடுதல்; முன்னையதன்மைகுலைதல்; சிறப்புடையதாதல்; ஒதுக்காதல்; தனியாதல்.

வேறுபட்டார் -  வேறாய் இருப்பவர்கள்தம்

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
சிலர் நம்மிடம் நன்றாக தேனாக இனிமையாக பேசுவர். ஆனால் அவர்கள் செயல்களோ வேறு மாதிரி இருக்கும். அவர்களின் செயல்களில் நேர்மை இருக்காது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களின் செயல்கள் நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும். அத்தகையோரின் நட்பை என்றென்றும் கொள்ளாதே ஏனெனில் அத்தகைய நட்பு கனவிலும் துன்பத்தையே தரும். கனவிலும் அவர்கள் நமது நம்பிக்கையை குலைப்பார்கள்.

சொல்லும் செயலும் இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று வலியுருத்தும் குறள் இது. இது நட்புறவுகள் என்றில்லை வணிக உறவுகளுக்கும் பொருந்தும்.  நாணயம் என்பது மிக மிக அவசியம். ஆதலால் ஒருவரின் சொற்களை செயல்களை வைத்து மதிப்பிட்டு அறிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் காலத்திற்கும் துன்பத்திற்கு வாக்கபட்டதுப்போல் ஆகிவும்.

ஒரு நாலடியார் பாடல் இக்கருத்தையே கூறுகிறது

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் – சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. (நாலடி 127)

இப்பாடலின் கருத்து: மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாமல் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்.

மேலும், உதாரணமாக என் சொந்தவாழ்க்கையில் ஒன்றை கூறலாம். நான் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு தேடிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என்னிடம் தொலைப்பேசியில் பேசிய நபர் தேனாக பேசினார். தன்னுடன் வசிப்போர் எல்லாம் மிகவும் நல்லவர்கள். இங்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. இங்கு நாங்கள் ஐந்துப் பேர் தான் வாழ்கிறோம். உங்களைப்போல் திட்டமிட்டு வாழ்வோர் தான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம் பேசினார். ஒரு நண்பர்போல் இனிமையாக பேசினார். நண்பர் என்ற உணர்வை நம்பிக்கையை கொடுத்தார். அதை நம்பி நான் அவ்வீட்டிற்கு/அவ்வறைக்கு வாடகைக்கு சென்றேன். ஆனால் அவ்வீடோ மிக மிக அவலமாய் இருந்தது. சுத்தமென்பது எங்கும் சிறிதும் இல்லை. மொத்தம் ஏழு பேர் தங்கிக்கொண்டு இருந்தனர். ஒரே ஒரு ஒன்றிணைந்த குளியலறையும் கழிவறையும் இருந்தது. யோசித்துப்ப்பாருங்கள் ஏழு பேருக்கு ஒரு குளியலறை கழிவறைஎன்றால் எவ்வளவு அவலமாக இருக்கும் என்று. அதுவும் சுத்தம் செய்யவில்லை என்றால். மேலும், வீட்டின் வாடகை சரிசமமாக வகுக்கபடவில்லை. அவ்வீட்டில் சிறிய அறையில் இருப்போரிடம் அதிகம் வாடகை வாங்கபட்டது. இப்படி சொல்லும் செயலும் வேறுவேறாக இருந்தது. ஆனால் மற்றபடி என்னுடன் போனில் பேசிய அந்த ஒருங்கிணைப்பாளர் எப்பொழுதும் தேனாக நண்பர் போல் பேசுவார். ஆனால் அவரது செயல்களோ சற்றும் நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது. அவரை என்றும் நம்ப முடியாது. (ஆதலால் அவ்வறை விட்டு நான் அடுத்த மாதமே வெளியே வந்துவிட்டுவேன்) அத்தகையோருடன் நட்பு வைத்துக்கொள்வது மிக மிக துன்பம் தரும். கனவில் நினைத்தாலும் துன்பமே. ஆதலால் அத்தகையோருடன் உறவு வைத்துக்கொள்ளாதே. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.).

மணக்குடவர் உரை
செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.