பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், பேதைமை குறள் 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்

 

குறள் 839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]

பொருள்
பெரிது -  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதையார் - அறிவில்லாதவர்கள்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

பிரிவின் - பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பீழை - துன்பம்

தருவது - தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மெல்லிய நய்யாண்டியை பொதிந்து வைத்துள்ள குறள் இது. அறிவில்லாத மூடர்களுடன் நட்பு உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவிதத்தில் மிகவும் நன்மைவாய்ந்தது இனிமையானதும் கூட. ஏனெனில் அந்நட்பு முறிந்தாலோ அல்லது அந்நட்பை விட்டுப் பிரிந்தாலோ நமக்கு வருத்தம் என ஏதுமில்லை. ஆதலால் அது இனிமையானது. அகத்தால் கொள்ளும் நட்பே பிரிவின் போது வருத்தை தரும். ஆனால் இதுவோ பேதையார் உடன் கொண்ட நட்பு முகத்தால்  மட்டும் கொண்ட நட்பாகும். ஆதலால் வருத்தம் இருக்காது.

இதில் என்ன நய்யாண்டி? பேதையாரை அறிவுள்ளோர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். பேதையரின் பிரிவிற்கு வருந்த மாட்டார்கள். அவர்களை பயனற்றவர்களாகவே கருதுவார்கள். பேதையர்கள் பூமிக்கு ஒரு வித பாரமே. பேதையர்களால் எவ்வித பயனும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது இக்குறள். 

அப்படியெனில் ஏன் அவர்களுடன் நட்புக்கொள்ள வேண்டும். சில சமயம் சில சூழ்நிலைகளில் பேதையர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள நேரிடும். அதனை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அந்நட்பை நினைத்து வருந்தாதே இதனால் உனக்கு ஒரு இழப்பும் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். பேதையருடன் கொள்ளும் நட்பு பல நேரங்களில் இக்கட்டுகளை உருவாக்கும். எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. அது தாமாகவே முறியும் போது, அதைவிட மகிழ்வைத் தருவது எதுவுமில்லை. அதன்காரணமாகவே பேதையர் நட்பு பெரிதும் இனிமையானது எனப்படுகிறது. அது தானாக முறியும் இயல்பினது என்றும் உணர்த்தப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain