குறள் 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
பொருள்
மையல் - :maiyal n. மை-. 1. Infatuationof love; காமமயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந்தானே யென்னும் (திவ். திருவாய். 7, 2, 6). 2.Madness; பித்து. மைய லொருவன் களித்தற்றால்(குறள், 838). 3. Overwhelming pride, due torank, wealth, etc.; செல்வம் முதலியவற்றால் வரும்செருக்கு. மையல் . . . மன்னன் (சீவக. 589). 4.Must of an elephant; யானையின் மதம். வேழமையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37, 232). 5.Purple stramony. See கருவூமத்தை. (மலை.)
ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.
களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - (உணவின்) தன்மை அறிந்து
களித்தற்றால் - போதை கொள்ள கள்ளைக் குடித்தாற்போல்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
முழுப்பொருள்
மயக்கத்தில் உள்ளவன் அல்லது பித்துப்பிடித்த ஒருவன் எதையும் நிதானத்துடன் சுயநினைவில் செய்ய முடியாத நிலையில் இருப்பான். அத்தகையவன் எதையும் சரிவர செய்ய முடியாது. அவன் மயக்கத்தைத் தரும் சோர்வைத் தரும் கள்ளை (மதுவை) உண்டால் கேட்கவே வேண்டாம். அவன் செய்பவை கெடுதலையும் அழிவையும் தரும்.
ஆதலால் அறிவில்லாதவன் ஒரு பொருளை பெறுவது என்பது பித்துப்பிடித்தவன் கள் உண்டு கேடு விளைவிப்பதுப் போல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் ஆக்கமுள்ள பயனை பெறுவது என்பது எட்டாத கனியாகவே இருக்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.
மு.வரதராசனார் உரை
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
No comments:
Post a Comment