Wednesday, October 14, 2020

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

 

குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
தஞ்சம் - எளிது; தாழ்வு; எளிமை; பற்றுக்கோடு; அடைக்கலப்பொருள்; உறுதி; பெருமை.

தமர்  - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

தமர்  - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

அல்வழி - நெறிஅல்லாதநெறி; தகாதவழி; அல்வழிப்புணர்ச்சி

முழுப்பொருள்
என்னுடைய நெஞ்சமே நெறிக்குப்புறம்பாக எனக்கு அணுக்கமாக இல்லை. அப்படி இருக்கையில் நான் விரும்புவர் என்னுடன் பற்றுடன் இருக்கவேண்டியவர் எப்படி அணுக்கமாக இருப்பார்? 

ஆதலால், என் நெஞ்சமே எனக்கு அணுக்கமாக இல்லாத பொழுது என் தலைவர் அந்நியரைப்போல் எனக்கு அணுக்கமாக இல்லாமல் இருப்பதை எளிதாக உணர்ந்துக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.).

மணக்குடவர் உரை
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?.

மு.வரதராசனார் உரை
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

 

குறள் 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
துன்பத்திற்கு - துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

யாரே - யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

ஆவார் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 300, சங்கர.)

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

அல்வழி - நெறிஅல்லாதநெறி; தகாதவழி; அல்வழிப்புணர்ச்சி

முழுப்பொருள்
தலைவனை விரும்புவதற்கு தலைவியின் நெஞ்சமே காரணம். அப்பொழுது நெஞ்சம் துணைப்புரிந்தது. இப்பொழுது தலைவனை பிரிந்துள்ள பொழுது பிரிவாற்றாமை தரும் துன்பத்திற்கு ஆறுதலாக துணையாக இருக்கவேண்டியது (காதலுக்கு துணைப்புரிந்த) நெஞ்சம். ஆனால் இந்நெஞ்சோ பிரிந்து சென்ற தலைவனை நினைத்துக்கொண்டு இருக்கிறது. 

அதனால் தலைவி கேட்கிறாள், (இன்பத்தில் துணையாக இருந்த) நெஞ்சே!!, இப்பொழுது துன்பத்தில் துணையாக இருக்கவேண்டிய நீயே துணையாக இல்லாவிட்டால் வேறு யார் வந்து எனக்கு துணையாக இருப்பார்கள்? என் துணைக்கு வழி என்ன? சொல் நெஞ்சமே சொல். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.).

மணக்குடவர் உரை
துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து. இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது

மு.வரதராசனார் உரை
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

சாலமன் பாப்பையா உரை
ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

 

குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] 

பொருள்
நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

மறந்தேன் - மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

அல்லா - வருத்தம்; மகமதியர்வழிபடும்கடவுளின்பெயர்.

மறக்கல்லா  -  மறக்க முடியாமல்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மாணார் - மாட்சிமையற்ற பகைவர்.

மாணா - மாட்சியற்று, பகை

மட - மடமை - பேதைமை

நெஞ்சின் -நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

பட்டு - பட்டாடை; பட்டுப்பூச்சியால்உண்டாகும்நூல்; கோணிப்பட்டை; சிற்றூர்; இருந்தேத்தும்மாகதர்; கட்டியம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
மறக்கக்கூடாத பெண்ணின் நாற்பண்புகளில் ஒன்றான நாணத்தையும் மறந்துவிட்டேன். எதனால்? என்னுடைய மாட்சிமையற்ற பேதை நெஞ்சினால். எப்படி? தலைவனின் பிரிவினால்  அவரை மறக்காமல் வாடிக்கொண்டு இருப்பது என்னவோ நானும் என் நெஞ்சுமும். ஆனால் தலைவனை கண்ட மாத்திரத்தில் என் பேதை நெஞ்சு அடக்கமற்று மன உறுதியற்று அவரை தழுவ என்னை அவருடன் கூட வைத்தது. நாணத்தை மறந்து அவருடன் ஊடாமல் கூடினேன் என்று கூறுகிறாள் தலைவி. 

தலைவனை கண்ட உடன் கூட நினைத்ததால் அவள் நெஞ்சு மாட்சிமையற்றது எனவும், அடக்கமற்றும் மன உறுதியற்றும் கண்ட உடனே கூடியதால் நாணம் மறந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.) .

மணக்குடவர் உரை
என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

சாலமன் பாப்பையா உரை
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

 

குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
இளி-த்தல் - iḷi-   11 v. cf. இளி¹-. [M. iḷi.]tr. 1. To disgrace, condemn; அவமதித்தல் (W.) 2. To laugh, scorn, ridicule; பரிகசித்தல்.(W.)--intr. To grin; to show the teeth, as incringing or in craving servilely; பல்லைக் காட்டுதல் 

தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.

இளித்தக்க -  இழிவைத் தரக்கூடிய

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

செயினும் - செய்தாலும் 

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்

களித்தார்க்குக் - கள்ளுண்டு தற்காலிகமாகவாது கவலை மறந்து மகிழ்ந்திருந்தார்க்கு

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

அற்றேல் - அப்படியானால்

அற்றே - அப்படியானால்

கள்வ - கள்வம் - திருட்டுச்செயல்; கவர்ச்சியுள்ளது.

நின் - உனது

மார்பு - நெஞ்சு; முலை; வடிம்பு; தடாகம்; அகலம்; கருப்பூரவகை; நான்குமுழஅளவுள்ளநீட்டலளவை.

முழுப்பொருள்
உண்பவர்க்கு மகிழ்ச்சியை தருவது கள். ஆனால் அது தற்காலிகமான மகிழ்ச்சியே. கள் உண்டதற்காக இவ்வூர் மக்கள் அவமதிப்பர். ஆக மொத்தம் கள்ளினால் பெற்ற தற்காலிக மகிழ்ச்சியைவிட பெற்ற இகழ்ச்சியே அதிகம். ஆயினும் கள்ளுண்பவர் இகழ்ச்சிக்குப் பின்னரும் கள்ளை நாடியே செல்கிறார்.

முன்னர் குறிப்பிட்டதுப்போல் கள்ளை பற்றி கூறிய தலைவி இப்பொழுது தனது தலைவனின் மார்பை கள்ளுடன் ஒப்பிடுகிறாள். அதாவது அவள் விரும்பிய தலைவனின் மார்பில் சாய்ந்து இன்பத்தை பெற்றாள். ஆனால் பிரிந்து சென்ற உடன் தலைவன் இல்லாமல் துன்பத்தில் வாடி இவ்வூராரின் ஏசுதலைப் பெற்றாளாம். 

ஆயினும் ம்கிழ்ச்சியை பெற்ற கள்ளுண்டோர் பின்பு இகழ்ச்சியைப் பெற்றாலும் கள்ளை நாடுவதைபோல், தான் விரும்பிய தலைவனுடன் கூடல் இன்பத்தை பெற்ற தலைவி, பிரிவின் துன்பத்தில் வாடியப்பிறகும் கூட, தலைவனின் மார்பையே நாடுகிறாள் அவனுடன் முயங்க. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு” (குறுந்:165:1)
“நோயும் இன்பமும் ஆகின்றது மாதோ
....................................................
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே” (நற்.294:2-9)

பரிமேலழகர் உரை
(தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு. (அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.).

மணக்குடவர் உரை
பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

சாலமன் பாப்பையா உரை
இந்த வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

 

குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்
காணுங்கால் - காணும் பொழுது

காணேன் - காணவில்லை 

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

ஆய - ஆகும்

காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது

காணேன் - காணவில்லை  

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.

அல்லவை -  தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை

முழுப்பொருள்
என் அன்பிற்கு இனிய தலைவனை காணும் பொழுது அவரது தவறுகளை நான் காண்பதில்லை. தவறுகள் இருப்பினும் என் கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஆனால் அவர் என்னை பிரிந்து சென்றுள்ள பொழுது, அவரை நான் காணாத பொழுது அவரது தவறுகள் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்று தனது சிக்கலை கூறுகிறாள் தலைவி. 

கூடி இருக்கும் பொழுது அவர் வருங்காலத்தில் பிரிந்து செல்லக்கூடும் என்ற அவரது தவறை அவள் காணவில்லை. அதுவே பிரிந்துள்ள பொழுது, கடந்தகாலத்தில் சேர்ந்திருந்த பொழுது தலைவன் செலுத்திய அன்பு எல்லாம் இப்பொழுது தெரியவில்லையாம். நாளை வந்து அன்பு செலுத்தக்கூடும் என்று கூட தோன்றவில்லையாம். இப்பொழுது அன்பு செலுத்தவில்லை என்ற தவறு மட்டும் தெரிகிறதாம். 

இது மிகுந்த அன்பின் காரணமாக வருவது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே முத்தொள்ளாயிரத்தினின்றும், கலிங்கத்துப் பரணியினின்றும் இக்குறளை ஒட்டிய பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவையாவன:

“மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால்
பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன் பிறந்தநான்” (முத்தொள்ளாயிரம்)

“பேணும் கொழுநர் பிழைகள் எல்லாம்
பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனபொற் கபாடம் திறமினோ” (கலிங்கத்துப் பரணி 65)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

மு.வரதராசனார் உரை
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

 

குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.

பாய்தல் - தாவுதல்; நீர்முதலியனவேகமாய்ச்செல்லுதல்; மேல்நின்றுகுதித்தல்; நீருள்மூழ்குதல்; எதிர்செல்லுதல்; பரவுதல்; வரைந்துபடிதல்; விரைந்தோடுதல்; தாக்குதல்; விரைவுபடுதல்; அகங்கரித்தல்; மடிப்புவிரிதல்; கூத்தாடுதல்; ஓடிப்போதல்; தாக்கிப்பேசுதல்; குத்துதல்; வெட்டுதல்; முட்டுதல்.

பாய்பவரேபோல் -  பாய்பவரைப்போல; தாவுபவர் போல

பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல்; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல்

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.


முழுப்பொருள்
ஓடும் ஆற்றில் பாய்ந்தால் அது நம்மை அமிழ்த்தி கொண்டு செல்லும். அதனை அறிந்திருந்தும் ஆற்றில் பாய்பவர்போல் சிலர் உள்ளனர். யார் அது? 

தலைவனின் பிரிவால் வாடும் தலைவி தலைவன் வந்த உடன் பிரிவாற்றாமையை காரணம் காட்டி ஊடல் செய்யவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் அப்படியே ஊடினாலும் இறுதியில் ஊடலில் இருந்து பின்வாங்க நேரிடும் என்பதை அறிவாளாம் தலைவி. பொய்யாக ஊடி பின்பு பின்வாங்கி தலைவனுடன் கூடுவாள் தலைவி. 

இதைத் தான் திருவள்ளுவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். ஆறு அமிழ்த்துக்கொண்டுச் செல்லும் என அறிந்தும் ஆற்றில் பாய்பவர்ப் போல, பிரிவின் பின் வந்து சேர்ந்த தலைவனுடன் ஊடினாலும் இறுதியில் கூடல் தான் நிகழும் என அறிந்தும் எதற்கு தலைவி பொய்யாக ஊடவேண்டும்?

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).

மணக்குடவர் உரை
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

 

குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
பெண் - மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

பெண்ணினான் - பெண்ணினால் – பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்)

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

கண்ணினான் - தம்முடைய கண்ணசைவாலேயே

காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

காமநோய் - s. Love-sickness, மதன நோய்.

சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை

முழுப்பொருள்
ஒரு பெண்ணாலே தனக்கு பெண்மை இருக்கிறது என்பதை உணர்த்த முடியும். எப்படி? தலைவன் பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவியின் கண்களை பார்த்தாலே அவள் காமநோயாம் பசலைநோயை கொண்டு இருக்கிறாள் என்பதை மற்றவர்களால் அறிந்துணர முடியும். மேலும், என்னைவிட்டு பிரிந்து செல்லாதீர் என்று தலைவனுக்கு கண்களாலேயே குறிப்பறிவுறுத்த முடியும் எனில் அதுவே எப்பெண்ணிற்கு பெண்மை இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...