குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]
பொருள்
கால் - ஒருவினையெச்சவிகுதி
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல்
காணுங்கால் - காணும் பொழுது
காணேன் - காணவில்லை
தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.
ஆய - ஆகும்
காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது
காணேன் - காணவில்லை
தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு.
அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை
முழுப்பொருள்
என் அன்பிற்கு இனிய தலைவனை காணும் பொழுது அவரது தவறுகளை நான் காண்பதில்லை. தவறுகள் இருப்பினும் என் கண்களுக்கு அவை தெரிவதில்லை. ஆனால் அவர் என்னை பிரிந்து சென்றுள்ள பொழுது, அவரை நான் காணாத பொழுது அவரது தவறுகள் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்று தனது சிக்கலை கூறுகிறாள் தலைவி.
கூடி இருக்கும் பொழுது அவர் வருங்காலத்தில் பிரிந்து செல்லக்கூடும் என்ற அவரது தவறை அவள் காணவில்லை. அதுவே பிரிந்துள்ள பொழுது, கடந்தகாலத்தில் சேர்ந்திருந்த பொழுது தலைவன் செலுத்திய அன்பு எல்லாம் இப்பொழுது தெரியவில்லையாம். நாளை வந்து அன்பு செலுத்தக்கூடும் என்று கூட தோன்றவில்லையாம். இப்பொழுது அன்பு செலுத்தவில்லை என்ற தவறு மட்டும் தெரிகிறதாம்.
இது மிகுந்த அன்பின் காரணமாக வருவது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே முத்தொள்ளாயிரத்தினின்றும், கலிங்கத்துப் பரணியினின்றும் இக்குறளை ஒட்டிய பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவையாவன:
“மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால்
பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன் பிறந்தநான்” (முத்தொள்ளாயிரம்)
“பேணும் கொழுநர் பிழைகள் எல்லாம்
பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனபொற் கபாடம் திறமினோ” (கலிங்கத்துப் பரணி 65)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.).
மணக்குடவர் உரை
அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
மு.வரதராசனார் உரை
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
No comments:
Post a Comment