Friday, April 24, 2020

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

குறள் 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

ஒறுத்தார்க்கு - தண்டித்தவர்க்கு ; கடிந்தவர்க்கு ; இகழ்ந்தவர்க்கு

ஒருஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

நாளை அடுத்ததினத்தில்; நாளுக்குரிய.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

பொறுத்தார்க்குப் - பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்

பொன்றும் - பொன்று  - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வைமுதலியனகுறைதல்

துணையும் - துணைஅளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

முழுப்பொருள்
ஒருவர் நமக்கு தீமை செய்தால் அவரை தண்டித்தாலோ அல்லது இகழ்ந்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ நமக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சமாக அவனை தண்டித்தமைக்கான இன்பம் அன்று ஒரு நாள் மட்டும் மனதில் இருக்கும். ஆனால் அது பொய்யின்பம். புகழும் குன்றும். 

ஆனால் அத்தீமையை பொறுத்தாருக்கு (மன்னித்து தண்டிக்காதவருக்கு) என்றும் அழியாத அளவிற்கான புகழ் கிட்டும். பொறுத்தவரை இவ்வுலகமும் காக்கும்.

இங்கே பொறுத்தார் என்றால் மன்னித்து தண்டிக்காதவர் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மன்னிக்கவில்லை என்றால் நாம் அச்சிறையில் இருப்போம். அதில் இருந்து விடுதலை இல்லை. துன்பமே. ஆதலால் அவரை மன்னித்து தண்டிக்காமல் இருந்தால் நமக்கு இன்றும் என்றும் நிம்மதியும் பிற்காலத்தில் நமக்கு புகழும் கிட்டும். பொறுத்தவரை இவ்வுலகம் காக்கும்.

உதாரணமாக அஹிம்சையை பின்பற்றுகின்ற நாடுகளை இவ்வுலகம் போற்றும். அவசியமெனில் அவர்கள் பக்கம் வந்து அவர்களுக்கு துணையாக நிற்கும்.

ஒப்புமை
”கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால்” (பழ 19)

மேலும்: அஷோக் உரை

கவிதைகள்
பொறுமை என்பது 
இன்பத்தின் திறவுகோல் ! 
அறிவின் கையும் காலும் 
அதுதான் !
இறைத்தூதர்களின் 
பலமும் ஒளியும் 
அதுதான் ! 
காற்றடித்தால் மலையாடுமா? 
அடிக்கும் காற்றுக்கெல்லாம் ஆடினால் 
அது வைக்கோல் !
- ஒரு சூஃபி கவிதை, மஸ்னவி


பரிமேலழகர் உரை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது].

மணக்குடவர் உரை
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தண்டித்தால் அப்போது மகிழ்ச்சி. மன்னித்தால் என்றும் புகழ்.

Thirukkural - Management - Tolerance
A person who punishes the person who has created troubles to him gains temporary satisfaction by doing that. But that satisfaction lasts just for a day. On the contrary, a person who tolerates the person who has created trouble to him will have satisfaction and fame until the end of the world, convinces Kural 156.

The avenger's joy is for a day,
The forgives's fame lasts like the earth's.

The satisfaction one gains by tolerating troubles created by others is endless. A long lasting fame and respect is many times greater than a temporary satisfaction.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

பாவம் - தீவினைப்பயன்; தீச்செயல்; நரகம்; இரக்கக்குறிப்பு; உளதாந்தன்மை; முறைமை; தியானம்; எண்ணம்; அபிநயம்; விளையாட்டு; நிலைதடுமாற்றம்; ஆத்துமாவிடம்உண்டாகும்பரிணாமவிசேடம்; இயக்கம்.

அச்சம் - பயம்; மகளிர்நாற்குணத்துள்ஒன்று; தகடு இலேசு அகத்திமரம்; சரிசமானம் பளிங்கு

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

என  - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

நான்கும் - நான்கு - மூன்றுக்குமேல்ஒன்றுகொண்டஎண்; நாலில்ஒருபங்கு; வட்டிக்காகச்சேர்த்துஅறுவடையானதும்கொடுப்பதாகச்சம்மதித்துப்பெறும்தானியக்கடன்.

இக-த்தல் - ika-   12 v. tr. 1. To leap over,jump over; தாண்டுதல் (திவா.) 2. To over-flow, go beyond; கடத்தல் வரம்பிகந்தோடி (கம்பரா. நாட். 9). 3. To transgress, violate, deviatefrom a rule or justice; அதிக்கிரமித்தல். நெறியிகந்து . . . நீரலசெய்யும் (காசிக. சிவசன்மாவாயு. 28).4. To leave behind, go away from; பிரிதல் இகந்துறைவ ரேதிலர் (குறள், 1130). 5. To bear,endure; பொறுத்தல் (பிங்.)--intr. 1. To depart, go away; போதல் (திவா.) 2. To leave,put away, eradicate; நீங்குதல் முனிவிகந் துயர்ந்த(நன். சிறப்புப்.).

இகவா - நீங்காமல்

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இறப்பான் - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
பிறர் மனைவி மீது எல்லை கடந்து நடந்துக்கொண்டால் அல்லது உறவு கொண்டால் அச்செயலிற்காக நான்கு விளைவுகளை அனுபவிக்க நேரிடும். பகை (பிறரிடம் பகை), பாவம் (செய்த குற்றத்திற்கான வினைப்பயன் ஆன துன்பம் மறுமையிலும் தொடரும்),  அச்சம் (பிறர்க்கு இது தெரியுமோ அல்லது பிறர் நம்மை தாக்குவாரோ அல்ல ஊர் தூற்றுமோ என்ற அச்சம்), பழி (குற்றம் புரிந்தமைக்காக இவ்வுலகம் எந்நாளும் தூற்றும்) ஆகிய நான்கும் ஒருவனை விட்டு விலகாது. ஆதலால் பிறன் மனைவியை நோக்காதே என்கிறார் திருவள்ளுவர். 

பகை, பழி, அச்சம் ஆகியவற்றை இம்மையில் அனுபவிப்பாய், பாவம் உன்னை மறுமையிலும் தொடரும். ஆகவே நிம்மதிஅழிந்துவிடும். 

பஞ்சமா பாதகங்கள் என்றழைக்கப்படுபவற்றுள் ஒன்றான் இப்பாவம், இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் உறுத்து வாட்டும். இந்நான்கும் நிலையாக இருந்து நீங்காதுன்பமே தரும்.

நாலடியார், ஏற்கனவே சொல்லியிருந்ததுபோல், சங்ககால நீதிநெறி நூல்களில் திருக்குறளைப்போன்று பல கருத்துக்களைக்கொண்டது. பிறன்மனை விழையாமைக்குப் பத்து வெண்பாக்களைக் கொண்டது. இதில் மூன்றினைப் பார்ப்போம்.

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; – நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு. (நாலடி 84)

மேற்காணும் பாடல், பிறர்கண்டுவிட்டால் குடிக்கே பழிவரும், கையும் களவுமாகப் பிடிபட்டால் காலை ஒடித்துவிடுவார்கள், அகப்பட்டுக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் ஆண் என்று நெஞ்சை நிமிர்த்தும் அச்சமின்மையும் போகும், தவிர இச்செயலே ஆண்மையில்லாச் செயலாகும், நெடுங்காலத்துக்குத் துன்பத்தைத் தந்துவிடும், தீநெறியாளனே, இச்செயலால் நீ நுகர்ந்த இன்பம் எத்துணையென்று, இவற்றைச் சிந்தித்துப்பார்த்துச் சொல் என்று வினவுகிறது.

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார். (நாலடி 81)

இச்செயலால் அச்சம் பெருகிய வாழ்வுதான், ஆனால் அதற்கான விலையான இன்பமோ சிறிதளவே; நினைத்துப்பார்த்தால், இதற்கு அரச தண்டனையாம் கொலையே வாய்க்கும் (இன்றுகூட அரபு நாடுகளில்);  தீச்சூளை (கும்பி) நெருப்பினப் போல் நின்று சுட்டெரிக்கும்; இதனால் பிறன்மனையாளை சேருதலை பழிக்கும் பாவத்துக்கும் அஞ்சியவர் நினைந்துகூட பார்க்கமாட்டார்கள்.

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல். (நாலடி 83)

பிறன்மனையை நாடிப்போகும்போது அச்சம், அவளோடிருக்கும்போது அச்சம், சிற்றின்பச்சேர்க்கையிலும் அச்சம், இத்தீச் செயலை மற்றவர் கண்டுவிடக்கூடாதே என்று அச்சம், என்று எப்போதும் அச்சத்துக்குக்காரணமான பிறன்மனை விழையும் இழிசெயலை மட்டும் ஏன் எண்ணி வெட்கப்பட ஒருவன் நினைப்பதில்லை?

இம்மூன்றுப்பாடல்களாலும், வள்ளுவர் குறளில் காணப்படும் நான்கும் கூறப்படுவதைக் காணலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன தாயினும் ஏதில்பெண் நீக்குமின்” (வளையாபதி)

“...................பிறந்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்” (நாலடி 82)

பரிமேலழகர் உரை
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

மு.வரதராசனார் உரை
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்னொருவன் இல்லாளை விரும்பாதே. எல்லா கெடுதியும் சேரும்.

Thursday, April 23, 2020

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

உரவு - Strength, force, firmness, hardness, வலி
உரவோர் - அறிஞர் (The wise, the learned), மூத்தோர் (Persons of respectability, gravity, age, &c., chief persons)

இழுக்கத்தின் - இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

படு - (வி)படுத்துக்கொள்; விழு.

பாக்கு -  அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும்வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பாக்குக்குப்பதிலாகப்பயன்படும்பட்டையையுடையஒருசெடிவகை.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள் 
இக்குறளுக்கு எனக்கு முதலில் புரிந்துக்கொண்ட பொருள் ”முழுப்பொருள் 2” எழுதப்பட்டது தான். நான் பின்நாட்களில் மறுவாசிப்பு செய்யும் பொழுது எனக்கு ”முழுப்பொருள் 1” புலப்பட்டது. அது ஏன் என்று முழுப்பொருளில் விளக்குகிறேன்.

இரண்டு பொருள்களை கூறியுள்ளேன் என்றாலும், இரண்டு பொருள்களும் பொருந்தும். முழுப்பொருள் சற்று வேறுமாதிரியான பார்வை. 

முழுப்பொருள் 1)
வாழ்வின் விழுமியமாக கொண்டு ஒழுக்கதை நீங்காது பின்பற்றி வாழ்வோர் மனவலிமை அடைவார்கள். அந்த மனவலிமையே  / ஆத்மசக்தியே (inner strength) அவர்களை மேலும் மேலும் ஒழுக்கமாய் வாழச்செய்யும். அதுவே ஒழுக்கத்தை பேணாதவர்கள் துன்பத்தை அடைவர். 

ஒரு செயலில் /தொழிலில் ஒழுக்கமாய் இருப்பவர்கள் அதில் வலிமையடைகிறார்கள். பிற்காலத்தில் அதில் மேன்மையடைகிறார்கள். வலிமையானவர்கள் ஒழுக்கமாய் இருப்பது இரண்டாவது பட்சம் தான்.

மனவலிமை உள்ளவர்கள் தானே ஒழுக்கத்தை பின்பற்ற முடியும் என்று நாம் கேட்கலாம். ஆனால் யோசித்துப்பார்த்தால், மனவலிமை வளர்வதே சிறுவயது முதல் ஒருவர் பின்பற்றும் ஒழுக்கத்தால் வளர்வது என்பதை உணரலாம்.  மேலும் ”நன்றிக்கு (நன்மைக்கு) வித்தாகும் நல்லொழுக்கம்” என்று பின்னர் இவ்வதிகாரத்தில் ஒரு குறளிலும் கூறியுள்ளார் திருவள்ளுவர். மனவலிமை என்னும் நன்மைக்கு வித்தாக அமைவதே நல்லொழுக்கம் தான். 

மேலும் மனவலிமை என்பது எல்லோரும் பிறப்பிலேயே பெற்று வருவதா என்று தெரிவதில்லை. அறிவைப் போன்று அதுவும் வளர்த்தெடுக்ககூடிய ஒன்றே என்று எனக்கு தோன்றுகிறது. அந்த மனவலிமை வளர்க்கும் வழி ஒழுக்கம் என்று இக்குறள்வாயிலாக உணர்கிறேன்.

ஒருவரின் ஆத்மசக்தி என்பது பூஜை செய்வதாலும், உடலை பேணுவதாலும் மட்டும் வந்துவிடாது. ஒருவரின் ஆத்மசக்தி என்பது ஒருவர் பின்பற்றும் ஒழுக்கத்தில் இருந்து வருகிறது.  ஒருவர் ஆத்மசக்தி என்னும் வலிமையை தான் பின்பற்றும் ஒழுக்கத்தில் இருந்தே பின்பற்றுகிறார். 

எழுத்தாளர் க.நா.சுப்ரமணியன் அவர்கள் பொய்த்தேவு என்னும் நாவலில் மைய கதாபாத்திரமான சோமு மற்றும் துணை கதாபாத்திரமான சாம்பமூர்த்தி என்னும் இரண்டு கதாபத்திரங்கள் வரும். அவர்களை பற்றிய சிறு குறிப்பு இதோ

மிக அதிகமாக உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல.  சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

மேற்சொன்ன குறிப்புகளை படித்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒருவரின் ஆத்மபலம் ஒருவரை ஒழுக்கம் தவறும் பொழுது அதில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்தும். ஆனால் அந்த ஆதம்பலமே ஒருவர் பல காலம் கடைப்பிடித்த ஒழுக்கத்தில் இருந்து பெற்றதாகும். அதாவது நமது முதல் நமக்கு இலாபத்தை தரும். நாம் தோல்வியுரும் பொழுது அந்த இலாபமே நமக்கு தோள்கொடுத்து நம்மை தோல்வியில் இருந்து மீள உதவும். ஆனால் அதற்கு முதல் தேவை. அதாவது ஒழுக்கம் தேவை.

ஆதலால் எவ்வளவு இளமையில் ஒழுக்கத்தைப் பேணி ஆதம்பலத்தை வளர்க்கிறோமோ அவ்வளவு நல்லது நமக்கு. ஆனால் ஒருவர் எந்த ஒரு காலத்தில் ஒழுக்கத்தை பின்பற்ற தொடங்கினால் அதற்கான பலனை அவர் நிச்சயம் அறுவடை செய்யமுடியும். 

(ஒரு சிறிய உதாரணம்: பலர் ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால் சபரிமலைக்கு ஒரு மண்டலத்துக்கு விரதம் இருப்பர். சாதாரணமாக ஒரு பழக்கத்தை விடும்பொழுது மனதில் பல அல்லல்கள் இருக்கும். ஆனால் ஒரு சபரிமலை விரதம் என்னும் பொழுது நமக்கு ஒழுக்கம் இயற்கையாய் வந்துவிடுகிறது. அதுவும், சிறுவயது முதல் சபரிமலைக்கு சென்றுபவர்கள், தங்கள் வாழ்வில் எப்பொழுதாவது வழி தவறினால், ஐயப்பனுக்கு மாலைப்போட்டால், நாம் அந்த 42 நாட்களில் தங்களை மறுபடியும் நேர்வழியில் எளிதாக செலுத்துக்கொள்வதை காண முடியும். அதுவே ஒழுக்கத்தின் வலிமை. மனம் ஐம்புலன்களையும் அடக்கி நற்சிந்தனைகளில் கவனம் குவிவதின் பலன். அம்மீட்சி ஒழுக்கத்தை தவிர வேறு ஏதும் தர முடியாது)

ஒழுக்கமுடையார்க்கு 


ஒழுக்கமில்லாதவருக்கு


முழுப்பொருள் 2)

நம்மிடம் ஒழுக்கம் குறைந்தால் நமக்கு துன்பம் ஏற்படும் நமக்கு இழுக்கு வரும் நமக்கு தளர்வு உண்டாகும் என்பதனை மெய்யாக உணர்ந்தறிந்தோர் அதற்கான மனவலிமையையும் கொண்டார் என்றால் அவர் ஒழுக்கத்தில் இருந்து தவறாது இருக்க கடினமாக உழைப்பார். அவர் ஒழுக்கத்தில் இருந்து தவறமாட்டார். அதற்கான நற்பலனையும் அனுபவிப்பார்.

பொதுவாக மனிதன் நல்ல உடை அணிந்து பிறரைவிட உயர்வானவன் என்று நினைத்துக்கொள்வான். ஒரு பரிசு கொடுத்தால் கூட தான் தான் சிறந்த பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைப்பான். எதிலும் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் இல்லை என்று சொல்ல யாருமில்லை. அதுவே யதார்த்தம்.

ஒழுக்கம் குறைந்தால் இழிவான குலத்தை சேர்ந்தவனாய் கருதப்படுவர். ஆதலால் அந்த அவலம் வரக்கூடாது என்பதற்காக நெஞ்சில் உரம் இருப்பவர்கள் ஒழுக்கத்தில் இருந்து விலகமாட்டார்கள்.

எல்லோருக்கும் காலையில் எழுவதில் இருந்து ஒழுக்கமாக இருக்க விருப்பம் தான். ஆனால் பலருக்கு முடிவதில்லை. ஒருவனுடைய இயலாமையால் ஒழுக்கத்தில் இருந்து தவறுகிறான். ஏனெனில் அவனிடம் அதற்கு தேவையான பலம் இல்லை. ஆனால் மனவலிமை உள்ளோர் கஷ்டப்பட்டாவது தனது நிலையை பேணிக்கொள்வர்.

ஏன் கடுமையானது என்றால் அது செய்தற்கு அருமையான செயல். (ஒரு கண்ணோட்டத்தில் அது எளிதானாலும் அது அன்றாடம் செய்வதற்கு கடினமானது தான்). 

ஏன் செய்ய முடியவில்லையென்றால் மன உரம் இல்லை என்பதாகும். மன உரம் இல்லாதவன் ஒழுக்கத்தை பேண முடியாமல் படியிறங்கி செல்கிறான். ஒரு விரதத்தை கடைப்பிடிக்க மன உரம் வேண்டும். அதனால் தான் உரவோர் என்றார் திருவள்ளுவர்.

ஏன் சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்கள் செய்யாவிட்டால் வரும் துன்பத்தை கீழ்நிலையை அறிவர்.

அண்மையில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞர் வி.சீதாராமன் எழுதியிருப்பார்.
"மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் " 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து. இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உறுதிகொண்ட நெஞ்சமே ஒழுக்கம் காக்க உதவும்.

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
One who has mental/inner strength and perseverance will not move away from discipline because they understand that when one is not disciplined they will face lots of difficulties in life. At the same time, mental/inner strength is built right from young age by following a discipline. When a person has strong Mental/inner strength it protects a person and puts back a person in bath when they make mistakes or move away from discipline

Questions that I ask to the kid
What will people with mental strength do and don't do?
What to do when you want to build mental strength?

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

குறள் 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

கா - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள்.

காவார் - பாதுக்காகாதவர் 

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்

நா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ); சொல்; நடு; மணிமுதலியவற்றின்நாக்கு; தீயின்சுடர்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு.

காக்க காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

காவாக்கால் - காக்கவில்லை என்றால் 

சோகாப்பர் - சோகாப்பு - துன்பம்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இழுக்குப்குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

பட்டு - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள் 
காக்கவேண்டிய மற்ற எதையும் நீ அடக்கவில்லையென்றாலும் நீ உன் வாயினை, உன் நாவினை, உன் வாயில் வரும் வார்த்தைதனை (அதன் பொருளை)  அடக்கவேண்டும். அப்படி நீ அடக்கவில்லையென்றால் அதில் இருந்து இழுக்கான சொற்கள் வந்து விடும். அக்குற்றத்திற்காக துன்பத்தை அனுபவிப்பாய். வார்த்தைகளின் எஜமானாக நீ இருக்க வேண்டும். வார்த்தைகள் உனது எஜமானாக இருந்தால் உனக்கு துன்பம். சொல்லும் அதன் பொருளும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது மேடை பேச்சுக்கு மட்டும் அல்ல. வாழ்க்கைக்கு மிக முக்கியம். 

(சற்று நகைச்சுவையாக கூறினால்)
வீட்டில் பாதுகாக்கபட வேண்டிய பொருள்களை நாம் பொதுவாக மதில் கட்டி, சுவர் கட்டி, இரும்பு கடிவாளங்கள் போட்டு பாதுகாப்போம். ஆனால் உடம்பில் பல உள்ளுறுப்புகளை பல மதில்கள் கட்டிவைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்படவேண்டிய உறுப்புகளில் நா/நாக்கு முக்கியம் என்பதால் தான் 32 மதில் (பற்கள்) கட்டி அது படைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. அப்படி பாதுகாக்கவில்லையென்றால் முதல் மதில் உடைகிறது. 

ஐம்புலன்களின்களிலே “நா” என்பது சுவையறிந்து உண்பதற்கான உறுப்பு மட்டுமில்லை. பேச்சிலும் சுவையைக் கூட்டி பிறருக்கு இன்பத்தை தரக்கூடியது. மற்ற உறுப்புகளுக்கில்லாத சிறப்பு கூடிய உறுப்பு. மற்ற புலன்களால் அறியக்கூடிய இன்பமும் துன்பமும் இத்தகையது என்பதைச் சொல்லக்கூடிய உறுப்பு. நல்லன சொல்லி பிறர்க்கு நலனும், அல்லன சொல்லி அதனால் பிறருக்கும், முடிவிலே தனக்குமே துன்பத்தைத் தரக்கூடிய வல்லமை உடைய உறுப்பு.

சொல்லும் சொல்லறிந்து, பொருளறிந்து, சுவையறிந்து, பயனறிந்து சொல்லாமல் போனால், சொற்களைச் சொல்லும் நாவுக்கு என்ன பயன்? நாவால் நற்றமிழில் நாளும் பாடியவரை திருநாவுக்கரசர் என்று வேறெந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்புப் பெயரால் அழைத்துள்ளோம். வேறெந்த உறுப்புக்கும் இல்லாத சிறப்பு இது, வேறெந்த மொழியும் கொள்ளாத சிந்தனையிது.

நாவுக்கரசர் தன் நா செய்த நல்வினையாலே தனக்கு சிவாயநம என ஓதக்கிடைத்தது என்று பெருமிதமே கொள்கிறார். “நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே  ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற்றேன்எனை ஒப்பவரார்”


சொல்லத்தகாதவற்றையும், பிறருக்கும் அறிந்து அறியாமலும் துன்பத்தை விளைவிக்கும் சொற்களை சொல்கிறவர்கள் அதனால் பின்விளையும் துன்பங்களுக்கு சோகத்தினை அடைவர். அதனால் ஒருவர் தன்நாவை பயனில சொல்லாமல் காப்பாற்ற வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஆக்கப் படுகும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகம் துய்ப்பிக்கும்
காக்கப் படுவன இந்தியம் ஐந்தினும்
நாக்கல்ல தில்லை நனிவெல்லு மாறே” (வளையாபதி)

“காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லும்சொல்” (நாலடி 63)
“காவா நாவிற் கனகனும் விசயனும்” (சிலப் 26:159)
“காவாதவள் கண்ணறச் சொல்லிய வெஞ் சொல்” (சீவக.1069)

பரிமேலழகர் உரை
யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.).

மணக்குடவர் உரை
எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.

மு.வரதராசனார் உரை
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

சாலமன் பாப்பையா உரை
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பேச்சில் பணிவு இருந்தால் பெருந்துயர் ஏதுமில்லை.

Thirukkural - Management - Communication 
Even if you do not protect or control many other possessions in your life, you have to control the use of your tongue advises Kural 127.

Guard your tongue if nothing else; for words
Unguarded cause distress.

When you cannot have control over the words you use and you resort to unpleasant, humiliating  or harmful words, you will have to pay the price at a later stage for having resorted to using unpleasant words. The unpleasant words you use will revisit and trouble your conscience for having used them. That trouble will be more troublesome than the trouble you incur to others by using painful and unpleasant words. You are a master before you speak something. Once you speak something, you become a slave of it as you lose power over what you have spoken. Remember, every word you speak, speaks of you.

Wednesday, April 22, 2020

கெடுவாக வையாது உலகம் நடுவாக

குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
கெடுவாககெடு  - கேடு; வறுமை; தவணை; எல்லை

வைத்தல்இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வையாது - நினைக்காது;  நடத்தாது 

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

நடுவாக நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி; நடுநிலை; செம்மை; நிதானம்.

நன்றிக் - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

தங்கி - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

யான் - தன்மை யொருமைப் பெயர்

தாழ்வு - பள்ளம்; குறுமை; அவமானம்; குற்றம்; தொங்கல்; மலையடிவாரம்; தங்குமிடம்; அடக்கம்; வணக்கம்; துன்பம்.

முழுப்பொருள்
ஒருவன் நடுவுநிலைப் போற்றி அறவழியில் வாழ்ந்தும் வறுமையில் இருந்தான் எனில் அவன் அவ்வறுமை நிலையை நினைத்து வருத்தப்பட தேவையில்லை. அறவழில் வாழ்ந்தும் வறுமையில் இருந்தால் அவ்வறுமையை செல்வமாகத்தான் சான்றோர்களும் நல்லவர்களும் கருதுவர். அதனை வறுமையென கருத்தமாட்டார்கள் துன்பம் என்றே கருதுவர்.

இவ்வறுமையை பார்த்து ஒழுக்கமற்றவர்கள் ஏளனம் செய்யக்கூடும். அதனை நினைத்து கவலைப்படாதே. ஏனெனில் யார் நம்மை தராசில் வைத்து பார்க்கிறார்கள் அவர்களின் தகுதி என்ன என்பது முக்கியம். ரௌடிகளும் சோம்பேரிகளும் ஒழுக்கமற்றவர்களும் சொல்வதை நினைத்து கவலைப்படாதே.

உதாரணமாக அப்துல் கலாம், காமராஜர் ஆகியோரின் வங்கியில் அவ்வளவு பணம் இருந்தது என்பதை வைத்து நாம் அவர்களை மதிப்பிடுவதில்லை. அவர்களை இவ்வுலகம் எந்நாளும் மறக்காது. ஆனால் வங்கியில் பல பல லட்ச கோடிகளை சொத்தாக வைத்துக்கொண்ட வணிகர்களை அரசியல்வாதிகளை மிக மிக விரைவிலேயே மறந்துவிடும் இவ்வுலகம். ஏனெனில் களவு செய்து ஈட்டிய செல்வத்தை வறுமையாகவே கருதும் இவ்வுலகம்.

ஔவை மூதுரையில் கூறுவது போல, “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்”

திருமூலரின் திருமந்திரத்தில் கீழ்கண்ட பாடலைக்கண்டேன் இக்குறளுக்கான கருத்தாயில்லாவிட்டாலும், நடுவுநிலைமைபற்றிய நல்லகருத்தாகையால் இன்றே பதிவுசெய்கிறேன். மிகவும் எளிதான பாடல், முதல் தந்திரம், பதிக எண் 26-ல் வரும் நான்கு நடுவுநிலைப்பாடல்களில், முதல் பாடல் இது.

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா உரை
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நீதியில் நிற்பவன் ஏழையானாலும் உயர்ந்தவன்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
மறத்தல்maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

மறவற்க - மறக்காதே

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்றார் - பொருள் இல்லாதவர்; முனிவர் ( 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர்.) அல்லாதவர் ; aṟṟār   n. id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226). 2. Those who have dedicatedthemselves to the service of God; தம்மைஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

துறவற்க - துறக்க வேண்டாம்

துன்பத்துள் - துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உள்  - உள்ளே ; உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

ஆயார் - ஆயாதவர்; நுணுகாதவர், வருந்தாதவர்,

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

முழுப்பொருள்
நட்பை பற்றி இரண்டு முக்கிய செய்திகளை திருவள்ளுவர் இக்குறளில் கூறுகிறார்

1. அப்பழுக்கு அற்ற அறிவிலும் ஒழுக்கத்திலும் சான்றோர்களின் கொண்ட நட்பை ஒருநாளும் மறவாதே. ஏன் மறக்க கூடாது என்றால்? சான்றோர்களிடம் பெற்ற அறிவும் பண்பும் அவர்கள் நம்மை எங்கிருந்தோ கண்காணிக்கிறார்கள் என்கிற ஐயம் அல்லது பொறுப்பு நம்மை தீவழியில் செல்லாமல் நல்வழியில் செல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும். சான்றோரிடம் நாம் பெற்றவை நமக்கு எல்லாக்காலத்திருக்கும் துணையாக தரும்.

2. நாம் மிக துன்பத்தில் இருக்கும் பொழுது நமக்கு உதவி புரிந்து துணையாக இருந்தோரிடம் உறவையும் நட்பையும் துறந்துவிடாதே. ஏனெனில் நாம் நன்றாக இருக்கும் பொழுது நம்மிடம் எல்லோரும் இருப்பார்கள். ஆனால் நமக்கு ஒரு துன்பம் என்றால் பெரும்பாலானோர் நம்மை விட்டு விலகி இருப்பர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மிடம் இருந்துக்கொண்டு நமக்கு துணையாக இருந்தவரே உண்மையான நட்பு எனலாம். மேலும் அன்று அவர் நமக்கு உதவி புரியவில்லை என்றால் என்று நாம் அன்றே வீழ்ந்து மடிந்திருப்போம். ஆதலால் அவரை எந்நாளும் துறக்காதே. அவர் செய்த உதவியையும் துணையாக இருந்ததையும் துறக்காதே.

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோர்கள் பலர் இவ்வுலகில் இருப்பர். அவர்கள் நம்முடனே இருப்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரிடம் பெற்றவை நமக்கு உடன் வந்து துணை புரியும். ஆனால் உண்மையான நட்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆதலால் அவர்களை துறப்பது அறிவில்லாத்தனம் எனலாம். அவரைப்போல் ஒருவரை மீண்டும் கண்டடைய இன்னொரு துன்பம் வந்தால் தான் கண்டடைய முடியும்.

சான்றோரை துறக்கலாமா? இல்லை. திருவள்ளுவர் அப்படிக் கூறவில்லை. அவர் மறவற்க என்று ஒரு அறிவுரையாக தான் கூறுகிறார். ஆனால் துன்பத்தில் இருக்கும்பொழுது துணையாக இருந்தவனை மறவாதே என்று கட்டளையிடுகிறார் திருவள்ளுவர்.

இராமயணத்திலே ஒரு காட்சி: தன்னைச் சரணடைய வருகின்ற விபீடணனைப் பார்த்து இராமன் இவ்வாறு கூறுகிறான்.

குகனொடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த 
அகமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; 
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் றுந்தை!


குகனோடு ஐவராகி, சுக்ரீவனோடு அறுவராகி, பின்னர் விபீடணனோடு எழுவாரானதாக இராமனின் கூற்று. நட்பெனின் சிறிதளவு உதவ தயங்கினாலும், தன்னுடைய தம்பியரெனில் அவர்களுக்கு உதவாமல் இருக்க இராமனால் முடியுமா?  இல்லையெனின் தம்பிகளாக ஏற்றுக்கொண்டவர்களுக்குத்தான் முடியுமா? இராமனுக்கு துன்பமான காட்டு வாழ்கையிலே குகன் செய்த உதவியும், சுக்ரீவனுக்கு இராமன் அவனுக்கு சொந்தமான நாட்டை மீட்டுக்கொடுத்த உதவியும், நட்பு தவிர உறவென்னும் சிறப்பினாலல்லவா? சரணம் என்று வந்தவனை, சற்றும் பகைவனின் தம்பி என்று ஐயம் கொள்ளாமல், இராமனால்தான் ஏற்றுக்கொள்ளமுடிந்ததென்றால், மாசற்ற குணத்தினாலன்றோ?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'மருவுக மாசற்றார் கேண்மை” (குறள் 800)

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள் 788)

பரிமேலழகர் உரை
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.).

மணக்குடவர் உரை
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.

மு.வரதராசனார் உரை
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

சாலமன் பாப்பையா உரை
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நெருக்கடியில் உதவிய நல்லோரை என்றும் மறவாதே.

Tuesday, April 21, 2020

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

ஈன்று - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

ஈன்று - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

பண்பின் - பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

தலைப் - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

பிரியாச் - பிரியாமல், நீங்காமல்; நினைக்காத;

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
நயன் 
நயன் என்ற சொல்லுக்கு நயம் என்று பொருள். நயம் என்ற சொல்லுக்கு பயன் என்ற பொருள் இருந்தால் பின்பு இதே குறளில் பயன் ஈன்று என்று கூறியமையால் இங்கு நயன் என்ற சொல்லுக்கு நீதி / அறம், மேன்மை, ஒற்றுமை/உறவு ஆகிய பொருள்கள் பொருந்தும்.

"நன்றி ஈது" என்று கொண்டால், நயத்தினை  நயந்து, வேறு" என்று கம்பராமாயணத்தின் கும்பகருணன் வதைப் படலத்திலும் என்று கூறப்பட்டுள்ளது. அது நயம் என்பது நீதி/அறம் என்று பொருள் கொள்கிறது. அதுபோல் மணிமேகலையிலும் "ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை" என்று கூறப்பட்டுள்ளதால் ஒற்றுமை / உறவு ஆகிய பொருளும் நயன் என்ற சொல்லுக்கு பொருந்தும்

குறளின் பொருள் 
இங்கே சொற்கள் பேச்சு என்ற அர்த்தத்தில் மட்டும் வராது. ஒரு கடிதம், ஒரு செய்தித்தாளின் கட்டுரை என்று சொற்களை பயன்படுத்தும் எல்லா தளத்திற்கும் பொருந்தும் என்பதை முன்னரே கூறிக்கொள்கிறேன்.

ஒரு செயலை செய்யும் பொழுது அல்லது ஒரு விவாதம் என்று வரும் பொழுது நாம் பலரை சந்திக்கிறோம். அப்போது உரையாடல் என்று வருகிறது. அப்பொழுது சொற்களின் தேர்ச்சி மிக அவசியம். சொற்களின் சிறப்பு சொற்களின் மேன்மையில் இருக்கிறது. ஆதலால் ஒருவர் உரையாடும் பொழுது சொற்களின் பண்பு அறிந்து அதன் அளவு அறிந்து அதன் சிறப்பு நீங்காமல் (அதாவது தீய சொற்களையும், தீங்கு விளைவிக்க கூடிய சொற்களையும் தவிர்த்து) பேசினால், அவருக்கு நீதியும்/அறமும், வினையின் பயனும், நன்மையும் கிடைக்கும். அவ்வாறு சொற்களை தேர்ந்தெடுத்து பேசுவதால் யாருக்கும் அநியாயமான இழப்பு இல்லையென்பதால் உறவுகளுக்கு சேதம் இல்லை. அவ்வாறு கையாள்வதால் ஒருவருக்கு மேன்மையும் கிட்டிற்று.

அப்படி பார்க்கையில் மகாத்மா காந்தி இனிய சொற்களுக்கு சொந்தக்காரர். அவர் ஆங்கிலேயருடன் மிகவும் கனிவாகவே பேசினார். அதன் விளைவாக பெருத்த உயிர் சேதம் இல்லாமல் இந்திய நாடு பயன் பெற்றது. சுதந்திரம் உரிமை என்பதை தாண்டி அது நீதி என்பதை காந்தி ஆங்கிலேயரின் மனசாட்சிக்கு மிகவும் பக்குவமாக உரைத்தார். காந்தி கோபப்படாமல் தீய சொற்களை பயன்படுத்தாமல் ஆவேசப்பேச்சுகளை தவிர்த்ததால் உண்மையை பேசியதால் அவருடன் எதிர்வாதம் செய்ய ஆங்கிலேயர்கள் தயங்கினர். அது மட்டும் இன்றி காந்தியின் பேச்சை எல்லோரும் செவிகொடுத்தும் உள்ளம் கொடுத்ததும் கேட்டனர்.

மேலும்: ஷோக் உரை

ஒப்புமை
குறள் 45

பரிமேலழகர் உரை
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.).

மணக்குடவர் உரை
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பண்பு குன்றாச் சொற்கள் மேன்மை சேர்க்கும்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...