பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

thirukkural meaning விளக்கம் குறள் 146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை
குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

பாவம் - தீவினைப்பயன்; தீச்செயல்; நரகம்; இரக்கக்குறிப்பு; உளதாந்தன்மை; முறைமை; தியானம்; எண்ணம்; அபிநயம்; விளையாட்டு; நிலைதடுமாற்றம்; ஆத்துமாவிடம்உண்டாகும்பரிணாமவிசேடம்; இயக்கம்.

அச்சம் - பயம்; மகளிர்நாற்குணத்துள்ஒன்று; தகடு இலேசு அகத்திமரம்; சரிசமானம் பளிங்கு

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

என  - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

நான்கும் - நான்கு - மூன்றுக்குமேல்ஒன்றுகொண்டஎண்; நாலில்ஒருபங்கு; வட்டிக்காகச்சேர்த்துஅறுவடையானதும்கொடுப்பதாகச்சம்மதித்துப்பெறும்தானியக்கடன்.

இக-த்தல் - ika-   12 v. tr. 1. To leap over,jump over; தாண்டுதல் (திவா.) 2. To over-flow, go beyond; கடத்தல் வரம்பிகந்தோடி (கம்பரா. நாட். 9). 3. To transgress, violate, deviatefrom a rule or justice; அதிக்கிரமித்தல். நெறியிகந்து . . . நீரலசெய்யும் (காசிக. சிவசன்மாவாயு. 28).4. To leave behind, go away from; பிரிதல் இகந்துறைவ ரேதிலர் (குறள், 1130). 5. To bear,endure; பொறுத்தல் (பிங்.)--intr. 1. To depart, go away; போதல் (திவா.) 2. To leave,put away, eradicate; நீங்குதல் முனிவிகந் துயர்ந்த(நன். சிறப்புப்.).

இகவா - நீங்காமல்

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இறப்பான் - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
பிறர் மனைவி மீது எல்லை கடந்து நடந்துக்கொண்டால் அல்லது உறவு கொண்டால் அச்செயலிற்காக நான்கு விளைவுகளை அனுபவிக்க நேரிடும். பகை (பிறரிடம் பகை), பாவம் (செய்த குற்றத்திற்கான வினைப்பயன் ஆன துன்பம் மறுமையிலும் தொடரும்),  அச்சம் (பிறர்க்கு இது தெரியுமோ அல்லது பிறர் நம்மை தாக்குவாரோ அல்ல ஊர் தூற்றுமோ என்ற அச்சம்), பழி (குற்றம் புரிந்தமைக்காக இவ்வுலகம் எந்நாளும் தூற்றும்) ஆகிய நான்கும் ஒருவனை விட்டு விலகாது. ஆதலால் பிறன் மனைவியை நோக்காதே என்கிறார் திருவள்ளுவர். 

பகை, பழி, அச்சம் ஆகியவற்றை இம்மையில் அனுபவிப்பாய், பாவம் உன்னை மறுமையிலும் தொடரும். ஆகவே நிம்மதிஅழிந்துவிடும். 

பஞ்சமா பாதகங்கள் என்றழைக்கப்படுபவற்றுள் ஒன்றான் இப்பாவம், இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் உறுத்து வாட்டும். இந்நான்கும் நிலையாக இருந்து நீங்காதுன்பமே தரும்.

நாலடியார், ஏற்கனவே சொல்லியிருந்ததுபோல், சங்ககால நீதிநெறி நூல்களில் திருக்குறளைப்போன்று பல கருத்துக்களைக்கொண்டது. பிறன்மனை விழையாமைக்குப் பத்து வெண்பாக்களைக் கொண்டது. இதில் மூன்றினைப் பார்ப்போம்.

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; – நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு. (நாலடி 84)

மேற்காணும் பாடல், பிறர்கண்டுவிட்டால் குடிக்கே பழிவரும், கையும் களவுமாகப் பிடிபட்டால் காலை ஒடித்துவிடுவார்கள், அகப்பட்டுக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் ஆண் என்று நெஞ்சை நிமிர்த்தும் அச்சமின்மையும் போகும், தவிர இச்செயலே ஆண்மையில்லாச் செயலாகும், நெடுங்காலத்துக்குத் துன்பத்தைத் தந்துவிடும், தீநெறியாளனே, இச்செயலால் நீ நுகர்ந்த இன்பம் எத்துணையென்று, இவற்றைச் சிந்தித்துப்பார்த்துச் சொல் என்று வினவுகிறது.

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார். (நாலடி 81)

இச்செயலால் அச்சம் பெருகிய வாழ்வுதான், ஆனால் அதற்கான விலையான இன்பமோ சிறிதளவே; நினைத்துப்பார்த்தால், இதற்கு அரச தண்டனையாம் கொலையே வாய்க்கும் (இன்றுகூட அரபு நாடுகளில்);  தீச்சூளை (கும்பி) நெருப்பினப் போல் நின்று சுட்டெரிக்கும்; இதனால் பிறன்மனையாளை சேருதலை பழிக்கும் பாவத்துக்கும் அஞ்சியவர் நினைந்துகூட பார்க்கமாட்டார்கள்.

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல். (நாலடி 83)

பிறன்மனையை நாடிப்போகும்போது அச்சம், அவளோடிருக்கும்போது அச்சம், சிற்றின்பச்சேர்க்கையிலும் அச்சம், இத்தீச் செயலை மற்றவர் கண்டுவிடக்கூடாதே என்று அச்சம், என்று எப்போதும் அச்சத்துக்குக்காரணமான பிறன்மனை விழையும் இழிசெயலை மட்டும் ஏன் எண்ணி வெட்கப்பட ஒருவன் நினைப்பதில்லை?

இம்மூன்றுப்பாடல்களாலும், வள்ளுவர் குறளில் காணப்படும் நான்கும் கூறப்படுவதைக் காணலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன தாயினும் ஏதில்பெண் நீக்குமின்” (வளையாபதி)

“...................பிறந்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்” (நாலடி 82)

பரிமேலழகர் உரை
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

மு.வரதராசனார் உரை
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்னொருவன் இல்லாளை விரும்பாதே. எல்லா கெடுதியும் சேரும்.

1 comment

  1. மனதால் நினைத்தாலும்
    பகை பாவம் அச்சம் பழி என நான்கும் நெஞ்சில் தங்கும்.
© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain