Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Thursday, July 2, 2020

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
அவ்வித்து - அவ்வி-த்தல் - avvi-   11 v. intr. 1. To become intolerant, impatient; பொறுமையொழிதல்.அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 2. To pervert the mind; மனத்தைக் கோணச்செய்தல். (குறள்,167, உரை )  

அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

உடையானைச் - உடையவர், செல்வம் கொண்டவர்கள்

செய்யவள் - செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார்.

தவ்வையைக் - தவ்வை - தாய்; தமக்கை; மூதேவி.

காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
பிறருடைய செல்வம் புகழ் மகிழ்ச்சி நிம்மதி ஆகியவற்றை கண்டு சற்றும் பொறுக்கமுடியாமல் ஒருவர் பொறாமை படுவார் என்றால் அவருடன் இருக்கும் (செல்வத்தை கொடுக்கும்) திருமகள் அவனை போலவே பொறுமை இழந்து அவனை விட்டு வெளியேறுவாள். வெளியேறுவது மட்டும் இன்றி அவனுக்கு ஏற்றவள் அவளுடைய அக்காள் மூதேவி (தரித்திர நாராயணி) தான் என்று மூதேவியை அவனிடம் விட்டுவிட்டுச் செல்வாள். மூதேவி வந்தால் அவனுடைய செல்வம் எல்லாம் போய் விடும். தரித்திரம் வளரும். மன அமைதி குன்றிவிடும். 

ஏனெனில் திருமகள் அவனுக்கு செல்வத்தை கொடுத்தாள் ஆனால் அவனுக்கோ அது போதவில்லை. அவனுக்கு பிறர் செல்வத்தின் மீது பொறாமை. இவ்வளவுக்கு செல்வம் கொடுத்தாலும் அவனுக்கு போதவில்லை. மனம் நிறைவடையவில்லை. நிம்மதி கொள்ளவில்லை. ஆதலால் அவனுடன் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே சரி என்று மூட்டையை கட்டிவிடுவாள். அவன் செல்வமும் அழிந்துவிடும். 

ஆதலால் பொறாமை கொள்ளாதே என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

அப்படியென்றால் வறுமையில் இருப்பவர்கள் பொறாமை கொள்ளலாமா? வீட்டிற்கு வந்தவள் பொறாமையை கண்ட உடனே சற்றும் பொறுக்காமல் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டாள். அப்படியிருப்பின், வறுமையில் இருப்பவனிடம் பொறாமை இருப்பதை கண்டால் அவள் எப்படி உள்ளே வருவாள். வரவே மாட்டாள்.

மேலும்:
தவ்வை என்ற சொல்லை இளங்கோ, வள்ளுவரைத்தவிர வேறு யாரும் சொல்லாடல் செய்ததாகத் தெரியவில்லை.  தகவலாழியாம் இணயத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள். மூதேவி என்பவள் ஸ்ரீதேவிக்கு முன் பார்க்கடலில் தோன்றிய மூத்தோள், முன்னவரை குறிக்கும் “ஜேஷ்டா” என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பிடப்படுபவள். சங்க இலக்கியங்களில் மாமுகடி, காக்கைக் கொடியோள், பழையோள் என்று பதினான்கு விதப்பெயர்கள் உண்டென்று ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி என்பவர் கூறுகிறார். அவர் பழனி அருகிலுள்ள மானூரில் உள்ள சிவன்கோவில் வெளிச்சுற்றில் இவளுக்கும், இவளது மகன் குளிகன், மகள் மாந்தி இவர்களுக்குச் சிலைகள் உண்டு என்கிறார்.  இதில் காக்கை கொடி இடதுபுறம் திரும்பி இருத்தல், கிரீட மகுடம், மூதேவி மட்டும் பூணூல் அணியாதிருத்தல் ஆகியவை சிறப்பம்சம். மூவரும் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளனர். திருவள்ளுவர், அவ்வையார் பாடல்களில், சோம்பலின் அம்சமாக கூறப்பட்ட சூழலில் மூதேவி வழிபாடு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இளங்கோவடிகளும் தவ்வையை, தமக்கை, மூத்தவள் என்ற பொருளிலேயே கையாண்டிருக்கிறார்.

சமணர்கள் அவ்வை என்ற சொல்லைப் பெண்துறவிகளைக் குறிக்கச் சொல்லுவார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில் ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார். துறவிகள் கைகளில் ஓடேந்தி பிச்சை எடுப்பவர்கள் என்பதனால் பிச்சையெடுக்கச் செய்திடுவாள் என்று கொள்ளலாம். ஆனால் பொறாமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகையால், அதை பிச்சையெடுக்கும் பெண்துறவிகளுக்கு ஒப்பாக கூறியிருக்க முடியாது.

இணையத்தில் பொன். சரவணன் என்கிற தமிழாராய்ச்சியாளர் ஒரு வேறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறார். தவ்வை என்ற சொல்லுக்குப் பதிலாக கவ்வை என்ற சொல்லை இட்டு, “பேராசையால் காழ்ப்புணர்ச்சி உடையவனை அவனது இல்லாளின் ஆரவார ஒலியே காட்டிக் கொடுத்து விடும்” என்கிறார். செய்யவள் என்பதற்கு மனையாள் என்றம் கவ்வை என்பதற்கு ஆரவார ஒலி (சண்டையில் மிகுந்த குரல்) என்றும் பொருள் கொண்டு விளக்குகிறார். 

வள்ளுவரின் சமயச் சார்பின்மையை நிறுவ இவர் செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே எனினும், பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியகள் செய்த உரை பொருத்தமாகத்தான் உள்ளது. 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பொறாமை, செல்வம் அழிக்கும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
கொடுப்பது - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை

அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை.

அறுப்பான் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

உடுப்பதூஉம் -  உடு-த்தல் - uṭu-   11 v. tr. [K. M. uḍu.] 1.To put on, as clothes; ஆடைமுதலியன தரித்தல் பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 2. To surround,encircle; சூழ்தல் அருங்குறும்புடுத்த கானப்பேரெயில்(புறநா. 21).  

உண்பதூஉம்  - உண்ணுதல் -  உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

இன்றிக் - இல்லாமல்.

கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
பிறர் இன்னொருத்தருக்கு கொடுப்பதை கண்டு பொறாமை பட்டு அதனை தடுப்பான் என்றால் அவன் மட்டும் அல்ல அவனுடைய சுற்றத்திற்கு உடுத்த ஆடையும் உண்ண உணவும் இன்றி கெட்டுப்போகும் அவனுடைய குடும்பத்தின் வாழ்வு. 

பொறாமைப்படுவது மிகக் கீழான குணமாகும். பிறர்க்கு உதவி செய்வதை தடுப்பது மாபெரும் குற்றம் என்பதை வலியுறுத்தவே பொறாமைப்படுபவன் மட்டும் அல்ல அவன் சுற்றமும் சேர்ந்து கெட்டுப்போகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

கம்ப இராமாயணத்தில் வேள்விப்படலத்தில் (33), இராமனுக்கு மகாபலியின் கதையைச் சொல்லும் விசுவாமித்திரர், மகாபலி தன்னுடைய குலத்துக்கு ஆசிரியனாம் சுக்கிராச்சாரியாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.
“எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!”
பெருந்தன்மை இல்லாத  சுக்கிரனே, நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை  எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ? ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச்  சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல் விடுகின்றாய் என்பதை அறிவாயாக என்கிறான் மகாபலி. வள்ளுவனின் குறள் கருத்துக்களை குறள் சொல்லும் சொற்களிலேயே கம்பன் வெகு பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.

ஒப்புமை
குறல் 1079

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அடுத்தவன் பெறுவதில் வயிறெரிந்தால் உன் குடும்பம் அல்லலுறும்.

Wednesday, July 1, 2020

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

குறள் 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறந்தாரின் - துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்

தூய்மை  - துப்புரவு; மெய்மை; வீடுபேறு; நன்மை; வெண்மை

உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறந்தார் -  வாழ்வை கடந்தவன்; மரணம் அடைந்தவன்

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉரு

இன்னாச் - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

நோற்றல் - பொறுத்தல்; விரதமிருத்தல்; தவஞ்செய்தல்

நோற்கிற்பவர் - பொறுத்துக் கொள்பவர்

முழுப்பொருள்
மெய்யான துறந்தவர்கள் மனதில் மாசு இல்லாத தூய்மை உடையவர்கள். அவர்கள் துறவறத்தில் இருப்பவர்கள். 

இல்லறத்தில் இருப்பவரும் துறந்தவர்களின் தூய்மையை உடையவர்களாக கருதப்படுவர் ஆனால் எப்பொழுது தெரியுமா? பிறர் நம்மிடம் நம்மை இழிவு படுத்தும் நெறி கடந்த சொற்களை நம்மை வருத்தும் தீய சொற்களை பயன்படுத்தினால் அதனை பொறுத்துக்கொண்டு போக வேண்டும். பதிலுக்கு பேசினால் நாமும் அவர் அளவு கீழே இறங்கி விடுவோம். நமது சமன்நிலையை குலைக்கவேண்டும் என்றே பிறர் நம்மை இழிவான சொற்களால் தாக்குகிறார். அதற்கு இரையாக/பலியாக கூடாது. 

செயல்களை விட சொற்கள் நம்மை அதிகம் பாதிக்கும் அது பல தடவை நமது மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆதலால் நமக்கு அதிகம் கோபம் வரும். நமது சினத்தை தூண்டுவதே பிறரின் குறிக்கோள். ஆதலால் அதற்கு செவிசாய்க்காமல் பொறுத்துக்கொள்ள வேண்டும். 

செயல்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பது கடினம். ஆனால் சொற்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பது அதனினும் கடினம். அதனால் தான் துறவிகளின் தூய்மைக்கு ஈடாக பொறுத்தலை கூறுகிறார் திருவள்ளுவர். 

பொறாமை, ஆசை இவற்றை வென்ற முனிவர்களும், இருடிகளும் கூட வெகுளி (கோபம்), இன்னா சொல் இவற்றைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். துர்வாசர் என்னும் முனிவரின் வெகுளியானது நிறைய இடங்களில் புராணங்களில் சொல்லப்படுகிற செய்தி. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று பத்தினியொருத்தி கேட்ட கதையும் அறிந்திருக்கிறோம்.

நாலடியார் தனது “சினமின்மை” அதிகாரத்தில் “ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை” என்கிறது.  பகைவர்களைத் தண்டிக்கும் ஆற்றலும் அறிவும் வலியும் உடையவன், தனது சினத்தைக் காட்டாமல் பொறுமையாக இருக்கின்றான் என்றால் அவனுடைய பொறுமையே போற்றத்தக்கது. மற்றொரு நாலடியாரில் (64) “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளா விழுமியோர்” என்கிறது. கல்வி, கேள்வி, அறிவால் தமக்குச் இணையில்லாத கீழோர் தம்மை இழிந்து கூறிவிட்டார்களே என்று, மேலோர் அவரிடத்து கொதித்துச் சினம் கொள்ளார். 

இக்குறளுக்கு இணையாக மற்றொரு பாடல், நாலடியாரில் (66) இவ்வாறு சொல்கிறது: “கல்லெறிந்தன்ன கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங்காணப் பொறுத்துய்ப்பர்”. கல்லால் அடிப்பதைப் போலத் தீயவர்கள் கடுஞ்சொல் பேசினாலும் கற்றவர்கள் மற்றவர் கண்டு பாராட்டும்படி அதைத் தாங்கிக்கொள்வர்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.).

மணக்குடவர் உரை
மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
துறவறத்தின் தூய்மையும் கொடுஞ்சொல் பொறுப்பதும் ஒன்று.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

குறள் 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மிகுதி - அதிகம்; எழுத்துஇரட்டிக்கை; நிறைவு; திரள்; பொலிவு; மீதி; சிறப்பு; செருக்கு

யான் - யான்மை - அகங்காரம்.

மிக்கவை - மிகுதியானவை; தீயவை; சோறு; ஊன்; நிறைகை.

செய்தாரைத் - செய்தார், செய்தவர்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

தகுதி - பொறுமை; பொருத்தம்; தகுதிவழக்கு; மேன்மை; நல்லொழுக்கம்; நடுவுநிலைமை; ஆற்றல்; அறிவு; கூட்டம்; தடவை; குணம்; நிலைமை.

யான் - தன்மையொருமைப்பெயர்

வென்று - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்
விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்
விடும் - ஆகும் 

முழுப்பொருள்
பிறர் மனதின் செருக்கால் (உள்ள பிறழ்வால்) துன்பத்தை நமக்கு செய்தாலும் அவரை தண்டிக்காதே. அவரையும் அவர் செய்த செயலையும் பொறுத்துக்கொள். ஏனெனில் அவருக்கு தான் உள்ளம் பிறழன்று விட்டது. உனக்கு அப்படி இல்லை என்றால், அவரை உன்னுடைய மேன்மையாலே வென்று விடு. மேன்மை என்பது ஒழுக்கத்தாலும் அறம் செய்வதாலும் நற்குணங்களாலும் வருவது. பழிக்கு பழி என்று பிறருக்கு தீமை செய்வது அறமல்ல. அக்காரணமாயினும்  பிறருக்கு தீமை செய்வது நற்குணம் அல்ல. ஆதலால் பழி மேன்மையானது அல்ல. பொறுத்தலே மேன்மையான ஒன்று.

நம் அமைதி நமக்கு தீமை செய்தவரை கூசச்செய்யும். ஒருநாள் அல்ல ஒருநாள் அவர் மனம் அவரை சுடும். அப்பொழுது அவர் தான் செய்த செயலுக்கு வருந்திக் கூசுவார். நம்மிடம் வந்து மன்னிப்பு கேட்கக் கூடும். அதுவே வெற்றி.

திருவாசகம் மிகவும் அழகாக, எளிதாக, “பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” என்கிறது. மேலும், “பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே”என்று சற்று சினந்தும் சொல்லுகிறார் மாணிக்கவாசகர். எட்டுத்தொகை சங்க நூலான நற்றிணை குறிஞ்சிப்பாடலில் கந்தரத்தனார் “தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் தாம் அறிந்து உணர்க என்பமாதோ” என்கிறார்.

காந்தி அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தது அஹிம்சை முறையில். ஏனெனில் கண்ணுக்கு கண் என்று பழிவாங்கினால் உலகம் மக்கள் அனைவரும் குருடர்களாக இருப்பர் என்று உணர்ந்தவர். பிரிட்டிஷார்கள் இந்தியர்களுக்கு செய்த கொடுமைக்கு எல்லாம் பதிலாக தீமை செய்யாமல் அமைதியான வழியில் போராட்டங்கள் நடத்தி பிரிட்டிஷாருடன் உரையாடி ரத்தம் சிந்தாமல் வெற்றி பெற்றார். (400 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரை உரையாடலுக்கு அழைத்து வரவழைத்ததே முதல் வெற்றி). பிரிட்டிஷாரை வென்றார். உலக மக்கள் மனதையும் வென்றார். அதுவே காந்தியின் மேன்மை. அதுவே இந்திய மக்களின் மேன்மை ஏனெனில் அவர்கள் பலநூற்றாண்டுகளாக இம்மண்ணில் சமூதாயமாக வாழ்பவர்கள். போர் சேதத்தை விளைவிக்கும் என்று மஹாபாரதம் போன்ற இதிகாசங்களால் உணர்ந்தவர்கள். பௌத்தம் சமணம் போன்ற மதங்களின் சாராம்சத்தை உணர்ந்து அதன் மைய கருத்தான அஹிம்சையை (உயிர்களை கொல்லாது இருத்தல், பிறரை வருத்தாது இருத்தல்) ஆகியவற்றை ஏற்றவர்கள். ஆதலால் அஹிம்சையின் மேன்மையை உணர்ந்தவர்கள். ஆதலால் உலக வரலாற்றில் முதல் முறையாக ஆயுதங்கள் அற்ற வழியில் ஒரு மாபெரும் சுதந்திரம் பெற்றது அதுவே முதல் முறை. அம்முறையே உலகிற்கு இன்று வழிகாட்டி. 

எங்கோ கேட்ட ஞாபகம்,  உனக்கு ஒருவன் தீயது செய்கிறானா? அல்லது விரோதம் பாராட்டுகிறானா? அல்லது சிறுமையானவற்றை செய்கிறானா? அவனுக்கு பெரிய மனதுடன் நல்லது செய்து காண்பி. அதுவே சிறந்து என்று. உதாரணமாக, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் (அவரைப்பற்றிய ஆவணப்படம் The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - D.Jayakanthan @1:15:48) ஒன்றில்) சொன்னது இது, கர்நாடக்காவில் தமிழ் படிக்க கூடாது என்றால் தமிழ்நாட்டில் கன்னடம் படிக்கலாம் என்று சொல்லுக என்கிறார். அது தான் வழி. தாராளமாக நாமிருந்தால் தாராளம் என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். நாகரீகத்தை நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு. They are immature. தெரியலயா உங்களுக்கு? இதற்கு ஆராய்ச்சி வேண்டுமா? அல்லது அவன் ஒத்துக்கொள்ள வேண்டுமா? நாம் தான் உணர வேண்டும். நீ(நாம்) உலக மனிதன் என்பது பெருமை அல்ல. நமது பெருமை என்ன? புலம் சார்ந்தவர்கள் நாம். இந்த புலம் என்பது பூமி. இதைத்தான் பாரதி கூறினார் “வையத் தலைமை கொள்” என்று. இந்தியா அதனால் தான் கூறுகிறது நாங்கள் என்றும் அலேக்ஸாண்டார் ஆகமாட்டோம் என்று. 

என்பதையும் நினைவில் கொள்க

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
"தீமை கண்டோர் திறுத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க என்ப மாதோ” (நற் 116:1-2)

“பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” (திருவா 70)
“பொறுப்பரன் றேபெரி யோர் நாய்கள்தம் பொய்யினையே’ (திருவா 100)

பரிமேலழகர் உரை
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

மு.வரதராசனார் உரை
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அகந்தையில் ஆடுவோரைப் பொறுமையால் வெல்க.

English Meaning - As I taught a kid - Rajesh
Even if someone does something excessively bad to us, we should still win them by our character. We can display our character/maturity by forgetting others mistakes, by not showing anger, by not pin pointing past mistakes, by not gossiping or back biting and by doing good to them in return

Questions that I ask to the kid
if someone does excessively bad to you, what should you do? why you should not do bad back to him? can you gossip /speak at the back about the bad things done to you ?

What is maturity? What is character?

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

குறள் 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
திறன் - திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

அல்ல - இல்லை

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

பிறர் -  piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

செய்யினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

நோ - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஓ); வலி; துன்பம்; நோய்; சிதைவு; வலுவின்மை

நொந்து - நொந்துதல் - அழிதல்; தூண்டுதல்.

அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

அல்ல - இல்லை

செய்யாமை - செய்யாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
திறன் என்றால் மேன்மை, உபாயம், கோட்பாடு, இயல்பு, ஒழுக்கம் என்று பொருள்.

பிறர் தனக்கு மேன்மை அல்லாத கோட்பாடுக்கு ஒவ்வாத இயல்பல்லாத ஒழுக்கமல்லாத செயலை செய்து துன்பத்தை தந்தால் அவருக்கு பதிலுக்கு ஒன்றும் செய்யாதே. அவரை தண்டிக்காதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். அவருக்கு இந்த பதிலடியை தந்தால் அவர் துன்பத்தில் வருந்துவார் என்றெண்ணி அறமல்லாதவற்றை இயல்பல்லாதவற்றை செய்யாதே. அவரை தண்டிக்காது இருப்பது நன்று. நன்மை பயக்கும். ஆதலால் பிறர் நமக்கு செய்த தீமையை பொறுத்துக்கொள். மறப்பது அதனினும் நன்று என்று முன்னமே கூறியுள்ளார் திருவள்ளுவர். 

ஏன் தண்டிக்க கூடாது? 
தண்டிப்பது என்பதே அறம் அற்ற செயலாகும். (இது அரசருக்கு பொருந்தாது. அவர் குற்றங்களை களைந்து நாட்டை அமைதியாக நடத்த கடமைப்பட்டவர்). 
மேலும் ஒருவர் தவறு செய்தால் அதற்கு தண்டனை மேல் உலகத்தில் உண்டு. மேல் உலகத்திற்கு ஏன் செல்ல வேண்டும். ஒருநாளல்ல ஒருநாள் அவன் மனசாட்சியே அவனை சுடும். அதுவே அவனுக்கு தண்டனை. 

எப்படி இது நன்று (நன்மை பயக்கும்)?
அதுமட்டும் அல்லாது நீ அவனை தண்டித்து பதிலுக்கு அவனும் தண்டித்துக்கொண்டு இருந்தால் இப்பகை வளர்ந்துக்கொண்டே இருக்கும். நிம்மதி கெடும் சந்தோஷம் அழியும். 

தண்டித்தல் நமக்கு தற்காலிக மகிழ்ச்சியை தந்தாலும் (குறள் 173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்) பின் ஒருநாள்  ஏன் ஒரு தீமையை பிறருக்கு செய்தோமென தன்நெஞ்சே தன்னை சுடும் (குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்). 

மனதாலோ செயலாலோ பிறருக்கு நாம் தீமை செய்தால் அதற்கான தண்டனை கண்டிப்பாக உண்டு. அத்தீமை பிறர் நமக்கு செய்த தீமைக்கு பதிலாக இருப்பினும் கூட. 

அதுமட்டும் இன்றி நமது ஆத்ம சக்தியை ஆக்கப்பூர்வமான செயல்களில் பயன்படுத்தவேண்டும். பழிக்குப்பழி போன்ற காரியங்களில் நமது ஆத்ம சக்தியை இழக்க கூடாது. 

ஆதலால் பிறரை தண்டிக்காது இருப்பது நமக்கு நன்மையே.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]. 

மணக்குடவர் உரை
தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று

மு.வரதராசனார் உரை
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நம்மை வருத்தும் ஒன்றனைப் பிறருக்குச் செய்யக்கூடாது.

English Meaning - As I taught a kid - Rajesh
Even when an untoward evil is done to you, it is better not to resent and do a unrighteous deed to them. When one feels the bitterness of the untoward incident, one normally thinks to mirror it (hurt others so that they will also get a feel of it). But such things will only grow the hatred and will take away the peace from us. Being in hatred like being in a prison. Hence, it is good to not hurt others even if they did untoward evil to us. That is why, Thiruvalluvar as previously in another Kural told us to forget such untoward incident.

Questions that I ask to the kid
When someone does a untoward incident, what should we do?

Tuesday, June 30, 2020

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] 

பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். 
அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

வரையான் - (அறத்தை) தனக்கு உரியதாக கொள்ளாமல் 

அல்ல  - மற்ற / அறம் அல்லாதவற்றை / பாவத்தை  தீயதை  ; அறத்திற்கு புறம்பான பாவங்களைச்

செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

பிறன் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

வரையாள் - உரிமையானவள் 

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவாமை - விரும்பாது இருத்தல் ; பின் செல்லாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
ஒருவன் அறம் செய்யாது பாவம் செய்பவனாகவும் இருக்கலாம், ஆனால் பிறர் மனைவியை மனதால் நோக்காமல் இருப்பது நல்லது. பிறர் மனைவியை நோக்காது இருப்பது ஒரு நல்ல தகுதியாகும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருவள்ளுவர் அறம் செய்யாது பாவம் செய்தாலும் பரவாயில்லை பிறர் மனைவியை நோக்காதே என்றார். அதனால் அறம் செய்யக்கூடாது பாவம் செய்யலாம் என்று இல்லை.

எவ்வளவு பெரிய தகுதி உடையவராக இருப்பினும் பிறர் மனைவியை நோக்கினால் அவரை கீழே இறக்கிவிடும். அதுவே எவ்வளவு தகுதி இல்லாதவர்காக இருப்பினும் பிறர் மனைவியை நோக்காது இருந்தால் அவனுக்கு அதனால் ஒரு தனி மதிப்பு உண்டாகும். 

இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதனை செய்யாதே. அதை செய்யாது இருந்தால் மதிப்பு உண்டாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கெட்டத்தனத்தின் உச்சம், அடுத்தவன் மனைவியை விரும்புவது.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
நலக்கு - நலக்கு-தல் - nalakku-   5 v. intr. prob. நலம்.To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய்நலக்கு மிறை (திருவானைக். புராணவா. 41).

உரியார் - உரி - உரி-மை கொண்டாடுபவர்

யார் - யாவர்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

நாமநீர் - அச்சத்தைத் தரும் கடல்; விந்தைகள் பல நிறைந்த/சூழ்ந்த பெருங்கடல் 

வைப்பில் - வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.

பிறற்கு - பிறர் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

உரியாள் - உரியவள்; உரிமையானவள் 

தோள் - புயம்; கை; தொளை

தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

தோயாதார் - அணைக்காதர் ; முழுகாதார் 

முழுப்பொருள்
இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்தார்.

“நாம்” என்ற சொல் அச்சத்தைக் குறிப்பதால் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் “நாமநீர்” என்பதற்கு அச்சத்தைத் தரும் கடல் என்று பொருள் செய்திருக்கிறார்கள். “நாமம்” என்றால் “வியப்பு”, ”இணக்கம்”, “ஐயம்”, “கோபம்”, “நிச்சயம்”, “நிந்தை”, “நினைப்பு” போன்ற பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். இவற்றுள் “வியப்பு” என்கிற சொல் பொருந்திவருகிறது. கடலானது பல வியத்தகு பரிமாணங்களையும், செல்வங்களையும் தன்னகத்தே கொண்டது. கடல் என்பது கடப்பதற்கு அரியது என்கிற அச்சத்தைத் தரக்கூடியதுதான்.

நாம் வாழ்கிற இந்த பூமி பெருங்கடலினால் சூழப்பட்டு உள்ளது. அக்கடல் அதனுடைய சமநிலையை தவறினால் இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அழிய நேரிடும். ஆனால் அவ்வச்சத்துக்காக மனிதன் ஒருநாளும் தன்னுடைய பயணத்தை நிறுத்தியதிலை, தேடலை மூடவுமில்லை. 

வாழ்க்கைக் கடலைப்போல கடினமான, அச்சம் தரும் அபாயங்களை உள்ளடக்கியது, கடப்பதற்கு பல சவால்களை, தவறான தூண்டுதல்களை கொண்டது, அதிலும் பிறன்மனையைக் கவர்ந்தடைதல் போன்ற பாவங்களில் மனிதனை செலுத்தக்கூடியது. அதனால் அச்சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு, பிறர் மனைவியை நினைக்காமல், பிறர் மனைவியின் தோள் சேராமல், ஒழுக்கம் பிறழாமல் நடக்கும் மனிதனுக்கு, எல்லா நன்மைகளும் உண்டு.. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.

மு.வரதராசனார் உரை
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிறன்மனை தீண்டாதே. பெருமை சேரும்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...