Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிற்றின்பம் -  சிறிது நேரம் மட்டுமே நிலைக்கின்ற இன்பம்
வெஃகு - ஆசைப்படு
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; 
அறன் அல்ல -  அறநெறிகளுக்குப் புறம்பான செயல்களை
செய்யாரே - செய்யமாட்டார்க

மற்று -  ஓர்அசைநிலை
மற்று இன்பம்  -  சிற்றின்பத்திற்கு மாற்றான பேரின்பம் அதாவது வீடு
வேண்டுபவர் - வேண்டுபவர்கள்

முழுப்பொருள்
எண்ணி எண்ணித் திளைக்கக் கூடிய, பலநாள் நிலைத்து நிற்க கூடிய, பிறரிடம் கூறி மகிழக்கூடிய நிலையான பேரின்பத்தை, வீடு தனை வேண்டுபவர் புறம்பான எந்த செயல்களையும் செய்யாமல் அறநெறிகளுக்கு உட்பட்ட செயலகளை செய்வர். அத்தகையவர்கள் சிறிது நேரம் மட்டுமே இன்பம் பயக்கும் செயல்களை செய்யமாட்டார்கள். சிற்றின்பம் இங்கு பிறர் பொருளை கவர்வதனால் வரும் இன்பமாகும் - நிலைத்து நிற்காது. 

அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலும், “குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல” என்று சொல்லியிருப்பார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை


வைவஸ்வத மனுவும் சிரத்தையும் அவனை முகமன் சொல்லி அமர்த்தினர். “உங்கள் மைந்தன் இல்லையா இங்கு?” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க!” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க!” என்றான் புதன்.

“எவர் பிறிதொருவர் கூறாத பெரும்செல்வம் ஒன்றை அவளுக்கு கன்னிப்பரிசென்று அளிக்கிறார்களோ அவனுக்குரியவள் அவள்” என்றார் வைவஸ்வத மனு. இளையை நோக்கித்திரும்பி “அது எத்தகைய பரிசு?” என்றான் புதன். “இங்கு அமர்ந்திருக்கிறாள் என் தாய், அவள் உரைக்கவேண்டும் அப்பரிசு நிகரற்றதென்று” என்றாள் இளை. புதன் “அத்தகைய பரிசுடன் வருகிறேன்” என எழுந்தான்.

புதன் தன் அன்னையிடம் சென்று “நிகரற்ற பெண் பரிசு எது? அன்னையே, சொல்க!” என்றான். முதுமகளாகிவிட்டிருந்த தாரை சொன்னாள் “எந்தப் பெண்ணும் விழைவது ஒருபோதும் அறம்பிறழா மைந்தனை மட்டுமே.” புதன் அன்னையை கூர்ந்துநோக்கி நின்றான். “ஆம் மைந்தா, அன்னையர் காமுறுவது அதன்பொருட்டு மட்டுமே. நான் விழைந்தவண்ணம் பிறந்தவன் நீ. நான் எண்ணியதும் இயற்றியதும் உன்பொருட்டே.”

புதன் திரும்பிச்சென்று வைவஸ்வத மனுவின் வாயிலை முட்டினான். அதைத் திறந்து “வருக!” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி  குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு!” என்றான்.

நெஞ்சு விம்ம கைகோத்து அதில் முகம் சேர்த்து விழிநீர் உகுத்தாள் இளை. அவள் பின் வந்துநின்று அவள் அன்னை “நன்று கூறினாய்! பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க!” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக! சந்திரகுலம் மண்ணில் எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

பரிமேலழகர் உரை
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.].

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார்; மற்றின்பம் வேண்டுபவர் - அறத்தால் வருவதும் நிலையானதும் பேரள வினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர்.

இன்பத்தின் சிறுமை காலமும் அளவும் தீமையும் பற்றியது. மற்று வேறு. ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர் உரை
சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

மு.வரதராசனார் உரை
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையார் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்.

வாசவனோர் ஆசைகொள வந்த பலனைஇந்தத்
தேசம்அறி யாதோ? சிவசிவா! - பேசுங்கால்
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

இதன் பொழிப்புரை ---

இந்திரன் ஒரு ஆசையை மனத்தில் கொள்ளவும், அதனால் வந்த பயனை இந்த உலகம் அறியுமே. சொல்லப்போனால், நிலையான இடப்த்தை விரும்புகின்றவர்கள், சிற்றின்பத்தை விரும்பி அறம் அல்லாத செய்களைச் செயமாட்டார்கள்.

கவுதம முனிவரின் மனைவி அகலிகை அழகில் சிறந்தவள். கற்புக்கரசி. அவளது அழகை வர்ணிக்காதவர்கள் யாருமில்லை. நாரதர் ஒருமுறை இந்திரனைக் கண்டபோது, அகலிகையின் அழகை அவனுக்கு எடுத்து உரைத்தார். அகலிகையை எப்படியாவது அடைய வேண்டும் என்று விரும்பினான் இந்திரன். பதிவிரதையான அகலிகையைச் சூழ்ச்சியின் மூலமே அடைய முடியும் என்று நினைத்து பூலோகத்துக்கு வந்தான்.

அதிகாலையில் ஆற்றில் நீராடி ஜபதபங்கள் செய்வது முனிவர்களுக்கு வழக்கம். இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கருதி, கவுதம முனிவரின் ஆசிரமம் முன்பு வந்து நடுஇரவில் சேவல் போல் கூவினான். அதிகாலைப் பொழுது  புலர்ந்து விட்டது என்றெண்ணிய கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குக் காலைக் கடன் கழிக்கச் சென்றார். அகலிகையும் உடன் எழுந்து தனது காலைப் பணிகளை செய்யத் தொடங்கினாள். அந் நேரத்தில் இந்திரன் கவுதம முனிவர் வேடத்தில் உள்ளே நுழைந்தான். ”ஆற்றங்கரைக்கு சென்று இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டீர்களா?” என்று கேட்டாள்.. ”இல்லை, ஏதோ பறவையின் ஒலியை கேட்டு சேவல் என்று நினைத்து எழுந்துவிட்டேன். இன்னும் பொழுது புலரவில்லை. வா படுக்கலாம்"  என்று அருகில் அழைத்து இன்பம் கொண்டான்.

ஆற்றங்கரை சென்ற முனிவர் இருள் விடியாதது கண்டு, குழப்பம் அடைந்து, தன் ஞானப் பார்வையால் நடந்ததை அறிந்து, வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். திடுக்கிட்ட அகலிகை அருகில் இருந்த இந்திரனை பார்த்தாள். அகலிகை தலைவிரி கோலமாக முனிவரின் காலில் விழுந்து ”தவறு நேர்ந்துவிட்டது” என்று கதறினாள். இந்திரன் அஞ்சி, பூனை உரு எடுத்துப் போனான்.

இந்திரனை கோபமாக அழைத்தார் கவுதம முனிவர். "மாற்றான் மனைவியின் மீது மையல் கொண்டு செய்யத் தகாத காரியத்தைச் செய்ததால் உனது உடம்பெல்லாம் பெண் குறியாக மாறட்டும்” என்று சாபம் கொடுத்தார். அகலிகையை நோக்கி ”கட்டிய கணவனுக்கும் அயலானுக்கும் வித்தியாசம் தெரியாத நீ கல்லாக மாறுவாய்” என்று சாபமிட்டார். ”நான் தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனமே கிடையாதா” என்று கதறினாள் அகலிகை.  இராமபிரான் இவ்விடத்துக்கு வரும்போது அவர் திருப்பாதம் பட்டு விமோசனம் பெறுவாய்” என்று வெளியேறினார் கவுதம முனிவர்.

பெண்குறிகளோடு வெளியில் வர அசிங்கப்பட்டு மறைந்து வாழ்ந்தான் இந்திரன். தேவலோகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இந்திரனுக்காக கவுதம முனிவரிடம் சென்று முறையிட்டனர். சாபத்தை திரும்ப பெற இயலாது. இந்திரன், தேவகுருவிடம் சென்று விநாயக பெருமானுடைய மந்திரத்தைக் கேட்டு உபதேசம் பெற்றான்.  இந்திரன் உடலில் இருந்த பெண்குறிகள் எல்லாம் கண்களாக மாறியது. அதனால்  அவனுக்கு ஆயிரம் கண்கள் ஏற்பட்டது. ஆயிரம் கண்ணான் என்று இந்திரனுக்குப் பெயர் உண்டானது.

பின்வரும் கம்பராமாயணப் பாடல்களைக் காண்க....

மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான்

பொன்னை ஏர் சடையான் கூறக் கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னையே! என்னையே! இவ் உலகியல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினாலோ? நடுவு ஒன்று முடிந்தது உண்டோ?
‘அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்த ஆறு அருளுக ‘என்றான்.

அவ் உரை இராமன் கூற, அறிவனும் அவனை நோக்கிச்
செவ்வியோய்! கேட்டி, மேல் நாள் செறி சுடர்க் குலிசத்து அண்ணல்,
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்வி போல் விழியினாள் தன் வனமுலை நணுகல் உற்றான்.

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்

புக்கு, அவேளாடும் காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்.

சரம் தரு சாபம் அல்லால் தடுப்பு அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்,
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசையாய்ப் போகல் உற்றான

தீ விழி சிந்த நோக்கிச், செய்ததை உணர்ந்து, செய்ய,
தூயவன், அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால்,
‘ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக‘ என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்.

எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, விலை  மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான்; கரும் கல் ஆய் மருங்கு வீழ்வாள்.

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர்,
‘அழல் தரும் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக ‘என்னத்,
‘தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி‘ என்றான்.

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள் கல்லாய்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின் மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு,
‘மாதவன் அருள் உண்டாக வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை ‘என்று பொன் அடி வணங்கிப் போனான்.

அருந்தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர் தம்மைக் காணா விம்மலால் வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்குக் கடன் முறை பழுது உறாமல்
புரிந்த பின், காதி செம்மல், புனித மாதவனை நோக்கி.

‘அஞ்சன வண்ணத்தான் தன் அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை, நீ அழைத்திடுக‘ என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான்.

குணங்களால் உயர்ந்த வள்ளல், கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந்தவனொடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார்.

வாசவன் --- இந்திரன். ஆசை --- அகலிகைமேல் கொண்ட காதல்.

சான்றோர் சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார் என்பது பின்வரும் பாடலால் விளங்கும்....

சிற்றின்பம் சில்நீரது ஆயினும் அஃதுஉற்றார்
மற்றுஇன்பம் யாவையும் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில். 
---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

சிற்றின்பம் சில் நீரது ஆயினும் --- சிற்றின்பம் சிறுமை உடையதாயினும், அது உற்றார் --- அவ்வின்பத்திற்கு ஆளானோர், மற்று இன்பம் யாவையும் கை விடுப --- மற்ற எல்லா இன்பங்களையும் கைவிடுவார்கள். பேரின்பம் மா கடல் --- பேரின்பம் என்னும் பெரிய கடலிலே முற்றும் ஆடுவார் தாம் ---எப்போதும் முழுகுபவர்கள்; பார் இன்பப் பாழ் கும்பியில்  வீழ்பவோ --- உலகவின்பமாகிய நரகத்தில் வீழ்வரோ? (வீழார்)

பேரின்பம் விரும்பினோர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பம் விரும்பினோர் மற்ற இன்பம் எல்லாவற்றையும் கைவிடுவர் என்பது கருத்து.     

English Meaning - As I taught a kid - Rajesh
We should not get jealous and try to snatch others items for short term happiness because it is against Integrity/Dharma. Instead of focusing on short term happiness, one should focus on attaining long term happiness i.e greatness through consistent great work

Questions that I ask to the kid
What would one person avoid doing when he wants long term happiness/ greatness? 
How will jealousy or snatching thoughts affect you ?? 

No comments:

Post a Comment