குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
பொருள்
கொடுப்பது - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை
அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை.
அறுப்பான் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.
உடுப்பதூஉம் - உடு-த்தல் - uṭu- 11 v. tr. [K. M. uḍu.] 1.To put on, as clothes; ஆடைமுதலியன தரித்தல் பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 2. To surround,encircle; சூழ்தல் அருங்குறும்புடுத்த கானப்பேரெயில்(புறநா. 21).
உண்பதூஉம் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.
இன்றிக் - இல்லாமல்.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை
முழுப்பொருள்
பிறர் இன்னொருத்தருக்கு கொடுப்பதை கண்டு பொறாமை பட்டு அதனை தடுப்பான் என்றால் அவன் மட்டும் அல்ல அவனுடைய சுற்றத்திற்கு உடுத்த ஆடையும் உண்ண உணவும் இன்றி கெட்டுப்போகும் அவனுடைய குடும்பத்தின் வாழ்வு.
பொறாமைப்படுவது மிகக் கீழான குணமாகும். பிறர்க்கு உதவி செய்வதை தடுப்பது மாபெரும் குற்றம் என்பதை வலியுறுத்தவே பொறாமைப்படுபவன் மட்டும் அல்ல அவன் சுற்றமும் சேர்ந்து கெட்டுப்போகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
கம்ப இராமாயணத்தில் வேள்விப்படலத்தில் (33), இராமனுக்கு மகாபலியின் கதையைச் சொல்லும் விசுவாமித்திரர், மகாபலி தன்னுடைய குலத்துக்கு ஆசிரியனாம் சுக்கிராச்சாரியாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.
“எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!”
பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே, நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ? ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல் விடுகின்றாய் என்பதை அறிவாயாக என்கிறான் மகாபலி. வள்ளுவனின் குறள் கருத்துக்களை குறள் சொல்லும் சொற்களிலேயே கம்பன் வெகு பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.
ஒப்புமை
குறல் 1079
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.).
மணக்குடவர் உரை
பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.
மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.
No comments:
Post a Comment