குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
பொருள்
அவ்வித்து - அவ்வி-த்தல் - avvi- 11 v. intr. 1. To become intolerant, impatient; பொறுமையொழிதல்.அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 2. To pervert the mind; மனத்தைக் கோணச்செய்தல். (குறள்,167, உரை )
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு
உடையானைச் - உடையவர், செல்வம் கொண்டவர்கள்
செய்யவள் - செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார்.
தவ்வையைக் - தவ்வை - தாய்; தமக்கை; மூதேவி.
காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.
விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.
முழுப்பொருள்
பிறருடைய செல்வம் புகழ் மகிழ்ச்சி நிம்மதி ஆகியவற்றை கண்டு சற்றும் பொறுக்கமுடியாமல் ஒருவர் பொறாமை படுவார் என்றால் அவருடன் இருக்கும் (செல்வத்தை கொடுக்கும்) திருமகள் அவனை போலவே பொறுமை இழந்து அவனை விட்டு வெளியேறுவாள். வெளியேறுவது மட்டும் இன்றி அவனுக்கு ஏற்றவள் அவளுடைய அக்காள் மூதேவி (தரித்திர நாராயணி) தான் என்று மூதேவியை அவனிடம் விட்டுவிட்டுச் செல்வாள். மூதேவி வந்தால் அவனுடைய செல்வம் எல்லாம் போய் விடும். தரித்திரம் வளரும். மன அமைதி குன்றிவிடும்.
ஏனெனில் திருமகள் அவனுக்கு செல்வத்தை கொடுத்தாள் ஆனால் அவனுக்கோ அது போதவில்லை. அவனுக்கு பிறர் செல்வத்தின் மீது பொறாமை. இவ்வளவுக்கு செல்வம் கொடுத்தாலும் அவனுக்கு போதவில்லை. மனம் நிறைவடையவில்லை. நிம்மதி கொள்ளவில்லை. ஆதலால் அவனுடன் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே சரி என்று மூட்டையை கட்டிவிடுவாள். அவன் செல்வமும் அழிந்துவிடும்.
ஆதலால் பொறாமை கொள்ளாதே என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அப்படியென்றால் வறுமையில் இருப்பவர்கள் பொறாமை கொள்ளலாமா? வீட்டிற்கு வந்தவள் பொறாமையை கண்ட உடனே சற்றும் பொறுக்காமல் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டாள். அப்படியிருப்பின், வறுமையில் இருப்பவனிடம் பொறாமை இருப்பதை கண்டால் அவள் எப்படி உள்ளே வருவாள். வரவே மாட்டாள்.
மேலும்:
தவ்வை என்ற சொல்லை இளங்கோ, வள்ளுவரைத்தவிர வேறு யாரும் சொல்லாடல் செய்ததாகத் தெரியவில்லை. தகவலாழியாம் இணயத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள். மூதேவி என்பவள் ஸ்ரீதேவிக்கு முன் பார்க்கடலில் தோன்றிய மூத்தோள், முன்னவரை குறிக்கும் “ஜேஷ்டா” என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பிடப்படுபவள். சங்க இலக்கியங்களில் மாமுகடி, காக்கைக் கொடியோள், பழையோள் என்று பதினான்கு விதப்பெயர்கள் உண்டென்று ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி என்பவர் கூறுகிறார். அவர் பழனி அருகிலுள்ள மானூரில் உள்ள சிவன்கோவில் வெளிச்சுற்றில் இவளுக்கும், இவளது மகன் குளிகன், மகள் மாந்தி இவர்களுக்குச் சிலைகள் உண்டு என்கிறார். இதில் காக்கை கொடி இடதுபுறம் திரும்பி இருத்தல், கிரீட மகுடம், மூதேவி மட்டும் பூணூல் அணியாதிருத்தல் ஆகியவை சிறப்பம்சம். மூவரும் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளனர். திருவள்ளுவர், அவ்வையார் பாடல்களில், சோம்பலின் அம்சமாக கூறப்பட்ட சூழலில் மூதேவி வழிபாடு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இளங்கோவடிகளும் தவ்வையை, தமக்கை, மூத்தவள் என்ற பொருளிலேயே கையாண்டிருக்கிறார்.
சமணர்கள் அவ்வை என்ற சொல்லைப் பெண்துறவிகளைக் குறிக்கச் சொல்லுவார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில் ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார். துறவிகள் கைகளில் ஓடேந்தி பிச்சை எடுப்பவர்கள் என்பதனால் பிச்சையெடுக்கச் செய்திடுவாள் என்று கொள்ளலாம். ஆனால் பொறாமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகையால், அதை பிச்சையெடுக்கும் பெண்துறவிகளுக்கு ஒப்பாக கூறியிருக்க முடியாது.
இணையத்தில் பொன். சரவணன் என்கிற தமிழாராய்ச்சியாளர் ஒரு வேறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறார். தவ்வை என்ற சொல்லுக்குப் பதிலாக கவ்வை என்ற சொல்லை இட்டு, “பேராசையால் காழ்ப்புணர்ச்சி உடையவனை அவனது இல்லாளின் ஆரவார ஒலியே காட்டிக் கொடுத்து விடும்” என்கிறார். செய்யவள் என்பதற்கு மனையாள் என்றம் கவ்வை என்பதற்கு ஆரவார ஒலி (சண்டையில் மிகுந்த குரல்) என்றும் பொருள் கொண்டு விளக்குகிறார்.
வள்ளுவரின் சமயச் சார்பின்மையை நிறுவ இவர் செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே எனினும், பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியகள் செய்த உரை பொருத்தமாகத்தான் உள்ளது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
No comments:
Post a Comment