Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Saturday, February 29, 2020

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஃகிஅஃகுதல் - குறைதல்; சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல்
நுணுகுதல் - நுட்பமாதல்; மெலிதல்; கூர்மையாதல்

அகன்ற அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

என்னாம் - என்ன - என்ன பயன் ?

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

வெஃகி
வெஃகல் - veḵkal   n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.

வெறிய வெறி - பயித்தியம்; மதம்; சினம்; கலக்கம்; ஒழுங்கு; வட்டம்; கள்; குடிமயக்கம்; விரைவு; மணம்; காண்க:வெறியாட்டு; வெறிப்பாட்டு; மூர்க்கத்தனம்; பேய்; தெய்வம்; ஆடு; பேதமை; அச்சம்; நோய்; ஆள்களின்றிவெறுமையாகை.

செயின் - செய்தால்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலில் அல்லது ஒரு களத்தில் மட்டும் நுட்பமாக பயின்று இருக்கலாம். அல்லது பல செயல்களில் அல்லது பல களங்களில் பயின்ற அகன்ற அறிவுப் பெற்று இருக்கலாம். அதேப்போல் நுட்பமான அறிவை பல தளங்களில் பெற்று நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருக்கலாம்.  ஆனால் இவ்வளவு கற்றும் பிறர் பொருள்மீது மயங்கி அதை விரும்பினால் (அல்லது  களவாடினால்) அவ்வளவு கற்ற அக்கல்விக்கு என்ன பயன் ? இவர்கள் உயர்ந்தோரிடம் சூழ்ச்சி செய்து வஞ்சித்து களவு செய்வர் எளியோரிடம் கடிந்து களவு செய்வர். 

ஆதலால் களவென்பது எளியோரிடம் தான் இருக்குமென்பது தவறான கருத்தாகும். நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருந்தாலும் ஒருவன் களவு செய்யக்கூடும். படித்தவர்கள் களவு செய்வார்களா? செய்வார்கள். ஏனெனில் மனம் ஒரு பைத்தியம். உதாரணமாக மளிகை கடைகள் (சூப்பர்மார்கெட்/பலப்பொருள் அங்காடி) போன்ற இடங்களுக்குச் சென்றால் அங்குத் திருடும் படித்தவர்களை பணம் படைத்தவர்களை கண்காணிப்பு கேமரா' (CCTV Camera) க்களில் அதிகம் காணலாம்.


பி.கு:
அஃகுதல் என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்ற பொருள்,  அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற ஒரு வாக்கு உண்டு. படிக்கும் போது உணர்ந்து, ஆழ்ந்து படிப்பதுதான் நுண்ணிய அறிவை வளர்க்கும். ஒருபொருளைப் பற்றி நுணுகிப்படித்து தெரிந்து கொள்ளுவதில், மற்ற துறைகள் என்று கருதப்படும் பல திசைகளிலும் உள்ள பொருள்களும் தானாகப் புலப்படும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).

மணக்குடவர் உரை
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கற்றவன் கயவனானால் அறிவிருந்தும் பயனில்லை.

English Meaning - As I taught a kid - Rajesh.
A person might have deep wisdom and broad knowledge from books and experience. But what is the use of it or how does it make sense if that wise knowledge person gets jealous of others wealth and indiscreetly indulges to covet his/her wealth. Jealousy or any act because of jealousy to covet others wealth is not a sensible act. 

Questions that I ask to the kid
A knowledgably person is found to be jealous? Remark about it

Friday, February 28, 2020

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
அழுக்காறு  - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

ஆற்றின் -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை

செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள்

இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

படு - (வி)படுத்துக்கொள்; விழு.

பாக்கு -  அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும்வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பாக்குக்குப்பதிலாகப்பயன்படும்பட்டையையுடையஒருசெடிவகை.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள்
பொறாமை (என்னும் மனதழுக்கு) கொண்டால் நமக்கு துன்பம் வரும் என்பதை அறிந்த அறிவுடையவர்கள் பிறரின் மேல் பொறாமை கொள்ளமாட்டார்கள். பிறரின் நன்மை போற்றுவர்.

ஒருவனிடம் இருக்கும் கல்வியை பார்த்துப் பொறாமை (அக்கல்வியை அவன் வினைப்பயனால் பெற்றான்), ஒருவனிடம் இருக்கும் செல்வதை பார்த்துப் பொறாமை, பொறாமை இருந்தால் மனதாலே, வாக்காலே(சொல்லாலே), செயலாலே  தீமை செய்வோம்.

மகாபாரதத்தை படித்தால் தெரியும் பொறாமையினால் துரியோதனனும் கௌரவர்களும் அழிந்தார்கள். தருமன் எல்லாவற்றையும் எத்தனையோ தடவை அவர்கள் செய்த பிழைகளை பொறுத்துதான். பொறுக்கவேண்டிய அளவிற்கு பொறுத்தான். பாண்டவர்கள் வனவாசம் முடிந்தபிறகு கிருஷ்ணன் தருமனிடம் கேட்கிறார் என்ன செய்வோம் என்று. தூதனுப்புவோம் என்று தருமன் கூறுகிறார். கிருஷ்ணன் மற்றவர்களை கேட்கிறான். பீமன் சொல்கிறான் என் அண்ணனிடம் எல்லாம் இருக்கிறது.மானம் மட்டும் இல்லையென்று. "ஊனமிலான் மானமிலாதுரைப்பதற்கென் செய்வதென்றான்". தீமை செய்தவனை எப்படி மன்னிப்பது? அதற்கு தருமன் சொல்கிறான்  "கண்மலரிற் கை படாதோ, பொருதொழிலுங் கடைநிலத்திற் கிடந்ததேயென மொழிந்தான் புகழேபூண்பான்". அதாவது கை கண்ணை அறியாமல் குத்திவிடுகிறது. கண் நோகிறது. அதனால் நாம் கையை வெட்டுகிறோமா? சண்டை வந்தால் இருவரும் சாகப்போகிறோம். ஆதலால் நிறுத்து.  உறவினர்களடா, சின்ன சின்ன பிழைகள் நடக்கும் (பாஞ்சாலிக்கு/திரௌபதிக்கு துயில் உரிந்ததையும் சேர்த்துச்சொல்கிறான்). அதனை மன்னிக்கவேண்டும். அதுவே பெருந்தன்மை. ஆனால் துரியோதனன் அதற்கு நேரெதிராக இருந்தான். அதற்கு காரணம் பொறாமை. பொறாமையினால் அந்த சந்ததியே ஓட்டுமாதமாக அழிந்தது.

அறிவுள்ளவனாக இருந்தால் பொறாமைக் கொள்ளமாட்டார் அதுவே பொறாமைக்கொள்ள நினைக்க தொடங்கிவிட்டால் அதனை சொல்ல நேரிடும். தீமை சொல்ல நேரிடும். சந்தர்ப்பம் வரும் பொழுது தீமைசெய்ய நேரிடும். ஆகவே அதனை வேரிலேயே அறுத்துவிட வேண்டும்.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.).

மணக்குடவர் உரை
அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

மு.வரதராசனார் உரை
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பொறாமை, துன்பம் தரும். வேண்டாம்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

குறள் 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
ஒறுத்தாரை - ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

ஒன்றாக - ஒருபொருளாக;  (Certainly;surely; positively) நிச்சயமாக; ஒருமிக்க.
ஒன்றுதல் - பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்; மனங்கலத்தல்; சம்மதித்தல்; உவமையாதல்; ஒருமுகப்படுதல்.

வைதல் - திட்டல், சபித்தல்; வஞ்சித்தல்; பழித்துரைத்தல்

வையாரே - திட்டமாட்டார்கள், சபிக்கமாட்டார்கள் ; வைக்க மாட்டார்கள்

வைப்பர் - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

பொறுத்தாரைப் -  தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்

பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்என்னும்நான்குவகைப்பட்டதங்கம்; உலோகம்; இரும்பு; செல்வம்; அணிகலன்; திருமங்கலியம்; பொன்நாணயம்; மேருமலை; பொலிவு; பசலை; ஒளி; அழகு; ஏற்றம்; திருமகள்; வியாழன்; சூரியன்; பெண்குறி

போல் - போல  ; போன்று

பொதிந்து -   பொதிந்துவைத்தல் - இடைவிடாதுமனத்துட்கொள்ளுதல்.

முழுப்பொருள்
சான்றாண்மை உள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் பொறுமை இருக்க வேண்டும். ஏன் சான்றாண்மை உள்ளவனாக இருத்தல் வேண்டும் ? அறிவுடையவர்களாலே நீ நினைக்கப்பட வேண்டும் என்றால் நீ சான்றுடையவனாக இருக்க வேண்டும். அறிவுடையவர்களிடம் நமக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். கற்றவர்கள் நடுவுநிலையானவர்கள் இவன் நல்லவன் போற்றக்கூடியவன் என்று சொல்லும் ஒரு நல்ல சமூதாயம். அதற்கேற்றவாறு நாம் வாழவேண்டும். சான்றாண்மைக்கு பொறுமை அவசியம்.

சில பல சமயங்களில் நீ பொறுக்கிறவனாக இருக்கிறாயா அல்லது ஒறுக்கிறவனாக இருக்கிறாயா? பிறர் உனக்கு ஒரு தீமையோ அல்லது ஒவ்வாத ஒன்றை செய்தாலோ நீ பதிலுக்கு அவனை தாக்கினாயா அல்லது பொறுத்தாயா  ?

நீ பதிலுக்கு தீமை செய்தால் அது ஒரு நாளைக்கு தான் பெருமை. பிறகு யாரும் அதைப்பற்றிப் பேசப்போவது இல்லை. அதுவே அந்த தீமையை பொறுத்தால் அறிவுடையவர்கள் எந்நாளும் உன்னை மனதில் வைத்திருப்பர்.

ஏன் பழிக்கு பழி என்று சென்றவரை நினைக்க மாட்டார்கள் என்றால், இருவரும் சமமாக நடந்துக்கொண்டார்கள். அதில் நினைக்க ஒன்றும் இல்லை. ஆனால் பொறுமையாக இருந்தால் பொன் போல பொதிந்து வைப்பார்கள்.

காந்திக்கு வெள்ளைக்காரர்கள் (பிரிட்டிஷ்க்காரர்கள்) என்னவோ இன்னல்களை தந்தார்கள். காந்தி பொறுக்கக்கூடிய எல்லைவரை பொறுத்தார். அதனால் தான் காந்தியை இன்றும் உலகம் பொன்போல் பொதிந்து (மனதின் உள்ளே) வைத்திருக்கிறார்கள்.

மீண்டும் இராமாயணத்தில் சீதையின் பொறுமையைப்பற்றி ஒரு இடத்தில் அனுமன், “இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும்” என்பான். 

இக்குறளால் பொறுமையை கடைபிடிப்பவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டு என்பதை வலியுறுத்துவதைக் காண்கிறோம்.  தண்டிப்பதில் இன்பம் இல்லை, மன்னிப்பதில்தான் இன்பம் என்று பின்னர் வரும் குறளுக்கு முன்னோடியாக சொல்லப்பட்ட பொதுக்கருத்து.  இக்கருத்தை “செல்லிடத்துக்காப்பான் சினங்காப்பான்” என்ற குறளில் சொல்லப்பட்ட கருத்தொடு இணைத்து அறிந்துகொள்ளவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.).

மணக்குடவர் உரை
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

மு.வரதராசனார் உரை
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பொங்குவோர்க்கு மதிப்பில்லை. பொறுமை காத்தால் பெருமையுண்டு.

Thirukkural - Management - Tolerance
Wise people do not admire or respect a person who cannot tolerate the injustice done to him and instead takes revenge on those who did the injustice. However, wise people admire, respect, and value higher than gold a person who tolerates injustices done to him and does not resort to revenge. This noble thought is presented in Kural 155. 

Avengers Count for nothing, forgivers
Are prized as gold.

Therefore, if you punish someone who troubled you, you will lose the respect of highly respectful people. Tolerate your troublemakers and earn the respect of great people. That is worthier than the satisfaction you get by punishing the person who troubled you.

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

குறள் 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

இறத்தல் -  கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறப்பான்  - உயிர் நீப்பான்

எய்தும் - நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்; அழித்தல்; கொல்லுதல்; பேராரவாரஞ்செய்தல்

விளியாது - அழியாது

நிற்கும் -  நிலைக்கும்

பழி  - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

முழுப்பொருள் 
நாம் கேட்கலாம், அறம் கற்க திருக்குறளைக் கற்க வந்தேன். நான் ஏன் அறம் அல்லாத பிறனில் விழையாமை பற்றி இவ்வளவு பயிலவேண்டும்? இராவணன் மிகப்பெரிய சிவபக்தன். சாமவேதத்தால் சிவபெருமானையே உலகிற்கு கொண்டுவந்தவன். அவனிடம் இந்த குற்றம் இருந்தது. அதனால் தான் இதனை அறிந்துணர்ந்து நடக்க வேண்டும். இத்தகைய குற்றம் இன்னாரிடம் தான் இருக்கும் இருக்காது என்று நம்புவதற்கில்லை. அறம் பற்றிய நல்ல எண்ணங்கள் உள்ளவன் மனதில் சில வேளைகளில் இத்தகைய குற்றங்கள் இருக்கும்.

ஏன் நீ மாற்றான் மனைவியை நோக்குகிறாய் என்று திருவள்ளுவர் கேட்கிறார் ஒருவனிடம் ? உனக்கென்று ஒரு பெண்ணை பார்த்துக்கொள்ளலாமே என்று கேட்கிறார்? அதற்கு அவன் பிறனில் விழைவது எளிது என்கிறான். ஏனெனில் நான் ஒரு பெண்ணைப்பார்த்து காதலித்து கல்யாணம் செய்து அவளை பாதுகாத்து அட்டிகை வாங்கிக்கொடுத்து என்று பல சிரமங்களை கொள்வதைவிட இது எளிது என்கிறான். அதே பிறனில் விழைய வேறொருவன் எல்லாவற்றையும் செய்திருப்பான் நாம் வெறுமென சென்று சுகத்தை அனுபவித்தால் போதும். உழுகிறவன் எல்லா வேலையும் செய்கிறான். நான் பழத்தை மட்டும் பறித்து சாப்பிடுகிறேன். திருவள்ளுவர் சொல்கிறார், அப்படி செய்யாதே, உன் குடிமுழுவதும் இந்த பாவம் நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். உனக்கும் மட்டும் பாவம் என்று நினைக்காதே உன் பரம்பரைக்கே இது பாவம். இந்த பழி உன் குடியிற்கு காலங்காலமாய் அழியாது நிற்கும் (உதாரணமாக இராவணனுக்கு இன்றும் இந்த பழி உள்ளது). ஆகவே இது எளிதாக இருக்கிறது என்பதற்காக செய்யாதே. 

பழி - இந்த உலகத்திலே பிறரால் தூற்றப்படுவது
பாவம் - அடுத்த பிறவியிலும் நம்மை வந்து துறத்துவது

மேலும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி”, “காணின் குடிப்பழியாம்”  என்று நாலடியார் கூறுகிறது.

வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியர்,
தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக் கேகும் பேதையும் பதரே” என்பார்.

திருக்குறளைப் போலவே, பிறன் நயவாமையைப் பற்றி, நாலடியார் ஒரு பத்துப்பாடல்களைக் கொண்டுள்ளது. படிக்கவேண்டியவை.

இல்லிறப்பான் பழிகொள்வான் என்பதை பிணிவீட்டுப்படலத்தில் கம்பர் அனுமன் வாய்மொழியாக இராவணனுக்கு இவ்வாறு கூறுவார்
திறம் திறம்பிய காமச் செருக்கினால்மறந்து 
தத்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதேயலால் 
அறம்திறம்பினர் யாருளர் ஆயினார்?  
இச்சைத் தன்மையினிற் பிறரில்லினை 
நச்சி நாளும் நகையுற நாணிலன்”.

யுத்தமந்திரப்படலத்தில்
“ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து, 
அறிவமைந்தாய் தீவினை நயப்புறுதல் செய்தனை” 
என்று கும்பகருணனும் இராவணனை இடித்து உரைக்கின்றான்.

“தேவியை நயந்துசிறை வைத்தசெயல் 
நன்றோ பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ” 
என்று மேலும் அவனே கேட்கிறான்.

இராமாயணம் முழுவதுமே பிறன்மனை நயத்தலை இடித்துரைக்கும் செய்தி, பலரது வாயிலாக வாலிக்கும், இராவணனுக்கும், இன்றும் இருக்கும் வாலி, இராவண குணத்தர்களுக்கும் சொல்லப்படுகிறது.  நல்லதை விடுத்து அல்லதை எடுத்துக்கொண்டு, இராவணனைக் கொண்டாடுபவர்கள் இன்றும் இருக்கிறார்களே!

மேலும் : அசோக் உரை

ஒப்புமை
”வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர்பொருள் தாரம்என் றிவற்றை
நம்பினார்” (பெரியதிரு 1.6:4)

“காதலாள் கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி
ஏதிலான் தாரம் நம்பி எளிதென” (சீவக 2769)

“காணில் குடிப் பழியாம்” (நாலடி 84)
“செய்தாயேனும் தீவினையோடும் பழியல்லால்
எய்தா தெய்தாது” (கம்ப.மாரீசன் 182)

“இச்சைத் தன்மையி னிற்பிற ரில்லினை
நச்சி நாளும் நகையுற நாணிலன்” (கம்ப.பிணிவீட்டு 99)

“ஆசில் பரதாரமவை யஞ்சிறை யடைப்பேம்
மாசில்புகழ் காதலுற வேம்வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானிடரை நன்றுநம கொற்றம்” (கம்ப.இராவணன் மந்திரப் 52)


பரிமேலழகர் உரை
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.).

மணக்குடவர் உரை
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது

மு.வரதராசனார் உரை
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

சாலமன் பாப்பையா உரை
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்னொருவன் மனைவியை எளிதாக அடைய எண்ணுதலே இன்னல்.

Thursday, February 27, 2020

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

போன்று - போல

இல்லை - இருக்காது, தங்காது

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

இலான் - இல்லாதவன்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

முழுப்பொருள்
பொறாமை உள்ளவரிடம் செல்வம் நிற்காது/இருக்காது. அதுப்போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ச்சி வராது. அது அவனை மட்டும் அல்ல அவனது  குடியினையும் கெடுக்கும்.

பிறருடைய ஆக்கங்களை வளர்ச்சிகளை கண்டு நீ பொறுக்கமுடியாவிட்டால்  சந்தோஷப்பட  முடியாவிட்டால்  உனது மனதில்  அழுக்கு இருக்கு என்று  அர்த்தம்.  மகாலக்ஷ்மி உன்னை விட்டு போய்விடுவாள். "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்" குறள் 0167 கல்வியும் போய்விடும்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க, தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று
நூல்: நீதிநெறி விளக்கம் (#14)
( "உனக்குக் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு"  பாட்டு  வருகிறதா ?)

ஆசாரக்கோவை “பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்” என்கிறது. திரிகடுகம், “என்றும் அழுக்காறு இகந்தானும், – இம் மூவர்நின்ற புகழ் உடையார்.” என்கிறது. இனியவை நாற்பது, பாடல் எண் 36-ல் “அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே” (மனதிற்கு கேடான பொறாமைச் சொற்களை சொல்லாமல் இருத்தல் இனிது என்கிறது).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.).

மணக்குடவர் உரை
மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பொறாமை, செல்வம் அழிக்கும். ஒழுங்கீனம் வளர்ச்சியைக் கெடுக்கும்.

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
When we are jealous of others our wealth will not stay with us. Similarly if we are not disciplined we will not have growth in life.

Questions that I ask to the kid
What does jealous people don't have ? why? what does indiscipline don't have?

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

குறள் 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எல்லார் - தேவர்.
எல்லார்க்கும் -  எல்லோருக்கும்

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

உள்ளும் உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )  

செல்வர்க்கேசெல்வர் - செல்வம் உடையவர் 

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

தகைத்து -  tkaittu   A symbolic verb, third per son neuter. It is of a similar nature, it is like, it is fit, தன்மையுடையது. (p.) மன்னுயிரோம்புந்தகைத்தே. It is calculated to protect living souls.

தகைத்தல் - தடுத்தல்; கட்டுதல்; சுற்றுதல்; வாட்டுதல்; அரிதல்; நெருங்கப்பெறுதல்; களைத்தல்
தகைதல் - தடுத்தல்; ஆணையிட்டுத்தடுத்தல்; பிடித்தல்; அடக்குதல்; உள்ளடக்குதல்; பிணைத்தல்; தளர்தல்; ஒத்தல்; அழகுபெற்றிருத்தல்.

முழுப்பொருள் 
எல்லோருக்கும் அடக்கம் என்னும் பணிவு நல்லது சேர்க்கும். எல்லோருக்கும் பணிவு அணிகக்கலன். இவர்கள் உள்ளும் செல்வந்தர்களுக்கு (பணக்காரர்களுக்கு) பணிவு என்பதே செல்வமாகும். அது அவர்களுடன் இருந்தால் அது அவர்களுக்கும் இன்னும் அழகு சேர்க்கும். 

பெருமிதம் மனிதனை அடங்கவிடாது. பெருமிதம் உள்ளவர்கள் அடங்கவேண்டும். ஒருவனுக்கு ஒரு மல்யுத்தவீரிடம் (கோபம் செல்லாத இடம்) கோபம் வந்து அதை நீ அடக்கினால் அது அடக்கம் இல்லை. ஒரு குழந்தையிடம் (கோபம் செல்லும்  இடம்) கோபம் வந்து நீ கோபத்தை அடக்கினால் அதுவே அடக்கம். 

செல்வம், படிப்பு, குடிப்பிறப்பு ஆகியவற்றால் பெருமிதம் வரும். ஆனால் பணக்காரர் மட்டும் இங்கு திருவள்ளுவர் கூறுகிறார். ஏனெனில் நல்ல படிப்பே பெருமிதத்தை அடங்கிவிடும், நல்ல குடிப்பிறப்பு (குடியின் சூழலே) பெருமிதத்தை அடங்கிவிடும். ஆனால் பணம் அப்படிப்பட்டது அல்ல. செல்வம் பணியவிடாது. செல்வம் என்னும் திமிர் பிழைசெய்ய வைக்கும். ஆதலால் தான் பணக்காரன் அடங்கினால் அது சிறப்பு வாய்ந்ததாகும். அவன் மற்றவர்களால் இன்னும் நேசிக்கப்படுவான். 

கீழ்காணும் குறளில் பணிவுடமை அணியாகச் சொல்லப் பட்டிருப்பதைக் காணலாம்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்க
அணியல்ல மற்றுப் பிற.

பின்னர் வரும் குடியியலில் மானம் அதிகாரத்திலும் (குறள் 963), “பெருக்கத்து வேண்டும் பணிவு” என்பார்.  குடியியலிலேயே சான்றாண்மை அதிகாரத்தில் (குறள்: 985) உள்ள குறளில் (ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.)பணிதல் என்பது சான்றோர் தம் பகைவரை, பகைமையிலிருந்து மாற்றும் கருவி என்பார். இன்றும் இரண்டு குறள்கள்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பணிதல் எல்லோர்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம். செல்வம் - மிகுதி.

மு.வரதராசனார் உரை
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பணக்காரனுக்குப் பணிவே பெருஞ்செல்வம்.

English Meaning - As I taught a kid - Rajesh
For everyone, humbleness/modesty is a good thing. Yet, when rich people, scholarly people, high educated people, high achievers are humble then such a humbleness/modesty itself is a great jewel looking good upon them. Also remember, with wealth/achievements it is easy to fall for ego/arrogance which would pave way for mistakes. Staying humble and keeping the foot ground, helps to climb and achieve more.

Questions that I ask to the kid
Why humility/modesty is essential for achievers, successful people, wealth people etc?

Wednesday, February 26, 2020

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
கெடு - கேடு; வறுமை; தவணை; எல்லை.

வல்  - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

யான் - தன்மையொருமைப்பெயர்

என்பது - ṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) 
அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

நெஞ்சம் - நெஞ்சு; அன்பு.

நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி.

ஓரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறை

அல்ல  - அது மட்டும் அல்ல

செயின் - செய்தால்

முழுப்பொருள்
தன்னுடைய நெஞ்சம் நடுவுநிலைமை தவறி நீதி தவறி ஒரு செயலை செய்ய நினைத்தாலே வரப்போகின்ற கெடுதலுக்கான அறிகுறி. ஏனெனில் நடுவுநிலைமை தவறினால் நமக்கு கேடுவருவது நிச்சயம். ஆதலால் நீதி தவற நினைத்தாலே கேடு வரும்.

பொதுவாக அறிகுறிகள் புறத்தில்தான் நாம் பார்ப்போம். ஆனால் நடுவுநிலைமை தவற முற்படும்போது தன்னுடைய நெஞ்சிற்கு உள்ளே தெரிந்துவிடும். அது நம்மை எச்சரிக்கும். வரக்கூடிய கெடுதலை பற்றி நம் நெஞ்சமே முதல் அறிகுறியை கொடுக்கிறது. வேறு எங்கும் போக வேண்டியதில்லை. வேறு யாரும் சொல்லவேண்டியதில்லை. ஆதலால் யாரும் நமக்கு சொல்லவில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முடியாது.

அதுமட்டுமின்றி நீதி தவற நினைத்தாலே நீதி தவறியது போன்றதாகும் கேடு வரும். ஆதலால் நீதி தவறுவதைப்பற்றி நினைக்கக்கூட கூடாது.

பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாம் பழமொழியில், இப்பாடலைப் பார்ப்போம்.

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.

இது நடுவுநிலை தவறாமைப்பற்றி நேரடியாகக் கூறாவிடினும், இப்பாடால் சொல்வது இதுதான். தான் கெடுவோம் என்ற இடத்திலும், நிலையிலும் கூட ஒருவர் சிறு பழிவராத செயல்களையே செய்தல் வேண்டும். ஏனென்றால் மலைகளாலும் கடல்களாலும் சூழப்பட்ட இவ்வுலகில் கல்கூட தேய்ந்து விடும், ஆனால் கூறிய சொல்லும் அதன் விளைவும் விட்டுச்செல்லும் வடுக்கள் மாறாமல் நின்றுவிடும். நடுவு நிலைமை தவறுவது பழிவரக்கூடியச் செயல்தானே! கெட்டாலும் பழிச்செயல்கள் செய்யக்கூடாதெனில், பழிச்செயல்களினால் கெடுவது உறுதிதானே?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.).

மணக்குடவர் உரை
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

மு.வரதராசனார் உரை
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நடுநிலை தவறலாம் என்று தோன்றுவது அழிவின் அறிகுறி.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...