கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

thirukkural meaning விளக்கம் குறள் 116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் அறத்துப்பால், இல்லறவியல், நடுவு நிலைமை
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
கெடு - கேடு; வறுமை; தவணை; எல்லை.

வல்  - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

யான் - தன்மையொருமைப்பெயர்

என்பது - ṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை ) 
அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

நெஞ்சம் - நெஞ்சு; அன்பு.

நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி.

ஓரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறை

அல்ல  - அது மட்டும் அல்ல

செயின் - செய்தால்

முழுப்பொருள்
தன்னுடைய நெஞ்சம் நடுவுநிலைமை தவறி நீதி தவறி ஒரு செயலை செய்ய நினைத்தாலே வரப்போகின்ற கெடுதலுக்கான அறிகுறி. ஏனெனில் நடுவுநிலைமை தவறினால் நமக்கு கேடுவருவது நிச்சயம். ஆதலால் நீதி தவற நினைத்தாலே கேடு வரும்.

பொதுவாக அறிகுறிகள் புறத்தில்தான் நாம் பார்ப்போம். ஆனால் நடுவுநிலைமை தவற முற்படும்போது தன்னுடைய நெஞ்சிற்கு உள்ளே தெரிந்துவிடும். அது நம்மை எச்சரிக்கும். வரக்கூடிய கெடுதலை பற்றி நம் நெஞ்சமே முதல் அறிகுறியை கொடுக்கிறது. வேறு எங்கும் போக வேண்டியதில்லை. வேறு யாரும் சொல்லவேண்டியதில்லை. ஆதலால் யாரும் நமக்கு சொல்லவில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முடியாது.

அதுமட்டுமின்றி நீதி தவற நினைத்தாலே நீதி தவறியது போன்றதாகும் கேடு வரும். ஆதலால் நீதி தவறுவதைப்பற்றி நினைக்கக்கூட கூடாது.

பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாம் பழமொழியில், இப்பாடலைப் பார்ப்போம்.

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.

இது நடுவுநிலை தவறாமைப்பற்றி நேரடியாகக் கூறாவிடினும், இப்பாடால் சொல்வது இதுதான். தான் கெடுவோம் என்ற இடத்திலும், நிலையிலும் கூட ஒருவர் சிறு பழிவராத செயல்களையே செய்தல் வேண்டும். ஏனென்றால் மலைகளாலும் கடல்களாலும் சூழப்பட்ட இவ்வுலகில் கல்கூட தேய்ந்து விடும், ஆனால் கூறிய சொல்லும் அதன் விளைவும் விட்டுச்செல்லும் வடுக்கள் மாறாமல் நின்றுவிடும். நடுவு நிலைமை தவறுவது பழிவரக்கூடியச் செயல்தானே! கெட்டாலும் பழிச்செயல்கள் செய்யக்கூடாதெனில், பழிச்செயல்களினால் கெடுவது உறுதிதானே?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.).

மணக்குடவர் உரை
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

மு.வரதராசனார் உரை
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நடுநிலை தவறலாம் என்று தோன்றுவது அழிவின் அறிகுறி.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain