Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Tuesday, November 7, 2017

அன்பிலன் ஆன்ற துணையிலன்

குறள் 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

இலன் - இல்லை என்று

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இலன் - இல்லை என்று

தான் - tāṉ ] [obl. தன்   avantaan அவன்தான் himself, herself, itself (resumptive pronoun)  ; படர்க்கை ஒருமைப் பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றி இஃது ஒன்று' என்று பொருள் படுவதோர் இடைச்சொல்.

துவ்வான் - துவ்வாதவன் - வறிஞன்; tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன்; பொருளில்லாதவன்; vaṟiñaṉ   n. வறு-மை. Poorman, destitute person; தரித்திரன்.

அரி - அறு; slice, cut, reap, 
அரி-தல் - ari-   4 v. tr. 1. To cut off, nip;அறுத்தல். நாக்கிரியந் தயமுகனார் (கம்பரா. சூர்ப்ப. 125).2. To cut away the excess clay from the mouldin making bricks; செங்கலறுத்தல். (J.)  

என் பரியும் - எவ்வாறு களைவான், நீக்குவான்

ஏதிலான் - ஏது + இன்-மை.Poor man; தரித்திரன். 
துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

முழுப்பொருள்
”ஒரு மரம் தோப்பாகாது” என்று ஒரு பழமொழியை நாம் அறிவோம். இதனை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நமது பகைவர்களை நாம் வெல்ல வேண்டும் என்றால் அதற்கு தனியாளாய் களத்தில் நின்றால் அவ்வளவு எளிதில் நடக்காது. அதற்கு நமக்கு துணை வேண்டும். அதையே திருவள்ளுவர் இக்குறளில் சொல்லுகிறார்.

தன்னுடைய நாட்டுமக்கள் மீது அன்பு இல்லாது இருப்பவர்கள், தனக்கு மாட்சிமை தரக்கூடிய நமது துணைவி / அமைச்சர்கள் / நண்பர்கள்/ உறவினர்கள் (அலுவலகத்தில் மேலாலர்கள்) என்று ஏதும் இல்லாதவர்கள், தனி ஆளாய் நின்று வெல்லக்கூடிய ஆற்றலும் இல்லாதவர்கள் எவ்வாறு வலிமை கொண்ட பகைவர்களை வெல்ல முடியும் என்று திருவள்ளுவர் கேட்கிறார்.

வலிமையை நீக்குவது என்பது, அதற்கெதிராக நின்று வெல்லுவது. பிறர்மேல் அன்பு கொள்ளும் தன்மை கொண்டவர்கள், அவர்கள் ஆதரவை வெல்லுவார்கள். அதேபோன்று உற்ற துணையாக ஒருவர் இருக்கையிலே அவர்களும் பகைக்கெதிராக ஆதரிப்பர். தாமே வலிமையோடு இருப்பின், அதுவும் பகையைத் தொலைக்க உதவும். இவ்வாறு தேவையானவை எதுவுமே இல்லாமல் எதிர்வரும் பகையைத் தொலைப்பது எவ்வாறு? என்ற கேள்வியை முன் வைக்கிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.).

மணக்குடவர் உரை
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

பகல்கருதிப் பற்றா செயினும்

குறள் 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

கருதிப் - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

பற்றா - பற்று அல்லாமல்

செயினும் -செய்தாலும்

இகல் -  பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

கருதி - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்யாமை - செய்யாதிருத்தல்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
ஒருவர் நம்முடன் கூடக்கூடாது என்று எண்ணி வெறுக்கத்தக்கச் செயல்களை நமக்கு செய்தாலும் அதனை பொருட்படுத்தாது இருத்தல் வேண்டும். ஏட்டிக்குப் போட்டியாக அவருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை, கீழ்மையான செயல்களை, வெறுக்கத்தக்க செயல்களை செய்யாது இருத்தலே சிறந்தது ஆகும்.

இக்குறளில் பார்க்க வேண்டிய ஒன்று என்னவென்றால் எது மாட்சிமை என்றால் பிறருக்கு (எதிரிக்கும், பகைவருக்கும்) இன்னா செய்யாதிருத்தல். அதுமட்டும் இன்றி நம்முடைய ஆற்றலையும் எண்ணங்களையும் ஆக்கப்பூர்வமான செயல்களில் செலவிட வேண்டும். பயன்தராத செயல்களில் ஈடுபடக்கூடாது.

ஒரு கண்ணுக்கு மறுகண் என்று பழி தீர்க்கும் படலத்திலேயே வாழ்ந்தால் உலகம் குருடாகித்தானே போகும்? இதையே இக்குறள் வாயிலாக உணர்த்துகிறார். இகலை இகல வேண்டும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது. (செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று.).

மணக்குடவர் உரை
தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி இன்னாதவற்றைச் செய்தாராயினும் அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற்றைச் செய்யாமை நன்று. இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின் மாறுபடுதற்குக் காரணமுள வழியும் அதனைத் தவிர்தல் வேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

Sunday, November 5, 2017

அறிவின்மை இன்மையுள் இன்மை

குறள் 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
புல்லறிவாண்மை - அறிவின்மை

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

இன்மையுள் - இல்லாமையில், வறுமையுள்

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

பிறிது - வேறானது, மற்றது

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

இன்மையா -இன்மையாக; வறுமையாக

வையாது - கருதாது

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
அறிவு என்ரென்பது அறியாமையில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு ஞான ஒளி ஆகும். அறிவது ஒவ்வொன்றும் அறியாமையே என்று சொல்லுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா ஞானத்தையும் ஒரு மனிதனால் கற்பது என்பது முடியாத செயல். ஆதலால் அறியவேண்டியவற்றை அறிந்துக்கொள்ளவேண்டும். ஆதலால் அறிவு என்பது அறியவேண்டியவை.

இத்தகைய அறிவு நேரடியாக நம்முடைய முளைக்குள் வந்து உட்காராது. அறீவினத்தை போக்கும் ஞானம் தனை நாம் தேடிச்செல்ல வேண்டும். அதற்கான முயற்சிதனை செய்ய வேண்டும். இல்லையேல் அது பேதைமை எனப்படும். அதற்கு தண்டனையும் உண்டு.

ஒருவருக்கு நல்ல ஆரோக்கியம், உணவு, தங்கும் இடம், உறவினர்கள், மக்கள், சுற்றுப்புறம், உடுத்த ஆடை, பொன், பொருள் என்ற யாவும் இல்லாமல் இருக்கலாம். அத்தகைய நிலையை வறுமை என்று சொல்லுவர். ஆனால் இவ்வறுமையெல்லாம் வறுமை என்று கருதப்பட மாட்டாது. உண்மையில் அறிவின்மை என்பது வறுமையானவற்றுள் எல்லாம் வறுமை ஆகும். ஆக அறிவு / ஞானம் என்றென்பதே நிலையான செல்வம் மற்றவை யெல்லாம் பொருளற்ற நிலையில்லா செல்வம் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

எது அறிவு?


நீ செய்யவேண்டியவற்றை அறிந்து செய்தால் பொருள்கிட்டும். வறுமை அகலும் என்பதை நினைவில்கொள்க.

ஒப்புமை


நாலடியார் பாடல், அறிவின்மையை, 
“நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி 251) என்கிறது. 

பழமொழிப்பாடலும், 
அறிவினால் மாட்சியொன்றில்லா ஒருவன் 
பிறிதினால் மாண்ட தெவனாம்” (பழமொழி 271) என்னும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , ஏனைப் புல்லறிவாண்மை கூறுகின்றார் . அது புல்லிய அறிவினை ஆள்தல் தன்மை என விரியும் .அஃதாவது , தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர்கூறும் உறுதிச்சொல் கொள்ளாமை.]

இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்: அது புண்ணியம் செய்யாதார்மாட்டே சேருமாதலான்.

மு.வரதராசனார் உரை
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Among all poverties having no knowledge is the poorest thing. Because No knowledge gives more sufferings that all other poverties. Hence, world will not consider other things as poverty. World considers no knowledge as the only poverty. If one has knowledge, one can earn anything. If one doesn't have knowledge, one cannot protect whatsoever wealth he has

Questions that I ask to the kid
What is considered as true poverty? why others are not considered as poverty?
Why no knowledge is real poverty? Consequence of no knowledge? Consequences of knowledge?

பேதைமை என்பதொன்று யாதெனின்

குறள் 831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

என்பது - என்ரென்பது;

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

யாது? - எது?, கள், யாதி, இராக்கதன்; பிசாசு;  நினைவு.

எனின் - என்றால்; என்றுசொல்லின்; என்கையால்.
ஏதம் - துன்பம், குற்றம், கேடு
கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.
ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்.
போகவிடல் - செல்ல விடுதல்

முழுப்பொருள்
விவேகமற்ற செயல், அறிவற்ற செயல், மடமை என்பது என்னவென்றால் கேடு விளைவிக்க கூடிய செயல்கள்/ துன்பம் தரக்கூடிய செயல்கள் தனை பற்றிக்கொண்டு அதனை செயல்படுத்துதலுக்கு மாறாக நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல்களை செய்யாமல் கைவிடுதல்.  ஆதலால் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யாது கேடான செயல்களை செய்வது, சோம்பலில் திளைப்பது, போன்றது அறிவின்மை. இஃது அல்லாவற்றிலும் மடமையாகும்.

அறியாமையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அறிய அறிய அறியாமை வற்றிவிடும். ஆனால், பேதைமையை ? ஏதங்கொண்டு ஊதியம் தவறவிட்ட ஒவ்வோரிடத்திலும் நாம் பேதைகளாகத்தாம் நின்றிருப்போம். அதைத் தீர்ப்பதற்கு விழிப்போடிருத்தலே வழி.

அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் தம்முடைய அறிவீனத்தில் பகைவர்கள் செய்வதெல்லாம் மன்னிக்கத்தக்கதில்லையா என்று வினவுகையில், அறியாமை தவறல்ல, அதைப் போக்கும் ஞானத்தைத் தேடாத அறிவீனத்துக்கு தண்டனையே சரியான மருந்து என்பான் கண்ணன். ஆக அறிவீனத்தைக் குற்றமாகப் பார்ப்பது சரியே என்று தோன்றுகிறது. உலகே கல்விக்கூடமாக இருக்கையில் கற்றலுக்குப் பலவழிகள் இருக்கையில், பேதைமையைக் கைக்கொள்வது மற்ற குற்றங்களில் மிக்கதாகும்.

பி.கு: இதற்கு மற்றொருப் பொருளும் எனக்கு தோன்றுகிறது. ஒரு நற்பயன் விளைவிக்கக்கூடிய செயல் என்றால் அதற்கு உழைக்கவேண்டும். உழைப்பு உடலுக்கு ஒரு அசதியை (துன்பத்தையும்) தரலாம். வெறும் அசதியை மட்டும் கருத்தில்கொண்டு அச்செயலினால் ஏற்படும் நற்பயனை கருத்தில்கொள்ளாமல் அச்செயலை கைவிடுதல் என்பது பேதைமையாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , அந்நட்பினை எதிர்மறுத்துப் பகை முகத்தாற் கூறிய தொடங்கினார் . அப் பகைதான் முற்றக் கடியுங் குற்றமன்மையின் உளவாய வெகுளியானும் காமத்தானும் வருவதாம் . அவற்றுள் வெகுளியான் வருவன ஐந்துஅதிகாரத்தானும் , காமத்தான் வருவன ஐந்து அதிகாரத்தானும் கூறுவார் , அவ்விரண்டற்கும் அடியாய மயக்கத்தை இரு வகைப்படுத்து , இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் பேதைமை கூறுகின்றார் .அஃதாவது , யாதும் அறியாமை .]

பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
நாட்டில் எவ்வகை மக்கள் அதிகம் என்று பார்த்தோமானால் நிச்சயம் அறிவாளிகள் அல்லர். அவர்கள் எல்லாக் காலத்திலும் சிறு தொகையினராகவே உள்ளனர். 

அறிவு என்பதும் பல்வகை. நடைமுறை அறிவு, துறைசார்ந்த அறிவு, அவையறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு, பொது அறிவு என அறிவுக்குக் கிளைகள் நூறு. ஒரு சராசரியான அளவீட்டை நிர்ணயித்து அத்தகைய அறிவு மட்டத்தை அடைந்தவர்களை இனங்கண்டால் சோர்வு மிஞ்சக் கூடும்.

அப்படியானால் நாட்டில் அறிவில்லாதவர்களே அதிகமிருக்கிறார்களா ? தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவன் அறிவில்லாதவனா ? அறிவுக்கு நிறையளவு என்று ஏதும் உள்ளதா ? அறிவு என்பதற்கும் அறிவுற்றாயிற்று என்று அமைவதற்கும் அளவுமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா ? முடிவற்ற கேள்விகள் தோன்றுகின்றன. தெளிவற்ற விடைகளே தென்படுகின்றன. 

அதற்கு மாறாக, அறியாமையை அளந்துவிடுவது எளிது. பேருந்துத் தட எண் தெரியவில்லை என்பதை அறியாமையாகக் கொள்ள வேண்டியதில்லை. வாகனம் ஓட்டத் தெரிந்தும் எரிகுமிழ் (Spark Plug) துலக்கத் தெரியவில்லை என்பதைக் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை. 

ஆனால், ஈட்டத் தெரிந்த பணத்தைக் காக்கத் தெரியவில்லை என்றால் என்னவென்பது ? எல்லாம் தெரிந்திருந்தும் எடுத்தியம்பத் தெரியவில்லை என்றால் என்னவென்பது ? இது ஒருவகை அறியாமை. புன்மை நிலையெனக் கொள்ள முடியாது என்றாலும் குணச்சித்திரத்தில் ஏதோ குறைபாடு, ஆர்வமின்மை, அருமை உணராமை, பார்வைத் தெளிவின்மை, பக்குவப்படாமை. சரிவுக்கு உத்தரவாதமுள்ள போதாக்குறையான நிலைமை இது.

இதற்குத் தமிழில் தனியான சொல்லொன்று இருக்கிறது. பேதைமை. அப்படிப்பட்டவன் பேதை. ஒன்றிலும் தெளிவற்ற, பிரித்தறியத் தெரியாத, தான் கருதுவதே சரியென்ற மயக்கத்திலேயே வாழ்கின்றவன். இதற்குப் பேதுறுதல் என்று பெயர். 

பேதுற்றவன் பேதை. அவனின் அந்நிலை பேதைமை. கூட்டமில்லாமல் போகின்ற பேருந்தில் ஏறாமல், எங்கோ வேடிக்கை பார்த்திருந்துவிட்டு நெரிசலான பேருந்தில் ஏறிக் கசங்கி வதங்கிப் பயணம் செய்யும் நிலை. வேர்க்கடலையை உடைத்துத் தின்னும்போது வேறேதோ நினைவுக்கு ஆட்பட்டால் பருப்பைக் கீழே போட்டுவிட்டுத் தொட்டுகளை வாய்க்குள் போடுவோமல்லவா, அத்தகைய நிலை !

இவையெல்லாம் பெருந்தவறில்லை. சிறு பிழைகள். கண்டிக்கத்தக்கவற்றைத்தானே கணக்கில் கொள்ள வேண்டும் ? ஆம். வள்ளுவரும் அவற்றைத்தான் பேதைமை என்கிறார். பேதைமை என்பது என்னவென்று அதிகாரத்தின் முதல் குறளில் விளக்கிய பின்பே மேற்செல்கிறார். 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

- என்பதே அக்குறள். இலாபத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் எடுத்துக்கொள்ளாமல் போக்கடித்துவிட்டு நட்டத்தை வைத்துக்கொண்டு விழிப்பது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது. ஏதம் என்றால் துன்பம்/குற்றம்/கேடு. ஊதியம் என்றால் பலன். 

பெண்ணுக்கு நல்ல நல்ல வரன்கள் தேடி வந்திருக்கும். அவை எவற்றிலும் திருப்தியுறாமல் எதையாவது குறைகூறி திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவது. இறுதியில் காலங்கடந்துவிட, கிடைத்த மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பது. நல்ல நல்ல வேலைகளைத் தொலைத்துவிட்டு இப்போது பொருத்தமேயில்லாத இடத்தில் அரைமனத்தோடு பணியாற்றுவது. வீட்டிற்கருகிலேயே வாய்த்த சிறு நிலத்தை வாங்காமல் விளம்பரத்தில் மயங்கி சென்னைக்கு அருகில் என்று செங்கல்பட்டில் வாங்குவது. 

அறியாமையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அறிய அறிய அறியாமை வற்றிவிடும். ஆனால், பேதைமையை ? ஏதங்கொண்டு ஊதியம் தவறவிட்ட ஒவ்வோரிடத்திலும் நாம் பேதைகளாகத்தாம் நின்றிருப்போம். அதைத் தீர்ப்பதற்கு விழிப்போடிருத்தலே வழி.

English Meaning - As I taught a kid - Rajesh
Stupidity is accepting and following negative things (bad habits, bad ideas, lethargy etc) that leads to a destructive path, loss, and not embracing positive things (good habits, bias for actions, consistency, focus etc), forsaking profits, advantages, productive things etc.
For the sake of long term benefits, one can accept any kind of difficulty in the work and not give room for stupidity/mediocrity/lethargy etc.

Questions that I ask to the kid
What is stupidity?

சீரிடம் காணின் எறிதற்குப்

குறள் 821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

காணின் - கண்டால்

எறிதல் - eṟi-   4 v. tr. 1. To rebuke; இடித்துரைத்தல். தெவ்வார்போலத் தீதற வெறிந்தும் (சீவக.1895). 2. To stroke, pat; தடவுதல். தாய்தன்கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . .குழவிபோல (சீவக. 930).
எறுப்பிடைச்செய்யுள் eṟuppiṭai-c-cey-yuḷ, n. எறும்பு + இடை +. (Pros.) A kind ofmetre; பிபீலிகாமத்திமம். (யாப். வி. பக். 481.)

எறிதல் - eṟi-   4 v. [M.eṟi.] tr. 1. Tothrow, cast, fling, discharge, hurl; வீசியெறிதல். கல்லெறிந் தன்ன (நாலடி, 66). 2. To hack,cut into pieces; வெட்டுதல் எறிந்து களம்படுத்தவேந்துவேள் (புறநா. 19, 12). 3. To chop, asmutton; அறுத்தல் எறிக திற்றி (பதிற்றுப். 18, 2).4. To shiver into pieces, smash; முறித்தல் கதவெறியாச் சிவந்து ரா அய் (புறநா. 4, 10). 5. To pick,as flowers; பறித்தல் எறியார்பூங் கொன்றையினோடும்(தேவா. 189, 5). 6. To destroy; அழித்தல் குறும்பெறிந்தன்று (பு. வெ 1, 8). 7. To beat, as adrum; அடித்தல் சிறுவரை நின்றே யெறிப பறையினை (நாலடி, 24). 8. To drive, as a nail;அறைதல். பொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு(புறநா. 15). 9. To sting, as a scorpion; கொடுக்காற் கொட்டுதல் விடத்தே ளெறிந்தா லேபோல(திவ். நாய்ச். 3, 6). 10. To reject, brushaside, as advice; ஒதுக்கிவிடுதல். 11. To leaveuneaten, said of part of food; உண்ணாமல்நீக்கிவிடுதல். ஏன் சோற்றை யெறிகிறாய்? 12. Todrive off, scare away, as birds from corn; ஒட்டுதல்  

எறிதற்குப் - வெட்டி எறிவதற்கு; முறிப்பதற்கு; அழிப்பதற்கு

பட்டடை - அடைகல்; கொல்லன்களரி; குவியல்; தானியவுறை; தோணிதாங்கி; தலையணையாகஉதவும்மணை; உட்காரும்பலகை; அதிர்வேட்டுக்குழாய்கள்பதித்தகட்டை; நரம்புகளின்இளியிசை; இறைப்புப்பாசனத்தால்விளையும்கழனி; கழுத்தணி
பட்டடை - 2. [K. paṭṭaḍi.] Smithy,forge; கொல்லன் களரி 3. Stock, heap, pile,as of straw, firewood or timber; குவியல் (W.)4

நேரா - நேரார் - nērār   நேரலர், s. see under நேர் v. enemies, foes, பகைவர்.
நேரா - நேர்மையாக இல்லாதவர்; உண்மையாக இல்லாதவர்
நேரா - உள்ளத்தால் நம்மை விரும்பாமல், கூடியிராது

நிரந்தம் - nirantam   s. being closely pressed by a pursuing enemy, நெருக்கிடை.
நிரந்தவர் நட்பு -  வெளியுலகில் நெருங்கிய நண்பரைப்போல் காட்டிக்கொள்ளுபவர் போன்றவரது நட்பு.

முழுப்பொருள்


 

உண்மை அல்லாது உறவிலே நேர்மை இல்லாத நட்பு என்பதே கூடாநட்பு. அதற்கு உதாரணம் என்பது கொல்லன் பயன்படுத்தும் பட்டடை என்கிறார் திருவள்ளுவர். 

கொல்லன் இரும்பை அடித்து வளைக்கும் கல் அடைகல், அல்லது பட்டடைக் கல் எனப்படும். கொலைக்களத்து சிரத்தை வெட்டுங்கல்லும் அதே போன்றதே. இரண்டுமே நம்மை தாங்கும் சுமைதாங்கிக் கற்களாய் தோன்றினும், தக்கநேரத்தில் நம்மை துன்புறுத்துவனவே. சிலநேரம் நம்மை வெட்டி எறிந்துவிடும்.

அதுப்போல நம்முடன் உள்ளத்தால் உண்மையான அன்புக்கொள்ளாமல் நம்மை தாங்கும் சுமைதாங்கிப் போல நம்முடன் நட்புக்கொள்ளுவோர் இனிதாக பேசுவர் ஆனால் நம்மிடன் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்ப்பர். இஃது பட்டறையில் உள்ள அடைகல் போன்று நம்மை தாங்கிக்கொண்டு பின்பு நம்மை அடித்து (அவர்கள் தேவைக்கு ஏற்ப) வளைப்பர் அல்லது கொல்லுவதற்கு சமம். இது நமக்கு துன்பத்தையே தரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி , ஏனைக் கூடா நட்புக் கூறுகின்றார் .அஃதாவது , பகைமையான் அகத்தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடியொழுகுவார் நட்பு.]

நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம். (எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.).

மணக்குடவர் உரை
முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு. இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.

மு.வரதராசனார் உரை
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

பருகுவார் போலினும் பண்பிலார்

குறள் 811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பருகுதல் - குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல்.
போலினும் - தோன்றினும்
பருகுவார் போலினும்  - இன்பத்தைப் பருகுதல், நுகர்தல் போன்று இனிதாகத் தோன்றினும்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலார் - இல்லாதவர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

பெருகல் - மிகுதி
பெருகலின் - வளர்வதை விட
குன்றல் - குறைதல்; கெடுதல்விகாரம்.
இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
உடலுக்கு உபாதைகள் தரும் ஒரு உணவுப்பண்டம் உண்ண இனிமையாக இருந்தாலும் அவை நல்ல உணவு ஆகாது. அதுவும் அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லதும் அல்ல. உதாரணமாக இனிப்புகள், போதைப்பொருட்கள், கள் போன்ற போதை தரும் குடி வகைகள். இந்த உணவு வகைகள் உடலிற்கு ஆரோக்கியம் கூட்டும் குணங்கள் (பண்புகள்) அற்றவை. மாறாக உடலுக்கு காலப்போக்கில் நோயினை உண்டாக்கும்.

அதுப்போல பழகுவதற்கு இனிமையாக இருப்பினும் நல்ல பண்புகள், நல்ல குணங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், இல்லாத ஒருவரிடம் உறவு/நட்புக்கொள்வது நல்லது அல்ல (ஏனெனில் அவன் நல்ல மனிதன் அல்ல). அத்தகைய நட்பை வளர்த்துக்கொள்ளமால் குறைத்துக்கொள்வதே சிறந்தது. அதுவே ஒருவருக்கு நன்மை பயக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பருகு வன்ன காதல்” (அகநா 305:6, 399:4)
“பருகு காதலிற் பாடி ஆடினார்” (சீவக 1765)

பரிமேலழகர் உரை
[இனிப்பொறுக்கப்பட்டாத குற்றம் உடைமையின் விடற்பாலதாய நட்பு , நட்பாராய்தற்கண் சுருங்கச் சொல்லிய துணையான் அடங்காமையின் ,அதனை இரு வகைப்படுத்து இரண்டு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் தீநட்புக் கூறுகின்றார்.அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு, குணத்தின் தீமை ஒற்றுமை பற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும் .]

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று. ('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.).

மணக்குடவர் உரை
கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று. இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

சாலமன் பாப்பையா உரை
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

English Meaning - As I taught a kid - Rajesh
It is best to minimize the intake of food which are good for you. Similarly it is not good to have friendship with someone who has bad qualities. It is best minimize that relationship

Even though a drink or food might be tasty to our tongue, if it is not healthy, it is better to avoid or minimize its consumption. Similarly, even if a relationship is giving some form of pleasure or good time or benefit, it is better to reduce the relationship rather than growing it. Because the losses are bigger than small insignificant gains. 

Questions that I ask to the kid
What is better to decrease than increasing? Why?
What kind of relationship is better to decrease than increasing? why?

Saturday, November 4, 2017

பழைமை எனப்படுவது யாதெனின்

குறள் 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழைமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு.

எனப்படுவது - என்பது; என்பதின் பொருள் யாதெனின்
யாது - எது, இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு.

எனின் - என்றால்; eṉiṉ   conj. id. 1. If (it is)said so; என்று சொல்லின். 2. In consideration of; என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107).  

யாதும் - yātum   adv. யாது¹ + உம். Anything and everything; anything; எதுவும். யாதுமூரே யாவருங் கேளிர் (புறநா. 192).

கிழமையைக் - கிழமை - உரிமை; உறவு; நட்பு; ஆறாம்வேற்றுமைப்பொருள்; குணம்; வாரநாள்; முதுமை; மாட்சிமை; 

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

கீழ்(ழு)-தல் - kīḻ-   4 v. cf. கீள்-. [K. kīḻ.] tr.1. To rend, tear; கிழித்தல் பழம் விழுந்து . . .பஃறாமரை கீழும் (திருக்கோ. 249). 2. To rive, split,cleave; பிளத்தல் உறுகால் வரைகீழ்ந்தென (சீவக.1157). 3. To destroy, demolish; சிதைத்தல் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (குறள், 801). 4. To dig;தோண்டுதல். வேரொடுங் கீழ்ந்து வௌவி (சீவக.2727). 5. To break, as a promise; to transgress, as a command; மீறுதல் தாய்வார்த்தை கீழாதவாண்மை (விநாயகபு. 21, 19).--intr. 1. To draw,as a line, a diagram; கோடுகிழித்தல். (W.) 2. Tobe uprooted, dislocated; பறியுண்ணுதல். மரங்கள்வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144).

கீழ்ந்திடா - சிதையாமல்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
பழைமை என்றால் நெடுநாள் நட்பாகும். ஆனால் வெறும் நெடுநாள் நட்பு நட்பாகாது. நாம் நட்புக்கொள்ளும் பொழுது ஆராய்ந்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நெடுங்கால பழக்கத்தில் தன் நண்பரின் கிழமை அதாவது மாட்சிமை குண்றினாலும் தன் நண்பர் குற்றமே செய்தாலும் அவருடன் நட்பினை துண்டித்துக்கொள்ளக் கூடாது. இதற்கு பொருள் தன் நண்பரின் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அர்த்தம் ஆகாது. இதன் பொருள் தன் நண்பர் தவறு செய்ததினால் அவர் நண்பர் என்று ஆகாது என்பது ஆகாது என்பதே ஆகும்.

மகாபாரத கர்ணனை, அவ்வாறே எடுத்தாள்பவர்கள் சித்தரிக்கின்றனர். அவன் துரியோதனனோடு கொண்ட நீண்ட நட்பால், அந்நட்பின் பழைமை கருதி அவனோடு, அவன் செய்த தீச்செயல்களுக்கு உடன் பட்டதாக கூறுவர். வியாச பாரதத்தில் காட்டப்படும் கர்ணனுக்கு இவை சற்றும் பொருந்தாவிடினும், இக்குறளின் கருத்தை வலியுறுத்த அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , நட்டாரது பழையராந்தன்மை பற்றி அவர் பிழைத்தன பொறுத்தல் , காரணப் பெயர் காரியத்திற்கு ஆயிற்று , ஆராய்ந்து நட்கப்பட்டார் எனினும் பொறுக்கப் படும் குற்றமுடை யராகலானும் ஊழ்வகையானும் நட்டார் மாட்டுப் பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு , இது நட்பு ஆராய்தலின் பின் வைக்கப்பட்டது .]

பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது. 

மு.வரதராசனார் உரை
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...