அன்பிலன் ஆன்ற துணையிலன்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், பகைமாட்சி, குறள் 862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு
குறள் 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

இலன் - இல்லை என்று

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இலன் - இல்லை என்று

தான் - tāṉ ] [obl. தன்   avantaan அவன்தான் himself, herself, itself (resumptive pronoun)  ; படர்க்கை ஒருமைப் பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றி இஃது ஒன்று' என்று பொருள் படுவதோர் இடைச்சொல்.

துவ்வான் - துவ்வாதவன் - வறிஞன்; tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன்; பொருளில்லாதவன்; vaṟiñaṉ   n. வறு-மை. Poorman, destitute person; தரித்திரன்.

அரி - அறு; slice, cut, reap, 
அரி-தல் - ari-   4 v. tr. 1. To cut off, nip;அறுத்தல். நாக்கிரியந் தயமுகனார் (கம்பரா. சூர்ப்ப. 125).2. To cut away the excess clay from the mouldin making bricks; செங்கலறுத்தல். (J.)  

என் பரியும் - எவ்வாறு களைவான், நீக்குவான்

ஏதிலான் - ஏது + இன்-மை.Poor man; தரித்திரன். 
துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

முழுப்பொருள்
”ஒரு மரம் தோப்பாகாது” என்று ஒரு பழமொழியை நாம் அறிவோம். இதனை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நமது பகைவர்களை நாம் வெல்ல வேண்டும் என்றால் அதற்கு தனியாளாய் களத்தில் நின்றால் அவ்வளவு எளிதில் நடக்காது. அதற்கு நமக்கு துணை வேண்டும். அதையே திருவள்ளுவர் இக்குறளில் சொல்லுகிறார்.

தன்னுடைய நாட்டுமக்கள் மீது அன்பு இல்லாது இருப்பவர்கள், தனக்கு மாட்சிமை தரக்கூடிய நமது துணைவி / அமைச்சர்கள் / நண்பர்கள்/ உறவினர்கள் (அலுவலகத்தில் மேலாலர்கள்) என்று ஏதும் இல்லாதவர்கள், தனி ஆளாய் நின்று வெல்லக்கூடிய ஆற்றலும் இல்லாதவர்கள் எவ்வாறு வலிமை கொண்ட பகைவர்களை வெல்ல முடியும் என்று திருவள்ளுவர் கேட்கிறார்.

வலிமையை நீக்குவது என்பது, அதற்கெதிராக நின்று வெல்லுவது. பிறர்மேல் அன்பு கொள்ளும் தன்மை கொண்டவர்கள், அவர்கள் ஆதரவை வெல்லுவார்கள். அதேபோன்று உற்ற துணையாக ஒருவர் இருக்கையிலே அவர்களும் பகைக்கெதிராக ஆதரிப்பர். தாமே வலிமையோடு இருப்பின், அதுவும் பகையைத் தொலைக்க உதவும். இவ்வாறு தேவையானவை எதுவுமே இல்லாமல் எதிர்வரும் பகையைத் தொலைப்பது எவ்வாறு? என்ற கேள்வியை முன் வைக்கிறார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.).

மணக்குடவர் உரை
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain