Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

குறள் 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

ஆவது - ஆகவேண்டியது; விகற்பப்பொருள்தரும்ஓரிடைச்சொல்; விவரம்பின்வருதலைக்குறிக்குஞ்சொல்; எண்ணொடுவருஞ்சொல்.

அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிவார்  - அறிந்தார் - கற்றவர்கள்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் 

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அறி - aṟi   v. t. know, understand, comprehend, தெரி, உணர்.
கல்லாதவர் - கற்காதவர்
அறிகல்லாதவர் - அறியமுடியாதவர்கள்

முழுப்பொருள்
அறிவுடையவர்கள் என்றால் ஒன்றும் பெரிய மேதாவி என்று எல்லாம் அல்ல. அறிவுடையார் என்றால் தான் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யவேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, நல்லவை என்ன தீயவை என்ன, அறம் என்ன, அறம் அல்லாதது என்ன, என்பதனை அறிந்து இருப்பர். அதாவது செய்யவேண்டியவற்றையும் செய்யக்கூடாதவற்றையும் அறிய முயன்று நூல்கள் மூலமும் பெரியோர்களிடம் பழகியும் கற்று உணர்ந்து இருப்பர். அதன் படி செயலாற்றுவார்கள். நேரத்தை வீண் செய்யமாட்டார்கள்.

அறிவில்லாதவர்கள் என்றால் எதைச் செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை கற்று இருக்க மாட்டார்கள். அதற்கான முயன்றிருக்க மாட்டார்கள். காலத்தை வீண் செய்வார்கள். ஆதலால் மடயர்கள் எனலாம்.

மேலும், இங்கே நுட்பமாக நோக்கவேண்டிய ஒருவார்தை “ஆவது”. நாம் எதுவாக ”ஆவது”. அறிவது அல்ல. ஆவது. ஆனால் “ஆவது” என்பது ஒரு மிகப்பெரிய பயணம். பல ஆண்டுகள் தேவைப்படுவது.

“அறியக்கூடுவதைக் கொண்டு அறியவேண்டுவதை நோக்கி முயன்றபடியே இருப்பதே அறிவின் வழி” -- வெண்முரசு (எழுத்தாளர் ஜெயமோகன்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார்.
(முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சாலமன் பாப்பையா உரை
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

Thirukkural - Management - Knowledge
Even though predicting forthcoming events is not possible, a knowledgeable person can anticipate the forthcoming events based on the foresights and the mental power he has gained in the process of acquiring knowledge. This helps him gain the ability to assess the future challenges and prepare to manage them. People who lack knowledge do not have the advantage to anticipate events in advance. Kural 427 shares that knowledge.

The wise know what comes next
Fools cannot

இருவகை அறிவு (இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்)
அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிதாக்குவதற்கு உலகிலுள்ள பொருள்களை எவ்வளவு விதமாகப் பயன்படுத்தலாமென்பதை அறிவது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும் இந்த உலகமுமே எதற்காக என்பதை அறிவதே இரண்டாவது வகை.  இந்த இரண்டாவது வகை அறிவின் விரிவே தத்துவ ஞானம் எனப்படுவது. முதலாவது அறிவுக்கு உலகிலுள்ள பொருள்களும் உலகின் பகுதிகளும் விஷயமாக, இரண்டாவது வகை அறிவு, உலகம் முழுவதையுமே தனக்கு விஷயமாக்கி, இந்த உலகம் எதிலிருந்து, எங்ஙனம், எதற்காக உற்பத்தியானது என்பதை ஆராய்கின்றது. ஆகவே, இந்த இரண்டாவது வகையே அடிப்படையாவது. இந்த அடிப்படை அறிவை நமக்குத் தருவன என்ற காரணத்தால்தான், அறிவு நூல் என்ற கருத்தையுடைய பெயர் வேதங்களுக்கு ஏற்படலாயிற்று.

குரு நித்ய சைதன்ய யதி அவர்களின் நேர்காணலில் ஒரு கேள்விக்கான பதிலில் அறிவு பற்றி சில வரிகளை கூறியுள்ளார்.
சென்ற முறை வந்தபோது இந்தியச் சிந்தனை முறையின் தனித்தன்மை பற்றிச் சொன்னீர்கள்.  நமது தத்துவ மரபிற்கும் மேற்கின் தத்துவ மரபிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

பிலாசபி என்ற சொல்லையோ அதன் உட்பிரிவுகளையோ அடிப்படையாகக் கொண்டு நாம் நமது சிந்தனைகளை ஆராயக்கூடாது.  கீழைச் சிந்தனை முறை அடிப்படையில் வேறு.  துரதிர்ஷ்டவசமாக நமது கல்வித்துறை அடிப்படையில் மேற்கத்தியத் தன்மை கொண்டது.  ஆகவே இன்று மேற்குடனான வித்தியாசம் என்ற அளவிலேயே நாம் நமது சிந்தனையைப் பார்க்க வேண்டும்.

பிலாசபி என்ற சொல். ‘பிலாசை சோபியா’ என்று பிரிக்கப்பட்டு உண்மையைக் காதலித்தல் (சோபியா உண்மையின் தேவதை) என்று பொருள்படுகிறது.  தருக்கமே உண்மைக்கான ஒரே பாதையாக இங்கு காணப்படுகிறது.  யார் வேண்டுமானாலும் தன் விருப்பத்திற்கேற்ப வாதிடலாம்.  தருக்கத்தின் சமரசப் புள்ளிதான் (equilibrium) உண்மை என்பது.  நமது நீதிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும் இன்று இம்முறையே உள்ளது.  ஒரு விவாதத்தை பொதுவானதாக ஆக்குவதற்கு இன்றும் இதுவே சிறந்த முறை.  ஆனால் அடிப்படை விவாதங்களில் தருக்கம் முதன்மைப்படுவது தவறாக ஆகிவிடும்.  மேற்கத்திய மரபில் தத்துவம் என்றால் எல்லாத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பேயாகும்.

நாம் தத்துவம் என்கிறோம்.  தத் + து என்று அது பிரிவுபடும்.  அது + நீ என்ற இரு அமைப்புகள்.  தத் (அது) அனைவருக்கும் பொதுவான அறிவுக்கூறு (epistome).  நீ என்பது அதை அறியும் உனது பிரக்ஞை.  இரண்டும் பிளவுபடாமலேயே இயங்க முடியும்.  இதையே நமது அறிவியங்கியல் (epistemology) எனலாம்.  உபநிடதங்கள் சார்பற்ற உண்மை – அறிவுநிலை – ஒன்றை உருவகித்து, அதை நிர்ணயிப்பது எப்படி என்றே பேசுகின்றன.  விஞ்ஞானத்தில் இத்தகைய பொதுவான அறிவுநிலை மிகவும் முக்கியமானது.  அதுவே ஆய்வுப் பொருளாக முடியும்.  ஆகவே அது மானுடப் பொதுமையாக இருந்தாக வேண்டும்.  ஆனால் விஞ்ஞானத்தில் பொது அளவுகோல்கள் உள்ளன.  தத்துவத்தில் இல்லை.  ஆகவே அடுத்த கட்டமாக அளவுகோல்களைப் பற்றி யோசித்தார்கள்.  நம் மரபில் அறிவுக்கூறு ‘விஷயம்’ என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டது.

மேற்கே தெகார்த்தே பொது அளவுகோல் ஒன்றை உருவகித்தார்.  அது கணிதம்.  பின்பு ரஸ்ஸல் ‘தகவல் உண்மை-தருக்க உண்மை’ என அதைப் பிரித்தார்.  பொதுவாக மேற்குலகு புலன்களை முதன்மைப்படுத்துகிறது.  ஓர் எல்லைவரை அது பயன்தரக்கூடிய அளவுகோலே.  ஆனால் புலன்கள் தங்கள் எல்லைகளுக்குள்தான் இயங்கமுடியும்.  புலனறிவு கருத்து நிலையிலிருந்து அமைப்பை தீர்மானிக்கிறது.  மூளையை மரபணுக்களின் அமைப்பு தீர்மானிக்கிறது.  மரபணு அமைப்பு என்பது காலத்தில் நீளும் ஒரு தொடர்.  அதன் நோக்கம் என்ன?  அந்நோக்கத்தை நாம் எப்படி அறிவது?  இல்லை, அறியாமலேயே அதற்கு ஆட்படுவதா?  ஆக புலனறிவுகள் அவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு சிலவற்றுக்கு கட்டுப்பட்டவை.

இத்தகைய உள்ளார்ந்த பேரமைப்பை நம் மரபு சித் என்று பெயரிட்டு குறிப்பிட்டது.  மனம் என்பது ஒரு செயல்பாடே.  அது ஓர் அமைப்பு அல்ல.  சித் மனம் வழியாக நம்மை இயக்குகிறது.  நாம் அதைப் பற்றி அறிவது சொற்பம்.  ஆகவே அதன் மூலம் உருவாகும் வாழ்க்கையே முக்கியமானது.  இங்கு வாழ்வின் இயக்கத்தை உற்று கவனித்தார்கள்.  வாழ்க்கை என்றால் மேற்கு உருவகிப்பதுபோல மனித வாழ்க்கையையும் அறங்களையும் உருவகித்தார்கள்.  ஆகவே இங்கு அறிவியங்கியல் எதற்காக என்றால், அறிவியலை நிறுவுவதற்காகவே.  நமது அறிவு நம்மை நன்மைக்கும் ஆனந்தத்திற்கும் இட்டுச் செல்ல வேண்டும்.  அறிவு, நன்மை, அழகு (சத்தியம், சிவம், சுந்தரம்) மூன்றும் வேறு வேறல்ல.  அறிவியங்கியல், வழியாக அறவியலுக்கு வரும் வழியையே நமது முறைமை என்கிறோம்.  அது சூழலுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது.  பொதுவாக இங்கு மூன்று வகையான முறைமைகள் உள்ளன.  நேர்க்காட்சி, ஊகம், முன்னறிவு (பிரத்யட்சம், அனுமானம், சப்தம்).  வேதாந்தம் நேர்க்காட்சியையே முதன்மைப்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஊகத்தைக் கொள்கிறது.  அங்கு இது ஐன்ஸ்டீனோடு முடிந்தது.  நமக்கும் மேற்குக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.  நாம் அளவுகோல்கள் எதையும் மானுடப் பொதுவாக உருவகிக்கவில்லை.  அறவியலையே அப்படி உருவகித்தோம்.  அறவியலே அளவுகோல்களைத் தீர்மானிக்க முடியும் என்று நம்பினோம்.  காரணம் கருத்திலிருந்து விடுபட்ட அளவுகோல் ஏதுமில்லை.  இதுவே சரியான நிலைப்பாடு என்று அதிநவீன மேற்கத்திய தத்துவச் சிந்தனை ஏற்கவும் தொடங்கியுள்ளது.


பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம்.

அப்பால் மெல்லிய சரடொன்றில் இறங்கிவந்த சிலந்தி “அதனினும் பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது” என்றது. “காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன, தூய உவகை பெருகுகிறது.”


"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.



கர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.

அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!

இளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.

அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!


சிகண்டியின் அசையா விழிகளை நோக்கியபடி இளைய யாதவர் சொன்னார் “பாஞ்சாலரே, எது செயல் எது செயல் அல்ல என்ற வினாவுக்கு முன் ஞானியரும் உளமயக்கு கொள்கிறார்கள். அறிபவர்களுக்கு செயலின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். அதற்கும் மேலாக செயற்கேட்டின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். செயலின்மையை மேலும் நுணுகியறிந்திருக்கவேண்டும். செயலின் வழி மிகவும் இடர்மிக்கது. எளிதில் எண்ணி எய்தமுடியாதது.”

இந்த நைமிஷாரண்யத்திலமர்ந்து இரண்டு நாட்களாக செயலைப் பற்றியே சொல்லாடிக்கொண்டிருக்கிறேன். செயலின் விளைவை அஞ்சியவராக அங்கநாட்டரசர் இங்கு வந்தார். அவருக்கு செயல் எனும் போரைப் பற்றி சொன்னேன். செயல்மேல் தயக்கம் கொண்டவராக பீஷ்மர் நேற்று வந்தார். அவருக்கு செயலெனும் யோகத்தைப் பற்றி சொன்னேன். எய்துவனவற்றை அங்கருக்கும் இயற்றுவதன் முழுமையைப்பற்றி பீஷ்மருக்கும் கூறினேன். பாஞ்சாலரே, செயல்மேல் ஐயம் கொண்டவராக நீர் வந்திருக்கிறீர். செயலெனும் அறிதலைப் பற்றி வினவுகிறீர்.

தழல் தான் தொடும் அனைத்தையும் தானென்றே ஆக்கிவிடுகிறது. அறிவு அனைத்தையும் அறிவென்றாக்குகிறது. தழல் தூயது, ஒளிகொண்டது. அனைத்தையும் தழலாக்குவதையே வேள்வி என்கிறோம். ஞானத்திலமைந்தவன் செயலனைத்தையும் வேள்வியாக்குகிறான். சிலர் அனலில் வேள்விசெய்கிறார்கள். சிலர் அலகிலா அனலை ஓம்புகிறார்கள். அவர்களையே ஞானிகள் என்கிறோம்.

எது பிற அனைத்தும் தானே எனக் காட்டுகிறதோ, பிற அனைத்துக்கும் மாற்றென தான் நின்றுகொள்கிறதோ அதுவே அறிவு. விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. நோக்குபவனாக தான் ஆகும் ஆடி. அறிபவன் அறிவே அனைத்துமென்றும் அதில் தான் ஒரு துளியே என்றும் உணர்கிறான். அறிபவனை அறிவென்றாக்குவதே அறிவு. முழுமையற்றது அறிவல்ல. அறிவனைத்தும் முழுமையின் ஒரு துளியே. அனைத்து நீர்த்துளிகளும் கடல்நோக்கியவையே.

முழுமைதேடும் செயல்களெல்லாம் வேள்விகளே. ஆனால் பொருட்களால் ஆற்றப்படும் வேள்விகளைவிட அறிவால் இயற்றப்படும் வேள்வி சிறந்தது. அனைத்துச் செயல்களும் அறிவுச்செயல்பாடுகளே. நதியைவிட முகில் விரைவுகொண்டது. விண்ணில் அலையும் கடல்கள் எடையற்றவை. அறிவின் பாதை பயின்று மேம்பட்டு அடையவேண்டியது. நீந்தியபடியே பிறக்கின்றன மீன்கள். பிறந்ததுமே ஓடுகின்றன கால்கள் கொண்டவை. பறவைக்குஞ்சு அன்னையிடமிருந்தே சிறகுகளைப் பற்றி அறிகிறது. சிறகுகளினூடாக வானை பயில்கிறது. நீந்தியும் ஓடியும் தாவியும் கற்றவற்றைக் கொண்டே உயிர்கள் பறவைகளாயின.

வணங்கியும் எட்டுத்திசையும் வினாவெழுப்பியும் தொண்டுசெய்தும் அறிந்துகொள்க! உண்மை காணும் ஞானிகளே உமக்கு ஞானத்தை அளிக்கவியலும். ஞானத்தை அடைந்தபின்னர் இந்த ஐயங்கள் இயல்பாக அழிந்துவிடும். அனைத்து உயிர்களையும் உம்முள்ளே காணச்செய்வதே அறிவு. எனவே அனைத்துக்கும் விடையென்றாகி நின்றிருப்பதே அதன் இயல்பு. பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம். வெளிவிரியும் புலன்களை உள்நோக்கி தொகுத்துக்கொண்டு, துயிலிலும் ஒலிக்கு அசையும் பூனைச்செவியென உளம் கூர்ந்திருப்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானம் அமைதியை அளிக்கிறது.

ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”

அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்



 இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.

முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.

“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”

“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”

ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”

“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”

...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”

“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.

அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.

அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.

அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.

ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.

அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.

எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.

புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”

“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .

“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன?” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிடம் மெய்யை மட்டுமே உரைக்கமுடியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக! உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன? மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா? இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது? யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா?”

“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”

“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”

“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரிலிருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”

“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”

“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”

“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் தொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”

“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”

“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.

“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்?” என்று வியாசர் கேட்டார்.

இளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.

இருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.

வாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.

அசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.

முதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்கூடும். மைந்தரின் சிறுகைகளுக்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.

அதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.

உங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.

நான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.

மானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.

வியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.

இன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.

பல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.

உயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்று விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.

விழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.

உங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.

அங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.

பருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.

பிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.

பிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.”

ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் சொன்னார் “அறியவேண்டுமென்றல்ல, வாழவேண்டுமென்றே மானுடர் விழைகிறார்கள். வாழ்வுக்கு உதவுவது என தன்னை அளிக்கும் இரக்கம் கொண்டிருப்பதனாலேயே அது மேலும் முழுமைகொள்கிறது.”

வடிவங்களால் ஆனது இவ்வுலகு. அதன் உட்பொருட்களாலானது. அதன்மேல் எழுந்த ஒலியாலானது. யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே யோகிகள் ஒலியுலகத்தைக் கடந்து செல்கிறார்கள். அதை ஒலியென்று குறைக்கிறார்கள். பொருளென்று சமைக்கிறார்கள். வடிவென்று புனைகிறார்கள். முனிவரும் அறிஞரும் கவிஞரும் அமைத்த இவ்வனைத்தும் அதுவே.

அது அறியப்படாமை. அறியப்படுவன அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. இரவிலிருந்து புலரியில் பொருட்கள் முளைத்தெழுவதுபோல. இரவில் அவை மூழ்கியணைவதுபோல. அறிவால் அறியப்படுவதும் அறிபுலன்கள் அனைத்தையும் கடந்தமைந்ததுமான அறிவே அது. மண், நீர், தீ, காற்று, வான், உளம், மதி, தன்னிலை என்னும் எட்டு வகையாக பிரிந்து இயற்கை என்றாகிறது.

அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். அழிவிலாத அறிவைப் பற்றியது தேவ ஞானம். உடலுக்குள் அதை அறிதல் யாக ஞானம். நீங்களே அது என்றுணர்க! நான் எனச் சொல்லி விரிக! உங்கள் வடிவுகொண்டவனை அறிக! கவிஞனை, பழையோனை, ஆள்வோனை, அணுவின் அணுவை, அண்டப்பேரண்டத்தை, அனைத்தையும் சூடுபவனை, அலகிலா வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிர்என நிற்பவனை வாழ்த்துக! உங்களுடையது சொல்வேள்வி.

இங்கு என்றுமுளது ஒளிவழியும் இருள்வழியும். மீளாதது முதல் வழி. மீள்வது இன்னொன்று. உங்கள் வழி இங்கு மீள்வதே. அது அழகின், அளியின் வழி. அள்ளி அணைப்பது, ஆடி மகிழ்வது. இங்கு என்றுமிருக்கும் பூமரக் காடு உங்கள் சொற்கள். தன் வழியை அறிந்தவனே யோகி. வேதங்களிலும், தவங்களிலும், கொடைகளிலும் இயலும் தூய்மை வழியல்ல உங்களுடையது. சொல்லில் எழுவது. அது முதல்பெருநிலையே.

வாழ்வுக்குப் பொருள் தேடுபவன் கவிஞனல்ல. பொருள் அளிப்பவன் அவன். வினாக்களால் ஆனதல்ல காவியம், அழியா விடைகளாலானது. உசாவவேண்டாம், புனைந்தளியுங்கள். சுருக்கவேண்டாம், விளக்குங்கள். உளம்விரிந்து நீங்கள் புனைவதெல்லாம் மெய்யே. தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும்.

விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. உங்கள் சொற்களாலேயே இங்கு மானுடம் வாழ்வை பொருள்கொள்ளும், கனவுகளை விரித்தெடுக்கும், கண்டடையும், கடந்துசெல்லும். ஆம், அவ்வாறே ஆகுக!


நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.”

“விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது? ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான்?” என்றார் யுதிஷ்டிரர்.

“அவன் அரசன் என்பதனால்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். “அரசன் பெருவிழைவால் ஆற்றல் கொள்பவன். இந்திரன் அரசர்களுக்கு முன்வடிவான அரசன். கணம் என தோன்றி விண் முழுதளக்கும் மின்படை கொண்டவன். அரசன் கற்பதும் முழுமைகொள்வதும் விழைவின் பாதையிலேயே. அவர்களுக்கான வழியை அரசமெய்மை என்றனர் நூலோர்.”

யுதிஷ்டிரர் தன்னுள் எழுந்த வினாக்களால் மேலும் மேலுமென சீற்றம் கொண்டபடியே சென்றார். “எளிய விடைகளுக்காக நான் இங்கே வரவில்லை, யாதவனே. நான் யுதிஷ்டிரனல்ல, நான் பெரும்பசி கொண்ட விஸ்வஃபுக். இந்திரனென்றமைந்து நான் கேட்பதற்கு மறுமொழி சொல்க!” என்றார்.

மூன்று முதற்தெய்வங்களும் எண்ணியறிய முடியாத அதன் எல்லையின்மையை நான் அறிவேன். ஒரு முழு பால்வழியே துகளென நொறுங்கியழிந்தாலும் அதற்கு கணத்திலும் கணத்திலும் கணமென்றமையும் துளியினும் துளியினும் துளியான நிகழ்வல்ல அது. அதன் விரிவில் நிகழ்வது நிகழாமைக்கு சற்றும் மாறுபட்டதே அல்ல.

அது இரக்கமற்றது. தன் அலகிலா பேருருப் பெருக்கினாலேயே நோக்கும் விழியற்றது. கேட்கும் செவியற்றது. அறியும் உளமற்றது. ஆனால் சிற்றெறும்புக் கூட்டுக்குள்ளே ஆற்றலின் நெறி ஒன்று இலங்குகிறது. பெருங்கரி மந்தையையும் அன்னையே ஆள்கிறது. நெறியிலாத ஒரு துளி இடத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. நீரில் கலப்பதில்லை எண்ணை. அனலில் எரிவதில்லை கல். முறை வகுக்கப்படாத எதுவுமில்லை இங்கே.

அவை எவருடைய ஆணை? எவருடைய விழைவை சூடியிருக்கின்றன இங்கெனத் திரண்டிருக்கும் இவையனைத்தும்? வினாக்களென நம்முள் எழுவன அனைத்தும் இங்கிருக்கும் நெறிமேல் நம் சித்தம் சென்றுமுட்டுவதனால் எழுவன. விடையென அமையவேண்டிய அது அப்பாலென பேருருக்கொண்டு நின்று அஞ்ச வைக்கிறது. சித்தம் பேதலிக்கச் செய்து விலகிச் செல்கிறது.

இதோ போர்ச்சூழல் இறுகி விம்முகிறது. பல லட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கிறார்கள். அவ்விருளில் நின்றபோது என் நெஞ்சு அச்சம்கொண்டு உறைய ஒருகணத்தில் அனைத்தையும் உணர்ந்தேன். தலைமுறை தலைமுறையென பிறந்து பிறந்து பெருகிப்பெருகி இப்போர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது பாரதவர்ஷத்தின் மக்கள்திரள். போர்வெறியும் போரின்மீதான அச்சமும் அங்கே செல்வதற்கான விசையே. வஞ்சமும் அமைதிக்கான விழைவும் அதை நோக்கிய நகர்வே.

அங்கு நிகழவிருப்பதென்ன? வில்வல்லமையும் எண்ணிக்கைவல்லமையும் உளவல்லமையும் ஊழ்வல்லமையும் நின்று மோதிக்கொள்ளும். வெல்வர், தோற்பர். அதற்கேற்ப பாரதவர்ஷத்தின் எதிர்காலம் மாறும். இன்னமும் கருபுகாத கோடிமக்களின் ஊழை இங்கு முடிவுசெய்யவிருக்கிறோம். யாதவனே, இவ்விசையின் ஊற்று எது? இங்கு இதை ஆற்றுவது அது என்றால் அந்த அலகிலி சொல்லவேண்டும் இவனையனைத்துக்கும் என்ன பொருள் என்று. இவற்றுக்கெல்லாம் அந்த அறியமுடியாமை வரை செல்லும் ஒரு நெறி இருக்கவேண்டும்.

நாளை அக்களத்தில் இளமைந்தர் நெஞ்சுபிளந்து செத்துக்கிடப்பார்கள். இறப்பை அஞ்சி, வலியில் துடித்து வான்நோக்கி கைவிரித்து ஓலமிடுவார்கள் சிலர். அன்னையரும் மனைவியரும் குழல் விரித்திட்டு ஓடிவந்து களம்பட்டோர் மீது விழுந்து அலறியழுவார்கள். தலையை நிலத்தில் அறைந்து கூவி கதறி மயங்கி விழுந்து மண்ணில் புரள்வார்கள்.

இல்லங்களெங்கும் இருள்பரவும். கைம்பெண்கள் மூலைகளில் ஒடுங்குவர். இளமைந்தர் தந்தையைத் தேடி அழுதுதிரிவர். பெருந்துயர் நிறைந்த நகரில் நகையெழ ஆண்டுகளாகும். குருதிமண்மீது மீள மீள மழைபொழிந்து பசுமையெழவேண்டும்.

அத்தனைபேரும் விண்ணை நோக்கியே கூவுவர். இரக்கம் கோரி. விளக்கம்கோரி. அப்பெருவெளிநோக்கி இதுவே உன் நெறியா, அளியே உனக்கில்லையா என்ற குரலெழாத ஒருகணமேனும் இம்மண்ணில் உண்டா?

இரக்கமற்ற பெருவிரிவு. இங்கிருக்கும் எவற்றுக்கும் பொருள் அலாத அலகிலாமை. எச்சொல்லும் எவ்வெண்ணமும் எவ்வுணர்வும் எவ்வூழ்கமும் சென்றடைய முடியாத ஆழிப்பேராழி. ஆனால் அங்கிருந்து வருகின்றன இங்கிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ஆளும் நெறிகள். என்றால் அது பொறுப்பேற்கட்டும் அறத்திற்கு. அதுவே அறமழிவுக்கும் பொறுப்பேற்கட்டும். இருளுக்கும் ஒளிக்கும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அடிப்படையென வந்து நிற்கட்டும்.

அதன் முன் எளியோர் நாம் ஏன் நம் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்? நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும்? நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும்? ஏன் அளிகொள்ளவேண்டும்? எதன்பொருட்டு நாம் கட்டுண்டிருக்கவேண்டும்?

என் ஆணவமே அறமென்று என்னைச் சூழ்ந்தது என்று இன்று அறிகிறேன். நான் அரியவன் என்று பிறர்முன் காட்ட விழைந்தேன். பிறர் வகுத்த களத்தில் ஆடி முதன்மை பெற்று அவர்களின் பாராட்டைப் பெற விழைந்தேன். அறமென்பது பொய்யென்று அறிந்திருந்தமையால் என்னுள் நிறைவிழந்திருந்தேன். பொய்யென அறிந்த ஒன்றுக்காக என் இன்பங்களை கையளிக்கிறேனா என எண்ணி துயர்கொண்டிருந்தேன்.

அதுவே அடிப்படை. அது அறமிலாதது எனில் இங்கு எதுவும் அறமிலாததே. அது அளியிலாதது எனில் இங்கு அளி என்பதே தேவையில்லை. அது அறியமுடியாதது எனில் இங்கு எதையும் அறியமுடியாது. யாதவனே, அது பொருளில்லாதது என்றால் இங்கே பொருள்தேடி பேசுவதெல்லாம் பசப்பே.

நான் கேட்பது ஒன்றே. மிக எளிய சொற்களில் இதுவே. யாதவனே, இங்குள்ள அறங்கள் அனைத்தும் தெய்வங்கள் பெயரைச் சொல்லி நிறுத்தப்படுவன. அவை தெய்வங்களால் அளிக்கப்படுவனவா? இருமையற்றது அது என்றால் எதுவும் அதன் உச்சத்தில் இருமையற்றதே. அவ்வாறென்றால் இங்கே நன்றும் தீதும், அறமும் மறமும் இல்லையென்றே ஆகுமல்லவா?

இளைய யாதவர் புன்னகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு யுதிஷ்டிரர் சினம்கொண்டு குரலுயர்த்தினார். “சொல்க, அறமென்பதும் அளியென்பதும் வெறும் உளமயக்குகளன்றி வேறென்ன? அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா?”

“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வாறு இயலுமென்றால் அது நல்லதுதான்.” யுதிஷ்டிரர் கையை வீசி “ஏன் இயலாது? விலங்குகள் வாழ்கின்றன. பூச்சிகள், செடிகள் அவ்வாறே வாழ்கின்றன” என்றார். “காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே அவற்றை இயக்குகின்றன. வேறெந்த நெறியுமில்லை.”

இளைய யாதவர் அதே புன்னகையுடன் “இல்லை. அவ்வாறென்றால் ஒரு தலைமுறையுடன் உயிர்கள் அழியும். வேட்டைக்கு எளியதும் உண்பதற்கு இனியதும் இளங்குழவிதான்” என்றார்.

யுதிஷ்டிரர் திகைக்க “ஆனால் இங்கு குழவிகளே அரசர்களுக்கு நிகராக பேணப்படுகின்றன. அன்னையரின் குருதியை உண்கின்றன. தந்தையர் மீதேறி மறுசொல்லெழா ஆணைகளை இடுகின்றன. குழவிகளின் பொருட்டே அனைத்துக் குலநெறிகளும் அமைந்துள்ளன. குழவிகளின்பொருட்டு அனைத்துயிரும் தங்கள் உயிரை அளிக்கவும் சித்தமாகின்றன” என்றார் இளைய யாதவர்.

எப்போதும் எங்கும் நெறியே ஆள்கிறது, யுதிஷ்டிரரே. அரிதாக சில உயிர்த்தொகைகளில் நெறிகள் அழிகின்றன. அனைத்தும் நிலைகுலைந்து சரிய அந்த அழிவினூடாக கற்றுக்கொண்டு அறத்தை மீட்டுக்கொள்கின்றது அந்த உயிர்த்தொகை.

அறத்தை ஐயப்படாத மானுடனே இல்லை, ஏனென்றால் அதன் வழிகள் மறைவானவை. அறத்தை நம்பாத மானுடனும் இல்லை. ஏனென்றால் அது இன்றி அவன் வாழவியலாது. அறத்தை ஐயம்கொள்பவனே அதை உள்ளூர சார்ந்திருக்கிறான். அறத்தை மறுப்பவன் அதை அஞ்சுகிறான். அறத்தைக் கூவுபவன் அதன்மேல் ஐயம்கொண்டிருக்கிறான்.

உயிர் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான அறம் உள்ளது. மானுடருக்குரிய அறம் மானுடரால் உருவாக்கப்பட்டது. குடிகள், குலங்கள், நாடுகள் போல. இல்லங்கள், நகரங்கள் போல. ஆடை போல, அணி போல. அது இனிதென்றும் நன்றென்றும் கண்டமையால் பேணப்பட்டது. அது பல்லென்றும் நகமென்றும் ஆகுமென்பதனால் பூணப்பட்டது.

அறங்கள் மண்ணில் கண்டடைந்து பெருக்கப்பட்டவை. முன்பொருநாள் ஒரு துளிச் செம்பு மண்ணில் மானுடனால் கண்டெடுக்கப்பட்டது. அது நன்றென்று உணரப்பட்டது. மீண்டும் மீண்டுமென செம்பைத் தேடி சேர்த்தனர் மானுடர். அது படைக்கலமும் மனைக்கலமும் அணிகலமும் ஆகியது. அவர்களைக் காத்தது, ஊட்டியது, அவர்கள் உள்ளத்தின் அழகு ஆகியது.

மண்ணிலிருந்தும் அது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆழங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்டது ஒருபோதும் மீள மண்ணுக்கு செல்வதில்லை. அது தொழில் மாறக்கூடும். அதற்கேற்ப உரு மாறக்கூடும். ஒன்றோடொன்று கலந்து ஒளிமாறக்கூடும். ஆனால் ஒருபோதும் கைவிடப்படாமல் என்றும் இங்கிருக்கும்.

செம்பு மென்மையானது. இரும்பு வன்மையானது. வெள்ளி ஒளி கொண்டது. பொன் அரிதானது. செம்பை இரும்பு வெல்லும். வெள்ளியை பொன் மிஞ்சும். மென்மையான பொன் வன்மையான இரும்பை ஆளும். செம்பு பொன்னுடன் கலந்து விலைமிகும். உலோகங்கள் போரிடுகின்றன. உலோகங்கள் வென்றும் தோற்றும் உலகு சமைக்கின்றன.

உலோகங்கள் ஒன்றே. இரும்பு வேர். செம்பு தண்டு. வெள்ளி இலை. யுதிஷ்டிரரே, தங்கம் மலர். ரசக்கலை அறிந்த யோகி ஒருவன் இரும்பை பொன்னாக்கினான். பின்னர் பொன்னை இரும்பாக்கிக்கொண்டான். இரண்டையும் சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.

மானுடனின் அனைத்து தெய்வங்களும் மானுடனால் உருவாக்கப்பட்டவை என்பதே வேதச்சொல். நற்செயல்கள் நெறியென ஆற்றப்படுகையில் வேள்விகளாகின்றன. வேள்வியால் தேவர்கள் உருவாகிறார்கள். அவிகொண்டு ஆற்றல் பெறுகிறார்கள். தேவர்களால் தெய்வங்கள் விண்ணில் நிறுத்தப்படுகின்றன. மண்ணில் வேள்வி அழியும்போது தெய்வங்கள் நீர்பெறாத செடிகள் என வாடிக் கருகி அழிகின்றன.

ஆகவேதான் நீங்கள் தெய்வங்களை கைவிடாதிருங்கள், உங்களை தெய்வங்கள் கைவிடாதிருக்கட்டும் என்கின்றன வேதங்கள். தெய்வங்களைக் கைவிடும் குடிகள் தங்களை அழித்துக்கொள்கின்றன. தெய்வங்கள் மானுடனால் ஆற்றல்பெற்று மானுடனை ஆள்கின்றன. அரசன் வரிகொண்டு குடிகளை ஆள்வதுபோல.

கடுவெளியும் காலமும், பொருளும் ஆற்றலும், இன்மையும் இருப்பும் முடிவிலியும் இரண்டிலியும் ஆன அது எதற்கும் விடையல்ல. அது எதையும் ஆற்றுவதில்லை. அது எதற்கும் பொறுப்பல்ல. மானுடவினாக்களுக்கு மானுட தெய்வங்களே விடைகள். மானுடரை மானுட தெய்வங்களே ஆக்கி புரந்து அழிக்கின்றன. அவையே மானுடனுக்கு பொறுப்பேற்கின்றன.

நோக்கிலாததன் நோக்கே தெய்வங்கள். அளியற்றதன் அளி. அலகிலாததன் அறிவடிவு. முடிவிலாததன் கருத்துரு. தெய்வங்களால் ஆளப்படுகின்றது புடவி. எறும்பும் ஈயும் புழுவும் பறவையும் தங்கள் வேள்விகளால் தங்களுக்குரிய தெய்வங்களை சமைக்கின்றன. தங்கள் தெய்வங்களால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்றன.

நேர்கொண்ட பார்வையில் தொகுத்து முன்சென்று இதை அறியவியலாது. ஊசலென ஆடி, முரண்கொண்டு திரும்பி அறியவேண்டியது இது. சொல்லடுக்கை கற்பனையால், அறிவை ஊழ்கத்தால், தெளிவை பித்தால் நிரப்பிக்கொண்டு சென்றடையவேண்டியது. கருத்தென அல்ல புதிரென அறியப்படவேண்டியது. அறிந்தவற்றை அறியாமையால், கூர்மையை பேதைமையால் எழுப்பாதவன் இதை உணரமுடியாது.

இந்த முரணே ராஜவித்யை எனப்படுகிறது. அறிதற்கரிதென்பதனால் ராஜகுஹ்யம் எனப்படுகிறது. இது தூய்மையளிப்பதில் மாண்புடையது. கண்முன் என காண்பதற்குரியது. அறத்துக்கு இயைந்தது. இயற்றுதற்கெளியது. அழிவற்றது.

அறியா நுண்மையாய் அது இவ்வுலகை தாங்கியிருக்கிறது. அதிலமைகின்றன ஐம்பெரும் பருக்களும். ஆனால் முற்றிலும் கடந்துறைகிறது அது. பருவெளியை ஆக்கி பருப்பொருட்களின் நெறிகளுக்கே அவற்றை அளித்து தான் அப்பாலிருக்கிறது.

முதலியற்கையின் மூவியல்புகளின் முடிவிலா நிகராடலுக்கு விடப்பட்டுள்ளன அனைத்தும். நிகர்கொண்டு, நிகரழிந்து, புணர்ந்து, பிரிந்து, திரிந்து, திரண்டு, எழுந்து, அமைந்து, குவிந்து, பரந்து இங்கு பருப்பொருள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீரலைகள் மேல், துளிகள் மேல், துமிகள் மேல் விண்கதிரோன் என அது பருப்பொருளில்  தன்னை நிகழ்த்தி விளையாடுகிறது.

இப்பருவெளியை ஆள்வது பருப்பொருள் தன்னுள் கொண்ட நெறியே. பருப்பொருள் என்பது அந்நெறியின் பொருள்விளக்கம். அந்நெறி அப்பொருளின் கருத்துறைவு. உலகியலின் நெறிகள் உலகை ஆள்கின்றன. உலகியல் நெறிகளை அந்நெறிகளுக்குரிய தெய்வங்கள் ஆள்கின்றன. நெறிபுரப்போரால் அவை அவியிட்டு வளர்க்கப்படுகின்றன.

அனைத்துக்கும் அப்பாலிருக்கும் அதுவே அனைத்துக்கும் முதல் விசை. அதுவே முதல் விதை. அதுவே வயல். அதுவே விளை. அதுவே களை. அதுவே பசி. அதுவே உடல். அதுவே உயிர். ஆயினும் முற்றிலும் அகன்றது. வேள்வி அது. எரிகொடை அது. எரியும் அது. நுண்சொல்லும் அதுவே. உடல் அது. நோய் அது. மருந்து அது. நெய்யும் அனலும் அதுவே. அதுவே ஒளி. ஒளியிருள் என்றிலாததும் அதுவே.

யோகத்திலமைந்தவர் அதை ஒன்றென உணர்கிறார்கள். ஞானத்தில் செல்பவர்கள் அதை பலவென அறிகிறார்கள். செயலில் இருப்பவர் அதை செயல்தருணங்களில் காண்கிறார்கள்.

கவிதையெனும் சோம மது உண்டவர்கள், அரசமைந்து பழிகள் அகன்றோர், வேதமறிந்தோர் எனும் மூன்று தரப்பினர் தங்களுக்குரிய வேள்விகளால் அதை வேட்டு விண்ணுலகு கொள்கிறார்கள். இந்திரநிலை அடைந்து அமைகிறார்கள். விண்ணின்பம் நிறைந்தவுடன் அழிவுடைய மண்ணுலகுக்கே மீள்கிறார்கள். விழைவுகொண்டவர் விழைவிலேயே உழல்வதே நெறி. அவர்களின் தெய்வங்கள் அவர்களை காக்கின்றன, வழிநடத்துகின்றன.

தேவரை வேட்போர் தேவரை எய்துவர். மூதாதையரை நோற்பவர் தென்புலத்தை வெல்வர். பருவுலகை தொழுவோர் செல்வங்களை அடைவார்கள். அதை மட்டுமே நாடுவோர் அதை அடைவார்கள். மங்கலம் மங்கலமின்மை கொண்ட இருபால் பயன்களைத் தருவனவாகிய செயற்சுழலிலிருந்து அவர்களே விடுபடுகிறார்கள்.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவரின் சொல்கேட்டு திகைத்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”

“எளிய மானுடர் அவர்கள். வாழப்பிறந்தவர்” என யுதிஷ்டிரர் குரல் அடைக்க சொன்னார். நெஞ்சு நெகிழ விழிநீர் வடித்தபடி “மைந்தர், தந்தையர், உடன்பிறந்தார்…” என்றார். “என் நெஞ்சு தாளவில்லை. எதன்பொருட்டு என்ன பொருள் என என் உள்ளம் ஏங்கித் தவிக்கிறது.” “பொருளறிந்தால் துயர் மீள்வீரா, யுதிஷ்டிரரே?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.

“மெய்மை நான்கு வகை துயர்களுக்கு மாற்று என்கின்றன நூல்கள். தெய்வம், பொருள், மானுடர் என்னும் மூன்று வகையில் எழும் உலகத்துயர் அனைவருக்கும் உரியது. இருத்தலை எண்ணும் எளியோன் நிலையாமை கண்டு துயர்கொள்கிறான். அறிஞன் அறியமுடியாமையின் துயரை அடைகிறான். இருமையின் துயர் அடைகிறான் ஞானி.”

“நீங்கள் கொண்டிருப்பது எளியோரின் துயர். அதை நீக்கினால் அறிஞனுக்குரிய துயரையே சென்றடைவீர்கள். யுதிஷ்டிரரே, இங்கிருக்கையில் துயரிலிருந்து துயருக்கே சென்றடைய முடியும். முற்றிலும் துயரற்றவன் இருமை கடந்தவன் மட்டுமே.”

“நான் கோருவது என் துயரை நீக்குவதற்காக அல்ல. இங்கு நிகழும் இப்பேரழிவு என்னும் துயரை நீக்கும்பொருட்டே” என்றார் யுதிஷ்டிரர். “அதன் பொறுப்பை என்னிடமிருந்து அகற்றும் மெய்மை எது என்று மட்டுமே.”

“இவ்வொரு பயணத்தில் வழிநடந்தபோது நீங்கள் பன்னீராயிரம் சிற்றுயிர்களை மிதித்துக் கொன்றீர், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். சினம் கொண்ட யுதிஷ்டிரர் “என்னிடம் அணிச்சொல்லெடுக்க வேண்டாம். நான் மானுடரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றார். “உயிர்களில் வேறுபாடு நோக்கும் ஒரு தெய்வத்திடம் எதை கோருகிறீர், தர்மரே?” என்றார் இளைய யாதவர்.

மறுமொழி சொல்லாமல் தலையை அசைத்த யுதிஷ்டிரர் “என் நாவை அடக்குதல் எளிது. கண்ணெதிரே அழிவு நிகழ்கையில் அறிவுக்கு மட்டுமே உகக்கும் கொள்கை பேசி அமர்ந்திருத்தல் அதனினும் எளிது” என்றார். “அரசன் என, தந்தை என நான் உனது விழிநோக்கி கேட்பது இதுவே, அறமென கனியாத மெய்மையால் என்ன பயன்?”

“இமயத்தால் என்ன பயன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “அம்மியென சமைந்தால் அடுமனைக்காகும். தூணென்று நின்றால் கூரையைத் தாங்கும். சிலையென ஆனால் தெய்வமேயாகும். வடதிசை எழுந்தது தேவதாத்மா என்று முனிவரால் வணங்கப்படுவதோ வெறுமனே வான்தொட்டு நின்றிருப்பதனால்.”

யுதிஷ்டிரர் திகைத்து நோக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “அறிக, ஆயிரம் பல்லாயிரம் கோடி அம்மிகளும் தூண்களும் தெய்வச்சிலைகளுமாக உருமாறிக்கொண்டே இருக்கையிலும் முகில்சூடி நின்றிருக்கும் இமயமே அனைத்துக் கற்களுக்கும் பொருள் அளிக்கிறது. அனைத்துக் கல்லும் இமயமே என்று உணர்ந்தவனே கல்லை அறிகிறான்.”

“விழிதூக்கி நோக்கி இமயத்தைப் பார்க்கையில் புலன்தொட்டறியும் பிரம்மம் என்று உளமெழாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க! கல்லும் மலையே என்று உணர்வதே யோகம்.”

யுதிஷ்டிரர் “அளியின்மை… அதை ஆயிரம்கோடி சொற்களைக் கொண்டும் எவரும் மறைத்துவிட முடியாது” என்றார். பின்னர் எழுந்துகொண்டு “போதும், இந்தத் தத்துவங்களன்றி எதையும் நீ என்னிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்கிறேன். நான் கிளம்புகிறேன்” என்றார். “நான் எவரையும் அருகழைப்பதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். உடனே “ஆனால் தூண்டிலிட்டு அமர்ந்திருக்கிறேன்” என உரக்க நகைத்தார்.

புரிந்துகொள்ளா விழிகளுடன் நோக்கிய யுதிஷ்டிரர் “நான் விடைகொள்கிறேன், யாதவனே” என தன் மேலாடையை சீரமைத்தார். இளைய யாதவர் எழுந்து நின்று “நன்று யுதிஷ்டிரரே, நற்சொற்களை உரைக்கும் வாய்ப்பு அளித்தீர்கள்” என்றார்.


நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார்.

“கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் மோதல். நாம் கொண்டுள்ள அறம் எதுவோ அதன்பொருட்டு நிற்பதும் களமாடுவதும் வெல்வதும் மடிவதுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. என் வழியின்மேல் ஐயம்கொண்டேன், என் எதிரிமேல் கனிவென்று வெளிப்பட்டது அதுவே. ஐயமில்லாது ஆற்றப்படும் அறமே வெல்கிறது. வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது. இப்புவியில் வெல்லும் அறம் தோற்கும் அறம் என இரண்டே உள்ளன.”

“அரசன் என்று நான் என் குடியை, என் நாட்டை, என் கொடிவழியினரை காக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். உலகுக்குப் பொறுப்பென என்னை எண்ணிக்கொண்டதே என் பிழை. இவ்வுலகின் கோடானுகோடி அறங்களை எத்தனை தவம் செய்தாலும் நம்மால் எண்ண முடியாது. ஒரு தருணத்தின் அறங்களை எண்ணி வகுக்கக்கூட எவராலும் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

“மாறாத பொதுஅறம் ஒன்றைச் சார்ந்துள்ளது இப்புவிச்செயல் என நம்பியதே என் பிழை. அறிந்தோ அறியாமலோ ஒவ்வொருவரும் அதிலேயே அமைந்துள்ளனர் என்று எண்ணினேன். என்னுள் அமைந்த அவ்வறத்தைக்கொண்டு பிறருள் அமைந்த அவ்வறத்தை நோக்கி பேசமுடியும் என கனவுகண்டேன். அது வெற்றாணவம் என்று அறிந்தேன். யாதவனே, ஓர் அறம் பிறிதொன்றை எவ்வகையிலும் விழிநோக்கி அறிவதில்லை.”

“கல்லுடன் கல் மோதுவதுபோல அறங்கள் மோதிக்கொள்கின்றன” என்றார் யுதிஷ்டிரர். “அங்கே நெகிழ்வுக்கே இடமில்லை. அனைத்துச் சொல்லமர்வுகளும் உளம்பகிர்தல்களும் அறங்களை மூடியிருக்கும் அந்தந்தத் தருணத்து உணர்வுகளை அகற்றி உள்ளிருக்கும் மெய்யான அறத்தை மட்டும் வெளியே எடுப்பதற்காகவே. அனைத்தும் விலகிக்கொண்டபின் இரு அறங்கள் மட்டுமே எதிரெதிர் நின்றிருக்கின்றன. ஒன்று வெல்லும். இன்னொன்று முற்றழியும். வெல்வது வரும்காலத்தில் தானே அறமென்று ஓங்கி நிலைகொள்ளும்.”

“நான் நம்புவதே மெய்யறம் என்று நம்பியதே என் பிழை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே பிற அறங்கள் பிழையென்று கருதினேன். என் அறத்துக்கு தெய்வங்கள் துணைநிற்குமென்றும் பிறவற்றை அவை கைவிடுமென்றும் கற்பனை செய்தேன். என் நிலை அறமென்பதனால் அது இரும்பு செடிகளை என பிறவற்றை அரிந்து செல்லும் என்று தருக்கினேன். என் உள்ளத்தால் எதிரறங்களை எல்லாம் சிறுமைசெய்தேன். பழித்தேன். ஆகவேதான் அவற்றை திருத்த முயன்றேன். நான் பேச்சென்றும் உளம்பகிர்தலென்றும் சொன்னதெல்லாம் பிற அறங்களை சிறுமைசெய்தல் மட்டுமே.”

“இன்று தெளிந்தேன். முதலியற்கை மூவியல்புகளின் நிகரழிய நிலைகுலைந்து நிலைமீண்டு தன்னை நிகழ்த்திச் செல்லும் இப்பயணத்தின் ஒவ்வொரு தருணமும் பலநூறு அறங்களின் முடிச்சுப்புள்ளி என்று. எனக்கு ஆணையிடப்பட்டதை ஆற்றுவதற்கு அப்பால் நான் நோக்கவேண்டியது பிறிதில்லை” என்று சொல்லி யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நன்று யாதவனே, நான் நிறைவடைந்தேன்” என்றார்.

“பாண்டவரே, ஒவ்வொரு உயிரும் தன் தனியறத்தின்பொருட்டு போராடுகையில் அனைத்துக்கும் உரிய பொது அறத்தைப் பேணுபவர் எவர்?” என்றார் இளைய யாதவர். “குடித்தலைவர் ஒவ்வொருவரும் தங்கள் குடியறங்களை ஓம்புகையில் அவர்களின் பொது அறத்தைப் பேணிநிற்கின்றது அரசனின் கோல். இங்கு வாழும் அனைத்துயிர்கள் மீதும், இப்புடவியின் அனைத்துப் பொருட்கள்மீதும் நிலைகொள்வது எந்தச் செங்கோல்? எது கடுவெளிப்பெருக்கின் அறங்களின் முடிவிலியை ஆள்கிறது?”

யுதிஷ்டிரர் திகைத்தவர்போல் கை எழுந்து அசைவிழந்து காற்றில் நிலைக்க சொல்லிலாது நின்றார். “அவ்வண்ணம் ஒன்று இருக்குமென்றால் அது இங்கிருக்கும் ஒவ்வொரு துளியிலும் வெளிப்பட்டாகவேண்டும் அல்லவா? அதற்கும் உங்கள் தனியறத்துக்கும் என்ன உறவு? நீங்கள் உங்கள் கடமையால், விழைவால் கொள்ளும் அறம் அந்த அறத்துடன் போரிடுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு கணத்திலும் ஒன்றுடன் ஒன்று மோதும் அறங்களில் எது அப்பேரறத்தின் முகம்?”

யுதிஷ்டிரரின் கை கீழே சரிந்தது. அவர் இருளை திரும்பிபார்த்தார். “பேரறம் என்று ஒன்று இல்லையேல் எந்த அறத்திற்கும் பொருளில்லை. இவையனைத்தும் முட்டிமோதித் திரண்டெழும் ஒரு மையமில்லையேல் இங்கு நிகழ்வது அழிவென்றே பொருள்” என்றார் இளைய யாதவர். “இப்புடவி இங்கிருப்பதே இது அழிவை நோக்கி செல்லவில்லை என்பதற்கான சான்று. இது வாழ்வதே இது ஆளப்படுகிறது என்பதை காட்டுகிறது.”

ஆள்வது ஒன்று உண்டு. அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும் இங்ஙனம் பலமிடும் இயல்புகளெல்லாம் அதனிடமிருந்தே உயிர்கள் அடைகின்றன.

வஞ்சகரின் சூது, ஒளியுடையோரின் ஒளி, ஆள்வோரிடத்தே கோல், வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி, மறைமெய்களில் அது அமைதி. ஞானமுடையோரிடத்தே ஞானம். உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா அது. அவ்வுயிர்களின் முதல் அது. இடையும் அவற்றின் இறுதியும் அதுவே.

அதன் வழிகள் அறியமுடியாதவை. அறியமுடிவது ஒன்றே, அது இங்கே இதை நிகழ்த்துகிறது. இது நிகழவேண்டுமென விழைகிறது. இதில் திகழ எண்ணுகிறது. ஒவ்வொரு துளியிலும் தன் முழுமை திரளும்படி செய்கிறது. விரியும் மலரிலும் வாடும் மலரிலும் அழிவிலாத வண்ணமென நிறைகிறது.

பாண்டவரே, படைப்பழிவினூடாக, நன்மைதீமைகளினூடாக, இருளொளியினூடாக அதன் விழைவெனத் திரண்டு வருவது பொலிக என்னும் செய்தியே. விளங்குக, வாழ்க, வெல்க என்பதே அதன் சொல். இப்புவி ஒவ்வொருநாளும் கதிரெழுகையில் பொலிந்து விரிகிறதென்பதே அதற்குச் சான்று. இங்கு விதைகள் முளைப்பதே அதற்கு உறுதி.

ஒவ்வொரு அணுவிலும் திகழும் அச்செய்திக்கு எதிரான எதுவும் தீமையே. அதனுடன் ஒவ்வாத அனைத்தும் மாசே. எதன்பொருட்டென்றாலும் அழிவை நோக்கும் அனைத்தும் பிழையே. மண்கட்டிகளை பெருநதி என அதன் ஆணை அவற்றை அழித்து பெருகிச்செல்கிறது.

தான் என எழுபவரே அம்முழுமையின் செய்திக்கு எதிர்நிற்கிறார்கள். எழுபவர் வீழ்வர். கொள்ள எழுவோர் விட்டு விலகுவர். வெல்வது தானென்போர் வீழ்ச்சியில் தன்னை அறிவர். பாண்டவரே, முரண்படுபவர் முற்றழிவார்கள்.

தானென்பதை விட்டவர் அதில் அமைகிறார். இவையென்றும் இவ்வாறென்றும் நிற்பதில் தன்னையும் உணர்பவர் அந்த முழுமையை அறிகிறார். அவர் நெஞ்சில் வாழ்க என்ற எண்ணமே வாழும். அவர் வாயில் நா எரிகுளத்தில் வேள்வித்தீ என தழல்கொண்டிருக்கும்.

உயிர்க்குலத்தை வாழ்த்துக! புவிப்பெருக்கை வாழ்த்துக! நீரை காற்றை ஒளியை வானை வாழ்த்துக! வாழ்த்தப்படும் அனைத்தும் அதுவே. வணங்கப்படும் அதுவும் அதுவே. வாழ்த்துபவன் வாழ்த்தப்படுகிறான். நலம் நாடுபவன் நிறைவடைகிறான்.

பொலிக பொலிக என உளமெழாத எந்த எண்ணமும் பழிசேர்ப்பதே. பொலிக என கொள்ளுங்கள். பொலிக என அளியுங்கள். பொலிக என வெல்லுங்கள். பொலிக என அடிபணியுங்கள். பொலிக என வாழுங்கள். பொலிக என்றே மடியுங்கள்.

முழுமையில் நின்று நோக்குபவரிடம் அது சொல்கிறது இணைந்த நலன் என்னால் பேணப்படுகிறது என. அதை அறிந்த யோகிகள் எங்கிருந்தாலும் நிறைநிலை கொள்கிறார்கள். எதுவரினும் மகிழ்கிறார்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
A knowledgeable person has the clarity about what he should do and what he should not do. A stupid person doesn't know what he to do and what he should not do. So, having the clarity about what one has to do comes by gaining knowledge from various sources and by reflecting. 

Questions that I ask to the kid
Who is a knowledgeable person? What role clarity plays in it? How to gain clarity?
Who is considered as a person without knowledge?

No comments:

Post a Comment