Tuesday, March 25, 2014

பிறர்நாணத் தக்கது

குறள் 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 

பொருள்
பிறர் - மற்றவர்கள் / மேன்மக்கள், அயலார்

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

தக்கது - தகுதி; தகுதியானது.
நாணத் தக்கது - செய்ய வெட்கப்படும் செயல்

தான் - ஒருவர்

ஆனா - ஆனாமை - An abstract noun be longing to a kind of defective negative verb--that which is inseparable; not leav ing, unceasing, நீங்காமை

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணா னாயின் - வெட்கப்படாமல் செய்வார் என்றால்

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

அறம் நாணத் தக்கது - அறம் கொண்ட நபர்கள் அவரை கண்டு கூச்சபட்டு வெட்கப்படும் விலகி

உடையது - செல்வமாக கொண்டது; கொண்டது

உடையது  - நிற்பர்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலை செய்வான் என்றால் அது அறம் சார்ந்து இருக்க வேண்டும். அறம் என்றால் நேர்மை, ஒழுங்கு. அவன் செய்யும் செயல், மற்றவர்கள் செய்ய வெட்கப்படும் செயலாக இருக்க கூடாது.

அறம் இல்லாத செயல் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சான்றோர்கள், மேன்மக்கள், நல்லவர்கள் செய்ய அஞ்சுகின்ற, வெட்கப்படுகின்ற, அறமற்ற (தீங்கு விளைவிக்கின்ற) ஒரு செயலை ஒருவர் கருணையின்றி கவலையின்றி வெட்கமேயின்றி செய்வார் என்றால், அவர்களுடைய செயல்களை கண்டு கூசி அத்தகையவரிடம் இருந்து நல்லவர்கள் விலகி நிற்பர்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

“அஞ்சலள் ஐயன தல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாணிலள் என்ன நாண மாமால்” (கம்ப.கைகேசி சூழ்வினைப்ப் 17)

ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு.
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
பழிப்பன பகரேல்.
நன்மை கடைப்பிடி.
நாடு ஒப்பன செய்.
பீடு பெற நில்.
உத்தமனாய் இரு.
வேண்டி வினை செயேல்.
நிலையில் பிரியேல்.
நுண்மை நுகரேல்.
நேர்பட ஒழுகு.
பிழைபடச் சொல்லேல்.
காப்பது விரதம்.
சக்கர நெறி நில்.
சூது விரும்பேல்.
தூக்கி வினை செய்.
குணமது கைவிடேல்.
ஒப்புரவு ஒழுகு
அஃகஞ் சுருக்கேல்.
மண் பறித்து உண்ணேல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
சீரில்லா அறமற்ற செயல்களையே
செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
காரற்ற வானம் போல் கருணையில்லார்
கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்

பரிமேலழகர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து 

விளக்கம் 
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

மணக்குடவர் உரை
உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது. 

மு.வரதராசனார் உரை
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

Monday, March 24, 2014

இடும்பைக்கே கொள்கலம்

குறள் 1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்
இடும்பை - துன்பம். ஏமஞ்சாலா விடும்பை (தொல். பொ. 50).
- தீமை. பூதம் . . . இடும்பை செய்திடும் (மணி.1, 22). 
- நோய். கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056)
- தரித்திரம்.இடும்பையா லடர்ப்புண்டு (திவ். பெரியதி. 1, 6, 5).
- அச்சம். (திவா.)

கொள்கலம்  - பண்டம் இடுங்கலம், பனையோலைமூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.), அணி; ஆடை; சாந்து, சந்துமாலை முதலியனபெய்கலம்; பனையோலை, மூங்கில்இவற்றால்ஆகியகூடை

கொள்கலம்பண்டமிடுங்கலம்; அணி; ஆடை; சாந்து, சந்துமாலைமுதலியனபெய்கலம்; பனையோலை, மூங்கில்இவற்றால்ஆகியகூடை..

கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம்.

கொல் - உயிர்க்கொலை
கொல் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

குடும்பம் - சமுசாரம்; உறவினர்; குலம்; மனைவி; ஒருகுடிசையிலுள் ளோர், இனத்தார், உறவின்முறையார், குடி

குற்றம் பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு
மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.

குற்ற மறைப்பான் - குற்றங்களை, துன்பங்களை ஒளித்து வைப்பவன்

உடம்பு -  சரீரம், உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி

முழுப்பொருள்
முன் குறிப்பு: இக்குறளை புரிந்துக்கொள்ளும் பொழுது மற்ற உரைகளை வாசித்தேன் (பொதுவாக அதுவே வழக்கம்). பெரும்பாலான உரைகள் கூறும் பொருள்: ஒருவனுடைய ஒரு குடும்பத்தின் துன்பங்களின் நீக்கும் உடம்பு துன்பங்களை தாங்கிக்கொள்ளும் ஒரு கூடையா / அதற்கு இன்பமே இல்லையா ? என்று பொருள் கூறுகிறது. ஆனால் நான் இக்கருத்தில் இருந்து வேறுப் படுகிறேன். 

ஒவ்வொரு குடும்பத்திற்கு பல துன்பங்கள் வரும். அத்துன்பங்கள் பிழை, பழி, உடற்குறை, தீங்கு என்று பல வடிவங்களில் வரும். அத்தகைய துன்பங்களை மறைக்க, அதாவது ஒளித்து வைக்க ஒருவன் முற்பட்டால் என்னவாகும் ? அவனுடைய உடம்பு துன்பங்களை மட்டும் தாங்கும் பெற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக (கூடை) அமையும். 

அதாவது குடும்பத்திற்கு வரும் துன்பங்கள் நல்லதிற்கு, அதில் இருந்து விடுபட / நீக்க பாடுப்பட வேண்டும். அப்படிச் செய்தால் அத்துன்பம் நம்மை ஒன்றும் செய்யாது. இல்லையெனில் அத்துன்பங்களை மறைக்க முயற்சித்தால் நமக்கு துன்பம் தான் வந்துக்கொண்டே இருக்கும். ஒரு துன்பத்தை நீக்கினால் நாம் அதை மறுபடியும் வராதுவண்ணம் பார்த்துக்கொள்வோம். ஆனால் அதுவே மறைத்தால் பின்பு மறுபடியும் அதை வேறு ஒரு நாள் செய்வோம். 

பின் குறிப்பு: திருவள்ளுவரின் சொல்லாட்சி இங்கு நாம் கவனிக்க வேண்டும். திருவள்ளுவர் "குற்றம் நீக்குவான் உடம்பு" என்று சொல்லி இருந்தால், குறளின் அர்த்தத்தை குடும்ப துன்பங்களை நீக்கும் உடம்பு துன்பங்களை தாங்கும் ஒரு கூடையா என்று கொள்ளலாம் ? ஆனால் மறைப்பான் என்று கூறுக்கிறார். மறை என்றால் ஒளித்துவைப்பது என்று பொருள். நீக்குவது என்று பொருளாகாது. 

உதாரணம்: நமது குடும்பத்தில் ஒருவர் சூது ஆடி ஒரு பெரிய தொகையை இழந்துவிடுகிறார். அவரை நாம் அதில் இருந்து மீட்டு எடுக்க வில்லை என்றால் குடும்ப மானம் போய்விடும் என்று பலர் எண்ணுவர். ஆனால் சூது ஆடி இழந்தது தவறு. அதை மறைக்க முனைய கூடாது. இல்லை, அவரை நான் காப்பாற்றுகிறேன் என்று அந்த தொகையை வரிந்துக்கட்டி செலுத்தினால் செய்த தவறு தற்காலிகமாக மறையும். ஆனால் அந்த நபர் இதில் இருந்து பாடம் கற்காமல் பின்பு அதே சூதை மறுபடியும் சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுங்கள் கழித்து செய்வார். நாம் தான் மறுபடியும் வருந்த வேண்டும். 

ஏன் அப்படி சொல்கிறார் திருவள்ளுவர் ?
விடை : 

ஒப்புமை
”நெடும்பல் மால்வரை தூர்த்து நெருக்கவும்
துடும்பல் வேலை துளங்கிய தில்லையால்
இடும்பை யெத்தனை யும்படுத் தெய்தினும்
குடும்பந் தாங்கும்ம் குடிப்பிறந் தாரினே” (கம்ப.சேதுபந்தன.53)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

நல்லவரின் வீட்டுக்குள் துன்பம் வந்தால்
நடக்கின்ற கதையதனை கொஞ்சம் கேட்போம்
வல்லதுவாய்த் துன்பமது கருதிச் சென்றால்
வதை படுமாம் துன்பம் அவர் வீட்டிற்குள்ளே
நல்லதுவாய் வருவதெல்லாம் கருதுகின்ற
நாயகரைத் துன்பம் அது என்ன செய்யும்
அல்லல் பட்டு அது அழுமாம் அய்யோ என்று
அழகாகச் சொல்லுகின்றார் வள்ளுவனார்

ஆத்திச்சூடி
கௌவை அகற்று.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
தீவினை அகற்று.

பரிமேலழகர் உரை
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?

விளக்கம் 
(''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு-அடிமைத்தனம், அறியாமை, வறுமை என்னும் மூவகை நிலைமையாலும் தன்குடிக்கு வருந்துன்பங்களை நீக்கப் பாடுபடும் குடிசெயல் தலைவனது உடம்பு ; இடும்பைக்கே கொள்கலங் கொல்-துன்பத்தையே இட்டு நிறைத்துவைத்தற்கு ஏற்பட்டதொரு ஏனமோ!

மூவகைத் துன்பநிலைமையாலும் முட்டுண்டு வருந்துங் குடியை முன்னேற்ற முயலுந் தலைவன், வாழ்நாள் முழுதும் அல்லும் பகலும் ஓயாது படும் மெய்வருத்தத்திற்கு அளவின்மையால், அவன் உடம்பு இடும்பையே இடும் பையோ என்று ஓர் அறிஞன் இரங்கிக் கூறியவாறு. ஏகாரம் பிரிநிலை. ’கொல்’ வினாவிடைச்சொல். ஓகாரம் இரங்கலிடைச் சொல். மறைத்தல் தடுத்தலும் நீக்குதலும். ’குற்றம்’ வகுப்பொருமை. இவ்விரு குறளாலும் குடிசெய்யும் வகை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை 
சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாம். 

மு.வரதராசனார் உரை
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

சாலமன் பாப்பையா உரை
தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?.

அன்பொரீஇத் தற்செற்று

குறள் 1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
அன்பொரீஇ  - அன்பு + ஓரீ + இ
அன்பு - - தொடர்புடையார் மாட்டு உண்டாகும்பற்று, அன்பொத்த அவர் (பரிபா. 6, 21, உரை), நேசம்; ; நேயம் அருள் பக்தி

ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

தற்செற்று - தன் + செற்று
செற்று - கொல்லுதல், அழித்தல், செதுக்குதல், பதித்தல், செறிதல், அழுந்துதல்
செற்று - நெருக்கம்

அறநோக்காது - அறம் + நோக்காது
அறம் - நேர்மை; தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்

நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

அறநோக்காது நோக்காது - நேர்மை தருமம் விரும்பாமல்

ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல்
ஈட்டிய - பெற்ற, திரட்டியது, சம்பாதிக்க

ஒண்பொருள் - தன்னை வருத்தித் தேடிய/ ஈட்டிய செல்வம்
ஒண் - oṇ   ஒண்ணு, def. verb. be possible, able; 2. be proper, fit, பொருந்து.
ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.
பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக் கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்கு மதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

கொள்வார் பிறர் - கவர்ந்து (கொள்ளையடித்து) செல்வார் கயவர் / கள்வர்

பிறர் - அயலார்.

முழுப்பொருள்
ஒருவர் தன் வியர்வை சிந்தி பொருள் ஈட்டுவது மட்டுமே வாழ்வின் மையமாக வைத்து பொருள் ஈட்டிக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். 

அவ்வழியில் செல்பவர்கள் தன் சுற்றம் அதாவது உறவுகள், நண்பர்களை பொருட்படுத்தாது, அவர்களிடம் நெருக்கம் கொள்ளாது, அவர்களிடம் இருந்து தொலைவில் இருந்துக்கொண்டு பொருள் ஈட்டிக் கொண்டு இருப்பர்.

அத்தகையவர்கள் உறவுகள், நண்பர்கள், மக்கள் இன்பம் தனை நோக்காது செல்வத்தின் பின் ஓடிக் கொண்டு செல்வர். அவர்கள் தான் ஈட்டிய செல்வத்தை அவரும் முழுமையாக அனுபவிக்க மாட்டார்கள் அடுத்தவரும் அனுபவிக்க விட மாட்டார்கள். 

ஆனால் காலப்போக்கில் இவர்கள் (வியர்வைச் சிந்தி / வருந்தி தொகுத்த ) ஈட்டிய செல்வம் இவர்கள் அனுபவிக்காமல் பிற கயவர்கள், கள்வர்கள் இவர்களை ஏமாற்றி கொள்ளையடித்து அனுபவிப்பர். ஆக இவர்களின் செல்வம் இவர்களுக்கு பயன் இல்லாமல் அழிந்து போகும்.

ஆக வாழ்வில் பொருள் ஈட்டுவது மட்டும் இன்பம் ஆகாது என்றும், வாழ்வில் அனைவரையும் அரவனைத்து வாழவேண்டும் என்றும் குறியிடுகிறார் திருவள்ளுவர்.

நீ மட்டும் ஓடாதே. கூடி வாழ்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்கடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்....
ஏதிலான் துய்க்கப்படும்” (நாலடி 274)

ஆத்திச்சூடி
ஙப் போல் வளை.
கூடிப் பிரியேல்.
ஊருடன் கூடி வாழ்.
தொன்மை மறவேல்.
கிழமைப்பட வாழ்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அன்பு இன்றி வாழ்வதிலே வெட்கம் இன்றி
அறம் தன்னைப் புறம் தள்ளி செல்வம் சேர்த்து
தன் குலத்தை உறவையெல்லாம் ஒதுக்கி வைத்து
தானும் எதும் அனுபவிக்க எண்ணம் இன்றி
புன் செயலாய்ப் பொருள் தேடி வைக்கும் மாந்தர்
புரியார் அச்செல்வமெல்லாம் வம்பர் கையில்
தன் அருமை தெரியாமல் கேவலமாய்த்
தடுமாறிச் சீரழியும் ஒழிந்தே போகும்

பரிமேலழகர் உரை
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். 


விளக்கம் (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்புஒரீஇ - ஒருவன் தன் கஞ்சத் தனத்தினால்; உறவினரிடத்தும் நண்பரிடத்தும் அன்புசெய்தலை யொழிந்து; தற்செற்று - தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து ; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதலாகிய அறத்தைக் கருதவுஞ் செய்யாது ; ஈட்டிய ஒண் பொருள் பிறர் கொள்வார் - வருத்தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வரும் கொள்ளைக்காரரு மாகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.

' ஈட்டிய ' என்பதால் சிறிது சிறிதாக நீண்ட காலம் வருந்தித் தொகுத்த தென்பதூம் ஒண்பொருள் என்பதால் நன்றாய் பயன்படக கூடிய தென்பதும், 'பிறர்' என்பதால் சிறிதும் தொடர்பற்றவ ரென்பதும்,பெறப்படும்.'ஒரீஇ' இன்னிசையளபெடை.

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்".

என்று இரட்டுறலாகக் கூறினார் ஒளவையார் (கொ. வே. 4)

ஈயார்= ஈயாதவர், ஈக்கள். தேட்டு= தேடிய சொத்து , தேன்.தீயார்=கொடியவர். தீப்பந்தத்தை யுடைய குறவர்.

மணக்குடவர் உரை
பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர். 

மு.வரதராசனார் உரை
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்

குறள் 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை]

பொருள்
கற்றும் - கற்கை - படித்தல்.

கல்லார்ப் - நெறிநூல்கள் கல்லாதவர்
கல்லார் - கல்வியறிவற்றவர், கீழ்மக்கள்.

பிணி நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை
பிணிக்கும் - நோய், துன்பம், the three kinds of temperament, வாதம் (flatulency), பித்தம் (bile), and சிலேட்டுமம் (phlegm)
பிணித்தல் - சேர்த்துக்கட்டுதல்; வயப்படுத்துதல்.

கடுங்கோல் - கொடுமையான ஆட்சி செய்யும் அரசு (அரசன்)
கோல் - செங்கோல் (அரசு)

அல் - அல்லது - தீவினை [அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல(கலித். 148)], தவிர 

அதுவல்லது - அது அன்றி ,அது அல்லாமல் 
அதுவல்லது - அதைப்போல் தீவினை

இல்லை - வேறு இல்லை
நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

நிலக்குப் - இந்த நிலம் 

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

பொறை - காணவேண்டிய தீவினை.
பொறைமை- பொறை, 6. நின்னெஞ்சங் கொண்ட பொறைமைகாணிய (பெருங். உஞ்சைக். 36, 84).
பொறைமை - காண்க:பொறுமை.

முழுப்பொருள்
நெறிநூல்கள் கல்லாதவர்களை மூடர்களை அமைச்சர்களாக கொண்ட அரசன் செய்யும் ஆட்சி எப்படி இருக்கும் ? கல்லாதவரிடம் ஆலோசனை கேட்டு ஆட்சி செய்தால் எப்படி இருக்கும்? கொடுமையான கடுங்கோல் ஆட்சியாக அமையும். 

இங்கு நெறிநூல்கள் மட்டும் என்று பொருள் கொள்ளாமல், நாம் மக்களின் துயரங்களையும் ஏக்கங்களை கல்லாதவர் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அதைவிட தீவினையை இந்த நாடும் நிலமும் காணத்தக்கது பொறுத்துக்கொள்வது வேறு ஏதும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

ஏழையரைக் கருதாமல் அவர்கள் கொண்ட
ஏக்கங்கள் உணராமல் ஆட்சி செய்வோர்
நாளையதை எண்ணாமல் தங்கள் ஆட்சி
நடக்க வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டோர்
கோழைகளை கற்றறிய மாட்டார் தன்னை
கூட்டாக வைத்திருப்பார் அவர்தம் ஆட்சி
பீழை அது மண்ணுக்குச் சுமையே ஆகும்
பெருஞ்சுமையாய் நிலத்திற்கு துன்பம் தரும்



மூடர்களை அமைச்சர்களாகவும், மூர்க்கர்களை அதிகாரிகளாகவும் கொண்டு இயங்கும் அரசுதான் கடுங்கோல் அரசு. கல்வி அறிவு சிறிதுமில்லாத அரசு அது. அதுதான் இந்த பூமிக்குப் பெரிய பாரம்.

அறிவற்ற ஒருவன் தனக்குத் தானே செய்து கொள்ளும் தீமையை ஓர் எதிரிகூட அவனுக்குச் செய்யமாட்டான் என்று வள்ளுவர் இன்னொரு குறளில் கூறியுள்ளார். அறிவற்ற அரசும் தனக்குத் தானே அழிவைத் தேடும். இந்தப் பூமிக்கு அதுதான் பேரழிவு. எத்தனை பெரிய அனுபவ வார்த்தை இது! வரலாறுகளைப் படித்துப் பார்த்தால், இக்குறளின் மகிமை புரியும்.

பரிமேலழகர் உரை
கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. 

விளக்கம் 
('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் -கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத்துணைவராகச் சேர்த்துக்கொள்வான் ; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை -அக்கூட்டமல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்)இல்லை.

கொடுங்கோலன் செயல் அவனாட்சியின்மே லேற்றிக் கூறப்பட்டது. கற்றோர் கடுங்கோலனொடு கூடாமையிற் 'கல்லார் பிணிக்கும் ' என்றும் , ஏனையோரைப் பொறுக்கும் பொறை இயல்பாகவிருந்து பொறையாகத் தோன்றாமையின் ' அதுவல்லதில்லை நிலக்குப் பொறை' என்றுங் கூறினார்.'நிலக்கு' என்பதில் அத்துச்சாரியை தொக்கது.இதனால் நிலமும் அஞ்சும் வினை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை. 

மு.வரதராசனார் உரை
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

நன்றி ரிஷ்வன்
கொடுங்கோல் அரசன்
கல்லாதவரை அரணாக்கி
தொல்லைதரும் ஆட்சிசெய்வான்
அதைப்போல
அந்நாட்டிற்கு பெரும்சுமை
தருபவை வேறுஇல்லை.

உற்றநோய் நீக்கி

குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல் (உற்றதெல்லாஞ் சொன்னபின் (கம்பரா. கைகேசி.5)); உண்மை (உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும்.); இடுக்கண்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

உற்றநோய் நீக்கி  - முன்பு வந்த துன்பங்களை நீக்கி

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅமை - பின்பு துன்பங்கல் அமையு(யாது)

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

கா-த்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.  

முற்காக்கும் - முன்பே காக்கும்

பெற்றி - இயல்பு; தன்மை; குணம்; விதம்; செயல்முறை; பெருமை; நிகழ்ச்சி; பேறு; நோன்பு.
பெற்றிமை - பெருமை; செய்யவேண்டும்முறை; சாதி.

பெற்றியார்ப் - அத்தன்மை உடையவர்கள் - சான்றோர்கள் / மேன்மக்கள் / பெரியார்

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணிக் - நன்குமதி, கவனி, கருது, குறி

கொளல் - அவர்களைத் துணைக் கொள்ள வேண்டும்.

முழுப்பொருள்
நம் வாழ்வில் பல துன்பங்கள் நாம் செய்த வினைகளால் (செயல்களால்) நமக்கு நிகழும். அதுவே உற்றநோய் ஆகும். அத்தகைய துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட நமக்கு மாற்று வழி சொல்லும் சிந்தனையை உடையவாராக ஒருவரை துணைக்கொள்ள வேண்டும்.

அதுப்போல நமக்கு வருங்காலத்தில் நம்மை நற்பாதையில் அதாவது துன்பங்கள் நேராத பாதையில் நம்மை வழி நடத்த ஒருவரை துணைக்கொள்ள வேண்டும். ஆதலால் தான் உறாஅமை முற்காக்கும் என்று சொல்லபட்டது.

நம்மை நற்வழியில் நடத்த தன்மைகளைக் கொண்ட மேன்மக்களை சான்றோர்களை துணை கொள்ள வேண்டும். அவர்களைப் விரும்பி, பேணி அவர்களிடம் உறவு / நட்புக் கொள்ள வேண்டும். அத்தகைய மேன்மக்களிடம் துணை கொள்ளாது நமக்கு ஆயிரம் தீமைகளை நமக்கு நாமே செய்துக்கொள்வது ஆகும்.

ஆக அத்தகைய ஆற்றலையும் அனுபவத்தையும் உடைய பெரியோர்களை, மேன்மக்களை, சான்றோர்களை துணைக்கொள்ளவது நமக்கு நலம் பயக்கும் வலிமை தரும் என்று உணர்வீராக.

நமக்கு வாழ்நாள் எல்லாம் ஒரு குரு இன்றியமையாதவர். கல்விக்கூடங்களுக்கு பிறகு குரு தேவையில்லை என்ற மனப்பான்மை தவறானது என்பது இக்குறளில் இருந்து நமக்கு நன்கு விளங்குகிறது.

மேலும்: அஷோக்

ஒப்புமை
“தன்னை அடைந்தார் வினை தீர்ப்ப தன்றோ
தலையா யவர்தங்கட னாவதுதான்” (அப்பர்.அதிகை.4)

“பெரியார்த் துணைக்கொள்” (ஆத்திச்சூடி)

ஆத்திச்சூடி
சான்றோர் இனத்து இரு
மேன்மக்கள் சொல் கேள்
பெரியாரைத் துணைக் கொள்
தக்கோன் எனத் திரி
சேரிடம் அறிந்து சேர்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

குறள்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கை விடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுளெல்லாம் தலை

பரிமேலழகர் உரை
உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாமை முற்காக்கும் பெற்றியார் . பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக் கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. 

விளக்கம் 
(தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று, தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாமபேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறித்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றான் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம்; ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்ரின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம், கொள்ளுமாறும் கூறப்பட்டன.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உற்ற நோய் நீக்கி -தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; உறாமை முன் காக்கும் பெற்றியார்- அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; பேணிக் கொளல் -அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.

தெய்வத்தால் வருந்துன்பங்கள் மழையின்மை, மிகுமழை, கடுங்காற்று, கொள்ளைநோய், நிலநடுக்கம், கடல்கோள் முதலியன . அவை இறைவனை நோக்கிச்செய்யும் விழாக்களாலும் வேண்டுதல் களாலும் நோன்பினாலும் நீக்கப்படும். மக்களால் வருந்துன்பங்கள் பகைவர் செய்யும் போர், கள்வர் செய்யுங்களவு, கொள்ளைக்காரர் செய்யுங் கொள்ளையடிப்பும் ஆறலைத்தலும், சுற்றத்தாரும் வினைசெய்வாரும் செய்யும் களவுங் கொடுமையும் முதலியன. அவை இன் சொல் (சாமம்) பிரிவினை (பேதம்) கொடை தண்டம் ஆகிய நால்வகை ஆம்புடையுள் (உபாயத்துள் ) ஏற்ற ஒன்றால் அல்லது பலவற்றால் நீக்கப்படும். முற்காத்தலாவது, தெய்வத்தால் வருபவற்றைத் தீக்குறிகளால் அறிந்து விழவு நோன்பு முதலிய சமந்தியால் (சாந்தியால்) தடுத்தலும், மக்களால் வருபவற்றை அவர் குணம், குறிப்பு (இங்கிதம்), தோற்றம் (ஆகாரம்), செயல், சொல் முதலிய வற்றாலறிந்து நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றால் தடுத்தலும், ஆம். குறிப்பு உறுப்பின் தொழில்; தோற்றம் உடம்பின் பார்வை வேறுபாடு.மகிழ்வன செய்தலாவது, முற்றூட்டும் பட்டமுமளித்தலும் கண்ணியமாக நடத்துதலும் கூறிய அறிவுரையைக் கடைப் பிடித்தலுமாம்.

"கடவுளரையுந் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்தி" என்று சிறுதெய்வ வணக்கத்தையும், ஆகவே, "புரோகிதரையும்-----------கூறியவாறாயிற்று " . என்று பிராமணப்பூசாரியரையும், பரிமேலழகர் இங்குக் குறித்திருப்பது தவறாம்.

தானம் என்னுஞ் சொல் தமிழேயாயினும், அது அறப்புறங்கட்குக் கொடுப்பதையே சிறப்பாய்க் குறித்தலின் இங்கு விலக்கப்பட்டது. 'உறாஅமை' இசைநிறையளபெடை.

மணக்குடவர் உரை
அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று. 

மு.வரதராசனார் உரை
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

Saturday, March 22, 2014

அற்றேமென்று அல்லற் படுபவோ

குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடுக்கண் மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம் படவரும் இரக்கம்; துன்பம் வறுமை

இடுங்கு-தல் - iṭuṅku-   5 v. intr. cf. இடுகு-.To shrink, contract; உள்ளொடுங்குதல். கண்ணிடுங்கி (திவ். பெரியதி. 1, 3, 4).  

அழியாமை - அழிவின்மை; மனம்கலங்காமை.
இடுக்கணழியாமை (அதிகாரம்) - துன்பக்காலத்து மனங்கலங்காமை

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

ஏம் - இன்பம், மகிழ்ச்சி, களிப்பு; மயக்கம்; பொன்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அற்றுப்போதல் - aṟṟu-p-pō   v. intr. அறு¹- +. 1. To be severed; இடைமுறிதல். 2.To cease completely, as a disease; முழுதும் ஒழிதல் வியாதி அற்றுப்போயிற்று. 3. To have complete possession; முழுதுங் கைவருதல் Colloq.  

அற்றேம் - ஒன்றும் இல்லாத ஒரு நிலை

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அல்லல் - துன்பம்
அல்லற்படுபவோ - துன்ப படுவாரா ?

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

பெற்றேம் என்று -  செல்வம் வந்துவிட்டதே என்று

ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

தேற்று - தெளிவு; தெளிவிக்கை; தேற்றாமரம்.

தேற்றாதவர் - தெளிவு இல்லாதவர்

முழுப்பொருள்
ஒருவர் செல்வம் பெறும் பொழுது இது தான் இயன்றது என்று அதில் மயங்கி இன்பம் பெற்று அதை காக்க முனைப்புடன் அதற்கான எல்லா செயல்கள் புரிவர். 

ஆனால் செல்வத்தின் நிலையாமை அறிந்தார் வரும் செல்வத்தில் இன்பம் காணமாட்டார். அதை காக்க முனைப்பு காண்பிக்க மாட்டார். அத்தகைய தெளிவுடையார் தேற்றியவர். அத்தகைய தெளிவு இல்லாதவர் தேற்றாதவர்.

அத்தகைய தேற்றாதவர், அதவாது செல்வம் வரும் பொழுது அதில் மயங்குவார், பின்பு ஒரு நாள் செல்வம் சென்று ஒன்றும் இல்லாத நிலையில் செல்வம் சென்றுவிட்டதே செல்வம் இல்லையே என்று துன்புற்று மனம்தளருவார். அதனால் தான் அல்லற்படுபவோ என்று கேள்வியாக கூறுகிறார் திருவள்ளுவர். 

ஆனால் தெளிவுடையார் செல்வம் வரும் பொழுது இன்புற மாட்டார். செல்லும் பொழுதும் துன்புற்று மனம் தளரமாட்டார் (அழியமாட்டார்). 

மேலும்: அஷோக்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
செல்வம் வருகையிலே சிரித்து மகிழ்ந்ததனை
சேர்த்து வைப்போம் என்கின்ற சிந்தனையே இல்லாமல்
வள்ளல் மனத்தோடு வாழ்ந்து பழகியவர்
வந்த செல்வமதன் மீது பற்று வைக்கா நேர்மையவர்
கள்ளத் துன்பமதைக் கணக்கெடுக்க மாட்டாரே
கண் கலங்கி அழுதழுது காயப் பட மாட்டாரே
உள்ளத்து உணர்ந்தார்க்கு செல்வமது ஒன்றுமில்லை
உணர்ந்ததனால் துன்பமதும் ஒன்றுமில்லை அவர்களுக்கு

பரிமேலழகர் உரை
அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? 

விளக்கம் 
(பெற்றவழி இவறாமை நோக்கி அற்ற வழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பெற்றேம் என்று ஒம்புதல் தேற்றாதவர் - செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; அற்றேம் என்று அல்லல் படுபவோ - வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார்.

"அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்" ( நாலடி. 2)

இவ்வுலகத்தில், இன்பமுந் துன்பமும் ஒப்பக் கொள்பவர் செல்வக் காலத்தில் மகிழ்ந்து அதை இறுகப் பற்றாமையால் , வறுமைக்காலத்தில் வருந்துவதும் செல்வமின்மையை உணர்வதும் இல்லை யென்றார். 'தேற்றாதவர்' தன்வினைப்பொருளில் வந்த பிறவினைச்சொல். தேற்றுதல் தெளிந்தறிதல்.


மணக்குடவர் உரை
பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று. 

மு.வரதராசனார் உரை
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
சாலமன் பாப்பையா உரை:

சாலமன் பாப்பையா உரை
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

English Meaning - As I taught a kid - Rajesh
Many people whenever they receive money, they get excited and spend all the money or try to be possessive of the money. But, a knowledgeble person who had realized the uncertain nature of money will not relish on money or money's arrival. A person who has that clarity is a knowledgeable person. Such a knowledgeable person will not suffer when they go through pain, difficulties, challenges, etc because they know that even this stage is uncertain and they can come over it. Whereas a person who doesn't have this clarity will suffer and dwell in the pain.

Hence, a knowledgable person who has the clarity will treat both happiness and difficulty equally the same. They will not relish on success nor dwell on failures.

Questions that I ask to the kid
How will a person with clarity will treat success and failures, happiness and failures?

உணர்வ துடையார்முன் சொல்லல்

குறள் 718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உணர்வு - அறிவு; தெளிவு துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஒழிவு ஆன்மா புலன்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின் பட்டப்பெயர் இலங்கையில் ஒருகிராம அலுவலர்.

உணர்வ துடையார் - கேட்பதை (செல்வதை) தாமாக புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் உடையவர்கள்

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

சொல்லல் - சொல்வது; கூறுவது
சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

முன் சொல்லல் - முன்பு சொல்வது

வளர்தல் - பெரிதாதல்; மிகுதல்; நீளுதல்; களித்தல்; உறங்குதல்; தங்குதல்.
அதன் - It's   It's   It's  

வளர்வதன் - தாமாய் வளரும்

பாத்தி - பகுதி; சிறுசெய்; பங்கு; வீடு.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

பாத்தியுள் - வயலில்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

சொரிந் தற்று - பொழிவது / விடுவது போல் ஆகும்.

முழுப்பொருள்
ஒரு அவையில் பல மாந்தர்கள் இருப்பர். ஒரு சில அவைகளில் எல்லோரும் (பெரும்பாலும்) அவையில் சொல்வதை தாமாக புரிந்துக்கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக கற்றவர்களாக இருப்பர். அவர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இராது. 

அப்படிப் பட்டவர்கள் உழவு நிலத்தில் உழாமால் தாமே முளைந்தவர்கள் போன்றவர்கள். அத்தகைய பயிர்களுக்கு நீர் உற்றித் தான் வளரவேண்டிய அவசியம் இராது. அப்படிப் பட்டவர்களுக்கு விளக்கி சொல்வது தாமே முளைத்த பயிர்களுக்கு தண்ணீர் உற்றுவதுப் போல ஆகும்.

ஆக கற்றார் அவை அறிந்து நாம் சுருக்கமாக சொன்னாலே போதும், கற்றார் புரிந்துக்கொள்வர் என்கிறார் திருவள்ளுவர். அவர்களுக்கு விளக்கிச் சொல்லி நேரத்தை விரயம் செய்யவேண்டியதில்லை. 

மேலும்: அஷோக் உரை

உதாரணம்
ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார மாநாட்டில் பல பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு புதிய பொருளாதார கொள்கையை விளக்கும் பொழுது அடிப்படை பொருளாதார புரிதல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதார கொள்கையை பற்றி ஒரு குறிப்பு கொடுத்தாலே போதும், அவர்களே அதனை புரிந்து, அதன் விளைவுகளை கற்பனை செய்யக்கூடியவர்களாக இருப்பர்.

சொந்த உதாரணம் 2
என்னுடைய Internship-இல் / வேலையில் சில வேலைகளை பற்றி ஆய்வுகளின் முடிவுகளை மூத்த அதிகாரிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் காட்சி பதிவு (ppt) தொடர் கொண்டு விளக்க வேண்டும். சில சமயம் தனி தனி யாக. ஆனால் மூத்த அதிகாரிகளின் நேரம் மிகவும் முக்கியமானது. பெரும்பாலும் அவர்கள் அரை மணி (30min) நேரம் மட்டுமே தருவார்கள். அவர்களுக்கு 30-40 காட்சி பதிவுகளை (slides) காண்பித்தால் அவர்கள் பொறுமை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு 6-10 காட்சி பதிவுகளே போதும். உதாரணமாக ப்ரிச்சனை என்ன, தீர்வு என்ன, திட்டம் என்ன என்று சுறுக்கமாக சொன்னாலே அவர்கள் புரிந்துக்கொள்ளு ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள் ஆவார்கள்.

மேலும்: இதழ்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கற்றுத் துறை போகிக் காமுற்றுக் கல்வியினைப்
பெற்றுத் துறை போகும் பேரறிவார் தம்மிடத்தில்
பெற்ற கல்வியினைப்பேசிப் பெருமையுறல்
நற்றவமாய்த் தானாய் வளரும் பயிரதற்கு
நலமாகத் தண்ணீரைத் தான் பாய்ச்சல் போலுயரும்
மற்றவரின் முன்னாலே வாய் திறத்தல் அய்யய்யோ
மலிவாக்கி அமுதமதை பாத்திரங்கள் கழுவுகின்ற
முற்றமதின் அங்கணத்தில் கொட்டுவதாய் வீணாகும்

குறள்
பொருட்பால் அவை அறிதல் குறள் 8ம் 10 ம்

உணர்வதுடையார் முன் சொல்லல்வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார் முன் கோட்டி கொளல் 

பரிமேலழகர் உரை
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினையுடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். 

விளக்கம் 
(தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உணர்வது உடையார்முன் சொல்லல் -பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை யுணரவல்ல அறிவுடையாரவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த அற்று -தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும்.

தானே வளரும் அறிவு மிக விரைந்து வளரும் என்பதாம். இவ்விரு குறளாலும், ஒத்தாரவைக்கண் கற்றோர் தமக்குரிய இலக்கியநடையிற் பேசுக என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.

மு.வ உரை
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது

சாலமன் பாப்பையா உரை
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
While speaking to an high profile audience (scholars, scientists, business owners, etc.) who can understand and comprehend complex subjects without spoon feeding, one can speak densely with clarity and coherence. Explaining basics to them is like pouring water in an water irrigated field in which the seeds have already germinated and grown quite well. So, one doesn't have to beat around the bush. One doesn't have to explain the basics to the high profile audience. Because the high profile audience are knowledgeable and experienced in the subject are for which the gathering has been convened. By speaking coherently, one can make use of the time effectively and deliver lot of value to the audience. 

Questions that I ask to the kid
What is spoon feeding to a high profile audience is like?

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...