Thursday, June 4, 2020

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
அறு -  aṟu   VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

அறுவாய் - வாள்முதலியவற்றால்அறுபட்டஇடம்; குறைவிடம்; கார்த்திகைநாள்.

அறுவாய் – குறைவிடங்களாய் (பள்ளங்களும் மேடுகளுமாய்)

நிறைந்த - நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

அவிர் - ஒளி; avir   n. அவிர்-. Splendour, glitter;பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித். 22, 19).  

மதிக்குப் மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

போல - ஓர்உவமவுருபு

மறு - குற்றம்; களங்கம்; தீமை; அடையாளம்; மச்சம்; பாலுண்ணி; மற்ற.

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்.

முகத்து -  முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

முழுப்பொருள்
பொன் போன்று பிரகாசிக்கும் நிலவில் கூட மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த குறைவிடங்கள் உண்டு. ஆனால் அப்படி களங்கங்கள் ஏதும் என் காதலியின் முகத்தில் இல்லை என்று தலைவியின் அழகை கண்டு வியக்கிறான் தலைவன். 

“மையின் மதியின் விளங்கும் முகத்தாரை” (கவி 62:14)
கறையும், குறையும் இல்லா முகத்தை கம்பர் இவ்வாறு கூறுவார்.
“முயற்க ருங்கறை நீங்கிய மொய்ம்மதி 
அயர்க்கும் வாண்முகத் தாரமு தன்னவர்”  (கம்ப.ஊர்தேடு 168)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை:
குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

சாலமன் பாப்பையா உரை
நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

Wednesday, June 3, 2020

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.
உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்

தோறு - ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும்என்னும்பொருளில்வரும்ஓர்இடைச்சொல்.
தோறு - tōṟu   . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

தளிர்ப்பத் - தளிர்ப்பு - துளிர்க்கை; மனவெழுச்சி

தீண்டலான்-  தீண்டல் - தீண்டுதல்; பிறப்புஇறப்புமுதலியவற்றால்உண்டாவதாகத்கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல்

பேதைக்கு - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

அமிழ்தின் -  அமிழ்து - amiḻtu   * n. id. 1. Ambrosia.See அமிர்தம் அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64).2. Milk; பால் (பிங்.)  

இயன்றன -  இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.
இயைவு - இணக்கம்; பொருத்தம் சேர்க்கை

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
தலைவன் கூறுகிறான் - நான் தலைவியை அணைக்கும் பொழுது (சேரும் பொழுது, கூடும் பொழுது) எல்லாம் என் உயிர் துளிர்க்கிறது உள்ளம் எழுச்சி கொள்கிறது. ஏனெனில் அவளை நான் (அல்லது என்னை அவள்) தீண்டியதால் இப்படி ஆயிற்று. அப்படி என்றால் இத்தனை நாள் அவன் உயிர் இல்லாத எலும்பு சதை குவியலாக தான் இருந்தானாம். அவனை உயிருள்ள மனிதனாய் மாற்றியது எது தெரியுமா?  தலைவியின் அழகிய தோள்கள். அவை அமிர்தத்துக்கு ஒப்பானவை. ஏனெனில் கூடும் பொழுது அவன் உடலுக்கு அமரத்துவத்தை தந்து உயிர் துளிரச்செய்தது அவள் தோள். தோள்களின் சிறப்பை கூறுவதை காட்டிலும் புணர்ச்சியின் இன்பத்தையும் அது தரும் உள்ள உவகையையும் கூறுகிறது இக்குறள் என்றே எனக்கு தோன்றுகிறது. 

கூடும் ஒவ்வொருமுறையும் அப்படித் தோன்றுவதால் இது அடங்கிய பின் தோன்றும் உவகை அல்ல. உள்ளத்தால் உணரப்படுவதாவே தலைவன் கூறுகிறான். அதற்காகவே "தோறு" என்ற சொல்லையும் "அமிர்தம்" என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளான் வள்ளுவன். 

”நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே” (நற்.82:1-2)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.).

மணக்குடவர் உரை:
சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

மு.வரதராசனார் உரை
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
செறு-தல் - ceṟu-   6 v. tr. 1. To control,as the senses; to subdue, as the passions; அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா.84, 9). 2. To hinder, prevent; தடுத்தல் வரையாவாயிற் செறாஅது (மதுரைக். 748). 3. To be angry with; சினத்தல் அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134). 4. To hate, dislike, detest; வெறுத்தல் செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).5. To cause pain, torment; வருத்துதல் செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78). 6. To overcome;வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46). 7. To kill, destroy; அழித்தல் புரங்கள்மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3).--intr. To change, as one's mind; வேறுபடுதல் அன்பிற் செறப்பட்டா ரில்லம் புகாமை (ஆசாரக். 80).  

செறாஅச் -  சினம் இல்லாமல் 

சிறு - ciṟu   VI. v. i. same as சிறுகு; 2. v. t. make small, contract, குறை VI.
சிறு - ciṟu   க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. As சிறுகு, used in all its meanings. 2. To show anger, சினக்க. (c.) 3. v. a. To make small, to decrease, குறைக்க. கடுகு சிறுத்தாலுங் காரம் போகுமா? Will the mustard lose its pungency when made smaller, i. e. good men even under ad versity will retain their confidence.

சொல்லும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சிறுசொல் - பழிச்சொல்; இழிச்சொல்

செற்று - நெருக்கம்.
செற்று-தல் - ceṟṟu-   5 v. tr. 1. To kill;கொல்லுதல். (பிங். MSS.) 2. To destroy; அழித்தல் 3. To cut, chisel; செதுக்குதல் (ஈடு, 9, 9,1.) 4. To set, as a jewel; பதித்தல் மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை 5).--intr. 1. Togather in crowds; செறிதல் பெருங்களிறுகள்செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 2. Tosink deep; அழுந்துதல் உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8).  

செற்றார் - பகைவர்

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

நோக்கும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

அர் - ar   part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி . அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி முன்னர் (குறள், 435).  

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

உறாஅர்  - உற்றார் அல்லாதவர்

போன்று - போல

உற்றார் -  உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

முழுப்பொருள்
தோழியிடம் (அல்லது மனதிடம்) தலைவி கூறிகிறாள் என்னை சந்தித்த இவர் நடவடிக்கைகள் விசித்திரமாய் உள்ளதே!! ஏனெனில் இவர் என்னிடம் கோபம் காட்டி பேசவேண்டிய பழிச்சொற்களை கோபம் இல்லாமல் பேசினார். மேலும் பகைவரை பார்ப்பது போன்று என்னை பார்த்தார். இப்படி செய்வதால் நான் உனக்கு நெருக்கமானவன் இல்லை என்பதை வெளியுலகுக்கு மட்டும் உணர்த்தினாரோ? ஏனெனில் முரணான சொற்களும் உடல்மொழியும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. இவை அவர் எனக்கு நெருக்கமானவராக ஆகவேண்டும் என்று அவர் நினைப்பது போலவே தெரிகிறது. அதற்கான குறிப்பு என்றே நினைக்கிறன். 

கம்பரின் கவிநயம் இதை, “ஊடிய மனத்தினர் உறாத நோக்கினார் ஆடவர் உயிரென அருகு போயினார்” என்று சொல்லும்.

சினிமா உதாரணத்திற்கு என்னை கொஞ்சம் மன்னித்து விடுங்கள்.  தனுஷ் நடித்த "மயக்கம் என்ன" திரைப்படத்தில் கதாநாயகன் கார்த்திக் கதாநாயகியிடம் கோபமாய் நடந்துக்கொள்வான். ஆனால் கதாநாயகிக்கு தெரியும் கதாநாயகன் கார்த்திக் தன்னை காதலிக்கிறான் என்று. இருவரும் இறுதியில் காதலித்து கல்யாணம் செய்துகொள்வார்கள். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஊடிய மனத்தினர் உறாத நோக்கினார்
ஆடவர் உயிரென அருகு போயினார்...” (கம்ப.எழுச்சிப்.22)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.).

மணக்குடவர் உரை
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.

மு.வரதராசனார் உரை
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
கொடும்  - கொடுமை - கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல்.

புருவம் - கண்ணின்மேல்உள்ளமயிர்வளைவு; புண்ணின்விளிம்பு; வரம்பு; குதிரை.

கோடு - வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.

கோடா - வளையாத 

மறைப்பின் - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.

நடுங்கு - நடுங்குதல் - அசைதல்; அஞ்சுதல்; மனங்குறைதல்; பதறுதல்; நாத்தடுமாறுதல்; தலையசைத்தல்; ஒப்பாதல்; அதிர்தல்.

அஞர் - துன்பம்; நோய் சோம்பல் வழுக்குநிலம் அறிவிலார்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

அல - ala   same as அல்ல, see under அல்.  

செய்யல - செய்யாது 

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

இவள் - ivaḷ   pron. இ³. [K. M. ivaḷ.] Thiswoman or girl; she, used to denote the femaleamong rational beings.  

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
பெண்ணின் புருவம் எவ்வளவு அழகு வாய்ந்தது அது எவ்வளவு பேசுகிறது  ஆதலால் ஒரு காதலனுக்கு எவ்வளவு துயர் என்பதை குறிப்பதாகவே இக்குறள் தோன்றுகிறது. 

நான் பார்த்த பெண்ணிடம் காதலில் விழுந்தேன். வளைந்துள்ள அவளது புருவத்தாலும் கண்ணாலும் என்னுடன் பேசுகிறாள் வாயால் பேசாமல். அப்புருவங்களுக்கு எவ்வளவு வலிமை. அவள் மனம் பேசவேண்டியவற்றையெல்லாம் என்னிடம் பேசிவிடுகிறதே அப்புருவம். ஆதலால் நான் காதல் நோயால் தவிக்கிறேன். அது எனக்கு நடுங்கும் துயரை தருகிறது. 

இதுவே அவளது புருவங்கள் வளையாத கோடுகள் போன்று இருந்து இருந்தால் இந்த காதல் பேச்சுகள் எல்லாம் இருந்து இருக்காது. நானும் இந்த நடுங்கும் துயரை அனுபவித்து இருக்க மாட்டேன்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது

மு.வரதராசனார் உரை
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா உரை
அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

குறள் 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
[பொருட்பால்,  குடியியல்,  கயமை]

பொருள்
அகப்பட்டி - சிறுதீங்குசெய்வோன்; காவலின்றித்திரிவோன்.

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

பட்டி - பசுக்கொட்டில்; ஆட்டுக்கிடை; நிலவளவுவகை; கொண்டித்தொழு; சிற்றூர்; இடம்; காவலில்லாதவர்; களவு; பட்டிமாடு; விபசாரி; நாய்; பலகறை; மகன்; தெப்பம்; சீலை; புண்கட்டுஞ்சீலை; மடிப்புத்தையல்; விக்கரமாதித்தன்மந்திரி; அட்டவணை; பாக்குவெற்றிலைச்சுருள்; பூச்செடிவகை

ஆவாரைக்  - ஆகுதல் -  ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அவரின் - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

மிகப்பட்டுச்  - மிகைபடு-தல் - mikai-paṭu-   v. intr. மிகை+. 1. To increase; to be excessive; அதிகப்படுதல். 2. To be at fault; குற்றப்படுதல். (யாழ்.அக.)

செம்மா - cemmā   - க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To be proud, haughty, high-minded; to be elated, vain, conceited; to strut, இறுாமந்திருக்க. 2. To be overjoyed, be extatic with spiritual delight, யோகத்திலி றுமாந்திருக்க. 3. To be erect, stand upright, from pride, vanity, extatic joy, &c. to exult, to be in high spirits, to be intoxi cated with joy, நிமிர்ந்திருக்க. (p.) செம்மாந்துசெல்லுஞ்செறுநர். Foes of haughty carriage.

செம்மாப்பு, v. noun. Haughtiness, vanity, rapture, &c.--as செம்மா, v.

செம்மாக்கும் - செம்மா-த்தல் - cemmā-   12 & 13 v. intr.1. To be elated with pride, to be haughty, toassume superiority; இறுமாத்தல் மிகப்பட்டுச்  

கீழ் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

கயமை - கீழ்மை

முழுப்பொருள்
தான் செய்கிற கீழ்மைகளை காட்டிலும் தன்னைவிட பெரிய கீழ்மைகளை  செய்வோரை கண்டால் தான் எவ்வளவோ மேல் என்று நினைக்கும் மனப்பான்மை மிகவும் கீழ்மையான ஒன்று.

கீழ்மை என்றால் கீழ்மை தான். அதில் பெரிது சிறிது என்ற பேதங்கள் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

ஒரு குண்டு நெல்மணி திருடினாலும் திருடு தான் ஒரு துளி தங்கம் திருடினாலும் திருடு தான். இரண்டுமே குற்றம். 

இது இல்லங்களிலும் நிர்வாகங்களிலும் நன்கு பொருந்தும். மற்றவர்கள் செய்த குற்றங்களை காட்டிலும் நான் சிறிதாக செய்தேன். ஆதலால் நான் மேலானவன் என்னும் இறுமாப்பு கொள்வது கீழ்மை. இவ்விஷயங்களில் பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு/ கீழ்மை. நம் தவறுகளை கண்டறிந்து திருத்திக்கொள்வதே சிறந்தது. 

அதே போல குற்றங்களை செய்து விட்டு நான்கு நல்ல காரியங்களை அல்லது கொடைகளை அளித்துவிட்டால் தான் பெரிய ஆள் ஆகிவிட முடியாது. குற்றங்கள் குற்றங்களே. கீழ்மை கீழ்மையே. 

பி.கு: பட்டி என்ற சொல்லுக்கு நாய் என்ற பொருளை பல உரையாசிரியர்கள் கையாண்டு உள்ளனர். பிற உயிர் இனங்களை இழிவாக பேசும் பண்பு உடையவர் திருவள்ளுவர் என்று எனக்கு தோன்றவில்லை. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். (அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும்.).

மணக்குடவர் உரை
மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர். இது நிறையிலரென்றது.

மு.வரதராசனார் உரை
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

சாலமன் பாப்பையா உரை
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

குறள் 1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்
[பொருட்பால், குடியியல், இரவச்சம்]

பொருள்
ஆ - ā   s. an ox, a cow, பசு; 2. soul, ஆத்மா.;  3. [T.āvu, K. M. ā.] Female of the ox, the sombarand the buffalo; பெற்றம், மரை, எருமை

ஆவிற்கு - பசுவிற்கு 

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

இரப்பினும் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

நாவிற்கு - நா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ); சொல்; நடு; மணிமுதலியவற்றின்நாக்கு; தீயின்சுடர்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு.

இரவின் - இரவு - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

வந்தது - வருதல் 

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
பசுவிற்கு என்று நீரை பிறரிடம் யாசித்தாலும் அது போன்று இகழ்ச்சி நமது நாவிற்கு வேறு இல்லை. ஆதலால் யாசித்தல் என்பது மிகுந்த இகழ்ச்சியான ஒன்று. அதை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 
 
ஏன் பசுவை இங்கே குறிப்பிடுகிறார் என்றால் பசு பால் என்னும் பயனை தரக்கூடியது. அப்பாலை பெற்று விற்று கடனை அடைத்துவிடலாம். ஆதலால் கடனை அடைத்துவிடலாம் என்றால் கூட யாசிக்காதே என்று கூறுகிறார்.  

அடைத்துவிடலாம் என்றால் ஏன் யாசிக்க வேண்டாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்? ஏனெனில் யாசித்து முன்னேறி அடைக்கலாம் என்ற ஒரு குறுக்கு வழி இருந்தால் யாசிக்காமல் அடைக்கும் (சற்று சிரமமான) வழிகளை ஒருவர் தேட மாட்டார். யாசிப்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். சோம்பிவிடுவார்கள். சேமிக்க மாட்டார்கள். தன் நிலை அறியாமல் அகல கால் வைப்பார்கள். ஆதலால் தான் யாசிப்பதை இகழுகிறார் திருவள்ளுவர். 

இது இல்லறத்தை நடத்துபவர்களுக்கு மிக மிக பொருந்தும். ஒருநாட்டின் ஆட்சியில் எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனெனில் முன்னேறும் நாடுகள் உலக வங்கியில் இருந்து கடன் பெற்றே முன்னேறுகின்றன. ஆனால் ஓர் அளவு வளர்ந்துவிட்ட நாடுகள் கடன் வாங்கக்கூடாது. அவர்கள் தன்னுடைய உற்பத்தியை பெருக்க வழி செய்யவேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். செயல்திறனை அதிகரிக்க வேண்டும். போதாமைகளையும் / மெத்தனங்களையும்  Inefficiency'ஐ குறைக்க வேண்டும். 

வணிகத்தில் முழுவதுமாக பொருந்தாது. கடன் வாங்கி வணிகத்தை விஸ்தரிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு (debt to asset ratio) தான் வாங்க வேண்டும். அதற்கு மேல் வாங்கினால் லாபம் அவ்வளவு இல்லை. சில சமயங்களில் நஷ்டத்தை சந்தித்தால் அக்கடன்களை கட்டி முடிக்கவே வாழ்நாள் ஆகிவிடும். 

“இரத்தலின் ஊங்கு இளிவரல் இல்லை” என்று பொத்தம் பொதுவாக முதுமொழிக்காஞ்சி (6:9) கூறுவது, இக்குறளின் கருத்தோடு இயைந்ததாகக் கொள்ளக்கூடாது. “இயல்வது கரவேல்” என்றும், “ஈவது விலக்கேல்” என்று சொன்ன ஔவையேதான், “ஏற்பது இகழ்ச்சி” என்றும் கூறினாள். அதுவும்கூட, சுயநலத்துக்காக இரப்பதைப் பற்றி வரும் ஏற்பதுதான் இகழ்ச்சியாகும். பொது நலத்துக்காகவோ, அன்றி ஒரு உயிர் காப்பதற்கோ செய்யப்படும் இரப்பு அல்ல.

”ஒன்றும் வேண்டல் ராயினும்ம் ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவ ரேலவர் சிறுமையின் தீரார்” (கம்ப.வருணனை வழிவேண்டு.9)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.

மு.வரதராசனார் உரை
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

Tuesday, June 2, 2020

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

குறள் 1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இகழ்ந்து -  இகழ்-தல் - ikaḻ-   4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).  

இகழ்ந்து  - மறந்தும் 

எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

எள்ளாது - இழிவாக பேசாது 

ஈவாரைக் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

காணின் -  காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

மகிழ்ந்து - மகிழ்தல் - அகங்களித்தல்; உணர்வழியஉவகைஎய்துதல்; குமிழியிடுதல்; விரும்புதல்; உண்ணுதல்.

உள்ளம் - ஊக்கம், மனத்திடம்; அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை, ஊக்கம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு.

உள்ளுள் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உவப்பது - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

உடைத்து -  உடைதல், உடையது, இருக்கும்

முழுப்பொருள்
எக்கணத்திலும் மறந்தும் (அல்லது) அசாக்கிரதையாலும் (தான் புரிகிற உதவிக்காகவும், பிறரின் வறுமையை வைத்தும் ) பிறரை இழிவாகப் பேசாத ஒரு கொடையாளனை கண்டால் யாசிக்கும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் அவர் மனமும் உவகை கொள்ளும். 

ஆதலால் பிறருக்கு உதவுகின்றவர் கொடை அளிக்கின்றவர் பிறர் மனம் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால் அவர் மற்றவரை மறந்தும் இகழக்கூடாது. 

ஒரு வேலை இகழ்ந்தால் என்னவாகும்? அவ்வுதவியை பெற்றவர் அதனை மறுபடியும் அவ்வுதவியை திருப்பி கொடுத்து கடனை முடிக்க முற்படுவார். அது அவர்களுக்கு ஒருவித சுமை. ஆதலால் நாம் செய்த உதவி சுமையாக முடிகிறது. ஒரு கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. சில சமயம் பெற்ற பணத்தை திரும்ப கொடுப்பார். அதனால் உதாரணமாக ஒருவரின் கல்வியோ மருத்துவ சிகிழ்ச்சையோ கல்யாணமோ தடைப்படக்கூட வாய்ப்பு உண்டு 

வறுமையில் இருந்தால் ஒருவர் தன்மானத்தை இழந்து உயிர் வாழவேண்டும் என்றில்லை. ஆதலால் ஒருவரின் தன்மானத்தை தாக்கும் விதமாக பேசவோ இகழவோ கூடாது. மேலும் நாம் ஒருவருக்கு உதவி விட்டதால் நாம் அவர்களுக்கோ அல்லது அவர்களின் வாழ்விற்கோ எஜமான் ஆகிவிட முடியாது. 

இனியவை நாற்பது (30), இக்கருத்தையொட்டியே, 
“எளியர் இவர் என்றிகழ்ந்து உரையாராகி 
ஒளிபட வாழ்தல் இனிது” என்கிறது. 

“மகிழ்ந்துள்ளம்”, “உள்ளம் உவப்பது உடைத்து” என்பதும் ஒன்றையே கூறுவனபோல் தோன்றினாலும், ஒருவரது நல்ல இயல்பைக் காணும்போது உள்ளம் மகிழ்வது எல்லோருக்கும் இயல்பே. அதையும் தாண்டி, அதனால் உறுபயனை ஐம்புலன்களும் அனுபவித்தாலும், அவற்றையொட்டிய உள்ளத்தில் ஏற்படும் நிறைவே, உவகையே முதன்மையானது என்பதால், அதை வலியிறுத்துவதாகக் கொள்ளலாம்,

”நம்மாலே ஆவர்இந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று தம்மை
மருண்ட மனத்தார்” (நாலடி 301)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...